HOME      Khutba      துன்பங்களின் போது தூதரின் நிலையும் பிரார்த்தனையும் (அமர்வு 2/2) | Tamil Bayan - 385   
 

துன்பங்களின் போது தூதரின் நிலையும் பிரார்த்தனையும் (அமர்வு 2/2) | Tamil Bayan - 385

           

துன்பங்களின் போது தூதரின் நிலையும் பிரார்த்தனையும் (அமர்வு 2/2) | Tamil Bayan - 385


துன்பங்களின் போது தூதரின் நிலையும் பிரார்த்தனையும்  (அமர்வு 2)

ஜுமுஆ குத்பா தலைப்பு : துன்பங்களின் போது தூதரின் நிலையும் பிரார்த்தனையும்  (அமர்வு 2)

வரிசை : 385

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 20-11-2015| 08-02-1437

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்த பின், அல்லாஹ்வுடைய தூதரின் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறிய பிறகு அல்லாஹ்வை பயந்து வாழுமாறு அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனுடைய முஃமினான இறை நம்பிக்கை உடைய அடியார்களுக்கு எப்பொழுதுமே கருணை உள்ளவனாகவும், அவர்கள் மீது அன்பையும் தனது பாசத்தையும் தனது நேசத்தையும் பொழிபவனாகவே இருக்கிறான்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த உலகத்தில் அவன் சோதிக்கின்ற சோதனை முஃமின்களை பொறுத்தவரை அது ஒரு ரஹ்மத்தாகவே அமைந்து விடுகிறது.

அல்லாஹு தஆலா இந்த உலகத்தில் அவன் இறக்குகின்ற சோதனைகள், சிரமங்கள், கஷ்டங்கள்இறை நம்பிக்கை உடையவரை பொறுத்தவரை அவர்களுக்கு அந்த சோதனையின் மறுபக்கமாக அல்லாஹ்வுடைய ரஹ்மத் மறைந்திருக்கிறது.

அந்த சோதனைகளின் மூலமாக அவர்கள் சுத்தப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அவர்களுடைய இறை நம்பிக்கை வலுப்பெறுகிறது. அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் நல்ல அமல்களின் மூலமாகவும், தவ்பா இஸ்திஃபார் மூலமாகவும் விரைகிறார்கள்.

இதனாலும் அவர்களுக்கு நன்மை ஏற்படுகிறது. தங்களுடைய பாவங்களினால் இந்த சோதனை ஏற்பட்டிருக்குமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அவர்கள் ஆதரவு வைக்கிறார்கள். இப்படி அவர்களுடைய உள்ளங்களும் அவர்களுடைய உடல் அமல்களும் சேர்ந்து சுத்தம் பெறுகின்றன, அல்லாஹ்வை முன்னோக்குகின்றன. சோதனைகளின் போது முஃமின்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புக்கும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நன்மைகளை வைத்திருக்கிறான்.

இந்த உலகத்தில் முஃமினுக்கு ஏற்படக்கூடிய எந்த ஒரு இழப்பும் நன்மை இல்லாமல் அறவே இல்லை. ஒவ்வொரு சிறிய பெரிய இழப்பிற்கும் நன்மை கட்டாயம் இருக்கிறது.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இது குறித்து அழகான ஆறுதலை நமக்கு தருகிறார்கள். ஒரு சமயம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிரிக்கிறார்கள். மேலும் கூறினார்கள் :

عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

முஃமினின் நிலையை பார்த்து, முஃமினுடைய காரியத்தை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. தனக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டால் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுகிறான். அந்த மகிழ்ச்சி அவனுக்கு நன்மையாக மாறிவிடுகிறது.

அவனுக்கு ஒரு தீங்கு, சிரமம், துன்பம், மனதை வறுத்தக் கூடிய ஒன்று நிகழ்ந்துவிட்டால் அல்லாஹ்விற்காக பொறுமையாக இருக்கிறான். எனவே, அந்த தீமையும் அவனுக்கு நன்மையாக மாறிவிடுகிறது.

அறிவிப்பாளர் : சுஹைப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 5318.

இந்த உலகத்தில் சோதனைகள் பல விதமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் எனக்கு ஏற்பட்ட சோதனை தான் பெரிய சோதனை என்று நினைப்பான்.இது இயல்பு. ஒருவன் மற்றவனை பார்த்து நினைப்பான்;உன்னை விட நான் கஷ்டத்தில் இருக்கிறேன் என்று.

பிறருடைய சிரமத்தை பார்த்து தனது சிரமத்தை மதிப்பிடக்கூடிய இந்த மனிதன் இன்னொரு பக்கம் அவனை விட பல விஷயங்களில் அல்லாஹ் என்னை நன்மையில், ஆரோக்கியத்தில், வசதியில், சிறப்பில் வைத்திருக்கிறானே என்று பார்ப்பதில்லை. இது மனிதருடைய இன்னொரு இயல்பு.

இது சில நேரங்களில் நன்றிக் கெட்ட தனத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அல்லாஹ்வுடைய அருளை அறிந்துக் கொள்ளாத அறியாமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சோதனையில் ஒரு வித்தியாசமான சோதனையை கூறுகிறார்கள்.

