கடன் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! | Tamil Bayan - 541
بسم الله الرحمن الرّحيم
கடன் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய ஹக்குகளையும் அடியார்களுடைய ஹக்குளையும், அல்லாஹ்வுடைய கடமைகளையும் அடியார்களுடைய கடமைகளையும் சரியாக நிறைவேற்றி நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் பொழுது குற்றங்கள் அற்றவர்களாக, உரிமைகளை பறிக்காதவர்களாக,
பிறருடைய ஹக்குகளையும் அவர்களுடைய கடமைகளையும் சரிவர நிறைவேற்றி, அல்லாஹ்வும் பொருந்திக் கொண்ட நிலையில் அல்லாஹ்வுடைய அடியார்களும் நம்மை பொருந்திக் கொண்ட நிலையில் அல்லாஹ் என்னையும் உங்களையும் சொர்க்கத்தில் சேர்த்தருள்வானாக! ஆமீன்!
இன்று நமது அன்றாட வாழ்க்கையில் நாம் நடந்து கொள்கின்ற ஒரு முக்கியமான செயல்பாட்டைப் பற்றி குர்ஆன் ஹதீஸ் உடைய வெளிச்சத்தில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
இந்த உலக வாழ்க்கையில் ஒரு பக்கம் அல்லாஹ்வுடைய ஹக்குகளை (கடமைகளை) நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற அல்லாஹு தஆலா நம்மீது விதியாக்கி இருக்கக்கூடிய வணக்க வழிபாடுகளை சரிவர செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் நம்மீது இருக்கிறது.
அதுபோன்றுதான் அல்லாஹு ஸுப்ஹானஹுதஆலா, சமுதாயமாக ஒரு கூட்டு வாழ்க்கையாக வாழுகின்ற ஒரு அமைப்பை தான் மனிதர்களுக்கு கொடுத்திருக்கின்றான்.
இந்தக் கூட்டு வாழ்க்கையில் ஒருவருக்கு மற்றவர் மீது உரிமைகளும் கடமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன. பெற்றோருக்கு தங்களது பிள்ளைகளின் விஷயத்தில் பொறுப்புகளும் கடமைகளும் இருக்கின்றன .
அதுபோன்றுதான் தங்களுடைய பெற்றோர்கள் விஷயத்தில் பிள்ளைகளுக்கும் பொறுப்புகளும் கடமைகளும் இருக்கின்றன.
கணவனுக்கு மனைவியின் மீதும் மனைவிக்கு கணவன் மீதும், நண்பர்களுக்கு நண்பர்களின் மீதும்இப்படியாக அடியார்களுடைய கடமைகளும் பொறுப்புகளும் சூழப்பட்டுதான் மனித சமூகம் சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு சில சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. அந்த சூழ்நிலைகளில் நாம் பிறரிடம் உதவி தேட வேண்டிய நிலை ஏற்படுகின்றன. பிறர் மூலமாக நமக்கு ஏதாவது பொருளாதார உதவிகள் பெற வேண்டிய நிலை ஏற்படுகின்றது
கடன் மூலமாகவோ, அமானிதமாக அல்லது வியாபாரத்திற்கு முதலீடாகவும் பிறரிடமிருந்து நாம் உதவிகளை பெற வேண்டிய நிலை இருக்கின்றது.
அல்லாஹ்வுடைய மார்க்கம் ஒவ்வொரு விஷயத்திற்கும் நமக்கு துல்லியமாக வழிகாட்டி இருக்கிறது. இதற்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாக வழிகாட்டுதலை கொடுத்திருக்கின்றார்கள்.
அன்பளிப்பு பெறுவது, அல்லது ஏழையாக இருந்தால் தர்மத்தை பெறுவது அல்லது ஜகாத்தை பெறுவது, இது அவருக்கு ஹலாலான ஒன்று.
தனக்குத் தகுதி இல்லாமல் பிறரிடத்தில் கையேந்தி யாசகம் பெறுவது, இது இம்மையிலும் மறுமையிலும் மிகப்பெரும் கேவலமான ஒன்று.
யார் உடல் நலத்தோடு இருந்து, சம்பாதிப்பதற்கு உடல் வலிமை இருந்தும் சம்பாதிக்காமல் பிறரிடம் யாசகம் வாங்கி வாழ்க்கை நடத்தினானோ, நாளை மறுமையில் வரும்போது முகத்தில் சதை இல்லாமல் விகாரமான தோற்றத்தோடு மறுமையில் வருவான். (1)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 1626,தரம் : ஸஹீஹ் (அல்பானி)
ஒரு மனிதன் பிறரிடத்தில் கடன் பெறுகிறான், நிறைய செல்வங்களை அமானிதமாக வாங்கிக் கொள்கிறான், இது அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் மிக மிக எச்சரித்து சொல்லியிருக்ககூடிய நிலை.
யார் ஒரு மனிதர் அடியார்களுடைய பொருள்களோடு செல்வங்களோடு அமானிதத்தோடு நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் உயர்வும் சிறப்பும் இருக்கிறது.
யார் அடியார்களுடைய செல்வத்தை பெறும் போது அதற்குரிய அவசியமான தேவை இருந்து அதை உண்மையில் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு,அதில் எந்தவிதமான பொய்யை மோசடியை கலக்க விடாமல் வாங்குவார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வான்.
