HOME      Khutba      பாவமன்னிப்பு தேடுவதின் சிறப்புகள் | Tamil Bayan - 651   
 

பாவமன்னிப்பு தேடுவதின் சிறப்புகள் | Tamil Bayan - 651

           

பாவமன்னிப்பு தேடுவதின் சிறப்புகள் | Tamil Bayan - 651


بسم الله الرحمن الرّحيم

பாவமன்னிப்பு தேடுவதின் சிறப்புகள்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

அல்லாஹுத்தஆலா உடைய பயத்தை தக்வாவை எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக,அல்லாஹ்விடத்தில் எனக்கும் உங்களுக்கும் பாவமன்னிப்பு தேடியவனாக,அல்லாஹ்விடத்தில் எனக்கும் உங்களுக்கும் பரிசுத்தமான கலப்பற்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட தவ்பாவை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை தூரமாக்குவானாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் தூரத்தை ஏற்படுத்தியது போன்று.

அல்லாஹுத்தஆலா நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை சுத்தப்படுத்துவானாக!பாவங்கள் மன்னிக்கப்பட்ட, அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற நல்லோரில் என்னையும் உங்களையும் நம்முடைய பெற்றோரையும், குடும்பத்தாரையும்,சந்ததிகளையும் அல்லாஹுத்தஆலா ஆக்கியருள்வானாக!ஆமீன்.

அடியான் அல்லாஹ்விடத்தில் தான் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் தவறு செய்யாமல் இருப்பதற்காக.

தவ்பா இஸ்திக்ஃபார் செய்வதின் மூலமாக அல்லாஹ்விடத்தில் தனக்கு ஒரு பெரிய நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இஸ்திக்ஃபார் என்பது இது ஒரு தனி இபாதத்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களுடைய ஒரு செயலை இமாம் புகாரி (ரஹி) பதிவு செய்கிறார்கள்;அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) தன்னைப் பற்றி நமக்கு கூறுகிறார்கள்;

«وَاللَّهِ إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي اليَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً»

நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு எழுபது முறைகளுக்கு மேலாக நான் அல்லாஹ்விடத்தில் இஸ்திக்ஃபார் தவ்பா கேட்கிறேன் என்று அல்லாஹ் வுடைய தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6307.

நூறல்ல;எத்தனை ஆயிரங்கள் முறை இஸ்திக்ஃபாரையும் தவ்பாவையும் நாம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

அபூபக்ர் (ரலி) அவர்களுடைய ஒரு சம்பவத்தை இமாம் புகாரி இமாம் முஸ்லிம் (ரஹி) பதிவு செய்கிறார்கள்;ரசூலுல்லாஹ் (ஸல்) இடத்திலே அபூபக்கர் (ரலி)வருகின்றார்கள்,

யா ரசூலல்லாஹ்!நான் தொழுகையில் ஓத வேண்டும்;எனக்கு ஒரு துஆவை கற்றுத் தாருங்கள்.

(ஸஹாபாக்கள் ரசூலுல்லாஹ்விடத்திலே கேட்டதெல்லாம் மறுமையைப் பற்றிய விளக்கத்தை தான்.மார்க்கத்தைப் பற்றிய விளக்கத்தைத் தான். அல்லாஹ்வுடைய நெருக்கத்தை பற்றிய விளக்கத்தை தான். இந்த துன்யாவில் அல்லாஹ் விதித்ததை கொண்டு பொருந்திக் கொண்டார்கள். ஹலாலை தேடினார்கள். ஹராமை விட்டு தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள்.

துன்யாவில் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று அவர்கள் பேராசை பட்டதல்ல. ஸஹாபாக்கள் உடைய பேராசை உள்ளத்தின் தேடல் எல்லாம் அல்லாஹ், அல்லாஹ்வுடைய அன்பு, அல்லாஹ்வுடைய மன்னிப்பு, மறுமையில் சொர்க்கம் இவைகள் தான்.)

அதற்குரிய அடையாளங்களில் ஆதாரங்களில் ஒன்று தான் அபூபக்ர் (ரலி). குர்ஆன் யாரைப் பற்றி அவருடைய ஈமானுக்கும், நபியின் தோழமைக்கும், அவருடைய இஸ்லாமுக்கும், ஹிஜ்ரத்துக்கும், ஜிஹாதுக்கும் சான்று கூறியதோ, அந்த தோழருடைய கவலையை பாருங்கள்;

யா ரசூலல்லாஹ்! நான் தொழுகையில் துஆ கேட்பதற்காக எனக்கு ஒரு துஆவை கற்றுத் தாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இஸ்திக்ஃபார் தவ்பா உடைய துஆவைக் கற்றுத் தந்தார்கள்;

"اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ "

 

யா அல்லாஹ் எனக்கு நானே தீங்கிழைத்துக் கொண்டேன்; பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர யாருமில்லை.உன் புறத்திலிருந்து விஷேசமான மன்னிப்பை எனக்கு உறுதியாகக் கொடுத்துவிடு.என் மீது கருணை காட்டி. நிச்சயமாக நீதான் மகா மன்னிப்பாளன்;பெரும் கருணையாளன்.

