HOME      Khutba      முடிந்துவிட்ட ரமழானும் முடிந்துவிடாத அமல்களும் | Tamil Bayan - 419   
 

முடிந்துவிட்ட ரமழானும் முடிந்துவிடாத அமல்களும் | Tamil Bayan - 419

           

முடிந்துவிட்ட ரமழானும் முடிந்துவிடாத அமல்களும் | Tamil Bayan - 419


முடிந்துவிட்ட ரமழானும் முடிந்துவிடாத அமல்களும்

ஜுமுஆ குத்பா தலைப்பு : முடிந்துவிட்ட ரமழானும் முடிந்துவிடாத அமல்களும்

வரிசை : 419

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 08-07-2016| 03-10-1437

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ், நமக்கு வழங்கிய சிறப்பிற்குரிய குர்ஆனின் மாதம், நோன்பின் மாதமாகியரமலான் மாதத்தை முடித்துவிட்டு ஷவ்வால் மாதத்தில் நாம் இருக்கின்றோம்.

இந்த ரமழானுடைய மாதம் முடிந்து விட்டதால்இறை வழிபாடுகளும் முடிந்துவிட்டன என்று நம்மில் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தையும்  இறைவழிபாடுகளையும் ரமழானோடு மட்டும் சுருக்கி விட்ட பலர், நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய மார்க்கமாகிய இந்த இஸ்லாம், இந்த தீன்ரமழானுக்கு மட்டும் உள்ள மார்க்கம் அல்ல. ரமழானில் மட்டும் நீங்கள் முஸ்லிம்களாக இருங்கள். அதற்குப் பிறகுநீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம் என்றுபோதிக்கக்கூடிய மார்க்கம் அல்ல நம்முடைய மார்க்கம்.

அப்படி குர்ஆன் சுன்னா போதிக்கவில்லை,அப்படி நம்முடைய சிறப்பிற்குரிய முன்னோர்களும் வாழவில்லை.

அல்லாஹ் நமக்குச் சொல்கிறான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.(அல்குர்ஆன் 3:102)

குர்ஆன் விரிவுரையாளர்இமாம் தபரி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் சொல்லும்போது,

நீங்கள் முஸ்லிம்களாக வாழுங்கள். அப்போது நீங்கள் முஸ்லிம்களாக மரணிப்பீர்கள். நீங்கள் வாழ்க்கையில் எப்போதும் முஸ்லிம்களாக இஸ்லாமிய மார்க்கத்தைப் பேணியவர்களாகவே வாழுங்கள். அப்போது உங்களுக்கு முஸ்லிம்களாக இருக்கின்ற நிலையில் உங்களுக்கு மரணம் வரும்.

அன்பானவர்களே! மரணம் நமக்கு யாருக்கு,எப்போது, எந்த நேரத்தில்,எந்த ஊரில்வரும் என்று யாராவது அறிவார்களா?அப்படி அறிந்துகொண்டால் ஒவ்வொருவரும் அந்த நேரத்திற்கு முன்பாக நாம் தவ்பா செய்து கொள்ளலாம் என்று இருந்து விடலாம்.

ஆனால்,அல்லாஹ் அதை மறைத்து விட்டான்.

وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ

நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை.(அல்குர்ஆன் 31:34)

رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ

ஏடுகள் எல்லாம் காய்ந்து விட்டன;பேனாக்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. (1)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 2516.

எதை எழுதவேண்டும் என்று அல்லாஹ் கலமுக்கு கட்டளை இட்டானோ அதை அந்தக் கலம் எழுதியது.

அதை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய திட்டங்களுக்கு பிறகு அல்லாஹ்வுடைய திட்டம் இருக்கிறது.

وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ

அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 12:21)

அடியான் அல்லாஹ்விற்கு முன்னால் அடிமையாகி பணிவதைத் தவிர, அவனுக்கு ஒரு வழியில்லை.

ஆகவே இந்த மனிதனுடைய திட்டங்கள் ஒன்று இருக்கலாம். அல்லாஹ்வுடைய திட்டம் எதுவோஅதுதான் நிறைவேறும். அல்லாஹ் எதை எழுதினானோ, அதுதான் நிறைவேறும்.

