HOME      Khutba      முஸ்லிமல்லாதவர்களுடன் நாம் எப்படி நடந்து கொள்வது? | Tamil Bayan - 559   
 

முஸ்லிமல்லாதவர்களுடன் நாம் எப்படி நடந்து கொள்வது? | Tamil Bayan - 559

           

முஸ்லிமல்லாதவர்களுடன் நாம் எப்படி நடந்து கொள்வது? | Tamil Bayan - 559


بسم الله الرحمن الرّحيم

முஸ்லிமல்லாதவர்களுடன் நாம் எப்படி நடந்து கொள்வது?

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

இந்த குத்பாவின் ஆரம்பத்தில் அல்லாஹ்வின் அச்சத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாகஅல்லாஹ்வை பயந்து அவன் காட்டிய மார்க்க சட்டத்தின்படியும் அவன் காட்டிய வேதத்தின்படியும் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிக்கொடுத்த ஒழுக்க மாண்புகளை பின்பற்றி வாழ்வதையும் எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டி,

மேலும் அதன் அடிப்படையில் யார் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்களோ அவர்கள் இம்மையிலும் வெற்றி அடைந்தார்கள்;மறுமையிலும் வெற்றி அடைந்தார்கள்.

அத்தகைய வெற்றியாளர்களின் கூட்டத்தில் அல்லாஹுத்தஆலா உங்களையும் என்னையும் ஆக்கி அருளவேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு சுப்ஹானஹுதஆலா நமக்கு கொடுத்திருக்கக்கூடிய மார்க்கம் ஒரு நிறைவான மார்க்கம்.

இந்த மார்க்கத்தின் எந்த ஒரு பகுதியிலும் ஒரு குறையையோ அல்லது ஒரு நடுநிலையற்ற தன்மையையோ அல்லது ஒரு முரண்பாட்டையோ அல்லது எல்லைமீறி விடுகின்ற செயலையோ இந்த உலகத்தில் யாராலும் சுட்டிக்காட்டி கூறிவிட முடியாது.

அல்லாஹு சுப்ஹானஹுதஆலா மனிதர்களை படைத்தவன். இந்த மனிதர்களுக்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மார்க்கம்தான் இந்த இஸ்லாமிய மார்க்கம்.

وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْنًا

உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்) (அல்குர்ஆன் 5:3)

اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். (அல்குர்ஆன் 3:19)

இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கியமான ஒரு பகுதி,முஸ்லிம்கள் தங்களுக்குள் எவ்வாறு பழக வேண்டும்? அதுபோன்று முஸ்லிம் அல்லாதவர்களிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதாகும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் முஷ்ரிக்குகளுக்கு மத்தியில் வாழ்ந்தார்கள். பிறகு மதினாவிற்கு வந்த பொழுது அங்கே யூதர்கள் இருந்தார்கள்,முஷ்ரிக்குகள் இருந்தார்கள், இன்னும் கிறிஸ்தவர்களில் சிலரும் இருந்தார்கள்.

இப்படியாக மாறுபட்ட சமூக மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமை பரப்பி வந்தார்கள்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் அநியாயங்களையும்,ஒப்பந்தங்களை மீறுவதையும், பிறருக்கு கெடுதல் செய்வதிலும் பிறருடைய உயிருக்கோ பொருளுக்கோ கேடு விளைவிப்பதையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்களில் யாருக்கும் எப்போதும் அனுமதித்ததில்லை.

ஒரு சம்பவத்தை இந்த இடத்தில் நாம் நினைவு கூற வேண்டும்.

முகீரா இப்னு ஷுஃபா என்ற சஹாபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் இஸ்லாமை ஏற்க வருகிறார்கள்.

ஆனால் வருகின்ற வழியில் முஸ்லிமல்லாத இருவரை கொன்றுவிட்டு அவர்களுடைய செல்வங்களை எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார்.

இந்த செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெரிந்துவிடுகிறது.

வந்தவுடன், அல்லாஹ்வுடைய தூதரே! நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன் என்று கூறுகிறார்.

அப்பொழுது அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுகிறார்கள்:நீ இஸ்லாமை ஏற்றுக் கொண்டதை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் நீ எந்த இருவரை அநியாயமாக கொன்று விட்டு,அவர்களின் செல்வங்களை நீ அநியாயமாக பறித்துக்கொண்டு வந்தாயோ அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த செல்வம் கொலை செய்யப்பட்டவர்களுடைய குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். கொலை செய்யப்பட்டவர்களுக்கான பரிகாரம் கொடுக்கப்பட வேண்டும்.

ஓர் உயிரை அநியாயமாக கொலை செய்துவிட்டால் அதற்கு ஒன்று பழிக்குப்பழி அல்லது அதற்கு ஈடாக நூறு ஒட்டகங்கள் குற்றப் பரிகாரமாக கொடுக்கப்பட வேண்டும். அந்த தியத்தை கொடுத்தால்தான் நான் ஏற்றுக் கொள்வேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுத்தமாகச் சொல்கிறார்கள்.

பிறகு அவ்வாறு கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு அந்த தியத் கொடுக்கப்படுகிறது. பிறகுதான் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் முகீராவை தனது தோழராக ஏற்றுக்கொண்டார்கள்.