யாருடைய எண்ணத்தில் குறை இருக்குமோ,அந்த செல்வங்களை வாங்கும்போது அவருக்கு நாம் இதை ஏன் கொடுக்கவேண்டும், திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணத்தில் கோளாறு இருக்குமோ அல்லாஹுத்தஆலா அவர்களை அப்படியே சோதிக்க செய்வான்என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
«مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ»
ஒரு மனிதன் மக்களுடைய செல்வத்தை தனது தேவைக்காக வாங்குகிறார். வாங்கும் போது அவருக்கு உள்ளத்தில் நல்ல எண்ணம் இருக்கிறது. இதை நான் அவர்களுக்கு அவரிடமிருந்து பெற்ற படி அழகிய முறையில் கொடுக்க வேண்டும் என்று. கண்டிப்பாக இந்த மனிதன் சார்பாக அல்லாஹு தஆலா அவர் வாங்கிய செல்வத்தை நிறைவேற்றுவான். அதற்குரிய உதவியை அல்லாஹ் செய்வான்.
எந்த ஒரு மனிதன் அதை வாங்கும் போதே கொடுக்கக்கூடாது, அதை வீணாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்குவாரோ, அல்லாஹ் அந்த மனிதனை வீணாக்கிவிடுவான்; மனிதனை நாசமாக்கிவிடுவான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 2387.
இந்த ஹதீஸ் ஒரு முஸ்லிமுக்கு பெரிய எச்சரிக்கை தருகிறது. சாதாரணமான விஷயம் அல்ல.
கடன் என்பது அல்லது மக்களிடமிருந்து நாம் வாங்கக்கூடிய செல்வம் என்பது மறுமையை பொருத்தவரை சிறிய அளவில் நடுத்தரமான அளவில் பெரிய பெரிய அளவில் என்று பார்க்கப்படாது.
நாம் மக்களிடம் இருந்து அவர்களுக்கு அல்லாஹ் சொந்தமாக்கியதை நாம் அவர்களிடமிருந்து பெறுகிறோம்கடனின் பெயரால், வியாபாரத்தின் பெயரால் இன்னும் பிற தேவைகளின் பெயரால்.
அதை உங்களுக்கு நான் சரியான முறையில் கேட்கின்ற நேரத்தில் திருப்பி கொடுப்பேன் என்று கூறி வாங்க கூடிய செல்வம் அது.
அதன் அளவு அல்லாஹ்விடத்தில் பார்க்கப்படாது. ஒரு தீனார், இரண்டு தினார், ஒரு ரூபாய், 10ரூபாய், 100ரூபாய், லட்சம், கோடி என்று பார்க்கப்படாது. அது ஒரு சிறிய அளவு காசாக வாங்கப்பட்டு இருந்தாலும் சரி.
இதுதான் அல்லாஹ்வுடைய சட்டம்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகப்பெரிய ஒரு எச்சரிக்கையை கூறினார்கள்.
நாளை ஒரு மனிதனுடைய எல்லா காரியங்களும் மறுமையில் முடிக்கப்பட்டு சொர்க்கத்திற்குச் செல்லுவதற்காக அனுமதிக்கப்பட்டு, சிராத்தை நெருங்கக் கூடிய நேரத்தில், அல்லாஹு தஆலா அந்த அடியானை நிறுத்தி வைக்கும்படி மலக்குகளுக்கு கட்டளையிடுவான்.
அந்த அடியான் கூறுவான்: என்னிடத்தில் அமல்கள் இபாதத்கள் எவ்வளவோ நல்ல காரியங்கள் இருந்தன.
மலக்குகள் கூறுவார்கள்:
«وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ»
இந்த அடியானிடமிருந்து அவருடைய அனுமதி இல்லாமல் நீ எடுத்த ஒரு மிஸ்வாக் குச்சி, அது திருப்பித் தரப்படவில்லை, அதனுடைய கிரையம் ஒப்படைக்கப்படவில்லை என்பதாக.அதற்காக அந்த அடியான் நிறுத்தி வைக்கப்பட்டு விடுவான்.
அந்த அடியான் பிறரிடமிருந்து பெற்றது ஒரு அராத் மரத்திலான மிஸ்வாக் குச்சியாக இருந்தாலும் சரி.(2)
அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 137.
இன்றைய மதிப்புக்கு ஐந்து ரூபாய் மதிப்புள்ள பல் விலக்கக்கூடிய குச்சி.
அதைப் பிறரிடம் இருந்து பெற்று அதற்குப் பிறகு அதை ஹலாலாக்கி கொள்ளவில்லை என்றால், அவரால் சொர்க்கம் செல்ல முடியாது.
அடியார்களுடைய உரிமைகளில், அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய செல்வங்களில் எவ்வளவு பேணுதலோடு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் ஒருமுறை கூறினார்கள்:
«أَنَّ الْجِهَادَ فِي سَبِيلِ اللهِ، وَالْإِيمَانَ بِاللهِ أَفْضَلُ الْأَعْمَالِ»
அல்லாஹ்வை ஈமான் கொள்வதும் அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்வதும் அமல்களில் சிறந்த அமல்.
உடனே ஒரு மனிதர் எழுந்து,அல்லாஹ்வின் தூதரே!அல்லாஹ்வின் பாதையில் நான் கொல்லப்பட்டால் என்னுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா?என்று கேட்டார்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் சொன்னார்கள்:
ஆம்.அல்லாஹ்வுடைய பாதையில் நீ பொறுமையாக இருந்து,நன்மையை எதிர்பார்த்து,போரை முன் நோக்கி சென்றவனாக போரிலிருந்து பின் வாங்காத நிலையில் கொல்லப்பட்டால் கண்டிப்பாக உனது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் கொஞ்சம் உஷாராகி விட்டார்கள். அந்த மனிதருடைய கேள்வியை நன்கு கவனம் செலுத்தினார்கள்.நீங்கள் என்ன கேள்வி கேட்கிறீர்கள்?
