HOME      Khutba      நல்லாட்சி வேண்டுமா? | Tamil Bayan - 565   
 

நல்லாட்சி வேண்டுமா? | Tamil Bayan - 565

           

நல்லாட்சி வேண்டுமா? | Tamil Bayan - 565


بسم الله الرحمن الرّحيم

நல்லாட்சி வேண்டுமா?

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பிறகு அல்லாஹ்வின் தூதர் மீதும், அவர்களின் பாசத்திற்குரிய குடும்பத்தார்,கண்ணியத்திற்குரிய தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! என்று கூறிய பிறகு

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும்,தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறிய பிறகு, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை உபதேசித்தவனாக, அல்லாஹ்வை பயந்து வாழுமாறும் அவனுடைய மார்க்கச் சட்டத்தைப் பேணியும், அல்லாஹ் ஹலாலாக்கியதைக்கொண்டு நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யுமாறும், அவன் ஹராம் ஆக்கிய ஒவ்வொரு சிறிய பெரிய அனைத்து காரியங்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளுமாறும் உபதேசித்தவனாக

அல்லாஹ்விடத்தில் உங்களுக்கும் எனக்கும் இம்மை மறுமையின் வெற்றியையும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அன்பையும் வேண்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன் .

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னித்து அவனுடைய அருளுக்கு உரியவர்களாக நம்மை ஆக்கி வைப்பானாக!

நம்முடைய பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது கொண்டு, நம்முடைய இந்த உலக வாழ்வில் நாம் சந்திக்கக் கூடிய அனைத்து குழப்பங்களுக்கும் சீர்கேடுகளுக்கும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது, அல்லாஹ்வின் மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவதுதான் தீர்வு என்று புரிந்துகொண்டு அந்த அடிப்படையில் அல்லாஹ்வுடைய வெற்றியையும் அல்லாஹ்விடத்தில் அழகிய முடிவை பெற்ற நன்மக்களில் என்னையும் உங்களையும் எல்லா முஸ்லிம்களையும் ஆக்கி அருளவேண்டும் என்று துஆ செய்து ஆரம்பிக்கிறேன்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய நல்ல துஆக்களை ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்.

கண்ணியத்திற்குரியவர்களே!இன்று நாம் வாழக்கூடிய நாட்டில் மட்டுமல்ல உலகமெல்லாம் முஸ்லிம்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை,சீர்கேடுகளை,குழப்பங்களை பார்த்து வருகிறீர்கள்.

அவற்றை நாம் செவியுற்றும் வருகிறோம். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா மிக நீதமானவன். அல்லாஹு தஆலா மிகவும் நேர்மையானவன். ரப்புல் ஆலமீன் அவனுடைய கண்ணியமான குர்ஆனிலே கேட்கிறான்;

مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ وَآمَنْتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 147)

இந்த வசனத்தை மிகப்பெரிய வரலாற்று நிகழ்விற்கு பிறகு அல்லாஹ் இறக்கி வைக்கிறான். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மக்காவில் இருந்தபோது ஏற்பட்ட சோதனை என்பது வேறு.

மதீனாவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்த பிறகு அங்கு அவர்களுக்கு ஏற்பட்ட சோதனை,யுத்தங்களில் அவர்களுக்கு சில நேரங்களில் தோல்விகளும்,கடுமையான சேதங்களும் ஏற்பட்டபோது, எதிரிகள் சாட்டப்பட்டு அந்த எதிரிகளால் அவர்களுக்கு ஆபத்துகளும்,உயிர் சேதங்களும் ஏற்பட்டபோது அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இதுபோன்ற வசனங்களை இறக்கி, முஃமின்களே! நீங்கள் எப்பொழுது உங்களுடைய அமல்களில் குறை செய்கிறீர்களோ, உங்களுடைய நேர்மையான வாழ்க்கையிலிருந்து பிசகுவீர்களோ இதுபோன்ற சோதனை உங்களுக்கு எதிரிகளின் மூலமாக ஏற்பட்டே தீரும் என்பதை உணர்த்தும் விதமாக அல்லாஹ் கேட்கிறான்; உங்களை ஏன் அல்லாஹ் வேதனை செய்யப்போகிறான்? நீங்கள் நன்றி உள்ளவர்களாகவும் ஈமான் கொண்டவர்களாகவும் இருக்கும்பொழுது?

இந்த வசனம் முஃமின்களை பார்த்தும் முஸ்லிம்களை பார்த்தும் கேட்கப்படுகிறது.

வசனத்தின் கருத்து : நீங்கள் உண்மையில் அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவர்களாக அல்லாஹ் கொடுத்த நிஃமத்திற்கு நன்றி உள்ளவர்களாக,அந்த நிஃமத்தை தவறான வழியில் பயன்படுத்தாமல் அந்த நிஃமத்திற்கு உரிய ஹக்கை நீங்கள் கொடுத்தவர்களாக, அந்த நிஃமத்திற்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அந்த முறையில் நீங்கள் நடந்து கொண்டிருந்தால்,உங்கள் ஈமான் சரியாக இருந்தால் ஏன் அல்லாஹ் உங்களை வேதனை செய்யப் போகிறான் .

அதாவது எதிரிகளை அல்லாஹுத்தஆலா உங்கள் மீது ஏன் சாட்ட போகிறான்? அப்படி எதிரிகளை உங்கள் மீது சாட்டுவதால் அல்லாஹ்விற்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது?

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த வசனம் நாம் மிகவும் சிந்திக்க வேண்டிய வசனம்.

இதுபோன்று குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹு தஆலா நமக்கு உணர்த்துகிறான்.

وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ

இவ்வாறே அநியாயக்காரர்களில் சிலரை மற்றும் சிலருடன் -அவர்கள் செய்து கொண்டிருக்கும் (பாவச்) செயல்களின் காரணத்தால் நெருங்கியவர்களாக ஆக்குகிறோம். (அல்குர்ஆன் 6 : 129)

இந்த வசனம் கொடுக்கக்கூடிய பாடம் குறித்து அறிஞர்கள் கூறுகிறார்கள்; மக்கள் எப்பொழுது தங்களுக்குள் அநியாயக்காரர்களாக மாறுவார்களோ, அவர்களுக்குள் இருக்கக்கூடிய சமூக ஒழுக்கங்கள் கெட்டுவிடுமோ,கணவன் மனைவிக்கு அநியாயம் செய்வது, மனைவி கணவனுக்கு அநியாயம் செய்வது,பெற்றோர் பிள்ளைகளுக்கு,பிள்ளைகள் பெற்றோர்களுக்கு, சகோதரர்கள் சகோதரர்களுக்கு, எஜமானன் பணியாளருக்கு,பணியாளன் எஜமானனுக்குஇப்படியாக சமூகமே அவர்களுக்குள் ஒருவர் மற்றொருவர் மீதுஅநியாயம் செய்பவர்களாக,பிறருடைய உரிமைகளை பறிப்பவர்களாக,பிறருடைய உரிமைகளில் அத்துமீறக் கூடியவர்களாக ஆகிவிடும் போது அவர்களுக்கு அல்லாஹு தஆலா அநியாயக்கார ஆட்சியாளர்களை ஏற்படுத்துகிறான்.

அநியாயக்கார ஆட்சியாளர்கள் ஏற்படுவது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படக்கூடிய சோதனை, அதாப் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அதற்கு காரணம் நம்முடைய அமல்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். நாம் என்ன நினைக்கிறோம்?அநியாயக்கார அரசர்களை மாற்றுவோம். அநியாயக்கார அதிகாரிகளை மாற்றுவோம் என்பதாக.

எப்படி மாற்றுவோம்?நம்முடைய பல முயற்சிகளால், ஆர்ப்பாட்டங்களால் போராட்டங்களால் இப்படியான பலவிதமான கணக்குகளை மக்கள் போடுகிறார்கள். ஆனால் அல்லாஹ்விடத்தில் வேறு கணக்கு இருக்கிறது. எதுவரை மக்கள் தங்களுடைய அமல்களை திருத்த மாட்டார்களோ அவர்களுக்குள் அவர்கள் நேர்மையானவர்களாக, ஒருவர் ஒருவரை மதிப்பவர்களாக, ஒருவர் மற்றவரின் உரிமையை பேணக்கூடியவர்களாக இருக்க மாட்டார்களோ கண்டிப்பாக அவர்கள் மீது இரக்கம் காட்டக் கூடிய கருணையான ஒரு ஆட்சியாளரை,நீதமான ஒரு ஆட்சியாளர்களை அவர்கள் எதிர்பார்க்கவே முடியாது இதுதான் அல்லாஹ்வுடைய நீதியாகும்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இதைத்தான் சொல்லிக்காட்டுகிறான் ;

மாலிக் இப்னு தீனார் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்; இவர்கள் மிகப்பெரிய தாபியீன்களில் ஒருவராவார்கள். அவர்கள் கூறுகிறார்கள்; நான் முந்தைய வேதங்களின் சிலவற்றை படித்திருக்கிறேன். மக்கள் முனாஃபிக்குகளாக மாறிவிடும் பொழுது அவர்களுடைய ஆட்சியாளர்களையும் அல்லாஹ் முனாஃபிக்களாக ஆக்கிவிடுவான்.

ان الله ينتقم من المنافقين من منافقين

நயவஞ்சகர்களை நயவஞ்சகர்களைக் கொண்டே அல்லாஹ் பழி வாங்குவான். மக்களிடத்திலே நயவஞ்சகம் வந்துவிடும் பொழுதுஅவர்களை ஆட்சி செய்பவர்களும் நயவஞ்சகர்களாக இருப்பார்கள்.

இன்று குடும்பத்தில்,சமூகத்தில்,மக்கள் தங்களுக்கு மத்தியில் புழங்கிக் கொள்ளக்கூடிய பொருளாதாரத்தில்,கொடுக்கல் வாங்கலில் என்று பெரும்பாலும் -அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!- மக்களுடைய மனநிலை எவ்வாறு மாறிவிட்டது என்றால் ஹராம் என்பது அவர்களுக்கு ஹலாலாக ஆகிவிட்டது.

ஏமாற்றுவதும்,பிறருடைய சொத்தை எப்படி எல்லாம் சாமர்த்தியமாக தன்னுடையதாக மாற்றிக் கொள்வது என்பதும் மிகப்பெரிய புத்திசாலித்தனமானதாகவும்,இப்படித் தான் வாழவேண்டும் இப்படி வாழ்ந்தால் தான் முன்னேற முடியும் என்ற அடிப்படையில் அவர்கள் மாறி இருப்பதை பார்க்கிறோம்.

அல்லாஹ்வின் அடியார்களே!ஹலாலான அந்த வருவாயை அர்ப்பமாகவும், ஹராமான வருவாயை மகிழ்ச்சியாகவும், நேர்மையாக இருப்பதை ஒரு அறிவிலித்தனமாகவும்,ஏமாற்றுவதை சாமர்த்தியமாகவும் கருதக் கூடிய மனநிலை இன்று பெரும்பாலும் மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இப்படிப்பட்டவர்கள் தங்கள் ஆட்சியாளர்கள் ஊழலற்றவர்களாக, லஞ்சமற்றவர்களாக, நேர்மையானவர்களாக, நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது எப்படி சாத்தியமாகும்?!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ، إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ، وَشِدَّةِ الْمَئُونَةِ، وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ

மக்கள் தங்களுக்கு மத்தியில் நிறுவையில் அளவையில் மோசடி செய்தார்கள் என்றால் கண்டிப்பாக அல்லாஹு தஆலா அவர்களை பஞ்சத்தைக் கொண்டு பிடிப்பான். அவர்களுடைய பொருளாதார விலைவாசிகள் அதிகமாகிவிடும். மேலும் அநியாயக்கார அரசனை கொண்டு அல்லாஹ் சோதிப்பான்.(1)

அறிவிப்பாளர் : ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னுமாஜா,எண் : 4019, தரம் : ஹசன் (அல்பானி)

முன்னுள்ள காலத்தில் பொருட்களை விற்கக்கூடியவாங்கக் கூடிய நேரத்தில் அப்பொழுது அளந்து கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இப்பொழுதெல்லாம் ஏற்கனவே அளக்கப்பட்ட பொருளாக நிறுக்கப்பட்ட பொருளாக நாம் வாங்குகிறோம்.