நூல் : அஸ்ஸீரதுல் ஹலபிய்யா

இப்பேற்பட்ட அணுகுமுறையை இஸ்லாம் நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

இஸ்லாம் அல்லாதவர்கள் மதினாவை சுற்றி வாழ்ந்து கொண்டிருந்தவர்களில் இருவகையான மக்கள் இருந்தனர்.

ஒரு கூட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் செய்து கொடுத்த உடன்படிக்கையை நிறைவேற்றுபவர்களாக இருந்தனர்.

இன்னொன்று, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சமாதான ஒப்பந்தம் செய்யாமல் தனித்து வாழ்ந்து வந்தவர்களாகவும் இருந்தனர்.

எப்படி இருந்தாலும் சரி, அநியாயமாக ஒரு உயிரை கொள்வதை அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

குறைஷி வம்சத்தில் அரபு சமூகத்தில் மிகப்பெரிய தலைவராகவும் சமுதாயத்தில் மக்களுக்கு மத்தியில் போற்றக்கூடிய ஒரு நபராக இருந்த போதும் கூட அந்த மனிதர் இஸ்லாத்தை ஏற்க வரும்பொழுது அவர் செய்த தவறை அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொறுத்துக் கொள்ளவில்லை.

அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இஸ்லாமை ஏற்றுக்கொண்ட காரணத்தால் அவருடைய குற்றத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

மாறாக கண்டித்தார்கள். அதற்குரிய பரிகாரத்தை செய்ய சொன்னார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நீதமான மார்க்கம் தான் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிமல்லாதவர்கள் என்றால் அவர்களிடத்தில் நாம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம், அவர்களிடத்தில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அவர்களை நாம் எப்படி வேண்டுமானாலும் பழிக்கலாம் என்று ஒரு முஸ்லிம் நினைப்பாரேயானால் அது அவர்களுடைய அறியாமை ஆகும்.

இங்கே ஒரு நபி மொழியை நாம் நினைவு கூற வேண்டும்.

வாஸிலா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

مَنْ قَذَفَ ذِمِّيًّا حُدَّ لَهُ يَوْمَ الْقِيَامَةِ بِسِياطٍ مِنْ نَارٍ، فَقُلْتُ لِمَكْحُولٍ: مَا أَشَدُّ مَا يُقَالُ، قَالَ: يُقَالُ لَهُ:يَا ابْنَ الْكَافِرِ

ஒரு மனிதன் முஸ்லிம்களோடும் காபிர்களோடும் ஒப்பந்தம் செய்து ஒரு நாட்டில் இருவரும் சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதுஒரு முஸ்லிம் அல்லாதவரை ஒருவர் அவதூறாக தரக்குறைவாக ஏசும்படி பேசினால் நாளை மறுமையில் நரக நெருப்பினால் ஆன சாட்டைகளை கொண்டு அந்த முஸ்லிமான மனிதருக்கு ஹத் நிறைவேற்றப்படும்.

இதை வாஸிலா(ரழி) அவர்களிடமிருந்து நமக்கு அறிவிக்கக்கூடிய தாபியீன்,

அவருடைய மாணவர் கேட்கிறார்..

ஒரு காபிரை ஏசுவது என்றால் தரக்குறைவான வார்த்தையை பேசுவது என்றால் அதில் கடினமான வார்த்தை என்னவாக இருக்கும்? என்று விளக்கம் கூறுங்கள் என்று கூறும்போது...

இமாம் அவர்கள் கூறினார்கள்:

ஒரு காபிரைப் பார்த்துகாபிரின் மகனே! என்று அவரை அழைப்பது அவரை தரக்குறைவாக பேசுவதாகும்.

அறிவிப்பாளர் : வாஸிலாரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அல்முஃஜமுல் கபீர் தப்ரானிஎண் : 135.

அது உண்மையாக இருந்த போதும் அப்படி நாம் சொல்லக்கூடாது. அப்படி சொல்வது அவரை ஏசுவது போன்றதாகும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தகைய ஒழுக்க மாண்புகளை சமுதாய சட்டங்களை நமக்கு வரையறுத்துக் கொடுத்திருக்கிறார்கள்!

ஒரு முஸ்லிமுடைய எந்த ஒரு சொல்லும் செயலும் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது.

இதில் எனது மார்க்கத்தில் வழிகாட்டுதல் இல்லை எனது விருப்பப்படி நடந்து கொள்வேன் என்று எந்த ஒரு முஸ்லிமாலும் கூறிவிடமுடியாது.

ஒரு முஸ்லிமுடைய சொல்லுக்கும் செயலுக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புறத்திலிருந்து வழிகாட்டுதல் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒருவர் தனது உயிரை பாதுகாப்பதற்கு என்ன கடமை இருக்கிறதோ அதுபோன்று தான் சமூகத்தில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது இந்த மனிதருடைய உயிரைப் பாதுகாப்பதும் இன்ன மனிதருடைய உடமைகளை பாதுகாப்பதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக இருக்கின்றது.

முஸ்லிமல்லாதவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மீது அத்துமீறல் செய்வதை அல்லாஹ்வும் அனுமதிக்கவில்லை; அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அனுமதிக்கவில்லை.

