HOME      Khutba      அலட்சியம் வேண்டாம்! | Tamil Bayan - 634   
 

அலட்சியம் வேண்டாம்! | Tamil Bayan - 634

           

அலட்சியம் வேண்டாம்! | Tamil Bayan - 634


بسم الله الرّحمن الرّحيمبسم الله الرّحمن الرّحيم
 
அலட்சியம் வேண்டாம்
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தும் அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்தத் தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார் என்று சாட்சி கூறியவனாக இந்த குத்பா உரையை ஆரம்பம் செய்கிறேன்.
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் அச்சம் நம்முடைய உள்ளத்தில் எப்போதும் நீடித்து இருக்க வேண்டும். தனிமையிலும், சபைகளிலும், நம்முடைய வியாபாரங்களிலும், நம்முடைய குடும்ப வாழ்க்கையிலும், இப்படியாக வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், அல்லாஹ்வுடைய பயம், அல்லாஹ்வுடைய அச்சம், அல்லாஹ் நம்மை கண்காணிக்கிறான் என்ற நினைவு, நம்முடைய உள்ளத்தில் இருக்க வேண்டும் என்ற உபதேசத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! சில மாதங்களுக்கு முன்பாக இந்த இடத்திலே இறுதியாக  ஜும்ஆ நடைபெற்றபோது, அப்போது மக்களுக்கு  மத்தியிலேயே பரவி ஒரு பெரிய அச்சுறுத்தலை கொடுத்துக் கொண்டிருக்கின்ற நோயைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உங்களுக்கு முன்னால் வைத்தோம். அதற்குப் பிறகு இந்த இடத்திலே இப்போது திரும்பவும் ஜும்ஆ நடைபெறுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
 
அல்லாஹ்வின் அடியார்களே! நம்பிக்கையாளரைப் பொறுத்தவரை, அவருக்கு அல்லாஹ்வின் மீது தவக்குலும் இருக்கவேண்டும். அல்லாஹ்தான் எனது பாதுகாவலன்; அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது; எல்லாம் அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு தான்; காரணங்களை படைப்பவனும் அவன் தான்; அந்த காரணங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை படைப்பவனும் அல்லாஹ் என்ற நம்பிக்கை அவனுடைய உள்ளத்தில் இருப்பதோடு, அல்லாஹ்வின் கட்டளைக் கிணங்க அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் வழிகாட்டுதலுக்கேற்ப பாதுகாப்புக்காக என்னென்ன வழிமுறைகளை அல்லாஹ் கூறியிருக்கிறானோ, அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) நமக்கு கூறியிருக்கிறார்களோ இன்னும் நம்முடைய தெளிவான அறிவுக்கு அல்லாஹு தஆலா என்னென்ன விளக்கங்களை கூறியிருக்கிறானோ அந்த அடிப்படையில் பாதுகாப்பு முறைகளை நாம் கையாண்டு ஆக வேண்டும்.
 
மார்க்கம் இபாதத் என்று வரும்போது அது நமக்கு வரையறுக்கப்பட்டு  வழிகாட்டப்பட்டு பூர்த்தியாக்கப்பட்டுவிட்டது. 
 
பிறகு நம்முடைய வாழ்க்கை தேவைகளுக்கு ஏற்ப, பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு தேவையான வழிமுறைகளை அல்லாஹ் சுப்ஹானல்லாஹு வதஆலா மார்க்க வழிகாட்டுதலுக்கு ஏற்ப, புரிந்துகொள்ளக்கூடிய, சிந்தித்து உணர்ந்து கொள்ளக்கூடிய அந்த பக்குவத்தை நம்முடைய அறிவுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அந்த அறிவிலிருந்து வரக்கூடியது தான் மருத்துவம் என்பது. 
 
மருத்துவம் என்பது அல்லாஹ் படைத்த ஒன்று. அதை அல்லாஹு தஆலா அவனுடைய நபிமார்களின் வாயிலாகவும் சில அவசியமான விஷயங்களை கூறியிருக்கிறான். அதுபோக மனிதனுடைய அறிவுக்கு அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவ்வப்போது அதற்கு தேவையான விளக்கங்களை அவன் ஏற்படுத்திக் கொடுக்கின்றான்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய மார்க்கத்தில் மருத்துவம் என்பது நம்முடைய மூத்த மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலின்படி  ஒரு பெரும் பகுதியை அதற்காக ஒதுக்கி இருக்கிறது. அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா தன்னுடைய படைப்பில் தேனைப் பற்றி கூறும்போது,
 
فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ
 
அதிலே மக்களுக்கு நோயின் நிவாரணி இருக்கிறது, மருந்து இருக்கிறது என்று குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன் 16 : 69)
 
அதுபோன்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) நிறைய மருத்துவ வழிகாட்டுதல்களை நமக்கு கொடுக்கும் போது கருஞ்சீரகத்தை பற்றி  கூறியிருக்கிறார்கள்,   
 
دَوَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا الْمَوْتَ
 
"மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் அதில் மருந்து இருக்கிறது".
 