அதிலும் பலவிதமான கட்டுப்பாடுகளையும் பரிசோதனைகளையும் தாண்டி அந்த பொருள் வரக்கூடியதாக இருக்கிறதால் பெரும்பாலும் இப்பொழுது அந்த வகை மோசடி குறைந்து இருக்கிறது.

ஆனால் வியாபார மோசடியில் மற்ற வகையான மோசடிகள் இப்பொழுது சமூகத்தில் அதிகமாகிவிட்டது.

வியாபாரத்தில் கலப்படங்கள் அதிகமாகிவிட்டது. ஏமாற்றுதல் அதிகமாகிவிட்டது. ஒருவரிடத்தில் பொருளை வாங்கிக்கொண்டு அவருக்கு அந்த பொருளுக்கு உரிய விலையை கொடுக்காமல்,காலத்தை தாழ்த்தி அவர்களை அலைக்கழித்து அவர்களை நோகவைத்து ஏதோ அவர்கள் இவர்களுக்கு தர்மம் கொடுப்பதை போல.

தர்மம் கேட்டு வந்தவருக்கு தர்மம் கொடுப்பதை போல தனக்கு பொருள் கொடுத்து வியாபாரத்தை கொடுத்த அந்த மனிதனுடைய செல்வத்தை அவருக்குத் திருப்பிக் கொடுப்பதற்கு மக்கள் பழகிக் கொண்டார்கள்.

அதுமட்டுமா! எத்தனை வியாபாரிகள் பிறரிடத்தில் வாங்கி அதை வேறு ஒருவருக்கு விற்றதைக் கொண்டு, அவர்கள் சொத்துகளையும் செல்வங்களையும் வாங்கிக் கொண்டார்கள். அந்த வியாபார பொருளை இவருக்கு கொடுத்தவரோ தெருவிற்கு வந்துவிடுகிறார்.

இப்படியாக ஏமாற்றுதல், மோசடி செய்தல், கொடுக்கல் வாங்கலில் நேர்மையற்ற, நியாயமற்றமுறை,வாக்குகளை மீறுவது.அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! இதைப்பற்றி எல்லாம் தனியாக பேச வேண்டிய நிலையில்தான் இன்றைய நம்முடைய சமுதாயம் இருக்கிறது.

அநியாயக்கார அரசர்கள் சாட்டப்படுவதற்கு இவையெல்லாம் மிகப்பெரிய காரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் என்றால் நம்பிக்கையாளர்கள், வாக்கை பேணக்கூடியவர்கள்; முஸ்லிம்கள் என்றால் அவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று மக்களுக்கு மத்தியில் பிரபலமாக அறியப்பட்டு வந்த சமுதாயம் –அல்லாஹுஅக்பர்-இன்று அவர்களுடைய நிலையைப் பாருங்கள்! தங்களுக்குள்ளே செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தங்களை அவர்கள் மீறுவதை பாருங்கள். தொழில் துறைகளில் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ளக்கூடிய அநியாயங்களையும் ஏமாற்றுதல்களையும் பாருங்கள்.

சகோதரர்களே! இதையெல்லாம் நாம் திருத்தாமல்,சீர்படுத்தாமல் நமக்கு நேர்மையான ஆட்சியாளர் வேண்டும், நீதமான ஆட்சியாளர் வேண்டும், அவர் வரக்கூடாது இவர் வரக்கூடாது என்றால், -அல்லாஹ் நமக்கு நல்ல அறிவை தருவானாக- இது நாம் பேசுவதால் நடந்துவிடாது. நாம் நம்முடைய அமல்களை திருத்துவதால் மட்டுமே நடக்கும், அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதால் மட்டும்,நமது தீனை நம்முடைய வாழ்க்கையில் முழுவதுமாக கடைபிடிப்பதால் மட்டுமே நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் பற்றி மக்கள் முறையிட்டார்கள்.

அது சஹாபாக்கள் உடைய கடைசி காலம். பல சஹாபாக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம்.

ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் உடைய அநியாயம் மிக அதிகமாக ஆகிவிட்டது. யாரும் தன்னை முறைத்துப் பார்த்தாலும் கொன்று விடக்கூடிய நிலை இருந்தது. அந்த அளவுக்கு மிகப் பெரிய அநியாயக்காரனாக இருந்தான். பல ஆயிரக்கணக்கான நல்லவர்களை, சாலிஹீன்களை, அறிஞர்களை கொண்று இருக்கிறான். அநியாயம் என்றால் ஹஜ்ஜாஜ் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவனுடைய அநியாயம் தலைவிரித்து ஆடியது. மக்கள் எல்லாம் பயந்து கொண்டு இருப்பார்கள். கொலை செய்வது, கொலை தண்டனை கொடுப்பது என்பது அவனுக்கு மிகச் சாதாரண ஒன்றாக இருந்தது.

அவர் ஒரு முஸ்லிம் மன்னர். முஸ்லிம் அதிகாரிகளுக்கு எல்லாம் மன்னராக இருந்தவர். அந்த கொலை சம்பவங்கள் எல்லாம் ஹதீஸ் நூல்களில் பதியப்பட்டிருப்பதை காணும்பொழுது அந்த காலத்தில் வாழக்கூடியவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று நாம் திகைக்க கூடிய அளவு இருக்கிறது.

அதைப் பார்க்கும் பொழுது நாம் இப்பொழுது சந்திக்கக்கூடிய அதாபுகள் எல்லாம் மிக அற்பமானது என்று கூட சொல்லலாம். இவ்வளவு அதாபுகளை நம்முடைய முன்னோர்கள் அவனுடைய காலத்தில் சந்தித்தார்கள்.

ஹஸன் பசரி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் சென்று மக்கள் ஹஜ்ஜாஜ் உடைய அநியாயத்தை முறையிடுகிறார்கள். எங்களால் தாங்க முடியவில்லை என்பதாக. ஏதாவது நாம் செய்ய வேண்டுமே என்று கூறினார்கள்.

அப்பொழுது ஹஸன் பசரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மிக அழகான அறிவுரை கூறினார்கள். இன்றைய காலத்தில் இங்கு வாழக்கூடிய நமக்கு மட்டுமல்ல,உலகில் வாழக்கூடிய எல்லா முஸ்லிம்களுக்கும் அழகிய அறிவுரையை அவர்கள் கூறினார்கள்.