மக்காவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்ரா சென்றபோது எப்படியொரு அன்பான ஆசை நிறைந்த ஒரு பயணமாக இருந்திருக்கும்.

அல்லாஹ்வுடைய தூதரும் 1400தோழர்களும் அல்லாஹ்வுடைய வீட்டை காண வேண்டுமென்று எவ்வளவு ஆசையுடன் சென்றிருப்பார்கள்!

மக்காவை விட்டு பிரிந்து செல்லும் பொழுது அழுதவர்களாக துடிதுடித்தவர்களாக சென்றார்கள்.

وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ

மக்காவே! உன்னை விட்டு செல்ல வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை. இந்த ஊர் மக்கள் என்னை வெளியேற்றி இருக்கவில்லை என்றால் வேறு ஒரு ஊரில் நான் குடியேறி இருக்க மாட்டேன். அல்லாஹ்வின் பூமியில் நீ எனக்கு மிகவும் விருப்பமான பிடித்தமான பூமி என்று அழுதவர்களாக மக்காவை விட்டு சென்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அதீ இப்னு ஹம்ரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதிஎண் : 3926.

மக்காவை காண வேண்டும், அங்கிருக்கும் காபாவை காண வேண்டும் என்ற ஆசையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் 1400தோழர்களும் தல்பியா கூறியவர்களாக ஹுதைபியா அடைந்தவுடன் நின்றுவிட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாடியிருந்தால் மிகப்பெரிய யுத்தத்தை 1400 தோழர்களைக் கொண்டு நடத்தியிருக்கலாம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஆண்டு ஹஜ் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

குறைஷிகள் முற்றிலுமாக தடுத்து விட்டார்கள். நாங்கள் உங்களை மக்காவிற்குள் நுழைவதற்கு அறவே அனுமதிக்கமாட்டோம்.

நீங்கள் இஹ்ராமுடைய உடையில் குர்பானி பிராணிகளுடன் வந்து இருந்தாலும் சரியே.

நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். அடுத்த வருடம் வேண்டுமானால் மூன்று நாட்கள் உங்களுக்கு அனுமதி அளிப்போம்.அப்போது நீங்கள் வாருங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குறைஷிகள் கூறினார்கள்.

எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் தோழர்களும் திரும்பி விடுகின்றனர்.

காஃபிர்களை அவர்கள் அறியாத நேரத்தில் அவர்களை கொல்வதற்கு அனுமதி உண்டு என்று இருந்திருந்தால் இந்த சந்தர்ப்பத்திற்கு பிறகு எத்தனையோ கொலைகளை அல்லாஹ்வுடைய தூதரும் நபித்தோழர்களும் நிகழ்த்தி இருக்கமுடியும்.

ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தெளிவான ஒரு வசனத்தை இறக்கினான் :

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

ஒரு வகுப்பார் மீதுள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (பகைமை இருந்தாலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருங்கியது. (எப்போதும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 5 : 8)

ஒரு முஸ்லிம் அநீதி இழைக்கப்படலாம்;பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படலாம். ஆனால் அந்த இன்னல்களுக்கு பதிலாக அவன் அநீதி இழைப்பவனாக மாறி விடுவதை அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அனுமதி இல்லை.

ஒரு முஸ்லிமிற்கு செய்யப்படக்கூடிய அநீதி அல்லாஹ்விடத்தில் நாளை மறுமையில் மிகப்பெரிய கூலியை பெற்றுத்தருவதற்கு ஏதுவாகவும் சொர்க்கத்தை அடைவதற்கு காரணமாகவும் அமையும்.

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِيْرًا وَّانْتَصَرُوْا مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا  وَسَيَـعْلَمُ الَّذِيْنَ ظَلَمُوْۤا اَىَّ مُنْقَلَبٍ يَّـنْقَلِبُوْنَ‏

(ஆயினும்,) அவர்களில் எவர் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் நிந்தனையால்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினாரோ அவரைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம். பிறரை நிந்தனை செய்து துன்புறுத்திய இந்த) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்துகொள்வார்கள். (அல்குர்ஆன் 26:227)

அநியாயக்காரர்கள் எந்த இடத்திற்கு திரும்ப போகிறார்கள் என்பதை அதிவிரைவில் அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்ற எச்சரிக்கையை அல்லாஹ் கூறுகின்றான்.

ஒப்பந்தம் செய்து சமூகமாக ஒரு நாட்டில் வாழும் போது, அங்கே நமக்கு மத்தியில் இருக்கக்கூடியவர்களை எந்தவித நியாயமும் இல்லாமல், அநியாயமாக  கொல்வதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் அறவே ஏற்றுக்கொள்ளவில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يَرِحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا

யார் ஒருவர் ஒரு நாட்டில் ஒப்பந்தம் செய்துகொண்டு வாழக்கூடிய பிற சமூகத்தை சார்ந்த ஒருவரை கொன்று விடுவாரோ அந்த மனிதர் சொர்க்கத்தின் வாடையை நுகர முடியாது.