அது போன்று இன்னொரு விஷயத்தையும் அல்லாஹ் சூரா லுக்மான் இறுதியில் சொல்லிக் காட்டுகிறான்.

தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. (அல்குர்ஆன் 31:34)

ஒருவர், வெளிநாட்டில் இருந்து நமது நாட்டில் இருக்கக்கூடிய ஒரு நோயாளிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக வருகிறார். வந்த இடத்தில் மருத்துவர் மரணித்துவிடுகிறார். இப்படி, நூற்றுக்கணக்கான சம்பவங்களை பார்க்கிறோம்.

யாருக்கு எப்போது மரணம் வரும்? எங்கே மரணம் வரும்? என்று அறிய மாட்டார்கள்.

இமாம் தபரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள்: நீங்கள் முஸ்லிம்களாக வாழுங்கள் என்ற இந்த வாக்கியத்தை தான், மிக அழுத்தமாகஅல்லாஹ் சொல்கிறான். நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்.

ஏனென்றால்,யார் எப்படி வாழ்வார்களோ அதே நிலையில் மரணிப்பார்கள்.

கண்ணியத்திற்குரிய தோழர்கள், அந்த சஹாபாக்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான் :

مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய திருத்தூதராவார்கள். (அவரும்)அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள்.குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீர் காண்பீர். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் சிரம் பணி(ந்து வணங்கு)வதின் அடையாளம் இருக்கும். இதுவே தவ்றாத் (என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் வர்ணிப்பு. இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது: ஒரு பயிரை ஒத்திருக்கிறது. அப்பயிர் (பசுமையாகி, வளர்ந்து) உறுதிப்படுகிறது. பின்னர், அது தடித்துக் கனமாகிறது. பின்னர், விவசாயிகளுக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதத்தில் (வளர்ந்து,) அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கிறது. இவர்களைக் கொண்டு நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பொருட்டு (அந்த நம்பிக்கையாளர்களை படிப்படியாக அபிவிருத்திக்குக் கொண்டுவருகிறான்). அவர்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கிறான். (அல்குர்ஆன் 48:29)

சஹாபாக்கள் உடைய வாழ்க்கையின் பெரும்பகுதி இபாதத்தில் கழிந்தது. ஒரு பகுதி அவர்களுக்கு தேவையான உலக வாழ்க்கையை தேடுவதற்கு கழிந்தது. ஒரு பகுதி அவர்களுக்கு தேவையான ஓய்வில் கழிந்தது. இதற்கு இடையில் அவர்களுக்கு ஒரு வாழ்க்கை இல்லை.

அவர்களது வாழ்க்கையை மூன்றாக பிரிக்கலாம்.

அவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதிஇபாதத்தில் கழிந்தது.

இன்னொரு பகுதி, அல்லாஹ் இந்த உலகத்திற்கு அவசியமாக்கிய ஹலாலானதை தேடுவதில் கழிந்தது.

இன்னொரு பகுதி, குடும்பத்தோடும் அவசிய ஓய்வுகளோடும் கழிந்தது.

கண்ணியத்திற்குரியவர்கள! இன்று நாம்வாழ்க்கையின் நேரங்களை நான்காக பிரித்து வைத்திருக்கின்றோம். அவர்கள் மூன்றாக பிரித்திருந்தார்கள்.

இந்த நான்கில்எதில் நாம் அதிக நேரங்களை செலவழிக்கிறோம்?எதில் நம்முடைய மனம் ஈடுபடுகிறது? எங்கே நம்முடைய செல்வமும் ஓய்வு நேரங்களும் கழிகிறது? என்பதைநாம் ஒவ்வொருவரும் நமக்குள் சிந்திக்க கடமைப் பட்டிருக்கின்றோம்.

வணக்க வழிபாடுகளுக்கு என்று ஒரு நேரம். வியாபாரம்,தொழில் துறைஎன்பதற்கு ஒரு நேரம். குடும்பம் ஓய்வுக்கு ஒரு நேரம்.

நம்மிடம் நான்காவது ஒரு நேரம் இருக்கின்றது. பொழுது போக்குவதற்கு,சுற்றித்திரிவதற்கு,நேரங்களை வீணடிப்பதற்கு.

இப்படி நான்கு விதமான நேரங்களை நாம் பிரித்து வைத்திருக்கிறோம்.