பல சஹாபாக்களின் மாணவராகிய ஹஸன் பசரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குர்ஆனுடைய வாக்கியங்களையும் ஹதீஸ்களுடைய வாக்கியங்களையும் மார்க்கத்தின் அடிப்படைகளையும் எவ்வளவு அழகாக புரிந்து வைத்திருந்தார்கள் பாருங்கள்.

இவர்கள் ஆரம்பத்தில் மிகப்பெரிய முஜாஹித். அறிஞர் என்று சொன்னால் கோழை என்று நினைத்துவிடாதீர்கள். இவர்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய அளவை ஜிகாதிலே செலவழித்த மிகப்பெரிய வீரர். இவர்களுடைய பரம்பரையே வீரப்பரம்பரை. இவர்களுடைய தந்தையும் மிகப் பெரிய வீரராக இருந்தவர்கள்.

இவர்கள் அழகாக சொன்னார்கள்;

إن الحجاج عذاب الله ، فلا تدفعوا عذاب الله بأيديكم ، و لكن عليكم بالاستكانة والتضرع

நிச்சயமாக ஹஜ்ஜாஜ் உங்கள் மீது சாட்டப்பட்ட அல்லாஹ்வின் அதாபாக இருக்கிறான். அல்லாஹ்வின் அதாபை உங்களுடைய கரங்களால் தடுக்க முயற்சிக்காதீர்கள்.

உங்களுடைய போராட்டங்களால்,உங்களுடைய சாமர்த்தியத்தால், கிளர்ச்சிகளால், தந்திரங்களால் தடுக்க முடியும் என்று நினைக்காதீர்கள்; தடுக்க முயற்சிக்காதீர்கள்.

அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்து அல்லாஹ்விற்கு முன்னால் கீழ்படிந்து அவனிடத்தில் கெஞ்சி கதறி கேளுங்கள். யா அல்லாஹ்! உன்னுடைய அதாபில் இருந்து எங்களை பாதுகாப்பாயாக என்று.

அன்பு சகோதரர்களே! மனிதனுடைய சூழ்ச்சியை மனிதன் தன்னுடைய சூழ்ச்சியைக் கொண்டு எதிர்கொள்ளலாம். அல்லாஹ்வுடைய சூழ்ச்சியிலிருந்து மனிதன் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு அவனால் எந்த சூழ்ச்சியும் செய்ய முடியாது. அல்லாஹ் மிகைத்தவன்.

இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள்; இது அல்லாஹ்வுடைய அதாப். ஹஜ்ஜாஜ் உங்கள் மீது சாட்டப்பட்டிருப்பதுஅல்லாஹ்வுடைய அதாப். அதிலிருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டும் என்றால் நீங்கள் அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்து விடுங்கள். மன்றாடுங்கள். அமைதியை கடைப்பிடியுங்கள்.

உங்களுடைய போராட்டமோ, கலகமோ, கிளர்ச்சியோ உங்களுக்கு நன்மையை கொடுக்காது. அமைதியாக இருங்கள்;அடக்கமாக இருங்கள்;பணிவாக இருங்கள்;அல்லாஹ்விற்க்கு முன்னால் வந்து விடுங்கள்.

அன்பு சகோதரர்களே!இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய இந்த கூற்றை கூறியதற்கு பிறகுஸூரத்துல் முஃமினூனுடைய 76-வது வசனத்தை அவர்களுக்கு ஓதிக் காட்டினார்கள்.

وَلَقَدْ أَخَذْنَاهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ

நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் தங்கள் இறைவனிடம் திரும்பவும் இல்லை; (அவனிடம்) பணிந்து பிரார்த்தனை செய்யவும் இல்லை. (அல்குர்ஆன் 23 : 76)

வசனத்தின் கருத்து : நாம் அவர்களை வேதனையைக்கொண்டு பிடித்தோம். ஆனால் அவர்கள் தங்களின் ரப்புக்கு முன்னால் பணிந்து வரவில்லை. அப்படி அதாபு வரும்பொழுது அது எந்த வகையான அதாபாக இருந்தாலும் சரி. பூகம்பம் அல்லாஹ்வுடைய அதாப். சுனாமி அல்லாஹ்வுடைய அதாப்.புயல்காற்று அல்லாஹ்வுடைய அதாப். தேவையைவிட அதிகமாக மழை பொழிவது அதுவும் அல்லாஹ்வுடைய அதாப். மழையே இல்லாமல் இருப்பது அதுவும் அல்லாஹ்வுடைய அதாப்.

நம்முடைய மார்க்கத்தை சோதிக்க கூடிய நம்முடைய மார்க்கத்திலிருந்து நம்மை திருப்பக் கூடிய எதிரிகள் நம்மீது சாட்டப்பட்டு, அவனால் நாம் நம்முடைய பொருளாதாரம்,மார்க்கம், நம்முடைய வாழ்க்கையில் சோதிக்கப்படுவது இதுவும் அல்லாஹ்வுடைய தண்டனை.

அந்த நேரத்திலேஅவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்திருக்க வேண்டும். துஆ கேட்டிருக்க வேண்டும். ரப்பே! எங்களை இப்படி சோதிக்காதே! என்று.

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا

யா அல்லாஹ்! நாங்கள் மறந்திருந்தாலோ, நாங்கள் தப்பு செய்திருந்தாலோ, எங்களைத் தண்டித்து விடாதே! (அல்குர்ஆன் 2 : 286)

யா அல்லாஹ்! எங்கள் மீது உன்னுடைய அதாபை இறக்கி விடாதே! எங்கள் மீது கடுமையானவர்களை நீ ஆட்சிக்கு அமர வைத்து விடாதே! என்று மன்றாட வேண்டும்.

فَمَا اسْتَكَانُوا لِرَبِّهِمْ

அவர்கள் அல்லாஹ்விற்க்கு முன்னால் மன்றாடி இருக்கவேண்டும். கெஞ்சி இருக்க வேண்டும். அல்லாஹ்விடத்திலே அவர்கள் பணிந்து இருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை.