அதற்கு அந்த மனிதர்,அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன கேட்டேன் என்றால், அல்லாஹ்வின் பாதையில் நான் கொல்லப்பட்டால் எனது பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விடுமா?என்று.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் சொன்னார்கள்:
ஆம். அல்லாஹ்வுடைய பாதையில் நீ பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்த்து அவனாக போரை முன்னோக்கி சென்று அவனாக போரில் இருந்து பின் வாங்காத நிலையில் நீ கொல்லப்பட்டால் உனது பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விடும், ஆனால் கடனைத் தவிர. பிறருக்கு நீ கொடுக்க வேண்டிய செல்வத்தைத் தவிர. (3)
அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1885.
இஸ்லாமிய மார்க்கத்தில் நபிமார்களுக்கு அடுத்ததாக, சித்தீக் என்ற நபிமார்களுடைய உண்மையான உற்ற தோழர்களுக்கு அடுத்ததாக, ஷஹீது என்ற அந்தஸ்தை தவிர வேறு அந்தஸ்து கிடையாது.
உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான இறைநேசர்கள் வணக்கசாலிகள் ஒன்று சேர்ந்தாலும் கூட ஒரு சாதாரண ஷஹீதுடைய அந்தஸ்தை அவர்களால் அடையவே முடியாது.
அவர் இறந்தால் அவருடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும். அவருடைய கடனைத் தவிர, (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
எவ்வளவு பெரிய எச்சரிக்கை பாருங்கள்!
மேலும் ஒரு ஹதீஸை இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள்:
«يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلَّا الدَّيْنَ»
ஒரு ஷஹீத் உடைய எல்லா பாவங்களும், அவன் எத்தகைய பெரிய பாவங்களை அல்லாஹ்வுடைய ஹக்கில் செய்திருந்தாலும் சரி, அவன் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக தன்னுடைய உயிரைக் கொடுத்தான், தான் கொல்லப்படுவதை திருப்தியோடு ஏற்றுக் கொண்டான், என்பதற்காக அல்லாஹுத்தஆலா அந்த அடியானுடைய எல்லா பாவங்களையும் மன்னிக்கிறான். ஆனால் அவனுடைய கடனை தவிர, பிறரிடம் அவர் வாங்கிய அந்த ஹக்கை தவிர.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1886.
நாளை மறுமையில் யாரிடமிருந்து அவர் செல்வங்களைப் பெற்றுக் கொண்டாரோ அவர் அந்த மனிதரை பொருந்திக் கொள்ளாதவரை, அவர் இந்த மனிதரை நரகத்திலிருந்து விடுவிக்காதவரை அல்லாஹுத்தஆலா இந்த அடியானை மன்னிக்க மாட்டான், நரகத்தில் இருந்து விடுவிக்க மாட்டான்.
இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கின்றார்கள்:
நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அவர்களுடைய மஸ்ஜிதில் ஜனாசா தொழுகை நடக்கும் அந்த திண்ணையில் உட்கார்ந்து இருந்தோம்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வானத்தை நோக்கி பலமுறை பார்த்தார்கள்;பிறகு தரையைப் பார்த்தார்கள்.
பிறகு பார்த்தார்கள், பிறகு தரையைப் பார்த்தார்கள் பிறகு தனது கையை நெற்றியில் வைத்துக் கொண்டார்கள்.
பிறகு சொன்னார்கள் :
சுபஹானல்லாஹ்! சுபஹானல்லாஹ்! இவ்வளவு கடுமையான சட்டம் எச்சரிக்கை எனக்கு கொடுக்கப்பட்டு விட்டதே! என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
சஹாபாக்களுக்கு கேட்க பயமாக இருந்தது. எனவே அந்த நாள் முழுக்க நாங்கள் வாய் மூடி அமைதியாக இருந்தோம்.
அன்றிரவு இரவிலும் மக்ரிபிலும் இஷாவிலும் அல்லாஹ்வுடைய தூதரை சந்தித்தபோதும் கூட கேட்க எங்களுக்குத் துணிவு வரவில்லை. அமைதியாக இருந்தோம்.
ஏதோ பயங்கரமான ஒரு பிரச்சனை.அதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் இப்படி கூறியிருக்கிறார்கள். எனவேதான் அதை நமக்கு வெளிப்படுத்தவில்லை. எனவே இந்த செய்தி நமக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்காது, ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும் என்று நாங்கள் பயந்தோம்.
இந்த ஹதீஸை அறிவிக்கக்கூடிய சஹாபி அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள்:
அல்லாஹ்வின் தூதரே! அப்படி என்ன கடுமையான எச்சரிக்கை சட்டம் உங்கள் மீது இறக்கப்பட்டது? என்று.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள்:
«فِي الدَّيْنِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّ رَجُلًا قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ عَاشَ، ثُمَّ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ عَاشَ، ثُمَّ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ عَاشَ وَعَلَيْهِ دَيْنٌ مَا دَخَلَ الْجَنَّةَ حَتَّى يَقْضِيَ دَيْنَهُ»
தோழரே!அதுதான் கடன் உடைய விஷயத்தில் அல்லாஹ்வுடைய சட்டம் என்று கூறினார்கள்.
முஹம்மதுடைய ஆன்மா யாருடைய கரத்தில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக,ஒரு மனிதர் அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டால்,அவருக்கு பிறகு உயிர் கொடுக்கப்படுகிறது. பிறகு அவர் கொல்லப்படுகிறார், பிறகு அவருக்கு உயிர் கொடுக்கப்படுகிறது, பிறகு அவர் கொல்லப்பட்டு உயிர் கொடுக்கப்படுகிறார்.
இப்படி அவர் கொல்லப்பட்டு, உயிர் கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்டுஉயிர் கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்டாலும் சரி, அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார், அவர் மீதுள்ள கடன் அடைக்கப்படாத வரை.
அறிவிப்பாளர் : முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 22493.
