HOME      Khutba      மன்னிப்புத் தேடுவதின் அவசியம் இன்னும் பலன்கள் | அமர்வு 2/2 | Tamil Bayan - 649   
 

மன்னிப்புத் தேடுவதின் அவசியம் இன்னும் பலன்கள் | அமர்வு 2/2 | Tamil Bayan - 649

           

மன்னிப்புத் தேடுவதின் அவசியம் இன்னும் பலன்கள் | அமர்வு 2/2 | Tamil Bayan - 649


بسم الله الرحمن الرّحيم

மன்னிப்புத் தேடுவதின் அவசியம் இன்னும் பலன்கள், அமர்வு 2 (இறைத்தூதர்களின்  பாவமன்னிப்பு தேடுதல்)

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றிபுகழ்ந்து, அல்லாஹ் உடைய கண்ணியத்திற்குரிய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் இன்னும் தோழர்கள் மீதும் ஸலாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை அல்லாஹ்வுடைய அச்சத்தை நினைவூட்டியவனாக, இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு சுப்ஹானஹுதஆலா நம் அனைவருடைய பாவங்களையும் மன்னித்து அருள்வானாக!அல்லாஹ்வுடைய நேசத்தை பெற்று ஈருலகிலும் வெற்றி பெறக்கூடிய நல்லோரில் என்னையும் உங்களையும் நமது குடும்பத்தினரையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.

அல்லாஹ்விற்கு விருப்பமான, அல்லாஹ்விற்கு மிக பிரியமான அமல்களில் ஒன்று, அடியான் தன் குற்றத்தை உணர்ந்து, தான் செய்த பாவங்களை எண்ணி, வருந்தி, என்னை மன்னிப்பதற்குஎன்னுடைய ரப்பு இருக்கின்றான் என்று அந்த ரப்பிடம் தன்னுடைய பாவங்களை, குற்றங்களை, குறைகளை முறையிட்டு அவனிடத்தில் அவனுடைய மன்னிப்பை இறைஞ்சுவது;மன்னிப்பை மன்றாடுவது;இது அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான அமல்களில் ஒன்று.

ஒருவர் எந்த அளவு அல்லாஹ்விடத்தில் இஸ்திக்ஃபார் -பாவமன்னிப்பு தேடுவாரோ அந்த அளவு அல்லாஹு தஆலா அந்த அடியானை நேசிக்கின்றான். அந்த அடியானை பிரியப்படுகின்றான். யார் தன்னிடத்திலே மன்னிப்பு கேட்கவில்லையோ அல்லது நான் மன்னிக்க மாட்டேன் என்று நிராசை அடைகிறார்களோ அவர்கள்மீது அல்லாஹு தஆலா கோபப்படுகிறான்.

அதுமட்டுமல்ல, அல்லாஹ்வுடைய அருளாகிய மன்னிப்பை நிராசைப்படுவது, எனக்கு மன்னிப்பு கிடைக்காது என்று நம்பிக்கை இழப்பதை அல்லாஹு தஆலா இறை நிராகரிப்புஎன்றும் மிகப்பெரிய வழிகேடு என்றும் கூறுகின்றான்.

அடியான் எந்த பாவத்தை செய்து விட்டாலும் சரி, அவன் திருந்தி வருந்தி மன்னிப்பு கேட்டால் கண்டிப்பாக அல்லாஹு தஆலா அந்த பாவத்தை முற்றிலுமாக மன்னித்து விடுவான். அதைப்பற்றி எந்த விசாரணையும் மறுமையில் இருக்காது. அத்தகைய அழகிய மன்னிப்பாக அல்லாஹு தஆலா மன்னித்து விடுகின்றான்.

அல்லாஹ்வுடைய கருணையிலிருந்து நம்பிக்கை இழப்பதை, நிராசையடைவதை அல்லாஹு தஆலா எச்சரிக்கை செய்கிறான்;

وَمَنْ يَقْنَطُ مِنْ رَحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ

முற்றிலுமாக வழிகேட்டில் இருப்பவர்களை தவிர வேறு யார் அல்லாஹ்வின் கருணையிலிருந்து நிராசை அடைவார்கள்? (அல்குர்ஆன் 15 : 56)

அல்லாஹ்வுடைய மன்னிப்பு என்பது அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் மிகப்பெரிய ஒரு ரஹ்மத். அந்த ரஹ்மத்தை, அந்த மன்னிப்பைஅடியான் அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். எனக்கு மன்னிப்பு கிடைக்காது என்று நிராசை அடைவது அல்லாஹ்வை நிராகரிப்பதற்கு சமமான ஒரு குற்றம்.