இந்த சோதனையை சொல்பவரும் புரிய முடியாது, கேட்பவரும் புரிய முடியாது. அந்த சோதனையில் சிக்கியவர் தான் புரிய வரும். அந்த சோதனையில் அகப்பட்டவருக்கு தான் அந்த சோதனையின் வலி தெரியும். ஒருவர் தனக்கு குழந்தை வேண்டுமென்று எதிர்பார்த்திருக்கிறார். இப்படி பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு பல துஆக்களுக்கு பிறகு அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.

பிறந்த குழந்தை பிறக்கும் பொழுதே இறந்து விடுகிறது அல்லது பிறந்து இறந்து விடுகிறது அல்லது பிறந்து சில நாட்களில் இறந்து விடுகிறது.

எப்படி இருக்கும்? இந்த சோதனையை உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும். என் உயிர் பிரிந்திருந்தால் என்ன? என் உயிர் சென்றிருக்கலாமே, என் குழந்தை உயிரோடு இருந்திருக்க வேண்டுமே.

கண்டிப்பாக தாயின் மனநிலையும் தந்தையின் மனநிலையும் அப்படி தான் இருக்கும். அடுத்து இன்னொரு குழந்தையை அல்லாஹ் கொடுப்பான். இந்த குழந்தையை கொடுத்தவன் அடுத்த குழந்தையை கொடுக்கமாட்டானா? என்ற நம்பிக்கை எல்லாம் இருக்கும்.ஆனால், அந்த சோதனையின் நேரத்தில் எப்படி இருக்கும்!

மருத்துவமனைக்கு சென்றால் தான் தெரியும். ஒரு நாளைக்கு அது போன்று எத்தனை நிகழ்வுகள் நடக்கின்றன என்று.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் :

إِذَا قَبَضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبَهُ إِلَّا الْجَنَّةُ

நான் என் அடியானின் விருப்பமான அந்த குழந்தையின் உயிரை கைப்பற்றிக் கொள்ளும் பொழுது அந்த அடியான் பொறுமையாக இருந்து, யா அல்லாஹ்! இந்த சோதனையினால் எனக்கு நன்மையை கொடு என்று எதிர்பார்த்தவனாக அவன் அல்லாஹ்வின் விதியை பொருந்திக் கொண்டு விட்டால் அவனுக்கு சொர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5944, 6424.

கண்ணியத்திற்குரியவர்களே! இது தான் இறை நம்பிக்கை, இது தான் இஸ்லாம், இது தான் அல்லாஹ்வின் மார்க்கம்.

காஃபிர்களை பொறுத்தவரை இணை வைத்தவர்களை பொறுத்த வரை அவர்களுக்கு ஒன்றுமே இல்லை. அவர்களுக்கு எல்லாம் இந்த துன்யாவோடு முடிந்து விடும். எனவே தான்மகிழ்ச்சியிலும் அவர்கள் தங்களை கட்டுப்படுத்த முடியாது. சோதனையிலும் அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது.

இறை மறுப்பாளர்களை பொறுத்த வரை,மகிழ்ச்சி என்றாலும் அந்த மகிழ்ச்சியை எப்படி கொண்டாடுவது என்பது அவர்களுக்கு தெரியாது. அந்த மகிழ்ச்சியில் என்ன செய்ய வேண்டும்? என்பது அவர்களுக்கு தெரியாது. சிரமம், கவலை, துக்கம், துன்பம் ஏற்பட்டு விட்டால் அந்த துன்பத்தில் என்ன செய்வது என்றும் அவர்களுக்கு தெரியாது.

அவர்களுக்கு இந்த உலகத்தை தவிர வேறு வாழ்க்கையை அவர்கள் அறிய மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு எல்லாம் இந்த உலகம் தான்.

எனவே தான், பல இறை மறுப்பாளர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பல சிலை வணங்கிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இறை மறுப்பாளர்கள் என்றால் அவர்கள் கடவுளை மறுத்தார்களா? என்றால் கடவுளை மறுக்கவில்லை.

அல்லாஹ்வை மறுத்தார்களா? என்றால் அல்லாஹ்வை மறுக்கவில்லை. அல்லாஹ்விற்கு  இணை வைக்கின்ற காரணத்தால் அவர்களும் இறை மறுப்பாளர்கள் தான். சிலை வணங்கிகள் அவர்கள் இறை மறுப்பாளர்கள். ஏன்? அல்லாஹ்விற்கு இணை வைக்கிறார்கள்.

அவர்களில் பலரை நீங்கள் பார்த்திருக்கலாம்.ஒரு துன்பம் ஏற்பட்டுவிட்டால் அவர்களது வாழ்நாளில் அவர்களது குடும்பத்தில் மரணம் ஏற்பட்டுவிட்டால் உடனே அவர்கள் கூறுகின்ற வார்த்தை, கடவுளுக்கு கண் இல்லையா? இந்த கடவுளை நான் வணங்கி என்ன பிரயோஜனம்? அவன் எங்கே சென்றுவிட்டான்? எனக்கு ஏன் இந்த துரோகம் செய்தான்? நான் அவனுக்கு என்ன செய்தேன்? என்று அவர்கள் படைத்த இறைவனை ஏசுகிறார்கள்.

