HOME      Khutba      பயங்கரவாதமும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் | Tamil Bayan - 571   
 

பயங்கரவாதமும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் | Tamil Bayan - 571

           

பயங்கரவாதமும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் | Tamil Bayan - 571


بسم الله الرحمن الرّحيم

பயங்கரவாதமும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

அல்லாஹ் சுபஹானஹு தஆலா இந்த உலகத்தில் நம்மை நன்மையைக் கொண்டும் சோதிக்கின்றான்; தீமையைக் கொண்டும் சோதிக்கின்றான்.

وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ

நிச்சயமாக நாம் உங்களை நன்மையை கொண்டும் சோதிப்போம் தீமையை கொண்டும் சோதிப்போம். (அல்குர்ஆன் 21 : 35)

இந்த உலகத்தில் ஒவ்வொன்றும் நமக்கு சோதனை. நாம் செல்வத்தில் இருந்தால் நம் செல்வமும் நமக்கு சோதனை. நாம் வறுமையில் இருந்தால் அந்த வறுமையும் நமக்கு சோதனை.

நாம் சுகத்தில் இருந்தால் அந்த சுகமும் நமக்கு சோதனை. நோயில் இருந்தால் அந்த நோயும் நமக்கு சோதனை. மகிழ்ச்சியும் சோதனை. கவலையும் சோதனை. இப்படி வாழ்க்கையில் ஒரு முஸ்லிம் சந்திக்கக்கூடிய அல்லது ஒரு முஸ்லிம் சமுதாயம் சந்திக்கக்கூடிய ஒவ்வொன்றும் அவர்களுக்கு ஒரு சோதனையாக அல்லாஹ் அமைத்து இருக்கின்றான்.

சோதனையில் வெற்றி பெற வேண்டுமென்றால் அங்கே நமக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுவது தான்.

وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

யார் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்பட்டு கீழ்படிந்து நடப்பார்களோ அவர்கள்தான் மகத்தான வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 33 :71)

இவ்வுலகிலும் அவர்கள் வெற்றி அடைவார்கள்;மறுமையிலும் அவர்கள் வெற்றி அடைவார்கள்.

அன்பு சகோதரர்களே! இந்த நேரத்தில்தான் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படாமல் நமது பாதையை திசைதிருப்புவதற்காக ஷைத்தான் எப்போதும் நமக்கு பின்னால் வேலை செய்து கொண்டே இருக்கின்றான். இந்த ஷைத்தான் அல்லாஹ்வின் இடத்தில் அவன் ஒரு அனுமதியைப் பெற்று ஒரு சவால் செய்துவிட்டு வந்து இருக்கின்றான்.

فَبِعِزَّتِكَ لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ

இறைவா!உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக நான் அவர்களை வழிகெடுப்பேன் என்று.(அல்குர்ஆன் 38 :82)

உண்மையான முஸ்லிம் யார் என்றால், மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்ற சொர்க்கத்தின் வீட்டை தேடத்கூடியவர் யார் என்றால்,நாளை மறுமையில் தராசு தட்டில் நன்மை-தீமை நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டு கனமாக இருக்க வேண்டும். சிராத் பாலத்தை கடக்க வேண்டும்;தன்னுடைய செயலின் ஏடுகள் வலது கரத்தில் கொடுக்கப்படவேண்டும்;அல்லாஹ் பொருந்திக் கொண்ட நிலையில் அல்லாஹ்வுடைய அருளில் நுழைகின்றவர்களில் தானும் ஆக வேண்டுமென்று ஆசைப்படக் கூடிய முஸ்லிமான ஆண் பெண் யார் என்றால்?

அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்பட்டு கீழ்படிவதில் மன இச்சைக்கு மன விருப்பத்திற்கு வழியை ஏற்படுத்தி விடக்கூடாது.

நன்றாக கவனியுங்கள்; ஒன்று மன இச்சைக்கு மன விருப்பத்திற்கு அடிமையாகி அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மாறு செய்வது; தன்னுடைய விருப்பத்தை அல்லாஹ்வினுடைய விருப்பத்தை விட,அல்லாஹ்வின் தூதரின் விருப்பத்தை விட முன்னிலைப்படுத்துவது; நஃப்ஸ் அலங்கரிக்கக்கூடிய வழியில் செல்வது; படைத்த ரப்பிற்கு மாறுசெய்வது; அவன் அனுப்பிய தூதருக்கு நேர் முரணாக நடப்பது. இதுவும் நரக பாதை என்பதை மறந்து விடாதீர்கள்.

ஆனால், இது மட்டும்தான் நரகப் பாதை அல்ல. ஷைத்தானும் நஃப்ஸும் வழிகெடுக்ககூடிய வழிகேடுகளில் மிகப்பெரிய ஒரு வழிகேடு இருக்கின்றது. மார்க்க அறிவுள்ளவர்கள் மற்றும் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள் தான் அந்த வழிகேட்டிலிருந்து தப்பிக்க முடியும். அதுதான் மார்க்கத்தின் பெயரால் வழி கெடுவது.

ஒன்று மார்க்கத்தை விட்டு வெளியே சென்று பாவங்களில் ஈடுபட்டு மன இச்சைகளில் மூழ்கி பாவம் செய்வது. இதிலிருந்து கூட ஒரு மனிதன் தவ்பா செய்து விடுவான். தவ்பா செய்வதற்கு உண்டான வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. காரணம்? தான் செய்வதை பாவம் என்று அவன் அறிந்து கொண்டு செய்கின்றான். நப்ஸிற்கு ஷைத்தானுக்கு அடிமையாகி செய்கிறான்.