சூரா யூஸுஃபில் ரப்புல் ஆலமீன் கூறும் போது,

إِنَّهُ لَا يَيْأَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ

நிராகரிக்கின்ற மக்களைத் தவிர வேறு யாரும் அல்லாஹ்வின் கருணையில் இருந்து நிராசை அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 12 : 87)

இந்த நிராகரிப்பவர்கள் என்று வரும் போது கடவுள் ஒருவனை ஏற்றுக்கொண்டு சிலையை வணங்குகிறார்களே அவர்களும் வருவார்கள்.

அதனால்தான் ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக்கணக்கான சிலைகளை வணங்கியதற்குப்பிறகு அந்த சிலைகளிடத்திலே தங்களுடைய தேவைகளை முன்வைத்து, வேண்டுதல்களை எல்லாம் செய்ததற்குப் பிறகு, அவர்களுடைய தேவைகள் நிறைவேறவில்லை என்றாலோ, அல்லது பயந்த ஆபத்து அவர்களுக்கு நிகழ்ந்து விட்டாலோ, அவர்கள் சொல்வார்கள்; கடவுள் என்னை கைவிட்டு விட்டான். ஆண்டவன் என்னை கைவிட்டு விட்டான் என்று நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பி இருக்கக்கூடிய மக்கள் ஒருபோதும் நிராசை அடையவே மாட்டார்கள். சிலை வணங்கக் கூடியவர்கள், நிராகரிப்பாளர்கள், யாருடைய நம்பிக்கையில் பலகீனம் இருக்கின்றதோ, அத்தகைய நிராகரிப்பாளர்கள் தான் அல்லாஹ்வுடைய கருணையிலிருந்து நிராசை அடைவார்கள்.

ஆகவே அல்லாஹ்வின் அடியார்களே! இறுதி மூச்சு வரை நம்முடைய பாவங்களுக்காக மன்னிப்பை அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைத்து, அல்லாஹ் என்னை மன்னிப்பான், என்னை மன்னிப்பான்என்று இஸ்திக்பார் பாவமன்னிப்பு தேடுதலை நாம் அதிகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய நபிமார்கள், ஸாலிஹீன்கள், நல்லவர்களுடைய வரலாறை குர்ஆன் நமக்கு சொல்லிக் காட்டுகிறது. மனிதர்களில் நேரடியாக அல்லாஹ்விடத்தில் பேசி வஹீயை பெற்றவர்கள், வேதத்தை பெற்றவர்கள், நம்மைவிட ஈமானாலும், தக்வாவாலும் மேலும் அல்லாஹ் உடைய யகீனிலும் ஒரு மன உறுதியை பெற்றுஉயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் அந்த நபிமார்கள். அவர்களுக்கு அடுத்து அவர்களோடு வாழ்ந்த அந்த சத்திய சீலர்கள்.

அவர்களுடைய நற்குணங்களில் அல்லாஹு தஆலா நமக்கு எடுத்துச் சொல்லும்போது, அவர்களிடமும் ஏதாவது தவறு நடந்துவிட்டால் எப்படி அவர்கள் வருந்தினார்கள்? திருந்தினார்கள்? அல்லாஹ்விடத்தில் அழுது மன்னிப்பு கேட்டார்கள் என்பதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

அது போக எப்போதும் அந்த இறைத்தூதர்கள் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்பதை தங்களுடைய ஒரு வழக்கமாக அமலாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஒன்று, ஒரு தவறுக்கு பிறகு மன்னிப்பு கேட்பது; ஒரு குற்றம் நிகழ்ந்ததற்கு பிறகு மன்னிப்பு கேட்பது. இரண்டாவது, பொதுவாகவே அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பது.

எதற்காக வேண்டி என்றால், குற்றத்தில் நாம் விழுந்து விடக் கூடாது என்பதற்காக. அல்லாஹ்வுடைய தவ்ஃபீக் என்ற அந்த பாதுகாப்பு நம்மை விட்டு விலகி விட்டால் அவ்வளவு தான்.அவன் நம்மை பாதுகாக்கும் போது தான் நாம் பாதுகாக்கப்பட்டவர்கள். நம்மீது நம்முடைய நஃப்ஸ் ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருக்கும். ஷைத்தான் நம்மீது ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருப்பான். அல்லாஹ் அந்தப் பாதுகாப்பை எடுத்து விட்டால் அவ்வளவுதான்.