ஆனால், வாழ்நாளில் வணங்கியதோ கற்சிலைகளை, பொய்யான தெய்வங்களை, சிலைகளை, விக்ரகங்களை வணங்கினார்கள். ஆனால், துன்பம் ஏற்பட்டுவிட்டால் அந்த விக்ரகங்களை எல்லாம் மறந்துவிட்டு இறைவனை ஏசுகிறார்கள். எவ்வளவு பெரிய மடத்தனம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?இது தான் இறை மறுப்பாளர்கள், இணை வைப்பவர்களுடைய நிலை.

ஒரு முஃமினை பொறுத்தவரை அப்படியல்ல. அவனுடைய இன்பமும் அவனை வரம்பு மீறச் செய்யாது. அவனுடைய துன்பமும் அவனுடைய இறைவனை மறக்கும் படி செய்யாது.

இன்னும் சொல்லப் போனால் ஒரு முஃமின், ஒரு இறை மறுப்பாளன், ஒரு இணை வைப்பவனிடமிருந்து எப்படி வித்தியாசப்படுவான் என்றால், இன்பமான நேரங்களை விட துன்பமான நேரங்களில், எதிரிகளின் சூழ்ச்சிகள் சூழ்ந்து கொள்ளும் பொழுது, ஆபத்துகள் சூழ்ந்து கொள்ளும் பொழுது ஒரு முஃமினுடைய தனித்தன்மை மிகத் தெளிவாக தெரிய வரும்.

அந்த முஃமின் அவருடைய உள்ளத்தால் அல்லாஹ்வை நம்பிக் கொண்டிருந்த காரணத்தால், அவனுடைய உள்ளம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்ற காரணத்தால் ,அந்த துன்பத்தில் அவனுக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சி, அந்த துன்பத்தில் அவன் அல்லாஹ்விற்கு நெருக்கமாக இருக்கின்ற அந்த உணர்வை பெறுகிறான்.

அவனுடைய இன்பத்தில் இதை அவன் உணரமாட்டான். எனவே தான், அவன் துன்பத்தில் இருந்தாலும் கூட, அல்லாஹ் என்னோடு இருக்கிறான் என்ற உணர்வு அவனுக்கு அந்த துன்பத்தை மறக்க வைத்துவிடும். அந்த துன்பத்தின் வலியை அவனுக்கு குறைக்க வைத்துவிடும்.

அந்த துன்பத்தின் வலியை விட இறை நெருக்கத்தின் உணர்வை உணர்கின்ற அவனுடைய உணர்வு அவனுக்கு இன்னொரு பக்கம் அவனுடைய உள்ளத்தில் நிம்மதியை, ஒருவிதமான ஈமானிய சுவையை அவருடைய உள்ளத்தில் உலக ஆற்றல்களால் அளந்து பார்க்க முடியாத ஒரு ஈமானிய ஆற்றலை உண்டாக்கும்.

சோதிக்கப்பட்ட நபிமார்களின் வரலாறுகளை எடுத்து படித்துப் பாருங்கள். இறை நேசர்களின் வரலாறுகளை எடுத்துப் படித்துப் பாருங்கள்.

பிலால் ரழியல்லாஹு அன்ஹு,இந்த உலகத்தில் இறை நம்பிக்கை கொண்ட காரணத்தால் சோதிக்கப்பட்ட சமுதாயம் அந்த நபித் தோழர்களின் சமுதாயம். அல்லாஹ்வை ரப்பு என்று ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்தால் விக்ரக ஆராதனையை மறுத்த ஒரே காரணத்தால் தங்களது சொந்த சமுதாய மக்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள்.

சுடும் மணலில் கிடக்கப்பட்டு, கரும் பாறைகளை நெஞ்சில் சுமத்தப்பட்டு அதோடு மட்டுமல்லாமல் அவருடைய கால் பகுதிகள் சாட்டைகளால் அடிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் பொதுவாக மனிதர்கள் வலியினால் காப்பாற்றுங்கள், விட்டுவிடுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று துடிக்கின்ற அந்த துடிப்பு பொதுவாக இருக்கும். ஆனால் பிலால் அவர்கள் அஹத் அஹத் அஹத் என்று கூறுகிறார். அல்லாஹ் ஒருவன் அல்லாஹ் ஒருவன் அல்லாஹ் ஒருவன் என்று கூறுகிறார்.

இவருடைய சொல் இந்த தவ்ஹீதுடைய கூற்று அதிகரிக்கிறது. காஃபிர்களுடைய அந்த தொந்தரவும், அந்த வேதனையும், அவர்களுடைய துன்புறுத்தல்களும் அதிகரிக்கிறது. ஆனால், இறுதியில் பிலால் அஹத் என்று கூறியது ஓயவில்லை. ஆனால், காஃபிர்களோ அடித்து ஓய்ந்து விடுகிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் எண் : 3832,இப்னு மாஜாஎண் : 150

பிலாலிடத்தில் பின்னொரு காலத்தில் கேட்கப்பட்டது. பிலால் அவர்களே! இவ்வளவு துன்பத்திற்கு சோதனைகளுக்கு ஆளானீர்களே, உங்களால் எப்படி சகித்துக் கொள்ள முடிந்தது. இப்படிப்பட்ட ஒரு பொறுமை உங்களுக்கு எப்படி கிடைத்தது.

அந்த வேதனையின் கசப்பை ஈமானின் சுவையோடு இணைத்தேன். ஈமானின் சுவை எனக்கு அதிகரித்து விட்டது.