وَمَا يَتَضَرَّعُونَ

அவர்கள் அல்லாஹ்விடத்தில் துஆவில் கெஞ்சவில்லை. ரப்புடைய வாசகத்தை பாருங்கள்;

استكانة-என்றால் யாஅல்லாஹ்! என்னால் ஒன்றுமே முடியாது. நீ தான் என்னை பாதுகாக்கவேண்டும் என்றுதன்னுடைய அத்தனை பலவீனங்களையும் ஏற்றுக்கொண்டு, முற்றிலுமாக சரணடைந்து விடுவதற்கு பெயர் தான் இஸ்திகானா.

இன்று மனிதர்களுக்கு முன்னால் கூனிக்குறுகிறார்கள். அவர்களுக்கு முன்னால் சென்று கெஞ்சுகிறார்கள். அவர்களிடத்திலே தங்களுடைய பணிவையும், பயத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு முன்னால் தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக)

تَضَرَّعُ-என்று சொன்னால் அல்லாஹ்விடத்திலே ஒன்றை பயந்தும், ஒன்றை ஆதரவு வைத்தும், கெஞ்சிக் கெஞ்சி எப்படி பசிக்காக வேண்டி அழக்கூடிய ஒரு குழந்தை தன்னுடைய தாயிடத்தில் எப்படி கெஞ்சி அது அழுது கேட்குமோ அதற்கு சொல்லப்படும்.

அன்பு சகோதரர்களே! இந்த இடத்தில்ஒரு வரலாற்று நிகழ்வை நாம் நினைவு கூற வேண்டும். உங்களுக்கெல்லாம் தெரியும். ஏழாவது நூற்றாண்டில் அந்த மங்கோலியர்கள், தாத்தார் இனத்தை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய ஒரு போரை முஸ்லிம்கள் மீது தொடுத்தார்கள். பக்தாதையும் சிரியாவையும் அழித்தொழித்தார்கள். லட்சக்கணக்கான மக்களைக் கொன்றார்கள். இஸ்லாமிய செல்வம், இஸ்லாமிய நூல்களை அவர்கள் எதிர்த்தார்கள். ஃபுராத் நதி இரத்தமாகவும், முஸ்லிம்களின் நூல்களின் மைகளாலும் ஓடியது.

இப்பேற்ப்பட்ட மிகப் பெரிய சோதனைகளை நிகழ்த்தினார்கள். பிறகு பக்தாத் அவர்களுடைய கையில் சென்றது. இஸ்லாமிய நாட்டின் சாம்ராஜ்யமாக இருந்த பக்தாத், சிரியா போன்ற நாடுகள், அந்த தாத்தார்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

அந்த நேரத்தில்அந்த ஹோலாகா என்கின்ற, அதாவது ஜெங்கிஸ்கானுடைய அடுத்த சகோதரன் ஹோலாகா, அவனுடைய மகள், பக்தாதுடைய தெருக்களில் சுற்றி வந்தபோது, அங்கே பக்தாதுடைய மஸ்ஜிதிலே, ஒரு மார்க்க அறிஞர் மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதை பார்த்துவிட்டு,அந்த ஹோலாகா உடைய மகள் தன்னுடைய குதிரையில் இருந்துக்கொண்டு தன்னுடைய வீரர்களிடத்திலே கூறினாள்;முஸ்லிம்களுடைய இந்த அறிஞரை கை கால்களில் விலங்கிட்டு எனக்கு முன்னால் கொண்டு வாருங்கள். எப்பேற்ப்பட்ட ஒரு நிலை என்று பாருங்கள். அது போன்று அந்த அறிஞர் கைகால்களை விலங்கிடப்பட்டு, ஒரு அடிமையின் உருவத்தில், ஒரு இழிவான நிலையில்அந்த ஹோலாகா உடைய மகளிடம் கொண்டு வரும்பொழுது, அந்தப்பெண் கூறுகிறாள்;

பார்த்தீர்களா?அல்லாஹ் எங்களைத்தான் நேசிக்கிறான். உங்களை நேசிக்கவில்லை. எங்களுக்குத்தான் உதவினான், உங்களுக்கு உதவவில்லை.

وَاللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِ مَنْ يَشَاءُ

அல்லாஹ், அவன் நாடியவர்களுக்கு உதவுவான். நாடியவர்களை பலப்படுத்துவான் (அல்குர்ஆன் 3 : 13)

என்பதாக அந்தப் பெண் கூறியபோது,

அதற்கு அந்த அறிஞர் கேட்கிறார்கள்;அல்லாஹ்வின் அடிமையே! நீ ஆடு மேய்க்கக்கூடிய இடயரை பார்த்திருக்கிறாயா? என்று.

அந்தப் பெண் கூறுகிறாள்;ஆம் பார்த்திருக்கிறேன்.

பின் கேட்கிறார்கள்;ஆடு மேய்க்கக்கூடிய இடயனோடு அவன் தனக்கு சில நாய்களை வைத்திருப்பதை நீ பார்த்திருக்கிறாயா? அந்தப் பெண் கூறுகிறாள்;பார்த்திருக்கிறேன் என்று. அந்தப் பெண்ணிடத்திலே அறிஞர் கேட்கிறார்கள்;

ஒருவன் ஆடு மேய்க்கிறான். ஆடுகளை வைத்திருக்கிறான். இவன் ஏன் நாய்களை வைத்திருக்கிறான்? நாய்களை வைத்திருப்பது எதற்கு என்பதாக கேட்கிறார்கள். அப்போது  அந்த பெண் கூறினாள்;

இந்த நாய்களுடைய வேலை என்ன? ஆடுகள் மந்தையிலிருந்து, கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றால், அந்த ஆட்டை அந்த நாய்கள் துரத்தி கொண்டு மீண்டும் மந்தைக்கு கொண்டு வந்து சேர்க்கும். பிரிந்து செல்லக் கூடிய ஆடுகள், பிரிந்து செல்லாமல் அந்த நாய்கள் அந்த ஆடுகளை பாதுகாக்கும். இது அந்த நாய்களின் வேலை. இதை அந்தப் பெண் கூறியவுடன், அந்த அறிஞர் கூறுகிறார். இது தான் எங்களுக்கும் உங்களுக்குமுள்ள ஒரு உதாரணம்.

மேய்ப்பாளன் அல்லாஹ். நாங்கள் ஆடுகள். நீங்கள் நாய்கள்.