அறிவிப்பாளர்: புரைதா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னது அஹ்மது, எண்: 22938.
 
இப்படியாக, மருத்துவத்தை குறித்த மருந்தை குறித்த நிறைய வழிகாட்டுதல்களை  ஹதீஸ்களிலே இருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே தான், ஹதீஸ் நூல்களை கோர்வை செய்த மார்க்கத்தின் மூத்த தலைமை இமாம்கள் தங்களுடைய ஹதீஸ் நூல்களில் தொழுகைக்கான பாடத்தை ஒதுக்கியது போன்று, நோன்பு, ஜகாத், ஹஜ், சுத்தம், இப்படியாக பல விஷயங்கள் குறித்த பாடங்களை அவர்கள் தொகுத்த போது அந்த கிதாபுகளை நீங்கள் எடுத்து படித்துப் பாருங்கள்.
 
كتاب الطب-அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்களுடைய மருத்துவம் சம்மந்தமான அத்தியாயமென்று தனி ஒரு அத்தியாயத்தையே அவர்கள் அமைத்திருப்பார்கள். 
 
நம்முடைய கரங்களுக்கு எட்டக்கூடிய அளவுக்குள்ள ஸஹீஹுல் புகாரி எடுத்துப் பாருங்கள். திர்மிதியை  எடுத்துப் பாருங்கள். எல்லா நூல்களிலும் ஒரு தனி அத்தியாயம் தொழுகைக்காக இருப்பதைப் போன்று, நோன்புக்காக இருப்பதைப் போன்று, மருத்துவம் என்று ஒரு அத்தியாயம் அதிலே இருக்கும். 
 
நம்முடைய மார்க்கம் மருத்துவத்தை ஏற்றுக் கொண்டு அதற்கு ஆர்வமூட்டிய மார்க்கம் இது. குருட்டுத்தனமான கண்மூடித்தனமான நம்பிக்கைகளையோ அல்லது வழிகாட்டுதல்களையோ அறவே அங்கீகரிக்காத மார்க்கம் அல்லாஹ்வுடைய மார்க்கம்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! உதாரணத்திற்கு ஒரு சில விஷயங்களை கவனியுங்கள். அல்லாஹ்வுடைய வேதத்தில் தெளிவாக அல்லாஹ் ரப்பில் ஆலமீன் இரண்டு முக்கியமான சட்டங்களை பற்றி பேசும்போது, நீங்கள் நோயாளிகளாக இருந்தால் என்ற ஒரு நிபந்தனை அங்கே நமக்கு கூறி அப்போது நீங்கள் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டுதலை அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 5 : 6).
தொழுகைக்கு  "உளூ" என்பது    மிக முக்கியமான ஒன்று.
 
مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
 
சுத்தம் (உளூ)  தொழுகையினுடைய  சாவி.(1)
அறிவிப்பாளர்: ரழியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா,  எண்: 276.
 
لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ
 
ஹராமான செல்வத்திலிருந்து சம்பாதித்து கொடுக்கப்படுகின்ற தர்மத்தை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். உளூ  இல்லாமல் தொழப்படுகின்ற தொழுகை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 224.
 
அல்லாஹ் ரப்பில் ஆலமீன் கூறுகிறான்;
إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا
 
நீங்கள் தொழுகைக்காக தயாரானால் முதலாவதாக உளூ செய்து கொள்ளுங்கள் என்று. (அல்குர்ஆன் 5 : 6).
அந்த வசனத்தின் தொடர்ச்சியிலே ரப்பு ல் ஆலமீன் கூறுகிறான்;
 
وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا
நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்களால் உளூ செய்ய முடியாத நிலை இருந்தால், சுத்தமான மண்ணைக் கொண்டு தயம்மும் செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 5 : 6).
 
அல்லாஹ்வின் அடியார்களே! தொழுகை எவ்வளவு பெரிய வணக்கம் அதற்கு ஜனாபத்திலிருந்தும் சுத்தமாக இருக்க வேண்டும். சிறு தொடக்கிலிருந்து சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம் அவ்வளவு முக்கியமான ஒன்று. உளூ செய்யும் போது காலிலே, கரண்டை கால்களிலே, ஒரு சிறு பகுதி நனையாமல் இருந்தால்கூட,
 
وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ
 
கால்களைக் கழுவும் போது கரண்டை கால்களை கழுவும் போது அதை முழுமையாக கழுவாமல் விடக்கூடிய அவர்களுக்கு நரகம் உண்டாகட்டும்; நரகத்தின் கேடு உண்டாகட்டும் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) எச்சரிக்கை செய்கிறார்கள்.
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 96.
 
