மன்னிப்புத் தேடுவதின் அவசியம் இன்னும் பலன்கள் | அமர்வு 1/2 | Tamil Bayan - 649
بسم الله الرحمن الرّحيم
மன்னிப்புத் தேடுவதின் அவசியம் இன்னும் பலன்கள், அமர்வு 1
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!அல்லாஹு தஆலாவைப் பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை, அல்லாஹ்வுடைய தக்வாவை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாகஇந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம்முடைய அனைத்து பாவங்களையும் மன்னிப்பானாக! பாவங்கள் மன்னிக்கப்பட்ட நல்லடியார்களில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் கூறுவதாக ஒரு ஹதீஸ் குத்ஸியை நமக்கு கற்றுத் தருகின்றார்கள். அந்த நீண்ட ஹதீஸ் குத்ஸியிலே இடம் பெற்றிருக்கின்ற ஒரு வாசகம், அல்லாஹுத்தஆலா தன்னுடைய அடியார்களைப் பார்த்து பேசுகிறான்;
يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ
நம்மை படைத்த நம்முடைய ரப்பாகிய அல்லாஹு தஆலா, நம்மை அழைத்து இப்படி செய்தி சொல்கிறான்;(எந்த ரப்புடைய கண்பார்வையிலிருந்து நம்முடைய செயல்கள் மறையாது, அந்த செயல்கள் எங்கு செய்தாலும் சரி,நம்முடைய எண்ணங்கள் அல்லாஹ்வுடைய அறிவிலிருந்து மறையாது.நம்முடைய எந்த ஒன்றும் அல்லாஹ்வுடைய இல்மிலிருந்து, அல்லாஹ்வுடைய ஞானத்திலிருந்து மறைந்து விடாது)
நம்மை படைத்த நம்முடைய ரப்பாகிய அல்லாஹு தஆலா நம்மிடத்திலே இப்படி பேசுகிறான்;
என்னுடைய அடியார்களே!நீங்கள் தவறு செய்கிறீர்கள்;நீங்கள் பாவம் செய்கிறீர்கள்;இரவிலும் பாவம் செய்கிறீர்கள்;பகலிலும் நீங்கள் பாவம் செய்கிறீர்கள்;நானோ பாவங்களை எல்லாம் மன்னிக்கின்றேன்.ஆகவே இப்போது நீங்கள்என்னிடத்திலே பாவமன்னிப்பு தேடுங்கள்.நான் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னித்து விடுகிறேன்;மறைத்து விடுகிறேன்;போக்கிவிடுகிறேன்.
அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2577.
அல்லாஹ்வின் அடியார்களே! எவ்வளவு பெரிய நற்செய்தியை அல்லாஹு தஆலா தன்னுடைய தூதர் மூலமாக நமக்கு வழங்கியிருக்கிறான்.
நம்முடைய நஃப்ஸ்,அதுபோன்று ஷைத்தானுடைய ஊசலாட்டங்கள்,நாம் இருக்கக்கூடிய சூழ்நிலைகள்,அதுபோன்று நாம் பழகிய சில பழக்கங்கள்,நம்மை சுற்றி இருக்கக்கூடிய மக்கள்,இப்படியாக ஏதாவது ஒரு காரணத்தால்அடியான் காலையிலோ, மாலையிலோ, பகலிலோ, இரவிலோ, அவன் பாவத்தால் சூழப்பட்டுவிடுகிறான்.
இங்கு ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும்; பாவம் செய்யாமல் இருப்பது அல்ல; பாவம் செய்த பிறகு மனநிலை எப்படி இருக்கிறது? பாவமே செய்யாமல் இருப்பது என்பது முடியாது. ஏதோ மன இச்சையால் தூண்டப்பட்டு, ஆசையால் தூண்டப்பட்டு, உணர்வுகளால் தூண்டப்பட்டு இப்படியாக ஒரு சூழ்நிலை மனிதர்களுக்கு ஏற்படும்.