அந்த சொர்க்கத்தின் வாடை 40ஆண்டுகள் தூரத்தில் இருந்தால் கூட ஒரு மனிதருக்கு கிடைக்கும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 3166.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒவ்வொரு நபிமொழியும் எவ்வளவு கருத்தாழம் நிறைந்தது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நரகம் செல்வார். சொர்க்கம் செல்ல மாட்டார் என்று கூறவில்லை. ஆனால் சொர்க்கத்தின் வாடையை கூட நுகர மாட்டார்கள் என்று கூறுவதிலிருந்து அந்தப் பாவத்தின் வீரியத்தை உணர்த்தினார்கள்.

40ஆண்டுகள் தொலைவில் இருந்தால் கூட சொர்க்கத்தின் வாடையை நுகர முடியும் என்று இருக்கும் பட்சத்தில் இந்த மனிதர் அவருடைய பாவத்தின் காரணமாக நிரந்தரமாக சொர்க்கத்திலிருந்து விலக்கப்பட்டவராகி விடுகிறார்.

ஒப்பந்தம் செய்து ஒரு சமூகமாக வாழக்கூடிய நிலையில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாற்று சமுதாய மக்களிடையே எப்படிப்பட்டதொரு இணக்கத்தையும் அன்பையும் கடைபிடித்தார்கள் தெரியுமா?

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கின்றார்கள் :

மஸ்ஜிதுன் நபவியில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அமர்ந்திருந்தபோது ஒரு யஹூதி உடைய ஜனாசா அந்த வழியாக சுமந்து செல்லப்பட்டது.

யூதர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான் :

لَـتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا الْيَهُوْدَ

(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! (அல்குர்ஆன் 5:82)

அல்லாஹ்வை ஏழை என்றும் தங்களை பணக்காரர் என்றும் கூறியவர்கள்.(அல்குர்ஆன் 3:181)

وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ  غُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا

"அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது" என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அன்றி, இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். (அல்குர்ஆன் 5:64)

நபிமார்களை கொன்றவர்கள்; நல்லவர்களை கொன்றவர்கள் இப்படி ஏராளமான பழிகளையும் ஏராளமான குற்றங்களையும் தன் மீது சுமந்து கொண்டவர்கள் அந்த யூதர்கள்.

இவ்வாறெல்லாம் இருந்தும் கூட அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

ஒரு சமூகமாக நாம் மதினாவில் வாழ்வோம். எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்கள் உதவிக்கு வர வேண்டும்; உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் உதவிக்கு வருவோம்.

உங்களை யாராவது எதிர்த்து தாக்கினால் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம். எங்களை யாராவது தாக்கினால் நீங்கள் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று இப்படியாக சமாதான ஒப்பந்தம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த சூழ்நிலையில் ஓர் யஹூதியின் ஜனாஸா செல்கிறது.

இவர்கள் கொள்கையில் முரண்பட்டவர்கள் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் யோசிக்கவில்லை. அவர்களுக்குரிய தண்டனையை அல்லாஹ் கொடுப்பான். ஒரு மனிதனுக்கு தண்டனை கொடுக்கக்கூடிய உரிமை அவனுக்குரியது . உமக்கும் எமக்கும் அல்ல.

فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ

(ஆகவே, நபியே!) இவைகளை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவைகளை படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீங்கள் கூறி) நல்லுபதேசம் செய்வீராக!  (இவைகளைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனென்றால்,) நீங்கள் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான். (அல்குர்ஆன் 88:21)

لَسْتَ عَلَيْهِمْ بِمُصَيْطِرٍ

(அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல. (அல்குர்ஆன் 88:22)

إِلَّا مَنْ تَوَلَّى وَكَفَرَ

எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கின்றார்களோ,(அல்குர்ஆன் 88:23)

فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ

அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான். (அல்குர்ஆன் 88:24)

إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ

நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம் வர வேண்டியதிருக்கின்றது.(அல்குர்ஆன் 88 : 25)

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ

நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் நமது கடமையாகவே இருக்கின்றது.(அல்குர்ஆன் 88 : 26)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு யஹுதியின் ஜனாஸா செல்கிறது.

யார் இறை நிராகரிப்பு செய்த நிலையில் மரணித்து விடுவாரோ அவர் கண்டிப்பாக நரகம் செல்வார் என்று குர்ஆன் அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.

இதுவே நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களுடைய கூற்றுமாகும்.

அவர் நரகவாதியாக இருப்பதால் சமூகத்தில் அவர் ஓர் சக மனிதராக இருக்கும் நிலையில் அவருடைய உறவுக்காரர்கள் மனவேதனையில் இருக்கக்கூடிய நிலையை உணர்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பகுதியின் ஜனாஸாவை பார்த்து எழுந்து நின்றார்கள்.

சமூகம் சமுதாயம் கூட்டு வாழ்க்கை என்று வந்தவுடன் மாற்றுமத மக்களுடைய உணர்வுகளையும் அவர்களுடைய மானம் மரியாதையையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு பேணினார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இன்று நமது சமுதாய மக்களுக்கு மார்க்கப்பற்று என்று வந்துவிட்டால் அடுத்து அவர்களுடைய உள்ளத்தில் வருவதே பிற சமூக மக்களை வெறுக்க வேண்டும் என்று எண்ணுவது ஒரு வகையினர்.

