HOME      Khutba      சூழ்ச்சிகள் வெல்லாது | Tamil Bayan - 609   
 

சூழ்ச்சிகள் வெல்லாது | Tamil Bayan - 609

           

சூழ்ச்சிகள் வெல்லாது | Tamil Bayan - 609


بسم الله الرّحمن الرّحيم
 
சூழ்ச்சிகள் வெல்லாது
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
சூழ்ச்சி செய்பவர்கள் என்னதான் சூழ்ச்சி செய்தாலும் சரி அவர்களுடைய சூழ்ச்சி அவர்களுக்கே அழிவாக மாறுமே தவிர, சூழ்ச்சி செய்யப்பட்டவர்களை அல்ல. அந்த இறை நம்பிக்கையாளர்களை கண்டிப்பாக அல்லாஹு சுப்ஹானஹு தஆலா பாதுகாத்துக் கொள்வான். 
 
ரப்புல் ஆலமீன் கூறுகின்றான்;
 
وَلَا يَحِيقُ الْمَكْرُ السَّيِّئُ إِلَّا بِأَهْلِهِ
 
கெட்ட சூழ்ச்சிகள் செய்பவர்கள், தீய சதி திட்டங்களை தீட்டக்கூடியவர்கள் கண்டிப்பாக அவர்களுடைய சூழ்ச்சிகள் அவர்களைத்தான் சூழ்ந்து அழிக்கும். அந்த தீய சூழ்ச்சிகள் அவர்களுக்கே கேடாக அவர்களுக்கே அழிவாக மாறிவிடும். (அல்குர்ஆன் 35 : 43) 
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இறைத்தூதர்களின் நீண்ட நெடிய வாழ்க்கை வரலாற்றை நமக்கு எடுத்துக் கூறி அந்த இறைத்தூதர்கள் எத்தகைய சூழ்ச்சிகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள்? அவர்களை சுற்றி எப்பேற்ப்பட்ட சதித் திட்டங்கள் எல்லாம் தீட்டப்பட்டன? அல்லாஹு தஆலா அந்த இறைத்தூதர்களையும், அவர்களை நம்பிக்கை கொண்டவர்களையும் எப்படி பாதுகாத்தான்? அவர்களுக்கு சூழ்ச்சி செய்தவர்களை அல்லாஹ் எப்படி அழித்தான்? என்பதை அல்குர்ஆன் நமக்கு இன்று தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்கின்றது.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த இறை மறுப்பாளர்களைப் பொருத்தவரை, யார் அந்த சிலை வணக்க வழிபாட்டில் ஊறி, சிலை வணக்கத்தில் வெறிக்கொண்டு விட்டார்களோ இவர்களுடைய நிலையைப் பொறுத்தவரை இவர்கள் எப்பொழுதும் முஃமின்களுக்கு எதிரிகளாகத்தான் இருப்பார்கள். 
 
இவர்கள் அல்லாஹ்வுடைய இந்தத் தூய பரிசுத்தமான இந்த மார்க்கத்தை நம்பிக்கை கொண்டவர்களுக்கு இவர்கள் ஒருபோதும் தங்களுடைய அந்த நட்பை பாராட்ட மாட்டார்கள். அவர்களுடைய உள்ளம் கண்டிப்பாக காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் பகைமையையும் தான் கொட்டிக்கொண்டு இருக்கும்.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இதை நமக்குத் தெளிவாகக் கூறுகின்றான்;
 
إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا
 
முஃமின்களே! இந்த இறைமறுப்பாளர்கள் இறை நிராகரிப்பாளர்கள் நிச்சயமாக உங்களுக்கு மிகத் தெளிவான எதிரிகளாக இருக்கிறார்கள். பகிரங்கமான எதிரிகளாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 4 : 101)
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவில் இந்த தவ்ஹீத் உடைய ஏகத்துவ பிரச்சாரத்தை இந்த தவாவை ஆரம்பித்தபோது அவர்கள் சந்தித்த அந்த சோதனைகளை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தான். நம்பிக்கையூட்டி கொண்டே இருந்தான். 
 
وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُنْ فِي ضَيْقٍ مِمَّا يَمْكُرُونَ
 
நபியே! அவர்களுடைய சூழ்ச்சிகளால் நீங்கள் தூக்கப்பட்டு சஞ்சலப்பட்டு சோர்ந்து விடாதீர்கள். அதுபோன்று அவர்கள் உங்களுக்கு எதிராகச் செய்யக்கூடிய சூழ்ச்சிகளால் இந்த சதிகளால் நீங்கள் மன நெருக்கடிக்கு ஆளாகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 27 : 70)
 
அல்லாஹ்வுடைய அடியார்கள் அல்லாஹ் அல்லாஹு சுப்ஹானஹு தஆலா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எவ்வளவு பெரிய ஒரு அழுத்தமான ஆழமான ஒரு ஆறுதலை கூறக்கூடிய ஒரு நிலை இருந்தது என்றால் எந்த அளவு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனைக்கு ஆளாகி இருப்பார்கள். அந்த சோதனைகளால் இத்தகைய மனநெருக்கடி அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் .
 