இதுகுறித்து மற்றுமொரு ஹதீஸில் வருவதாவது;
சமுரா இப்னு ஜுன்துப் ரலியல்லாஹு அவர்கள் சொல்கிறார்கள்;இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளிக்கிழமையில் ஜும்ஆவின் பிரசங்கத்தின் நடுவே கேட்கிறார்கள்:
இன்ன குடும்பத்தை சேர்ந்த யாராவது இருக்கிறாரா? என்று. யாரும் பதில் சொல்லவில்லை.
பிறகு கேட்கிறார்கள்:இன்ன குடும்பத்தை சேர்ந்த யாராவது இருக்கிறாரா? யாரும் பதில் சொல்லவில்லை.
மூன்றாவது முறை கேட்கிறார்கள், இன்ன குடும்பத்தை சேர்ந்த யாராவது இங்கே இருக்கிறாரா?
உடனே ஒரு மனிதர் எழுந்து,அல்லாஹ்வின் தூதரே!நான் இருக்கிறேன்.இதற்கு முன் இரண்டு முறை நான் கேட்டேனே! நீங்கள் ஏன் பதில் கூறவில்லை?என்று கூறிவிட்டு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை; நல்லதை சொல்வதற்காக கேட்கிறேன்.
உங்களுடைய குடும்பத்தாரில் சில நாட்களுக்கு முன்பாக இன்னவர் இறந்திருந்தார். அவருடைய கடன் அடைக்கப்படாததால் அவர் சொர்க்கத்திற்கு செல்ல முடியாமல் இருந்தார். உங்களுடைய உறவினர்களில் ஒருவர் அவருடைய கடனை அடைத்து விட்டார்.
எனவே தன்னுடைய ஹக்கை தேடக்கூடியவர்களில் அவருக்கு இப்போது யாருமில்லை. எனவே அவர் இப்போது சொர்க்கத்திற்கு அனுமதிக்கப்பட்டார். (4)
அறிவிப்பாளர் : சமுரா இப்னு ஜுன்துப்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3341, தரம் : ஹசன் (அல்பானி)
இந்த ஹதீஸ் இமாம் ஹாகிம் இடத்தில் இன்னொரு அறிவிப்பில் வருகிறது.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:உங்களுடைய தோழர் சொர்க்கத்தின் வாசலில் தான் வாங்கிய கடனுக்காக தடுத்துவைக்கப்பட்டு இருக்கிறார்.
அவருடைய எல்லா அமல்களும் சரியாக இருக்கிறது. வேறு எந்த பிரச்சினையும் இல்லை, அவர் வாங்கிய கடன் மட்டும்தான்.
«إِنَّ الرَّجُلَ الَّذِي مَاتَ بَيْنَكُمْ قَدِ احْتُبِسَ عَنِ الْجَنَّةِ مِنْ أَجْلِ الدَّيْنِ الَّذِي عَلَيْهِ، فَإِنْ شِئْتُمْ فَافْدُوهُ، وَإِنْ شِئْتُمْ فَأَسْلِمُوهُ إِلَى عَذَابِ اللَّهِ»
நீங்கள் விரும்பினால் அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் அல்லாஹ்வுடைய அதாபில் அவரை தள்ளிவிடுங்கள்.
அறிவிப்பாளர் : சமுரா இப்னு ஜுன்துப்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : ஹாகிம்,எண் : 2214.
இந்த இடத்தில், நாம் கவனிக்க வேண்டும்.
(இன்று,அண்ணனோ, தம்பியோ, மூத்த சகோதரியோ, இளைய சகோதரியோ, சாச்சாவோ, சாச்சியோ, தாய் மாமாவோ, அல்லது தாயின் உடன்பிறப்புகளோ இவர்களில் ஒருவர் அவர்களிடத்தில் செல்வம் இருந்து இறந்துவிட்டால், அந்த செல்வத்தை பலன் பெற வேண்டும்என்று எண்ணுகிறார்கள்.
நமக்கும் ஏதாவது பங்கு, சொத்து கிடைக்காதா! என்று.
இப்படித்தான் இன்று நிலை இருக்கிறது.
தன்னுடைய உறவினர்கள் யாராவது இறந்துவிட்டால், அவருடைய மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளை கொடுக்காத நிலையில் இறந்துவிட்டால், தனது தந்தையோ, தாயோ, அண்ணனோ, சகோதரியோ, தனது சாச்சாவோ.
இவரிடத்தில் அதை நிறைவேற்றுவதற்குரிய சக்தி இருக்கிறது.அல்லது இறந்தவருடைய செல்வத்தில் அதற்குரிய நிறைவான செல்வம் இருக்கிறது.
இருந்தும் கடன் கொடுத்தவர்களுக்கு அந்த ஹக் உடையவர்களுக்கு அந்த ஹக்கை நிறைவேற்ற எடுத்துக் கொடுக்காமல்,மறுப்பது.
தங்களுக்காக இருந்தால் வேணும்.ஆனால் இவர்கள் கொடுக்க வேண்டியதாக இருந்தால், எவ்வளவு தள்ளிப்போட முடியுமா தள்ளிப் போட வேண்டியது.
அதுதான் இறந்து விட்டாரே! கொஞ்சம் விட்டுவிடக்கூடாதா? அல்லது நீங்கள் கொஞ்சம் இதை விட்டுக் கொடுத்து விடுங்கள் என்று.
மக்கள் நிலையைப் பாருங்கள். உங்களுடைய நிலை இப்படி இருக்கலாம். அல்லாஹ்வுடைய சட்டம் அப்படியல்ல.)
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்:அவர் கடனால் அடைக்கப்பட்டிருக்கிறார். கடனால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார். நீங்கள் விரும்பினால் உரியவருக்கு செலுத்தி உங்களுடைய உறவினரை நரகத்திலிருந்து விடுதலை செய்து கொள்ளுங்கள், இல்லை என்றால் அல்லாஹ்வுடைய அதாபில் அவரை தள்ளி கொள்ளுங்கள்.