பார்க்க : அஸ்ஸீரதுல் ஹலபிய்யா : 1/422

கண்ணியத்திற்குரியவர்களே! இது தான் இறை நம்பிக்கையாளர்களுடைய நிலை. இந்த ஒரு தன்மையை கொண்டு தான் முஷ்ரிக்குகளிடமிருந்து, காஃபிர்களிடமிருந்து, சிலை வணங்கிகளிடமிருந்து அவர்கள் வேதக்காரர்களில் உள்ள சிலை வணங்கிகளாக இருக்கட்டும்,அல்லது ஏனைய சிலை வணங்கிகளாக இருக்கட்டும் அவர்களிலிருந்து ஒரு முஸ்லிம் வித்தியாசப்படுகின்றான்.

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா ரழியல்லாஹு அன்ஹு ஒரு கிறிஸ்தவ மன்னனிடத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். எமன் தேசம் வழியாக சென்ற பொழுது அவர்கள் ஒரு கிறிஸ்துவ மன்னனால் அவர்களும், அவர்களுடைய ஒட்டுமொத்த தோழர்களும் சிறைப்பிடிக்கப் படுகிறார்கள். அப்பொழுது மன்னன் கூறுகிறான், ஈமானை விட்டு விடுங்கள் என்று.

முடியாது என்று கூறுகிறார்கள். மிரட்டுகிறான், வார்த்தை கூறுகிறான். எனது ஆட்சியில் பாதி பகுதியை உங்களுக்கு தருகிறேன். என் மகளை மணமுடித்து தருகிறேன் என்று கூறுகிறான். அதற்கும் அவர்கள் மசியவில்லை, தலை சாய்க்கவில்லை.

பிறகு பெரிய பாத்திரத்தை கொண்டு வரச் சொல்லி அடுப்பில் அந்த பாத்திரம் வைக்கப்படுகிறது. கடுமையான நீர் அங்கே கொதிக்க வைக்கப்படுகிறது.

அவர்களில் ஒருவரை அழைத்து தனது அடிமை ஆட்கள் இடத்தில் கூறுகிறான். அவரை தூக்கி கொதிக்கின்ற தண்ணீரில் போடுங்கள் என்று. போடப்பட்ட அந்த தோழர் அப்படியே உடலெல்லாம் அக்குவேராக பிரிகிறார். ஆனால், அந்த தோழர்களில் ஒருவர் கூட மனதில் குழப்பம் இல்லாமல் அவர்களுடைய நிலை திடகாத்திரமாக உறுதியாக இருக்கிறது.

இன்னொருவர் போடப்படுகிறார் அப்பொழுதும் அமைதியாக இருக்கிறார்கள். இறுதியாக அந்த தலைவருக்கு சொல்லப்படுகிறது.அவர்களில் யாரும் ஈமானை விடுவதற்கு தயாராக இல்லை என்பதாக.

அப்பொழுது மன்னன் கூறுகிறான், இவர்களை அழைத்து சென்று கொன்றுவிடுங்கள் என்று.

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா ரழியல்லாஹு அன்ஹு அழுகிறார்கள். மன்னனிடத்தில் இவர் அழுகிறார் என்று செய்தி சொல்லப்படுகிறது. மன்னன் அழைத்து வரச் சொல்கிறார் மனம் மாறிவிட்டார்கள் போல என்று. அப்பொழுது கேட்கிறார்கள், நீ ஏன் அழுதாய் ? என்று. அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா ரழியல்லாஹு அன்ஹு சொல்லக்கூடிய வார்த்தையை பாருங்கள் சகோதரர்களே!

இந்த வார்த்தை அலங்கரிக்கப்பட்ட ஒரு வார்த்தை அல்ல. ஏனென்றால், இந்த வார்த்தைக்கு பின்னால் ஏற்படக்கூடிய அந்த மாற்றத்தை நீங்கள் உணர்ந்து பார்க்க வே‌ண்டும். ஏதோ வீராப்பிற்கு கூறக்கூடிய வார்த்தை அல்ல. அந்த மன்னனிடம் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா ரழியல்லாஹு அன்ஹு அழைத்து வரப்பட்ட பொழுது மன்னன் கேட்ட கேள்விக்கு அவர்கள் கூறினார்கள்.

நான் ஏன் அழுதேன் தெரியுமா? வேதனையை நினைத்தோ, நான் கொல்லப்படுவதை நினைத்தோ அழவில்லை. எனக்கு இருப்பதோ ஒரு உயிர் தானே, என் உடலில் உள்ள ரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு எனக்கு உயிர் இருக்க வேண்டுமே. ஒன்றன் பின் ஒன்றாக அல்லாஹ்வின் பாதையில் அந்த உயிர் பிரிய வேண்டுமே. அதற்காக நான் கவலைப்பட்டு அழுதேனே தவிர, உனது தண்டனையாலோ உனது இம்சையாலோ நான் அழவில்லை.

இந்த வார்த்தையை கேட்ட அந்த மன்னன் தனது அரசக் கட்டிலிலிருந்து கீழே வந்துவிட்டார். என் நெற்றியில் ஒரு முத்தம் வைத்துவிடு நான் உங்கள் அனைவரையும் விடுதலை செய்கிறேன் என்று கெஞ்சிக் கேட்கிறான். எப்படிப்பட்ட மாற்றம் பாருங்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவை வரவேற்று இவருடைய நெற்றி முத்தமிடுவதற்கு தகுதியான நெற்றி. முஃமின்களே! நானும் முத்தமிடுகிறேன் நீங்களும் முத்தமிடுங்கள் என்று சொன்னார்கள்.

