HOME      Khutba      உலகம் காணமுடியாத சீர்திருத்தவாதி! | Tamil Bayan - 660   
 

உலகம் காணமுடியாத சீர்திருத்தவாதி! | Tamil Bayan - 660

           

உலகம் காணமுடியாத சீர்திருத்தவாதி! | Tamil Bayan - 660


بسم الله الرحمن الرّحيم
 
உலகம் காணமுடியாத சீர்திருத்தவாதி
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவை உங்கள் முன்னால் போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும், எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழும் படி உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வுடைய வேதமாகிய அல்குர்ஆனைப் பற்றி பிடித்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவைப் பற்றிப் பிடித்து வாழும்படி எனக்கும், உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக, இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஅலா நம் அனைவரையும் அவனுடைய நேர்வழியின் மீது வைப்பானாக, நம்முடைய சிந்தனைகளில், நம்முடைய செயல்களில், நம்முடைய குணங்களில் வழிகேடுகள் நுழைவதிலிருந்து அல்லாஹு தஅலா நம் அனைவரையும் பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்.
 
இந்த உலகம் சோதனைகள் நிறைந்த ஒரு இல்லம், பல விதமான சோதனைகளைக் கடந்து தான் நாம் சொர்க்கத்தை சென்று அடைய இருக்கின்றோம். 
 
அந்த சோதனைகளில் எப்படி இறைத்தூதர்கள் வெற்றி கண்டார்களோ, அது போன்ற வெற்றிகளை நாம் காணுவதற்கு அல்லாஹு தஅலா அழகிய வழிகாட்டலை நமக்கு அல்குர்ஆனிலே, பிறகு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸிலே நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.
 
சோதிக்கப்படாமல் நாம் சொர்க்கம் சென்று விடலாம் என்று எண்ணிவிட முடியாது. குறிப்பாக சோதனைகளில் ஒரு முக்கியமான சோதனை அல்லாஹு தஅலா சொல்லிக்காட்டுகின்றான் :
 
وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا‌
 
உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசை மொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (அல்குர்ஆன் 3 : 186)
 
اَذًى كَثِيْـرًا‌ -உங்களுடைய உள்ளங்களை காயப்படுத்தக்கூடிய, கவலைப்படுத்தக்கூடிய பல வார்த்தைகளை, உங்களுக்கு துக்கத்தை கொடுக்கக்கூடிய பல இழிச்சொற்களை, பலவிதமான விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக கேட்க நேரிடும். 
 
ஒரு மனிதன் குறிப்பாக ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இந்த உலக வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படக்கூடிய வறுமை, நோய்நொடிகள், பொருளாதார நெருக்கடிகள், இப்படியாக உலகம் சார்ந்த எந்த சோதனையாக இருந்தாலும், அதைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மிக வலிமையான ஈமானை, அந்த ஈமானைத் தாங்கியிருக்கக்கூடிய உள்ளத்தை, அல்லாஹு தஅலா ஒரு முஃமினுக்குக் கொடுத்திருக்கின்றான்.
 
"அல்ஹம்து லில்லாஹ்" என்ற ஒரு வார்த்தையைக் கொண்டு மலை போன்ற சோதனைகளையெல்லாம் ஒரு முஃமின் கடந்துவிடுவான். "ஹஸ்பியல்லாஹ்" அல்லாஹ் எனக்கு போதுமானவன் என்ற ஒரு வார்த்தையைக் கொண்டு எத்தனை இன்னல்களை வேண்டுமானாலும் அவன் தாங்கிக்கொள்வான்.
 
نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
 
அல்லாஹ் சிறந்த எஜமானன், எனக்கு சிறந்த பொறுப்பாளன், சிறந்த பாதுகாவலன். (அல்குர்ஆன் 8 : 40)
 
அல்லாஹ் என்னை கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையைக் கொண்டு எந்த வகையான நெருக்கடியாக இருந்தாலும் சரி, அத்தனை நெருக்கடிகளையும் அவன் அழகிய பொறுமையைக் கொண்டு கடந்து விடுவான். 
 
இரண்டு ரக்அத் தொழுகை அத்தனை மனக்குழப்பங்களிலிருந்தும் அவனை விடுவித்து விடும். 
 
இரவிலே, யா அல்லாஹ்! என்று அவன் அழைக்கக்கூடிய அந்த அழைப்பு அவனுடைய மன நெருக்கடிகளை நீக்கிவிடும். 
 
நம்முடைய தீன், இஸ்லாம், ஈமான், நம்முடைய குர்ஆன், ஹதீஸ் இத்தகைய ஒரு வலிமையை ஆற்றலை முஃமினுக்குக் கொடுத்திருக்கிறது. 
 
ஆகவே, இந்த பிரச்சினைகளெல்லாம் முஃமினுக்கு பெரிய பிரச்சினையே இல்லை.
 
பசி பட்டினியால் வாடுவது, பஞ்சத்தால் வாடுவது, நோய்நொடியினால் இறப்பது இவற்றையெல்லாம் "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" -நாம் அல்லாஹ்வுக்கே சொந்தமானவர்கள். அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் என்ற வார்த்தையைக் கூறி அவன் அழகிய பொறுமையால் கடந்து விடுவான்.
 