சிலரை நீங்கள் பார்க்கலாம். அவசர அவசரமாக உளூச் செய்வார்கள். காலை கழுவும்போது விரல்களால் கைகளால் தேய்த்து கோதிக் கழுவ வேண்டும் என்பதை  மறந்து விடுவார்கள். அல்லது அலட்சியம் செய்வார்கள். தண்ணீரை ஊற்றுவார்கள். தண்ணீர் எவ்வளவு ஊற்றினார்கள் என்பது முக்கியமல்ல. அந்தக் கால்களிலே கரண்டை காலிலிருந்து விரல்கள் உட்பட அனைத்து பகுதிகளும் நனைந்தனவா என்பது முக்கியம். 
 
பலர் உளூ செய்துவிட்டு வரும்போது பார்த்தால் கரண்டை கால் உடைய பின் பகுதிகள் நனையாமல் இருக்கும். ஒரு சமயம் பயணத்திலே சஹாபாக்கள் உளூ செய்தார்கள். தண்ணீர் குறைவாக  இருந்தது. அவசர அவசரமாக உளூ செய்து வந்தார்கள் சஹாபாக்கள். அவர்களின் கரண்டைக் கால்களை  பார்த்த பொது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த எச்சரிக்கையை செய்தார்கள்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த அளவு உளூவை  குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் எச்சரிக்கை செய்திருக்க அதே நேரத்தில் ஒருவர் நோயாளியாக இருந்தால் நீங்கள் உளூ செய்யாதீர்கள். தயம்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்  கூறுகிறான். குளிப்பு கடமையாக இருந்தாலும் நீங்கள் நோயாளியாக இருந்தால் குளிக்காதீர்கள். தயம்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான் (அல்குர் ஆன் 5:6) என்றால் நோயாளியாக இருக்கும் போது எந்த அளவுக்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் மருத்துவத்தை குறித்தும், உடல் ஆரோக்கியத்தை குறித்தும், நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். 
 
ரமழான் மாதம் வருஷத்திலே ஒரு மாதம் தான் அந்த நோன்பு, எவ்வளவு பெரிய நன்மைகளையும், நற்பாக்கியங்களையும், அல்லாஹ்வுடைய  ரஹ்மத்தைகளையும், பரக்கத்களையுமுடைய நோன்பு. அந்த நோன்பாக இருந்தாலும் நீங்கள் நோயாளியாகவோ பயணிகளாக இருந்தால்,
 
فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ
 
நீங்கள் அந்த நோன்பை விட்டுவிட்டு வேறு நாட்களிலே நீங்கள் அந்த நோன்பை கழா செய்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ் நேரடியாக அல்குர்ஆனிலே வழிகாட்டுகிறான். (அல்குர் ஆன் 2 : 185).
 
நம்முடைய ஸலஃபுகளுடைய,  இமாம்களுடைய வரலாறுகளிலே வருகிறது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் சாதாரண ஒரு சளி, காய்ச்சல், அந்த சளியுடைய தும்மலால் ஏற்படக்கூடிய  ஒரு உடல்சூடு இருந்தது. அவர்களை நலம் விசாரிப்பதற்காக அவர்களுடைய காலத்துடைய அறிஞர் வருகிறார்கள். அது  ரமழானுடைய மாதம். அப்போது இமாம் புகாரி (ரஹ்) அவர்களிடத்திலே  கேட்கின்ற முதல் கேள்வி என்ன?
 
ரமழானுடைய மாதம் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் நோன்பு நோற்றிருக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்கிறார்கள். இல்லை. நான் நோன்பு இருக்கவில்லை என்பதாக. இதுதான் நம்முடைய முன்னோர்கள்  ஸலஃபுகள் மார்க்கத்தை புரிந்தது.
 
-நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? எங்கே பேணுதலை கையாள வேண்டுமோ அங்கே கையாள மாட்டோம். எங்கே வீரத்தை காட்ட வேண்டுமோ அங்கே வீரத்தைக் காட்ட மாட்டோம். எங்கே உறுதியாக பிடிவாதமாக இருக்க வேண்டுமோ அங்கே பிடிவாதம் பிடிக்க மாட்டோம். எங்கே அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு சலுகைகளை கொடுத்திருக்கிறார்களோ, விசாலத்தை ஏற்படுத்தியிருக்கிறானோ, அங்கே பிடிவாதம் பிடித்துக் கொண்டு, வரட்டு கவுரவம் பார்த்துக்கொண்டு, வறட்டுத் தவக்குலை பேசிக்கொண்டு, அங்கே நாம் நம்முடைய ஈமானை தக்வாவை பறைசாட்டுகிறோம் என்பதாக பெருமைப் பேசிக்கொண்டிருப்போம்-
 
சந்திக்க வந்த அறிஞர் இமாம் புகாரியுடைய (ரஹ்)   தரத்திலே உள்ள அந்த அறிஞர் சொல்கிறார்கள்; اَصَبْتَ - நீங்கள் சரியாக செய்தீர்கள் என்று .
 