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقٍ مِمَّا يَمْكُرُونَ *إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ
 
வசனத்தின் கருத்து : நபியே! உறுதியாக இருங்கள்; சகிப்போடு இருங்கள்; பொறுமையாக இருங்கள். உங்களுடைய பொறுமை அல்லாஹுவை கொண்டுதான். நபியே! கண்டிப்பாக தக்வா உள்ளவர்களுக்கு, இறையச்சம் உள்ளவர்களுக்கு, அல்லாஹ்வை பயந்து, அல்லாஹ்வுடைய தீனை பின்பற்றி, அல்லாஹ்வுடைய சட்டத்தை தன்னிலும் நிலைநிறுத்தி, அல்லாஹ்வுடைய இந்த தீனை மக்களுக்கு மத்தியில் பரப்பவேண்டும், இந்த தீன் பக்கம் மக்களை அழைக்க வேண்டும் என்று இந்த மார்க்கத்திற்காக வாழக்கூடிய அந்த தக்வா உடையவர்களோடு கண்டிப்பாக அல்லாஹ் இருக்கின்றான். (அல்குர்ஆன் 16 : 127, 128)
 
தக்வா என்பது வெறும் தொழுகையில் மட்டுமல்ல. சில அடையாளங்களில் மட்டுமல்ல. எந்த ஒரு வாழ்க்கையை அல்லாஹ்வினுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்தார்களோ, அந்தமுழு வாழ்க்கைக்கு பெயர்தான் தக்வா. அந்த வாழ்க்கையில் இபாதத் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் தஃவத் -அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டே இருப்பது; சதா அழைப்பது; காலையிலும் மாலையிலும், இரவிலும் பகலிலும் என்று அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டே இருப்பது.
 
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ
 
நபியே! உம்முடைய இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைத்துக் கொண்டே இருங்கள்; மக்களை அல்லாஹ்வுடைய இந்த தீனின் பக்கம் அழைத்து கொண்டே இருங்கள். (அல்குர்ஆன் 16 : 125)
 
قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
 
(நபியே!) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, நான் (அவனுக்கு) இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.'' (அல்குர்ஆன் 12 : 108)
 
வசனத்தின் கருத்து : நபியே! தெளிவாக இந்த மக்களுக்கு சொல்லுங்கள்; இதுதான் இந்த இஸ்லாம், இந்த ஓரிறை கொள்கையுடைய, மறுமையை நம்பிக்கை கொள்ளக்கூடிய, அநீதிகளையும் ஆபாசங்களையும் அசிங்கங்களையும் வெறுத்து நீதத்தையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் போதிக்கக்கூடிய இந்த இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான் என்னுடைய பாதை. என்னுடைய பணி பள்ளிவாசலில் தொழுவது மட்டுமல்ல. ரமலானில் நோன்பு வைப்பது மட்டுமல்ல. என்னுடைய பணி காபாவில் ஹஜ் செய்வது மட்டுமல்ல. அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டே இருப்பது.
 
அன்பு சகோதரர்களே! இந்த தஃவா ஒவ்வொரு முஸ்லிமுடைய அடிப்படை பண்பாகவும், அவனுடைய வாழ்க்கையின் குறிக்கோளாகவும் இருக்க வேண்டும். இதைக் கொண்டுதான் அல்லாஹ்வுடைய உதவி இருக்கின்றது.
 
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்; (அல்குர்ஆன் 16 : 127-128)
 
தக்வா உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான். நம்முடைய மக்களில் சிலருக்கு தக்வா என்பது சில அடையாளங்களோடு சுருங்கி விட்ட ஒரு அமலாக ஆகிவிட்டது. சிலருக்கு தாடியோடு, சிலருக்கு ஜிப்பாவோடு, சிலருக்கு தொழுகையோடு, சிலருக்கு நோன்போடு, இப்படியாக ஒரு ஒரு அமலை கொண்டு மட்டும் தக்வாவை முடிவு செய்து கொள்கின்றோம். அப்படி இல்லை சகோதரர்களே!
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த வாழ்க்கையை வாழ்ந்தார்களோ அதுதான் தக்வா. மஸ்ஜிதில் இருந்து வீடு வரை, வீட்டிலிருந்து கடைத்தெரு வரை, பிறகு ஆட்சிவரை, பிறகு அனைத்திலும் அல்லாஹ்வுடைய அந்த தீனை நிலை நிறுத்துவது அந்த மார்க்கத்தை நிலை நிறுத்துவது, அல்லாஹ்வுடைய கட்டளையை நிலைநிறுத்துவது.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்; (அல்குர்ஆன் 16 : 127-128)
 
இன்னும் யார் மனத்தூய்மையோடு இஹ்லாஸோடு இருக்கின்றார்களோ, அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தில் நன்மை செய்பவர்களாக இருக்கின்றார்களோ அவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான். அல்லாஹ்வுடைய உதவி அவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா சோதனைக்கு ஆளான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கும், அவர்களோடு அந்த துன்பத்தில் துயரத்தில் பங்கு கொண்ட நபித்தோழர்களுக்கும் சொல்லக்கூடிய ஆறுதலை பாருங்கள். ஆம் சகோதரர்களே! கண்டிப்பாக அல்லாஹ்வுடைய ஆறுதல் நமக்குத் தேவை. அல்லாஹு சுப்ஹானஹு தஆலா கொடுக்கக்கூடிய அந்த தைரியம் அந்த துணிஊட்டல் நமக்குத் தேவை. அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்;
 
وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ
 
ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயல்களை நன்கு சூழ்ந்து கொள்வான். (அல்குர்ஆன் 3 : 120)
 
கருத்து : நீங்கள் பொறுமையாக இருந்தால், நீங்கள் சகிப்போடு இருந்தால், நீங்கள் உறுதியாக இருந்தால். அன்பு சகோதரர்களே! அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இதுபோன்ற ஸபுருடைய வசனத்தை பல இடங்களில் அல்குர்ஆனிலே குறிப்பிடுகின்றான். அதிலே ஒன்று எதிரிகளால் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படும் போது, எதிரிகளை முஸ்லிம்கள் போர்க்களத்தில் சந்திக்கும்போது, எதிரிகளை எதிர்க்க கூடிய ஒரு நிலை முஸ்லிம்களுக்கு ஏற்படும் போது, இந்த ஸபுருடைய வார்த்தையை ரப்புல் ஆலமீன் பயன்படுத்தியிருப்பதை நீங்கள் குர்ஆனிலே பார்க்கலாம்.
 
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
 
‘‘எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! மேலும், நிராகரிக்கும் இந்த மக்கள் மீது (வெற்றி பெற) எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!'' என்றும் பிரார்த்தனை செய்தார்கள். (அல்குர்ஆன் 2 : 250)
 
அல்லாஹு தஆலா முஃமின்கள் இந்த துஆவை ஓதுங்கள் என்று சொல்லிக் காட்டுகின்றான். உங்களுக்கு முன் உள்ளவர்கள் இந்த துவாவை ஓதினார்கள். எதிரிகளை சந்திக்க நேர்ந்தால், எதிரிகளோடு யுத்தம் செய்ய நேர்ந்தால், அவர்கள் உங்களை சூழ்ந்து கொண்டால் அந்த நேரத்தில் கேளுங்கள். (அல்குர்ஆன் 2 : 250)
 
எங்களுக்கு பொறுமையை கொடு! என்று. பொறுமை என்றால் அந்த எதிரிகளை எதிர்ப்பதில் நமக்கு இருக்கக்கூடிய அந்த மனவலிமையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். கோழை ஆகிவிடக்கூடாது. துணிவை இழந்துவிடக்கூடாது.
 
அல்லாஹ் துணிவூட்டுகின்றான்; 
 
كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ
 
எத்தனையோ சிறிய கூட்டங்கள் பெரிய கூட்டங்களை வென்று இருக்கின்றார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். அல்லாஹு தஆலா மன உறுதி உள்ளவர்கள், ஈமானிலே நிலை குலையா தன்மை உடைய அந்தப் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2 : 249)
 
பொறுமை என்பது கோழைத்தனம் அல்ல; பொறுமை என்பது துணிவை இழப்பது அல்ல; பொறுமை என்பது புறமுதுகு காட்டி செல்வது அல்ல. மன உறுதியோடு எதிரிகளை எதிர்க்கின்ற அந்த சூழ்நிலையில் மனத் துணிவோடு இருப்பது.
 
யா அல்லாஹ்! எங்களுக்கு மன உறுதியை கொடு. எங்கள் பாதங்களை பலப்படுத்து. நிராகரிக்கக் கூடிய இந்த மக்களுக்கு எதிராக நீ எங்களுக்கு உதவி செய்வாயாக.
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹு தஆலா அந்தப் பொறுமையை சொல்லிக் காட்டுகின்றான். (அல்குர்ஆன் 3 : 120)
 
நீங்கள் உறுதியாக பொறுமையோடு இருந்தால், அதே நேரத்திலே தக்வா உடையவர்களாக இறையச்சம் உடையவர்களாக இருந்தால்.
 
இந்த இடத்திலே ரப்புல் ஆலமீன் நமக்கு மிகத் தெளிவான ஒரு பாடத்தை சொல்கின்றான்; முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வுடைய உதவி, முஃமின்களுக்கு அல்லாஹ்வுடைய உதவி கண்டிப்பாக இருக்கும். எதுவரை அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருந்து அல்லாஹ் தடுத்த காரியங்களை செய்யாமல் இருப்பார்களோ பாவங்களில் அவர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பார்களோ, பாவங்களில் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை தொலைக்காமல் இருப்பார்களோ அது வரை.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று நம்முடைய பிரச்சினைகளுக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று பெரும் பாவங்கள். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! இந்த பெரும் பாவங்கள் நம்முடைய குடும்பங்கள் நம்முடைய சமுதாயத்தை சூழ்ந்து கொண்டு இருக்கின்றது. வட்டியிலிருந்து, ஜினாவிலிருந்து, மதுவிலிருந்து இன்னும் வியாபாரங்கள், தொழில் துறைகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் என்று பல வகைகளில் பெரும்பாவங்கள் இந்த சமுதாயத்தை சூழ்ந்து கொண்டு இருக்கின்றது. 
 
ஆகவேதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறையாகவும், ஸஹாபாக்களின் நடைமுறையாகவும் இருந்தது. 
 