நம்முடைய மார்க்கத்தில் சோதிக்கப்படுவது, நமக்கு இடையூறுக் கொடுக்கப்படுவது, அல்லாஹ்வைக் குறித்தோ, நம்முடைய நபியைக் குறித்தோ, இழிவான வார்த்தைகளைச் செவியுறுவது.
 
இது, அல்லாஹ்வை மறுமை நாளை நம்பிக்கைக் கொண்டவன், அல்லாஹ்வை நேசிப்பதை ஈமானாக சொர்க்கத்தின் சாவியாக நம்பிக்கைக் கொண்டிருப்பவன், மார்க்கத்தின் சாவியாக நம்பிக்கைக் கொண்டிருப்பவன், அல்லாஹ்வுடைய தூதரை நேசிக்காமல் சொர்க்கம் கிடையாது என்ற நம்பிக்கையிலே இருக்கக்கூடிய ஒரு முஸ்லிமுக்கு இந்த வார்தைகளெல்லாம் அவனுடைய உள்ளத்தில், அவனுடைய நெஞ்சிலே ஈட்டிகள் பாய்வதை விடக் கடுமையாக இருக்கும்.
 
இங்கே நாம் என்ன செய்ய வேண்டும்? இங்கே தான் நமக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது. 
 
எந்த தூதரைப் பற்றிக் கேள்விபடும் போது, தவறான வார்த்தைகளை, அவர்களிடத்தில் இல்லாத குணங்களைக் கொண்டு அவர்கள் பழிக்கப்படும் போது, உலகத்திலேயே இத்தகைய பரிசுத்தவான் தோன்றவில்லை, இனி தோன்றவும் முடியாது என்று வரலாற்றால் சாட்சி அளிக்கப்பட்ட, நீதவான்களால் சாட்சி கூறப்பட்ட அந்த உத்தமரைப்பற்றி, பரிசுத்தவானைப் பற்றி, நீதவானைப் பற்றி, ஒழுக்க சீலரைப் பற்றி, உண்மையாளரைப் பற்றி, மனித சமூதாயத்திலேயே குணங்களால், ஒழுக்கங்களால், பண்பாடுகளால், தரம்கெட்டவர்கள் விமர்சிக்கும் போது, ஒரு முஃமினுடைய உள்ளம் கண்டிப்பாக காயப்படும். ஒரு முஃமினுடைய உள்ளம் கண்டிப்பாக வேதனைப்படும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலும் இத்தகைய கீழ்த்தரமானவர்கள் இருந்தார்கள். 
 
ஒரு புறம் நபியை உயிரைவிட நேசித்த அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷஹாபாக்கள் என்ற சமுதாயம் இருந்ததைப் போன்று, அங்கே இன்னொருக் கூட்டமும் இருந்தது. 
 
கண்களால் பார்த்து, அனுபவங்களால் சாட்சிக் கூறிய, அமீன் -நம்பிக்கைக்குரியவர் ஸாதிக் -உண்மையாளர், எந்த ஒழுக்கக்கேடு இல்லை என்று சாட்சிக் கூறிய ஒரு கூட்டம் நபியை பகைத்தார்கள், நபியை இகழ்ந்தார்கள், நபியின் மீது அவர்களிடம் இல்லாத குறைகளைக் கொண்டு பழிசுமத்தினார்கள்.
 
காரணம்? அவர்களுக்கு நோக்கம் நபியைப் பொய்பிப்பது அல்ல, அல்லாஹ் சொல்கிறான் : அவர்கள் உங்களைப் பொய்ப்பிக்கவில்லை. அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களை, அத்தாட்சிகளைப் பொய்பிக்கின்றார்கள்.
 
நபியே! அவர்களது குரோதம் பகைமை எல்லாம் உங்கள் மீதல்ல. உண்மையில் இஸ்லாமின் மீது, அல்லாஹ்வுடைய தீனின் மீது, இந்த தவ்ஹீதின் மீது. 
 
ஒரு மனிதன் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இகழ்கிறான் என்றால், அவர்களை ஏசுகிறான் என்றால், அவனுடைய உள்ளத்திலே அவர்கள் கொண்டு வந்த பரிசுத்தமான மார்க்கமாகிய இஸ்லாமின் மீது உண்டான வெறுப்பினால் அவன் அப்படி செய்கிறான். 
 
இந்த "தூயக் கொள்கை" அவனுடைய கெட்ட கொள்கையைப் பிரித்துக் காட்டுகின்றது. அடையாளப்படுத்துகின்றது. அதனால் அவன் இஸ்லாமை எதிர்க்கிறான். இஸ்லாமை எதிர்ப்பதற்காக நபியை அவன் ஏசுகிறான்.
 
ஒரு சில வசனங்களைப் பாருங்கள். எத்தகைய சோதனைகளை எல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடந்து வந்திருக்கின்றார்கள் என்பது நமக்குப் புரியவரும்.
 
ஸூரத்துல் அன்பியாவுடைய 36 -வது வசனம், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகின்றான் :
 
وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِنْ يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ
 
(நபியே!) நிராகரிப்பவர்கள் உம்மைக் கண்டால் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவர்தானா?'' என்று உம்மை(ச் சுட்டிக் காண்பித்து)ப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை. எனினும், அவர்களோ ரஹ்மா(ன் அளவற்ற அருளாளன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர். (அல்குர்ஆன் 21 : 36)
 
அல்லாஹ்வுடைய அந்த வாக்கியத்தின் ஆழத்தை இன்னும் வசனத்தின் போக்கைப் பாருங்கள்!
 