அல்லாஹ்வின் அடியார்களே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு இபாதத்தை செய்வதால் நோய் அதிகமாகிவிடும் என்றால் அந்த இபாதத்தை விடும்படி மார்க்கம் சொல்லியிருக்கிறது. ஒரு இபாதத்தை செய்வதால் அந்த நோய் அதிகமாகும் என்றால்  அந்த  இபாதத்தை விட்டுவிடுங்கள் தற்காலிகமாக.
 
உளூவை எடுத்துக்கொள்ளுங்கள், நோன்பை எடுத்துக் கொள்ளுங்கள், ஏன் அல்லாஹ் விடச்சொல்கிறான்? 
 
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: «صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ» (صحيح البخاري 1117 -)
 
அதுபோன்று இம்ரான் இப்னு ஹுஸைன் பெரிய சஹாபி. அவருடைய தந்தையார் ஹுசைன் ரசூலுல்லாஹ்விடத்திலே வருகிறார்கள். மூல நோய், வலியால் துடிக்கின்றார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதரே! என்னால் நின்று  தொழமுடியவில்லையே நான் என்ன செய்வது என்று கேட்கிறார்கள். 
 
-நபி (ஸல்) வீராப்பு பேசினார்களா? பரவாயில்லை. ஃபர்ழ் தொழுகை கண்டிப்பாக நீ நின்றுதான் தொழ வேண்டுமென்று-
 
நபி (ஸல்) சொன்னார்கள்;  நிற்க முடியவில்லை என்றால் உட்கார்ந்து தொழு. யாரசூலுல்லாஹ்! என்னால் உட்கார்ந்தும் தொழ முடியாது அவ்வளவு வேதனை. நபி (ஸல்) சொன்னார்கள், படுத்துக்கொண்டு தொழு என்பதாக. 
 
நூல் : புகாரி, எண்: 1117.
 
சகோதரர்களே! இபாதத் முக்கியம்.  அதிலே மாற்றுக்கருத்து இல்லை. அதை விடும்படி அல்லாஹ் சொல்லவில்லை. ஆனால், நம்முடைய நிர்பந்தங்களுக்கு, நோய்களுக்கு, சிரமங்களுக்கு, ஏற்ப அல்லாஹ் நமக்கு விசாலத்தை, அல்லாஹ் அதிலே  நமக்கு வழிகாட்டுதல்களை, நமக்கு சவுகரியத்தை, ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றான்.
 
உதாரணமாக ஹராமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய பெயர் கூறாமல் அறுக்கப்பட்ட  பிராணி.
 
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ
 
அல்லாஹ்வுடைய பெயர் கூறாமல் அறுக்கப்பட்டதை  புசிக்காதீர்கள். அது பெரும் பாவம் என்று அல்லாஹ் சொல்கிறான்.(அல்குர்ஆன் 6 : 121).
அதுபோன்று சாப்பிடக்கூடாத உணவுகளை அல்லாஹ் பட்டியலிடுகின்றான்.
 
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ
 
இறந்தவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. ரத்தத்தை நீங்கள் சாப்பிடக்கூடாது. அதுபோன்று அல்லாஹ்வுடைய பெயர் கூறாமல் அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடக்கூடாது. அதுபோன்று, தானாக விழுந்து  இறந்ததை நீங்கள் சாப்பிடக்கூடாது. சண்டை போட்டு முட்டிக்கொண்டு இறந்த பிராணிகளை நீங்கள் சாப்பிட கூடாது.
 
இப்படியாக ஹராமுடைய பட்டியல்களை அல்லாஹ் கூறிக்கொண்டு வரும்பொழுது, நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டால்,
 
فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ 
 
ஹராமை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு அனுமதி உண்டு அவர்கள் அதை புசிப்பதற்கு. அவர்கள் அதை புசித்து தங்களுடைய  உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கு அதற்கு அனுமதி உண்டு. (அல்குர்ஆன் 5 : 3).
 
