அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்குதல் | Tamil Bayan - 593
بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்குதல்
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக. தக்வாவுடைய அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டலின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக!
முற்றிலும் அவன் பக்கமே திரும்பி அவனிடமே ஒதுங்கி அவனைக் கொண்டே நம்முடைய தேவைகளில் உதவி தேடியவர்களாகவும், நம்முடைய எல்லா காரியங்களிலும் அவன் மீதே நாம் பொறுப்பு சாட்டியவர்களாகவும் அவனே நமக்கு பாதுகாவலன்!
அவனே நமக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவன்! என்று அல்லாஹ்விடம் சரணடைந்தவர்கள் ஆகவும் அல்லாஹு தஆலா நம்மை ஆக்கி அருள்வானாக!
நம்முடைய நம்பிக்கையை அல்லாஹ் மேலும் மேலும் உறுதிப்படுத்துவானாக!
நம்பிக்கையின் உறுதியில் பலகீனம் ஏற்படுவதில் இருந்தும் குழப்பங்கள் ஏற்படுவதிலிருந்தும் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா பாதுகாப்பானாக!ஆமீன்!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!
அல்லாஹு ரப்புல் ஆலமீன் சூரா யூனுஸ் உடைய 107 வது வசனத்தில் தன்னுடைய நபியைப் பார்த்து அல்லாஹ் பேசுகிறான் தன்னுடைய ரசூலை முன்னோக்கி அல்லாஹ் கூறுகிறான்.
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ
அல்லாஹ், ஒரு தீமையை உமக்கு அடையச் செய்தால் அவனை அன்றி அதனை நீக்குப்பவர்கள் வேறு எவரும் இல்லை, அவன் உமக்கு ஒரு நன்மையை நாடி விட்டால் அவனது அருட்கொடையை தடுப்பவர் எவருமில்லை, அவனது அடியார்களில் அவன் நாடியவருக்கு அதனை வழங்குகிறான் அவன் மிக்க மன்னிப்போனும் கிருபை உடையவனும் ஆவான். (அல்குர்ஆன் 10 : 107)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய இந்த வசனம் நமக்கு மிகப்பெரிய யகீனை ஈமானுடைய உறுதியை கொடுக்கின்றது.
ஒரு முஃமினை பொருத்தவரை அவனுடைய உள்ளம் எப்பொழுதும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி இருக்க வேண்டும். பொதுவாக பயம் என்பது இருக்கலாம், ஆனால் அந்த பயம் மிகைத்து நான் கைவிடப்பட்டு விட்டேன் என்ற எண்ணம் ஒரு முஸ்லிமுக்கு வரக்கூடாது.
அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதிரிகளை பயந்தார்களா? இல்லையா?? பயந்தார்கள். அனால் அந்த பயத்தை போக்கும் படி அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள்.
اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا، وَآمِنْ رَوْعَاتِنَا
யா அல்லாஹ்! எங்களுடைய பயங்களைப் போக்கி எங்களுக்கு நிம்மதியை கொடு! எங்களுடைய பலவீனங்களை நீ மறைந்து விடு!
அறிவிப்பாளர்: அபூ ஸயீது அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னது அஹ்மது, எண்: 10996
அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டார்கள். குறைஷிகளின் சூழ்ச்சிகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயந்தார்கள். ஆகவேதான் இரவு நேரத்தில் ஹிஜ்ரத் செய்தார்கள். குறைஷிகள் தங்களை கொன்று விடக்கூடாது என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய பயணத் திட்டங்களை மறைத்தார்கள். இரவில் பயணம் செய்தார்கள், குகையில் தங்கினார்கள். குறைஷிகள் நடமாட்டம் குறைந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டார்கள்.
ஆனால் ரசூலுல்லாஹ் உடைய தவக்குலில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. பயம் என்பது வேறு ஆனால் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பான் கைவிடமாட்டான் என்ற ஈமானிய உறுதி இருப்பது வேறு.