எப்போதெல்லாம் எதிரிகளை சந்திக்கக்கூடிய அந்த சூழ்நிலை வருமோ அவர்கள் தவ்பா இஸ்திஃபார்களை அதிகப்படுத்துவார்கள். அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுவார்கள். அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அமல்களை செய்து துஆ செய்வார்கள்.
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் பாருங்கள்; 
 
وَكَأَيِّنْ مِنْ نَبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ (146) وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَنْ قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
 
எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்துவிடவுமில்லை. (இவ்வாறு சிரமங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான்.
 
(இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்புமீறிய (குற்றத்)தையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றிபெற நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!'' என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) கூறியதில்லை. (அல்குர்ஆன் 3 : 146-147)
 
வசனத்தின் கருத்து : அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். எத்தனையோ நபிமார்கள் அவர்களோடு நம்பிக்கை கொண்ட அந்த நல்லவர்கள் எதிரிகளை எதிர்த்து அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டார்கள். குறைவாக இருந்தார்கள். அவர்கள் பலவீனப்படவில்லையே; அவர்கள் கோழையாக ஆகவில்லையே; தைரியம் இழக்கவில்லையே; எதிரிகளுக்கு முன்னால் அவர்கள் மண்டியிடவில்லையே; அவர்கள் தாழ்ந்து போகவில்லையே; இத்தகைய பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3 : 146-147)
 
பொறுமையாளர்கள் என்று யாரை அல்லாஹ் இங்கு இலக்கணப்படுத்துகின்றான்? யார் எதிரிகளுக்கு முன்னால் மண்டியிடவில்லையோ, எதிரிகளுக்கு முன்னால் தாழ்ந்து விடவில்லையோ, சோர்ந்து போய்விடவில்லையோ, கோலையாகி விடவில்லையோ, அவர்களிடத்திலே சரணடையவில்லையோ அவர்களை அல்லாஹு தஆலா பொறுமையாளர்கள் இன்று சொல்லிக் காட்டுகின்றான். அவர்களுடைய உள்ளத்தில் ஒரு துளிகூட கோழைத்தனம் இல்லை. எதிரிகளின் அந்த எண்ணிக்கையைப் பார்த்து என்ன ஆகிவிடுமோ என்ற மனப்பான்மை அவர்களிடத்தில் இருந்தது இல்லை.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுடைய அந்த பாசறையில் பயிற்சி பெற்ற காலித் இப்னு வலீத் ரோமர்களையும் பாரசீகர்களையும் எதிர்கொண்ட போது சொன்னார்கள்;
 
فقد جئتكم بقوم يحبون الموت كما تحبون الحياة
 
என்னிடத்தில் மரணத்தை விரும்பக்கூடிய ஒரு கூட்டம் இருக்கிறார்கள்; நீயும் உன்னுடன் சேர்ந்தவர்களும் எப்படி மதுவையும் வாழ்க்கையையும் விரும்புகின்றார்களோ அதே போன்று மௌத்தை விரும்பக்கூடிய கூட்டம் என்னிடத்தில் இருக்கிறது என்று கூறினார்கள்.
 
நூல் : தஃப்சீர் தபரி, தஃப்சீர் இப்னு கஸீர்
 
அல்லாஹு தஆலா வரலாறு நெடுக்க நடந்த அந்த நிகழ்வுகளை நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். இவர்களைப் பொறுத்தவரை இவர்களுடைய நோக்கம் என்ன? ஒரு முஸ்லிமை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களுடைய இஸ்லாமிற்காக எதிர்கிறார்கள். 
 
ஏன் அவர்களை விட செல்வ செழிப்பிலே நாம் அதிகமாக ஆகி விட்டோமா? அல்லது எண்ணிக்கையில் அதிகமாகி விட்டோமா? நம்மை விட நல்ல வாழ்க்கையிலே அவர்கள் இருக்கின்றார்கள். எல்லாம் அவர்களிடத்திலே இருக்கிறது; ஆட்சி இருக்கிறது; அதிகாரம் இருக்கிறது. இருந்தும் ஒரு முஸ்லிம் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் முஸ்லிம்களைப் பார்த்து அவர்கள் வெறுப்படைகிறார்கள் என்றால் ஷைத்தான் இப்லீஸ் அவர்களுடைய உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடிய தன்மை இது. அந்த இப்லீஸ் உடைய செயல் இது.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா சொல்லிக்காட்டுகிறான்; இந்த காஃபிர்களை பொறுத்தவரை இவர்கள் எப்படி என்றால், 
 
وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا
 
மேலும், (நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்குச் சாத்தியப்பட்டால் உங்களை உங்கள் மார்க்கத்திலிருந்து திருப்பி விடும்வரை உங்களை எதிர்த்து ஓயாது போர் செய்து கொண்டே இருப்பார்கள். (அல்குர்ஆன் 2 : 217)
 
அல்லாஹ்வின் அடியார்களே! சமாதானத்தை அமைதியை விரும்பக் கூடிய மார்க்கம் அல்லாஹ்வுடைய மார்க்கம். அதை போதிக்கக்கூடிய வேதம் அல்லாஹ்வுடைய வேதம். அல்குர்ஆன், எதிர்த்து சண்டையிட்ட எதிரியின் மீது நமது கை ஓங்கி விட்டால் கூட,
 
وَإِنْ جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
 
(நபியே) அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீரும் அதன் பக்கம் இணங்கிவருவீராக. அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுவீராக; நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 8 : 61)
 
இப்போது சமாதானம் செய்துவிட்டு பிறகு அவர்கள் ஆயுதங்களை தயார் செய்துகொண்டு படைகளை திரட்டிக் கொண்டு வந்து தாக்குவார்கள் என்று பயப்படாதீர்கள்.
 