மற்றொரு வகையினர் அவர்களோடு இணக்கமாக வாழ வேண்டும் என்று வந்தால் மாற்று சமூக கலாச்சாரதில் நாமும் மூழ்கி கரைந்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்த இரண்டுமே நம் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒரு நிலைப்பாடு. இவர்களோடு இணக்கமாக வாழ வேண்டும் என்பதற்காக நாம் அவர்களது கலாச்சாரத்தை பின்பற்றி வாழ வேண்டும் என்பதாக கிடையாது.

நாம் எந்த சூழ்நிலையிலும் நமது மார்க்க வழிமுறைகளுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலோடு குர்ஆன் சுன்னாவின் படி உறுதியான அகீதாவின் படி நம்முடைய ஆடை அலங்காரங்களோடு வாழக்கூடிய அதேநேரத்தில் மாற்று சமூக மக்களுக்கு என்ன உதவிகள் தேவைப்படுகிறதோ அதை நாம் செய்வோம்.

அவர்களுக்குரிய கடமையையும் பொறுப்பையும் நாம் நிறைவேற்றுவோம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாற்று சமூக மக்களுடன் எத்தகைய இணக்கத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தினார்களோ அதை நாம் தவறாமல் நிறைவேற்றுவோம்.

அல்லாஹ் கூறுகிறான் :

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ

(நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 60:8)

எப்படிப்பட்ட அழுத்தமான திருத்தமான வழிகாட்டுதல் பாருங்கள்.

இந்த யூதரின் ஜனாசாவை பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எழுந்ததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

இதைப்பார்த்து நபித்தோழர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்கிறார்கள்:

அல்லாஹ்வுடைய தூதரே! இது ஒரு யூதனின் ஜனாஸா ஆயிற்றே! நீங்கள் அதற்காக எழுந்து நிற்கிறீர்களே? என்று.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அறிவிப்பில் கூறினார்கள்:

ஜனாஸா யாருடைய ஜனாஸாவாக இருந்தாலும் சரி, அந்த ஜனாஸா உங்களை கடந்து செல்லும் போது நீங்கள் எழுந்து நில்லுங்கள்.

மற்றொரு அறிவிப்பில், நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

அதுவும் அல்லாஹ் படைத்த ஆன்மாவில் ஒன்றுதானே என்பதாக. (1)

அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 1311.

ரப்புல் ஆலமீன் இப்படித்தான் நமக்கு வழிகாட்டுகின்றான்:

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ

ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். (அல்குர்ஆன் 17 : 70)

இந்த வசனத்திற்கு அறிஞர்கள், இந்த உலக வாழ்க்கையை பொறுத்தவரை ஆதமின் சந்ததிகள் என்று வரும்பொழுது இவ்வுலக மக்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தி இருக்கிறான்.

அவர்களில் முஃமின்களும் இருப்பார்கள் முஃமின் அல்லாதவர்களும் இருப்பார்கள்.

அனைவரையும் சேர்த்து தான் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் என்று விளக்கம் கூறுகிறார்கள்.

சில நேரங்களில் ஒரு சமூகமாக வாழும் பொழுது முஸ்லிமல்லாதவர்களால் நமக்கு கண்டிப்பாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம்.

நமது உள்ளங்களை நோவினை செய்யும் விதமாக துன்புறுத்தும் விதமாக வார்த்தைகளோ செயல்களோ அவர்களால் ஏற்படலாம்.

இவ்வாறு கண்டிப்பாக நடக்கும் என்று தெரிந்து தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எப்பேற்ப்பட்ட வழிகாட்டுதலை நமக்கு கூறியிருக்கிறான் பாருங்கள்.

ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ السَّيِّئَةَ نَحْنُ أَعْلَمُ بِمَا يَصِفُونَ

(நபியே!) தீமையை மிக அழகியதைக் கொண்டே நீங்கள் தடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் (உங்களைப் பற்றிக்) கூறுவதை நாம் நன்கறிவோம். (அல்குர்ஆன் 23:96)

வசனத்தின் கருத்து : அவர்கள் அல்லாஹ்வை எப்படி திட்டுகிறார்கள்? உங்களை எப்படி திட்டுகிறார்கள்? மூஃமின்களுக்கு எப்படி மத மனவேதனை கொடுக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

இருப்பினும் நபியே! நீங்கள் அவர்கள் செய்த அந்த தீய பேச்சுகளுக்கு பதிலாக நீங்களும் தீய வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்! அவற்றை அழகிய வார்த்தைகளையும் செயல்களையும் கொண்டு தடுத்து விடுங்கள்.

அல்லாஹ்வுடைய தூதரை ஏசுவதை விடவா மிகப்பெரிய பாவம் இந்த உலகத்தில் இருக்க முடியும்?!

அடுத்து அல்லாஹ் சொல்கிறான் :

وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறாயின், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்கள். (அல்குர்ஆன் 41:34)

وَمَا يُلَقَّاهَا إِلَّا الَّذِينَ صَبَرُوا وَمَا يُلَقَّاهَا إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ

பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி, பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்ஆன் 41:35)

ஒருவர் நம்மை ஏசுகிறார், நமது நபியை ஏசுகிறார், நமது மார்க்கத்தை ஏசுகிறார், நமக்கு மனவேதனையை கொடுக்கிறார் இருந்தும் அவரிடம் நல்ல வார்த்தைகளை பேசி அவருடைய தீமையை நுட்பமான நல்ல விதமான அணுகுமுறைகளைக் கொண்டு எதிர்ப்பது, பதில் கொடுப்பது என்பதற்கு எவ்வளவு பெரிய பக்குவம் இருக்க வேண்டும்.