உடனே ஒரு மனிதர் எழுந்து சொன்னார்:அல்லாஹ்வுடைய தூதரே!நான் அவருடைய கடனை அடைத்து விடுகிறேன்.
அறிவிப்பாளர் : சமுரா இப்னு ஜுன்துப்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : ஹாகிம்,எண் : 2214.
அந்தத் தோழர்களுக்கு மறுமையின் பயம் இருந்தது.நரகத்தின் பயம் இருந்தது.அல்லாஹ்வுடைய தண்டனையின் பயம் இருந்தது.
அதனால்தான் இப்படிப்பட்ட நேரத்தில் தங்களுடைய உறவினர்களுக்காக தங்களுடைய செல்வத்தை கொடுத்து அவரை அல்லாஹ்வுடைய அதாபிலிருந்து விடுவிக்க முன்வந்தார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
«نَفْسُ المُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ»
ஒரு முஃமின் இறந்துவிட்டால், அவருடைய உயிர் அவருடைய கடனோடு பிணைக்கப்பட்டு கட்டப்படுகிறது. அவனுடைய கடன் நிறைவேற்றப்படாத வரை அவனுடைய உயிர் விடுதலை செய்யப்படுவதில்லை.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1078, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில், அவர்களுடைய இறுதி காலம் வரை அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு செல்வத்தையும் கனிமத்தையும் கொடுத்து அவர்களுக்கு பெரிய வசதிகளை கொடுக்கும் வரை, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழக்கம் எப்படி இருந்தது என்றால் ஜனாஸாக்கள் கொண்டுவரப்படும்போது அவர்கள் கேட்கக்கூடிய முதல் கேள்வி, இவர் மீது ஏதாவது கடன் இருக்கிறதா? என்றுதான். (5)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2298.
நாமெல்லாம் படிப்பினை பெறவேண்டும். முஸ்லிம் சமுதாயம் என்று நாம் சொல்வதற்கு கேவலப்பட வேண்டும்.
(அல்லாஹ் மன்னிப்பானாக!) உணர்வற்ற சமுதாயமாக, உள்ளம் இறந்தவர்களாக, ஈமானிய உணர்வுகளையும், மனித உணர்வுகளையும் இழந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அல்லாஹ்வுடைய தூதருக்கு எப்பேற்ப்பட்ட கவலை பாருங்கள்.
சமுதாயத்தின் ஹக்குகளில், தன் மஸ்ஜிதில் தனது தோழர் ஒருவர் இறந்து கொண்டு வருகிறார்கள்;முதல் கேள்வி, இவர் மீது ஏதாவது கடன் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.
இன்று, இமாமோஅல்லது சமுதாயத்தின் ஒரு பொறுப்பாளியோ, மஸ்ஜித் முத்தவல்லியோ, அல்லது ஒருவர் கேட்டால், ஏன் உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?
மௌத்தான நேரத்தில் கேட்க வேண்டிய கேள்வியா இது? பாவம் அவர் மௌத் ஆகி விட்டார். பிள்ளைகள் இருக்கிறார்கள்; மனைவி மக்கள் தெருவில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் கேட்க வேண்டிய கேள்வியா இது?
உனக்கு மனிதாபம் இல்லை? விவஸ்தை இல்லை? அறிவு இல்லை? அதை இப்ப பாக்கணுமா? என்று கூறுவார்கள்.
என்ன பேச்சு பேசுகிறார்கள் பாருங்கள்!
அல்லாஹ்வுடைய தூதரை விடவா இவர்கள் மனிதாபிமானத்தை மக்களுக்கு சொல்லித்தர வந்துவிட்டார்கள்?!ரசூலுல்லாஹ் உடைய கருணையை விடவா, இரக்கத்தை விடவா, இவர்கள் மக்கள் மீது இரக்கம் காட்ட வந்துவிட்டார்கள்?!
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கும் இரண்டாவது கேள்வி, அந்தக் கடனைநிறைவேற்றுவதற்கு இவர் ஏதாவது சொத்தை விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று.
ஆம் என்றால் அந்த சொத்தை கொண்டு அவர் கடனை அடைத்து விடுங்கள் என்று கூறிவிட்டு அவருக்கு தொழுகை வைப்பார்கள்.
ஆனால் அதை நிறைவேற்றக்கூடிய அளவுக்கு சொத்து இல்லை என்றால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்.
நான் இந்த ஜனாஸாவிற்கு தொழ வைக்க மாட்டேன். நீங்கள் வேண்டுமானால் தொழுது கொள்ளுங்கள். நான் தொழ வைக்க மாட்டேன்; தொழுகவும் மாட்டேன் என்று வெளியேறி விடுவார்கள்.(5)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2298.
இந்த காலத்தில் இப்படி ஏதாவது ஒரு இமாம் கூறினால் கலவரங்கள் தான் நடக்கும். பல பிரச்சனைகளை உருவாக்குவார்கள்.
அன்பு சகோதரர்களே! ஆயிரம் பிரச்சனைகளை விட, ஆயிரம் கேவலங்களை விட, பெரிய பிரச்சனை பெரிய கேவலம் அல்லாஹ்வுடைய அடியாரிடமிருந்து கொடுக்கிறேன் என்று கூறிய ஹக்கை, கொடுக்காமல் விட்டு விடுவது.
அடுத்து, எப்பொழுது ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குசெல்வங்கள் அதிகமாக வந்ததோ, கனிமத்துகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பங்குகள் வந்ததோ, அப்பொழுது சொன்னார்கள் :
இவருக்கு ஏதாவது கடன் இருந்தால் என்னுடைய கணீமத்தின் பங்கிலிருந்து எடுத்துக் கடனை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை வைப்பார்கள்.
நம்முடைய மார்க்கம் இதுதான். இதுதான் அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்த வழிகாட்டுதல்.