وَإِنْ يُرِيدُوا أَنْ يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ
 
(நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (உம்மைப் பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கிறான். அவன்தான் உம்மை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான். (அல்குர்ஆன் 8 : 62)
 
இத்தகைய சமாதானத்தை விரும்பக் கூடிய மார்க்கம் இஸ்லாமை தவிர வேறு ஒன்றாக ௭து இருக்க முடியும். சமாதானத்தையும் சூமூகத்தையும் போதிக்கக் கூடிய வேதம் குர்ஆனைத் தவிர வேறு ஒன்றாக எது இருக்க முடியும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் முஃமின்களுக்கு அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் காழ்புணர்ச்சி உள்ளவர்கள் இறை நிராகரிப்பாளர்களை பொருத்தவரை அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இஸ்லாமை ஏற்காத மக்களிலே அபூதாலிப் உம் இருந்தார் அங்கே முத்இ இப்னுஅதியும்இருந்தார் அபுல் முஹ்தரியும்இருந்தார் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை தீனை ஏற்கவில்லை என்றாலும் கூடஅந்த மார்க்கத்தை போதித்த மார்க்கத்தைப் பின்பற்றி அதன் பக்கம் மக்களை அழைத்த நபியோடு இணக்கம் வைத்திருந்தார்கள் முஃமீன்களோடு இணக்கம் கொண்டிருந்தார்கள்; நல்லவர்களும் இருந்தார்கள். அல்லாஹு தஆலா அதையும் சொல்லிக் காட்டுகின்றான். 
 
ஆனால் அதே நேரத்திலே யார் இந்த சிலை வணக்க வழிபாட்டிலே ஊறிப்போய் ஷைத்தானிய சிந்தனைகள் அவர்களின் தலைக்கு ஏறி முஸ்லிம்களை பார்த்தாலே அவர்களது உள்ளம் வெந்து கொண்டு இருக்கின்றதோ அவர்களை தான் நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். அவர்களைத்தான் அல்குர்ஆன் நம்முடைய எதிரிகளாக குறிப்பிடுகின்றது.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்; இந்த இறை நிராகரிப்பாளர்களை பொறுத்தவரை, யார் இஸ்லாமை அழிக்க வேண்டும், இந்த நபியை கொலை செய்ய வேண்டும், இந்த இஸ்லாம் பரவக் கூடாது என்று இருக்கின்றார்களோ அவர்களைப் பொறுத்தவரை இவர்கள் உங்களோடு சதா சண்டை செய்து கொண்டே இருப்பார்கள்; சதா யுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள்; உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்புகிற வரை ஓய மாட்டார்கள்.
 
وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً
 
(நம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டபடியே நீங்களும் நிராகரிப்பவர்களாகி அவர்களுக்கு சமமாகிவிடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். (அல்குர்ஆன் 4 : 89)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினா உடைய வாழ்க்கையில் எவ்வளவு பணிந்து சென்றார்கள்; யூதர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்; கிறிஸ்தவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்; இணைவைப்பாளர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்; நாங்கள் உங்களை பாதுகாப்போம்; உங்களது சிரமம் எங்களது சிரமம் எல்லா வகையிலும். நாங்கள் சூமூகத்தையும் அமைதியையும் நாடி. எவ்வளவு உடன்படிக்கைகளை செய்து இறங்கி வந்தார்கள். 
 
ஹுதைபியா உடைய ஒப்பந்தத்தை நினைத்துப்பாருங்கள். எவ்வளவு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள்?! எவ்வளவு இறங்கி வந்தார்கள்?! 
 
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஒரு முஃமின், ஒரு முஸ்லிம் அந்த கடிதத்தை எழுதுகின்றார். அந்தக் கடிதம் முஸ்லிம்களுக்கும் அந்த முஷ்ரிக்களுக்கும் நடுவிலே எழுதப்படக்கூடிய கடிதம். அதிலே அல்லாஹ்வுடைய தூதரைப் பற்றி முஹம்மது ரசூலுல்லாஹ் –அல்லாஹ்வுடைய தூதர் என்று எழுதப்படுகின்றது.
 
அன்பு சகோதரர்களே! முஷ்ரிக்குகளால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முஹம்மது ரசூலுல்லாஹ் என்று எழுதப்பட்ட அந்த வார்த்தையை அழிக்க வேண்டும். அப்துல்லாஹ் உடைய மகன் முஹம்மத் என்று எழுதுவீர்  முஹம்மது ரசூலுல்லாஹ் என்று எழுதுவதை நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று சொன்னார்கள். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறங்கி வந்தார்கள்.1400 தோழர்கள் ஒரு சைகையிலேயே உயிரை மாய்த்துக் கொள்வதற்கு உயிர் பிரிகின்ற வரை யுத்தம் செய்வதற்கு தயாராக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் போரை விரும்பவில்லை. சொன்னார்கள்; உயிர்கள் பாதுகாக்கப்படுவதற்காக எதை அவர்கள் கேட்டாலும் சரி இந்தப் புனிதம் பாதுகாக்கப்படுவதற்கு எதை அவர்கள் கேட்டாலும் சரி, அதை நான் கொடுக்க தயார். 
 
உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்; அல்லாஹ்வின் தூதரே! மவுத்து வரைப் போர் செய்வோம் என்று ஒப்பந்தம் வாங்கினீர்கள்; அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருடைய அந்த வார்த்தையை பொருட்படுத்தவே இல்லை. பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்; சொல்கின்றார்கள்; 
 
முஷ்ரிக்களில் இருந்து யாராவது இங்கே வந்துவிட்டால் அவர்கள் வலுக்கட்டாயமாக மக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். ஆனால், முஃமின்களில் இருந்து யாராவது மக்காவிற்கு வந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். எத்தகைய அநியாயம் நிறைந்த ஒப்பந்தங்கள். 
 
ஆனால், சமுதாயத்தில் சமூகத்தில் போர்கள் தொடரக்கூடாது; யுத்தங்கள் தொடரக்கூடாது; அமைதியாக மக்கள் வாழ வேண்டும்; சமூகம் உருவாக வேண்டும் என்பதிலே அக்கறை கொண்ட ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் இறங்கி வந்தார்கள். தன் பெயரோடு ரசூலுல்லாஹ் என்று எழுதப்பட்டதை அழிப்பதற்கு அவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.
 
நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்
 
இதுபோன்று தான் முஸ்லிம்களின் நிலைபாடும் இருந்தது. அவர்கள் அல்லாஹ்வுடைய தீனை தவிர, ரப்புல் ஆலமீன் உடைய மார்க்கத்தைத் தவிர நம்மிடத்தில் எதைக் கேட்டாலும் சரி. நாம் அதைக் கொடுக்கத் தயார். 
 
அல்லாஹ்வுடைய இந்த தீனில் நீ சுதந்திரமாக வாழ முடியாது; இந்த தீனை நீ சுதந்திரமாக பின்பற்ற முடியாது; என்ற ஒரு நெருக்கடி வந்தால் நமக்கு அல்லாஹ்வுடைய மார்க்கம் முதலாவது. அல்லாஹ்வுடைய தீன் முதலாவது. நான் முஸ்லிமாக வாழ்வேன். முஃமினாக வாழ்வேன். அல்லாஹ் ஒருவனை வணங்கி வாழ்வேன். அதற்குப் பிறகு எனக்கு என்ன சுதந்திரம் கிடைக்கின்றதோ அந்த சுதந்திரத்திற்கு என்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வேன். அதற்குமேல் துன்யாவிற்காக வேண்டி உலக ஆதாயங்களுக்காக வேண்டி உலக வாழ்க்கையின் ஆடம்பர தேவைகளுக்காக வேண்டி என்னுடைய மார்க்கத்தில் நான் எந்தவிதமான சமரசத்தையும் செய்து கொள்ள தயாரில்லை. 
 
இதுதான் சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு காட்டி கொடுத்த வழிமுறை. அந்த நெருக்கடிக்கு ஆளாக்கப்படாத வரை நாம் இணங்கி தான் வாழ்வோம்; அன்போடு வாழ்வோம்; சமூக உறவைப் பேணி வாழ்வோம்; எல்லா விதத்திலும் நாம் மனிதத்தன்மையை பேணி, அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக, இவர்களுக்கெல்லாம் பயந்தவர்களாக இல்லை. இவர்களின் ஆட்சிக்கு அல்ல; இவர்களின் அதிகாரத்திற்கு அல்ல; எங்களுடைய ரப்புல் ஆலமீன் உடைய கட்டளை நீதமாக இருக்க வேண்டும். 
 
وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
 
ஒரு வகுப்பார் மீதுள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (பகைமை இருந்தாலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருங்கியது. (எப்போதும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 5 : 8)
 
فَمَا اسْتَقَامُوا لَكُمْ فَاسْتَقِيمُوا لَهُمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
 
அவர்கள் ஒப்பந்தங்களை பேணி உடன்படிக்கைகளை பேணி நேர்மையாக நடக்கின்ற போது நீங்களும் நேர்மையாக ஒப்பந்தங்களை பேணி நீங்களும் வாருங்கள் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். (அல்குர்ஆன் 9 : 7)
 
நம்முடைய குர்ஆன் நம்முடைய மார்க்கம் வன்முறையை கற்றுக் கொடுக்கவில்லை; நம்முடைய மார்க்கம் சச்சரவுகளை கற்றுக் கொடுக்கவில்லை; சமாதானத்தை கற்றுக் கொடுக்கின்றது; ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கின்றது; உணர்வுகளை, மனிதத் தன்மையைப் பேணுவதை கற்றுக் கொடுக்கின்றது. 
 
எங்கெல்லாம் முஸ்லிம்கள் வெற்றி கொண்டார்களோ அங்கெல்லாம் வரலாறுகளை படித்துப்பாருங்கள்; ஏன் இந்த நாட்டிலே முஸ்லிம்கள் ஆண்ட காலங்களை நினைத்துப் பாருங்கள்; வரலாற்றிலே எங்கேயாவது பதிவு செய்யப்பட்டிருக்குமா? முஸ்லிம்கள் ஆட்சி செய்த காலத்திலே தாழ்த்தப்பட்ட மனிதன் அல்லது சாதாரணமான ஒரு முஸ்லிம் அல்லாத ஒருவன் அவன் முஸ்லிம்களால் துன்புறுத்தப்பட்டான் என்று. அவன் கேவலப்படுத்த பட்டான் என்று. அவனுக்கு அநியாயம் செய்யப்பட்டது என்று. 
 