நூல் : புகாரி, எண் : 834.

இப்படி அல்லாஹ்வை புகழ்ந்து, அல்லாஹ்வை துதித்து அடியான் அவனிடத்திலே துஆ கேட்க வேண்டும்.

குறிப்பாக இந்த இஸ்திக்ஃபாருடைய துஆ, ஹதீஸிலே வந்திருக்கக் கூடிய, குர்ஆனிலே வந்திருக்கக் கூடியஅந்த இஸ்திக்ஃபாருடைய துஆக்களை நீங்கள் கவனித்தீர்கள் என்றால்,

அதில் الغفور الرحيمஎன்ற வாசகம், அல்லாஹ்வுடைய இரண்டு அழகிய திருநாமங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும். இது அல்லாஹ்வின் உயர்ந்த திருநாமங்களில் உள்ளவை.

 الغفور-அல்லாஹுத்தஆலா மகா மன்னிப்பாளன். அவன் மன்னிப்புக்கு அளவில்லை. எல்லையில்லை. அவன் மன்னிப்பை யாரும் அளவிட முடியாது. இந்த அளவிற்கு தான் மன்னிப்பான் என்று.

அல்லாஹ்வுடைய அடியார்களே!ஒரு அடியான் ஷிர்க் செய்திருந்தாலும், குஃப்ர் செய்திருந்தாலும், இன்னும் எத்தனை பெரும் பாவங்கள் செய்திருந்தாலும் திருந்திவிட்டு, வருந்திவிட்டு யா அல்லாஹ்! என்னை மன்னித்துவிடு; உன்பக்கம் நான் வந்துவிட்டேன் என்று சொன்ன மாத்திரத்தில் அத்தனை பெரும் பாவங்களையும், வாழ்நாளெல்லாம் செய்த அத்தனை தவறுகளையும் அல்லாஹுத்தஆலா மன்னித்து அழித்துவிடுகிறான்.

அவனை பரிசுத்தமாக்கி விடுகின்றான். அவனுக்கும் அடியார்களுக்கும் இடையில் இருந்த கொடுக்கல் வாங்கல்களை தவிர. அதில் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் அடியார்களுடைய ஹக்குகளை கொடுத்து முடித்து அவர்களை திருப்திபடுத்தாத வரை.

சிலர் ஊருக்கெல்லாம் அநியாயம் அக்கிரமம் செய்வார்கள்;ஹக்குகளை கொடுக்க மாட்டார்கள்;உரிமைகளை கொடுக்க மாட்டார்கள்; இஸ்திக்ஃபார் செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் உண்டான பாவங்களை அல்லாஹ் மன்னித்துக் கொண்டே இருப்பான்.

ஆனால், அடியார்கள் விஷயத்தில் அல்லாஹ் நிறுத்திவிடுவான். நாளை மறுமையில் அந்த அடியார்கள் அல்லாஹ்வின் மன்றத்திலே வழக்கு தொடர முடியும்.

ஒரு மிஸ்வாக் குச்சியை பிறரிடமிருந்து எடுத்திருந்தால் அவனுடைய அனுமதி இல்லாமல்,திருப்தி இல்லாமல் எடுத்திருந்தால்அதற்காக அவன் நிறுத்திவைக்கப்பட்டு விடுவான். (1)

அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 137.

ஸஹாபாக்களுடைய வரலாறுகளில் எவ்வளவோ அற்புதமான சம்பவங்கள் இருக்கின்றன.

முகீரா இப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) இடத்திலே வருகின்றார்கள். குஃப்ர் ஷிர்க்கிலே இருந்தபோது மிகப் பெரிய எதிரியாக இருந்தவர்கள். இப்போது இஸ்லாமை ஏற்று வருகிறார்கள். சந்தோஷப்படுகிறார்கள்.