ஆனால், ஒரு மனிதன் மார்க்கத்தின் பெயரால் அவன் வரம்பு மீறும்போது, தன்னுடைய சுய விருப்பத்திற்கு அடிமையாகும் போது (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) அவன் தன்னுடைய வழிகேட்டிலிருந்து வெளியேறுவது மிகக் கடினமான காரியம். அந்த நிலைக்கு நமது சமூகம் ஆளாகி விடக்கூடாது என்பதில் இந்த இடத்தில் அழுத்தமாக நான் எனக்கும் உங்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்தகைய ஒரு வழி கேடு தான் குர்ஆனை பேசுகின்ற சிலர், மார்க்கத்தை பேசுகின்ற சிலர், தவ்ஹீதை பேசுகின்ற சிலர், இஸ்லாமிய மார்க்கத்தை பிற மக்களுக்கு எடுத்து வைப்பதில் இருக்கின்ற சிலர், இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் அணுகுமுறையில் தங்களுடைய தவறான கொடூர முகம் கொண்ட பயங்கரவாத அடையாளம் கொண்ட பயங்கரவாத நிறம் கொண்ட சிந்தனையை கலந்து,இஸ்லாமை ஒருதீவிரவாத மார்க்கமாக,முஸ்லீம் சமூகத்தை பயங்கரவாதத்தை ஆதரிக்க கூடியவர்களாக அவர்கள் முன் வருகிறார்களே இது அல்லாஹ்வின் மார்க்கத்திலும் கண்டிக்கத்தக்கது. குர்ஆனிலே கண்டிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதரின் நபி வழியிலே கண்டிக்கப்பட்டஒன்று.

முஸ்லிம் சமுதாயம் இஸ்லாமிய பெருமக்கள் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இந்தக் விஷக் கிருமிகளை போன்று, விஷ ஜந்துக்களை போன்று தீய சித்தாந்தத்திற்கு அடிமையாகி விட்ட இவர்களால் பிற மக்கள் துன்பப் படுவதை விட இஸ்லாமிய சமுதாயம் முஸ்லீம் நாடுகள் அதிகம் துன்பப்படுகின்றன என்றால் அது மிகையாகாது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக உலகத்தில் முஸ்லிம்கள் புனிதமாக மதிக்கப்படக்கூடிய அல்லாஹுவால் புனிதமாக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் கூற்றுப்படி அங்கே போர் செய்வது எனக்கு மட்டும் பகலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்பட்டது;எனக்கு முன்பும் யாருக்கும் மக்காவில் போர் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை;எனக்குப் பின்பும் யாருக்கும் போர் செய்ய அனுமதிக்கப்படாது என்று எந்த புனித நகரத்தை தூதர் சொன்னார்களோ அந்த புனித நகரத்திலே கஃபாவை சுற்றி தவாஃப் செய்யக்கூடிய மக்களை குண்டு வைத்து தாக்குவதற்காக மக்காவின் மீதே இவர்கள் படை எடுத்தார்கள் என்றால்?!அந்த குண்டுகளோடு அந்த பயங்கரவாத தாக்குதல்களை நிறைவேற்றுவதற்காக வந்த நேரத்தில் அவர்கள் பிடிக்கப்பட்டார்கள் என்றால்!இவர்கள் யாரை விட்டு வைப்பார்கள்?

மஸ்ஜிதுன் நபவியில் இரண்டுமுறை இவர்கள் இந்த தாக்குதலை செய்வதற்காக முயற்சி செய்து அது முறியடிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுமட்டுமல்ல உலகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக மதிக்கக்கூடிய ஒரு இஸ்லாமிய நாடாகிய சவுதி அரேபியாவில் பல மஸ்ஜிதுகளில் ஜும்ஆ தினத்தில் இவர்கள் குண்டு வைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய முஸ்லிம் நாடுகளில் ஜும்ஆ தினங்களை இவர்கள் தேர்ந்தெடுத்து ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை இவர்கள் தாக்கி இருக்கிறார்கள் என்றால் இவர்களை எப்படி இஸ்லாம் அங்கீகரிக்கும்? முஸ்லிம் சமுதாயம் இவர்களை எப்படி அங்கீகரிக்கும்?

நாட்டில் இஸ்லாமின் மீது கால் புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் சமுதாயத்தின் மீது தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காக இது கண்டிப்பாக சூழ்ச்சிகளின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் நமது அண்டை நாட்டில் நடந்த கொடூர தாக்குதல் அதற்கும் இஸ்லாமிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. முஸ்லிம் சமுதாயம் அதை முற்றிலும் மறுக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்த சமூகம் இருக்கின்றது என்பதை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றேன்.

அல்லாஹ்வுடைய மார்க்கம் நமக்கு கருணையை கற்றுத் தருகின்றது; அன்பை கற்றுத்தருகிறது; பாசத்தை கற்றுத்தருகிறது; விட்டுக் கொடுப்பதை நமக்கு கற்றுத் தருகிறது; மன்னிப்பை நமக்கு கற்றுத் தருகிறது; நான் அநீதம் இழைக்கப்படும் போது கூட சகித்துக் கொள்ள வேண்டும்; விட்டுக்கொடுக்க வேண்டும்; என்பதை மார்க்கம் நமக்கு கற்றுத் தருகின்றது.

பழி வாங்குவதற்கு அல்லாஹுத்தஆலா நமக்கு அனுமதி கொடுத்திருந்தாலும் அதே ரப்புல் ஆலமீன் நமக்கு நீங்கள் மன்னித்தால் அது சிறந்தது என்று கூறுகிறான்.

பழி வாங்குவதற்கு அனுமதி கொடுத்த அதே வசனத்தில் ரப்பு கூறுகின்றான்;

وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ

யார் சகித்துக் கொள்வாரோ யார் மன்னிப்பாரோ அது மிக வீரமான செயல் என்று சொல்கின்றான். (அல்குர்ஆன் 42 : 43)

பழி வாங்குவதை வீரமான செயல் என்று ரப்பு சொல்லவில்லை; சகிப்பதை பொறுப்பதை ரப்பு வீரமான செயல் என்று சொல்கின்றான்.

யாராவது இப்படி இந்த மார்க்கத்தில் போர் சம்பந்தமாக இறக்கப்பட்ட வசனங்களை, போர் சமயத்தில் கூறப்பட்ட நபிமொழிகளை பொத்தாம் பொதுவாக பிற மக்களை கொள்வதற்காக இந்தக் குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன, நபிமொழிகள் கூறுகின்றன என்று கூறுவார்களேயாயின் அவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் இப்லீசால் தூண்டப்பட்டவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் .