இது சிரமம் தான். இது மிகப்பெரிய போராட்டம் தான். அவன் நம்மை திட்டுவான். ஆனால் நாம் அவனுக்கு பொறுமையாக மறுப்பு கூற வேண்டும்.

எனவே தான் அல்லாஹ் கூறுகிறான்:

இவ்வாறு நடந்து கொள்வது பொறுமையாளர்களுக்கு மட்டும்தான் சாத்தியம்.

மிகப்பெரிய இறை பாக்கியவானுக்கு மட்டுமே உரித்தான பண்பு.

அவர்களால்தான் இத்தகைய அணுகுமுறையை கையாள முடியும்.

குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தக்வா உடையவர்கள் இதை செய்வார்கள் என்று கூறுவான்.

அதற்கு என்ன அர்த்தம்? தக்வா என்னிடமில்லை அப்போது அது எனக்காக சொல்லப்பட்டதில்லை என்று அர்த்தம் கொள்ள முடியுமா? முடியாது.

அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் நல்லவர்கள் இதை செய்வார்கள் என்று சொல்வான்.

அதற்கு என்ன அர்த்தம்? நான் நல்லவன் இல்லை, என்னால் இதை செய்ய முடியாது என்று கூறுவதா? இல்லை.

அல்லாஹ் அப்படி சொல்லும் பொழுது நாம் என்ன செய்யவேண்டும்?

யா அல்லாஹ்! என்னையும் நல்லவனாக ஆக்கு. நானும் இதை செய்வதற்கு ஆற்றல் உடையவனாக மாற்று என்று நாம் உறுதி எடுத்து அவனிடம் துஆ செய்ய வேண்டும். இதையே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்க்கிறான்.

ரப்புல் ஆலமீன் சொல்லக்கூடிய அந்த சட்டங்களை கவனியுங்கள்.

சூரத்துல் பகரா உடைய 82-வது வசனத்தை படித்துப் பாருங்கள்; அதில் தொழுகை ஸக்காத் இன்னும் பல கடமைகள் இருக்கின்றன.

அல்லாஹு ரப்புல் ஆலமீனோ அந்தக் கடமைகளை எல்லாம் இரண்டாவதாக கூறி அந்தக் கடமைகளுக்கெல்லாம் முன்பாக ஒரு கடமையை சொல்கிறான் :

وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا

அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (அழகிய வார்த்தை சொல்லுங்கள்). (அல்குர்ஆன் 2:83)

குர்ஆனில் பொதுவாக எப்போது மக்கள் என்று சொல்லப்படுகிறதோ அப்போது இஸ்லாமிற்கு வெளியில் உள்ளவர்களை அல்லாஹ் கூறுவான்.

முஸ்லிம்களை அல்லாஹ் அழைக்கும்போது நம்பிக்கையாளர்களே! ஈமான் கொண்டவர்களே! என்னுடைய அடியார்களே! என்று அழைப்பான்.

பிற மக்களிடத்தில் நீங்கள் உரையாடும்போது அழகிய வார்த்தைகளைக் கொண்டு உரையாடுங்கள் என்று கூறிவிட்டு, தொழுகையை நிலை நிறுத்துங்கள் ஜகாத்தை நிறைவேற்றுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இன்று முஸ்லிமுடைய நிலைகளில் சில மனிதர்களுடைய நிலைப்பாட்டை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு மனிதன் தனது வாகனத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று வேகமாக வருகிறான். அங்கு வழியில் முஸ்லிம் அல்லாத ஒருவர் இடையூறாக தனது வாகனத்தையோ அல்லது வேறு விதமாக வழியை இடைமறித்து நிற்கிறார். அப்பொழுது அந்த மனிதரிடம் எவ்வளவு அழகான ஒரு வார்த்தையை கொண்டு பேசலாம்.

ஆனால் இவனுடைய நிலைப்பாடோ எந்த ஒரு பேச்சாக இருந்தாலும் அதன் தொடக்கமே ஒரு கடினமான வார்த்தைகளோடு மிக இறுகிய முகத்தோடு இருக்கும்.

அந்த நேரத்தில்ம், நான் பள்ளிக்கு செல்ல வேண்டும்; சிறிது வழி விடுகிறீர்களா? என்று கேட்டால் எவ்வளவு மென்மையாக இருக்கும்.

அதற்கு மாறாக கடுமையாக பேசும்பொழுது அங்கே ஷைத்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மக்களுக்கு மத்தியில் இதுபோன்ற சண்டை சச்சரவுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஷைத்தான் காத்துக் கொண்டிருக்கிறான்.

وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنْزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنْسَانِ عَدُوًّا مُبِينًا

(நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என்னுடைய அடியார்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதல் செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.) (அல்குர்ஆன் 17:53)

எத்தனையோ பிரச்சனைகளுக்கும் கலவரங்களுக்கும் ஒரு சிறு வார்த்தை தான் காரணமாக அமைகிறது என்பதை மக்கள் உணர வேண்டும் .