ரஸூலுல்லாஹி (ஸல்). அவர்களிடம் யா ரஸூலல்லாஹ்! நான் இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறேன் என்பதாக கூறும்போது, அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) மிக அழகாக முகீராவுக்கு சொல்கிறார்கள்;

உன்னுடைய இஸ்லாமை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இன்னவனை கொலை செய்துவிட்டு அதற்குரிய பரிகாரத்தை நீ கொடுக்காமல் இருக்கின்றாயல்லவா!அதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது, அதற்குரிய பரிகாரத்தை நீ செய்தாக வேண்டும்.

நூல் : அல்பிதாயா வன்னிஹாயா

இஸ்லாமிய மார்க்கம் முந்தி செய்த எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிடும். ஆனால் அடியார்களுடைய ஹக்குகளை தவிர. அந்த ஹக்குகள் கொடுக்கப்பட வேண்டும்.

தவ்பா இஸ்திக்ஃபாரிலே ஆர்வப்பட வேண்டிய அதே நிலையில் தவ்பா இஸ்திக்ஃபாருடைய நிபந்தனைகளையும் நாம் கவனத்திலே கொள்ள வேண்டும்.

உமர் (ரலி) ரஸூலுல்லாஹ் (ஸல்) இடத்திலே வருகிறார். வந்து ரஸூலுல்லாஹி (ஸல்) இடத்திலே கேட்கிறார்கள்;யா ரஸூலல்லாஹ்! எனக்காக நீங்கள் அல்லாஹ்விடத்திலே பாவமன்னிப்பு தேடுங்கள்.

நூல் : புகாரி, எண் : 2468.

என்ன தேடுதல் இருந்தது என்பதை பாருங்கள்;இதுதான் நம்முடைய ஒரு அடிப்படை குணமாக இருக்க வேண்டும்.

இந்த இஸ்திக்ஃபார் மூலமாக நாம் அடைகின்ற அடையப் போகின்ற நன்மைகள் என்ன? அல்லாஹுத்தஆலா நம் பாவங்களையெல்லாம் மன்னித்து போக்கி நமக்கு தரஜாத்துகள் -அந்தஸ்துகளை கொடுக்கின்றான்.

மறுமையில் சென்றால் தான் தெரியும். இந்த உலக வாழ்க்கையில் மறுமையின் அந்த காரியங்களையெல்லாம் நாம் மதிப்பிட்டு விட முடியாது. கணித்து விட முடியாது.

சுப்ஹானல்லாஹ் என்று கூறியதால் கிடைத்த ஒரு நன்மை, ஒரு உயிரினத்திற்கு செய்த ஒரு உபகாரத்தால் கிடைத்த நன்மை, மறைவிலே அல்லாஹ்வை வணங்கியதால் நாம் பெற்ற ஒரு நன்மை, நம்முடைய குணத்தால் நமக்கு கிடைக்கப் பெற்ற ஒரு நன்மை, நம்முடைய அந்த தராசு தட்டையே கணக்க வைத்து விடும்.

எத்தனையோ பாவிகள் அவர்கள் பல நன்மைகள் செய்திருந்தாலும் அந்த நன்மைகளையெல்லாம் மிகைக்கக்கூடிய வகையிலே அவர்கள் செய்த ஒரு அநியாயம், ஒரு அக்கிரமம், ஒரு துரோகம், ஒரு குற்றம், ஒரு பாவம் அவர்களை நரகத்திலே முகம் குப்புற தள்ளப்படுவதற்கு அது காரணமாக ஆகிவிடும்!

மறுமையுடைய தரஜாத்துகள் என்றால் சொர்க்கத்திலே அல்லாஹ் கொடுக்கக்கூடிய அந்த படித்தரங்கள்.

சொர்க்கம் என்பது எல்லோருக்கும் பொதுவாக, ஒரே சமமாக, ஒரே அளவாக இருக்கக்கூடியதல்ல. சொர்க்கத்திலே சென்றுவிடுவது மட்டுமல்ல. சொர்க்கத்திலே உயர்ந்த அந்தஸ்த்துகள் கிடைக்கப் பெறுவது இந்த இஸ்திக்ஃபார் - பாவமன்னிப்பு செய்வதால் நம்முடைய அந்தஸ்த்துகள் மறுமையிலே கூடுகின்றன.

