HOME      Khutba      "இஸ்திகாமா" மார்க்கத்தில் உறுதியாக இருப்பது - அவசியம் | சிறப்பு | விளக்கம் | Tamil Bayan - 637   
 

"இஸ்திகாமா" மார்க்கத்தில் உறுதியாக இருப்பது - அவசியம் | சிறப்பு | விளக்கம் | Tamil Bayan - 637

           

"இஸ்திகாமா" மார்க்கத்தில் உறுதியாக இருப்பது - அவசியம் | சிறப்பு | விளக்கம் | Tamil Bayan - 637


بسم الله الرحمن الرحيم

“இஸ்திகாமா”மார்க்கத்தில் உறுதியாக இருப்பது

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டும் நபியின் சுன்னாவைக் கொண்டும் உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பற்றிபிடிக்குமாறும் குடும்பவாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை என்று வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் அல்லாஹ்வின் அச்சத்தை முன்னிறுத்தி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவானாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து அருள்வானாக! நம்முடைய கஷ்டங்களை துன்பங்களை போக்கி அல்லாஹ் அவனுடைய ரஹ்மத்திலும் பரக்கத்திலும் நம்மை வாழவைப்பானாக! ஆமீன்!
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் நமக்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய அருட்கொடை. அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடிவிட்டான் என்றால் அந்த மனிதனுக்கு இஸ்லாம் என்ற இந்த மார்க்கத்தின் நற்பாக்கியத்தை வழங்குகிறான். 
 
உலகத்திலே இந்த உலக செல்வம் கொடுக்கப்படுவது, இந்த உலகத்தில் ஆட்சி அதிகாரம் கொடுக்கப்படுவது, இந்த உலக வாழ்க்கையின் இன்பங்கள் கொடுக்கப்படுவது, இதெல்லாம் ஒரு பொதுவான விஷயம். அல்லாஹ் இந்த செல்வத்தை முஃமின்களுக்கும் கொடுப்பான். காஃபிர்களுக்கும் கொடுப்பான்.
 
كُلًّا نُمِدُّ هَؤُلَاءِ وَهَؤُلَاءِ مِنْ عَطَاءِ رَبِّكَ وَمَا كَانَ عَطَاءُ رَبِّكَ مَحْظُورًا
 
இம்மையை விரும்புபவர்களுக்கும், மறுமையை ஆசிக்கும் மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவிசெய்கிறோம். உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை. (அல்குர்ஆன் 17 : 20)
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று இந்த இஸ்லாமிய மார்க்கம் கிடைக்க பெற்ற நாம் எப்படி பொதுவாழ்க்கையில், நம்முடைய உலக வாழ்க்கையில், பொருளாதார வாழ்க்கையில், நாம் ஒரு முன்னேற்றத்தைத் தேடுகிறோம். நம்முடைய வாழ்க்கை தரம் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நம்முடைய கல்வியின் தரம் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். 
 
இப்படியாக இந்த உலக வாழ்க்கையிலே நமக்கு ஒரு முன்னேற்றமும், நல்ல அந்தஸ்தும், ஒவ்வொரு நாளும் நம்முடைய தரம் உயரவேண்டும் என்று ஆசைபடுகின்ற அதே நேரத்தில், நமக்கு கிடைக்க பெற்ற இந்த பெரிய பாக்கியமாகிய இஸ்லாம், இதில் என்னுடைய முன்னேற்றம் எப்படி இருக்கிறது? 
 
செல்வத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆசைபடுகிற நாம் என்னுடைய இஸ்லாமை அதிகரித்துக் கொண்டேனா? என்னுடைய ஹிதாயத்தை அதிகரித்துக் கொண்டேனா? என்னுடைய ஈமானை அதிகரித்துக் கொண்டேனா? என்னுடைய அமல்களின் நிலை என்ன? என்னுடைய தக்வாவுடைய நிலை என்ன? குர்ஆனோடு எனக்கு இருக்கக்கூடிய தொடர்பு எப்படி இருக்கிறது? 
 
ரசூலுல்லாஹ் (ஸல்)  அவர்களுடைய ஹதீஸோடு என்ன தொடர்பு இருக்கிறது?  நமக்கு முன் சென்ற நல்லோர், சான்றோர், ஸஹாபாக்கள் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு  அவர்களுடைய அமல்களோடு நான் எந்த தூரத்தில் இருக்கிறேன்? நான் எவ்வளவு தூரம் அவர்களோடு வெகுவிரைவாக நெருங்க வேண்டும்? ஆனால் எவ்வளவு தூரம் அவர்களுக்கும் எனக்கும் இடைவெளி இருக்கிறது? எனக்கு திடீரென்று மரணம் வந்து விட்டால் என்னுடைய உள்ளத்தின் ஈமானின் நிலை? இஸ்லாமின் நிலை? தக்வாவுடைய நிலை? அல்லாஹ்விடத்திலே எப்படி எடை போடப்பட்டு எந்த கூட்டத்திலே நம்மை அல்லாஹ் சேர்ப்பான்?
 