அல்லாஹ்வின் அடியார்களே! பரிசுத்தமான இடம் சொர்க்கம்.அல்லாஹ்விற்கு அருகாமை,நேரடியாக அல்லாஹ்வின் கரத்திலிருந்து படைக்கப்பட்டு,அல்லாஹ்வால் உயிரூட்டப்பட்டு, அல்லாஹ்விடத்திலே பேசிக்கொண்டிருந்தார்கள் ஆதம் (அலை) அவர்கள். ஆசையினால் ஷைத்தானுடைய ஊசலாட்டங்களால் பாவம் செய்துவிட்டார்கள்.
وَعَصَى آدَمُ رَبَّهُ
ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறுசெய்து வழி தவறிவிட்டார். (அல்குர்ஆன் 20:121)
இங்கே கவனிக்க வேண்டியது என்ன? பாவத்திற்கு பிறகு பயம் வருகிறதா? பாவத்திற்கு பிறகு அடியான் பதறுகிறானா? அவனுடைய உள்ளம் நடுங்குகிறதா? அவனுடைய கண் கலங்குகிறதா? அல்லாஹ்வை நோக்கி ஓடி வருகிறானா?
யா அல்லாஹ்! நான் பாவம் செய்துவிட்டேன்; என்னை மன்னிப்பாயாக! யா அல்லாஹ்! நான் தவறு செய்துவிட்டேன்; என்னை மன்னிப்பாயாக! யா அல்லாஹ்! நான் எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; என்னை மன்னிப்பாயாக! என்று பயந்தவனாக, பணிந்தவனாக,பாவமன்னிப்பு கேட்டவனாக,அல்லாஹ்விடத்திலே ஓடி வருகிறானா? இதுதான் இங்கே முக்கியம்.
இது இருந்தால் அல்லாஹு தஆலா அந்த அடியானின் பாவங்களை மன்னித்து விடுவான்.அந்த அடியாரை தன்பக்கம் நெருக்கமாக்கிக் கொள்வான்.மீண்டும் அந்த அடியானின் மீது தனது அன்பையும் அருளையும் பொழிந்து விடுவான்.
இன்று பலர் நினைப்பதென்ன? நம்முடைய பாவங்களால் என்ன ஆகிவிடப்போகிறது? மற்றவர்களெல்லாம் எவ்வளவோ பாவங்கள் செய்கிறார்கள்; நான் செய்யக்கூடிய பாவமென்ன?குறைவு தானே என்று.
சகோதரர்களே! பாவத்தின் சிறுமையைப் பார்க்காதீர்கள்; பாவம் யாருக்கு எதிராக செய்யப்படுகிறது? அந்தப் பாவத்தில் யாருடைய கட்டளை மீறப்படுகிறது? எந்த ரப்புக்கு மாறு செய்யப்படுகிறது? என்பதைப் பார்க்க வேண்டும்.
ஆகவே தான் அறிஞர்கள் கூறுகிறார்கள் ;
(لا صغيرة مع إصرار)
சிறுபாவமாக இருந்தாலும் அது தொடர்ந்து செய்யப்பட்டால் அது சிறுபாவமாக இருக்காது; பெரும் பாவமாக மாறிவிடும்.
சிறுபாவத்தை ஒருமுறை செய்யும்போது அது சிறுபாவமாக இருக்கும். உளு செய்வதால், ஒரு தொழுகைக்கு பிறகு ஒரு தொழுகை தொழுவதால், அந்த சிறு பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டுக் கொண்டே போகும்.
ஆனால்,அதே சிறுபாவம்மனிதன் விடாப்பிடியாக, வம்புத்தனமாக, தொடர்ந்து மனமுரண்டாக செய்வானேயானால்அந்த சிறு பாவம் பெரும்பாவத்துடைய பட்டியலில் சேர்ந்துவிடுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வுடைய வசனத்தின் வெளிச்சத்திலிருந்து,
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
அன்றி, அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்களுடைய பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வையன்றி (இத்தகையவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.) (அல்குர்ஆன் 3 : 135)
பாவங்களை தொடரமாட்டார்கள் என்று நல்லவர்களின் அடையாளத்தை அல்லாஹ் கூறுகிறான்.