நாங்கள் எங்களுடைய எஜமானனாகிய அல்லாஹ்விடமிருந்து தூரமாகி விடுகின்றபோது, உங்களை போன்ற நாய்களை சாட்டி அல்லாஹ் எங்களை அவன் பக்கம் திருப்புகின்றான். நாங்கள் அல்லாஹ்வின் பக்கம் வரவேண்டும், அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்குள் வந்துவிடவேண்டும், அல்லாஹ்வின் பக்கம் திரும்பவேண்டும் என்றுஅல்லாஹ் எங்களை அவன் பக்கம் திருப்புவதற்காக உங்களை எங்கள் மீது சாட்டியிருக்கிறான்.

யோசித்துப்பாருங்கள்;நிலைமையை எப்படி அவர்கள் உன்னிப்பாக புரிந்தார்கள் என்று, எப்படி கவனித்தார்கள் என்று பாருங்கள் .

சகோதரர்களே!நாம் நிராசையாக வேண்டிய அவசியம் கிடையாது. அல்லாஹ் சுபஹானஹு தஆலா இந்த பூமியை நல்லவர்களுக்குத்தான் வாக்களித்து இருக்கின்றான். உலகமே அநியாயக்கார அரசாங்கமாக மாறி, நாம் மிக பலவீனமாக மாறி விட்டாலும் சரி, ஒரு முஃமினுக்கு எப்போதும் நிராசைக்கூடாது. காரணம் என்ன? அவன்நம்பியிருக்ககூடிய எஜமானன் அல்லாஹ் மிகப் பெரிய அரசன். மிகப்பெரிய ஆட்சியாளன்.

ரப்புல் ஆலமீன் சொல்கிறான்;

كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ

அல்லாஹ் விதித்துவிட்டான், நிச்சயமாக நான் தான் மிகைப்பேன் என்று.அவனுடைய தூதர்கள் தான் மிகைப்பார்கள். அல்லாஹ் மிக வலிமைமிக்கவன்;மிக பலமானவன். (அல்குர்ஆன் 58 : 21)

அல்லாஹ்வை நம்பக்கூடிய ஒரு முஸ்லிம், அவனுடைய உள்ளத்தில் கோழைத்தன்மை வந்துவிடக்கூடாது. பயம் வந்து விடக்கூடாது. சோதனைகளைப் பார்த்து அவன் மனம் தளர்ந்து விடக்கூடாது. தன்னுடைய மார்க்கத்தை இனி பின்பற்ற முடியாதோ என்ற பலவீனம் அவனுக்கு வந்து விடக்கூடாது.

இந்த சோதனைகளை பார்க்கும்போதுதான், இன்னும் அவனுடைய மார்க்கத்தில் அவனுக்கு நம்பிக்கையும்,பலமும், இந்த மார்க்கத்தை பின்பற்றுவதில் அவனுக்கு உற்சாகமும் ஏற்பட வேண்டும். அல்லாஹ் சுபஹானஹு தஆலா அஹ்ஸாப்உடைய யுத்தத்தைப் பற்றி சொல்லும்போது,

وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை. (அல்குர்ஆன் 33 : 22)

அந்தக் காலத்தில் மதினாவில் 3000-லிருந்து 4000பேர் தான் இருந்தார்கள். அவர்களை எதிர்கொள்வதற்காக 12ஆயிரம் வீரர்கள். அரபுக் கோத்திரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, முழு ஆயுதத்துடன் அந்த நேரத்தில் உள்ள சிறு நகரமாகிய மதினாவை தாக்க வந்தால், அது எப்பேற்பட்ட படையாக இருக்கும். அதை பார்த்தபோது, முஃமின்கள் இந்த வார்த்தையை சொன்னார்கள்.

அன்பு சகோதரர்களே!இன்று இந்த சாதாரண பிரச்சினைகளை, சாதாரண ஆபத்துகளை, (சாதாரண ஆபத்துகள் என்றால் முந்தியவர்களை கவனித்துப்பார்க்கும்போது) இது ஒரு சாதாரணமானதுதான். இதைப் பார்த்த உடனே சிலர் நினைக்கிறார்கள், ஆஹா நாம் முஸ்லிம் என்கிற அடையாளத்திற்கு போனால் நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ? முஸ்லிம் என்று காட்டிக் கொண்டால் நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என்று பயந்து தங்களுடைய இஸ்லாமை மாற்றிக் கொள்ள நினைக்கிறார்கள். தன்னுடைய மார்க்கப்பற்றை பலவீனப்படுத்த நினைக்கிறார்கள்.

சகோதரர்களே!இது மேலும் அவர்களுக்கு பிரச்சினையை அதிகப்படுத்தும். அப்படி தான் பல நாடுகளில் அதிகப்படுத்தப்பட்டதை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ் சுபஹானஹு தஆலாநமக்கு வாக்களிக்கிறான்; சூரத்துன் நூர் உடைய 55-ஆவது வசனத்தை ஓதி பாருங்கள். அல்லாஹ் கூறுகிறான்;

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ

(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் இவர்களுக்கு விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். (அன்றி) அவர்கள் தன்னையே வணங்கும்படியாகவும், எதையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தான். (அல்குர்ஆன் 24 : 55)

அவர்களுக்கு இந்த பூமியிலே ஆட்சியை கொடுப்பான்.

இதை புரிந்துக்கொண்ட அந்த எதிரிகள் இன்று அவர்கள் செய்யக்கூடிய இரண்டு விதமான தாக்குதல்கள். ஒன்று இஸ்லாமிற்கு வெளியில் இருந்து ஆயுதங்களைக் கொண்டு, அடக்கு முறைகளைக் கொண்டு, முஸ்லிம்களை நாம் மாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆசாபாசங்களை காட்டி இந்த மார்க்கத்திலிருந்து முஸ்லிம்களை நாம் வெளியேற்றி விடலாம் என்று.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் இன்று பெரும்பகுதி வட்டியை ஹலாலாக்கி கொண்டது. இசையை ஹலாலாக்கி கொண்டது. ஆடல் பாடல், இந்த அநாகரிகமான, மேலைக்கலாச்சாரங்களை ஆகுமாக்கிக் கொண்டது. இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை, முன்னேற்றத்துக்கு உண்டான தடையாக பார்க்கின்றது.