அல்லாஹ் ஸூரா நிஸாவிலே 110-வது வசனத்திலே கூறுகிறான்;

وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا

எவரேனும், ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத் துக்கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கைசேதப்பட்டு) அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், (அவன் மீது) மிகக் கருணையுடையவனாகவும் காண்பான். (அல்குர்ஆன் 4 : 110)

ஹதீஸ் குத்ஸியிலே அல்லாஹ் கூறுவதாக ரஸூலுல்லாஹ் (ஸல்) கூறுகிறார்கள்;இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள்;

«يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ»

என் அடியார்களே! இரவிலும் பகலிலும் நிச்சயமாக நீங்கள் பாவம் செய்கிறீர்கள்; நானோ பாவங்களை மன்னிப்பவனாக இருக்கிறேன்; என்னிடத்திலே மன்னிப்பு கேளுங்கள்; நான் உங்களை மன்னித்துவிடுகின்றேன்.

அறிவிப்பாளர் : அபூ தர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : 2577.

அதுபோன்று இமாம் புகாரி இமாம் முஸ்லிம் (ரஹி) அறிவிக்கக்கூடிய ஹதீஸிலே வருகிறது. அல்லாஹுத்தஆலா இரவினுடைய மூன்றாவது பகுதியிலே கீழ் வானத்திற்கு இறங்கி கேட்கிறான்.

«مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ»

என்னிடத்திலே இஸ்திக்ஃபார் பாவமன்னிப்பு தேடுபவர்கள் இருக்கிறார்களா?நான் அவர்களை மன்னிக்க தயாராக இருக்கிறேன். (2)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1145.

சகோதரர்களே!நம்முடைய இந்த இஸ்திக்ஃபாரின் மூலமாக நம்முடைய பாவங்களை அல்லாஹுத்தஆலா மன்னித்து, நமக்கு அந்தஸ்த்துகளை கூட்டிக் கொண்டே இருக்கிறான். மேலும், நம்முடைய அமல்களில் ஏற்பட்ட குறைகளை அல்லாஹுத்தஆலா நீக்கி அந்த அமல்களை முழுமைபடுத்தி தரஜாத்துகளை உயர்த்திக் கொண்டே செல்கிறான்.

இமாம் அஹ்மத் (ரஹி) ஒரு ஹதீஸை பதிவு செய்கிறார்கள்; அபுஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்;

«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ، فَيَقُولُ: يَا رَبِّ، أَنَّى لِي هَذِهِ؟ فَيَقُولُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ »

 

சொர்க்கத்திலே அல்லாஹுத்தஆலா ஸாலிஹான அந்த அடியானுடைய அந்தஸ்த்துகளை உயர்த்திக் கொண்டே இருப்பான். என் இறைவா இவ்வளவு நான் அமல்கள் செய்யவில்லையே! இந்த தரஜாத்துகள் எப்படி எனக்கு கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. எப்படி எனக்கு வந்து சேர்ந்துக் கொண்டே இருக்கின்றன? என்று கேட்பான்.

அல்லாஹ்வுடைய பதிலை பாருங்கள்;உன்னுடைய பிள்ளைகள் சந்ததிகள் உனக்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். அதன் பொருட்டால் உனக்கு இந்த தரஜாத்துகள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 10610.

இந்த ஹதீஸிலே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? நம்முடைய பிள்ளைகள் நம்முடைய சந்ததிகள் நமக்காக நம்முடைய இறப்பிற்கு பிறகு பாவமன்னிப்பு தேடும்போது அல்லாஹ்விடத்திலே,

யா அல்லாஹ்! என் தந்தையின் பாவங்களை மன்னிப்பாயாக! என் தாயின் பாவங்களை மன்னிப்பாயாக! என் பாட்டனின் பாவங்களை மன்னிப்பாயாக! என்று அவர்கள் நமக்காக இஸ்திக்ஃபார் செய்யும்போது இறந்து போன நமக்கு அல்லாஹுத்தஆலா மறுமையிலே தரஜாத்துகளை உயர்த்துகிறான் என்றால் நமது வாழ்க்கையிலே நாம் அதிகமாக நமக்கு இஸ்திக்ஃபாரை தேடிக் கொண்டால், எவ்வளவு தரஜாத்துகளை அல்லாஹுத்தஆலா நமக்கு தருவான்.

ஹதீஸிலே கவனிக்க வேண்டிய இரண்டாவது முக்கியமான விஷயம் என்ன? ஒருவர் இறந்துவிட்டால் அவருக்காக உயிராக இருக்கக்கூடிய அவருடைய சந்ததிகள் என்ன செய்யவேண்டும் என்பதை இந்த ஹதீஸ் நமக்கு கற்றுத்தருகிறது.

ஹதீஸ் நமக்கு கற்றுத் தரக்கூடிய இந்த அமல், இலகுவான அமல். சடங்கு சம்பிரதாயம் இல்லாத அமல். நின்றுகொண்டு, படுத்துக் கொண்டு, தொழுகைக்குப் பின்னால், தொழுகையில், வெளியிலே வியாபாரத்திலே, தொழில்துறையிலே என எங்கே நீங்கள் இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் நீங்கள் ஒருமுறை அல்ல இலட்சோபலட்சம் முறை இதை செய்து கொண்டே இருக்கலாம்.