பாவம் செய்த பிறகு அடியான் பதற வேண்டும்; பயப்பட வேண்டும்; அல்லாஹ்விடத்திலே மன்னிப்பு கேட்க வேண்டும். என்ன ஆகிவிடப்போகிறது என்று இருந்துவிடக்கூடாது. உள்ளம் கருமையாகிவிடும்; ஈமானுடைய ஒளி அணைக்கப்பட்டுவிடும். உள்ளத்துடைய விசாலம் குறுகலாக்கப்பட்டு விடும்; அவனுடைய வாழ்வாதாரம் நெருக்கடியாக்கப்படும்; அவனுடைய வணக்க வழிபாடுகளிலிருந்து அவனுடைய ஈமானிய உணர்வுகள் ஈமானிய சுவைகள் அகற்றப்பட்டு விடும்; பாவம் சாதாரணமானதல்ல.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள்அல்லாஹ் கூறுவதாக, பாவமன்னிப்பை நமக்கு ஆர்வமூட்டி கூறுவதை பாருங்கள்;
ரப்புல் ஆலமீன் கூறுகிறான் ;
" قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ، وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لَا تُشْرِكُ بِي شَيْئًا لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً "
ஆதமுடைய மகனே! நீ என்னிடத்திலே பிரார்த்தனை செய்து, நீ என்னிடத்திலே பாவமன்னிப்பு கேட்டு என்னை ஆதரவு வைத்துக் கொண்டிருக்கும் வரை நான் உன்னை மன்னித்துவிடுவேன். உன்னிடத்திலே எவ்வளவு பெரிய பாவம் இருந்தாலும் சரி, எனக்கு அதைப்பற்றி எந்த பொருட்டும் இல்லை.
(என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்விடத்திலே பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டே, துஆ கேட்டுக் கொண்டே, ஆதரவு வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அடியானின் உள்ளத்திலே நிராசை வந்துவிடக்கூடாது. எனக்கு மன்னிப்பு கிடைக்குமா? அல்லாஹ் என்னை மன்னிப்பானா? என்று அல்லாஹ்வின் மீது அவநம்பிக்கை வந்துவிடக்கூடாது.)
மேலும், அல்லாஹ் கூறுகிறான் ;
ஆதமுடைய மகனே! உன்னுடைய பாவங்கள் வானத்தின் மேகம் வரை வந்துவிட்டாலும் சரி, நீ என்னிடத்திலே மன்னிப்பு கேட்டால் நான் உன்னை மன்னிப்பேன். எனக்கு எந்த பொருட்டும் இல்லை. ஆதமுடைய மகனே! நீ பூமி நிரம்ப பாவங்களை கொண்டு வந்தாலும், எனக்கு இணைவைக்காத நிலையில் என்னை சந்தித்தால், நான் உன்னை மன்னித்துவிடுவேன். பூமி நிரம்ப மன்னிப்பை கொண்டு உனக்கு நான் மன்னிப்பு வழங்குவேன்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3540, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
எவ்வளவு அழகாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அடியார்களாகிய நமக்கு பாவமன்னிப்புடைய அவசியத்தை சொல்லித் தருகிறான். பாவமன்னிப்புடைய சிறப்பை அல்லாஹ் நமக்கு சொல்லித் தருகிறான்.