இப்போது கொஞ்சம் அளந்து பாருங்கள்! நிறுத்துப் பாருங்கள்! கணக்கிட்டுப் பாருங்கள்! நம்முடைய நேரம் இந்த நான்கில் எந்த ஒன்றில் அதிகமாக செலவழிக்கப்படுகிறது என்று.

அன்பானவர்களே! மிகப்பெரிய கவலையான நிலையில் நாம் இருக்கிறோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு கொடுத்த வாழ்க்கை வீண் அடிப்பதற்காகவா?இந்த வாழ்க்கையில் ஒரு நொடி பொழுதுக்கு நாம் மதிப்பு போட முடியுமா என்று பாருங்கள்.

ஒரு நொடிப்பொழுதுக்கே நாம் மதிப்பு போட முடியாது. ஒரு நாளைக்கு நாம் மதிப்பு போட முடியுமா?எத்தனை நாட்களை வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக, இந்த நன்மையை பலர் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு முஃமின்ஒன்று, இபாதத்தில் இருப்பான். அல்லது அல்லாஹ் அவனுக்கு ஹலாலாக்கிய ரிஸ்க்கை தேடுவதில் இருப்பான்.

நூல் : தப்ரானி கபீர், எண் : 8538

இந்த இரண்டைத் தவிர ஒரு முஃமினுக்கு எங்கே நேரம் கிடைக்க முடியும்!

இன்று நமக்கு இதற்கெல்லாம் மேலாக ஒரு வேலை இருக்கிறது. அது சுற்றுவதற்கு, நேரங்களை வீணாகக் கழிப்பதற்கு, வெட்டிப்பேச்சு பேசுவதற்கு, இம்மைக்கும் மறுமைக்கும் பயனற்றது மட்டுமல்ல. இம்மையையும் மறுமையையும் பாழாக்கக்கூடிய விஷயங்களைபார்ப்பதிலும், கேட்பதிலும், அவற்றைக் கண்டு ரசிப்பதிலும், அவற்றைத் தேடிச் செல்வதிலும், ஒரு முஸ்லிம் என்று சொல்பவனும் நேரம் கழிப்பது.

அவன் தனது மார்க்கத்தை பற்றி, மறுமையைப் பற்றிஎந்த அளவு அச்சமின்மையில் இருக்கிறான். எவ்வளவு அலட்சியத்தில் இருக்கின்றான் என்று யோசித்துப் பாருங்கள்.

நம்முடைய நேரங்கள் வீணடிப்பதற்காக கொடுக்கப்பட்டவையா?

ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டுமோசமான நிலையில்சாக்கடையில் கிடக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரிஜினல் நோட்டு தான், சாக்கடையில் கிடக்கிறது என்று விட்டுட்டு போய் விடுவோமா? அல்லது அதை எப்படியாவது குச்சிகளை வைத்து எடுத்துஅல்லது தண்ணீரை ஊற்றிக் கழுவி, அத்தர் போட்டு கழுவி, அதை காயவைத்து, அயன் செய்துசுத்தமாக்கி பயன்படுத்துவோம் என்றுநம்மில் ஒரு  கூட்டத்தினர் நினைப்பார்கள்.

அன்பானவர்களே! ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டல்ல, அந்த மாதிரி லட்சம் ஆயிரங்களை விட மதிப்பானது ஒரு முஸ்லிமுடையஒரு நொடி நேரம்.

சுபஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹ் என்பவை இரண்டு மூன்று நொடிகளில் சொல்லப்படக்கூடிய திக்ருகள் இது.

இந்த நேரங்களை வைத்து தான், நீங்கள் உங்களுடைய சொர்க்கத்தை கட்டி எழுப்ப முடியும்.

இந்த நேரங்களை, அல்லாஹ் விரும்பிய இபாதத்களில் கழித்துதான்மறுமையில் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நீங்கள் வாங்க முடியும்.

இந்த நேரங்கள் உங்களுடைய ஹூருக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய விலைகள். சொர்க்கத்தில் உங்களுடைய தங்கம் வெள்ளிகளால்கட்டப்படுகின்ற மாளிகைகளுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய விலைகள்.அதை நீங்கள் அல்லாஹ்வுடைய பொருத்தத்தில் செலவழித்தால்.