இந்த இடத்தில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தீவிரத்தை நாம் பார்க்கவேண்டும். அவர்கள் இதில் எந்த அளவு அவசரப்பட்டார்கள் என்பதையும் பார்க்கவேண்டும்.
கடன் விஷயத்தில், கொடுப்போம், போகப் போக கொடுப்போம், கொடுக்கும்போது கொடுப்போம், வரும்போது வரும், என்ன அவசரம் இப்பொழுது நீங்கள் என்ன நடுத்தெருவிலா நிற்கிறீர்கள்? இதை வாங்கிட்டு போய் தான் நீங்கள் சாப்பிட வேண்டுமா?
கடன் கொடுத்தவர்களிடத்தில் மக்கள் சொல்லக்கூடிய வார்த்தை இது.
கடன் கொடுத்தவர் அவர் தன்னுடைய பொருளை திரும்ப கேட்டால், உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லையா? ஏன் இன்னும் கொஞ்சம் நாள் பொறுக்க மாட்டீர்களா? என்ன இஸ்லாத்தை நீங்கள் படித்திருக்கிறீர்கள்?
அன்பு சகோதரர்களே! இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை சொல்லிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நம்முடைய உள்ளத்தில் ஒரு எண்ணம் இருக்கிறது. அதாவது கடன் என்று சொல்லி வாங்குவதுதான் கடன்.
வியாபாரிகள் பில் வாங்குகிறார்கள் பாருங்கள், கடையை மட்டும் திறந்திருப்பார், மற்ற எல்லாவற்றையும் கடனுக்கு வாங்கியிருப்பார். இதையெல்லாம் யாரும் கடனாக நினைப்பதில்லை.
பிறருக்கு கொடுக்க வேண்டிய ஹக்காக நினைப்பதில்லை.
நாளை மறுமையில் தெரியும், எப்படிப்பட்ட பக்கீர்களாக, அவர்கள் எழுப்பப்படுவார்கள் என்று.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதரை பாருங்கள்;
ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு மனிதர் இறந்துவிட்டார். கழுவினோம். குளிப்பாட்டி கபனிட்டு நறுமணங்கள் பூசினோம்.
அவரை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு வந்தோம். யா ரசூலல்லாஹ் இவருக்கு தொழுகை வையுங்கள் என்று கூறினோம்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தொழுகை நடத்துவதற்கு முன் வந்து விட்டார்கள். வந்தவர்கள்நின்று விட்டார்கள்.
இவர் ஏதாவது கடன் வைத்திருக்கிறாரா? என்று கேட்டார்கள்.
அப்பொழுது அவர்களுடைய உறவினர் ஒருவர் கூறினார்: அல்லாஹ்வுடைய தூதரே! இரண்டு தீனார் தான் அவர் கடன் பெற்றிருந்தார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழ வைக்க மாட்டேன் என்று திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
அந்த இடத்தில் சஹாபி அபூ கதாதா ரலியல்லாஹு அவர்கள் யா ரசூலல்லாஹ்! நான் அந்தக் கடனுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்;நீங்கள் தொழ வையுங்கள் என்று கூறினார்கள்.
சரி என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை வைத்துவிட்டார்கள்.
பிறகு சொன்னார்கள் :
«حَقُّ الْغَرِيمُ، وَبَرِئَ مِنْهُمَا الْمَيِّتُ؟.
அல்லாஹுத்தஆலா கடன் கொடுத்தவருடைய ஹக்கை நிறைவேற்றட்டும். கடன்பட்ட இந்த மைய்யத்தும் அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து தப்பிக்கட்டும் என்று கூறிவிட்டு தொழ வைத்து விட்டார்கள்.
(இதை நன்கு கவனிக்க வேண்டும்.
இரண்டு தீனார்கள் தான். ஸஹாபி ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
சகோதரர்களே! அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வது, இன்று நாம் பொறுப்பேற்றுக் கொள்வதைப் போன்று கிடையாது. நபித்தோழர்கள் இப்படிப்பட்ட இஸ்லாத்தை அறிந்திருக்கவில்லை.
அவர்கள் அறிந்திருந்த இஸ்லாம் வேறு; அவர்கள் பின்பற்றிய இஸ்லாம் வேறு.)
இரண்டு தீனாரை அபூ கத்தாதா பொறுப்பேற்றுக்கொண்டார்.
ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் சரி என்று தொழ வைத்துவிட்டார்கள். அன்று தொழுகை முடிந்தது.
அடுத்த நாள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூ கதாதா (ரலி) அவர்களிடம் சென்று கேட்கிறார்கள்:அந்த இரண்டு தீனாரை நிறைவேற்றினாயா? இல்லையா? என்று.
கடன் பெற்றவர் செல்லவில்லை, அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சென்றார்கள். சமுதாயத்தின் தலைவர், மக்களின் பொறுப்பாளர் அவர்கள் சென்று அவருக்கு நீ பொறுப்பேற்றுக் கொண்ட அந்த இரண்டு தினாரின் நிலை என்ன? நிறைவேற்றினாயா? என்று.
அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பணிவுடன் சொன்னார்கள்:யா ரசூலல்லாஹ்! நேற்று தானே மரணித்திருந்தார், கொஞ்சம் மற்ற வேலைகளில் கவனம் இல்லாமல் இருந்து விட்டேன். நான் நிறைவேற்றுகிறேன் என்று.
மறுநாளும் நபி வந்து கேட்கிறார்கள்.
அபூ கதாதா சொல்கிறார்கள்:அல்லாஹ்வுடைய தூதரே! நிறைவேற்றி விட்டேன்.
நபி (ஸல்)அவர்கள் சொன்னார்கள்.
«الْآنَ بَرَدَتْ عَلَيْهِ جِلْدُهُ»
இப்பொழுதுதான் அவரின் உடலை நரகத்திலிருந்து பாதுகாத்து குளிர வைத்தாய் என்று.