இப்படியெல்லாம் நாம் நம்மை பற்றி விசாரிக்கிறோமா? நம்மை பற்றி சுய பரிசோதனை செய்கிறோமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய பரிசோதனைகளை கற்று கொடுத்தார்கள். உலக வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்யக்கூடிய நாம் அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே எவ்வளவு முன்னேறியிருக்கிறோம்? அல்லாஹ் நமக்கு கட்டளை கொடுப்பதெல்லாம்,
 
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
 
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.( அல்குர்ஆன் 3 : 133)
 
فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ
நன்மைகளுக்கு விரைந்து செல்லுங்கள். (அல்குர்ஆன் 5 : 48)
 
سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ
 
ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சொர்க்கத்தை நோக்கியும் முந்திச் செல்லுங்கள். (அல்குர்ஆன் 57 : 21)
 
وَفِي ذَلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ
 
ஆசை கொள்ள விரும்புவோர் அதையே ஆசை கொள்ளவும். (அல்குர்ஆன் 83 : 26)
 
அமல்களிலே நம்முடைய போட்டி இருக்க வேண்டும். இபாதத்திலே நம்முடைய போட்டி இருக்க வேண்டும். இல்மில் நமது போட்டி இருக்க வேண்டும். 
 
ஆனால் கைசேதம் என்ன? நம்முடைய அமல்களை ஒரு குறிப்பிட்ட சில அமல்களோடு நிறுத்திக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட அளவோடு நிறுத்திவிட்டு, அதிலும் எத்தனை ஓட்டைகளோ? அதற்கு பிறகு இந்த இஸ்லாத்தில் எதுவுமே இல்லாதது போல, இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் அதை கடந்து எந்த கட்டளைகளும் நமக்கு  இல்லாதது போல  வாழ்க்கையை கழித்து கொண்டுஇருக்கிறோம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! 
 
இஸ்லாம், ஈமான் கிடைக்க பெறுவது அதற்கு பிறகு அந்த இஸ்லாம் ஈமானிலே ஒரு மனிதன் நிலையாக இருப்பது, உறுதியாக இருப்பது, அதிலே முன்னேறிக் கொண்டே செல்வது இந்த நிலையை அடையப் பெற்றவர்தான் முஃமின். இந்த நிலையை அடையப்பெற்றவர்தான் முழுமையான முஸ்லிம். இந்த நிலையைத்தான் அல்லாஹ் வலியுறுத்துகிறான். இந்த நிலையைத்தான் ரசூலுல்லாஹ் (ஸல்) போதித்தார்கள். நாம் இப்போது இருக்கக்கூடிய நிலை அல்ல. ரப்புல் ஆலமீன் கூறுவதை பாருங்கள்.
 
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ
 
நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். (அல்குர்ஆன் 41 : 30)
 
அல்லாஹ்வின் அடியார்களே! உலகத்தில் சோதனை வரத்தான் செய்யும். நமக்கு முன் உள்ளவர்களுக்கு சோதனை வந்திருக்கிறது. பொருளாதார சோதனை வரலாம். எதிரிகளால் அச்சுறுத்தப்படலாம். பலவிதமான குழப்பங்கள் ஏற்படலாம். 
 
ஆனால் ஒரு முஃமின், தன்னுடைய இஸ்லாமிலே, இபாதத்திலே, தன்னுடைய தீனிலே, அவன் அதிலே தடுமாறிவிட கூடாது. அவர்கள் அதிலே உறுதியாக இருக்க வேண்டும். ஈமானும் இஸ்திகாமத்தும் இருந்து விட்டால், இஸ்லாமும் இஸ்திகாமத்தும் இருந்தால், தீனும் இஸ்திகாமத்தும் இருந்தால் இத்தகைய மக்களுடைய பாக்கியம் என்ன? மலக்குமார்கள் இறங்கி வந்து அவர்களுக்கு சொல்வார்கள்;
 
نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
 
“நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். (அல்குர்ஆன் 41 : 31)
 
نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ
 
“மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்). (அல்குர்ஆன் 41 : 32)
 
இந்த இஸ்திகாமத் என்றால் என்ன? நான் எதை செய்தாலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. நான் விடுவேன் எதை அல்லாஹ்வும் ரசூலும் தடுத்தார்களோ அதை. நான் செய்வேன் எதை அல்லாஹ்வும் ரசூலும் ஏவினார்களோ அதை.
 