முஸ்லிம்கள் ஆட்சியிலே வாழ்ந்த பிற இனத்தவர்கள் அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களிலே, அவர்களுடைய கொள்கைகளிலே அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று. அப்படி செய்தால் அது இஸ்லாம் அல்ல; அப்படி செய்பவர்கள் முஸ்லம் அல்ல; அதைத்தான் அல்லாஹ்வினுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் சொல்லித் தருகின்றார்கள்.
 
யார் ஒருவர் ஒரு திம்மியை -ஒப்பந்தம் செய்து வாழக்கூடிய நாட்டில் முஸ்லிம் அல்லாத ஒருவரை கொலை செய்வாரோ அவர் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார். அவரை விட்டு நான் விலகிக் கொள்கிறேன் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (1)
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் ; புகாரி, எண் 6516, 3166.
 
அல்லாஹ்வுடைய மார்க்கம் நமக்கு அந்த நிதான தன்மையை கற்றுக் கொடுத்திருக்கிறது. நம்முடைய மார்க்கத்தின் மீது பற்று இருக்கக்கூடிய அதே நேரத்திலே பிற மக்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களுடைய உரிமையை எப்படிப் பேண வேண்டும்? 
 
உன்னுடைய மார்க்கத்தை பின்பற்றாத அன்னியன் உனது அண்டை வீட்டில் இருந்தாலும் கூட அவனுக்கு நீ நன்மை செய்யாதவரைநீ ஒரு முஃமினாக இருக்க முடியாது. இது நமக்கு மார்க்கம் சொல்லி தரக்கூடியது. (அல்குர்ஆன் 4 : 36)
 
வஞ்சிப்பதோ, கள்ளத்தனம் செய்வதோ, சூழ்ச்சி செய்வதோ ஒரு முஸ்லிமிடத்தில் இருக்க கூடாத ஒரு செயல். ஒரு முஸ்லிம் ஒப்பந்தங்களைப் பேணுவான்; உடன்படிக்கைகளை பேணுவான்; அவன் யாரோடு செய்து கொண்டாலும் சரியே.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இதைத்தான் சொல்லிக் காட்டுகின்றான்; 
 
وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ
 
அவர்கள் உங்களோடு யுத்தம் செய்வார்கள்; கலகம் செய்வார்கள்; உங்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்; உங்களை உங்களுடைய மார்க்கத்திலிருந்து திருப்பி விடவேண்டும் என்பதற்காக. (அல்குர்ஆன் 2 : 217)
 
அன்பு சகோதரர்களே! இந்த நேரத்தில் தான் நாம் துஆவிற்கு அதிக தேவை உள்ளவர்களாக இருக்கிறோம். நம்முடைய ஈமானை உறுதி செய்து கொள்வதற்கு அதிக தேவை உடையவர்களாக இருக்கிறோம். பாவமன்னிப்புத் தேடுவதற்கு அல்லாஹ்வின் பக்கம் மீளுவதற்கு மிகத் தேவை உள்ளவர்களாக இருக்கிறோம். பயப்பட வேண்டிய அவசியமில்லை. 
 
ரப்புல் ஆலமீன் சொல்கின்றான்;
 
وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِنْدَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ
 
எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளை இறைவன் முன்பாகவே செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய சூழ்ச்சிகளோ மலைகளையும் பெயர்த்து விடக்கூடியவையாக இருக்கின்றன! (ஆயினும், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றும் பலிக்கப் போவதில்லை!) (அல்குர்ஆன் 14 : 46)
 
மேலும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கின்றான்;
 
ذَلِكُمْ وَأَنَّ اللَّهَ مُوهِنُ كَيْدِ الْكَافِرِينَ
 
நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை (இழிவுபடுத்தி) பலவீனப்படுத்துவதற்காகவே நிச்சயமாக அல்லாஹ் இவ்வாறு செய்தான். (அல்குர்ஆன் 8 : 18)
 
நம்மைப் பொறுத்தவரை இன்னும் நாம் செய்ய வேண்டிய பணியை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்;
 
وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ
 
நம்முடைய காரியங்களில் அல்லாஹ்விடத்திலே ஒப்படைப்போம். நிச்சயமாக அல்லாஹ் தஆலா அடியார்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றான்; உற்று நோக்கிக்கொண்டு இருக்கின்றான். (அல்குர்ஆன் 40 : 44)
 
ஹூத் அலைஹி வசல்லம் அவர்களுடைய உழைப்பை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்;
 
إِنِّي أُشْهِدُ اللَّهَ وَاشْهَدُوا أَنِّي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ (54) مِنْ دُونِهِ فَكِيدُونِي جَمِيعًا ثُمَّ لَا تُنْظِرُونِ (55) إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُمْ مَا مِنْ دَابَّةٍ إِلَّا هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
 
‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நான் அவனையன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து விலகிக்கொண்டேன். (இதற்கு) நீங்களும் சாட்சியாக இருங்கள்'' என்று கூறினார்.
 