சகோதரர்களே! இவ்வளவு பெரிய விசாலத்தை அல்லாஹ் நமக்கு தருகிறான். ஹராமான உணவு, அல்லாஹ்வுடைய பெயர் கூறாமல் சிலைகளுடைய பெயர் கூறி அறுக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம், இறந்த பிராணியாக இருக்கலாம், ஆனால் ஒரு மனிதருக்கு மூன்று நாட்களுக்கு உணவு கிடைக்கவில்லை. பசியால் மயக்கம் வருகிறது. அந்த இடத்திலே செத்துப்போன ஒரு பிராணி தான் இருக்கிறது அல்லது அல்லாஹ்வுடைய பெயர் கூறாமல் அறுக்கப்பட்ட ஒரு பிராணிதான் இருக்கிறது என்றால் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளக் கூடிய அளவுக்கு அதை சாப்பிட்டு உயிரை காப்பாற்றுவது அவன் மீது  ஃபர்ழாகிவிடுகிறது.
 
அப்படி இல்லாமல் அவன் உயிரை விட்டு விடுவானேயானால் அவன் தற்கொலை செய்து கொண்டவனுக்கு  சமமாவான்.
 
பெரும் பாவமாக ஆகிவிடும். அந்த இடத்தில் சலுகையை பயன்படுத்துவது கட்டாயமாக ஆகிவிடுகிறது.
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! ஏன் இவ்வளவு பெரிய ஒரு நீண்ட முன்னுரையை சொல்ல வேண்டிய கட்டாயமென்று சொன்னால், ஒவ்வொரு காலத்திலும் ஏற்படக்கூடிய அந்த நோய்களின் தாக்கங்களுக்கு ஏற்ப அந்த நோய்களின் பாதுகாப்புக்கு ஏற்ப மருத்துவர்களின் வழிகாட்டுதல்களை ஏற்று அங்கீகரிக்கக் கூடிய மார்க்கம் தான் இஸ்லாமிய மார்க்கம்.
 
அல்லாஹ்வுடைய தீன், அல்லாஹ் அப்படி நமக்கு வழிகாட்டி இருக்கிறான்.
 
ஏன் ரப்பில் ஆலமீன்  பொதுவாக சொல்கிறான்? 
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
 
உங்களுக்கு தெரியவில்லை என்றால் அறிந்தவர்களிடத்திலே, ஞானமுள்ளவர்களிடத்திலே நீங்கள் கேளுங்கள். (அல்குர்ஆன் 16 : 43)
இது மார்க்க சட்டங்களுக்கு மட்டுமல்ல. ஷரீஅத்துடைய சட்டங்களுக்கு மட்டுமல்ல.
 
முதலாவதாக ஷரீஅத்துடைய சட்டங்களுக்கு மறுமை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக இருந்தாலும் இது வாழ்க்கையிலே ஒரு பொதுவான நியதியாகவும் இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இப்படிப்பட்ட வழிகாட்டுதல்களை அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) இதற்கு முன்பும் நமக்கு கொடுத்திருக்கின்றார்கள்.
 
இன்னொரு சிறிய உதாரணத்தைப் பாருங்கள். சலுகையை குறித்து அறியாமல் இருப்பதும், மார்க்கத்தில் சிரமத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்டு அதில் பிடிவாதம் பிடிப்பதும் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கோபத்தை கொடுக்கக் கூடிய விஷயம் என்பதற்கு இந்த உதாரணத்தை நீங்கள் மனதிலே பதிய வையுங்கள்.
 
என்ன நடந்தது? போருக்கு சென்றிருந்தார்கள்  சஹாபாக்கள். பகலிலே நடந்த போரிலே ஒரு நபித் தோழருக்கு தலையில் கடுமையான காயம், தலையே பிளந்து விட்டது. அந்த காலத்தில் என்ன வசதி இருக்கும் அதற்கேற்ப அவர்கள் அங்கே கட்டுப்போட்டிருந்தார்கள். இரவிலே தூங்கிய  ஸஹாபிக்கு  اِحْتِلَامُ - தூக்கத்திலே ஸ்கலிதம் ஏற்பட்டுவிட்டது, குளிப்பு கடமை ஆகிவிட்டது.
 
சுப்ஹுடைய தொழுகைக்கு எழுந்திருக்கும்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. அருகில் இருந்த தோழர்கள் இடத்திலே கேட்ட போது எங்களுக்கு இதைப் பற்றி தெரியவில்லை. ஏதும் சலுகை இருக்கிறதா என்பதாக எங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் குளித்து தான் ஆகவேண்டும் என்று கூறிவிடுகிறார்கள். 
 
அந்த சஹாபி குளிர்ந்த நீரிலே குளித்து விடுகிறார். காயத்தின் வழியாக தலைக்கு தண்ணீர் சென்றது. சுபுஹு தொழுகை முடிவதற்குள்ளே அவர் இறந்துவிடுகிறார். பிரச்சனையாகி விடுகிறது. சில ஸஹாபாக்களுக்கு தெரியவருகிறது. அவர்கள் கண்டிக்கின்றார்கள். பிறகு இதுகுறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்திலே புகார் வருகிறது. அல்லாஹ்வின் தூதரே இப்படி நடந்துவிட்டது என்று. ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியுமா? என்ன கூறினார்கள் தெரியுமா?
 