சகோததர்களே! ரசூலுல்லாஹ் (ஸல்) நமக்கு வாழ்க்கையில் காண்பித்துக் கொடுத்த வழிகாட்டுதல்களை, ஒவ்வொரு தருணத்திலும் என்னென்ன வழிகாட்டுதலை ஹராம் ஹலாலை நமக்கு போதித்தார்களோ, அதன் அடிப்படையில் தொடர்ந்து ஆக்கிக்கொள்வது. ரமலானில் மட்டுமல்ல, விசேஷமான தினங்களில் மட்டுமல்ல, வெள்ளிக்கிழமையில் மட்டும் அல்ல, ஒரு முஸ்லிமுடைய முழு வாழ்க்கையும் இருக்க வேண்டும். 
 
சகோதர்களே! இன்று சிலர் வேண்டுமானால் அவர்களின் அறியாமையால், அல்லது மாற்றார்களின் சிந்தனை தாக்கத்தால், இதற்கு அவர்கள் பிடிவாதம் என்று பெயர் சொல்லலாம். அல்லது பழமைவாதம் என்று பெயர் சொல்லலாம். அல்லது பிற்போக்கு சிந்தனை என்று பெயர் சொல்லலாம். அவர்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக்கொள்ளட்டும். மறுமையில் தெரியும் அவர்கள் எத்தகையவர்கள் என்பதாக. 
 
இன்று அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றக்கூடிய, ஹலால் ஹராமை பேணக்கூடிய, அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணக்கூடிய முஸ்லிம்களை பார்த்து, வாலிபர்களை பார்த்து, அத்தகைய பெண்களை பார்த்து, இவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள், இவர்கள் பழமைவாதிகள், பிற்போக்கு சிந்தனையாளர்கள் என்று சொல்லப்படுகிறதே! 
 
அல்லாஹ் மிக அறிந்தவன். அல்லாஹ்வுடைய தீனை அறியாத காரணத்தால் அவர்கள் இப்படி உளறுகிறார்கள். உண்மையில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை புரிந்திருப்பார்களானால் அவர்கள் தனது மனோ இச்சைகளை, தனது ஆசைகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பற்றி பிடித்திருப்பார்கள். ரப்புல் ஆலமீன் கூறுவதை பாருங்கள்!
 
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
 
நிச்சயமாக எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 46 : 13)
 
أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
 
அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்; அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள். (அல்குர்ஆன் 46 : 14)
 
நாம் எந்த மார்க்கத்தை பின்பற்றுகிறோமோ அந்த மார்க்கம்  பல சட்டங்களுடையது. பல ஒழுக்கங்களுடையது. நாம் செய்ய கூடாதவை, பார்க்ககூடாதவை, உண்ணக் கூடாதவை, இப்படியான தடைகள் அந்த மார்க்கத்தில் இருக்கின்றன. எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவது நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். 
 
ஒன்றை நாம் செய்கிறோம் என்றால் அல்லாஹ்வின் கட்டளைக்காக செய்கிறோம். ஒன்றை நாம் விடுகிறோம் என்றால் இது அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல் என்பதற்காக அதை விடவேண்டும். நம்முடைய கீழ்ப்படிதல் ரப்பிற்கு. 
 
நாம் ஒரு காரியத்தை செய்தாலும், நமது உறவுக்கு கொடுத்தாலும், நமது அண்டைவீட்டார்களுக்கு கொடுத்தாலும், இப்படி எந்த ஒரு நற்காரியங்கள் செய்தாலும் ரப்பிற்காக. 
 
நாம் ஒரு காரியத்தை விடுகிறோம் என்றால் அது அல்லாஹ்விற்கு பிடிக்கவில்லை எனவே விட்டேன். அது என்னுடைய பழக்கமாக இருக்கலாம். அது என்னுடைய மனைவிக்கு பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால் எப்போது அல்லாஹ்விற்கு பிடிக்காது என்று எனக்கு தெரிந்ததோ, ரப்பு இதை மார்க்கத்திலே தடை செய்திருக்கிறான் என்று நான் அறிந்து விட்டேனோ, அடுத்த நொடியிலிருந்து அதை என்னால் செய்ய முடியாது. 
 
அது நான் வாழ்நாள் எல்லாம் பழகிய பழக்கமாக இருக்கலாம். நான் என் மனைவிக்கு வாங்கிக் கொடுத்ததாக இருக்கலாம். ஆனால் இப்போது அது ஹராம் என்று எனக்கு தெரிந்து விட்டது. இனி என்னால் அதை செய்ய முடியாது. 
 