சாதாரணமாக அழிந்து போகக்கூடிய ஒரு ஆயிரம் ரூபாய்க்கு கொடுக்கக்கூடிய மதிப்பை கூட,அதைவிட கோடிக்கணக்கான ரூபாய்களை,நாணயங்களை விட மதிப்பு மிக்க நேரங்களை எப்படி பாழாக்கிக் கொண்டிருக்கிறோம்.

(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ரமளான் முடிந்து விட்டது என்றால், ஏதோ மார்க்கமே முடிந்து விட்டது போல் இருக்கின்றார்கள். அடுத்த ரமளான் வரும்போது தான் மார்க்கம் புதிதாக பிறக்கும் போலிருக்கிறது.

உபரியான வணக்கங்களை இரண்டாவதாக சொல்வோம், பர்லான தொழுகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

ரமலானுக்கு ரமலான் நான் சரியாக தொழுது விடுகிறேன், இப்படி ஒரு தொழுகையாளி கூட்டம்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய காலத்தில் இருந்ததா?

ரமலானுக்கு மட்டும் தொழுகையை ஆரம்பிப்பார்கள், ரமலான் முடிந்ததோடு, பிறை பார்த்ததோடு தொழுகையை முடித்து விடுவார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான் :

إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ

(நபியே! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்து, ‘‘நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர்தான் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்பதாகக் கூறுகின்றனர். நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனினும், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயமாகப் பொய்யையே கூறுகின்றனர் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான். (அல்குர்ஆன் 63: 1)

இன்னும் ஒரு கேவலம் என்ன தெரியுமா?அவர்களுக்கு நம்முடைய பெண் பிள்ளைகளை மணமுடித்துக் கொடுக்கின்றோம், அவர்களுடைய பெண் பிள்ளைகளை நாம் மண முடித்துக் கொள்கிறோம்.

அப்படிப்பட்டவர்களோடு நம்முடைய உறவுகளை பாருங்கள். அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகின்றோம், அவர்களை முஸ்லிம்களுடைய கப்ரில் அடக்கம் செய்கின்றோம், அவர்களுக்கு தொழுகை நடத்துகிறோம்.

இப்படி ஒரு சோதனையான காலத்தில் நாம் இருக்கிறோம்.

யார் ஐங்கால தொழுகைக்கு முஸ்லிம்களுடைய மஸ்ஜிதுகளில் கலந்துகொள்ளவில்லையோ, அவருடைய பெயரும் மஸ்ஜித் உடைய தஸ்தரில் பதிவு செய்யப்பட்டிருப்பதை தவிர அவருக்கும் இஸ்லாமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோ, அவருக்கு முஸ்லிம்களுடைய மஸ்ஜிதில் திருமணம் முடித்து வைக்கப்படுகிறது.

அவர் இறந்து விட்டால், முஸ்லிம்களுடைய மக்பராவில் அடக்கம் செய்யப்படுகிறார். இதைவிட ஒரு பெரிய சோதனை இந்தக் காலத்தில் இருக்குமா? யோசித்துப் பாருங்கள்.

ரமளான் முடிந்து விடுவதோடு இபாதத்துகள் முடிவதில்லை. அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகள், ஒரு முஸ்லிமுடைய தான தர்மங்கள், வணக்க வழிபாடுகள் ரமளானுக்கு மட்டுமல்ல, ரமளான் முடிந்து விடுவதோடு நின்று விடுவதும் அல்ல.

ரமலான் ஒரு பயிற்சிக்கூடம், ஒரு பயிற்சிக் காலம். தக்வாவுக்கான ஒரு பயிற்சி, இபாதத்தில் முன்னேறுவதற்கான ஒரு பயிற்சி,வணக்க வழிபாடுகளை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு பயிற்சி, தவறிவிட்ட நன்மைகளை அடைந்து கொள்வதற்கான ஒரு பயிற்சி.

ரமளான் காலத்தில் எடுத்த அந்த பயிற்சியைக் கொண்டு வாழ்நாள் எல்லாம் மற்ற மாதங்களில் நமது ஈமானை, இஸ்லாமை, உயிரோட்டமாக வைத்துக்கொள்வதற்கு அல்லாஹு தஆலா ஒரு பயிற்சியை, ஒரு புத்துணர்ச்சியை, வழங்குகிறான்.