சியரு அஃலாமின் நுபலா : 2/14

இது தான் ஒரு முஃமினுடைய நிலை. சோதனையில் நிலைகுலையாமல் இருப்பான். துன்பங்கள் அவனை நெருங்கும் பொழுது அவன் அல்லாஹ்வின் பக்கம் நெருங்கிக் கொண்டிருப்பான்.

துன்பங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவன் அல்லாஹ்வின் பக்கம் தன்னுடைய நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டிருப்பான். தனது வணக்க வழிபாடுகளை அதிகரித்துக் கொண்டிருப்பான். தன்னுடைய இஸ்திஃபார் பாவ மன்னிப்பை அதிகரித்துக் கொண்டிருப்பான். அல்லாஹ் என்னை நேசிக்கிறான் என்பதை உணர்வான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

إِنَّ مِنْ أَشَدِّ النَّاسِ بَلَاءً الْأَنْبِيَاءَ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ

 

சோதனை கடுமையானவர்கள் இறைத்தூதர்கள். அதற்கு பிறகு அவர்களுக்கு நெருக்கமானவர்கள். அதற்கு பிறகு அவர்களுக்கு நெருக்கமானவர்கள். (1)

அறிவிப்பாளர் : ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 35832, 27078.

இதற்கு என்ன அர்த்தம் இல்லை. முஃமின்கள் என்றால் அவர்களுக்கு சோதனை வந்து கொண்டு தான் இருக்க வேண்டுமா?இந்த உலக வாழ்க்கையை அவர்கள் சிரமத்தில் தான் கழித்துக் கொண்டிருக்க வேண்டுமா? அப்படி இல்லை.

مَا كَانَ اللَّهُ لِيَذَرَ الْمُؤْمِنِينَ عَلَى مَا أَنْتُمْ عَلَيْهِ حَتَّى يَمِيزَ الْخَبِيثَ مِنَ الطَّيِّبِ

(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. (அல்குர்ஆன் 3:179)

சுத்தமானவர்களை அசுத்தமானவர்களிலிருந்து பிரித்துவிடுவதற்காக அல்லாஹ் சோதிக்கிறான். உண்மையான முஃமின்கள் யார்? போலிகள் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்று சோதித்து பிரித்துவிடுவதற்காக அல்லாஹ் சோதிக்கிறான்.

இதே கஷ்டமான, சிரமமான, துன்பமான நிலையில் அல்லாஹ் முஃமின்களை ஒருகாலும் விட்டுவைக்கமாட்டான்.

إِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِينَ

நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்). (அல்குர்ஆன் 11:49)

யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறை அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுகிறான். ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறை அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுகிறான். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு. இப்ராஹிம், ஸாலிஹ்,ஹூத்  இத்தனை நபிமார்களுடைய வரலாறுகளை நாம் படிக்கும் பொழுது குர்ஆனில் என்ன புரிகிறோம்.

இங்கு பலர் குர்ஆனை வெறும் பரக்கத்திற்காகவும் சடங்குகளுக்காகவும், சமுதாயத்திற்காகவும் தான் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு குர்ஆன் எப்படி வழிகாட்டும்? இவர்கள் குர்ஆனிலிருந்து எப்படி படிப்பினை பெறுவார்கள்?

ஒவ்வொரு நபிமார்களின் வரலாறுகளை பாருங்கள். சோதிக்கப்பட்ட அந்த சோதனையில் வடிவத்தை பாருங்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அங்கே அவர்களை பாதுகாப்பதற்கு யாரும் இல்லை. முன்னால் நெருப்பு குண்டம். சாதாரணமான நெருப்பா? ஆகாயத்தில் பறக்கக் கூடிய பறவைகளே பொசிந்து விடும் போல இருக்கும். அந்த அளவிற்கு பல நாளாக எரிக்கப்படுகின்றது அந்த நெருப்பு குண்டம்.

அந்த நெருப்பு குண்டத்தின் அருகில் சென்று அவரை போட முடியாது. அவருக்காகவே பெரிய மின்ஜலிக் என்ற கரி செய்யப்படுகிறது. அந்த காலத்தில் போருக்காக அதை பயன்படுத்துவார்கள். பெரிய உயரமான கோட்டையின் மீது நெருப்பு கங்குகளை வீசுவதற்காக தூரமான இடத்தில் நின்று கொண்டு வீசுவார்கள். அதில் அவர் வைக்கப்படுகிறார்.

அங்கே அவருக்கு ஆதரவாளர் யாரும் இல்லை. பலவீனமான சிலர் இருந்தார்கள். அவ்வளவு பெரிய நம்ரூத் மன்னனுக்கு முன்னால் அந்த இராக்குடைய கூட்டத்திற்கு முன்னால் அந்த அர்பமான கூட்டத்தால் என்ன செய்ய முடியும்?

அவர்கள் கூறிய ஒரே வார்த்தை, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள்.