قَتَلْتُمُوْهُ
 
அவரை நீங்கள் கொலைசெய்துவிட்டீர்கள் என்று சொன்னார்கள்.
 
யாரைப் பார்த்து? நீங்கள் குளித்துத்தான் ஆக வேண்டும் என்று கூறிய அந்த தோழர்களைப் பார்த்து.
 
فَإِنَّمَا شِفَاءُ الْعِيِّ السُّؤَالُ
 
இது குறித்த சட்டத்தைப் பற்றி  நீங்கள் கேட்டிருக்க  வேண்டாமா? நீங்கள் மார்க்கத்தைப் பற்றி கேட்கும் போதுதான் அறியாமை போகும் என்று சொன்னார்கள். (2)
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூது, எண்: 336.
 
தயம்மும் செய்வதற்கு அவருக்கு போதுமானதாக இருந்தது. ஏன் இப்படி செய்தீர்கள் என்று நபி (ஸல்) கோபப்பட்டார்கள். தங்களுடைய வெறுப்பை வெளிப்படுத்தினார்கள். 
 
சரி தெரியாம சொல்லிட்டீங்க என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. கொல்லப்பட்டவர் ஷஹீத் என்று போற்றவில்லை. அவர் மீது குற்றமில்லை.  ஆனால் யார் மார்க்கத்தில் தெரியாமல் பேசினார்களோ அவர்களை குறித்து ரசூலுல்லாஹ்வுடைய (ஸல்)  எச்சரிக்கையை   கவனியுங்கள். அவரை நீங்கள் கொன்றீர்கள் என்று சொன்னார்கள்.
 
சகோதரர்களே! இன்று பார்க்கிறோம் மார்க்கம் என்பது எவ்வளவு ஒரு சாதாரணமாகிவிட்டது‌என்று சொன்னால் யார் யாரெல்லாம் ஃபத்வா கொடுக்கின்றார்கள். மார்க்க மூத்த அறிஞர்களின் குழு செய்த தீர்ப்பின் மீது ஆட்சேபனை செய்கிறார்கள், விமர்சனம் செய்கிறார்கள், இடைவெளியோடு தொழுங்கள் என்று சொன்னால் அல்லது முகக்கவசம்  அணிந்து தொழுங்கள் என்று சொன்னால் ஃபத்வாக்களை கொண்டு வருகிறார்கள். அறிஞர்களுக்கு ஹதீஸ் தெரியாதது போன்று ஹதீஸ்களை கொண்டு வருகிறார்கள். 
 
அந்த ஹதீஸ்களை உங்களுக்கு அறிவித்தவர்களும் இமாம்கள் தான்; மார்க்க அறிஞர்கள் தான். அதே நேரத்திலே மருத்துவத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நிர்பந்தமான நிலையிலே இதை பேணுங்கள் என்று அங்கீகாரம் கொடுத்த அந்த சட்டங்களை முஸ்லிம்களுக்கு எடுத்து சொல்பவர்களும் மார்க்க அறிஞர்கள் தான்.
அல்லாஹ்வின் அடியார்களே! இது மார்க்க அடிப்படையிலே மருத்துவத்தினால் சொல்லப்பட்டது.  மார்க்க அடிப்படையிலே நிர்பந்தத்தினால் அனுமதிக்கப்பட்ட ஒன்று. 
 
الضرورات تبيح المحظورات
 
நிர்ப்பந்தங்கள் வருமேயானால் தடுக்கப்பட்ட காரியங்களை அது அனுமதித்து விடுகிறது.
 
درء المفاسد أولى من جلب المنافع
 
முதலாவதாக தீமைகளையும் பிரச்சனைகளையும் தீங்குகளையும் அகற்றுவது, நன்மைகளை கொண்டு வருவதைவிட மிக முக்கியமானது.
 
