கண்ணியம் காக்கப்பட்ட இறைத்தூதர் | Tamil Bayan - 657
بسم الله الرحمن الرّحيم
கண்ணியம் காக்கப்பட்ட இறைத்தூதர்
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
உங்கள் முன்னால் அல்லாஹ் ரப்புல் ஆலமீனைப் போற்றிப் புகழ்ந்து, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறியவனாக, முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய அடியாராகவும் தூதராகவும் இருக்கின்றார்கள் என்று சாட்சி கூறியவனாகவும், அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் இறங்கட்டும் என்று துஆ கேட்டவனாகவும், எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை அல்லாஹ்வின் அச்சத்தை தக்வாவை நினைவூட்டியவனாகவும்,
நம் அனைவருக்கும் அல்லாஹ்விடத்திலே இம்மை, மறுமை வெற்றியை வேண்டியவனாக, அல்லாஹ் பொருந்திக் கொண்ட, அல்லாஹ் ஏற்றுக் கொண்ட, அல்லாஹ் மன்னித்து அருள்புரிந்த நல்லடியார்களில் என்னையும் உங்களையும், நமது தாய் தந்தையையும், நம்முடைய குடும்பத்தார், உறவினர்களையும், முஃமின்கள் அனைவரையும் அல்லாஹு தஆலா சேர்த்து அருள்புரிய வேண்டும் என்றும் அல்லாஹ் விடத்திலே துஆ கேட்டவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா சோதனைகள் நிறைந்த இந்த உலக வாழ்க்கையில் நம்மை பல சோதனைகளைக் கொண்டு பண்படுத்துகின்றான். நமக்கு அந்த சோதனைகளிலே பல படிப்பினைகளை பாடங்களை அல்லாஹ் வைத்திருக்கின்றான்.
முந்தைய காலத்தில் நடக்காத சோதனைகள் இப்போது நடப்பதில்லை. நமக்கு முன்னால் வாழ்ந்த நபிமார்கள், ரசூல்மார்கள், உண்மையான முஃமின்களும் பல சோதனைகளுக்கு ஆளாகி இருக்கின்றார்கள்.
அவர்களை அல்லாஹு தஆலா நமக்கு அழகிய பாடமாக படிப்பினையாக ஆக்கியிருக்கின்றான்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அவனுடைய நபிமார்கள், கண்ணியத்திற்குரிய அவனுடைய தூதர்கள், இந்த தூதர்களை மனிதர்களுக்கு அனுப்பும்போது மனிதர்கள் இரண்டு விதமான கூட்டங்களாக மாறுகிறார்கள்.
ஒன்று, அந்த தூதர்களை அறிந்து புரிந்து, அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்தியை சிந்தித்து, இது தான் உண்மை என்று ஏற்றுக் கொண்டு, நம்பிக்கைக் கொண்டு, அந்த தூதர்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தை மரியாதையை கொடுத்தவர்கள்.
இவர்கள் இவ்வுலகிலும் அல்லாஹ்வால் அருளப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய ரஹ்மத்துக்கும் அன்பிற்கும் உரியவர்கள்.
இன்னொரு கூட்டம், அந்த ரசூல்மார்களை நபிமார்களை பகைத்தார்கள். ஏசினார்கள். அவர்கள் கொண்டு வந்த தூதை அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களை நிராகரித்தார்கள். மேலும் அந்த தூதர்களுக்கு தொந்தரவு தந்தார்கள். மன வேதனைகளை கொடுத்தார்கள். கேலி கிண்டல் செய்தார்கள். பரிகாசம் செய்தார்கள். அந்த தூதரை நம்பிக்கை கொண்டவர்களுக்கும் தொந்தரவு கொடுத்தார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! இவர்களெல்லாம் அல்லாஹ்விடத்திலே சபிக்கப்பட்டார்கள். அல்லாஹ் இவர்களை கேவலப்படுத்தினான். இழிவுபடுத்தினான். இவர்களைப் பற்றி எந்தவிதமான அழகிய வரலாறுகளும் இல்லாமல், சமுதாய மக்களால் நினைவு கூறப்படாத ஒரு கேவலமான பிறவிகளாக, இழிவான கூட்டமாக இவர்களை அல்லாஹுத்தஆலா ஆக்கினான்.
அவர்களை பின்பற்றிக் கூடியவர்கள், அவர்களை கண்ணியப்படுத்தக்கூடியவர்கள், சமுதாயத்தில் தோன்றாத அளவுக்கு அவர்களை அல்லாஹு தஆலா அசிங்கப்படுத்தினான்.
அல்லாஹு தஆலா உடைய வேதம்ரசூலுல்லாஹ் (ஸல்) உடைய கண்ணியத்தை பாதுகாக்கின்றது. எப்படி அல்லாஹ்வுடைய கண்ணியத்தை குர்ஆன் பாதுகாக்கிறதோ, அல்லாஹ்வுடைய உயர்வை, அந்தஸ்த்தை, புகழை குர்ஆன் எடுத்து இயம்புகிறதோ அதுபோன்று.