இதே வார்த்தையை தான் அன்று இப்ராஹிம் கூறினார். அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்;

الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் 3:173)

வசனத்தின் கருத்து : மக்காவின் சில எதிரிகள் வந்து கூறினார்கள். உங்களை அழிப்பதற்காக மக்காவாசிகள் பெரும் ஆயுதங்களை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். பெரும் படையை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் அவர்கள் உங்களை வந்து அழித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு ஆயுதத்தோடு,  படைபலத்தோடு அவர்கள் வரப்போகிறார்கள் என்று அந்த அற்ப எண்ணிக்கையில் உள்ள அந்த தோழர்களுக்கு பயமுறுத்துகிறார்கள்.

எப்படி இருக்கும் பாருங்கள். ஏற்கனவே உஹதுப் போரில் துவண்டு போய் வந்த தோழர்களுக்கு இப்படி ஒரு அச்சுருத்தல் கொடுக்கப்படுகிறது. இந்த சமயத்தில் அந்த தோழர்கள் இவ்வாறு தான் கூறினார்கள், அதை அல்லாஹ் நமக்கு அழகாக சொல்லிக்காட்டுகின்றான். (அல்குர்ஆன் 3:173)

வந்த எதிரிகள் பயந்து ஓடிவிட்டார்கள். எதுவுமே இவர்கள் செய்யவில்லை. حَسْبُنَا اللَّهُ  என்ற வார்த்தையில் உள்ள வலிமை.

போர் நடக்கவே இல்லை. அல்லாஹ் எதிரிகள் உள்ளத்தில் பயத்தை போட்டான். கொண்டு வந்த அத்தனை சாமான்களையும், உணவுகளையும் போட்டுவிட்டு ஓடினால் போதும் என்று ஓடிவிட்டார்கள்.

يَا أَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللَّهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ

நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 8:64)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், இதே வார்த்தையை தான் அன்று இப்ராஹிம் கூறினார். இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் மின்ஜலிக்கில் கட்டப்பட்டுவிடுகிறார்கள். கை கால் கட்டப்பட்டு மின்ஜலிக்கின் குழியில் அவர் வைக்கப்படுகிறார்.

யா அல்லாஹ்! உனது கலீல் இப்போது நெருப்பில் போடப்படுகிறாரே, இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம்அவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள். என்ன வார்த்தையை கூறினார்கள்? حسبي الله

அல்லாஹ் எனக்கு போதுமானவன்.

அல்லாஹ் நாடினால் மழையை இறக்கி நெருப்பை அழித்திருக்கலாம்.

அல்லாஹ் நாடினால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை உயர்த்தியதை போன்று இப்ராஹிம் நபியை அந்த மின்ஜலியிலிருந்து வானத்திற்கு உயர்த்திருக்கலாம் அல்லது வேறு விதமான படைகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வானத்திலிருந்து அனுப்பியிருக்கலாம்.

இது தான் முஃமின்களுக்கு அல்லாஹ் உதவி செய்வது.

அவனுடைய உதவியின் வழிகள். சிரமங்களை, துன்பங்களை அல்லாஹ் அகற்றுகின்ற வழிகள். ஒரு வழியாக இருக்காது, உங்களுடைய கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு பல வழிகளில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.

ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் ஒவ்வொரு வழியில் உதவி செய்தான். இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உதவிய வழியை பாருங்கள்.

இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? நெருப்புக் குண்டத்தில் போடப்பட்டு நமது கற்சிலைகளை உடைத்தெறிந்த மனிதருக்கு மிகப் பெரிய கொடிய வேதனையை நாம் சுவைக்க வைக்கப் போகிறோம்.

وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ

மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்! (அல்குர்ஆன் 21:70)

அல்லாஹ் கூறினான் அந்த நெருப்பிற்கு கூறினான் :

قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம். (அல்குர்ஆன் 21:69)

பல நாள் எரிக்கப்பட்ட நெருப்பில் போடப்படுகிறார், நெருப்பெல்லாம் அழிந்து விடுகிறது. இப்ராஹிம் (அலை) நிம்மதியாக இருந்துவிட்டு வெளியே வருகிறார்கள். அவர்களுடைய உடலின் ஒரு முடி கூட எரியவில்லை. பார்த்தவர்கள் பயந்துவிடுகிறார்கள், விரண்டு ஓடிவிடுகிறார்கள்.

அல்லாஹ்வின் உதவி நம்முடைய கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு வரும்.

கண்டிப்பாக சிரமத்திற்கு பிறகு அல்லாஹ் உங்களுக்கு இலகுவை கொடுத்தே தீருவான். அது உங்களுடைய கற்பனைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டுமென்று நீங்கள் எண்ணாதீர்கள்.

وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான். (அல்குர்ஆன் 65:2,3)

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொன்றுவிடுவோம் என்று திட்டமிட்டார்கள் சூழ்ந்து கொண்டார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வானத்திற்கு உயர்த்திக் கொண்டான்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொன்று விடுவோம், அவர்களின் இஸ்ராயிலின் கூட்டத்தார்களை கொன்று விடுவோம் என்று நினைத்தார்கள். அல்லாஹ் கூறினான்; கடலுக்குள் செல்லுங்கள் என்று.

எதிரிகள் நினைத்தார்கள் என்ன ஆகப் போகிறதோ என்று.ஒன்று கடலுக்குள் சென்று அழிவார்கள். இல்லையென்றால் நம்முடைய வாளுக்கு இறையாகி அழிவார்கள் என்று. அல்லாஹ் அழிக்க நினைத்தவர்களை அழித்து முடித்தான்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வின் உதவி நம்முடைய கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது.