உங்களுடைய தந்தைக்காக, பெற்றோருக்காக, பாட்டன் முப்பாட்டன்களுக்காக. இதில் ஏதாவது செலவு இருக்கிறதா? சிரமம் இருக்கிறதா? கஷ்டம் இருக்கிறதா?

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்;அல்லாஹ் மன்னிக்க வேண்டும்.

இன்று பெயர் தாங்கி முஸ்லிம் சமுதாயம் எதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் இலகுவாக எளிமையாக இக்லாஸாக கற்று கொடுத்தார்களோஅதை விட்டுவிட்டார்கள்.

பெரும்பாலானவர்கள்,கத்தம் ஃபாத்திஹா என்று சடங்குகளை செய்து தங்கடைய மூதாதையர்களுக்கு பெற்றோர்களுக்கு சேர்ப்பிக்க நினைக்கின்றார்கள்.

அவற்றில் எதுவும் சேரப்போவது கிடையாது. மாறாக பாவங்கள் தான் சேரும்.செய்பவர்களுக்கும் பாவம்;யாருக்காக செய்கிறார்களோ அவர்களுக்கும் பாவம்.

நீங்கள் கேட்கலாம்; ஏன் அவர்களுக்கும் பாவம் என்று. ஆம், சடங்குகள் செய்யாதே! நான் இறந்துவிட்டால் எனக்காக ஒப்பாரி வைத்து அழாதே! எனக்காக சடங்குகளை செய்யாதே! என்று ஒருவர் வஸியத்து செய்யாமல் இறந்துவிட்டால், உபதேசம் செய்யாமல் இறந்துவிட்டால் அவருடைய இறப்புக்கு பிறகு பிள்ளைகளோ உறவினர்களோ அவருக்காக சடங்குகள் செய்தால் இந்த குற்றம் இறந்தவருக்கும் சேரும். அவரும் இந்த குற்றத்திலே சமமாக பங்காளியாக ஆகுவார் என்று உலமாக்கள் எழுதுகிறார்கள்.

ஆகவே, நாம் கவனத்திலே வைக்க வேண்டும். இறந்தவர்களுக்காக, யாருக்காக இருந்தாலும் சரி, தாய் தந்தைக்கு மட்டுமல்ல.

இந்த ஹதீஸிலே தந்தையை குறித்து வருகிறது, தாயை குறித்து வருகிறது.இது பொதுவானது. நாம் எல்லோரும் எங்களுக்கு இஸ்திக்ஃபார் தேடுவதோடு, நமக்கு விருப்பமானவர் நெருங்கியவர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்காக நாம் செய்யக் கூடிய உயர்ந்த அமல்களிலே ஒன்று அவருக்காக அல்லாஹ்விடத்தில் இஸ்திக்ஃபார் செய்வது.

அதுபோன்று சகோதரர்களே! இந்த இஸ்திக்ஃபாரின் மூலமாக சோதனைகள், குழப்பங்கள், பெரும் ஆபத்துகள், இன்னும் நாம் சிக்கி இருக்கக்கூடிய இன்னல்களிலிருந்து அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா நமக்கு பாதுகாப்பை விடுதலையை தருகிறான் என்பதை யூனுஸ் (அலை) அவர்களுடைய சம்பவத்திலிருந்து நாம் படித்துக் கொள்கிறோம்.

فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ (143) لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ

அல்லாஹ் சொல்கிறான்;யூனுஸ் (அலை) அல்லாஹ்வை துதித்து புகழ்ந்து பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கவில்லை என்றால், கண்டிப்பாக அவர் மீன் வயிற்றிலே கியாமநாள் வரை தங்கியிருப்பார் என்று.(அல்குர்ஆன் 37:143, 144)

யூனுஸ் (அலை) அவர்களுடைய அந்த இஸ்திக்ஃபார் என்ன?

أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார். (அல்குர்ஆன் 21:87)

இந்த இஸ்திக்ஃபார் அவருடைய துன்பத்திலிருந்து அவர் பாதுகாக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது.

அதுபோன்று தான் இன்று நமக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன? பொருளாதார பிரச்சினையா? பிள்ளைகள் இல்லாத பிரச்சனையா? பஞ்சம், பசிபட்டினியுடைய பிரச்சினையா? எல்லாவற்றிற்கும் தீர்வு இந்த இஸ்திக்ஃபாரிலே இருக்கிறது.