காஃபிர்கள் நமது உணர்வுகளை புண்படுத்தி நமது உள்ளத்தை காயப்படுத்தும் போது அவர்களிடத்தில் நாம் எவ்வாறு பேச வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான் தெரியுமா?

அல்லாஹ் அவனுடைய அடியார்களின் பண்புகளைப் பற்றி கூறுகிறான் :

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا

இவர்கள்தாம், ரஹ்மானுடைய அடியார்கள்: பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் "ஸலாமுன்" என்று கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள். (அல்குர்ஆன் 25:63)

ரஹ்மானுடைய அடியார்கள் யார் தெரியுமா?

அவர்கள் எப்போதும் பணிந்தவர்களாகவே இருப்பார்கள். பணிந்தவர்கள் எல்லாம் சளைத்தவர்கள் அல்ல.

•              நீங்கள் பணியும் பொழுது அல்லாஹ் உங்களை நேசிக்கிறான்.

•              நீங்கள் விட்டுக் கொடுக்கும் பொழுது அல்லாஹ் உங்கள் கண்ணியத்தை உயர்த்துகிறான்.

•              உங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை அல்லாஹ் செய்வான். மூஃமின்கள் பணிவாக இருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

குர்ஆனில் முஸ்லிம் அல்லாதவர்களை சிலை வணங்கிகளை அல்லாஹ்வை வணங்க மறுத்தவர்களை அல்லாஹ் ஜாஹில் என்று கூறுவான்.

முஸ்லிமல்லாதவர்களிலும் நம்மோடு இணக்கமாக வாழ்பவர்கள் நம்மை மதிப்பவர்கள் இருப்பார்கள்.

சிலர் நம் மீது குரோதம் உள்ளவர்கள், நம்மை வெறுப்பேற்றி புண்படுத்தி நமது உணர்வுகளை தூண்ட வேண்டும் என்று இருப்பார்கள்.

அவர்களை குறித்து தான் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்.

ஜாஹில்கள் -அறியாத மக்கள் உங்களிடத்தில் வந்து அல்லாஹ்வைப் பற்றி பேசினால் "ஸலாமா" -அல்லாஹ் உன்னை பாதுகாக்கட்டும்! இத்தகைய குழப்பம் செய்வதிலிருந்து சண்டை சச்சரவை ஏற்படுத்துவதில் இருந்து இறைநிராகரிப்பை விரும்பக்கூடிய ஷைத்தானை விட்டு உன்னையும் என்னை பாதுகாப்பானாக!

உனது தீமையிலிருந்து அல்லாஹ் என்னை பாதுகாப்பானாக!

உனக்கும் எனக்கும் இடையே ஸலாமத் பாதுகாப்பை ஏற்படுத்துவானாக!

இணக்கத்தை ஏற்படுத்துவானாக! என்று கூறிவிட்டு அவர் விலகிச் சென்று விடுவார்.

இதையே அல்லாஹ் கூறுகிறான்.

ஷைத்தானும்  நமக்கு ஒரு வழி காட்டுகின்றான். ஆனால் அல்லாஹ்வும் நமக்கு ஒரு வழி காட்டுகின்றான். இப்பொழுது யாருடைய வழியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்?

எந்த வழியை தேர்ந்தெடுத்து நாம் பின்பற்றினால் அல்லாஹு தஆலா நமக்கு நிம்மதியையும் அருளையும் அளிப்பான் என்று யோசித்து பாருங்கள் :

أُولَئِكَ يُؤْتَوْنَ أَجْرَهُمْ مَرَّتَيْنِ بِمَا صَبَرُوا وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ

இத்தகையவர் உறுதியாக இருந்ததன் காரணத்தால், இரண்டு தடவைகள் அவர்களுக்கு (நற்) கூலி கொடுக்கப்படும். இத்தகைய வர்கள், தீய காரியங்களை நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவைகளில் இருந்து அவர்கள் தானமும் செய்வார்கள். (அல்குர்ஆன் 28:54)

وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ

அன்றி, அவர்கள் வீணான வார்த்தைகளைக் கேள்வியுற்றால் (அதில் சம்பந்தப்படாது) அதனைப் புறக்கணித்து விட்டு "எங்களுடைய காரியங்கள் எங்களுக்கும் உங்களுடைய காரியங்கள் உங்களுக்கும் (பெரியது) உங்களுக்கு ஸலாம்! அறியாதவர்களிடம் நாங்கள் (தர்க்கிக்க) விரும்புவதில்லை" என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 28:55)

மூஃமின்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தீமைகளை நல்ல வார்த்தைகளைக் கொண்டு தடுப்பார்கள்.

இன்று, ஃபேஸ்புக்கில் ஷோசியல் மீடியாவில் அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் இவர்கள் நூறு வார்த்தை பதிலுக்கு தீயதை பேசுவார்கள் என்பதாக சில அறியாத மக்கள் செய்து வருகிறார்கள்.

இன்று நம்மை சார்ந்த மக்களும் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அடிமையாகிவிட்டார்கள் என்பதைப் பார்க்கிறோம்.