அல்லாஹ் தனது தூதருக்கு சொல்லக்கூடிய ஒரு ஆழமான அழுத்தமான எச்சரிக்கையான கட்டளையைப் பாருங்கள்.

وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ

(நபியே!)உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (அல்குர் ஆன்15:99)

ஒரு முஃமினுடைய இபாதத் அவன் கண்ணை மூடுகின்ற வரை தொடர்ந்து கொண்டிருக்கும். இந்த உலகத்தை விட்டு அவன் பிரிகின்ற ஒவ்வொரு கடைசி நொடி வரை அவனுடைய இபாதத் தொடர வேண்டும்.

உங்களுக்கு தெரியும்; உமர் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அந்த இறுதி நேரம் பற்றி.

விஷம் ஏற்றப்பட்ட குற்றருவாலால் அவர்களுடைய வயிற்றில் பாய்ச்சப்பட்டு, குடல் எல்லாம் துண்டு துண்டாக ஆன நிலை. துடிதுடித்துக் கொண்டு மயக்க நிலையில் இருக்கிறார்கள்.

மிஸ்வர் இப்னு மக்ரமா என்ற ஒரு நபித்தோழர் உமரை தட்டி எழுப்புகிறார். அமீருல் முஃமினீன் அவர்களே! தொழுகைக்கு நேரமாகி விட்டது தொழுங்கள் என்று.

மயக்கமான நிலை, சுயநினைவு இல்லை, மருத்துவர்கள் எல்லாம் சொல்லி விட்டார்கள். இனி ஒன்றும் முடியாது என்று.

அந்த நேரத்தில் கூட கலீஃபாவின் இறையச்சத்தை பாருங்கள்! இப்போது என்னை "அமீருல் முஃமினீன்" என்று சொல்லாதீர்கள். என்னை "உமர்" என்று அழையுங்கள் என்று சொல்கிறார்.

இப்போது நான் முஃமின்களுக்கு அதிபராக இல்லை,நான் மரணத்தருவாய்க்கு வந்து விட்டேன், என்னை சாதாரணமாக உமர் என்றே அழையுங்கள் என்று சொல்கிறார்கள்.

மேலும் சொல்கிறார்கள் : ஆம்! ஆம்! கண்டிப்பாக நீ சொல்வது சரிதான் மிஸ்வர்.

لَا حَظَّ فِي الْإِسْلَامِ لِمَنْ تَرَكَ الصَّلَاةَ

யார் ஒருவர் தொழுகையை விட்டாரோ அவருக்கு இஸ்லாமில் பங்கு கிடையாது..என்று சொல்லிவிட்டு,தனது மகனை அழைக்கிறார்கள்.

எனக்கு உளு செய்ய தண்ணீர் ஊற்று என்று சொல்கிறார். மகன் தண்ணீர் மட்டும் ஊற்றவில்லை. அவருடைய முகத்தை கழுவி விடுகிறார்கள், கைகளை கழுவி விடுகிறார்கள், அதற்குள் மயக்கமுற்று கீழே விழுந்து விடுகிறார்கள். மீண்டும் எழுப்ப படுகிறார்கள். அவர்களுக்கு உளு செய்து வைக்கப்படுகிறது. (2)

அறிவிப்பாளர் : மிஸ்வர் இப்னு மக்ரமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முவத்தா மாலிக், எண் : 74, 117.

இப்படி எல்லாம் நம்முடைய சான்றோர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து தொழுகையை படித்தார்கள்.

இன்று நம்முடைய இபாதத்கள், நம்முடைய ஐங்காலத் தொழுகைசுற்றுவதில் காணாமல் போய்விடுகின்றன. பொழுதுபோக்கில் காணாமல் போய்விடுகின்றன.

ஏன், குடும்ப சந்திப்புகளில் குடும்ப உறவுகளில் காணாமல் போய்விடுகின்றன.