ஹதீஸ்கள் மட்டுமல்ல, அல்லாஹ்வுடைய வேதமாகிய அல்குர்ஆன் நம்முடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடைய கண்ணியத்தை, உயர்வை, அவர்களின் சிறப்பை, அவர்களின் மரியாதையை, அவர்களை அவர்களுடைய அழகிய புகழ்களை குர்ஆன் நினைவுகூறுகிறது.
நாம் ஓதக்கூடிய வேதம், உலகத்திலே எத்தனை கோடி மக்கள் குர்ஆனை ஓதுகின்றார்களோ, அவர்கள் அல்லாஹ்வை புகழ்வது போன்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய அழகிய நினைவை, அவர்களுடைய உயர்ந்த பண்புகளை, அவர்களின் சிறந்த குணங்களை புகழ்ந்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த இரண்டாவது கூட்டம், நபிமார்களை ஏசியவர்கள், திட்டியவர்கள், நபிமார்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள், ரப்புல் ஆலமீன் இத்தகைய இழிவான கூட்டத்தைப் பற்றி கூறுவதைப் பாருங்கள்:
يَاحَسْرَةً عَلَى الْعِبَادِ مَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
அந்தோ! (என் அடியார்களே! என்) அடியார்களைப் பற்றிய துக்கமே! அவர்களிடம் நமது தூதர் எவர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன் 36 : 30)
உண்மையில் துக்கத்திற்கும் உண்மையில் சஞ்சலங்களுக்கும் உரியவர்கள் யார் என்றால் நபியை ஏசக்கூடியவர்கள். இன்னும் அந்த ஏசக்கூடியவர்களை ஆதரிப்பவர்கள்.
நாம் படக்கூடிய இந்த கவலைக்கு அல்லாஹு தஆலா நமக்கு நற்கூலியை வைத்திருக்கிறான்.
நம்முடைய நபி (ஸல்) அவர்களை யாராவது தூற்றினாலோ, ஏசினாலோ அதனால் ஒரு முஃமினுக்கு கவலை வருகிறதென்றால், ஒரு முஃமின் வருத்தப்படுகிறான் என்றால், இது ஈமானுடைய அடையாளம். அல்லாஹ்வின் மீது அன்பு இருப்பதற்குண்டான அடையாளம்.
இந்த கவலைக்கு அல்லாஹு தஆலா நமக்கு ஆறுதலை வைத்திருக்கின்றான். ஈமானின் உயர்வை வைத்திருக்கின்றான். மறுமையினுடைய நற்கூலியை இன் ஷா அல்லாஹ் கண்டிப்பாக அல்லாஹ் கொடுக்க போதுமானவன்.
சகோதரர்களே!உண்மையான கவலையும், துக்கமும், மன சஞ்லங்களும் யாரை கவ்விக் கொள்ளும்? எந்த மனசஞ்சலங்களில் இருந்து எந்த மருத்துவரும் அவர்களை விடுவிக்க முடியாதோ, அத்தகைய மனசஞ்லங்களை கவலைகளை உள்ளங்களை படைத்த அல்லாஹ், எந்த உள்ளங்களில் படைத்த இறைவன் அல்லாஹ்வின் மீது வெறுப்பிருக்குமோ, அல்லாஹ்வுடைய தூதரின் மீது வெறுப்பிருக்குமோ அந்த உள்ளங்கள் மீது சாட்டிவிடுவான்.
எந்த உள்ளங்களில் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய கண்ணியத்திற்குரிய ரசூல்மார்கள் தூதர்கள் மீதும் வெறுப்பிருக்குமோ அந்த உள்ளத்தில் ஒருகாலும் அல்லாஹு தஆலா மகிழ்ச்சியை கொடுக்க மாட்டான். நிம்மதியை கொடுக்க மாட்டான்.
உள்ளத்தினுடைய நிம்மதி என்பது அல்லாஹ்வுடைய நிஃமத். அல்லாஹ் அதை பறித்து விடுவான். யார் அல்லாஹ்வுடைய தூதரை ஏசுகின்றார்களோ அவர்களை தரக்குறைவாக பேசுகின்றார்களோ அவர்களுடைய உள்ளத்திலிருந்து நிம்மதியை அல்லாஹ் எடுத்துவிடுவான்.
ரப்பு சொல்வதைப் பாருங்கள்:
يَاحَسْرَةً عَلَى الْعِبَادِ
அந்த மக்களுக்கு ஏற்படக்கூடிய துக்கமே! துயரமே! (அல்குர்ஆன் 36:30)
அல்லாஹ்வின் அடியார்களே! காலமெல்லாம் இத்தகைய சில வரலாறுகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய காலத்திலும் பல காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு கவலைகளை கொடுத்தார்கள்.
இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் : நம்முடைய மார்க்கம் நமக்கு அழகிய நிலைப்பாட்டை கற்றுக் கொடுக்கிறது.
நாம் நம்முடைய மார்க்கத்தை பிரச்சாரம் செய்வோம். அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம். அல்லாஹ்வுடைய தூதரின் பக்கம் அழைப்போம். மறுமையின் சொர்க்க வீட்டின் பக்கம் அழைப்போம். இந்த அழைப்பை ஏற்று நீங்கள் வந்தால் அல்ஹம்து லில்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டினான்.
இல்லையென்றால் நாம் எந்த வம்புக்கும் எந்த தொந்தரவுக்கும் செல்ல மாட்டோம். இது நம்முடைய இஸ்லாம் நமக்கு கற்றுக் கொடுத்த நிலைபாடு.
ஒரு மனிதன் மார்க்கத்தை ஏற்கவில்லை என்பதற்காக அவனிடத்திலே சண்டை செய்வதோ, அவனுடைய சிலைகளை குறை சொல்வதோ, அவனுடைய வழிபாட்டிலே சென்று அவனுக்கு தொந்தரவு கொடுப்பதோ, அவனிடத்திலே வம்பு செய்வதோ, இதை ஒரு போதும் இதுவரை உலக வரலாற்றிலே அனுப்பப்பட்ட எந்த நபியும் செய்ததில்லை, எந்த நபியுடைய உம்மத்துக்கும் இது கற்பிக்கப்படவில்லை. அதே சட்டம் தான் நமக்கும்.
ஆனால் இந்த சிலை வணக்கத்திலே அந்த மூட நம்பிக்கையிலே ஊறிப்போய் தன்னுடைய அறிவை, தன்னுடைய ஒழுக்கத்தை, தன்னுடைய நீதம் நேர்மையை முற்றிலுமாக இழந்துவிட்ட சில ஈனர்கள் இருப்பார்கள்.
அவர்களிலே ஷைத்தானுக்கு துணை போகக்கூடிய இப்லீஸுக்கு துணை போகக்கூடிய மிக மோசமான சில பிறவிகள் இருப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அவர்களைக் கொண்டு தான் ஷைத்தான் இந்த சமுதாயத்திலே விளையாடுவான்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அத்தகைய இழிவான கூட்டத்தைப் பற்றி ஸூரத்துல் அஹ்ஸாபிலே கூறுகிறான் :
إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக்கிறான். (அல்குர்ஆன் 33:57)
இந்த இடத்தில் மதினாவிலிருந்து சில முனாஃபிக்குகள் அவர்களுக்கு துணையாக இருந்த யூதர்கள் நம்முடைய நபி (ஸல்) அவர்களை ஏசினார்கள். அவர்களை குறை கூறினார்கள்.
அல்லாஹ் அதை எடுத்து சொல்லும்போது,யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நோவினை கொடுத்தார்களோ தொந்தரவு செய்தார்களோ என்று கூறுகின்றான்.
இதிலிருந்து நாம் என்ன புரிகிறோம்? யார் அல்லாஹ்வுடைய தூதருக்கு தொந்தரவு தருகிறார்களோ,அவர்கள் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வுக்கு தொந்தரவு தந்தவர்கள். ரசூலுக்கு மாறு செய்வது அல்லாஹ்விற்கு மாறு செய்வது.
ரசூல் (ஸல்) அவர்களை ஏசுவது, அல்லாஹ்வை ஏசுவது.ரசூலைப் பரிகாசம் செய்வது அவர்களை அனுப்பிய அல்லாஹ்வை ஏக இறைவனை பரிகாசம் செய்வது.
ஆகவே ரப்பு சொல்கிறான்:யார் அல்லாஹ்விற்கு தொந்தரவு தருகின்றார்களோ, அவனுடைய ரசூலுக்கு மனவேதனையை கொடுக்கின்றார்களோ, أذيةஎன்று சொன்னால் சொல்லால் மனவேதனை கொடுப்பது. வார்த்தைகளால் மனதிற்கு கஷ்டத்தை கொடுப்பது.
அல்லாஹு தஆலா அவர்களை உலகத்திலும் சபிப்பான், மறுமையிலும் அல்லாஹ்வுடைய சாபம் அவர்களுக்கு சாபம் இருக்கிறது. (அல்குர்ஆன் : 33:57)
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை குறை பேசக்கூடியவர்கள், அவர்களை விமர்சனம் செய்பவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் இறங்க ஆரம்பித்துவிடுகிறது.
ஒரு மனிதன் வெறும் முஷ்ரிக்காக இருக்கின்ற காரணத்தால், வெறும் காஃபிராக இருக்கின்ற காரணத்தால் இந்த உலத்திலேயே அல்லாஹ் அவர்களை தண்டிக்க மாட்டான். அவர்களுக்காக மறுமை இருக்கிறது. நரக தண்டனை இருக்கிறது.