அல்லாஹ் சுப்ஹானஹுத்தாலா ஸூரா நூஹிலே நூஹ் (அலை) அவர்கள் செய்த உபதேசத்தை சொல்கிறான்;

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا

‘‘உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்'' என்றும் கூறினேன். (அல்குர்ஆன் 71 : 10)

يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا

(அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான். (அல்குர்ஆன் 71 : 11)

وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا

பொருள்களையும், ஆண் மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் நதிகளையும் ஓட வைப்பான்.(அல்குர்ஆன் 71 : 12)

இதுபோன்று ஸூரா ஹூதிலே அல்லாஹ் சொல்லும்போது,

وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ

நீங்கள் உங்கள் இறைவனிடத்தில் பாவமன்னிப்பைக் கோரி (பாவங்களை விட்டு) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிட்ட (நீண்ட) காலம் வரை உங்களை இன்பமடையச் செய்வான். (தன் கடமைக்கு) அதிகமாக நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) அதிகமாகவே கொடுப்பான். நீங்கள் (அவனைப்) புறக்கணித்தால் மாபெரும் நாளின் வேதனை நிச்சயமாக உங்களை அணுகுமென்று நான் பயப்படுகிறேன். (அல்குர்ஆன் 11 : 3)

சகோதரர்களே!நாம் இருக்கக்கூடிய இந்த சூழ்நிலைக்கும் இந்த உபதேசம் நமக்கு மிக பொருத்தமானது.

நமது நாட்டிலே எத்தகைய நெருக்கடிகளுக்குள் எத்தகைய அச்சுறுத்தல்களை சுற்றி நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை எதிர்க்கக்கூடிய, ஏழை எளியவர்கள் மீது அநியாயம் செய்யக்கூடிய, அப்பாவி பாமர மக்கள் மீது அராஜகம் செய்யக்கூடிய சோதனையான ஒரு சூழ்நிலையில் சோதனையான ஒரு காலகட்டத்திலே நாம் இருக்கிறோம்.

இதிலிருந்து உண்மையாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு ஒரு விடுதலை வேண்டுமென்றால், ஒன்றிருக்கிறது.

மனிதன் தன்னுடைய கரங்களால் தேடிக் கொண்டு அவன் எந்த ஆபத்திலிருந்து விடுதலை பெற நினைக்கிறானோ அதைவிட பெரிய ஆபத்திலே விழுவது.அவன் எந்த ஆபத்திலிருந்து தப்பிக்க நினைக்கின்றானோ அதைவிட பேராபத்திலே அவன் விழுவான்.

அல்லாஹ்விடத்தில் ஒதுங்கிவிட்டால், சரணடைந்து விட்டால்அல்லாஹ் கொடுக்க நாடினால் தடுப்பார் இல்லை.அல்லாஹ் தடுத்தால் கொடுப்பார் இல்லை. ஆட்சியை கொடுப்பவன் அவன். இது நம்முடைய ஈமான்.

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

(நபியே! பிரார்த்தித்து) கூறுவீராக: ‘‘எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகிறாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகிறாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய். (அல்குர்ஆன் 3:26)

அல்லாஹ்வின் அடியார்களே!அல்லாஹ்விடத்தில் நாம் செய்த எல்லா தவறுகளையும் கூறி, யா அல்லாஹ்! இத்தகைய நெருக்கடியிலே இருக்கிறோம்! எங்களது பாவங்களுக்காக வருந்துகிறோம்! என்று நமக்காக, ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்காக நாம் தவ்பா இஸ்திக்ஃபார் செய்யும்போது அல்லாஹ் நமக்கு நிச்சயமாக வெற்றியை கொடுப்பான்.

எப்படி முந்தைய நபிமார்களின் சமுதாயங்களுக்கு அல்லாஹ் வெற்றியை கொடுத்தானோ, பாதுகாப்பை கொடுத்தானோ ஃபிர்அவ்னிடமிருந்து மூஸா (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய கவ்முக்கும் (சமுதாயம்) அல்லாஹ் வெற்றியை பாதுகாப்பை கொடுத்தானோ அதே பாதுகாப்பை வெற்றியை அல்லாஹ் நமக்கும் கொடுக்க போதுமானவன்.

இங்கே ஒரு அழகான சம்பவத்தை பாருங்கள்; ஹஸன் பஸரி (ரஹி) அவர்களிடத்திலே ஒரு மனிதர் வருகிறார். எங்களது ஊரிலே பட்டினி பஞ்சமாக இருக்கிறது; மழை பெய்யவில்லை; துஆ செய்யுங்கள் என்று.