சகோதரர்களே! நமது நஃப்ஸை மிகைப்பதற்கு நம்மிடத்தில் ஆற்றல் இல்லை. ஷைத்தானை வெல்வதற்கு நம்மிடத்தில் ஆற்றல் இல்லை. பலவீனப்பட்டு விடுவோம்.

உங்களுக்கு தெரியும். மஸ்ஜிதுக்கு வரும்போது ஓதவேண்டிய முக்கிய துஆக்களிலே ஒன்று. அல்லாஹ்விடத்திலேஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடி வர வேண்டும்.

«أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ»

மகத்தான அல்லாஹ்வைக் கொண்டும்,கண்ணியமிக்க அவனது முகத்தைக் கொண்டும்,நிலையான நிரந்தரமான அவனது ஆட்சியைக் கொண்டும்,எறியப்பட்ட ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். (1)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்இப்னு ஆஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவுது,எண் : 466, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

பிறகு மஸ்ஜிதை விட்டு வெளியே செல்லும்போது,

اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

யா அல்லாஹ்! உன்னுடைய அருளை கேட்டு நான் செல்கிறேன். யா அல்லாஹ்!விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து என்னை பாதுகாத்து உனது பாதுகாப்புக்குள் வை என்று வேண்டி பயந்தவர்களாக வெளியில் செல்ல வேண்டும். (2)

அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜாஎண் : 773, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

 

காரணம் என்ன? அவ்வளவு வலைகளை ஷைத்தான் வெளியிலே விரித்து வைத்திருக்கின்றான். வியாபாரத்திலோ, தொழில் துறையிலோ, குடும்ப உறவுகளிலோ, குணங்களிலோ, பழக்கவழக்கங்களிலோஎன்று எங்கு திரும்பினாலும் சரி,ஷைத்தான் மன இச்சைகள் என்ற வலையை, ஆசைகள் என்ற வலையை, ஹராமுடைய வலையை அங்கு விரித்து வைத்து எந்த ஒன்றிலாவது இந்த அடியான் சறுக்கி விழுந்து விட மாட்டானா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

சகோதரர்களே! ஒன்று,குற்றம் நிகழ்ந்ததற்குப் பிறகு பாவ மன்னிப்பு தேடுதல், இரண்டாவது குற்றம் நிகழாமல் இருப்பதற்காக,அல்லாஹ்வுடைய பாதுகாப்பு நம்மை எப்போதும் சுற்றி இருப்பதற்காக.

அந்த அடிப்படையில் இறைத்தூதர்கள் தங்களிடமிருந்து ஏதாவது தவறுகள் நடந்ததற்கு பிறகும் அதை நினைத்து வருந்தி பாவ மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தார்கள். பொதுவாக பாவமன்னிப்பு தேடுவதை, பாவ மன்னிப்பு கேட்பதைதங்களுடைய அமலாகவும் இருந்ததாகவும் ஆக்கி வைத்திருந்தார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய தாய் தந்தை ஆதம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அழகாகச் சொல்கிறான்;

தவறு நடந்து விட்டது. அல்லாஹ் கோபித்துக் கொண்டான். இந்த சொர்க்கத்திலிருந்து வெளியேறுங்கள். வானத்திலிருந்து கீழே இறங்குங்கள் என்று அல்லாஹ் கூறிவிட்டான். பூமிக்கு இறக்கப்பட்டார்கள். நிராசை அடைந்தார்களா? என்ன செய்வது என்று திகைத்தார்களா?

எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு இருக்கிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறது. எந்த கஷ்டமாக இருந்தாலும், சோதனையாக இருந்தாலும், குழப்பமாக இருந்தாலும், எத்தகைய பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது. அந்த தீர்வு என்ன?

அல்லாஹ்விடம் வந்துவிடுவது; அல்லாஹ்விடம் முறையிடுவது; அல்லாஹ்விடம் கேட்பது.