இதுதான் மார்க்கபற்று. இதற்கு பிடிவாதம் என்று சொல்லாதீர்கள். இதை பழமைவாதம் என்று சொல்லாதீர்கள். இது  பிற்போக்குசிந்தனை என்று சொல்லாதீர்கள். அல்லது இதை பயங்கரவாதம், தீவிரவாதம் என்று சொல்லாதீர்கள். இது அல்லாஹ்விற்கு பிடித்த குணம்.
 
وَالَّذِينَ يُمَسِّكُونَ بِالْكِتَابِ وَأَقَامُوا الصَّلَاةَ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ الْمُصْلِحِينَ
 
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். (அல்குர்ஆன் 7 : 170)
 
சகோதரர்களே! எது அல்லாஹ்விற்கு பிடிக்காதது? அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் வரம்பு மீறுவது, அல்லாஹ் கொடுத்த அளவை விட அதிகமாக செய்வது. நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை மீறி அதிக பிரசங்கித்தனமாக செய்வது. அது தவறு; அது முரட்டுத்தனம்; அல்லது அது பிடிவாதம். 
 
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் காலத்தில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சிலர் வந்து நபி (ஸல்) பற்றி விசாரித்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) உடைய அழகான வாழ்க்கையை மக்களுக்கு கற்றுகொடுத்தார்கள். 
 
நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வருவார்கள்; இரவில் தங்குவார்கள்; பிறகு எழுந்து தொழுவார்கள். சில நேரம் நோன்பு வைப்பார்கள்; சில நேரம் நோன்பு இல்லாமல் இருப்பார்கள். இதைக் கேட்ட அந்த மூன்று பேருக்கும் ஒரு விதமான எண்ணம் ஏற்பட்டது. நபியின் இந்த அமல்களை அவர்கள் குறைவாக மதிப்பிட்டார்கள். இது நபிக்கு வேண்டுமானால் போதுமானது. ஆனால் நமக்கு இது பத்தாது என்று கூறினார்கள்.
 
இன்று சிலர் சொல்கிறார்கள் அல்லவா. நாங்கள் அல்லாஹ்வை நெருங்குவதற்கு விசேஷமான வழிகள் வைத்திருக்கிறோம். இத்தனை ஆயிரம் முறை இதை செய்யுங்கள். இப்படி செய்யுங்கள். அப்படி செய்யுங்கள் என்பதாக. அவர்களுக்கெல்லாம் அழகிய படிப்பினை இந்த ஹதீஸில் இருக்கிறது.
 
ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததை விவரித்தார்கள். அந்த மூன்று நபர்கள் சொன்னதையும் கூறினார்கள்; அதாவது அவர்களில் ஒருவர் கூறினார்; இனிமேல் நான் இரவெல்லாம் தூங்காமல் தொழுதுகொண்டே இருப்பேன். மற்றொருவர் சொன்னார்; நான் திருமணமே முடிக்க மாட்டேன்; எனது வாழ்கையை அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கப் போகிறேன். மூன்றாவது நபர் சொன்னார்; நான் இனிமேல் பகலில் சாப்பிடவே மாட்டேன்; நோன்பு நோற்க்கப் போகிறேன்.
 
இதை கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை ஒன்று கூட்டி சொன்னார்கள்; உங்களில் நான் அல்லாஹ்வை அதிகம் பயப்படக்கூடியவன்; உங்களை விட நான் அல்லாஹ்வை அதிகம் அறிந்தவன்; இருந்தும் நான் நோன்பு வைக்கவும் செய்கிறேன்; விடவும் செய்கிறேன். இரவில் தொழவும் செய்கிறேன்; தூங்கவும் செய்கிறேன். திருமணமும் செய்து கொள்கிறேன். யார் எனது இந்த வழிமுறையை புறக்கணிப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை. (1)
 
நூல் : புகாரி, எண் : 5063
 
சகோதரர்களே! இதுதான் அல்லாஹ்வுடைய மார்க்கம். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும்  சொல்லிக் கொடுத்த அந்த யதார்த்தமான ஷரீஅத்திலிருந்து நம்முடைய விருப்பத்திற்கேற்ப அளவுகளை கூட்டி நம்முடைய விருப்பத்திற்கேற்ப  சட்டங்களை நாமே நம்மீது கடமையாக்கிக்கொண்டு செல்வது கூடாது. 
 
அந்த காலத்திலே ஹவாரிஜ்கள் என்ற கூட்டம் இருந்தார்கள். அவர்கள் அப்படித் தான் ஸஹாபாக்களை பார்த்து உங்களுக்கு மார்க்கப்பற்று உறுதியாக இல்லை என்று கூறிவிட்டு, மார்க்கத்திலே நீங்கள் பலவீனப்பட்டுவிட்டீர்கள் என்று கூறிவிட்டு அவர்கள் ஒரு கூட்டத்தை உருவாக்கினார்கள். 
 
அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அவர்களுடைய தொழுகையை உங்களுடைய தொழுகையோடு ஒப்பிட்டு பார்த்தால் அதை குறைவாக மதிப்பிடுவார்கள். (2)
 
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 5058
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹுடைய மார்க்கம் நமக்கு ஒரு நடுநிலையான தீனை கற்று கொடுத்திருக்கிறது. எது சொல்லப்பட்டதோ, எது ஹலால் ஹராமோ, எது அல்லாஹ்வுடைய ஃபர்ளான கட்டளைகளோ, எது சுன்னத்தான கட்டளைகளோ, இவற்றையெல்லாம் அறிந்து அந்தந்த தரஜாவிற்கு ஏற்ப அதை நம்முடைய வாழ்க்கையிலே தொடர்ந்து பற்றோடு, ஆசையோடு, பிடிப்போடு செய்து கொண்டிருப்பது. இது இஸ்திகாமத். அல்லாஹ் அல்குர்ஆனில் தொழுகையயைப் பற்றி சொல்லும்போது,
 
وَيُقِيمُونَ الصَّلَاةَ
 
தொழுகையை நிலை நிறுத்தக்கூடியவர்கள் என்று சொல்கிறான். (அல்குர்ஆன் 2 : 3, 5 : 55, 8 : 3, 9 : 71)
 
الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ
 
அவர்கள் தங்கள் தொழுகையைத் தவறாது தொழுது வருவார்கள். (அல்குர்ஆன் 70 : 23)
 
وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ
 
அவர்கள் தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப் பிடித்து தொழுது வருவார்கள். (அல்குர்ஆன் 23 : 9)
 
وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
 
அவர்கள் ஜகாத்தை நிறைவேற்றிக்கொண்டே இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 4)
 
சகோதரர்களே! வாழ்க்கையில் ஒரு அமலை ஒரு நேரத்தில் செய்து விட்டு விட்டுவிடுவதில்லை நமது மார்க்கம். ஞாயிற்றுக் கிழமைகளுக்கும், வெள்ளிக் கிழமைகளுக்கும், அல்லது சில விசேஷமான தினங்களுக்கும், சடங்குகளுக்கும் உள்ள மார்க்கம் அல்ல. வாழ்நாளெல்லாம் உள்ள மார்க்கம் இது. 
 
 
ஏதோ ஒரு நாளைக்கு ஐந்து நேர தொழுகையை பேணுதலாக தொழுதோம். பிறகு நாம் எப்படி வேண்டுமானாலும் தொழலாம் என்பதல்ல. வாழ்நாளெல்லாம் இந்த தொழுகையை மரணம் வரை தொழுகையை சரியாக தொழுது கொண்டே இருக்க வேண்டும். நேரத்தில் தொழவேண்டும். ஜமாத்தோடு தொழ வேண்டும். பேணுதலோடு தொழ வேண்டும். இது தான் இஸ்திகாமத். 
 
عَنْ عَلِيٍّ عَلَيْهِ السَّلَام، قَالَ: كَانَ آخِرُ كَلَامِ [ص:340] رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «الصَّلَاةَ الصَّلَاةَ، اتَّقُوا اللَّهَ فِيمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ» (سنن أبي داود 5156 -) ]حكم الألباني] : صحيح
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடைசி வார்த்தை  (மரண நேரத்தில்) தொழுகை தொழுகை என்று சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர்: அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத், எண்: 5156
 
அதுபோன்று ஜகாத் ஒரு வருடம் சரியாக கணக்கிட்டு கொடுத்தோம். பிறகு பார்த்துக்கொள்வோம் என்று விட்டு விடக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் தனது செல்வத்தை கணக்கிட்டு சரியான முறையிலே நிறைவேற்ற வேண்டும். அது போன்று ஹஜ், மற்றமற்ற இபாதத்துகள், இப்படி ஒவ்வொரு இபாதத்தையும் அதனுடைய நேரத்தை அறிந்து, அதனுடைய நிபந்தனையை அறிந்து, அதை நாம் தொடர்ச்சியாக வாழ்க்கையிலே செய்ய வேண்டும். 
 
முதலாவதாக ஃபர்ளுகள். அல்லாஹ் சொல்வதைப் போல,
 
وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ
 
என்னை நெருங்குவதற்கு மிகச்சிறப்பான வழி ஃபர்ளுகளை நிறைவேற்றுவதைத் தவிர வேறு இல்லை. அதற்குப் பிறகு நஃபில்களைக் கொண்டு அடியான் என்னை நெருங்கிக்கொண்டே இருப்பான். (3)
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6502
 
சகோதரர்களே! ஒவ்வொரு அமலையும் தொடர்ச்சியாக செய்வது, பற்றோடு செய்வது, அதை முழுமையாக நிறைவேற்றுவது, இது இஸ்திகாமத். இது மிகமுக்கியமான ஒன்று. இது குறித்து நாம் அதிகமாக கவலைப்படவேண்டும். 
 
عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ قَدْ شِبْتَ، قَالَ: «شَيَّبَتْنِي هُودٌ، وَالوَاقِعَةُ، وَالمُرْسَلَاتُ، وَعَمَّ يَتَسَاءَلُونَ، وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ» (سنن الترمذي 3297 -) ]حكم الألباني] : صحيح
 
அபூ பக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் நரைத்து விட்டீர்களே! என்று கேட்கிறார்கள். அதற்க்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரா ஹூத், வாகிஆ, வல்முர்சலாத், அம்ம யதசாஅலூன் போன்ற சூராக்கள் என்னை நரைக்கச்செய்துவிட்டன என்று கூறினார்கள்.
 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 3297.
 
அறிஞர்கள் கூறுகிறார்கள்; இந்த ஹூத் சூராவை தவிர மற்ற சூராக்களை நீங்கள் எடுத்தால், இவையெல்லாம் முழுமையாக மறுமையை குறித்து பேசக்கூடிய, ஒரு மனிதனுடைய கண்ணிற்கு முன்னால் மறுமையை அப்படியே கொண்டு வந்து நிறுத்தக்கூடிய, முடிவுநாளின் திடுக்கத்தை, அதன் அமளிகளை நம்முடைய சிந்தனைக்கு கொண்டுவரக்கூடிய சூராக்கள். 
 
ஆனால் சூரா ஹூத் என்பது நபிமார்களின் வரலாறுகளை கொண்ட சூரா. அந்த சூராவிலே நபிக்கு முதுமையை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு என்ன வசனம் இருக்கிறது? என்று அறிஞர்கள் குறிப்பிடும்போது அதிலே 112 -வது வசனத்தை குறிப்பிடுகிறார்கள்.
 
فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
 
ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்பட்டது போன்றே, நீரும் இணை வைத்து வணங்குவதிலிருந்து விலகி உம்முடன் இருப்பவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள். (இதில்) சிறிதும் தவறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலை உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 11 : 112)
நீங்கள் கட்டாயமான அமல்களை அதற்குரிய அந்த நேரத்தில், இடத்தில் செய்தே ஆக வேண்டும். எங்கே சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளதோ, அந்த சலுகைகளை தவிர, இன்று நாமாக சலுகைகளை உண்டாக்கி கொள்கிறோம். பொய்யான சாக்கு போக்குகளை கூறி, பொய்யான காரணங்களை கூறி நாமாகவே நம்முடைய மனதிற்கு திருப்தியை கொடுத்துக்கொள்கிறோம். 
 
ஷைத்தான் நமக்கு அந்த சிந்தனைகளை உண்டாக்குகிறான். அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் இந்த கட்டளை ரஸூலுல்லாஹ்விற்கு முதுமையை ஏற்படுத்தியது என்று சொன்னால் எவ்வளவு பயந்தார்கள் இது குறித்து. ஒவ்வொரு அமலையும் தொடர்ச்சியாக செய்வது.
 
وَأَنَّ أَحَبَّ الأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்விற்கு மிக பிடித்தமான அமல் அடியான் தொடர்ச்சியாக செய்வது. அது குறைவாக இருந்தாலும் சரியே.
அறிவிப்பாளர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, எண்: 6464.
 
நீங்கள் ஒரு பத்து ரூபாய் தர்மம் செய்வீர்கள் என்றால் வாழ்நாளெல்லாம் அதை தொடர்ச்சியாக செய்வது. இரண்டு ரக்அத் தொழுவீர்கள் என்றால் வாழ்நாளெல்லாம் அதை தொடர்ச்சியாக செய்வது. எந்த ஒரு அமலையும் தொடச்சியாக செய்வது. 
 
சுன்னத்தான நஃபிலான அமல்களுக்கே இப்படி என்றால் ஃபர்ளான அமலை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இன்று நமது ஃபர்ளுகளே அதன் மீது நாம் அழக்கூடிய நிலையில் இருக்கிறது என்றால் நம்முடைய நஃபில்களை பற்றி என்ன சொல்வது?
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُفْيَانَ، عَنْ أَبِيهِ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِأَمْرٍ فِي الْإِسْلَامِ لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ، قَالَ: " قُلْ: آمَنْتُ بِاللَّهِ، ثُمَّ اسْتَقِمْ " (مسند أحمد 15417 -)
 
ஸுஃப்யான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாமிய மார்க்கத்தில் எனக்கு ஒரு விஷயத்தை கற்றுத்தாருங்கள். உங்களைத் தவிர வேறு யாரிடமும் சென்று அதை நான் கேட்க மாட்டேன். அதற்க்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன் என்று சொல்! பிறகு அதில் நிலைத்திரு!
 