அல்லாஹ் கூறுகிறான் :
إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ
வேதம் கொடுக்கப்பட்டவர்களிலிருந்தும் அதுபோன்று இந்த இணைவைப்பவர்களிலிருந்தும் யார் நிராகரிப்பாளராக ஆகிவிட்டார்களோ இவர்கள் நரகத்திலே இருப்பார்கள். அங்கே நிரந்தரமாக தங்குவார்கள்.படைக்கப்பட்ட படைப்புகளிலேயே இவர்கள் மிக மோசமானவர்கள்.(அல்குர்ஆன் 98:6)
இந்த உலகத்திலே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய கோபத்தை காட்டுகிறான் என்றால், அல்லது காட்டுவான் என்றால், ஒரு மனிதன் நிராகரிப்பு செய்துவிட்ட காரணத்தால் மட்டுமல்ல; ஷிர்க் செய்த காரணத்தால் மட்டுமல்ல;
அந்த குஃப்ரோடு ஷிர்க்கோடு சேர்ந்து அல்லாஹ்வுடைய மார்க்கத்தை எதிர்க்கக் கூடியவனாக ஆகிவிட்டால், அல்லாஹ்வுடைய குர்ஆனை வேதங்களை கேலி கிண்டல் செய்பவனாக ஆகிவிட்டால், அல்லாஹ்வைப் பற்றியோ அவனுடைய தூதர்களைப் பற்றியோ பரிகாசம் செய்பவர்களாக கேலி கிண்டல் செய்பவர்களாக ஆகிவிட்டால்,
முஃமின்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்களாக ஆகிவிட்டால், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை தடுப்பவர்களாக ஆகிவிட்டால் கண்டிப்பாக இந்த உலகத்திலேயே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையை கொடுத்தே தீருவான்.அவர்களை அல்லாஹ் இழிவுபடுத்துவான்.
ஃபிர்அவ்னை அல்லாஹ் விடவில்லை;நம்ரூதை அல்லாஹ் விடவில்லை;ஷத்தாதை அல்லாஹ் விடவில்லை;ஆது, ஸமூதை அல்லாஹ் விடவில்லை;அஸ்ஹாபு மத்யனை அல்லாஹ் விடவில்லை;எத்தனை சம்பவங்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
ரசூலுல்லாஹ் (ஸல்) உடைய காலத்திலே அபூ ஜஹ்ல் அபூ லஹபை விடவா? இன்னும் எத்தனை கொடிய காஃபிர்கள் காலையில் எழுந்தாலே மாலை வரை ரசூல் என்ன செய்கிறார்? அவரை எப்படி குறை சொல்வது? குற்றம் சொல்வது.
சகோதரர்களே! மனிதர்களுக்கு இந்த உலக வாழ்க்கையில் மனைவி மக்கள் அமைவது, பிள்ளைகள் பிறப்பது, அல்லது பிறக்காமல் இருப்பது, அல்லது பிறந்த பிள்ளைகள் இறப்பது இது அல்லாஹ்வுடைய விதி சம்பந்தப்பட்ட ஒன்று.
ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு பிறந்த ஆண்குழந்தைகள் எல்லாம் இறந்துவிட்டார்கள். அப்போது குறைஷிகள், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை குறித்து பேசினார்கள். இவர் சந்ததியற்றவர், இவர் பரக்கத் அற்றவர். அல்லாஹ்வுடைய அருள் அற்றவர் என்பதாக ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு மனவேதனை கொடுத்தார்கள்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அவனுடைய கண்ணியத்திற்குரிய குர்ஆனிலே ஓதப்படுகின்ற அத்தியாயத்தை இறக்கினான்:
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
நபியே!(இந்த உலகத்திலும் நாம் உங்களுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கப் போகின்றோம்.)மறுமையிலே உங்களுக்கு கவ்ஸர் என்ற மிகப்பெரிய அழகிய நீர் தடாகம் இருக்கின்றது.(அல்குர்ஆன் 108:1)
உங்களுக்கு ஆண் குழந்தைகள் இறந்துவிட்டால் என்ன? பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.அல்லாஹ் அவர்களிலே பரக்கத் செய்வான். உங்களுக்கு ஆண் வாரிசு இல்லை என்றால் என்ன? நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்கள் உங்களுடைய புகழை சொல்லப்போகிறார்கள்; உங்களை பின்பற்றப் போகிறார்கள்.
أشهد أن لا إله الا الله
என்று யார் கூறினாலும் அவருடைய அந்த ஷஹாதா நிறைவடையாது! ஏற்றுக் கொள்ளப்படாது!
وأشهد أن محمداً رسول الله
இந்த ஷஹாதாவை அவர் கூறுகின்ற வரை. இத்தகைய பெரும் பாக்கியம் உங்களுக்கு இருக்கிறது.
وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَ
நபியே! உங்களது புகழை கண்ணியத்தை நாம் உயர்த்திக் கொண்டே இருப்போம். (அல்குர்ஆன் : 94:4)
எங்கெல்லாம் அல்லாஹ்வைப் பற்றி பேசப்படுகிறதோ அங்கே நபி (ஸல்) அவர்களைப் பற்றி பேசப்படும். உலகத்தில் அல்லாஹ்வின் நினைவு கூறப்படாத அவனது ரசூலின் மீது ஸலவாத் சொல்லப்படாத ஒரு நேரமே இல்லை.
உலகத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நேரங்களைக் கொண்டு சுழலச் செய்திருக்கின்றான்.ஐந்து நேரத் தொழுகைகள், ஒரு தொழுகை ஒரு இடத்திலே முடிந்தால் இன்னொரு இடத்திலே ஆரம்பமாகிறது.
அந்த தொழுகைகைகு முன்னால் சொல்லப்படக்கூடிய அதானிலும் இகாமத்திலும் அல்லாஹ்வுடைய தூதரின் திருப் பெயர் கூறப்பட்டு எந்த நாடுகளில் இஸ்லாம் வெறுக்கப்படுகிறதோ, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்கள் நாட்டுக்குள்ளேயே ரசூலுல்லாஹி (ஸல்) உடைய பெயரை மினாராக்களிலே உயர்த்தி இருக்கிறான் என்றால், இதைவிட மிகப்பெரிய அல்லாஹ்வுடைய வேதத்திற்கு உண்மைக்கு சாட்சி என்ன வேண்டும்?
இந்த ஷஹாதாவின் அதானை யாரால் வெறுக்க முடியும்? யாரால் நிறுத்த முடியும்?
நபியே! உங்களது உயர்வை உங்களது புகழை நாம் உயர்த்தி இருக்கிறோம். (அல்குர்ஆன் : 94:4)
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ரசூலை ஏசியவர்களுக்கு திட்டியவர்களுக்கு பதில் சொல்கிறான் : ரசூல் சந்ததியற்றவர்; அவரைப் பற்றி இனி யாரும் பேசமாட்டார்கள் என்று சொன்னார்களே அவர்களுக்கு அல்லாஹ் பதில் சொல்கிறான் :
اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ
கருத்து : நபியே! உங்களை யார் ஏசுகிறானோ, உங்களை யார் குறை சொல்கிறானோ, உங்களை யார் அவமரியாதை செய்கிறானோ, அவன் தான் சந்ததியற்றவனாகப் போகிறான்! அவன் தான் வரலாறற்றவனாகப்போகிறான். அவனைத் தான் மக்கள் இகழப்போகிறார்கள். (அல்குர்ஆன் : 108:3)
சகோதரர்களே! எதை அல்லாஹ் கூறினானோ, அது தான் நடந்தது. நம்முடைய நபி (ஸல்) எந்த மக்காவிலிருந்து துரத்தப்பட்டார்களோ அந்த மக்காவிற்கு மீண்டும் ஆட்சியாளராக, மன்னராக, அந்த மக்காவை ஆட்சி செய்யக்கூடிய கண்ணியவானாக, உள்ளே நுழைகின்றார்கள்.
அதுமட்டுமல்ல எந்த குறைஷியர்கள் வெறுத்தார்களோ அந்த குறைஷியர்கள் நபியை நேசித்தார்கள். எந்த அரபுலகம் இந்த நபியை வேண்டாம் என்று சொன்னார்களோ அந்த அரபுலகம் இந்த நபியை நேசித்தது.
சகோதரர்களே! இன்றுவரை அல்லாஹ்வுடைய பூமியாக அந்த நபியுனுடைய பூமியாக இருக்கின்றது. இது அல்லாஹ்வுடைய மிகப்பெரிய சாட்சி.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா தன்னுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனிலே ஆறுதலுக்கு மேல் ஆறுதலை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்.
அந்த ஒவ்வொரு ஆறுதல்களும் அந்த நபியைப் பற்றி இன்று அல்லாஹ்வுடைய எதிரிகள் இந்த மார்க்கத்தின் எதிரிகள் அசிங்கமாக ஆபாசமாக இழிவாக பேசும்போது, அல்லாஹ் வுடைய அடியார்களே!ரசூல் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கூறிய அந்த ஆறுதல் நமக்கும் என்பதை உணர வேண்டும். உள்ளங்கள் புண்பட்ட நமக்கும் அல்லாஹ்வுடைய அந்த ஆறுதல் பொருந்தும்.
இந்த இடத்திலே இரண்டு விஷயங்களை அல்லாஹு தஆலா நமக்கு சொல்கிறான் : ஒன்று நாம் ஆறுதலை மட்டும் எடுத்துக் கொள்வதல்ல, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு கூறியிருக்கக்கூடிய ஒரு பொறுப்பையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்.
ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :
يَاأَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ
(நம்) தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எல்லாம் (ஒரு குறைவுமின்றி அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக!. நீர் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக ஆக மாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.(அல்குர்ஆன் 5:67)
இன்று நம்முடைய உள்ளத்திலே அல்லாஹ்வுடைய பயம் இருக்கிறதா? அல்லது எதிரிகளுடைய பயம் இருக்கிறதா என்பதை நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
எதிரிகள் நமக்கு செய்யக் கூடிய தொந்தரவால் நம்முடைய உள்ளத்திலே வரக்கூடிய இயற்கையான பயத்தை அல்லாஹ் சொல்லவில்லை. நன்றாக கவனிக்க வேண்டும்.
அந்த பயம் இருந்ததினால் தான் ரசூலுல்லாஹி (ஸல்) ஸவுர் குகையிலே பதுங்கினார்கள். இரவிலே புறப்பட்டார்கள். அது தவறல்ல.
அவர்கள் மீதுள்ள பயத்தால் மார்க்கத்தில் நாம் பலவீனப்படுவது, சமரசம் செய்வது, மார்க்கத்தை நாம் விட்டுவிடுவது அல்லது மார்க்கத்தில் சில அமல்களை அவர்களை திருப்திப்படுத்துவதற்காக விட்டுவிடுவது. இது அல்லாஹ்வுக்கு பிடிக்காத காரியங்கள்.
இதுதான் அல்லாஹ்வை பயப்படுவது போன்று அவர்களை பயப்படுவது.
அல்லாஹ் சொல்கிறான் :
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ
ஆகவே, உமக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீர் அவர்களுக்கு விவரித்தறிவித்து விடுவீராக. மேலும், இணைவைத்து வணங்கும் இவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (அல்குர்ஆன் 15:94)
வசனத்தின் கருத்து : நபியே! நீங்கள் இந்த மார்க்கத்தை தெளிவாக எடுத்துச் செல்லுங்கள். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் தான்; அவன்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான். நீங்கள் அவனை நிராகரித்தாலும் அவன் தான் உங்களது ரப்பு. நீங்கள் அவனை வணங்காவிட்டாலும் நீங்கள் வணங்குவதற்கு தகுதியானவன் அவன் ஒருவன் தான்.
நீங்கள் மறுமையை மறுத்தாலும் சரி, அந்த மறுமைக்கு கண்டிப்பாக நீங்கள் வந்தாக வேண்டும். அவனிடத்திலே விசாரணைக்காக நீங்கள் நிறுத்தப்படுவீர்கள். உங்களுடைய நிராகரிப்புக்கு உங்களுடைய இணைவைப்புக்குரிய தண்டனை அல்லாஹ்விடத்திலே நரகத்தை தவிர எதுவுமில்லை. தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
அடுத்து அல்லாஹ் சொல்கிறான் :
உங்கள் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் இந்த இணைவைப்பவர்களை பயப்படாதீர்கள்! அவர்களை நீங்கள் புறக்கணித்துவிடுங்கள், விட்டுவிடுங்கள். (அல்குர்ஆன் : 15:94)
அடுத்து அல்லாஹ் சொல்கிறான் :
إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ
நபியே! (இவர்கள் கேலி கிண்டல் செய்கிறார்களா? இவர்கள் பரிகாசம் செய்கிறார்களா?) இவர்களுடைய பரிகாசத்திலிருந்து நாம் உங்களை பாதுகாப்போம். (அல்குர்ஆன் : 15:95)
ரசூலுல்லாஹி (ஸல்) உடைய அந்த மக்கா வாழ்க்கையிலே மூன்று காஃபிர்கள் மிக மோசமாக ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்திலே இந்த வசனம் இறங்குகின்றது.
நபி (ஸல்) மனதால் வேதனைப்பட்டார்கள். ஜிப்ரீல் (அலை) வருகிறார்கள். அவர்களிடத்திலே ரசூலுல்லாஹ் (ஸல்) சொல்கிறார்கள்: ஜிப்ரீல், இந்த மூன்று பேரும் எனக்கு தொந்தரவு தருகிறார்கள். ஜிப்ரீல் (அலை) அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அவர்களை அடையாளம் காட்டுங்கள் என்று கூறுகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஷாரா செய்கிறார்கள்; இவர், இவர், இவர் என்பதாக.
ஜிப்ரீல் (அலை) அந்த மூன்று பேரையும் நோக்கி தன்னுடைய விரலை நீட்டுகின்றார்கள். நாம் இவர்களில் இருந்து உங்களை பாதுகாத்து விட்டோம் என்று.