அந்த மனிதருக்கு ஹஸன் பஸரி (ரஹி) சொன்னார்கள்; அதிகமாக இஸ்திக்ஃபார் கேளுங்கள்.

இன்னொரு மனிதர் வந்தார்;எங்களது ஊர்களிலே விவசாய நிலங்களெல்லாம் காய்ந்துவிட்டன; மழை இல்லை. அந்த மனிதருக்கும் ஹஸன் பஸரி (ரஹி) அவர்கள் உபதேசம் செய்தார்கள்; நீங்கள் அதிகமாக இஸ்திக்ஃபார் தேடுங்கள் என்று.

இன்னொரு மனிதர் வந்தார்; அவர் சொன்னார்; எனக்கு பிள்ளை பாக்கியம் இல்லை; அதற்காக எனக்காக துஆ செய்யுங்கள் என்றார். அந்த மனிதருக்கும் ஹஸன் பஸரி (ரஹி) சொன்னார்கள்; நீங்கள் இஸ்திக்ஃபார் கேளுங்கள்; அல்லாஹ்விடத்திலே அதிகமாக பாவமன்னிப்பு தேடுங்கள் என்று.

வந்த முன்று பேரும் தனித்தனியாக வந்து சென்றுவிட்டார்கள். அருகிலிருந்த மாணவர்கள் கேட்டார்கள்;உஸ்தாத் அவர்களே! என்ன இப்படி ஒரு வித்தியாசமான பதிலை சொன்னீர்கள். மூன்று பேரும் மூன்று பிரச்சினைகளை குறித்து சொன்னார்கள். மூன்று பேருக்கும் நீங்கள் சொன்ன பதில் ஒரே பதில் நீங்கள் இஸ்திக்ஃபார் கேளுங்கள் என்று

அதற்கு ஹஸன் பஸரி (ரஹி) அவர்கள் சொன்னார்கள், நான் இதை என் புறத்திலிருந்து சொல்லவில்லை. அல்லாஹ் அவனுடைய வேத்திலே குர்ஆனிலே சொல்கிறான் என்று, ஸூரா நூஹ்வுடைய இந்த வசனத்தை சொன்னார்கள்.

பார்க்க : (அல்குர்ஆன் 71:10,11,12)

அல்லாஹ் கூறியதைத் தான் நான் அவர்களுக்கு கூறினேன் என்று ஹஸன் பஸரி (ரஹி) அவர்கள், கேட்ட மாணவருக்கு விளக்கம் கூறுகிறார்கள்.

அதுபோன்று நம்முடைய உள்ளங்களில் உள்ள அழுக்குகள் நீங்குவதற்கு,பாவங்களால் நம்முடைய உள்ளங்களில் ஏற்பட்ட கறைகள் நீங்குவதற்கு இந்த இஸ்திக்ஃபார் அவசியமாக இருக்கிறது.

ஹதீஸிலே வருகிறது, ஒரு அடியான் பாவம் செய்தால் அவனுடைய உள்ளத்திலே ஒரு கருப்பு புள்ளி வைக்கப்படுகிறது. அவன் அந்த பாவத்திலிருந்து விலகி இஸ்திக்ஃபார் செய்து தவ்பா செய்துகொண்டால் அந்த உள்ளம் சுத்தமடைந்து விடுகிறது. மீண்டும் அவன் பாவத்தை செய்தால் அந்த புள்ளிகள் அதிகமாகி அதிகமாகி ஒட்டுமொத்தமாக அவனுடைய உள்ளம் அழுக்குள்ளதாக துருப்பிடித்ததாக கரைபடிந்ததாக ஆகிவிடுகின்றது. (3)

இதற்கு அல்லாஹ் வுடைய வசனத்தை ரசூலுல்லாஹ் (ஸல்) ஓதி காட்டினார்கள்;

لَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ

அவர்கள் செய்த பாவங்கள் அவர்களுடைய உள்ளங்களிலே துருவாக ஏறிவிட்டது. (அல்குர்ஆன் 83:14)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : 3338, தரம் : ஹசன் (அல்பானி)

இமாம் முஸ்லிம் (ரஹி) அறிவிக்கக்கூடிய ஒரு ஹதீஸை பாருங்கள். ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்;

«إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي، وَإِنِّي لَأَسْتَغْفِرُ اللهَ، فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ»

எனது உள்ளத்திலும் கரை படிகிறது. நான் அல்லாஹ் விடத்திலே ஒரு நாளைக்கு நூறு முறை இஸ்திக்ஃபார் கேட்கிறேன்.