மனிதன் அல்லாஹ்வின் வல்லமையை தன்னுடைய அறிவில் ஒப்பனை செய்து விட முடியாது. மனிதன் அல்லாஹ்வின் உதவியின் வழிகளை தன்னுடைய அறிவில் ஒப்பனைத்து விட முடியாது.

அல்லாஹ்விடத்தில் உதவியை கேட்டு நம்பிக்கையோடு அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தவனாக அல்லாஹ்வை சார்ந்தவனாக இருக்க வேண்டும். அல்லாஹ் என்னை கைவிடமாட்டான். இந்த உலகத்தில் நான் இழந்தாலும் எனக்கு மறுமை இருக்கிறது.

அல்லாஹ் எனக்கு வெற்றியை கொடுக்கும் பொழுது அதற்குரிய கண்ணியத்தை கொடுப்பான். அதற்குரிய வழிகளை அவன் ஏற்படுத்துவான். இந்த ஈமானிய உணர்வு தான் அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கமாக்குகிறது. நமக்கு உண்மையான நிரந்தரமான வெற்றியை தருகிறது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுத்த வார்த்தைகள் இதை தான் நமக்கு பாடமாக, படிப்பினையாக கற்பிக்கின்றன

கண்ணியத்திற்குரியவர்களே! இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக் கூடிய அந்த வார்த்தையை பாருங்கள். இமாம் புகாரி (ரஹி) பதிவு செய்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுவிட்டால், ஏதாவது மனக்கவலைகள் சஞ்சலங்கள் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை.

இங்கே கொஞ்சம் நம்மை பரிசோதனை செய்ய வேண்டும். இன்று நாம் நம்முடைய நிலைபாடு எப்படி இருக்கிறது என்றால் விதியை நம்புகிறோம் என்ற பெயரில் துணிவு கொள்ளக்கூடிய மக்களாக நம்மில் பலர் இருக்கிறார்கள்.

என்ன துஆ கேட்டுக் கொண்டு? நடக்கிறது நடக்கட்டும். இது அல்லாஹ்வை மறுக்கக் கூடியவனின் பேச்சு. விதியை நம்பாதவன் பேசக்கூடிய பேச்சு. நீ அல்லாஹ்வை நம்பியிருந்தால் சோதனைகளின் போது அல்லாஹ்வின் பக்கம் ஓடோடி சென்று, யா அல்லாஹ்! என்னை தண்டித்து விடாதே! யா அல்லாஹ்! என்னை பாதுகாத்துக் கொள் என்று இரட்சிப்பை அல்லாஹ்விடத்தில் தேட வேண்டும்.

அல்லாஹ்வை நம்பியிருந்தால் அல்லாஹ்விடத்தில் துஆவிற்கு கையேந்தியிருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விடவா நீ விதியை நம்பி விட்டாய்.

ஒரு காரியம் தங்களுக்கு துக்கத்தை, துயரத்தை, அச்சத்தை ஏற்படுத்தும் படி நேர்ந்துவிட்டால் உடனே தொழுகைக்கு நின்று விடுவார்கள்.

கரு மேகம் சூழ்ந்து கொண்டால் மக்களெல்லாம் மழை பொழியுமென்று சந்தோஷப்படுகின்ற நேரத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடனே கைத்தூக்கி விடுவார்கள்.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

யா அல்லாஹ்! இந்த மேகத்தில் உள்ள நன்மையை கேட்கிறேன். இது எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறதோ அதனுடைய நன்மையை கேட்கிறேன்.

யா அல்லாஹ்! இந்த மேகத்தின் தீங்கை விட்டும், இதிலுள்ள தீங்கை விட்டும், எந்த கட்டளைக்காக அனுப்பப்பட்டிருக்கிறதோ அதனுடைய தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன். தொழுகைக்கு நின்றுவிடுவார்கள். (2)

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 1496, 899.

இன்று பாருங்கள் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய சோதனை இறங்கிக் கொண்டிருக்கிறது இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்விடத்தில் உதவி தேட, தொழுகையின் பக்கம் விரைய, இஸ்திஃபார் செய்ய, பாவ மன்னிப்பு தேட, தவ்பா செய்ய, கையேந்த இவர்களுக்கு மனம் வரவில்லை.

எவ்வளவு பெரிய உள்ளத்தில் அழுக்கு, துரு, கசடுகள் ஏறியிருக்கின்றன பாருங்கள்.அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சூரிய கிரகணம் ஏற்பட்டால் அது முடிகின்ற வரை (1மணி நேரமோ, 2மணி நேரமோ, 3மணி நேரமோ)தொழுகையில் நிற்பார்கள். சந்திர கிரகணம் ஏற்பட்டால் தொழுகைக்கு விரைந்து விடுவார்கள்.

மழை அதிகமானால் தொழுகைக்கு விரைந்து விடுவார்கள். மழை இல்லை என்றால் தொழுகைக்கு விரைந்து விடுவார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நிலை இது தான். இதை தான் முஃமின்களுக்கு அல்லாஹ்வுடைய தூதர் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், இந்த முஃமின்களுடைய நிலை எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்.