இந்த மூன்று பேரும் வரலாற்றிலே வருகிறது, மிக கேவலமான முறையிலே இறக்கின்றார்கள். அவர்களுடைய உடம்பிலே அல்லாஹ் தஆலா அவ்வளவு மோசமான நோயை சாட்டினான். வெறுக்கப்பட்டவர்களாக நிந்திக்கப்பட்டவர்களாக அவர்கள் இறக்கின்றார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : பைஹகி,எண் : 17731.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களை பாதுகாப்பது, அவர்களை விமர்சிக்கக் கூடியவர்கள், அவர்களை ஏசக்கூடியவர்களுக்கு இழிவை கொடுப்பது இது அல்லாஹ் சுப்ஹானஹு தஆலாவுடைய பொறுப்பு. இது அல்லாஹ்வுடைய வேலை.
அல்லாஹு தஆலா இதை காட்டிக் கொண்டு தான் இருக்கிறான்.
ஸஹீஹுல் புகாரியிலே பதிவான ஒரு வரலாறு. ரசூலுல்லாஹி (ஸல்) உடைய காலத்திலே ஒரு 'நஸ்ரானி' இஸ்லாமை ஏற்று நபியுடைய சமூகத்திலே வருகிறார், எழுதப்படிக்க தெரிந்தவர். ரசூலுல்லாஹி (ஸல்) அவருக்கு குர்ஆனை எழுதக்கூடிய பணியை தருகின்றார்கள்.
சிறிது காலம் அங்கே இருந்துவிட்டு மீண்டும் அவர் கிறிஸ்துவ மதத்திற்கு சென்றுவிட்டார். சென்றது மட்டுமல்ல, ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களை மிக ஏளனமாக பேச ஆரம்பித்துவிட்டார். முஹம்மதுக்கு ஒன்றுமே தெரியாது. நான் எழுதுவதைத் தவிர அவருக்கு வேறு ஒன்றுமே தெரியாது. நான் தான் அவருக்கு கற்றுக் கொடுக்கிறேன். அவர் சொன்னது ஒன்று, நான் எழுதுவது ஒன்று. அதை புரியவே அவருக்கு தெரியாது என்பதாக.
இவர் மதினாவை விட்டு சென்று தன்னுடைய சமூகத்தார்களோடு இருக்கிறார். அநேகமாக நஜ்ரான் பகுதியாக இருக்கும். பிறகு இவர் இறந்துவிடுகின்றார்.
மக்கள் இவரை புதைத்துவிடுகின்றார்கள். மறுநாள் காலையிலே பார்த்தால், அந்த பிரேதம் மண்ணுக்கு மேலே இருக்கிறது. ஏதோ முஹம்மதுடைய தோழர்கள் சதி செய்துவிட்டார்கள் என்பதாக அவர்கள் மீண்டும் ஆழமாக தோண்டி அந்த பிரேதத்தை புதைக்கிறார்கள்.
(ரசூலுல்லாஹி (ஸல்) உடைய தோழர்கள் சதி செய்திருந்தால், தோண்டி எடுத்த பிரேதத்தை விட்டிருப்பார்களா?)
பிறகு ஆழமாக தோண்டி புதைக்கின்றார்கள். அடுத்த நாள் காலையில் பார்த்தால் மீண்டும் அந்த பிரேதம் வெளியில் கிடக்கின்றது. சொல்கிறார்கள் : இது முஹம்மதுடைய செயலாக அவரை பின்பற்றியவருடைய செயலாக இருக்குமென்று.
மீண்டும் இரண்டாவது நாளைவிட நன்கு ஆழமாக புதைக்கின்றார்கள். அடுத்த நாள் பார்த்தால் பிரேதம் மேலே வந்துவிட்டது. பிறகு மனித சக்தியால் எவ்வளவு தோண்ட முடியுமோ அவ்வளவு ஆழத்திலே தோண்டி அந்த பிரேதத்தை புதைக்கின்றார்கள். மறுநாள் பார்த்தால் பூமிக்கு மேலே வந்துவிட்டது.
சொன்னார்கள் : இது முஹம்மத் செய்யக்கூடிய வேலையல்ல. இது இவருடைய செயலுக்கு கிடைத்த தண்டனை என்று.
அறிவிப்பாளர் : அனஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 3617.
சகோதரர்களே! இத்தகைய வரலாறுகள் குர்ஆனிலும் ஹதீஸிலும் நம்முடைய வாழ்க்கை வரலாற்றிலும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் வருகின்றோம். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களை பாதுகாப்பது அவர்களது கண்ணியத்தை உயர்த்துவது இது அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய வாக்குز
ஒரு தீமையிலும் நமக்கு நன்மை இருக்கும். ரசூலுல்லாஹி (ஸல்) உடைய மனைவியின் மீது இட்டுக்கட்டிய சம்பவத்தை அல்லாஹ் சொல்லும்போது,
لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ
அதை நீங்கள் தீங்காக நினைக்காதீர்கள். அதிலும் உங்களுக்கு நன்மை இருக்கின்றது என்று அல்லாஹ் கூறினான். (அல்குர்ஆன் 24:11)
உண்மையான முஃமின்கள் யார்? உண்மையான முனாஃபிக்குகள் யார்? என்று அல்லாஹ் வெளிப்படுத்தினான்.