இன்னும் பலர், வீட்டில் யாராவது ஒருவர் வீட்டுக்கு சென்றால் அங்கு உளு செய்வதற்கு தொழுவதற்கு வெட்கப்படுகிறார்கள். காஃபிர்களுடைய வீடுகளில் அல்ல, முஸ்லிம்களுடைய வீடுகளில். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ

(நபியே!) உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (அல்குர்ஆன் 15:99)

ஒரு முஸ்லிமால் எப்படி இறைவனை வணங்க முடியாமல் இருக்க முடியும்? ரப்பை வணங்குவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கை இது.

அன்பானவர்களே! மறுமையை நினைத்துப் பாருங்கள்!

அல்லாஹ் சொல்கிறான் :

يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே, அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (ஏனென்றால்,) அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிக்க இரக்கமுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 30)

வசனத்தின் கருத்து : அந்த உயிர், யா அல்லாஹ்! நான் இவ்வளவு பாவங்களை அள்ளிக்கொண்டு வந்து விட்டேனே, என்னைஇந்த பாவங்களிலிருந்து தூரமாக்கு என்று அங்கு மறுமையில் ஆசைப்படுவான்.

அல்லாஹ் சொல்கிறான் : பாவங்களை விட்டு இந்த உலகில் தூரமாகி விடுங்கள் என்று. உலகில் பாவத்திற்கு மிக நெருக்கமாக இருக்க விரும்பினான், நன்மைகளை விட்டு மிக தூரமாக ஓடினான், நாளை மறுமையில் எனக்கு ஒரு நன்மை நெருக்கம் ஆகி விடாதா! இந்தப் பாவங்கள் எல்லாம் என்னை விட்டு தொலைந்துவிடாதா! என்று அவன் அல்லாஹ்விடத்தில் கதறுவான்.

அன்பானவர்களே! ரமலானோடு முடிந்து விடக்கூடிய மார்க்கத்தை அல்லாஹ் நமக்குக் கொடுக்கவில்லை. ரமலானோடு நின்றுவிடக் கூடிய இபாதத்துகளை அல்லாஹ் நமக்கு கொடுக்கவில்லை.

வாழ்நாளெல்லாம் இபாதத்கள் செய்வதற்கு, இபாதத்தில் முன்னேறுவதற்கு, அதற்குரிய பயிற்சியை எடுத்துக் கொள்வதற்காக தானே தவிர, ரமலானில் வணங்கிவிட்டு, இபாதத்தை மூட்டை கட்டி வைத்துவிடுங்கள்என்பதற்காக உள்ள மாதம் அல்ல ரமலான்.

மறுமை எப்படிப்பட்ட ஒன்று. அமல்கள் எப்படிப்பட்ட ஒன்று. இந்த அமல்கள் இல்லாமல், மறுமையில் வெற்றி பெற முடியாது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நமக்கு எச்சரிக்கை செய்தபல எச்சரிக்கைகளை பாருங்கள்.

"அமல்களை விரைந்து செய்துகொண்டே இருங்கள்".

(கொஞ்சம் சோம்பேறித்தனம் காட்டினால் கூட சரி, இன்னும் பாங்கு சொல்லலயே பார்ப்போம்என்று நினைத்தால் போதும். பாங்கு சொல்வதே காதுக்கு கேட்காமல் போய்விடும். இப்பதான் பாங்கு சொல்லியிருக்கிறார்கள். இன்னும் பதினைந்து நிமிஷம் இருக்குதே! என்றால், இகாமத் சொல்லும் போது தான் அடுத்த நினைவு வரும். இப்பதான இகாமத் சொல்லி இருக்காங்க நாலு ரக்அத்துகள் இருக்குல போய் சேர்ந்திடலாம் என்று நினைத்தால், கண்டிப்பாக ஜமாத் முடிச்சவுடனே தான் போகமுடியும். அப்படித்தான் நமது நிலை இருக்கிறது.)

வணக்க வழிபாடுகளை எதிர்பார்த்து இருங்கள், விரைந்து ஓடுங்கள், சுறுசுறுப்பாக இருங்கள்.

முஃமின்களுக்கும் முனாஃபிக்குகளுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கின்றது. நாம்  முஃமின்களா? முனாஃபிக்குகளா? என்று இப்போது வஹீ இறங்கி நம்மை பிரிக்காது.