இன்று நாம் பார்க்கிறோம்;நம்முடைய வாழ்க்கை, இந்த பாவமன்னிப்பிலிருந்து தூரமாக இருக்கிறது.பலர் என்ன எண்ணுகிறார்கள்;நாமெல்லாம் பாவம் செய்கிறோமா? என்பதாக.எத்தனையோ பாவங்கள் அவை பாவமென்று அறியாமலேயே நம்முடைய வாழ்க்கையில் இடம்பிடித்துக் கொண்டிருக்கின்றன. நம்முடைய கண்களால், நம்முடைய செவிகளால், நம்முடைய உள்ளத்தால், நம்முடைய கொடுக்கல் வாங்கல்களில், நம்முடைய இரத்த உறவுகளில், நம்முடைய தொழில்துறைகளில் இப்படியாக பல பாவங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி நாம் அறியாமலேயே இருக்கின்றோம்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள்; இமாம் புகாரி (ரஹி) ஒரு ஹதீஸை பதிவு செய்கிறார்கள்; அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) கூறுவதாக,
«إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي، وَإِنِّي لَأَسْتَغْفِرُ اللهَ، فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ»
நான் ஒரு நாளைக்கு நூறு முறை அல்லாஹ்விடத்திலே இஸ்திக்ஃபார் செய்கிறேன்.
அறிவிப்பாளர் : அபூ புர்தா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2702.
கண்ணியத்திற்குரியவர்களே! சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களே நூறு முறை ஒரு நாளைக்கு தனியாக இஸ்திக்ஃபார் செய்வார்கள். அதுபோக மஜ்லிஸிலே உட்கார்ந்திருக்கும்போது,
رب اغفر لي , استغفر الله
இறைவா என்னை மன்னிப்பாயாக! அல்லாஹ்விடத்தில் நான் பாவமன்னிப்பு தேடுகிறேன்.
என்ற வார்த்தைகளை தங்களுடைய வாழ்நாளிலே அன்றாடம், உட்கார்ந்திருக்கும் போது, எழும்போது,பிறரிடத்திலே பேசும்போது இதை சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்றால் எந்தளவு அல்லாஹ்வை அவர்கள் பயந்திருக்கிறார்கள்! அவர்கள் எதையெல்லாம் பாவமாக தவறாக நினைத்திருப்பார்கள்; யோசித்துப் பாருங்கள்!
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் இந்த பாவமன்னிப்புடைய அவசியத்தை, பாவமன்னிப்புடைய சிறப்பை, இதனுடைய முக்கியத்துவத்தை வலியுறுத்தும் போது தங்களுடைய ஃபத்வாவிலே குறிப்பிடக்கூடிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம்.
இந்த இஸ்திக்ஃபார், அடியான் அல்லாஹ்விடத்திலே பாவமன்னிப்பு தேடுவது என்பது அந்த அடியானை அல்லாஹ்விற்கு வெறுப்பான செயலிலிருந்து வெளியேற்றி அல்லாஹ்விற்கு விருப்பமான செயலுக்கு கொண்டு வருகிறது.
என்ன விஷயம் சொல்ல வருகிறார்கள்? நாம் அல்லாஹ்விற்கு பிரியமான அமல்களை அதிகம் செய்ய வேண்டும் என்றால், நம்முடைய வாழ்க்கையில் இபாதத்துகள் அதிகம் வேண்டும் என்றால், அமலே ஸாலிஹ் நம்முடைய வாழ்க்கையிலே அதிகம் வேண்டும் என்றால், குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது, தர்மம் செய்வது இப்படியாக நல்லறங்கள், நன்மைகளுடைய பட்டியல்கள், இது நம்முடைய வாழ்க்கையிலே அதிகமாக வேண்டும் என்றால் அதற்கு இஸ்திக்ஃபார் செய்வது முக்கியம். நம்மிடத்திலே உள்ள தவறுகள், பாவங்கள், குற்றங்கள், குறைகள் இதிலிருந்து நாம் வெளியேற வேண்டும் என்றால்அதற்கு நமக்கு தேவை இஸ்திக்ஃபார்.
இந்த இஸ்திக்ஃபாரை யார் தொடர்ச்சியாக செய்கின்றார்களோ,இந்த அமலிலே யாருக்கு கவனம் இருக்கிறதோ, அவர்களுக்கு இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) உடைய கூற்று புரியவரும்.