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 1536.
யோசித்துப் பாருங்கள்;அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹக்குடயவர்களின் ஹக்கை பெற்றுத் தருவதில் எந்த அளவுக்கு கவனம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை.
இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது; ஹக்குகளில் மோசடி செய்து இறந்த மனிதனும் ரசூலுல்லாஹ் உம்மத்தை சேர்ந்தவர் தான்.
அவரையும் நரகத்தில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், அவர் மற்றவர்களுடைய ஹக்கை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்தகைய பெரும் முயற்சியை எடுத்தார்கள்.
இன்னொரு சம்பவத்தை கூறி நிறைவு செய்வோம்.
ஸஅத் இப்னு அல் அத்வல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
தன்னுடைய சகோதரர் இறந்து விட்டார். அவர் 300திர்ஹங்களை விட்டு சென்றிருக்கிறார். அவருக்கு நிறைய பிள்ளைகள் இருக்கின்றனர்.
அவர் வந்து கேட்டார்:யா ரசூலல்லாஹ்! அவருக்கு நிறைய பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் தேவை உள்ளவர்களாக இருக்கிறார்கள், நான் இந்த 300திர்கங்களை அவருடைய பிள்ளைகளுக்கு செலவழித்து விடட்டுமா? என்று.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :
இறந்து விட்ட உன்னுடைய சகோதரர் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாமல் கடனால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறார். எனவே நீ சென்று முதலில் அவருடைய கடனை அடைத்துவிட்டு வா.
உடனே அந்த 300திர்கங்களை எடுத்துக்கொண்டு, யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்துவிட்டு வந்துசொல்கிறார் :
யா ரசூலல்லாஹ் எல்லா கடனாளிகளுக்கும் கொடுத்துவிட்டேன்.ஆனால் ஒரு பெண் வந்து அவளுக்கும் என்னுடைய சகோதரர் கொடுக்க வேண்டுமென்று கூறினாள். ஆனால் சாட்சி இல்லை.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அவள் உண்மை கூறுகிறாள்.அந்த இரண்டு திர்கங்களை கொடுத்து விட்டு வாருங்கள். (7)
அறிவிப்பாளர் : ஸஅத் இப்னு அல் அத்வல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 17227.
இன்று நமது நிலையைப் பாருங்கள். நமது சமுதாயத்தில் வளர்ந்து வரக்கூடிய தலைமுறையின் நிலையைப் பாருங்கள்.
தனது பிள்ளைகள், தனது குடும்பம் வாழ வேண்டும். சமுதாயத்தில் தான் யாரிடமிருந்து செல்வத்தை பெற்றார்களோ, அவர்கள் அழிந்தாலும் சரி, அவர்கள் தொலைந்தாலும் சரி, அவர்கள் கதி என்ன ஆனாலும் சரி என்று அலட்சியத்தில் இருப்பார்கள்.
நம்முடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :
" مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ: الكِبْرِ، وَالغُلُولِ، وَالدَّيْنِ دَخَلَ الجَنَّةَ"
மூன்று குணங்களை விட்டு நீங்கியவராக யார் மரணிப்பாரோ அவர் கண்டிப்பாக சொர்க்கம் செல்வார்.
1. பெருமை,
2. கடன்,
3. மோசடி.
அறிவிப்பாளர் : சவ்பான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1572, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
ஆகவேதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பொழுதும் கடனிலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொண்டிருப்பார்கள்.
தொழுகையில் அத்தஹியாத்தில் கூறுவார்கள் :
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ»
யா அல்லாஹ்! கடனை விட்டும், பாவத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன்.(8)
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 2397.
மேலும் கூறுவார்கள் :
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجْزِ وَالكَسَلِ، وَالجُبْنِ وَالبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ»
யா அல்லாஹ்! கவலையை விட்டு, துக்கத்தை விட்டு, பலவீனத்தை விட்டு, சோம்பேறித்தனத்தை விட்டு, கோழைத்தனத்தை விட்டு, கடன் சுமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6369.
இது மிக மிக முக்கியமான விஷயம்.