மாற்றார்களின் கலாச்சாரத்தில் வாழ்ந்து மார்க்க கல்வி இல்லாத காரணத்தால் மடமை, அறியாமை, முட்டாள்தனம், குஃப்பார்களின் கலாச்சாரம் உள்ளத்தில் ஏறிவிட்ட காரணத்தால் இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறைகள், நபியின் ஒழுக்கங்கள், ஈமானிய இஸ்லாமிய அந்த பிரார்த்தனையின் அத்தனை வழிமுறைகளும் புறக்கணிப்படுகின்றன.

காகிதங்களில் மட்டும் இருக்கின்றன. வாழ்க்கையில் செயல்படுத்தக்கூடிய  மக்கள் எங்கே?

அல்லாஹ்வுடைய தூதர் அழகிய ஒரு துஆவை சொல்லித் தருகிறார்கள். இப்னு அப்பாஸ் கூறுகிறார்கள், பிரச்சனை, துன்பம், துயரம், மனக்கஷ்டம் இறைத்தூதருக்கு ஏற்பட்டால் அவர்கள் கூறுகிறார்கள்.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبُّ الْعَرْشِ الْكَرِيم

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன் அவன் மகா சகிப்பாளன்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை. அவன் வானங்களுடைய அதிபதி, பூமியின் அதிபதி, கண்ணியத்திற்குரிய அர்ஷின் அதிபதி.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 1908, 2532.

இந்த வார்த்தையை அவர்கள் திரும்ப திரும்ப கூறிவிடுவார்கள்.

அன்பிற்குரியவர்களே! சோதனை அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வானத்திலிருந்து இறக்கப்பட்டாலோ அல்லது பூமியிலிருந்து உண்டாக்கப்பட்டாலோ அல்லது எதிரிகளின் புறத்திலிருந்து சோதனைகள் அனுப்பப்பட்டாலோ, ஒரு முஃமினின் நிலை அவனுக்கு எப்பொழுதும் ஒரே திசை தான், அல்லாஹ் ஒருவன் தான்.

மாற்றார்களுக்கு வேண்டுமானால் அவர்கள் ஓடுவதற்கு பல கோணங்கள், பல வழிகள் இருக்கலாம். ஆனால், ஒரு முஃமினுக்கு அல்லாஹ் ஒருவன் தான்.

وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ

மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன். (அல்குர்ஆன் 65:3)

أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ

அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா?(அல்குர்ஆன் 39:36)

ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே! இந்த ஒரு ஈமானிய நிலை நமக்கு வந்திருக்கிறதா? என்று பரிசோதிப்பதற்குண்டான சந்தர்பமாக இது போன்ற சோதனைகளின் நேரங்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற துன்பங்கள், துயரங்கள், மனக்கஷ்டங்கள் அது மழையினால் இருக்கட்டும், பூகம்பத்தால் இருக்கட்டும், எதிரிகளின் தாக்குதல்களினால் இருக்கட்டும்.

எந்த ஒரு நிறத்தில், எந்த ஒரு கோணத்தில் வந்தாலும் சரி, அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து. அல்லாஹ் சோதிக்கிறான். நான் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த சோதனையில் நான் எப்படி நடந்துக் கொள்ள வேண்டுமென்று அல்லாஹ் விரும்புகிறான். அது தான் ஒரு அடியானின் பார்வையாக, அது தான் ஒரு அடியானின் செயல்பாடாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய உதவியை கொண்டு தான் நாம் உதவி பெற முடியுமே தவிர. நம்முடைய திட்டங்கள், நம்முடைய அனுபவங்கள், நம்முடைய அறிவு எல்லாம் பொய்பித்து விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஈமானிய உணர்வுகளை, நல்ல அமல்களுடைய வழிகாட்டுதலை நமக்கு தந்தருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ حُصَيْنٍ عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ حُذَيْفَةَ عَنْ عَمَّتِهِ فَاطِمَةَ أَنَّهَا قَالَتْأَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعُودُهُ فِي نِسَاءٍ فَإِذَا سِقَاءٌ مُعَلَّقٌ نَحْوَهُ يَقْطُرُ مَاؤُهُ عَلَيْهِ مِنْ شِدَّةِ مَا يَجِدُ مِنْ حَرِّ الْحُمَّى قُلْنَا يَا رَسُولَ اللَّهِ لَوْ دَعَوْتَ اللَّهَ فَشَفَاكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَشَدِّ النَّاسِ بَلَاءً الْأَنْبِيَاءَ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْمسند أحمد (25832 –

குறிப்பு 2)

و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ سَمِعْتُ ابْنَ جُرَيْجٍ يُحَدِّثُنَا عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَصَفَتْ الرِّيحُ قَالَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ قَالَتْ وَإِذَا تَخَيَّلَتْ السَّمَاءُ تَغَيَّرَ لَوْنُهُ وَخَرَجَ وَدَخَلَ وَأَقْبَلَ وَأَدْبَرَ فَإِذَا مَطَرَتْ سُرِّيَ عَنْهُ فَعَرَفْتُ ذَلِكَ فِي وَجْهِهِ قَالَتْ عَائِشَةُ فَسَأَلْتُهُ فَقَالَ لَعَلَّهُ يَا عَائِشَةُ كَمَا قَالَ قَوْمُ عَادٍ)  فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا(صحيح مسلم 1496 –

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/