இஸ்திக்ஃபார் செய்வதால் அல்லாஹு தஆலா ஒரு அடியானை பாவங்களிலிருந்து,அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களிலிருந்து வெளியேற்றி அல்லாஹ்விற்கு பிடித்தமான நன்மையான செயல்களிலே ஈடுபடுத்துகின்றான்.
அதுபோன்று அந்த அடியான்அவனுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அமல் செய்கிறார். ஆனால் அந்த அமல் குறைவான அமல். தொழுகிறான்; ஆனால் அந்த தொழுகையில் அவனுக்கு கவனம் இல்லை. இன்னபிற அமல்கள் செய்கிறான்; ஆனால் அந்த அமல்கள் எல்லாம் குறைவான அமல்களாக இருக்கின்றன. ஒரு மனிதன் இஸ்திக்ஃபாரை தொடர்ந்து செய்கின்ற காரணத்தால், தன்னுடைய அமல்களிலுள்ள குறை நீங்கி, அந்த அமல்களை எப்படி சரிவர செய்ய வேண்டுமோ, செவ்வன செய்ய வேண்டுமோ, சிறப்பாக செய்ய வேண்டுமோ, அந்த அடிப்படையில் அந்த அமல்களை செய்வதற்குரிய வாய்ப்பு அந்த அடியானுக்கு கொடுக்கப்படுகிறது.
அடியான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரத்திலும், ஒவ்வொரு நிமிடத்திலும், நொடியிலும் இந்த இஸ்திக்ஃபார் செய்ய செய்ய, அல்லாஹ்வுடைய இல்ம், அல்லாஹ்வை பற்றி உண்டான ஞானம் அவனுக்கு அதிகமாகிறது. அல்லாஹ்வுடைய தீனைப் பற்றி உண்டான ஞானம் அவனுக்கு அதிகமாகிறது.
பிறகு அல்லாஹ்வுடைய அந்த ஞானமும், அந்த தீனுடைய பற்றும், தீனுடைய அறிவும் அவனுக்கு கிடைத்ததை அவன் தன்னுடைய வாழ்க்கையிலே அன்றாடம் பார்த்துக் கொண்டே இருப்பான். அவனுடைய வாழ்க்கையிலே அவன் உணருவான். அவன் உண்ணும் போது, உறங்கும் போது, அவன் பிறரிடத்திலே பேசும்போது, எல்லா நிலைகளிலும் அவனுடைய உள்ளம் பண்பட்டதாக, மென்மையானதாக, அல்லாஹ்வுடைய அச்சத்தை உணர்ந்ததாக இருக்கும்.
மேலும் சொல்கிறார்கள்;ஆகவே தான் ஒரு அடியான் எப்போதும் காலையிலும் மாலையிலும் என எல்லா நேரங்களிலும் அவன் அல்லாஹ்விடத்திலே இஸ்திக்ஃபார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இந்த இஸ்திக்ஃபார் நன்மைகளை இழுத்துக் கொண்டு வரக்கூடியது; அல்லாஹ்வுடைய புண்ணியங்களை இழுத்துக் கொண்டு வரக்கூடியது; பிரச்சினைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கக் கூடியது. இன்னும் உள்ளம் சார்ந்த அமல்களில் அடியானுக்கு மிகப்பெரிய வலிமையை கொடுக்கக்கூடியது. என்று இஸ்திக்ஃபாரைப் பற்றி இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தங்களுடைய மஜ்மூஉல் ஃபத்தாவா என்ற நூலிலே கூறுகின்றார்கள்.
சகோதரர்களே!இஸ்திக்ஃபார் அவ்வளவு மிக முக்கியமான ஒன்று. அல்லாஹு தஆலா குர்ஆனிலே சொல்லக்கூடிய பல வசனங்களை நாம் பார்க்கலாம்; பல அமல்களை அல்லாஹு தஆலா குர்ஆனிலே சொல்கிறான்.