அன்பு சகோதரர்களே! ரப்புல் ஆலமீன் கூறுவதைப் பாருங்கள்;

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَنْ صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَنْ تَعْتَدُوا

இஹ்ராமுடைய நிலையில் நீங்கள் வந்தும் கூட மக்காவிற்கு உங்களை உள்ளே நுழைய விடாமல் காபாவிற்கு உங்களை உம்ரா செய்யவிடாமல் உங்களைத் தடுத்து திருப்பிய அந்த மக்களின் மீதும் இருக்கக்கூடிய கோபம் உங்களை வரம்புமீறி தூண்டி விட வேண்டாம்;உங்களை அநியாயம் செய்ய தூண்டி விட வேண்டாம். (அல்குர்ஆன் 5 : 2)

ஒரு இனத்தவரின் வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளே சென்று அங்கே இறைவழிபாட்டில் இருப்பவர்களை கொள்வதை விட மிகப்பெரிய அநியாயம் ஒன்று இருக்க முடியுமா?அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறுகின்றான்;

وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا

மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, (நல்லவர்கள்) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டே போயிருக்கும். (அல்குர்ஆன் 22 : 40)

அன்பு சகோதரர்களே! நாம் கொண்ட கொள்கை உண்மையான கொள்கை. அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடு தான் இந்த உலகத்திலும் மறுமையிலும் நமக்கு வெற்றியைத் தரக்கூடியது. இணைவைத்தலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்ற கொள்கையை உறுதியாக நமக்கு வலியுறுத்தக்கூடிய அல்லாஹ் அதே குர்ஆனில் நமக்கு இதையும் வலியுறுத்துகிறான். பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்களை நீங்கள் இடிக்கக்கூடாது; அங்கே வழிபாடு செய்பவர்களுக்கு நீங்கள் தொந்தரவு தரக்கூடாது என்று.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரையை அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் யஸீத் இப்னு அபூ சுஃப்யானுக்கு அவரை படைக்கு அமீராக ஆக்கி அனுப்பியபோது அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் யஸீத் இப்னு அபூ சுஃப்யான் அவர்களே!

நான் உங்களை படைக்குத் தளபதியாக ஆக்குகின்றேன். நீங்கள் போருக்கு செல்லும் பொழுது எதிரிகளில் வயதானவர்கள் இருந்தால் அவர்களை கொல்லக்கூடாது! அவர்களில் பெண்களை கொல்லக்கூடாது! சிறுவர்களை கொல்லக்கூடாது! வழிபாட்டுத் தலங்களை இடிக்கக் கூடாது! வழிபாட்டுத்தலங்களில் இருக்கக்கூடிய துறவிகளை அவர்களின் பாதிரிகளை நீங்கள் கொல்லக்கூடாது! என்று அறிவுரை கூறி இந்த முஸ்லிம்களின் முதல் கலீஃபா அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் படையை அனுப்பினார்கள்.(1)

நூல் : சுனன் குப்ரா பைஹகி,எண் : 18152.

ஒரு எதிரி நாட்டுக்கு முஸ்லிம்கள் படையெடுத்து செல்லும்போது கூட அந்த நாட்டிலுள்ள பிற சமூகத்தார்கள் வணங்கக்கூடிய வழிபாட்டுத் தலங்களில் அவர்கள் உள்ளே நுழைய கூடாது என்று கட்டளையிட்டிருக்கும்போது ஒரே சமுதாயமாக ஒரே நாட்டு மக்களாக வாழக்கூடியவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்வது அவர்களைக் கொல்வது இஸ்லாமிய மார்க்கம் இதை எப்படி அங்கீகரிக்கும்?! அவர்கள் செய்த இந்த செயலை அவர்கள் சொர்க்கத்தின் செயலாக எப்படி கூறமுடியும்?!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் எவ்வளவு அழுத்தமாக திருத்தமாக சொன்னார்கள்;

«مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يَرِحْ رَائِحَةَ الجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا»

சுமூகமாக ஒப்பந்தம் செய்து வாழக்கூடிய ஒரு நாட்டில் ஒருவர் பிற மதத்தவரை கொள்வாரேயானால் அவன் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது. சுவர்க்கத்தின் வாடை 40ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அந்த வாடை கிடைக்கும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3166.

சுவர்க்கத்தின் வாடை கிடைக்காது என்றால் எப்படி சொர்க்கம் செல்வார்கள்? தங்களுடைய குறுகிய புத்தியால் தங்களுடைய கால்ப்புணர்ச்சிகளால் தங்களுடைய தீய வழிகாட்டுதலால் இப்படிப்பட்ட தீய சிந்தனைகளுக்கு ஆளாகி அதற்கு மார்க்கத்தின் சாயத்தை இவர்கள் பூச எண்ணுகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

அன்பு சகோதரர்களே! குழந்தைகள், வயோதிகர்கள், சிறுவர்கள் எந்தவிதமான சண்டை சச்சரவிற்க்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் இப்படி இவர்கள் சுமூகமாக இணக்கத்தோடு வாழக்கூடிய ஒரு நாட்டில் கொல்வதற்கு இவர்களுக்கு யார் அனுமதி அழித்தார்கள்?

எங்கோ சில இடங்களில் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்குப் பழி வாங்குவதற்கு நமக்கு மார்க்கம் எப்படி அனுமதித்திருக்கிறது? யார் பழி வாங்க முடியும்? யார் அதை தட்டிக் கேட்பது? என்று மார்க்கம் நமக்கு ஒரு வரையறையை கொடுத்திருக்கின்றது.

எங்கோ ஒரு இடத்தில் முஸ்லிம் தாக்கப்பட்டதால் நம்முடைய நாட்டில் நம்முடைய ஊரில் நம்முடைய தெருவில் இருக்கக்கூடிய இன்னொருவரை கொள்வதற்கோ அவரைக் காயப்படுத்துவதற்கோ மார்க்கம் எங்காவது நமக்கு அனுமதி அளித்திருக்கின்றதா?

குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை எடுத்துக் காட்டுங்கள். ஹதிஸிலிருந்து ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டுங்கள். உங்களுடைய கால் புணர்ச்சிக்கு மார்க்கத்தை எப்படி நீங்கள் ஆதாரமாக கூற முடியும்? உங்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? நீங்கள் என்ன இஸ்லாமிய ஆட்சியாளரா? இஸ்லாமிய மன்னரா? அல்லது முஸ்லிம்கள் உங்களை தங்களுடைய பிரதிநிதிகளாக ஆக்கி இருக்கின்றார்களா?முஸ்லிம்களுக்கு நீங்களென்ன ஆளுநர்களா? ஆட்சியாளர்களா? என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

அல்லாஹ்வுடைய மார்க்கம் என்ன சொல்கின்றது? அல்லாஹ்வுடைய மார்க்கம் ஒரு வரையறையை கொடுத்திருக்கின்றது. இதுபோன்ற போர் சமாதானம் சம்பந்தப்பட்ட முடிவை எடுப்பதாக இருந்தால் அது ஒரு ஆட்சியாளர் உடைய பொறுப்பின் கீழ் வரக்கூடியது. தனி மனிதர்கள் இதில் உரிமை எடுத்துக்கொள்ள முடியாது.

குர்ஆனில் சட்டம் இருக்கின்றது. திருடியவர்கள் கை வெட்டவேண்டும் என்று. (அல்குர்ஆன் 5 : 38)

அதற்காக நம்முடைய ஊரில் ஒருவர் திருடி விட்டார் என்றால் அவரது கையை வெட்ட முடியுமா?

திருமணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்று குர்ஆனில் சட்டம் இருக்கின்றது. (அல்குர்ஆன் 24 : 2)

அதற்காக நம்முடைய சமூகத்தில் ஒருவர் விபச்சாரம் செய்து விட்டால் அவரை கல்லெறிந்து கொல்ல முடியுமா?

எந்த சட்டம் அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் செயல்படுமோ அந்த சட்டத்தை தனிமனிதர்கள் எடுப்பதற்கு எவ்விதமான உரிமையும் இல்லை. மார்க்கத்தை அதனுடைய ஆதாரத்தோடும் ரசூலுல்லாஹ் உடைய வழிகாட்டுதலோடும் சஹாபாக்கள் உடைய வழிகாட்டுதலோடும் தான் நாம் அணுகவேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய நபிக்கு எப்படி வழிகாட்டி இருக்கின்றான்? ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு போர் தான் முக்கியம் உயிர்களை கொல்லவேண்டும்; காஃபிர்களை கொல்லவேண்டும் என்று இருந்திருந்தால் அல்லாஹு தஆலா ஏன் தாவாவை கடமையாக்குகின்றான்? நபியை அனுப்பும்போது மலக்களோடு படை பலத்தோடு அனுப்பி இணை வைப்பவர்களை எல்லாம் கொல்லுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிட்டு இருக்கலாமே?

அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்பது சிறந்த வணக்கம். சிறந்த நன்மைக்குறிய காரியம் தான். ஆனால் அதற்குரிய நேரம் இருக்கின்றது. அதற்குரிய நிர்பந்தம் இருக்கின்றது. அதற்குரிய நிபந்தனைகள் இருக்கின்றது. அப்படி இல்லை என்றால் அது கலகம் செய்வதாக ஆகிவிடும். மார்க்கத்தை மீறுவதாக ஆகிவிடும். உயிர்களை அநியாயமாக கொள்வதாக ஆகிவிடும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் எவ்வளவு துன்பப்பட்டார்கள்?! எவ்வளவு வேதனைகளுக்கு சோதனைகளுக்கு ஆளானார்கள்? அல்லாஹ்வின் தூதர் நாடியிருந்தால் உமரையும், ஹம்ஜாவையும் இன்னும் பல வீரர்களை கையில் வைத்துக்கொண்டு மக்காவில் ஆயுதத்தை அவர்கள் எடுத்திருக்கலாம்

ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயுதத்தை நாடக்கூடியவர்களாக இல்லை. அழைப்பு பணியையும் அமைதியையும் சுமூகத்தையும் நாடக் கூடியவர்களாக இருந்தார்கள்.

மக்காவில் முஸ்லிம்கள் பெருகி வரும் போது அங்கே அவர்கள் தொழ முடியவில்லை; அங்கே அவர்கள் முஸ்லிம்களாக வாழ முடியவில்லை என்று இருந்த வரலாற்றைக் கொஞ்சம் நீங்கள் படித்துப் பாருங்கள்; சீராவைக் கொஞ்சம் திருப்பி பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹபஷாவிற்கு (எத்தியோபியா) விற்கு அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஆட்சி செய்து கொண்டிருந்த அஸ்மஹா அந்த மன்னருடைய நாட்டிற்கு தங்களின் தோழர்களை அனுப்புகிறார்கள்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு தெரியாதா? அங்கே கிறிஸ்தவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ்விற்கு குழந்தை இருக்கின்றது என்று சொல்பவர்கள் ஆட்சி செய்கின்றார்கள். அல்லாஹ்விற்கு இணை வைப்பவர்கள் ஆட்சியை செய்கின்றார்கள் என்று.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அங்கே தனது தோழர்கள் உஸ்மான் இப்னு அஃப்பான் தன்னுடைய மருமகனை அனுப்பினார்கள் .

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அவரை அனுப்பி வைத்து என்ன கட்டளையை கூறுகின்றார்கள்? அங்கே சென்று அந்த மக்களை தாக்குங்கள்; அவர்களின் ஆட்சியை நீங்கள் பறியுங்கள்; அங்கே கலகம் செய்யுங்கள்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்கள்; அல்லாஹ்விற்கு குழந்தை இருக்கு என்று சொல்கின்றார்கள்; எனவே நீங்கள் அவர்களை மறைந்திருந்து கொள்ளுங்கள் என்றா கூறினார்கள்?