அறிவிப்பாளர்: ஸுஃப்யான் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 15417.
 
சகோதரர்களே! இன்று சிலருடைய ஈமான் எப்படி இருக்கிறது என்றால்  தர்ஹாக்களுக்கு செல்வார்கள்; மௌலிது ஓதுவார்கள்; கத்தம் ஃபாத்திஹா ஓதுவார்கள்; எல்லா ஷிர்க் சடங்குகளும் செய்வார்கள். அதுபோன்று வியாபாரம், தொழில்துறை என்று வந்து விட்டால் ஹலால், ஹராமை எல்லாம் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அவர்களுக்கு பிடித்தமான சில சட்டங்களை அவர்களால் ஏற்றுக்கொண்ட சட்டங்களை தான் அவர்கள் செய்வார்கள். 
 
பிறகு முஸ்லிம் இஸ்லாம் என்று எப்படி அவர்களை அடையாளப்படுத்துவது? அவர்களுடைய பெயர்களை வைத்து அடையாளப்படுத்திக்கொள்வது. இது அல்ல இஸ்லாம்.
 
அடுத்து அந்த தோழர் கேட்கிறார்; இன்னொரு விஷயத்தை எனக்கு கற்றுத் தாருங்கள். நான் எது குறித்து அதிகம் பயந்து கொள்ள? என்பதாக. அதற்க்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் நாவை சுட்டிக்காட்டி சொன்னார்கள்; உன் நாவைப் பயந்துக் கொள்!
 
அறிவிப்பாளர்: ஸுஃப்யான் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 15417.
 
இஸ்திகாமத் இதுதான். அது நம்முடைய தேடலாக முயற்சியாக இருக்க வேண்டும். சில நேரங்களில் நம்மிடத்தில் இருந்து குறைகள் நிகழ்வதை நாம் பார்க்கிறோம். அதற்கு அல்லாஹ் கொடுத்த மிகப்பெரிய ஒரு வெகுமதிதான் பாவமன்னிப்பு தேடுதல். நம்முடைய அமல்களில் குறைகள் ஏற்பட்டுவிட்டால், நம்முடைய கடமையான  அமல்களில் குறைகள் ஏற்பட்டுவிட்டால், அல்லது நஃபிலான அமல்களில் குறைகள் ஏற்பட்டுவிட்டால், உடனே இஸ்திக்ஃபாரை அதிகப்படுத்த வேண்டும்.
فَاسْتَقِيمُوا إِلَيْهِ وَاسْتَغْفِرُوهُ
 
ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் (அல்குர்ஆன் 41 : 6)
 
அமல்களில் குறைகள் ஏற்படும். நாம் மனிதர்கள் சில நேரங்களிலேயே நம்முடைய பலவீனம் மிகைத்து நமக்கு சோர்வு ஏற்பட்டோ, அல்லது வேறு காரணங்களாலோ நம்முடைய அமல்களில் குறைகள் ஏற்படலாம். அவற்றை நிவர்த்திசெய்வதற்கு  அல்லாஹ் கொடுத்ததுதான்  இந்த இஸ்திக்ஃபார்.
 
عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَقِيمُوا، وَلَنْ تُحْصُوا، وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةَ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ» (سنن ابن ماجه 277 -) حكم الألباني]صحيح
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; நீங்கள் உறுதியாக இருங்கள்; அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் அமல்களில் சிறந்தது தொழுகை ஆகும். தொடர்ந்து உளுவோடு இருப்பவர் ஒரு பரிபூரணமான முஃமினாகவே இருப்பார். 
 
அறிவிப்பாளர்: சவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா, எண்: 277.
 
நாம் செய்து கொன்டே இருக்க வேண்டும். தொழுகையை சரியாக தொழ வேண்டும். நோன்பை சரியாக நோற்க வேண்டும். இது நம்முடைய முயற்சியாக இருக்க வேண்டும். எல்லா அமல்களையும் என்னால் முழுமையாக செய்யமுடியும் என்று நம்மால் சொல்ல முடியாது.
 