அதிலே குறிப்பாக இஸ்திக்ஃபாரைப் பற்றி அல்லாஹு தஆலா சொல்லும்போது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக கூறுகின்றான்.சில இடங்களிலே கட்டளைகளாக அல்லாஹ் சொல்கின்றான். சில இடங்களிலே ஆர்வமூட்டி அல்லாஹ் கூறுகிறான். ஸூரத்துல் பகராவுடைய 199-வது வசனத்தைப் படித்துப் பாருங்கள்.
وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
அல்லாஹ்விடத்திலே பாவமன்னிப்பு கேளுங்கள்; அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக மகா கருணையாளனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:199)
அதுபோன்று ஸூரா ஹூதிலே அல்லாஹ் கூறுகிறான் ;
وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ
உங்களது ரப்பிடத்திலே பாவமன்னிப்பு கேளுங்கள்; திருந்தி அவன் பக்கம் திரும்பி வந்துவிடுங்கள். (அல்குர்ஆன் 11:3)
அதுபோன்று ஸூரா ஃபுஸ்ஸிலத்திலே அல்லாஹ் சொல்கிறான் ;
فَاسْتَقِيمُوا إِلَيْهِ وَاسْتَغْفِرُوهُ
நீங்கள் அவனுடைய மார்க்கத்திலே நேராக நிலையாக உறுதியாக நில்லுங்கள். நீங்கள் அவனிடத்திலே பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டிருங்கள்.(அல்குர்ஆன் 41 : 6)
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பல நல்லடியார்களை அல்குர்ஆனிலே புகழ்கிறான். அதிலே குறிப்பாக அல்லாஹு தஆலா அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடக்கூடிய அந்த الْمُسْتَغْفِرِينَ (முஸ்தக்ஃபிரீன்களை)மிக சிறப்பாக அல்லாஹ் புகழ்கிறான்.
ஸூரா ஆல இம்ரானிலே அல்லாஹ் கூறுகிறான் ;
الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنْفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுகிறவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கிறவர்களாகவும், ‘ஸஹர்' நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகிறவர்களாகவும் இருக்கின்றனர். (அல்குர்ஆன்3 : 17)
الْقَانِتِينَ-அல்லாஹ்விற்கு பணிந்து நடப்பவர்கள், உள்ளத்தில் இருக்கக்கூடிய அந்த பணிவு, நான் ஒரு அடிமை, அல்லாஹ் என்னுடைய எஜமானன்,
அவனுடைய செல்வமோ, அவனுடைய பதவியோ, அவனுக்கு இருக்கக்கூடிய மக்களுடைய அந்தஸ்தோ அவனுடைய உள்ளத்திலே பெருமையை,ஆணவத்தை,அகம்பாவத்தை,கர்வத்தை கொடுத்துவிடாது.
தன்னை ஒரு அடிமையாக நினைத்து அல்லாஹ்விற்கு அவனுடைய சட்டத்திற்கு கட்டளைகளுக்கு தன்னை பணிந்தவனாகவே தன்னை உணருவான். எப்போதும் யாருக்கு முன்னாலும் தன்னை பெருமையடிக்கும் விதமாக கர்வமாக அகம்பாவமாக நடந்து கொள்ள மாட்டான். அவர்களை அல்லாஹ் சொல்லி காட்டுகிறான்;
இறுதியாக ரப்புல் ஆலமீன் சொல்கிறான்;ஸஹருடைய நேரங்களில் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கிறார்களே, இஸ்திக்ஃபார் செய்கிறார்களே, அவர்கள் அல்லாஹ்விடத்திலே புகழுக்குரியவர்கள்.