அல்லாஹ்வும்,அல்லாஹ்வுடைய ரசூலும் கற்றுக்கொடுத்த ஒழுக்கங்களை பிற்போக்குத்தனமாக பார்க்கிறது. இப்படிப்பட்ட ஹராமை சர்வசாதாரணமாக, அவர்கள் தங்களுக்கு மத்தியிலே பழக்கத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

ஒரு முஸ்லிமை அவனுடைய இஸ்லாமிய மார்க்கப்பற்றிலிருந்து பலவீனப்படுத்தி, அவனுடைய ஒழுக்கத்திலிருந்து அவனை வெளியேற்றிக் கொண்டு வந்துவிட்டார்கள். எந்த அசிங்கங்களுக்கு, அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே மிக பெரிய தண்டனை இருந்ததோ, அந்த அசிங்கங்களும் ஆபாசங்களும் இன்று முஸ்லிம்களுக்கு மத்தியிலே முஸ்லிம் நாடுகளில் சர்வசாதாரணமாக அரங்கேற்றப்படுவதை பார்க்கிறோம்.

விபச்சாரம் செய்தவன்திருமணம் முடிக்காதவனாக இருந்தால், அதுபோன்று பெண்ணும் திருமணம் முடிக்காதவளாக இருந்தால்100கசையடி கொடுங்கள் என்று இந்த மார்க்கம் அதற்குரிய தண்டனையை சொல்கிறது.

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنَ الْمُؤْمِنِينَ

விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில், அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கும் (தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு தொகையினர் அதன் சமீபமாக இருக்கவும். (அல்குர்ஆன்24 : 2)

அதே நேரத்தில், அவர்கள் திருமணம் முடித்தவர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் கல்லால் அடித்துக் கொன்று விடுங்கள் என்று சொல்கிறது. (2)

நூல் : புகாரி, எண் : 1329.

அல்லாஹ் பாதுகாப்பானாக!

சகோதர்களே!அத்தகைய பெரும் பாவம் சமுதாயத்தில்அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு, இஸ்லாமிய நாடுகள் அது எங்களுக்கு வேண்டும் என்று கொண்டாடக்கூடிய நிலையிலே இருக்கிறது. முஸ்லிம் சமூகம் இப்பேற்பட்ட பாவத்தைஇது ஒரு கலாச்சாரம் என்பதாக பார்க்கக் கூடிய அளவிலே,இது ஒரு தனிப்பட்ட விருப்பம் என்ற பார்க்கக்கூடிய அளவிலே, இந்த முஸ்லிம் சமூகம் சிந்தனையால் மாற்றப்பட்டிருக்கிறது என்றால், எவ்வளவு பெரிய சமூக சீர்கேடுகள், இந்த மார்க்கத்தில் வரம்பு மீறுதல், இந்த சமுதாயத்தால் ஜீரணிக்க பட்டுவிட்டது என்பதை யோசித்துப் பாருங்கள்.

وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 5 : 38)

இந்த சட்டம் இன்று பல முஸ்லிம் நாடுகளுக்கு பிற்போக்குத்தனமான சட்டமாகவும், கற்கால சட்டமாகவும், பர்பேரியர்களுடைய சட்டமாகவும் தங்களுடைய அரசாங்க பார்லிமென்ட்களில் அவர்கள் பேசுகிறார்கள்என்றால் அவர்களின் உள்ளத்தில் இருந்து இஸ்லாம் எப்படி வேரறுக்கப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.

அல்லாஹு தஆலா கொடுத்த சொத்துரிமை, ஆண்களுக்கு பெண்களை விட இரண்டு மடங்கு என்ற சொத்துரிமைகள். இது இஸ்லாம் பெண்களுக்கு செய்த அநியாயம் என்று முஸ்லிம் நாடுகளில், அவர்கள் தங்களது பார்லிமென்ட்களில் பேசி, ஷரியத்துடைய சட்டங்களை மாற்றக்கூடிய அளவிற்கு அவர்கள் துணிந்து விட்டார்கள் என்றால்எந்த அளவிற்கு இஸ்லாம் அவர்களுடைய உள்ளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைகள் விதைக்கப்பட்டுவிட்டன என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா  நமக்கு சொல்கிறான்;

ஈமான் கொண்டு, நல் அமல்கள் செய்தால் அல்லாஹ் ஆட்சியைக் கொடுப்பான். நல்லாட்சியை கொடுப்பான். அல்லாஹு தஆலா பாதுகாப்பான ஆட்சியைக் கொடுப்பான். உங்களது ஆயுதங்களால் ஆட்சி அமைந்து விடாது.

அப்படி ஒருவன் நினைப்பானேயானால்அது மிகப்பெரிய தவறு. ஆயுதங்களால் தாக்குதல்கள் நடத்தலாமே தவிர, பாதுகாப்பான ஆட்சியை உருவாக்க முடியும் என்று சொன்னால் அது ஈமானைக் கொண்டு,அமலைக் கொண்டுதான் அல்லாஹு தஆலா வாக்களித்து இருக்கின்றான்.

அப்படி ஆயுதங்களைக் கொண்டு ஆட்சியை நடத்தி, சமூகத்தை திருத்தி விடலாம் என்று நினைத்திருந்தால், அல்லாஹு தஆலா நபிமார்களை, ஆயுதங்களைக் கொண்டு அனுப்பியிருக்கலாம். நபிமார்களுக்கு படைகளை அல்லாஹ் கொடுத்து இருக்கலாம். ஆனால், அல்லாஹ் நபிமார்களுக்கு வேதங்களை கொடுத்தான். நபிமார்களுக்கு அல்லாஹ் தஆலா அவர்களுக்கு வழி வழிகாட்டக்கூடிய ஹிக்மாவை –ஞானத்தைக் கொடுத்தான். இந்த இரண்டைக் கொண்டு தான் மக்களை அவர்கள் திருத்தினார்கள்.

அல்லாஹ் சொல்கிறான்;முந்தி உள்ள நல்லவர்களை அல்லாஹு தஆலா ஆட்சியில் கொண்டு வந்தது போன்று .

பிறகு சொல்கிறான்; அவர்களுக்கு அவர்களுடைய மார்க்கத்தை நான் உறுதிப்படுத்திக் கொடுப்பேன், என்று பலப்படுத்திக் கொடுப்பேன் என்று. அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை உறுதியாகப் பின்பற்றுவார்கள். அந்த மார்க்கத்திலே நிலையாக இருப்பார்கள்.