ஒரு மனிதருடைய ஆரோக்கியம் பொது மக்களின் ஆரோக்கியத்தை  பாதுகாப்பது மிக முக்கியமானது. நோய் பரவக்கூடிய நிலை இருக்குமேயானால், ஒரு ஆபத்து இருக்குமேயானால், அது குறித்த எச்சரிக்கையை ரசூலுல்லாஹ் (ஸல்) மிக கவனமாக கையாண்டார்கள். எத்தனை ஹதீஸ்களை பார்க்கிறோம், சம்பவங்களை பார்க்கிறோம்.
ஆகவே, எந்த ஒரு நேரத்தில் நம்முடைய அலட்சியம் நம்முடைய நோய்க்கு காரணமாகிவிடுமோ, அல்லது நமது குடும்பத்தார்களின் நோய் தாக்குவதற்கு காரணமாகிவிடுமோ, அதற்கு நாம் முழு பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
 
எப்படி அந்தத் தோழருக்கு இல்மு இல்லாமல் ஃபத்வா கொடுத்த, இல்மு  இல்லாமல் சட்டம் கூறிய, தோழர்களை பார்த்து நீங்கள் அவரை கொன்றீர்கள் என்று ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்களோ, அந்த ஹதீஸை நினைவு வைத்து பாருங்கள்.
 
இந்த நோயைக் குறித்து பலர் பலவிதமான தவறான, அறிவில்லாத, பிரச்சாரங்களை செய்வதை பார்க்கிறோம். கண்ணுக்கு நேராக நம்முடைய சகோதர சகோதரிகள் நோயினால் நோயுற்று அவர்கள் இறப்பதை பார்க்கிறோம். அவர்கள் சிரமப்படுவதை பார்க்கிறோம். அவர்கள் கஷ்டப்படுவதை பார்க்கிறோம். பலர் இன்னும் வீம்பு பேசிக்கொண்டிருக்கிறார்கள், இப்படி ஒரு நோயே இல்லை என்று, இது வெறும் புரளி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள், இது ஒரு சதித்திட்டம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
 
இன்னொரு முக்கியமான விஷயம், அல்லாஹு தஆலா ஒவ்வொரு மருத்துவத்திலும் அதற்குரிய சில தன்மைகளை வைத்திருக்கிறான். அதற்கென்று ஷிஃபாவை வைத்திருக்கிறான். 
 
நம்மிலே உள்ள ஒன்று கல்வி ஞானம் இல்லாதவர்கள் அல்லது அனுபவத்தால் உண்மையை உணராமல் புறக்கணிப்பவர்கள், ஆங்கில மருத்துவமே கூடாது, ஹராம் ஆங்கில மருத்துவத்தில் அது இருக்கிறது, இது இருக்கிறது  நீங்கள் மாத்திரையே சாப்பிடாதீர்கள். காய்ச்சல் தானாக வந்து தானாக போய்விடும். மருந்தே சாப்பிடாதீர்கள் அல்லது இன்னும் பலவிதமான  அவர்களுடைய அந்த கூப்பாடுகள் அவற்றையெல்லாம் விரிவாக  இந்த ஜும்ஆவிலே நாம் சொல்ல முடியாது. சொல்லிக்கொண்டு கடைசியிலே நோய் முத்தி பிரச்சனை ஏற்பட்ட உடன் வேறு வழி இல்லாமல் சொன்னவர்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொள்வார்கள். அப்போது அங்கு ஆம்புலன்ஸ் வண்டியை தவிர மருத்துவமனைகளை தவிர வேறு வழி இல்லாமல் அங்கே இருப்பார்கள். கடைசியிலே சொல்வார்கள். நான் தாமதமா தான் மருத்துவமனைக்கு வந்தேன் ஒன்னும் செய்ய முடியல என்று .
 
பார்க்கிறோம் சகோதரர்களே! என்ன இதற்கு காரணம், மார்க்கத்திலும் அல்லாஹ் படைத்து இருக்கக்கூடிய அறிவியலிலும் அனுபவம் இல்லாமல், கல்வி இல்லாமல், அந்தத் துறை சார்ந்தவர்களுடைய வழிகாட்டுதல் இல்லாமல் பேசுவது மிகப்பெரிய முட்டாள்தனம். எத்தனை உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கஃபத்துல்லாஹ் கட்ட வேண்டும். கட்டிடம் என்பது ஒரு கலை, கட்டிடம் என்பது அது ஒரு துறை, நீங்கள் வரலாற்றிலே குறைந்தபட்சம் ரஹீகை படித்திருந்தால் கூட தெரிந்திருக்கும். 
 
கஃபாவுடைய கல் இருக்கிறது. என்ன செய்தார்கள்? எப்படி கட்டிடத்தை தரமாக கட்ட வேண்டும் என்று ஆளைத் தேடி அலைந்தார்கள். அப்போது ஜித்தாவிலே ரோம் நாட்டை சேர்ந்த ஒரு கிறிஸ்துவர் அவருடைய கப்பல் கரை ஒதுங்கி அங்கே இருந்தார். அவருக்கு கட்டிடக்கலை தெரியும் என்பதை தெரிந்தவுடன் குறைஷிகள் சென்று அவரை அழைத்து வந்து அவருடைய மேற்பார்வையில் கஃபத்துல்லாஹ் கட்டப்படுகிறது. இது ஒரு உதாரணம். ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு துறையை வைத்திருக்கிறான். அதிலே அனுபவத்தை அல்லாஹ் அமைத்திருக்கிறான்.
 