அல்லாஹ்வுக்குத் தெரியும், நம்முடைய ஈமானை பரிசோதிப்பதற்குண்டான ஒரு அளவுகோல், அமல்களில் ஆர்வம் இருந்தால் ஈமான் இருக்கிறது என்று அர்த்தம். பாவங்களை பயப்படுகின்றோமா? பாவங்கள் செய்தால் வருத்தம் ஏற்படுகிறதா? ஈமான் இருக்கிறது என்று அர்த்தம்.

அமல்கள் செய்யும்போது உற்சாகம் வருகிறதா? ஆர்வம் பிறக்கிறதா?ஆசை வருகிறதா? ஈமான் இருக்கின்றது என்று அர்த்தம்.

அமல்களுக்கு விரைந்து ஓடுகிறோமா? அமல்களில் சுறுசுறுப்பாக இருக்கின்றோமா? அல்ஹம்து லில்லாஹ் ஈமான் இருக்கிறது என்று அர்த்தம்.

(அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)

இன்னொரு பக்கம் இருக்கின்றது. அமல்களில் ஆர்வமில்லையா? அமல்களில் அலட்சியம் செய்கின்றோமா? அமல்களென்று வந்தால் சோம்பேறித்தனம் வருகின்றதா?நயவஞ்சகத்தனம் இருக்கின்றது என்று பொருள்.

(அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)

அல்லாஹ்வினுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنْ الدُّنْيَا

 

அமல்களை விரைந்து செய்யுங்கள். குழப்பங்கள் வருவதற்கு முன்னால், கடுமையான இருள் சூழ்ந்த இரவின் பகுதிகளைப் போன்று.

அப்படிப்பட்ட குழப்பங்கள் வந்து விட்டால் காலையில் முஃமினாக இருப்பவன் மாலையில் காஃபிராக மாறிவிடுவான். மாலையில் முஃமினாக இருந்தவன் காலையில் காஃபிராக மாறி இருப்பான். அதற்கு என்ன காரணம்? மார்க்கத்தை விட்டு கொண்டே இருப்பான். துன்யாவின் லாபங்களுக்காக மார்க்கத்தை விலை பேசிக் கொண்டே இருப்பான்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 118, 169.

மேலும் இமாம் முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி அறிவிக்கக் கூடிய மற்றொரு ஹதீஸ்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

بَادِرُوا بِالْأَعْمَالِ سِتًّا طُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا أَوْ الدُّخَانَ أَوْ الدَّجَّالَ أَوْ الدَّابَّةَ أَوْ خَاصَّةَ أَحَدِكُمْ أَوْ أَمْرَ الْعَامَّةِ

மறுமையின் 6அடையாளங்கள் வருவதற்கு முன்னால் அமல்களை விரைந்து செய்யுங்கள். வேகமாக செய்யுங்கள். சூரியன் மேற்கு திசையில் உதிப்பதற்கு முன்னால், அல்லது புகை வருவதற்கு முன்னால், தஜ்ஜால் வருவதற்கு முன்னால், மறுமையின் அடையாளங்களில் ஒன்று, ஒரு பெரிய மிருகம் ஒன்று வரும். அந்த மிருகம் வருவதற்கு முன்னால், உங்களில் ஒருவருக்கு தனிப்பட்ட குழப்பம் வருவதற்கு முன்னால்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 5240.

இப்படி மறுமையின் ஆறு அடையாளங்களுக்கு முன்னால் நீங்கள் விரைந்து அமல்களை செய்து கொள்ளுங்கள்.

இப்படி அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அமல்களை தொடர்ந்து செய்யச் சொல்கிறார்கள்; அமல்களில் விரைந்து செயல்பட சொல்கிறார்கள்.

அன்பானவர்களே! நம்மிடத்தில் இல்லாத பாவங்களா?நம்மிடத்தில் இல்லாத குற்றங்களா? வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியைபாவத்தில் கழித்துவிட்டு அல்லவா இருக்கிறோம்.

மறதியில், அலட்சியத்தில், எத்தனை வகையான பாவங்கள், ஒரு பாவமா? இரண்டு பாவமா? சிறிய பாவமா? பெரிய பாவமா? வேண்டுமென்று செய்ததா? அலட்சியமாக செய்தததா? மறந்து செய்ததா? இறைவனின் நினைவோடு செய்ததா? அறிந்து செய்ததா? அறியாமல் செய்ததா?