அல்லாஹுத்தஆலா இந்த விஷயத்தில்தெளிவான விளக்கத்தை பெற்றவனாக, மேலும், அல்லாஹ்வுடைய அடியார்களுடைய ஹக்கை அழகிய முறையில் நிறைவேற்றி, அடியானுடைய பொருத்தத்தை பெற்றவனாக, அல்லாஹ்வுடைய மன்னிப்பை பெற்றவனாக, இந்த உலகத்திலிருந்து பிரியக்கூடிய ஈமானுடைய, இஸ்லாமுடைய நல்ல வாய்ப்பை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَأَلَ وَلَهُ مَا يُغْنِيهِ، جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ خُمُوشٌ، أَوْ خُدُوشٌ، أَوْ كُدُوحٌ فِي وَجْهِهِ»، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الْغِنَى؟، قَالَ: «خَمْسُونَ دِرْهَمًا، أَوْ قِيمَتُهَا مِنَ الذَّهَبِ»، قَالَ يَحْيَى: فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ لِسُفْيَانَ: " حِفْظِي أَنَّ شُعْبَةَ، لَا يَرْوِي عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ، فَقَالَ سُفْيَانُ: حَدَّثَنَاهُ زُبَيْدٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ (سنن أبي داود 1626) [حكم الألباني] : صحيح
குறிப்பு 2)
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنَا الْعَلَاءُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى الْحُرَقَةِ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ السَّلَمِيِّ، عَنْ أَخِيهِ عَبْدِ اللهِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ، فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ، وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ» فَقَالَ لَهُ رَجُلٌ: وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ»، (صحيح مسلم- (137
குறிப்பு 3)
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّهُ سَمِعَهُ، يُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَامَ فِيهِمْ فَذَكَرَ لَهُمْ أَنَّ الْجِهَادَ فِي سَبِيلِ اللهِ، وَالْإِيمَانَ بِاللهِ أَفْضَلُ الْأَعْمَالِ، فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللهِ، تُكَفَّرُ عَنِّي خَطَايَايَ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ، إِنْ قُتِلْتَ فِي سَبِيلِ اللهِ، وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ، مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ»، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ قُلْتَ؟» قَالَ: أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللهِ أَتُكَفَّرُ عَنِّي خَطَايَايَ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ، وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ، مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ، إِلَّا الدَّيْنَ، فَإِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ قَالَ لِي ذَلِكَ»،)صحيح مسلم - 1885)
குறிப்பு 4)
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ سَمْعَانَ، عَنْ سَمُرَةَ، قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هَاهُنَا أَحَدٌ، مِنْ بَنِي فُلَانٍ؟» فَلَمْ يُجِبْهُ أَحَدٌ، ثُمَّ قَالَ: «هَاهُنَا أَحَدٌ مِنْ بَنِي فُلَانٍ؟» فَلَمْ يُجِبْهُ أَحَدٌ، ثُمَّ قَالَ: «هَاهُنَا أَحَدٌ مِنْ بَنِي فُلَانٍ؟» فَقَامَ رَجُلٌ، فَقَالَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مَنَعَكَ أَنْ تُجِيبَنِي فِي الْمَرَّتَيْنِ الْأُولَيَيْنِ؟ أَمَا إِنِّي لَمْ أُنَوِّهْ بِكُمْ إِلَّا خَيْرًا، إِنَّ صَاحِبَكُمْ مَأْسُورٌ بِدَيْنِهِ»، فَلَقَدْ رَأَيْتُهُ أَدَّى عَنْهُ حَتَّى مَا بَقِيَ أَحَدٌ يَطْلُبُهُ بِشَيْءٍ، قَالَ أَبُو دَاوُدَ: «سَمْعَانُ بْنُ مُشَنِّجٍ» (سنن أبي داود- 3341) [حكم الألباني] : حسن
குறிப்பு 5)
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُؤْتَى بِالرَّجُلِ [ص:98] المُتَوَفَّى، عَلَيْهِ الدَّيْنُ، فَيَسْأَلُ: «هَلْ تَرَكَ لِدَيْنِهِ فَضْلًا؟»، فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ لِدَيْنِهِ وَفَاءً صَلَّى، وَإِلَّا قَالَ لِلْمُسْلِمِينَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الفُتُوحَ، قَالَ: «أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ تُوُفِّيَ مِنَ المُؤْمِنِينَ فَتَرَكَ دَيْنًا، فَعَلَيَّ قَضَاؤُهُ، وَمَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ» (صحيح البخاري- 2298)
குறிப்பு 6)
حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، وَأَبُو سَعِيدٍ، الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا زَائِدَةُ [ص:406]، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرٍ، قَالَ: تُوُفِّيَ رَجُلٌ فَغَسَّلْنَاهُ، وَحَنَّطْنَاهُ، وَكَفَّنَّاهُ، ثُمَّ أَتَيْنَا بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَيْهِ، فَقُلْنَا: تُصَلِّي عَلَيْهِ؟ فَخَطَا خُطًى، ثُمَّ قَالَ: «أَعَلَيْهِ دَيْنٌ؟» قُلْنَا: دِينَارَانِ، فَانْصَرَفَ، فَتَحَمَّلَهُمَا أَبُو قَتَادَةَ، فَأَتَيْنَاهُ، فَقَالَ أَبُو قَتَادَةَ: الدِّينَارَانِ عَلَيَّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَقُّ الْغَرِيمُ، وَبَرِئَ مِنْهُمَا الْمَيِّتُ؟» قَالَ: نَعَمْ، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ قَالَ بَعْدَ ذَلِكَ بِيَوْمٍ: «مَا فَعَلَ الدِّينَارَانِ؟» فَقَالَ: إِنَّمَا مَاتَ أَمْسِ، قَالَ: فَعَادَ إِلَيْهِ مِنَ الْغَدِ، فَقَالَ: لَقَدْ قَضَيْتُهُمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْآنَ بَرَدَتْ عَلَيْهِ جِلْدُهُ» ، وَقَالَ مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو فِي هَذَا الْحَدِيثِ: فَغَسَّلْنَاهُ، وَقَالَ: فَقُلْنَا: تُصَلِّي عَلَيْهِ (مسند أحمد- 14536)
குறிப்பு 7)
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ سَعْدِ بْنِ الْأَطْوَلِ، قَالَ: مَاتَ أَخِي وَتَرَكَ ثَلَاثَ مِائَةِ دِينَارٍ، وَتَرَكَ وَلَدًا صِغَارًا، فَأَرَدْتُ أَنْ أُنْفِقَ عَلَيْهِمْ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَخَاكَ مَحْبُوسٌ بِدَيْنِهِ، فَاذْهَبْ، فَاقْضِ عَنْهُ» . قَالَ: فَذَهَبْتُ، فَقَضَيْتُ عَنْهُ، ثُمَّ جِئْتُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ قَضَيْتُ عَنْهُ، وَلَمْ يَبْقَ إِلَّا امْرَأَةً تَدَّعِي دِينَارَيْنِ، وَلَيْسَتْ لَهَا بَيِّنَةٌ. قَالَ: «أَعْطِهَا، فَإِنَّهَا صَادِقَةٌ» (مسند أحمد- 17227)
குறிப்பு 8)
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ [ص:118] مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ وَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ»، فَقَالَ لَهُ قَائِلٌ: مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللَّهِ مِنَ المَغْرَمِ؟ قَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ» (صحيح البخاري- 2397)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/