‘‘ஆகவே, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு(ச் செய்யக் கூடிய) சூழ்ச்சியைச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் எனக்குச் சிறிதும் அவகாசம் அளிக்க வேண்டாம்'' (என்றும்,)
 
“நிச்சயமாக நான் என் காரியங்கள் அனைத்தையும் என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன். ஒவ்வொரு உயிருள்ளவற்றின் உச்சிக் குடுமியையும் அவனே பிடித்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக என் இறைவன் (நீதியின்) நேரான வழியில் இருக்கிறான் (என்றும்,) கூறினார். (அல்குர்ஆன் 11 : 54, 56)
 
வசனத்தின் கருத்து : நபி ஹூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்களுடைய கூட்டத்தார்கள் எப்பேற்பட்ட கூட்டத்தார்கள் எப்பேற்பட்ட பலசாலிகள் ஆது கூட்டத்தைப் பற்றி படித்துப்பாருங்கள். 
 
ஹூத் அலைஹி வசல்லம் அவர்களும் அவர்களுடன் ஈமான் கொண்ட சிறு கூட்டமும் சொல்கின்றார்கள்; நாங்கள் அல்லாஹ்வை சாட்சியாக்கி விட்டோம். நீங்கள் இணைவைக்கும் அனைத்திலிருந்தும் நாங்கள் விலகிக் கொண்டோம். அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கக் கூடிய அத்தனை தெய்வங்களிலிருந்து நாங்கள் விலகிக் கொண்டோம். நீங்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு சூழ்ச்சி செய்யுங்கள். எங்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. 
 
ஆனால் நாங்கள் எங்களுடைய ரப்பாகிய அல்லாஹ்வை நம்பிக்கை வைத்துள்ளேன். நான் என்னுடைய ரப் ஆகிய அல்லாஹ்வை சார்ந்து விட்டேன். இந்த பூமியிலே இருக்கக் கூடிய எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் சரி, அதனுடைய உச்சி முடி என்னுடைய ரப்புடைய கரத்தில் இருக்கிறது. எத்தனை எதிரிகள் வந்தாலும் அவர்களுடைய உயிர் அல்லாஹ்வுடைய கையிலே. அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வுடைய கையிலே. என்னுடைய ரப் எப்போதும் மிக நேரான சரியான பாதையிலேயே இருக்கிறான்.
 
அல்லாஹு ரப்புல் ஆலமீனுக்கு தெரியும் இந்தத் தீமையிலிருந்து நமக்கு என்ன நன்மையை கொடுக்கவேண்டும்? இந்தத் தீமைக்கு பிறகு எத்தகைய பெரிய நன்மைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை அல்லாஹ் அறிந்தவன். ஆகவே இந்த சோதனையில் இருந்து இந்த தீமையிலிருந்து யா அல்லாஹ்! எங்களை பாதுகாத்து இதற்கு பிறகு இதில் இருந்து எங்களுக்கு பெரிய நன்மையை கொடு! இந்த தீமையை எங்களுக்கு நன்மையாக மாற்றிக் கொடு! இந்த பாதகமான சூழ்நிலையை எங்களுக்கு சாதகமாக மாற்றி கொடு! 
 
என்று உள்ளங்களை வென்று எடுக்கக்கூடிய அழைப்புப் பணி செய்யக்கூடிய, அல்லாஹ்வினுடைய மார்க்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி, பின்பற்றி, அதன் பக்கம் அழைக்க வேண்டிய நேரமிது. பயந்து ஒதுங்க வேண்டிய நேரம் இல்லை. கோழையாக வேண்டிய நேரம் அல்ல. துணிவை இழக்க வேண்டிய நேரம் அல்ல. அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்போம். 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
 
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2 : 153)
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னித்து நம்முடைய பயங்களைப் போக்கி நமக்கு நிம்மதியை தருவானாக! ஆதரவை தருவானாக! நமக்கு உதவி செய்யக்கூடியவர்களை அல்லாஹு தஆலா அதிகப்படுத்துவானாக! யார் இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் ஏழைகளுக்கும் பலவீனமானவர்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்கிறார்களோ, சதி செய்கிறார்களோ, அவர்களுடைய சூழ்ச்சியை, சதியை அவர்களுக்கு எதிராகவே அல்லாஹு தஆலா திருப்பி விடுவாயாக! 
 
அவர்களுடைய ஒற்றுமையிலே அல்லாஹுத்தஆலா பிரிவினை ஏற்படுத்துவானாக! அவர்களுடைய தலைவர்களுக்கும் மக்களுக்கும் மத்தியிலே குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களுடைய ஒற்றுமையை அல்லாஹு ரப்புல் ஆலமீன் குலைத்து, அதிலும் நல்லவர்களை அல்லாஹு ரப்புல் ஆலமீன் இஸ்லாமின் பக்கம் திருப்பி, மேலும் இஸ்லாம் ஓங்குவதற்கும் உயர்வதற்கும் பரவுவதற்கும் உண்டான சாதகமான சூழ்நிலையை அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஏற்படுத்தி தருவானாக!
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا مُجَاهِدٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يَرِحْ رَائِحَةَ الجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا»
(صحيح البخاري 3166 -)
 
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/