கேவலம் எப்படிப்பட்ட ஒரு சிந்தனையை இவர்கள் மக்களுக்கு மத்தியில் புகுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களுக்கு சொல்லி அனுப்புகின்றார்கள்; அல்லாஹ் ஒருவனை வணங்கி வாருங்கள்; இணங்கி வாழுங்கள்; உங்களுடைய அழைப்பு பணியை செய்யுங்கள்; யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாதீர்கள்! என்று.

ஜஃபர் இப்னு அபீதாலிப் உடைய தலைமையில் சென்ற சஹாபாக்களின் கூட்டம் மக்களோடு இணங்கி வாழ்கின்றார்கள்; அமைதியாக வாழ்கின்றார்கள்; அழைப்புப்பணி செய்கின்றார்கள்; அந்த மன்னர் அந்த மக்களுக்கு பாதுகாப்பை தருகின்றார்.

குறைஷிகள் எவ்வளவோ முயற்சி செய்து ஒன்று அந்த மக்களை மக்காவிற்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் இல்லை அந்த மண்ணிலேயே அவர்களுடைய புதைகுழி அமைய வேண்டுமென்ற திட்டத்தோடு குறைஷிகள் முயற்சி செய்து வந்தும் கூட அந்த மன்னர் ஜாபர் இப்னு அபீதாலிபை அழைத்து உண்மையை அறிந்து அவருக்கு அங்கே பாதுகாப்பை தருகின்றார் அங்கே அடைக்கலம் தருகின்றார். சுமூகமாக வாழ்வதற்கு அனுமதி தருகின்றார்.

நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்

அன்பு சகோதரர்களே! எந்த மக்கள் சுமூகமாக வாழ விரும்புகிறார்களோ அவர்களோடு அவர்களைவிட அதிகமாக சுமூகத்தை விரும்பக்கூடியவர்களாக முஸ்லிம் சமுதாயம் இருக்க வேண்டும். நல்லிணக்கத்தை ஒருவர் விரும்பினால் அதைவிட நல்லிணக்கத்தை விரும்பக்கூடியவராக முஸ்லிம் சமுதாயம் இருக்கவேண்டும்.

ஒருவர் பரஸ்பரம் அன்பையும் விட்டுக் கொடுத்தலையும் சுமூகமான வாழ்க்கையும் பாதுகாப்பையும் விரும்பினால் அதைவிட அவற்றை விரும்பக் கூடியவர்களாக முஸ்லிம் சமுதாயம் இருக்கவேண்டும் என்பதைத்தான் ஜாபர் இப்னு அபீதாலிப் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய பயணம் நமக்கு அந்த படிப்பினைகளை பாடங்களைக் கொடுக்கின்றன.

சகோதரர்களே!இந்த மக்கள் இன்று என்ன எண்ணிக் கொண்டார்கள்?பூமியில் உள்ளவர்களை எல்லாம் தங்கள் வாளால் படிய வைத்து இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றார்களா ?

ரப்பு கேட்கின்றான்;

وَلَوْ شَاءَ رَبُّكَ لَآمَنَ مَنْ فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا أَفَأَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُوا مُؤْمِنِينَ

நபியே!அல்லாஹ் நாடினால் பூமியில் உள்ள எல்லோரும் அவர்கள் நிர்பந்தமாக முஃமின்களாக ஆகி இருப்பார்கள்.மக்களை நீங்கள் நிர்பந்திக்க போகிறீர்களா? அவர்கள் மூஃமினாக ஆகவேண்டும் என்று.(அல்குர்ஆன் 10 : 99)

அழைப்பு பணியை செய்ய வேண்டும் என்பது நம்முடைய கடமை. அந்த அழைப்பு பணியை எப்படி செய்யமுடியும்? நம்மிடத்தில் இறக்கம் இல்லை என்றால் விட்டுக்கொடுத்தல் இல்லை என்றால் பெருந்தன்மை இல்லை என்றால் புரிந்துணர்வு இல்லை என்றால் இணங்கி வாழக்கூடிய இணக்கம் இல்லை என்றால் எப்படி அழைப்பு பணியை செய்ய முடியும்?

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாடியிருந்தால் ஹுதைபியா ஒப்பந்தத்தையே ஒரு பெரிய போர்க்களமாக மாற்றி இருக்கலாம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புதிய ஒப்பந்தம் செய்தார்களே அந்த ஒப்பந்தத்தின் பின்னணி என்ன? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஹுதைபியா ஒப்பந்தத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் இந்த சமாதானத்திற்காக இந்த இனத்திற்காக எவ்வளவு இறங்கி வந்தார்கள்.

தண்னுடைய பெயரோடு ரசூலுல்லாஹ் எழுதப்பட்டிருக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் புறத்திலிருந்து குறைஷிகளோடு செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம் என்று.குறைஷிக் காபிர்கள் சொல்கின்றார்கள்;நீங்கள் அல்லாஹ்வுடைய ரசூல் என்று நாங்கள் அறிந்து கொண்டால் உங்களை ஏன் காபாவிலிருந்து தடுக்கிறோம் என்று. எனவே இதை நீங்கள் அளிக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

இந்த சமயத்தில் ஏன் அல்லாஹ்வின் தூதர் பொங்கி எழ முடியாதா? வானத்திலிருந்து அல்லாஹ் ஜிப்ரீலை இறக்கி சில நொடிகளில் அல்லாஹ் வெற்றியை கொடுத்திருக்க மாட்டானா?

إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ

நபியே!மரத்துக்குக் கீழே உங்களிடம் பையத்து செய்து கொடுத்தவர்கள் அல்லாஹ்விடத்தில் பையத்து செய்து கொடுத்தவர்கள்.அவர்களின் கரங்களுக்கு மேலாக அல்லாஹ்வுடைய கரங்கள் இருக்கின்றது.(அல்குர்ஆன் 48 : 10, 48 : 18)

ஒவ்வொரு சஹாபியும் தான் மரணிக்கின்ற வரை அல்லாஹ்வின் தூதரே! உங்களோடு இருந்து உங்களுக்கு ஆதரவாக போர் செய்வேன்; புறமுதுகு காட்ட மாட்டேன்; என்று சத்திய வாக்குப் பிரமாணம் செய்து கொடுக்கின்றார்கள். அத்தகைய தோழர்களை வைத்துக்கொண்டுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போரை தவிர்த்தார்கள்; சண்டையை தவிர்த்தார்கள்; ரத்தம் ஓட்டுவதை தவிர்த்தார்கள்; ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். அந்த ஒப்பந்த பத்திரத்தில் ரசூலுல்லாஹ் என்று எழுதப்படாமல் இருந்தாலும் சரி.

இன்னும் எவ்வளவு அநியாயமான ஒப்பந்தமாக இருந்தது! முஸ்லிம்களில் யாராவது மக்காவிற்கு திரும்பி சென்றால் அவர்களை இவர்கள் திரும்பி அனுப்ப மாட்டார்கள். ஆனால் அவர்களிலிருந்து யாராவது இஸ்லாமை ஏற்று வந்துவிட்டால் அவர்களை மீண்டும் மக்காவிற்கு அனுப்பவேண்டும். எவ்வளவு கடுமையான அநியாயமான ஒப்பந்தம்!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டு சமாதானம் நிலவ வேண்டும் சில விஷமிகள் இஸ்லாமை ஏற்க வில்லை என்றாலும் இஸ்லாமை ஏற்பதற்கு ஆயிரக்கணக்கான உள்ளங்களை அல்லாஹ் வைத்திருக்கின்றான் அந்த உள்ளங்கள் திறக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சமாதானத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பினார்கள்.

நூல் : முஸ்லிம் எண் 1784, முஸ்னது அகமது எண் : 13827, அர் ரஹீக் அல் மக்தூம்.

குறைஷிகளை கொள்வதற்கு குறைஷிகளிடத்தில் பழி வாங்குவதற்கு மக்கா வெற்றி மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இருந்தது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் விரும்பியிருந்தால் அல்லாஹ் அவர்களுக்கு அனுமதி அளித்திருந்தால்,

لَا أُقْسِمُ بِهَذَا الْبَلَدِ (1) وَأَنْتَ حِلٌّ بِهَذَا الْبَلَدِ

நபியே இன்று இந்த ஊரிலே நீங்கள்முழுமையாக அனுமதிக்கப்பட்டு விட்டீர்கள்.நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.உங்கள் எதிரிகளை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்று அல்லாஹ் அனுமதி அளித்தால், (அல்குர்ஆன் 90 : 1, 2)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காபாவின் வாசலில் நின்றுகொண்டு சொன்னார்கள்;

لَا تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ " اذْهَبُوا فَأَنْتُمُ الطُّلَقَاءُ "

இன்றைய தினம் நான் உங்களை பழிக்க மாட்டேன். நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். நீங்கள் விடுதலை செய்யப்பட்டவர்கள். நீங்களெல்லாம் செல்லுங்கள் என்பதாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னையும் தன்னுடைய தோழர்களையும் கொல்ல வேண்டும் என்று விரும்பிய எதிரிகளை மன்னித்து அவர்களுடைய உள்ளம் இஸ்லாமின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக வழிகளைத் திறந்து கொடுத்தார்களே!

நூல் : சுனன் குப்ரா நஸாயி,எண் : 11234,அர்ரஹீக்அல்மக்தூம்

ஆனால் இன்று திறந்திருக்கக்கூடிய வழிகளை அடைப்பதற்காக இப்படிப்பட்ட பயங்கரவாதத்தை முன்னிறுத்தி செய்கின்றார்களே இவர்களுக்கும் இஸ்லாமிற்க்கும் சம்பந்தம் இருக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;

" أَلَا مَنْ ظَلَمَ مُعَاهَدًا وَانْتَقَصَهُ وَكَلَّفَهُ فَوْقَ طَاقَتِهِ أَوْ أَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ طِيبِ نَفْسٍ مِنْهُ فَأَنَا حَجِيجُهُ يَوْمَ الْقِيَامَةِ "

யார் ஒரு மனிதர் இணங்கி வாழக்கூடிய மக்களுக்கு அணியாயம் செய்வாரோ? அவருடைய ஹக்கை குறைத்து விடுவாரோ? அவருடைய உரிமைக்கு மேல் அவருடைய சக்திக்கு மேல் அவருக்கு வேலை கொடுப்பாரோ,அவருடைய உரிமையை அவருடைய விருப்பமில்லாமல் பறித்துக்கொள்வாரோ அந்த பாதிக்கப்பட்ட மாற்றுமத சகோதரனுக்காக நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் இந்த முஸ்லிமிடம் வாதிடுவேன் என்று சொன்னார்கள். (3)

நூல் : சுனன் குப்ரா பைஹகி, எண் : 18731, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

எந்தவிதமான குற்றமும் செய்யாத எந்தவிதமான பாவத்தையும் அறியாத பிற உயிர்களின் இரத்தத்தை ஒட்டாத பாவப்பட்ட அந்த மக்களை அவர்களுடைய வழிபாட்டுத்தலங்களில் அவர்கள் நிம்மதியாக இருக்கக்கூடிய இடங்களில் கொல்வதை இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்? இஸ்லாமின் பெயரால் இவர்கள் செய்வதற்கு என்ன அனுமதி இவர்கள் வைத்திருக்கின்றார்கள்? இந்த விஷயத்தை இவர்களுக்கு யார் கூறினார்கள்? யார் போதித்தார்கள்?

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா கருணையை பாசத்தை அன்பை விரும்புகின்றான். ஏன் அல்லாஹ் நாடியிருந்தால் பாவம் செய்யக்கூடியவர்களை அவனே இந்த உலகத்தில் தண்டித்து இருக்கலாமே?