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

(அதற்கு அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினர். (அல்குர்ஆன் 7:23)

கருத்து : ஆதமும் ஹவ்வாவும் முறையிட்டார்கள்;எங்கள் இறைவா!நாங்கள் உனது கட்டளையை மீறி எங்களுக்கு அநீதி இழைத்துக் கொண்டோம். நாங்கள் செய்த இந்த கொடுமை எங்களுக்கு எதிராக செய்து கொண்டோம்.

இப்போது நீ எங்களை மன்னிக்கவில்லை என்றால், எங்கள் மீது கருணை காட்டவில்லை என்றால், அவ்வளவு தான். நாங்கள் நஷ்டவாளிகள். உன்னுடைய கருணை மன்னிப்பு இல்லாமல் போனால் தான் நாங்கள் நஷ்டவாளிகள் என்று சொன்னார்களே தவிர, இனி நாங்கள் நஷ்டம் அடைந்து விட்டோம், எங்களுக்கு வழியே இல்லை என்று அவர்கள் சொல்லவில்லை.

யாருக்கு அல்லாஹ்வுடைய மன்னிப்பு கிடைக்கவில்லையோ, ரஹ்மத் கிடைக்கவில்லையோ, அவர்கள்தான் நஷ்டவாளிகள்.

யாருக்கு கிடைக்காமல் போகும்? யார் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கவில்லையோ, மன்னிப்பு கேட்கவில்லையோ, யார் அல்லாஹ்வை ஆதரவு வைக்கவில்லையோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் இருந்து, அல்லாஹ்வுடைய மன்னிப்பலிருந்து இழப்புக்கு ஆளாகுவார்கள்.

அல்லாஹ் தஆலா நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒரு வாக்கு கொடுத்திருந்தான். நூஹே! இந்த வெள்ளப் பிரளயத்தில் உமது குடும்பத்தை பாதுகாப்போம் என்று. ஆனால் நூஹ் நபியுடைய மகனார் ஈமானை இஸ்லாமை ஏற்காத காரணத்தால் வெள்ளப்பிரளயத்தில் மூழ்குகிறான். அதை பார்த்துவிட்டு,

رَبِّ إِنَّ ابْنِي مِنْ أَهْلِي وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ

இறைவா! எனது மகனும் எனது குடும்பத்தில் ஒருவன் தானே! உனது வாக்கு உண்மையாயிற்றே! இப்போது அவன் மூழ்கி சாகப்போகிறானே! என்று நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் முறையிட்டார்கள். (அல்குர்ஆன் 11:45)

ஒரு கேள்வி கேட்டார்கள். அல்லாஹுத்தஆலா கூறினான்;

إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ فَلَا تَسْأَلْنِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ

நூஹே! உனது பிள்ளையாக இருந்தாலும், அவன் நல்லவன் அல்ல. அவனிடத்திலே நற்செயல்கள் இல்லை. எனவே உமக்கு அறிவு இல்லாததை என்னிடத்தில் கேட்காதீர் என்று அல்லாஹு தஆலா அவர்களுக்கு தர்பியத் செய்தான். (அல்குர்ஆன் 11:46)

ஆஹா! அல்லாஹ்விடத்தில் நமக்கு இல்மு இல்லாத ஒன்றை கேட்டு நாம் தவறு செய்து விட்டோம். அல்லாஹ் கோபப்பட்டு விட்டான் என்பதை அறிந்த உடனேயே நூஹ் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் எப்படி மன்றாடுகிறார்கள்?

قَالَ رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُنْ مِنَ الْخَاسِرِينَ

என் இறைவா! எனக்கு அறிவு இல்லாத ஒன்றை உன்னிடத்திலே யாசிப்பதில் இருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன். இத்தகைய குற்றத்தை செய்து விட்டேன். நீ என்னை மன்னிக்க வில்லை என்றால் என் மீது கருணை காட்டவில்லை என்றால் நஷ்டவாளிகளில் நான் ஆகி விடுவேன். (அல்குர்ஆன் 11 : 47)

இதுதான்நபிமார்களுடைய பண்பு. தவறு, குற்றம் என்று தெரிந்த உடனே அல்லாஹ்விடம் சரண் அடைந்து விடுவது. அல்லாஹ்விடம் தன்னை ஒப்படைத்து விடுவது. அல்லாஹ் தப்பு செய்து விட்டேன். நீ என்னுடைய ரப்பு. என்னுடைய எஜமானன். உன்னிடம் வந்து விட்டேன். என்னை நீ மன்னித்துவிடு என்று.