இந்த ஈமானிய உறுதி எப்பொழுதும் ஒரு முஸ்லீம் இடத்தில் இருக்கவேண்டும். எதிரிகள் சூழ்ந்து கொண்டாலும் அடுத்த நேரத்தில் நாம் அங்குல அங்குலமாக வெட்டப்படும் என்ற நிலை வந்தாலும் கூட ஒரு முஸ்லிம் இப்படி எண்ணிவிடக்கூடாது;.நான் கைவிடப்பட்டு விட்டேன் அல்லாஹ் என்னை கை விட்டு விட்டான் என்று.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு கூறிய அறிவுரையை பாருங்கள்:
அபூபக்ர் கூறுகிறார்; அல்லாஹ்வின் தூதரே! இப்போது இந்த குதிரை வீரர்களில் யாராவது குனிந்து தங்களுடைய பாதத்தை பார்த்தால் போதும் நம்மை பார்த்து விடுவார்கள் என்று கூறியபோது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிக அழகாக அறிவுரை சொன்னார்கள்;
مَا ظَنُّكَ يَا أَبَا بَكْرٍ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا
அந்த இருவரைப் பற்றி உனது எண்ணம் என்ன? அவர்களில் மூன்றாவதாக அல்லாஹ் இருக்கின்றான்.
நூல்: புகாரி, எண்: 3653
لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا
கவலைப்படாதே! சஞ்சலப்படாதே! அல்லாஹ் நிச்சயமாக நம்மோடு இருக்கின்றான். (அல்குர்ஆன்: 9 : 40)
அன்பு சகோதரர்களே! இந்த யகீனை குர்ஆனை ஓதக்கூடியவர் ரசூலுல்லாஹ் உடைய நபிமார்களுடைய வரலாறுகளை படிக்க கூடியவர் கண்டிப்பாக உள்ளத்திலே கொண்டிருக்க வேண்டும்.
ஃபிர்அவ்ன் சூழ்ந்த போது இஸ்ரவேலர்கள் நாம் கைவிடப்பட்டோம் என்று எண்ணியபோது மூசா அலைஹிஸ்ஸலாம் மிக அழுத்தமாக கண்டித்தார்கள்; ஒரு காலமும் அப்படி நினைக்காதீர்கள்! ஒரு காலமும் அப்படி கிடையாது!
அல்லாஹு தஆலா தன்னுடைய அடியார்களை கைவிடமாட்டான்; தன்னுடைய நேசர்களை அல்லாஹு தஆலா கைவிடமாட்டான்!
قَالَ كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ
அவ்வாறல்ல நிச்சயமாக என்னுடைய அரபு என்னுடன் இருக்கின்றான் விரைவில் அவன் நல்வழி காட்டுவான் என்று மூஸா கூறினார். (அல்குர்ஆன்: 26 : 62)
அன்பு சகோதரர்களே! இந்த யகீன் ஒரு முஸ்லிம் இடத்திலே எல்லா நேரங்களிலும்.மிக மிக உறுதியாக இருக்க வேண்டும்.
இந்த மக்களுடைய நிலைமை எப்படி என்றால்..அவனுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் நடந்து கொண்டே இருந்தால், அவன் நாடிய காரியங்கள் எல்லாம் நிறைவேறி கொண்டே இருந்தால், அவன் எடுக்கக்கூடிய செயல்கள் எல்லாம் தனக்கு வெற்றியாக அமைந்து கொண்டே இருந்தால், எல்லாம் என்னை கொண்டு ஆகிறது என்று நினைக்கின்றான்.
தன் மீது அவனுக்கு நம்பிக்கை வருகிறது. இப்படிப்பட்டவன் அவனுடைய நிலைமை எப்படி மாறும் என்றால் ?
இவனுக்கு நாளை ஒரு பிரச்சனை என்றால், இவனுக்கு நாளை ஏதாவது ஒரு தீங்கு என்றால் இவன் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவான். அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டுப் பார்ப்போம் என்று எண்ணுவான். அவன் கேட்பான்.
இப்படிப்பட்டவர்களை பற்றிதான் ஹதீஸில் வருகிறது,
யார் தங்களுடைய மகிழ்ச்சியில் அல்லாஹ்வை மறந்து விட்டு தன்னுடைய துக்கத்தில் அல்லாஹ்வை நினைவு கூறுகிறார்களோ..அவர்களுடைய சப்தத்தை குறித்து கூறப்படும்.