அறியாத மக்களிடமிருந்து வீணான வார்த்தைகளை செவியுற்றால் அதை கண்டு கொள்ளாமல் மூஃமின்கள் புறக்கணித்து சென்றுவிடுவார்கள்.

இன்று முஸ்லிம்கள் மனநிலை எப்படி இருக்கிறது பாருங்கள்.

அவன் எங்கோ ஓரிடத்தில் கூறி இருப்பான். அங்கேயே அது முடிந்து விட்டிருக்கும். ஆனால் நமது மக்களோ அதை விடாது இவர்கள் எடுத்து தொடர்ந்து அதை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நாட்டில் இப்படி நடந்துவிட்டது; இந்து பத்திரிகையில் இப்படி எழுதி விட்டார்கள் என்று எங்கோ நடந்த செய்திகளை நம் மக்கள் தேடி துருவி விசாரித்து பார்த்து இங்கு தங்களுக்கிடையே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் அந்த மூஃமின்கள் சொல்வார்கள் : எங்களுடைய அமல் எங்களுக்கு. உங்களுடைய அமல் உங்களுக்கு என்று கூறி ஸலாம் உண்டாகட்டும்!

ஷைத்தானின் சேட்டைகளில் இருந்து அல்லாஹ் உங்களையும் எங்களையும் பாதுகாக்கட்டும்! உங்களிடம் சண்டை செய்வதிலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாக்கட்டும்! அறியாத மக்களிடத்தில் சச்சரவு செய்வதற்கு கூட நாங்கள் விரும்பவில்லை என்று கூறி அந்த முஸ்லிம்கள் விலகிச் சென்று விடுவார்கள் என்று ஒழுக்கத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு கற்றுத் தருகிறான்.

ஆகவே வரக்கூடிய காலங்கள் எப்படி இருக்கும் என்பதை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நமது சமூகத்திற்கு இன்று மிக தேவையான அறிவுரை, மாற்று சமூகத்திடையே இணக்கமான சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்வது.

விஷமிகள் குழப்பம் விளைவிப்பவர்கள் நமக்கிடையே இருக்கலாம். அவர்களிடையே ஞானத்தைக் கொண்டு அறிஞர்களைக் கொண்டு எப்படிப்பட்ட அறிவுரைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்? எப்படி அவர்களுடன் நாம் பாதுகாப்பாக வாழ வேண்டும்? என்பதை அறிந்து வாழ வேண்டும்.

வாலிபர்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக சில தனிமனிதர்களின் விருப்பத்திற்காக வாலிபர்களை பயன்படுத்திக் கொள்வதை இந்த இஸ்லாமிய சமுதாயம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

எந்த வீணான காரியங்களிலும் தீய செயல்களிலும் வாலிபர்கள் ஈடுபடுவதை விட்டு அல்லாஹ் நம்மையும் நமது சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும்.

அல்லாஹு தஆலா நமது உணர்வுகளை கட்டுப்படுத்தி அல்லாஹ்விற்கு அடிமைகளாக வாழ வைக்க வேண்டும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமது வணக்க வழிபாடுகளை ஏற்றுக்கொள்வது, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நாம் முழுமையாக பின்பற்றும் போதுதான்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் ஷைத்தானுக்கும் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் நாம் அடிமைகளாக ஆளாகி விடக்கூடாது. அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக பணிந்தவர்களாக ஆகிவிடக்கூடாது

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவன் விரும்பிய வழியில் நமது உணர்வுகளை ஆக்கி குர்ஆனின் வழிகாட்டுதலின் படி குர்ஆனின் கட்டளைகளை பின்பற்றி வாழக்கூடிய மக்களாக சுன்னாவைப் பேணிப் பாதுகாக்க கூடியவர்களாக என்னையும் உங்களையும் ஆக்கியருள வேண்டும்.

அல்லாஹு தஆலா நமது சமுதாய மக்களை ஆண்களை பெண்களை வாலிபர்களை மிக நேரிய வழியில் வழிநடத்த வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் வழிகேடர்களின் சிந்தனைக்கும் குழப்பவாதிகளின் வழிகாட்டுதலுக்கும் ஆளாகி அவர்கள் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் நஷ்டவாளிகள் ஆகிவிடக்கூடாது.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம்மை பாதுகாத்து அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَرَّ بِنَا جَنَازَةٌ فَقَامَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقُمْنَا بِهِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ قَالَ إِذَا رَأَيْتُمْ الْجِنَازَةَ فَقُومُوا (صحيح البخاري 1228 -)

حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى قَالَ كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ فَمَرُّوا عَلَيْهِمَا بِجَنَازَةٍ فَقَامَا فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ أَيْ مِنْ أَهْلِ الذِّمَّةِ فَقَالَا إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ فَقَالَ أَلَيْسَتْ نَفْسًا وَقَالَ أَبُو حَمْزَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ عَمْرٍو عَنْ ابْنِ أَبِي لَيْلَى قَالَ كُنْتُ مَعَ قَيْسٍ وَسَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَا كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ زَكَرِيَّاءُ عَنْ الشَّعْبِيِّ عَنْ ابْنِ أَبِي لَيْلَى كَانَ أَبُو مَسْعُودٍ وَقَيْسٌ يَقُومَانِ لِلْجَنَازَةِ (صحيح البخاري 1229 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/