வசனத்தின் கருத்து : உங்களைப் பார்க்கும் போதெல்லாம், உங்களுக்கு முன்னால் வரும் போதெல்லாம், அல்லது அவர்களுக்கு முன்பு நீங்கள் செல்லும் போதெல்லாம், உங்களை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டே இருக்கிறார்கள். உங்களை ஒரு கேளிப் பொருளாக உங்களை ஒரு கிண்டலாக, நக்கலாக தான் அவர்கள் எடுத்துக்கொள்கின்றார்கள். அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
 
இவரா உங்களது கடவுள்களைக் குறைக்கூறுகின்றார், உங்களது கடவுள்களைப்பற்றி விமர்சனம் செய்கின்றார்.
 
உண்மையில் இவர்கள் அல்லாஹ்வை ரஹ்மானை நிராகரிக்கின்றார்கள். "அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும்" என்ற அந்த தூய தவ்ஹீதின் மீதுண்டான வெறுப்பால், அந்த தவ்ஹீதை எதிர்க்க வேண்டும் என்கின்ற காரணத்தால், இவர்கள் இப்படி உங்களைப் பரிகாசம். செய்கிறார்கள்.
 
ஏன் அவர்கள் தவ்ஹீதை எதிர்க்கின்றார்கள்? ஏன் அவர்கள் தவ்ஹீதுக்கு இவ்வளவு பெரிய பகைவர்களாக இருக்கின்றார்கள் என்றால்? "தவ்ஹீத் -அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவது" அவனைத் தவிர யாருக்கும் தலை சாய்க்காமல் இருப்பது. படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வது, ஒரு மனிதனை சிந்திக்க தூண்டுகிறது.
 
ஒரு மனிதனுக்கு ஒழுக்கத்தை கொடுக்கின்றது. ஒரு மனிதனுக்கு நேர்மை, நீதத்தை, உண்மையான இறையச்சத்தைக் கொடுக்கின்றது.
 
சடங்குகள், சம்பிரதாயங்கள், மௌட்டீக நம்பிக்கைகளிலிருந்து, இன்னும் இழிவான, ஈனத்தனமான எல்லா செயல்களுக்கும் தவ்ஹீத் ஒரு மனிதனை விடுதலை செய்கிறது. அது அவர்களுக்கு பிடிக்காது. தவ்ஹீதுடைய ஒழுக்கம், தவ்ஹீதுடைய சீர்திருத்தம், தவ்ஹீதுடைய சமத்துவம், தவ்ஹீதுடைய ஞான போதனைகள் அவர்களுக்கு பிடிக்காது.
 
சடங்கு, சம்பிரதாயங்களைக் கூறி மக்களை பிளவுபடுத்துவதும், மக்களை ஏமாற்றுவதும், பலவீனமானவர்கள் மீது தங்களின் அநியாயங்களை செய்வதும், இப்படியாக சமூகத்தை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கின்ற அவர்களது அந்த கொள்கையினால் அவர்கள் தவ்ஹீதை எதிர்க்கின்றார்கள்.
 
தவ்ஹீதை எதிர்க்கின்ற காரணத்தால் அவர்கள் நபியை எதிர்க்கின்றார்கள். நபியை பரிகாசம் செய்கின்றார்கள்.
 
அல்லாஹு தஅலா இப்படி தான் ஸூரத்துல் ஃபுர்கானுடைய 41 -வது வசனத்திலே கூறுகின்றான் :
 
"அவர்கள் நபியே உங்களைப் பார்க்கும் போதெல்லாம் உங்களைப் பரிகாசம் செய்கின்றார்கள். உங்களைப் பரிகாசிப்பதைத் தவிர வேறெதுவும் அவர்கள் செய்யவில்லை." (அல்குர்ஆன் 25 : 41)
 
அவர்கள் உண்மையாளராக இருந்தால், நல்ல சிந்தனைகளை சமூதாயத்திற்கு சொல்லக்கூடியவர்களாக இருந்தால் கொண்டு வரட்டும் பார்ப்போம், குர்ஆன் சொல்வதைப் போல. 
 
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்று ஒரு அத்தியாயத்தை, இது போன்று ஒரு வசனத்தை, இது போன்று ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று நாம் கூறுகிறோம்.
 
நீங்கள் இந்த நபியை விமர்சிப்பவர்களாக இருந்தால், இந்த நபி கொண்டு வந்த சீர்திருத்தத்திலிருந்து ஆயிரத்தில் ஒன்றையாவது இந்த நூற்றாண்டிலே உங்களால் செய்து காட்ட முடியுமா?
 
உங்களது வேதத்தால், உங்களது சமூக சீர்திருத்தவாதிகளால், உங்களுடைய அரசியல்வாதிகளால், இன்னும் எத்தனை ஞானிகளை, அறிவாளிகளை, எத்தனை சீர்திருத்தவாதிகளை நீங்கள் கொண்டு வர முடியுமோ? கொண்டு வாருங்கள்.
 