அதுபோன்று உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) மஸ்ஜிதுந் நபவியை மிக உயர்த்தி பெரிய கட்டிடமாக கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். உமவிய்யா மன்னர், ஐந்தாவது கலீஃபா என்று போற்றப்படுபவர்கள். மஸ்ஜிதுந் நபவி நாமே நம்முடைய இஷ்டத்துக்கு கட்டிடலாம் என்று செய்தார்களா? சிரியாவிலிருந்து கிறிஸ்துவ இன்ஜினியர்களை வரவழைத்து அந்தத் தொழில் சார்ந்தவர்களை வரவழைத்து அவர்களை வைத்து  மஸ்ஜிதுந் நபவியை கட்டுகின்றார்கள்.
கண்ணியத்திற்குரியவர்களே! இவை எல்லாம் நம்முடைய முன்னோர்கள் எப்படி மார்க்கத்தை அணுகினார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள். ஆகவே, கல்வியை புறக்கணிப்பது, எதார்த்தத்தை மறுப்பதாகும். அல்லாஹ் படைத்த உண்மையையும் மறுப்பதாகும். ஒவ்வொன்றுக்கும் உள்ள வழிகாட்டுதல்களை   மார்க்க அறிஞர்களுடைய ஆலோசனைக்கு ஏற்ப ஏற்று நடந்து பாதுகாப்பாக இருப்பது அல்லாஹ் நம்மீது வலியுறுத்திய ஒரு  கட்டாய கடமை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
 
خُذُوا حِذْرَكُمْ
 
எப்பொழுதும் நீங்கள் எச்சரிக்கையாக, பேணுதலாக இருங்கள் என்பது அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல்.(அல்குர்ஆன் 4 : 71)
 
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ
 
உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்பது அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல். (அல்குர்ஆன் 2 : 195).
 
ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! இதுபோன்ற இந்த காலகட்டங்களிலே நாமும்  பேணுதலாக இருந்து நம்முடைய சமூகத்திலே அந்த பேணுதலை அந்த சரியான வழிகாட்டுதலை நம்முடைய பிள்ளைகளுக்கு, நம்முடைய குடும்பத்தார்களுக்கு, நண்பர்களுக்கு எடுத்துச்சொல்லி இந்த நோய் பரவாமல் இருப்பதற்குரிய அத்தனை முயற்சிகளையும் நாம் செய்தாக வேண்டும். அது நம்முடைய மார்க்கக் கடமை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக! இந்த நோயினால் இறந்து விட்ட நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு               அல்லாஹ் சுப்ஹானஹீ வதஆலா சொர்க்கத்தை கூலியாக்கி தருவானாக! அவர்களுடைய பாவங்களை மன்னிப்பானாக! எஞ்சி இருக்கக்கூடிய நம்மை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாதுகாத்து அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَبِي سُفْيَانَ طَرِيفٍ السَّعْدِيِّ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي سُفْيَانَ السَّعْدِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»
(سنن ابن ماجه 276 -)حكم الألباني-صحيح
 
குறிப்பு 2).
 
حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَنْطَاكِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ الزُّبَيْرِ بْنِ خُرَيْقٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ قَالَ: خَرَجْنَا فِي سَفَرٍ فَأَصَابَ رَجُلًا مِنَّا حَجَرٌ فَشَجَّهُ فِي رَأْسِهِ، ثُمَّ احْتَلَمَ فَسَأَلَ أَصْحَابَهُ فَقَالَ: هَلْ تَجِدُونَ لِي رُخْصَةً فِي التَّيَمُّمِ؟ فَقَالُوا: مَا نَجِدُ لَكَ رُخْصَةً وَأَنْتَ تَقْدِرُ عَلَى الْمَاءِ فَاغْتَسَلَ فَمَاتَ، فَلَمَّا قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُخْبِرَ بِذَلِكَ فَقَالَ: «قَتَلُوهُ قَتَلَهُمُ اللَّهُ أَلَا سَأَلُوا إِذْ لَمْ يَعْلَمُوا فَإِنَّمَا شِفَاءُ الْعِيِّ السُّؤَالُ، إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَتَيَمَّمَ وَيَعْصِرَ - أَوْ» يَعْصِبَ «شَكَّ مُوسَى - َعلَى جُرْحِهِ خِرْقَةً، ثُمَّ يَمْسَحَ عَلَيْهَا وَيَغْسِلَ سَائِرَ جَسَدِهِ» (سنن أبي داود 336 -) ]حكم الألباني]
: حسن دون قوله إنما كان يكفيه
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/