மறுமை என்ற தீர்ப்பு நாள் ஒன்று இருக்கின்றது. அந்தத் தீர்ப்பு நாளில் அவன் அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான். இந்த உலகத்தில் யாரும் யாருக்கும் தீர்ப்பு வழங்குவதற்கோ தண்டனை கொடுப்பதற்கோ அவர்கள் நம்முடைய கொள்கையை சேராதவர்கள் என்ற காரணத்தினால் நமக்கு அனுமதி இல்லை.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறுவதைப் பாருங்கள்;

وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى فَإِذَا جَاءَ أَجَلُهُمْ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ بَصِيرًا

மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக்குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் ஓர் உயிரையும் விட்டு வைக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரை விட்டுவைக்கிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 35 : 45)

சமூகத் தீமைகளுக்கு என்று மார்க்கம் அனுமதித்து இருக்கக்கூடிய தண்டனையை அதற்குரிய அதிகாரம் உள்ளவர்கள் நிறைவேற்றுவார்கள். தனிமனிதர்கள் நிறைவேற்றுவதற்குரிய அனுமதி கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு போதித்த இந்த மார்க்கத்தில் உயிர்கள் என்பது புனிதமானது. யாருடைய உயிர்களாக இருந்தாலும் சரி.

ஒரு சமயம் போரில் மாலை நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அதை பார்வையிட்டபோது எதிரிகளின் படையில் இருந்த ஒரு பெண் கொல்லப்பட்டு இருப்பதை பார்த்தார்கள். அல்லாஹ்வுடைய தூதரால் பொறுக்க முடியவில்லை.யார் இந்தப் பெண்ணை கொன்றார்கள்? சொன்னார்கள்;

«فَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ»

பெண்களை கொல்லாதீர்கள்; சிறுவர்களைக் கொல்லாதீர்கள்; குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; துறவிகளை கொள்ளாதீர்கள்; என்று தங்களது தோழர்களுக்கு வலியுறுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3015.

ஏன் உஹதுடைய சம்பவத்தை நினைத்துப் பாருங்கள்; அபூ துஜானா விற்கு முன்பாக வந்து அந்த ஹிந்து அது அபூ துஜானா விடத்திலே சண்டை செய்த பொழுது அபூ துஜானா அவர்கள் பெண் என்று தெரிந்த பிறகு புறக்கணித்துவிட்டு செல்கின்றார்கள். தன்னை தற்காத்துக் கொண்டு செல்கிறார்களே தவிர மைதானத்தில் எதிர் எதிராக நின்று சந்தித்தும் கூட பெண்களை நபித்தோழர்கள் கொல்லவில்லை என்றால் இவர்கள் எந்த மார்க்கத்தில் பிறந்தவர்கள்?

நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;

«لَنْ يَزَالَ المُؤْمِنُ فِي فُسْحَةٍ مِنْ دِينِهِ، مَا لَمْ يُصِبْ دَمًا حَرَامًا»

ஒரு முஃமின் அவனுடைய மார்க்கத்தில் விசாலமாக இருப்பான். அவன் மன்னித்துக் கொண்டே இருப்பான் மன்னித்துக் கொண்டே இருப்பான். ஆனால் அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை கொள்ளாதவரை.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 6862.

ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் ;

« أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ فِي الدِّمَاءِ»

அல்லாஹ் நாளை மறுமையில் முதலாவதாக தீர்ப்பளிக்கப்படக்கூடியது உயிர்கள் விஷயத்தில்தான். யார் ஒரு உயிரை அநியாயமாக கொன்றாரோ அவர் அல்லாஹ்விடத்தில் தப்பிக்க முடியாது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6864.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நமக்கு சொல்கின்றான்;

وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ

மூமின்களின் அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை அதனுடைய ஹக்கில்லாமல் நீங்கள் கொன்று விடாதீர்கள். (அல்குர்ஆன் 17: 33)

மேலும் அல்லாஹ் சொல்கின்றான்;

مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

யார் ஒரு உயிரை பழிக்குப் பழி இல்லாமல் அநியாயமாக கொலை செய்வாரோ அவர் உலக மக்களை எல்லாம் கொலை செய்தவர்.யார் ஒரு உயிரை பாதுகாப்பாரோ அவர் உலக மக்களை எல்லாம் பாதுகாத்தவர். (அல்குர்ஆன் 5 : 32)

ஆகவே கண்ணியத்துக்குரியவர்களே! அல்லாஹ்வுடைய மார்க்கம் இணங்கி வாழ்வதை,இணக்கமாக வாழ்வதை,சுமுகமாக வாழ்வதை கற்றுத் தருகிறது. இந்த சமூகத்தின் மூலமாகவும் இணங்கி வாழ்வதன் மூலமாகவும் தான் எத்தனையோ நாடுகளை படைவீரர்கள் செல்லாமலேயே இஸ்லாம் வென்று இருக்கிறது என்பதை அறிவீர்கள்.

நம்முடைய சமுதாயத்தின் வாலிபர்களுக்கு இந்த இணக்கத்தையும் அன்பையும் பரஸ்பரத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் யாரோடு தொடர்பு வைத்திருக்கின்றார்கள்? எதை பார்க்கின்றார்கள்? அவர்களுடைய தொடர்புகள் எப்படி இருக்கின்றது? என்பதை சமுதாயத்தின் பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும்.

இன்னொரு விஷயத்தையும் இங்கே நான் அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகின்றேன். அன்பிற்குரிய சமுதாய வாலிபர்களே! உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால், உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், உங்களுடைய சிந்தனைகளை யாராவது தவறான வழியில் சலவை செய்தால் உங்களுடைய மூத்த மார்க்க அறிஞர்களை அணுகுங்கள்.