எங்களுடைய தூதர் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருபத்தி மூன்று ஆண்டுகளிலே செய்த சமூகப் புரட்சிகளில், சமூக சீர்திருத்தங்களில், ஒழுக்க மேம்பாடுகளிலே, தனி மனித ஒழுக்கத்திலிருந்து, சமூக ஒழுக்கத்திலிருந்து, அரசியல் ஒழுக்கத்திலிருந்து, பெண்களுடைய உயர்விலிருந்து, பெண்களுடைய பாதுகாப்பிலிருந்து, சிறுவர்களுடைய உரிமைகளிலிருந்து, அடிமைகளின் உரிமைகளிலிருந்து, ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற சீர்திருத்தத்திலிருந்து, ஆயிரம் இல்லை இலட்சத்தில் ஒன்றையாவது உலகத்திலுள்ள அத்தனை வல்லுநர்களையும் அழைத்துக் கொண்டு, அத்தனை சீர்திருத்தவாதிகளையும் அழைத்துக் கொண்டு, அத்தனை அரசியல்வாதிகளையும் அழைத்துக் கொண்டு நீங்கள் ஒன்றை ஒரு பகுதியை இலட்சதிலிருந்து செய்து காட்ட முடியும் என்றால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீதாணையாக! இப்போதும் செய்ய முடியாது, இனி வரலாற்றில் எப்போதும் செய்ய முடியாது.
 
அவர்கள் எல்லோரும் அல்லாஹ்வுடைய இஸ்லாமை ஏற்று, இந்த நபியை பின்பற்றக் கூடியவர்களாக மாறினாலே தவிர! 
 
அல்லாஹ்வுடைய தீனை, தவ்ஹீதை, குர்ஆனை ஏற்று, நபியின் சுன்னாவை ஏற்று முஸ்லிம்களாக, முஃமின்களாக மாறினால் தான் அத்தகைய சீர்திருத்தத்தை அவர்களால் செய்ய முடியும். 
 
எப்படி ஸஹாபாக்கள் செய்தார்களோ? எப்படி கலிஃபாக்கள் செய்தார்களோ? அப்படி இல்லாமல் அவர்களுடைய இறைநிராகரிப்பிலே இருந்து கொண்டு, மாற்றப்பட்ட வேதங்களை பின்பற்றிக் கொண்டு, அவர்களால் ஒரு சீர்திருத்தத்தைக் கூட செய்ய முடியாது. 
 
சமூதாயத்தில் ஒரு குறையை அவர்கள் சீர்திருத்தம் செய்ய முடியாது. சமுதாயத்தினுடைய ஒரு பிரச்சினையை அவர்கள் சீர்திருத்தம் செய்ய நினைத்தால், அந்த சீர்திருத்தம் அவர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகளை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.
 
ஆனால், அல்லாஹ்வினுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்த ஒவ்வொரு சீர்திருத்தமும் பக்கவிளைவுகள் இல்லாதவை. 
 
நீங்கள் கொண்டு வரக்கூடிய மாற்றங்கள், நீங்கள் கொண்டு வரக்கூடிய சீர்திருத்தங்கள் பக்கவிளைவுகள் உள்ளவை. 
 
ஒருவருக்கு சாதகமாக இருக்கும். ஆயிரம் பேருக்கு பாதிப்புடையதாக இருக்கும். பார்ப்பதற்கு நன்மையாகத் தோன்றும். அதைத் தோண்டிப் பார்த்தால் நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரக்கணக்கில் ஆபத்துகள் அங்கே அடங்கியிருக்கும்.
 
ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக, செல்வம் படைத்தவர்களுக்கு சாதகமாக, சமூகத்தில் மேம்பட்டவர்களுக்கு சாதகமாக இருக்கும். கோடிக்கணக்கான ஏழைகளும் அப்பாவி மக்களுக்கும் ஆபத்தானதாக இருக்கும். 
 
ஆனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்த சீர்திருத்தம் உலகத்தில் வாழக்கூடிய எல்லா மனிதர்களுக்கும், செல்வந்தர்களிலிருந்து ஏழைகள் வரை, படித்தவர்களிலிருந்து பாமரன் வரை, ஆட்சியாளர்களிலிருந்து சாதாரண மக்கள் வரை எந்த நாட்டில் வசித்தாலும் சரி, எந்த சூழ்நிலையில் வசித்தாலும் சரி, அவர்களுக்கு உண்மையாக, நேர்மையாக, நீதமாக, சமத்துவமாக, ஒழுக்கமாக, பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரு சீர்திருத்தத்தை, ஒரு சமூக அமைப்பை ஒரு மார்க்கத்தை, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடமிருந்து நமக்கு கொடுத்திருக்கின்றார்கள். 
 
இந்த மாற்றத்தைப் பார்த்து அவர்களுடைய உள்ளம் புகைகிறது. அவர்களுடைய உள்ளம் பகைமையால் எரிகிறது. 
 