இதே விஷயத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஸூரா தாரியாத்திலும் சொல்கிறான் ;
وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து இறைவனை வணங்கி, தங்கள் இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.(அல்குர்ஆன் 51 : 18)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹுத்தாலா உலக வாழ்க்கையில் மூழ்கி இருக்கக்கூடிய நம்மை சில நேரங்களில் தட்டி எழுப்புகிறான்; அச்சுறுத்துகிறான்; எச்சரிக்கை செய்கிறான்;நமக்காக சில அழைப்புகளை அல்லாஹ் கொடுக்கிறான்;அந்த அழைப்புகளிலே ஒன்று தான்;
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சொர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறையச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது.(ஆலஇம்ரான் 3 : 133)
அல்லாஹு தஆலா ஸூரா இப்ராஹிமிலே இப்படி கேட்கிறான்;
أَفِي اللَّهِ شَكٌّ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَدْعُوكُمْ لِيَغْفِرَ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ
வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்குச்) சந்தேகம்? அவன் உங்கள் குற்றங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கிறான்.(அல்குர்ஆன் 14 : 10)
வசனத்தின் கருத்து : வானங்களை பூமியை படைத்த அல்லாஹ்வின் விஷயத்திலா உங்களுக்கு சந்தேகம்?
மனிதர்கள், படைத்த ரப்புடைய விஷயத்தில் சந்தேகப்படுகிறார்கள். ரப்பு இருக்கிறானா?என்று.சிலர் ரப்பு ஒருவன் தானா?ஒருவன் மட்டும் எப்படி இந்த உலகத்தை பிரபஞ்சத்தை இயக்க முடியும்?என்று, இன்னும் சிலரோ இன்று இருக்கக்கூடிய தர்கா வணங்கிகளைப் போல,கப்ரு வணங்கிகளைப் போல,அவ்லியாக்களை நம்பிக் கொண்டு, இறைநேசர்களை நம்பிக்கொண்டு அல்லாஹ்வை மறந்துவிட்டு இறைநேசர்களுடைய அடக்கஸ்தலங்களிலே சென்று மன்றாடிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுடைய நிலை என்ன?
அல்லாஹ்விடத்திலே நாம் எப்படி நேரடியாக கேட்க முடியும்? ஒரு இறைநேசருடைய துணையில்லாமல் பொருட்டில்லாமல் நாம் எப்படி அவனை நெருங்க முடியும்? நாம் அல்லாஹ்விடத்திலே பேசுவதற்கே துஆ கேட்பதற்கே தகுதி இல்லாதவர்கள்.நாமெல்லாம் நமக்கு எது வேண்டுமோ அதை இந்த அவ்லியாக்களிடத்தில் சொன்னால் போதும்.
பாவமன்னிப்பு தேவை என்றாலும் சரி,தேவைகள் நிறைவேறவேண்டும் என்றாலும் சரி,எதுவாக இருந்தாலும் சரி நாம் நேரடியாக அல்லாஹ்விடத்திலே கேட்க முடியாது; கேட்க கூடாது.
நாம் இந்த தர்காக்களுக்கு சென்று,இந்த மகான்கள் அடங்கியிருக்கின்றார்களே, அவர்களுடைய கப்ருகளுக்கு சென்று அவர்களிடத்தில் தான் நாம் சொல்ல வேண்டும்.அவர்கள் நம்மைப் பற்றி அல்லாஹ்விடத்திலே சொல்லி நமக்கு மன்னிப்பை வாங்கித் தருவார்கள்;சொர்க்கத்தை வாங்கித் தருவார்கள்;நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவார்கள்.என்றெல்லாம் நம்பி இருக்கிறார்களே அந்த முஷ்ரிக்குகளும் இதிலே வருவார்கள்.
அல்லாஹ்வுடைய எச்சரிக்கையிலே அல்லாஹ் கேட்கிறான் ;
வானங்களை பூமியை படைத்த அல்லாஹ்வின் விஷயத்திலா உங்களுக்கு சந்தேகம்?! அவன் ஒருவன் தான். அவன் இரண்டு பேரல்ல;மூன்று பேரல்ல;அவனுக்கு இணை துணையல்ல;அவன் பாவங்களை மன்னிப்பதற்கு உங்களுக்கு அவனுடைய அருட்கொடைகளை வழங்குவதற்கு யாருடைய பரிந்துரையும் அவனுக்கு தேவையில்லை. யாருடைய பரிந்துரையும் அவனுக்கு தேவையில்லை.