எல்லாம் அறியாத இந்த பாவமூட்டைகளை, கணக்கில்லாமல் முதுகில் சுமந்துகொண்டு இருக்கின்றோமே அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடுவதற்க்குண்டான விசேஷமான நேரம் அல்லவா அந்த தஹஜ்ஜத் உடைய நேரம்.

இப்படி நம்முடைய வணக்க வழிபாடுகள் நீண்டு கொண்டே செல்ல வேண்டும். வணக்க வழிபாடுகளிலிருந்து ஒரு முஸ்லிம், ஒரு நிமிடம் கூட அலட்சியம் செய்து விடக்கூடாது. வணக்க வழிபாடுகளை விட்டு, தன்னை ஒரு முஸ்லிம்தூரப்படுத்திக் கொள்ளக் கூடாது. (அல்லாஹ் பாதுகாப்பானாக)

இந்த அறிவுரைகள் நாம் கேட்பதற்கு மட்டுமல்ல. நம்முடைய உறவுகளுக்கும் சொல்ல வேண்டும். நம்முடைய மனைவி மக்களுக்கு, நம்முடைய பிள்ளைகளுக்கு, நம்முடைய குடும்பத்தாருக்கு, நம்மைச் சுற்றி வாழக்கூடியநூற்றுக்கணக்கான முஸ்லிம்களுக்குநாம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

இன்று பலர், தன்னளவில் மார்க்கத்தைப் பேணினாளும்குடும்பளவில் மார்க்கத்தை மறந்தவர்களாக இருக்கின்றார்கள்.

அன்பானவர்களே! அல்லாஹ் நபிக்கு சொன்ன முதல் கட்டளை,

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى

(நபியே!) தொழுது வருமாறு நீர் உமது குடும்பத்தினரை ஏவுவீராக. நீரும் அதன் மீது உறுதியாக இருப்பீராக. (இதற்காக) நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை. உமக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுக்கிறோம். முடிவான நன்மை இறையச்சத்திற்குத்தான். (அல்குர்ஆன் 20:132)

وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ

இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!( அல்குர்ஆன்26:214)

ஆகவே,மார்க்கத்தை பேணவேண்டிய கட்டாயமும், அவசியமும்நமக்கு இருப்பதைப் போன்று, நம்முடைய உறவுகளுக்கு, அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு, பாவத்திலிருந்து அவர்களை தடுக்க வேண்டிய அவசியம்நமக்கு இருக்கிறது. அவற்றை நாம் மறந்துவிடக்கூடாது.

அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா நம்மை அமல்களோடு நெருக்கமாகி வைப்பானாக! பாவங்களை விட்டு தூரமாக்கி வைப்பானாக!

அல்லாஹ்விற்கு பிடித்தமானபொருத்தமான எல்லா நன்மைகளோடுஅல்லாஹ், நம்மை மிக நெருக்கமாக்கி வைப்பானாக!

அல்லாஹ்விற்கு அதிருப்தியளிக்கக்கூடிய, அல்லாஹ்வை கோபமூட்டக்கூடிய, வெறுப்பூட்டக்கூடியஒவ்வொரு சிறிய பெரிய பாவங்களிலிருந்தும், காரியங்களிலிருந்தும்என்னையும் உங்களையும் அல்லாஹு தஆலா இறுதி மூச்சு வரை பாதுகாத்து அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، وَابْنُ، لَهِيعَةَ عَنْ قَيْسِ بْنِ الْحَجَّاجِ، قَالَ وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي قَيْسُ بْنُ الْحَجَّاجِ الْمَعْنَى، وَاحِدٌ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا فَقَالَ ‏ "‏ يَا غُلاَمُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏

குறிப்பு 2)

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَخْبَرَهُ أَنَّهُ دَخَلَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ مِنْ اللَّيْلَةِ الَّتِي طُعِنَ فِيهَا فَأَيْقَظَ عُمَرَ لِصَلَاةِ الصُّبْحِ فَقَالَ عُمَرُ نَعَمْ وَلَا حَظَّ فِي الْإِسْلَامِ لِمَنْ تَرَكَ الصَّلَاةَ فَصَلَّى عُمَرُ وَجُرْحُهُ يَثْعَبُ دَمًا (الموطأ لمالك 74 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/