இதன் மேலுள்ள காழ்புணர்ச்சி, இஸ்லாம் பரவுவதால் அவர்களுக்கு இருக்கக்கூடிய பொறாமையின் காரணமாக அவர்கள் குர்ஆனை ஏசுகிறார்கள். குர்ஆனை எரிக்கின்றார்கள். நபியை ஏசுகின்றார்கள். நபியின் மீது பழிச்சொற்களைப் போடுகின்றார்கள். நபியை வித்தியாசமாக வரைந்து கார்டூனாக வெளியிட்டு எப்படியாவது முஸ்லிம்களை காயப்படுத்துவோம், முஸ்லிம்களுக்கு மத்தியிலே உணர்ச்சிகளைத் தூண்டுவோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
 
எந்த தூதர் பரிகாசிக்கப்பட்டாரோ, எந்த தூதர் கேலி, கிண்டல் செய்யப்பட்டாரோ அவருக்கு அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா கூறிய இந்த அழகிய அறிவுரையைப் பாருங்கள் :
 
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
 
(நபியே!) உமக்கு முன்னர் வந்த (நம் மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில், அவர்களில் பரிகசித்தவர்களை அவர்கள் பரிகசித்துக் கொண்டிருந்தது (வேதனை) சூழ்ந்து கொண்டது. (அல்குர்ஆன் 6 : 10)
 
நபியே நீங்கள் பொறுமையாக இருங்கள். யார் உங்களை பரிகாசம் செய்தார்களோ அவர்கள் எப்படி பரிகாசம் செய்தார்களோ, எதைக் கொண்டு பரிகாசம் செய்தார்களோ, அது அவர்களுக்கு தான் திரும்பப் போகிறது.
 
அல்லாஹ்வுடைய தூதரையும், அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தையும் பாதுகாப்பது அல்லாஹ்வின் பொறுப்பாக இருக்கின்றது. 
 
அல்லாஹ்வுடைய தூதரை இந்த காஃபிர்கள் பல பழிச்சொற்களை சொன்னார்கள். குர்ஆனை ஓதினார்கள், தெளிவான சிந்தனையுடைய சமூக சீர்திருத்தங்ளைச் சொன்னார்கள். அப்பொழுது அந்த குஃப்ஃபார்கள் இவர் ஒரு கவிஞர், கவி பாடி நம்மை ஏமாற்றுகிறார் என்று சொன்னார்கள்.
 
சகோதரர்களே! கவிபாடுவது ரஸூலுல்லாஹ்வின் வழக்கமல்ல.
 
وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُبِينٌ
 
(நம் தூதராகிய) அவருக்கு நாம் கவி கூறக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதும் அல்ல; இது (நன்மை தீமைகளைத்) தெளிவாக்கக்கூடிய குர்ஆனும் நல்லுபதேசமும் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 36 : 69)
 
எத்தனை கவிஞர்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து பேசும் போது, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸுகளை சொல்வார்கள். ஆயத்துகளைச் சொல்வார்கள். கேட்டுவிட்டு அந்த கவிஞர்கள் சொல்வார்கள் : 
 
நாம் கவிஞர்கள். எத்தனையோ கவிதைகளைப் பார்த்திருக்கிறோம். எங்களுக்கு அரபியின் இலக்கணம் எல்லாம் தெரியும். ஆனால் இவர் கூறுவது கவியில்லையே என்று சாட்சிக் கூறினார்கள். 
 
ஆனால் பொறாமைக்காரர்களோ, இஸ்லாம் மீது காழ்புணர்ச்சி கொள்பவர்களோ, இஸ்லாம் பரவுவதால் நம்முடைய இந்த மூடநம்பிக்கைகளை சமுதாயத்திலே பரப்ப முடியாது, மக்களை ஏமாற்றிப் பிழைக்க முடியாது என்ற அந்த ஏக்கத்திலே இருந்தவர்கள், சமூதாயத்திலே எளியவர்களுடைய பொருளாதாரத்தைச் சுரண்டி கொண்டிருந்தவர்கள் நபியை எதிர்த்தார்கள். 
 
அவர்கள் சொன்னார்கள் :
 
بَلْ قَالُوا أَضْغَاثُ أَحْلَامٍ بَلِ افْتَرَاهُ بَلْ هُوَ شَاعِرٌ فَلْيَأْتِنَا بِآيَةٍ كَمَا أُرْسِلَ الْأَوَّلُونَ
 
(தவிர, அவர்கள் நம் வசனங்களைப் பற்றி) மாறாக, ‘‘இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்)கள் என்றும், நம் தூதர் இதைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் அனுப்பப்பட்ட தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்'' என்றும் கூறுகின்றனர்! (அல்குர்ஆன் 21 : 5)
 
மேலும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் :
 
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَجْنُونٍ
 
 ‘‘என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுவோமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 37 : 36)
 
கருத்து : ஒரு பைத்தியக்காரரான கவிஞரான இவருடைய பேச்சைக் கேட்டால், எங்களுடைய மூடநம்பிக்கைகளை, எங்களுடைய மூடக்கொள்கைகளை நாங்கள் விட்டுவிடுவோமா? எங்கள் சிலைகளையெல்லாம் இவருக்காக நாங்கள் விட்டுவிடுவோமா? என்று அவர்கள் கூறினார்கள்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சுமத்திய பழிகளிலேயே பெரிய பழி ரஸூலுல்லாஹ்வை கவிஞர் என்று சொன்னது. ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பைத்தியக்காரர் என்று சொன்னது. 
 