இதுதான் நபிமார்களுடைய அடையாளம். அதுமட்டுமா? நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தொடர் துஆக்களில் ஒன்றாக அல்லாஹு தஆலா சூரா நூஹுடைய 28வது வசனத்தில் குறிப்பிடுவதை பாருங்கள்;

رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا

என் இறைவனே! எனக்கும் என் தாய் தந்தைக்கும், நம்பிக்கை கொண்டவராக என் வீட்டில் நுழைந்தவருக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர நீ அதிகப்படுத்தாதே!''(அல்குர்ஆன் 71 : 28)

வசனத்தின் கருத்து : நபிமார்களுடைய உள்ளத்தின் விசாலத்தைப் பாருங்கள். உம்மத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த முஹப்பத்தை பாருங்கள். இறுதி நாள் வரை வரக்கூடிய முஃமினான ஆண்கள், பெண்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அக்கறை, பாசத்தை பாருங்கள்.

அவர்களுடைய பொதுவான துஆக்களில் ஒன்று, என் இறைவா! எனது ரப்பே! என்னை மன்னிப்பாயாக! எனது பெற்றோரை மன்னிப்பாயாக! என்னுடைய வீட்டில் முஃமினாக வந்து சேர்ந்து கொண்ட எல்லோரையும் மன்னிப்பாயாக! மறுமை நாள் வரை வரக்கூடிய முஃமினான ஆண்கள் பெண்கள் அனைவரையும் மன்னிப்பாயாக!

உனக்கு ஷிர்க் செய்யக்கூடிய அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே!

ஆகவே இந்த துஆவில் இஸ்திக்ஃபாரை வழமையாக்கிக் கொள்வதனுடைய முக்கியத்துவத்தை அறிவதோடு, இன்னும் சில விஷயங்களையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

ஒன்று இஸ்திக்ஃபார் கேட்பது. தனக்காகவும் கேட்கவேண்டும். தன்னுடைய பெற்றோருக்காக, தன்னுடைய பிள்ளைகளுக்காக, தன்னுடைய உறவுகள், நண்பர்களுக்காக, அதுபோன்று முஃமினான எல்லோருக்காகவும் நாம் மன்னிப்பு கேட்பது. இது அல்லாஹ்வுக்கு பிரியமான ஒரு அமல் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது நபிமார்கள் காலத்தால் முந்தியவர்களாக இருந்தாலும் சரி, அந்த நபிமார்களை ஈமான் கொண்டு ஏற்றுக் கொள்ளும்போது, அந்த நபிமார்களுடைய நல்ல துஆக்களில் நமக்கும் பங்கு உண்டு. முந்திச் சென்ற நபிமார்களை நிராகரிக்கக்கூடிய மக்களுக்கு அவர்களுடைய துஆக்களில் எந்த பங்கும் இருக்காது.

அடுத்ததாக அல்லாஹ்வின் அடியார்களே! அநியாயக்கார மக்கள், ஷிர்க் செய்யக்கூடிய மக்கள், அல்லாஹ்வின் அடியார்களுக்கு, அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு, துரோகம் செய்யக் கூடிய மக்கள் அவர்கள் எந்த காலத்தில் வாழ்ந்தாலும் சரி, நபிமார்களுடைய சாபத்திலிருந்து, அல்லாஹ்வுடைய சாபத்திலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.

அல்லாஹ்விடத்தில் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ,

وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا

அநியாயம் செய்யக் கூடிய மக்களுக்கு அல்லாஹ்! நீ நஷ்டத்தையே அதிகப்படுத்து. என்று அழிவையே நீ அதிகப்படுத்து. (அல்குர்ஆன் 71:28)

ஆகவே யார் ஷிர்க் செய்கிறார்களோ அவர்களுடைய ஆட்டமும், அழிச்சாட்டியமும் சில காலங்களுக்கு தான். இறுதியில் அவர்கள் மிகப் பெரிய கெட்ட முடிவை சந்திப்பார்கள். அழிவை சந்திப்பார்கள். அழிவைத் தவிர அவர்களுக்கு எதுவும் மிஞ்சாது.

மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாறை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். மூஸா அலைஹிஸ்ஸலாம் ஒருவரை கொலை செய்துவிட்டார்கள். கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. அடித்து அவனை திருத்த வேண்டும். அல்லது விலக்கி விட வேண்டும் என நினைத்தார்கள். அவனோ இறந்து விட்டான். மூசா அலைஹிஸ்ஸலாம் உடனே அல்லாஹ்விடத்தில் என்ன சொல்கிறார்கள்?

رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي

யா அல்லாஹ் இப்படி ஒரு செயலை செய்து எனக்கு நானே அநியாயம் செய்து விட்டேன்.என்னை மன்னித்து விடு!(அல்குர்ஆன் 28:16)

குற்றம் நடந்தது. உடனே அல்லாஹ்விடத்தில் முறையீடு. நம்முடைய நிலையை நினைத்துப் பாருங்கள்! (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் தஆலா நம்மை மன்னிக்க வேண்டும்.)

பாவம் செய்த அடுத்த நொடியில் அதுவும் வேண்டுமென்று அவர்கள் செய்யவில்லை. தன்னுடைய இனத்தவருக்கு உதவி செய்ய வேண்டுமென்று சென்றார்கள். எதிரி இனத்தை சேர்ந்தவன் அநியாயம் செய்து கொண்டிருந்தான். தன்னுடைய இனத்தை சேர்ந்தவன் மீது கொடுமை செய்து கொண்டிருந்தான். அவனை தட்டி விலக்கிவிட வேண்டும் என்று தட்டினார்கள். அவ்வளவுதான்.அவன் இறந்துவிட்டான். உடனே அந்த இடத்திலேயே மூஸா அலைஹி வஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் கை தூக்கி விட்டார்கள். இறைவா!நான் தப்பு செய்து விட்டேன். என்னை நீ மன்னித்துவிடு. அல்லாஹ் சொல்கிறான்.

فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

உடனே அல்லாஹ் அவரை மன்னித்து விட்டான்.அவனோ நிச்சயமாக மகா மன்னிப்பாளன். பெரும் கருணையாளன். (அல்குர்ஆன் 28:16)

அல்லாஹ் மன்னிப்பான் என்பதும் பெரும் கருணையாளன் என்பதும் நபிமார்களுக்கு மட்டுமல்ல. அல்லாஹ் என்ன சொல்கிறான்? மன்னிப்பு கேட்டார். மன்னித்து விட்டேன். நான் மகா மன்னிப்பாளன்.

எனவே மன்னிப்பு கேட்கக்கூடிய அல்லாஹ்விடத்தில் கருணையைக் கேட்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் தஆலா மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.

அது போன்று மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பொதுவான துஆக்களில் அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகிறான்;

قَالَ رَبِّ اغْفِرْ لِي وَلِأَخِي وَأَدْخِلْنَا فِي رَحْمَتِكَ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

என் இறைவா! என்னையும், என்னுடைய சகோதரனையும் மன்னித்துவிடு. எங்களை உன்னுடைய ரஹ்மத்தில் நீ சேர்த்துக்கொள். உன்னுடைய ரஹ்மத்தில் எங்களை நுழைத்து விடு. நீ கருணையாளர்களுக்கு எல்லாம் மகா கருணையாளனாக இருக்கிறாய். (அல்குர்ஆன் 7:151)

அதுபோன்றுதான் இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களுடைய வரலாற்றில் அல்லாஹு தஆலா நமக்கு சொல்லிக் காட்டுகிறான். அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கேட்பதும், மன்னிப்பை ஆதரவு வைப்பதும், இப்ராஹீம் நபியுடைய உயர்ந்த குணங்களில் எப்படி இருந்தது என்று சூரத்துஷ் ஷுஃராவுடைய 78வது வசனத்தில் இருந்து 82வரை உள்ள வசனங்களை ஓதி பாருங்கள்.

அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கேட்கும் போதும், அல்லாஹ்விடம் துஆ கேட்கும் போதும், அல்லாஹ்வைப் புகழ வேண்டும். அல்லாஹ் நமக்கு செய்த நிஃமத்துகளை அல்லாஹ்வுக்கு சொல்லிக் காட்ட வேண்டும்.

யா அல்லாஹ்! நீ எனக்கு இதை கொடுத்து இருக்கிறாய். நீ எனக்கு இதை கொடுத்தாய் என்று அல்லாஹ் நமக்கு செய்தவைகளை, அல்லாஹ் நம்மீது புரிந்து இருக்கக்கூடிய அருட்கொடைகளைஅல்லாஹ்விடத்தில் சொல்லி அவனைப் புகழ வேண்டும்.

الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ

என் இறைவன் அவன் தான் என்னைப் படைத்தான். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான். (அல்குர்ஆன் 26:78)

وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ

எனக்கு உணவு கொடுப்பவன் அவன் தான். எனக்கு ஆகாரம், நீர் கொடுப்பவன் அவன் தான். (அல்குர்ஆன் 26 : 79)

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

நான் நோயுற்றால் அவன்தான் என்னை குணப்படுத்துவான். (அல்குர்ஆன் 26 : 80)

وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ

அவன் தான் எனக்கு மவுத்தை கொடுப்பான். அவன் தான் எனக்கு ஹயாத்தை கொடுப்பான். (அல்குர்ஆன் 26 : 81)

وَالَّذِي أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ

மறுமைநாளில் என்னுடைய குற்றத்தை அவன் மன்னிப்பான் என்று அவனிடத்திலே நான் ஆசை வைக்கிறேன். (அல்குர்ஆன் 26 : 82)

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் எத்தகைய உயர்ந்த நபி!அல்லாஹ்வுடைய ஹலீல் என்பது தெரியும். இது போக இன்னும் அவர்களுடைய துஆக்கள் குர்ஆனிலே சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த எல்லா துஆக்களிலும் அல்லாஹ்விடத்தில் அவர்கள் மன்னிப்பை கேட்டிருக்கிறார்கள்.

யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய தண்டனை வரும் என்று அல்லாஹ்வுடைய எச்சரிக்கை இருந்தது. ஆனால் நபியை பொருத்தவரை எப்போது நீங்கள் வெளியேற வேண்டும்? வெளியேற வேண்டுமா, இல்லையா? என்ற அல்லாஹ்வுடைய கட்டளை வரவில்லை.

யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் வெளியே வந்துவிட்டார்கள். அல்லாஹ்வுடைய அதாப் அவர்களுக்கு இறங்கி இருக்கும் என நினைத்தார்கள். அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் அவர்கள் புறப்பட்டு விட்டார்கள். அல்லாஹ்வுடைய வேதனை இறங்கும் என்று இருந்தது. அல்லாஹ்வுடைய வேதனை இறங்கவில்லை.

ஏன்? அல்லாஹ் வேதனையை இறக்கவில்லை என்று கோபித்துக் கொண்டார்கள். புறப்பட்டு விட்டார்கள். அங்கு சென்றவுடன் கப்பலில் நடந்த செய்தி. அல்லாஹ் தஆலா குர்ஆனிலே நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். மீன் அவர்களை விழுங்கிவிட்டது. புரிந்துகொண்டார்கள். நாம் தப்பு செய்துவிட்டோம். நாம் குற்றம் இழைத்துக் கொண்டோம் என்று. உடனே அவர்களுடைய பண்பாட்டைப் பாருங்கள்;

فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

(ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருள்களிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார். (அல்குர்ஆன் 21 : 87)

வசனத்தின் கருத்து : இந்த இருள்களிலே அவர் யாரை அழைத்தார்? எந்த தர்காவையும் அழைக்கவில்லை. தனக்கு முன் சென்ற எந்த நபிமார்களையும், தன்னுடைய மூதாதையர்களையும் அவர்கள் அழைக்கவில்லை. யாரை அழைத்தாலும் யாரும் மன்னிப்பு கொடுக்க முடியாது. யாரும் கை கொடுக்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர.

அவர் அழைத்தது யாரை? அல்லாஹ்வை. யா அல்லாஹ்! என் இறைவா! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் தான் அநியாயம் செய்தவர்களில் ஒருவனாக ஆகி விட்டேன். என்னை மன்னித்துவிடு.

சகோதரர்களே! ஏன் நபிமார்களின் இந்த வரலாறுகளை அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான்? நாமும் தப்பு செய்கிறோம். ஆனால் அவர்கள் எப்படி அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்களோ, மன்னிப்பு கேட்டார்களோ, அதுபோன்று நாம் திரும்புகிறோமா? மன்னிப்பு கேட்கிறோமோ?

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட மன்னிப்பை பாருங்கள் .

رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

என் இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு ஒரு ஆட்சியை கொடு! அந்த ஆட்சி எனக்கு பின்னால் யாரும் தகுதியாக இருக்க கூடாது! நிச்சயமாக நீ வாரி வாரி வழங்கக்கூடிய மகா கொடைவள்ளல்.(அல்குர்ஆன் 38:35)

தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இருந்து ஒரு தவறு நடந்து விடுகின்றது. அல்லாஹ் உணர்த்திக் காட்டுகின்றான். தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கின்றான்;

وَظَنَّ دَاوُودُ أَنَّمَا فَتَنَّاهُ فَاسْتَغْفَرَ رَبَّهُ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ

இதற்குள் நிச்சயமாக நாம் தாவூதை சோதனைக்குள்ளாக்கி விட்டோம் என்று தாவூத் எண்ணி, தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும்படி கோரி, சிரம் பணிந்து வணங்கி தன் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தார்.(அல்குர்ஆன் 38 : 24)

யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பிள்ளைகள் யூசுஃப் நபிக்கு செய்த அநியாயங்களுக்காக தனது தந்தை இடத்திலேயே வந்து சொல்கிறார்கள்;

قَالُوا يَاأَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ

எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்பீர்களாக.நாங்கள் எல்லாம் தவறு செய்து விட்டோம். குற்றம் செய்து விட்டோம். (அல்குர்ஆன் 12 : 97)

யாகூப் அலைஹிஸ்ஸலாம் சொல்கிறார்கள்.

قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيم

நிச்சயமாக நான் உங்களுக்காக எனது ரப்பிடத்தில் பாவ மன்னிப்பு கேட்பேன்.நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன். மகா கருணையாளன். (அல்குர்ஆன் 12 : 98)

இப்படியாக நபிமார்களுடைய வரலாறுகள், நல்லோர்களுடைய வரலாறுகள் இன்னும் இருக்கின்றன. இதிலிருந்து நாம் தெரியக்கூடிய, அறிந்துகொள்ளக்கூடிய படிப்பினைகள், பாடங்கள்என்ன?

ஒன்று,நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் ஏதோ ஒரு வகையில் தவறு நடந்து விடுகிறது. அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நம் மீது கடமையான அமல்களை செய்வதில்நம்மிடம் ஏற்படக்கூடிய குறைகள்,அதுபோன்று கடந்த காலங்களில் ஃபர்ளான காரியங்களை எத்தனைகளை விட்டிருப்போம்?தடுக்கப்பட்ட எத்தனை காரியங்களை நாம் செய்திருப்போம்?அல்லாஹ்வை அறியாமல் நாம் கழித்த காலங்களை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வை இந்த மார்க்கத்தை சரியான முறையிலே அறியாமல் செய்த எவ்வளவு செயல்கள் நம்மிடத்தில் இருக்கின்றன.

இந்த அனைத்தையும் நினைத்து அல்லாஹ்விடத்தில் நாம் நம்முடைய குறைகளை சொல்லி சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும்.அது போன்று மன்னிப்பு கேட்பதை நம்முடைய ஒரு அமலாக, அல்லாஹ்வுக்கு செய்யக்கூடிய ஒரு இபாதத்தாக, தொடர் வணக்கமாக நாம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் மூலமாக அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் நாம் இருப்போம். அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் இருப்போம். பாவங்களின் மீது நமக்கு ஒரு வெறுப்பு ஏற்படும். அந்த பாவங்களை நெருங்காமல் இருப்போம். பாவ சூழ்நிலைகள் ஏற்படும் போது அல்லாஹு தஆலா நாம் செய்த இஸ்திக்ஃபாரின் பொருட்டால் அந்த பாவ சூழ்நிலைகளில் இருந்து அல்லாஹு தஆலா நம்மை விலக்கி பாதுகாப்பான்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவனிடத்திலே அதிகம் அதிகம் பாவ மன்னிப்பு கேட்டு திரும்பக்கூடிய நல்லடியார்களில் அல்லாஹ் என்னையும், உங்களையும், நமது குடும்பத்தாரையும் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، قَالَ: لَقِيتُ عُقْبَةَ بْنَ مُسْلِمٍ، فَقُلْتُ لَهُ: بَلَغَنِي أَنَّكَ حَدَّثْتَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ قَالَ: «أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ»، قَالَ: أَقَطْ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: فَإِذَا قَالَ: ذَلِكَ قَالَ الشَّيْطَانُ: حُفِظَ مِنِّي سَائِرَ الْيَوْمِ (سنن أبي داود466 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنِي سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلْيَقُلْ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ، فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلْيَقُلْ: اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ"(سنن ابن ماجه 773 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/