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَارِبُوا وَسَدِّدُوا، وَاعْلَمُوا أَنَّهُ لَنْ يَنْجُوَ أَحَدٌ مِنْكُمْ بِعَمَلِهِ» قَالُوا: يَا رَسُولَ اللهِ وَلَا أَنْتَ؟ قَالَ: «وَلَا أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِيَ اللهُ بِرَحْمَةٍ مِنْهُ وَفَضْلٍ» (صحيح مسلم  (2816)
 
அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைவதற்கு நீங்கள் நெருங்கிக் கொண்டே இருங்கள்; உங்களை நீங்கள் சரிபடுத்திக் கொண்டே இருங்கள்; அறிந்து கொள்ளுங்கள் உங்களில் யாரும் தன்னுடைய அமலால் ஈடேற்றம் அடைய முடியாது. அப்போது சஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நானும் தான் என் அமலால் ஈடேற்றம் அடைய முடியாது. அல்லாஹ் அவனுடைய அருளால் கருணையால் என்னை அனைத்துக் கொண்டாலே தவிர.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் எண்: 2816.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த இஸ்திகாமத் -நிலையாக இருப்பது, உறுதியாக இருப்பது, அல்லாஹுடைய மார்க்கத்திலே பற்றாக இருப்பது, இது நம்முடைய தேடலாக இருக்க வேண்டும். இதற்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்யவேண்டும். 
 
ஒவ்வொரு நாளும் எழுந்து அன்றைய மாலை பொழுதை, இரவை அடையும் போது இன்றைய ஃபர்ளான அமல்கள் என்னால் எப்படி நிறைவேற்றப்பட்டன? என்ன குறைகள் இருந்தன? இவற்றை எல்லாம் நாம் கணக்குப் போட வேண்டும். அது போன்று ஒவ்வொரு அமலையும்  எடுத்துக்கொண்டு அதை தொடர்ச்சியாக செய்வதற்கும் நிரந்தரமாக செய்வதற்கும் நாம் முயற்சி செய்யவேண்டும். 
 
இந்த இஸ்திகாமத்தில் யார் கவனமாக இருப்பார்களோ இன் ஷா அல்லாஹ் அவர்களுடைய மௌத்தின் நிலை அல்லாஹ் பொருந்திக்கொண்ட நிலையிலே, இஸ்லாமிலே பரிபூரணமடைந்த நிலையிலே அவர்களுக்கு ஏற்படும். 
 
அத்தகைய முயற்சிதான் ஸஹாபாக்களின் முயற்சியாக இருந்தது. நல்லோர்களுடைய முயற்சியாக இருந்தது. அல்லாஹ்வை நேசிக்கக்கூடிய, அல்லாஹ்வின் நேசத்தை பெறவேண்டும் என்று ஏங்கக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமுடைய முயற்சியாக இருக்க வேண்டும். 
 
அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இந்த இஸ்திகாமத் என்ற நற்பாக்கியத்தை தந்தருள்வானாக! நம்மிடம் ஏற்படக்கூடிய பலவீனங்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய சோம்பேறித்தனத்தையும், நம்முடைய அலட்சியத்தையும் மார்க்கத்தில் ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹுடைய மார்க்கத்தில் மேலும் மேலும் முன்னேறக்கூடிய, ஆர்வப்படக்கூடிய மிக மன உறுதியோடு அல்லாஹுடைய இபாதத்துகளை செய்யக்கூடிய நற்பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக.
 
ஆமீன்!
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ أَبِي حُمَيْدٍ الطَّوِيلُ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: جَاءَ ثَلاَثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا، فَقَالُوا: وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ، قَالَ أَحَدُهُمْ: أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا، وَقَالَ آخَرُ: أَنَا أَصُومُ الدَّهْرَ وَلاَ أُفْطِرُ، وَقَالَ آخَرُ: أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ أَتَزَوَّجُ أَبَدًا، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ، فَقَالَ: «أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا، أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ، لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ، وَأُصَلِّي وَأَرْقُدُ، وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي» صحيح البخاري 5063 -)
 
குறிப்பு 2).
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَخْرُجُ فِيكُمْ قَوْمٌ تَحْقِرُونَ صَلاَتَكُمْ مَعَ صَلاَتِهِمْ، وَصِيَامَكُمْ مَعَ صِيَامِهِمْ، وَعَمَلَكُمْ مَعَ عَمَلِهِمْ، وَيَقْرَءُونَ القُرْآنَ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، يَنْظُرُ فِي النَّصْلِ فَلاَ يَرَى شَيْئًا، وَيَنْظُرُ فِي القِدْحِ فَلاَ يَرَى شَيْئًا، وَيَنْظُرُ فِي الرِّيشِ فَلاَ يَرَى شَيْئًا، وَيَتَمَارَى فِي الفُوقِ» (صحيح البخاري-5058)
 
 
குறிப்பு 3).
- حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللَّهَ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ المُؤْمِنِ، يَكْرَهُ المَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ " (صحيح البخاري- 6502)
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/