அவர்களுக்கு மார்க்கம் தெரியாது என்று அவர்களை நீங்கள் புறக்கணித்து விடாதீர்கள். உங்களுடைய அறிஞர்களை அணுகாமல் இன்று நீங்கள் இருக்கக்கூடிய தொடர்பு சாதனங்களில் கேள்வி படக்கூடியதையும் பார்க்கக்கூடியதையும் கொண்டு உங்களுடைய மார்க்கத்தை உங்களுடைய மார்க்கப்பற்றை நீங்கள் முடிவு செய்வீர்களானால் உங்களையும் நீங்கள் நரகத்தில் தள்ளி கொள்வது மட்டுமல்லாமல் இந்த சமூகத்தை இந்த முஸ்லிம் சமுதாயத்தை இணங்கி இணக்கமாக வாழ்ந்து இஸ்லாம் பரவுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய இந்த முஸ்லிம் சமுதாயத்தையும் மிகப்பெரிய இக்கட்டான நிர்பந்தமான அபாயகரமான ஒரு சூழ்நிலையிலே நீங்கள் விட்டுச் சென்று விடுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

அல்லாஹ் சுபஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் நம்முடைய சமுதாயத்தில் இருக்கக்கூடிய வாலிப பெண்களுக்கும் வாலிப ஆண்களுக்கும் நேர்வழி காட்டுவானாக! இணங்கி இணக்கமாக வாழ்வதற்கும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை புரிந்து செயல்படுவதற்க்கும், பிற சமய மக்கள் தங்களுடைய உடலாலும் பொருளாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்களுடைய உள்ளங்களை வென்று, அவர்களை அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் கூட்டம் கூட்டமாக அழைக்கக்கூடிய, சிறப்பான அழைப்பு பணியை செய்து அல்லாஹ்வுடைய மார்க்கம் ஓங்குவதற்கும் உயர்வதற்கும் துணையாக இருக்கவேண்டுமென்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்தவனாக நிறைவு செய்கின்றேன்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، أنبأ أَبُو الْفَضْلِ بْنُ خَمِيرَوَيْهِ، أنبأ أَحْمَدُ بْنُ نَجْدَةَ، ثنا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، ثنا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ بَعَثَ يَزِيدَ بْنَ أَبِي سُفْيَانَ إِلَى الشَّامِ، فَمَشَى مَعَهُ يُشَيِّعُهُ، قَالَ يَزِيدُ بْنُ أَبِي سُفْيَانَ: إِنِّي أَكْرَهُ أَنْ تَكُونَ مَاشِيًا وَأَنَا رَاكِبٌ. قَالَ: فَقَالَ: " إِنَّكَ خَرَجْتَ غَازِيًا فِي سَبِيلِ اللهِ، وَإِنِّي أَحْتَسِبُ فِي مَشْيِي هَذَا مَعَكَ. ثُمَّ أَوْصَاهُ، فَقَالَ: " لَا تَقْتُلُوا صَبِيًّا، وَلَا امْرَأَةً، وَلَا شَيْخًا كَبِيرًا، وَلَا مَرِيضًا، وَلَا رَاهِبًا، وَلَا تَقْطَعُوا مُثْمِرًا، وَلَا تُخْرِبُوا عَامِرًا، وَلَا تَذْبَحُوا بَعِيرًا وَلَا بَقَرَةً إِلَّا لِمَأْكَلٍ، وَلَا تُغْرِقُوا نَخْلًا، وَلَا تُحْرِقُوهُ")السنن الكبرى للبيهقي- 18152 )

குறிப்பு 2)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ قُرَيْشًا صَالَحُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِمْ سُهَيْلُ بْنُ عَمْرٍو، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «اكْتُبْ، بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ»، قَالَ سُهَيْلٌ: أَمَّا بِاسْمِ اللهِ، فَمَا نَدْرِي مَا بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، وَلَكِنِ اكْتُبْ مَا نَعْرِفُ بِاسْمِكَ اللهُمَّ، فَقَالَ: «اكْتُبْ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللهِ»، قَالُوا: لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللهِ لَاتَّبَعْنَاكَ، وَلَكِنِ اكْتُبِ اسْمَكَ وَاسْمَ أَبِيكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اكْتُبْ مِنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ»، فَاشْتَرَطُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ مَنْ جَاءَ مِنْكُمْ لَمْ نَرُدَّهُ عَلَيْكُمْ، وَمَنْ جَاءَكُمْ مِنَّا رَدَدْتُمُوهُ عَلَيْنَا، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، أَنَكْتُبُ هَذَا؟ قَالَ: «نَعَمْ، إِنَّهُ مَنْ ذَهَبَ مِنَّا إِلَيْهِمْ فَأَبْعَدَهُ اللهُ، وَمَنْ جَاءَنَا مِنْهُمْ سَيَجْعَلُ اللهُ لَهُ فَرَجًا وَمَخْرَجًا»(صحيح مسلم (1784

குறிப்பு 3)

أَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْقَاضِي وَأَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ الْمُزَكِّي قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , أنبأ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، أنبأ ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو صَخْرٍ الْمَدَنِيُّ، أَنَّ صَفْوَانَ بْنَ سُلَيْمٍ أَخْبَرَهُ , عَنْ ثَلَاثِينَ مِنْ أَبْنَاءِ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , عَنْ آبَائِهِمْ دِنْيَةً , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَلَا مَنْ ظَلَمَ مُعَاهَدًا وَانْتَقَصَهُ وَكَلَّفَهُ فَوْقَ طَاقَتِهِ أَوْ أَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ طِيبِ نَفْسٍ مِنْهُ فَأَنَا حَجِيجُهُ يَوْمَ الْقِيَامَةِ ". وَأَشَارَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأُصْبُعِهِ إِلَى صَدْرِهِ: " أَلَا وَمَنْ قَتَلَ مُعَاهَدًا لَهُ ذِمَّةُ اللهِ وَذِمَّةُ رَسُولِهِ حَرَّمَ اللهُ عَلَيْهِ رِيحَ الْجَنَّةِ , وَإِنَّ رِيحَهَا لَتُوجَدُ مِنْ مَسِيرَةِ سَبْعِينَ خَرِيفًا (السنن الكبرى للبيهقي 18731 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/