சகோதரர்களே!இதுபோன்ற சில மனதிற்கு கஷ்டமான நிகழ்வுகள் ஏற்படும்போது மனதிற்கு வேதனை தரக்கூடிய நிகழ்வுகள் ஏற்படும்போது அல்லாஹ்விடத்திலே கையேந்த வேண்டியوஅல்லாஹ்விடத்திலே திரும்ப வேண்டிய கட்டாயத்திலே இருக்கின்றோம்.
யா அல்லாஹ்! இந்த சோதனையில் எங்களுக்கு நன்மையைக் கொடு!
இன்று பார்க்கிறோம் : எத்தனை பேர் ரசூலுல்லாஹி (ஸல்) உடைய வாழ்க்கை வரலாறை தேட ஆரம்பித்துவிட்டார்கள். அதிலே எத்தனை பேர் அந்த வரலாற்றிலே படித்த உண்மைகளைக் கொண்டு உள்ளத்தால் பண்பட்டிருகின்றார்கள். உள்ளம் திருந்தியிருக்கின்றார்கள்.
இத்தகைய நன்மைகளும் இந்த தீமைகளுக்கு பின்னால் இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதே நேரத்திலே இந்த வசனத்திலே முதல் பகுதியில் சொல்லப்பட்ட
அல்லாஹ்வுடைய தீனைப் பற்றி அல்லாஹ்வுடைய ரசூலைப் பற்றி மக்களுக்கு சொல்லவேண்டிய கடமை பொறுப்பு நமக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் : 15:94)
அந்த பொறுப்பிலிருந்து நாம் அலட்சியம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த அலட்சியத்தின் காரணமாகவும் பல சோதனைகள் நமக்கு வரலாம்.
ஆகவே நம்முடைய கடமை அல்லாஹ்வை வணங்குவது மட்டுமல்ல. அல்லாஹ் வுடைய வணக்கத்தின் பக்கம் மக்களை அழைப்பது. நாம் முஸ்லிம்களாக மட்டும் இருப்பதல்ல. இஸ்லாமின் பக்கம் அல்லாஹ்வுடைய அடியார்களை அழைப்பது.
அல்லாஹ்வைப் பற்றிய அல்லாஹ்வுடைய ரசூலைப் பற்றிய உண்மைகளை அவர்களுடைய உண்மையான புகழ்களை அல்லாஹ்வுடைய உயர்ந்த குணங்களை ரசூலுல்லாஹ் உடைய உயர்ந்த பண்புகளை மக்களுக்கு சொல்ல வேண்டிய மிக முக்கியமான நேரம் இது.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நாமும் நேர்வழி பெற்று நேர்வழிக்கு காரணமாக நம்மை ஆக்கியருள்வானாக! அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் யார் தொந்தரவு தருகின்றார்களோ, அல்லாஹ்வுடைய தீனை யார் ஏசுகின்றார்களோ, அவர்களுக்கு தகுந்த பாடத்தை படிப்பினையை அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா புகட்டுவானாக!
அவர்களுடைய தீமைகளிலிருந்து, கெடுதிகளிலிருந்து, பொறாமை, குரோதங்களிலிருந்து அல்லாஹு தஆலா நம்மையும் உலகத்திலுள்ள அத்தனை முஸ்லிம் சமுதாயத்தையும் பாதுகாப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ رَجُلٌ نَصْرَانِيًّا فَأَسْلَمَ، وَقَرَأَ البَقَرَةَ وَآلَ عِمْرَانَ، فَكَانَ يَكْتُبُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَادَ نَصْرَانِيًّا، فَكَانَ يَقُولُ: مَا يَدْرِي مُحَمَّدٌ إِلَّا مَا كَتَبْتُ لَهُ فَأَمَاتَهُ اللَّهُ فَدَفَنُوهُ، فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الأَرْضُ، فَقَالُوا: هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ لَمَّا هَرَبَ مِنْهُمْ، نَبَشُوا عَنْ صَاحِبِنَا فَأَلْقَوْهُ، فَحَفَرُوا لَهُ فَأَعْمَقُوا، فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الأَرْضُ، فَقَالُوا: هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ، نَبَشُوا عَنْ صَاحِبِنَا لَمَّا هَرَبَ مِنْهُمْ [ص:203] فَأَلْقَوْهُ، فَحَفَرُوا لَهُ وَأَعْمَقُوا لَهُ فِي الأَرْضِ مَا اسْتَطَاعُوا، فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الأَرْضُ، فَعَلِمُوا: أَنَّهُ لَيْسَ مِنَ النَّاسِ، فَأَلْقَوْهُ (صحيح البخاري 3617 - )
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/