அல்லாஹு தஆலா எவ்வளவு கோவப்பட்டிருப்பான்? தெளிவான சிந்தனையுடைய, தெளிவான அறிவுடைய, ஞானத்தின் ஊற்றாகிய அந்த தூதரைப் பார்த்து அவர் பைத்தியக்காரர் என்று சொல்லப்பட்டால், எந்த அளவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வேதனைப்பட்டிருப்பார்கள், ஸஹாபாக்கள் வேதனைப்பட்டு இருப்பார்கள்!
 
நபிக்கு ஞானத்தைக் கற்பித்த, நபிக்கு ஞானத்தைக் கொடுத்த, ஞானங்கள் நிறைந்த வேதத்தைக் கொடுத்த அல்லாஹு தஆலா எந்த அளவு இந்த வார்த்தைகளால் கோவப்பட்டிருப்பான்? 
 
அல்லாஹ் சொல்கின்றான் :
 
ن وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ
 
நூன். எழுதுகோலின் மீதும் (அதைக் கொண்டு) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 68 : 1)
 
مَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ
 
(நபியே!) உமது இறைவனருளால் நீர் பைத்தியக்காரரல்ல. (அல்குர்ஆன் 68 : 2)
 
وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ
 
நிச்சயமாக உமக்கு முடிவுறாத (நீடித்த) கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 68 : 3)
 
وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ
 
நீங்களோ மகத்தான குணத்தில் இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் : 68:4)
 
ஏன் அல்லாஹ் இப்படி சொல்கின்றான்? அல்லாஹ்வுடைய மார்க்கம் பரவ வேண்டும் என்றால், அல்லாஹ்வுடைய தீன் உயர்ந்து ஓங்க வேண்டும் என்றால், இந்த தீனை எதிர்த்து பேசும் போது, இந்த தீனை விமர்சிக்கும் போது, அழகிய முறையிலே அதைக் கடந்து சென்று, அல்லாஹ்வுடைய தீனைப் பரப்புவதும், அல்லாஹ்வுடைய தீனை எடுத்து இயம்புவதும், அல்லாஹ்வுடைய தீனின் பக்கம் மக்களை அழைப்பது மட்டுமே, ஒரு அழைப்பாளரது கொள்கையாக இருக்க வேண்டும். 
 
அது தான் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையாக இருக்கும்.
 
எவ்வளவு பரிகாசம் செய்தார்கள்?! உடல்ரீதியாக பரிகாசம் செய்தார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உடல்ரீதியாக தொந்தரவு கொடுத்தார்கள். மனரீதியாக நெருக்கடி கொடுத்தார்கள். சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தார்கள்.
 
ஒவ்வொரு சந்தர்ப்பத்தைக் கொண்டும் ரஸூலுல்லாஹ்வுக்கு மன நெருக்கடி கொடுத்தார்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனைவிமார்களின் விஷயத்திலே தொந்தரவு தந்தார்கள். அவர்கள் பிள்ளைகளின் விஷயத்திலே தொந்தரவு தந்தார்கள். அவர்களின் நுபுவ்வத்திலே சந்தேகப்பட்டார்கள். அவர்களுடைய முன் அறிவிப்புலே சந்தேகத்தை ஏற்படுத்தினார்கள்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இப்படிபட்ட பலவிதமான குழப்பங்களை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலே முனாஃபிக்குகளும் சரி, முஷ்ரிக்குகளும் சரி, யூதர்களும், கிறிஸ்தவர்களும் உருவாக்கி செய்து கொண்டே இருந்தார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவற்றையெல்லாம் அழகிய முறையிலே கடந்து ஒரு பெரிய சமுதாயத்தை உருவாக்கி, அந்த சமுதாயத்திலே அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பரிபூரணப்படுத்திக் கொடுத்தார்கள்.
 
அந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நமக்கு பெரிய தவ்ஃபீக்கை அல்லாஹ் கொடுத்திருக்கின்றான். அல்லாஹ்வுடைய தூதரை ஏசக்கூடிய ஒரு கூட்டம் இருக்கிறதென்றால், நீங்கள் இந்த இடத்திலே நன்றி செலுத்துங்கள். "அல்ஹம்து லில்லாஹ்".
 
அல்லாஹ்வுடைய தூதரின் மீது ஸலவாத்து ஓதக்கூடிய, அல்லாஹ்வுடைய தூதரின் பெருமைகளை, நற்குணங்களை உணர்ந்து அவரை நம்பிக்கைக் கொண்ட முஃமின்களிலே அல்லாஹ் நம்மை ஆக்கினானே!
 
அவர்களுடைய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட சொர்க்கவாசிகளிலே அல்லாஹ் நம்மை ஆக்கினானே என்று அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். 
 
அது போன்று அல்லாஹ்வுடைய இந்த தீன் எந்த புரட்சியை சந்தித்ததோ? அந்த புரட்சி இன்று சமுதாயத்திற்கு தேவை. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி இன்னும் இந்த சமுதாயத்திற்கு முழுமையாக நாம் சொல்லவில்லை.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த புரட்சியைப் பற்றி, அவர்கள் செய்த சீர்திருத்தங்களைப் பற்றி, இந்த சமுதாயத்திற்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். 
 