 

சகோதரர்களே!அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! நமக்கு உதவி செய்வானாக! இன்று மாற்றார்கள் வசிக்கின்ற பல நாடுகளில்முஸ்லிம்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரம், மார்க்கத்தை பேணுவதற்கு அவர்களுக்கு இருக்கின்ற சுதந்திரம், இன்று பல முஸ்லிம் நாடுகளில் இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும்.

பல முஸ்லிம் நாடுகள், முஸ்லிம்கள் ஆட்சி செய்யக்கூடிய நாடுகளில் இஸ்லாமிய விரோதப் போக்கு, முஸ்லிம் அறிஞர்கள் மீது உண்டான விரோதப் போக்கு, அவர்களை அழிக்க வேண்டும், அவர்கள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற மனப்போக்கு இன்று பல ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருப்பதை பார்க்கிறோம்.

இந்த நேரத்தில் நாம் என்ன செய்யவேண்டும்? அல்லாஹு தஆலா என்ன நமக்கு வாக்கை சொல்லியிருக்கிறான்? நம்முடைய ஈமான், அமல்களை சரி செய்வதை தவிர,அதற்கு வேறு வழியில்லை.

அல்லாஹு தஆலா நமக்கு சொல்கிறான்;  சூரா அத்தாரியாத்தின் ஐம்பதாவது வசனத்தைப் படித்துப் பாருங்கள்;

فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ

ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அல்குர்ஆன்51 : 50)

ஒவ்வொரு இறைத்தூதரும், தனது சமூக மக்களுக்கு சொன்ன அரியுரையை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் ஓடோடி வந்து விடுங்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் உண்டான தீர்வு அல்லாஹ்விடத்திலே முறையிடுவது. அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது;அல்லாஹ்விற்கும் நமக்கும் இடையில் உண்டான உறவை சரி பண்ணுவது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;ஒருவன் அல்லாஹ்விற்கும் தனக்கும் உண்டான உறவை சரிசெய்துகொண்டால், அவனுக்கும் மக்களுக்கும் இடையில் உண்டான உறவை அல்லாஹ் சரிசெய்வான்.(3)

நூல் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, எண் : 35472, தரம் : லயீஃ ப் (அல்பானி)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்இத்தகைய தர்பியத்தை, இத்தகைய ஒழுக்கத்தை தான் நமக்கு கற்றுக்கொடுத்தார்கள். நம்முடைய பிரச்சினைகளுக்குண்டான தீர்வைஅல்லாஹ்விடத்தில் மன்றாடுவதன் மூலமாக, அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதன் மூலமாக, நம்முடைய மார்க்கத்தை நாம் சரி செய்துகொள்வதன் மூலமாகத்தான்நாம் பெற முடியும். அத்தகைய ஓர் ஒழுக்கத்தையும் வழிகாட்டுதலையும்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு காண்பித்து தந்திருக்கிறார்கள்.

ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே!இதுபோன்ற காலகட்டங்களில்,குறிப்பாக அல்லாஹ்வின் பக்கம் நாம் நம்முடைய சுஜூதிலே மன்றாட வேண்டும். நம்முடைய  ஒவ்வொரு தொழுகையிலும் மன்றாட வேண்டும். இரவு நேரங்களிலே மன்றாட வேண்டும். தனிமைகளிலே மன்றாட வேண்டும். ஒவ்வொரு வணக்கத்தைச் செய்யும் போதும், நாம் மன்றாட வேண்டும்.

நம்முடைய அமல்களை மாற்றிக்கொள்ளவேண்டும். அநியாயத்தை விட்டும் நம்முடைய கொடுக்கல் வாங்களில், நாம் மார்க்கத்தை எவ்வளவு மீறி இருக்கிறோம் என்பதை கவனித்து, அவற்றை மாற்றிக்கொண்டு,நேர்மையானவர்களாக, நீதமானவர்களாக, பிறரை மதிக்கக்கூடியவர்களாக, பிறருடைய உரிமைகளைப் பேணக்கூடியவர்களாக நாம் ஆகுவோம்.

அல்லாஹு சுபுஹானஹு தஆலாஅதன் மூலமாகநமக்கு சாதகமான, நம்மீது கருணை காட்டக்கூடிய, மக்கள் மீது கருணை காட்டக்கூடிய, நாட்டு நலனில் அக்கறை உள்ள நல்லவர்களை அல்லாஹு தஆலாநமக்கு ஆட்சியில் ஏற்படுத்தித் தருவான். அல்லாஹ் அதற்கு போதுமானவன்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ، وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ: لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ، حَتَّى يُعْلِنُوا بِهَا، إِلَّا فَشَا فِيهِمُ الطَّاعُونُ، وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمُ الَّذِينَ مَضَوْا، وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ، إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ، وَشِدَّةِ الْمَئُونَةِ، وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ، وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ، إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ، وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا، وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ، وَعَهْدَ رَسُولِهِ، إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ، فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ، وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ، وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ، إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ"(سنن ابن ماجه 4019 -) حكم الألباني - حسن

குறிப்பு 2)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ اليَهُودَ، جَاءُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ مِنْهُمْ وَامْرَأَةٍ زَنَيَا «فَأَمَرَ بِهِمَا، فَرُجِمَا قَرِيبًا مِنْ مَوْضِعِ الجَنَائِزِ عِنْدَ المَسْجِدِ»(صحيح البخاري 1329 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ أَبِي عَوْنٍ، قَالَ: " كَانَ أَهْلُ الْخَيْرِ إِذَا الْتَقَوْا يُوصِي بَعْضُهُمْ بَعْضًا بِثَلَاثٍ، وَإِذَا غَابُوا كَتَبَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ بِثَلَاثٍ: مَنْ عَمِلَ لِآخِرَتِهِ كَفَاهُ اللَّهُ دُنْيَاهُ، وَمَنْ أَصْلَحَ مَا بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ كَفَاهُ اللَّهُ النَّاسَ، وَمِنْ أَصْلَحَ سَرِيرَتَهُ أَصْلَحَ اللَّهُ عَلَانِيَتَهُ"(مصنف ابن أبي شيبة35472 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/