அறிவிப்பாளர் : அபூ புர்தா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2702.

அல்லாஹ்வின் அடியார்களே! அதுபோன்று நம்முடைய நோய்கள் நீங்கி உடல் ஆற்றல் பெறுவதற்கும் இந்த இஸ்திக்ஃபார் அவசியமாக இருப்பதை குர்ஆனிலிருந்து நாம் பார்க்கிறோம்.

وَيَاقَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ

என் மக்களே! நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோரி (மனம்வருந்தி) அவன் பக்கமே திரும்புங்கள். (அவன் தடுத்திருக்கும்) மழையை உங்கள் மீது ஏராளமாகப் பொழியச் செய்வான். உங்கள் பலத்தை மேலும், (மேலும்,) அதிகரிக்கச் செய்வான். ஆகவே, நீங்கள் அவனைப் புறக்கணித்துக் குற்றமிழைத்து விடாதீர்கள்'' (என்று கூறினார்.) (அல்குர்ஆன் 11:52)

இன்று நம்முடைய பிரச்சினை என்ன? நாம் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் எதிராக செய்யக்கூடிய எந்த பாவத்தையும் விடமாட்டோம். மார்க்கத்தை மீறக்கூடிய எந்த செயலில் இருந்தும் விளக மாட்டோம்.

ஆனால் எங்களுடைய புரட்சியால் எங்களுடைய கட்சியால் எங்களுடைய இன்னபிற இயக்கங்களால் போராட்டங்களால் எங்களுக்கு வலிமை கிடைக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொண்டு முஸ்லிம் சமுதாயம் இருக்கிறார்கள்.அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ்வுடைய அன்பு, தவ்பா இஸ்திக்ஃபார் கேட்பவர்களுக்குஉண்டு என்றுஅல்லாஹ் சொல்கிறான்;

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ

தவ்பா இஸ்திக்ஃபார் கேட்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2:222)

அல்லாஹ்வுடைய முஹப்பத் எவ்வளவு ஒரு பெரிய விஷயம் பாருங்கள்.

அதுபோன்று கவலைகள் நீங்குவதற்கு, ஹதீஸிலே ரசூலுல்லாஹி (ஸல்) சொன்னார்கள்;

«مَنِ أكْثَرَ مِنَ الاسْتِغْفَارِ، جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجًا، وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ»

யார் அல்லாஹ் விடத்திலே இஸ்திக்ஃபார் அதிகமதிகம் தேடுகின்றார்களோ, அல்லாஹுத்தஆலா அவருக்கு எல்லா கவலைகளிலிருந்து மகிழ்ச்சியான ஒரு விடுதலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றான். நெருக்கடியிலிருந்து அவருக்கு வெளியேறுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கின்றான். அவரே கற்பனை செய்திடாத, யோசித்துப் பார்க்காத வழிகளிலிருந்து அல்லாஹ் அவருக்கு ரிஸ்க்கை கொடுப்பான்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத்,எண் : 2234.

சகோதரர்களே! என்ன கவலையாக இருந்தாலும் சரி, என்ன துக்கமாக இருந்தாலும் சரி, அல்லாஹ்விடம் ஒதுங்கி இஸ்திக்ஃபார் தேடுவோம்.

அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா அந்த கவலைகளை போக்க போதுமானவன். தேவைகளை நிறைவேற்ற போதுமானவன். நம்முடைய வாழ்வாதாரத்தை விசாலமாக்கிக் கொடுக்க போதுமானவன்.

அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்திலே அதிகமதிகம் இஸ்திக்ஃபார் தேடி அல்லாஹ்விடத்திலே தவ்பா செய்வதற்கும், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் வாக்களித்த இந்த நன்மைகளை பெறுவதற்கும் அருள் புரிவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

صحيح مسلم (1/ 122)

218 - (137) حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنَا الْعَلَاءُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى الْحُرَقَةِ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ السَّلَمِيِّ، عَنْ أَخِيهِ عَبْدِ اللهِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ، فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ، وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ» فَقَالَ لَهُ رَجُلٌ: وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ»،

குறிப்பு 2)

صحيح البخاري 1145 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَأَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي، فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ"

குறிப்பு 3)

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ القَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ العَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ، فَإِذَا هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ سُقِلَ قَلْبُهُ، وَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ قَلْبَهُ، وَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ» {كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ} [المطففين: 14]. «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»)سنن الترمذي (3334 -}حكم الألباني] : حسن

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/