இந்த சமூதாயத்தில் இருக்கக்கூடிய, இலட்சத்தில் சிலர் வேண்டுமானால் இஸ்லாமின் மீது, முஸ்லிம்களின் மீது, காழ்புணர்ச்சி உள்ளவர்களாக, பொறாமை உள்ளவர்களாக இருக்கலாம்.
 
ஆனால், கோடிக்கணக்கான மக்கள் திறந்த உள்ளங்களோடு அல்லாஹ்வைப் பற்றிய பேச்சைக் கேட்கக்கூடியவர்களாக, நபியைப் பற்றிய பேச்சை கேட்கக்கூடியவர்களாக, இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை அறிவதற்குறிய தாகம் உடையவர்களாக இருக்கின்றார்கள். 
 
அதற்கு நாம் என்ன செய்தோம் என்று இங்கு நாம் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சீர்திருத்தப் பணியை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
 
எத்தகைய நீதமான, ஒழுக்கமான சமூதாயத்தை உருவாக்கினார்கள். பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கினார்கள்.
 
திருமணமாகாமல் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி கொடுங்கள். திருமணம் ஆனவன் விபச்சாரம் செய்தால் அவனைக் கல்லெறிந்து கொல்லுங்கள். (அல்குர்ஆன் 24 : 2)
 
என்று மிகப்பெரிய சட்டத்தைக் கொடுத்து உலக இறுதி நாள்வரை பெண்களுக்கான பாதுகாப்பைக் கொடுத்தார்கள். கற்புக்கான பாதுகாப்பைக் கொடுத்தார்கள். சமூகத்திற்கான பாதுகாப்பைக் கொடுத்தார்கள்.
 
இன்று உலகத்திலே சிறுபிள்ளைகள் மீது, மற்ற பெண்கள் மீது பாதுகாப்பு இல்லை. அவர்கள் மீது பலவிதமான பலாத்காரங்கள் செய்யப்படுகின்றன என்று எத்தனை சட்டங்களைக் கொண்டு வருகின்றார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதரின் சட்டம் இன்று அமல்படுத்தட்டும், அல்லாஹ்வுடைய தூதரின் சட்டம் இன்று நிறைவேற்றட்டும், அவ்வளவுதான் அடுத்த நாளிலிருந்து இந்த குற்றங்கள் நூறிலிருந்து ஜீரோவுக்கு வருவதைப் பார்க்கலாம்.
 
ஒரு மனிதன் விபச்சாரத்தை விரும்பி செய்தாலும் சரி, விரும்பாமல் கட்டாயப்படுத்தி செய்தாலும் சரி அது தண்டிக்கப்படவேண்டியத் தண்டனைக் குற்றம் என்பது சட்டமாக்கப் படாதவரை விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. பலாத்காரத்தை ஒழிக்க முடியாது. பெண்களுக்கான பாதுகாப்பும் கொடுக்க முடியாது. 
 
இந்த ஒழுக்கம் அவர்களுக்கு அங்கே பிரச்சினையாக இருக்கின்றது.
 
விபச்சாரத்தை நேசிக்கக் கூடிய, ஆபாசங்களை நேசிக்கக் கூடிய, பெண்களை மோகப்பொருளாக பாவிப்பதற்காக, பெண்களை ஒரு வியாபாரமாக ஆக்குவதற்காக துடித்துக் கொண்டிருக்கக்கூடிய, பெண்களைக் கொண்டு சுகம் அனுபவிக்க வேண்டும் அல்லாஹ் அனுமதிக்காத திருமண உறவில்லாத வழிகளிலே பெண்களை அனுபவிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றார்களே, அவர்களுக்கு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிக் கொடுத்த இந்த ஒழுக்க சட்டம் இடையூறாக இருக்கின்றது. எனவே ரஸூலுல்லாஹ்வை எதிர்க்கின்றார்கள்.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சமூகப் பாதுகாப்பை, பொருளாதார பாதுகாப்பை கொடுத்தார்கள்.
 
"திருடினால் கையை வெட்டுங்கள்" என்று சொன்னார்கள். (அல்குர்ஆன் 5 : 38)
 
அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. 
 
எத்தனையோ சட்டங்களைக் கொண்டு வந்தார்கள் திருட்டை ஒழித்தார்களா? திருடர்களை திருத்தினார்களா? ஒருவன் திருடும் போது அவன் திருடப்படக்கூடிய குற்றவாளி என்று இரக்கப்படுகின்றார்கள்.
 
ஒருவன் திருடுகின்றான் என்றால் அவன் திருட்டோடு நின்றுவிடுகின்றானா? இன்றைய நாளிதழ்களிலே, இன்றைய செய்தித்தாள்களிலே என்ன பார்கிறீர்கள்? திருடக்கூடிய இடத்திலுள்ள பெண்களைக் கற்பழிக்கிறான். பெண்களைப் பலாத்காரம் செய்கிறான். தடுக்க வந்தால் கொலை செய்கிறான். கண்மூடித்தனமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களுடைய உயிரை போக்குகின்றான், பறிக்கின்றான்.
 
அல்லாஹ்வுடைய தூதர் சட்டம் கொண்டு வந்தார்கள்.
 