உங்களை எப்படி தாயின் வயிற்றிலே யாருடைய பரிந்துரை இல்லாமல் படைத்தானோ,ஒவ்வொரு படைப்பையும் யாருடைய பரிந்துரை இல்லாமல் யாருடைய சிபாரிசு இல்லாமல் எப்படி படைத்து அந்த படைப்புக்கு உண்டான தேவைகளை அவன் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறானோ அப்படித்தான் நம்முடைய துஆக்களை அல்லாஹுத்தஆலா, அவனுடைய அருளால், அவனுடைய கருணையால் அங்கீகரிக்கின்றான். நம்முடைய பாவமன்னிப்பை அவனுடைய அருளால் ஏற்றுக் கொண்டு நமக்கு மன்னிப்பை வழங்குகிறானே தவிர யாருடைய பரிந்துரையும் தேவையில்லை.
இணைவைத்தலை விட,இறைநிராகரிப்பை விட உலகத்திலே ஒரு பெரிய பாவம் இருக்கிறதா? அல்லாஹ்வுடைய இந்த பிரபஞ்சத்திலே, அல்லாஹ் படைத்த இந்த உலகத்திலே ஷிர்க்கை விட,அல்லாஹ்விற்கு இணை கற்பித்தலை விட மிகப் பெரிய பாவம் எதுவுமில்லை.அந்த இணை கற்பித்தலையே அடியான் நான் இதிலிருந்து விலகிவிட்டேன்;என் ரப்பே!என்னை மன்னித்து விடு என்று சொன்னால் உடனடியாக அவனை மன்னிப்பது மட்டுமல்ல.அவன் அந்த நேரத்திலேயே இறந்து விட்டால் அவனுக்கு சொர்க்கம் நிச்சயம்.அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)சொன்னார்கள்;
«مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ»
காஃபிர்,ஒரு முஷ்ரிக் லா இலாஹ இல்லல்லாஹ் கூறுகிறான்;அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு மரணித்து விடுகின்றான்;கண்டிப்பாக அவன் சொர்க்கம் செல்வான். (1)
அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3116, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
அல்லாஹ்வின் அடியார்களே! எப்படி ரப்பு அழைக்கிறான் பாருங்கள்;
அவன் உங்களை அழைக்கிறான். இணை வைப்பவர்களாக இருந்தாலும் சரி, இறை நிராகரிப்பாளர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, உங்களுடைய ரப்பு உங்களை நேரடியாக நீங்கள் அவனிடத்திலே மன்னிப்பு கேட்டு அவன் உங்களை மன்னிப்பதற்கு அழைக்கிறான்.
உங்களை உங்களுடைய பாவங்களிலிருந்து போக்கி சுத்தப்படுத்தி உங்களை மன்னிப்பதற்காக. (அல்குர்ஆன் 14 : 10)
அல்லாஹ்வுடைய நெருக்கம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், அல்லாஹ்வுடைய அன்பு நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், நன்மைகளை நாம் அதிகப்படுத்த வேண்டும் என்றால், பாவங்களின் மீது வெறுப்பும் பாவங்களை விட்டு விலகுதல் நமக்கு வேண்டும் என்றால், இந்த இஸ்திக்ஃபார் நமக்கு மிக முக்கியம்.
இதை காலையில் மாலையில், இரவில் பகலில், நாம் நடக்கும்போது, உட்காரும் போது, வியாபாரங்களில், தொழில் துறைகளில், எப்படி எந்த நேரத்தில் இருக்கிறோமோ நாம் இந்த இஸ்திக்ஃபார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.நமக்கு இந்த இஸ்திக்ஃபாரை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா நம்முடைய பாவங்களை மன்னித்து, நம்முடைய நன்மைகளை ஏற்று சொர்க்கத்தில் நம்முடைய இடத்தை ஆக்கி தருவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
ஹதீஸின் பொருள் : யாருடைய இறுதி வார்த்தை லா இலாஹ இல்லல்லாஹ் என்று இருக்குமோ அவர் சொர்க்கம் செல்வார்.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/