ஒரு மனிதன் திருடினால் அவனுடைய கரங்களை வெட்டி விடுங்கள் என்பதாக. இந்த சட்டத்தை கொண்டு வந்து பாருங்கள்.
 
இந்த சீர்திருத்தத்தை கொண்டு வந்து பாருங்கள். நீங்கள் பரிகாசம் செய்யலாம். நீங்கள் விமர்சனம் செய்யலாம். இது காட்டுமிராண்டித்தனமான சட்டம் என்று சொல்லலாம். உங்களுடைய காட்டுமிராண்டித்தனமான சிந்தனைகள் அப்படி இருக்கின்றன.
 
குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கின்றீர்கள். அதனால் இப்படி தெரிகின்றது. இந்த சட்டத்தை கொண்டு வந்து பாருங்கள. நூறிலிருக்கக்கூடிய இந்த திருட்டின் எண்ணிக்கை அடுத்த நாளிலே ஜீரோவில் வந்து விடும்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்னும் நூற்றுக்கணக்கான சட்டங்களைச் சொல்லலாம். சமூக மேம்பாடுகளைச் சொல்லலாம். சமூகச் சீர்திருத்தங்களைச் சொல்லலாம். 
 
மதுவை எடுத்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதுவை தடைச் செய்தார்கள்.
 
«جَلَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعِينَ»
 
ஒருவன் மதுவை அருந்தினால், நாற்பது அடிகள் அவனுக்கு கொடுக்க வேண்டும். 
 
அறிவிப்பாளர் : உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1707.
 
மதுவை குடிப்பவனை சபித்தார்கள். மதுவை பிழிபவனை சபித்தார்கள். மதுவை சுமந்து செல்லக் கூடியவனை சபித்தார்கள். மதுவை விற்பனை செய்பவனை சபித்தார்கள். மதுவுடைய அத்தனை வகைகளையும் அல்லாஹ்வுடைய தூதர் சபித்தார்கள். (1)
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3674, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
 
அதை சமூகத்திலே தடை செய்து பாருங்கள். அதற்கு ஆதரவாக இருக்கக்கூடிய நீங்கள் எந்த ஒழுக்கத்தை இந்த சமூதாயத்திலே கொண்டு வர முடியும். அல்லாஹ்வுடைய தூதர் மது தீமைகளின் தாய் என்று சொன்னார்கள். இந்த சமூதாயத்தை மதுவிலிருந்து சுத்தப்படுத்தினார்கள்.
 
இப்படி நூற்றுக்கணக்கான சீர்திருத்தங்களை சொல்லலாம். 
 
இந்த சீர்திருத்தங்களைப் பிடிக்காதவர்கள், சமூகத்தினுடைய ஒழுக்கத்தை பிடிக்காதவர்கள், அல்லாஹ்வின் தூதர் மீது குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள்.
 
ஆனால் நம்முடைய பணி அல்லாஹ்வுடைய தீனை தெரிய வேண்டும் என்கின்ற ஆர்வத்தில் இருக்கக் கூடிய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த தூய இஸ்லாமை எடுத்துச் சொல்ல வேண்டிய, அல்லாஹ்வுடைய தூதரை பற்றி எடுத்து சொல்ல வேண்டிய அழகிய தருணத்தை அல்லாஹ் கொடுத்திருக்கின்றான். 
 
ஆகவே இதுபோன்று நல்ல தருணங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
ரஸூலுல்லாஹ்வின் மனைவியின் மீது இட்டுக்கட்டும் போது அல்லாஹ் சொன்னான் :
 
لَا تَحْسَبُوهُ شَرًّا لَكُمْ بَلْ هُوَ خَيْرٌ لَكُمْ
 
இதை நீங்கள் தீங்காகப் பார்க்காதீர்கள். இதிலும் உங்களுக்கு ஒரு நன்மை இருக்கிறதென்று. (அல்குர்ஆன் 24 : 11)
 
இது போன்ற சூழ்நிலைகளிலே, ஒரு பக்கம் அது நமக்கு துக்கமாக, கவலையாக, பாதிப்பாக இருந்தாலும் கூட, இன்னொரு பக்கம் இந்த நபி யார்? அவர் மீது ஏன் இப்படி சொல்கின்றார்கள்? என்று அறிவதற்கு ஏக்கமுள்ள எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முடிந்தால் நாம் நேரடியாக ரஸூலுல்லாஹ்வைப் பற்றி சொல்வோம்.
 
ரஸூலுல்லாஹ்வைப் பற்றி சொல்லக்கூடிய நல்ல நூல்களை, நல்ல பிரசுரங்களை அவர்களுக்கு கொடுத்து. நமது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவோம்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஅலா அல்லாஹ்வுடைய தீனை நிலைத்திருக்கக் கூடிய,  அல்லாஹ்வுடைய தீனைப் பாதுகாக்கக் கூடிய, அல்லாஹ்வின் தீனின் பக்கம் மக்களை அழைக்கக்கூடிய நல்லவர்களாக, அழைப்பாளர்களாக என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ، عَنْ أَبِي عَلْقَمَةَ، مَوْلَاهُمْ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ الْغَافِقِيِّ، أَنَّهُمَا سَمِعَا ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَشَارِبَهَا، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ » (سنن أبي داود 3674 -) ]حكم الألباني] : صحيح
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/