இது என்ன ஒரு கேவலமான சப்தம் என்பதாக. இது என்ன ஒரு அழைப்பு என்பதாக. எந்த அடியான் சுகத்தில் அல்லாஹ்வை மறந்து விட்டு கவலையில் அல்லாஹ்வை நினைக்கிறானோ...அன்பு சகோதரர்களே! மிகப்பெரிய பரிதாபமான நிலை.
இதே இடத்தில் அவன் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் மீளுவான் என்றால் கண்டிப்பாக அவனையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மன்னித்து ஏற்றுக் கொள்வான்.
ஆனால் சிலர் எப்படி என்றால் அல்லாஹு தஆலா ஒரு வாய்ப்பு கொடுப்பான், அந்த துக்கத்தில் இருந்து மீட்டு எடுப்பான். பிறகு மறந்து விடுவான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
فَإِذَا مَسَّ الْإِنْسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
எனவே மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தொட்டு விட்டால் அதை நீக்கக்கோரி நம்மை அழைக்கின்றார். பிறகு அதனை நீக்கி அவனுக்கு ஏதேனும் ஓர் அருட்கொடையை நாம் வழங்கினால், இதனை நான் கொடுக்கப்பட்டிருப்பது எல்லாம் என் அறிவினால் தான் என்று கூறுகின்றான் எனினும் அது அவனுக்கு ஒரு சோதனை ஆகும் என்றாலும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 39 : 49)
அவன் அழைப்பை அவன் மறந்து விடுகிறான். இந்த நிலை ஏற்பட்டு விட்டால் சகோதரர்களே! அவனுடைய இறுதி நிலை மிகக்கேவலமாக மோசமாக இருக்கும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஒரு முஃமினுடைய யகீன் அல்லாஹ்வை கொண்டுதான் எனது பாதுகாப்பு. உலகமெல்லாம் என்னைப் பாதுகாக்க நினைத்தால் அல்லாஹ்வை விட்டு விட்டால் வேறு யாரும் பாதுகாக்க முடியாது. உலகமெல்லாம் என்னை அழிக்க நினைத்தால் அல்லாஹ் என்னை பாதுகாக்க நினைத்தால் என்னை யாரும் அழிக்க முடியாது.
என்ற யகீன் அந்த அடியார் உடைய உள்ளத்திலே உறுதியாக இருக்க வேண்டும் அல்லாஹ்வின் மீது அவனுக்கு உண்டான பிடிப்பு, யகீன் الاعتماد على الله -எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வின் பக்கம் உறுதியான, நிலையான, பலமான, ஆழமான நம்பிக்கை ஒரு முஃமினுடைய உள்ளத்தில் இருக்க வேண்டும்.
குர்ஆனுடைய வசனங்கள், நபிமார்களோடு அல்லாஹ் பேசுவது, நபிமார்கள் தங்களுடைய சமூகத்தார்கள் இடத்தில் பேசியது, இப்படியாக பல நூறு வசனங்கள் இந்த யகீனை இந்த ஈமானை நமக்கு உறுதிப்படுத்துகின்றன.
அல்லாஹ் கூறுகின்றான்:
قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُمْ مِنْ دُونِهِ فَلَا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِيلًا
அல்லாஹ்வையன்றி (வேறு தெய்வங்கள்) இருப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அவைகளை நீங்கள் அழையுங்கள். அவை உங்களை விட்டும் யாதொரு கஷ்டத்தையும் நீக்கி வைக்கவும் (அதனை) திருப்பி விடவும் சக்தி பெறமாட்டார்கள் என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 17 : 56)
ஒரு முஃமின் அல்லாஹ்வை கொண்டுதான் எனது கஷ்டங்கள் நீங்கும். என்னுடைய துன்பங்கள் அல்லாஹ்வை கொண்டுதான் தீரும் என்ற உறுதியான யகீன் உடையவன்.
ஆகவேதான் கஷ்ட நேரத்தில் சிரமமான நேரத்தில் ஒரு முஃமினுடைய ஈமான் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
ஒரு முஃமினுடைய உள்ளத்திலே ஈமான் இருக்கிறது என்பதற்கு உண்டான அடையாளம். அவனுக்கு சிரமம் ஏற்படும்போது அவனுடைய முன்னோக்குதல் அல்லாஹ்வின் பக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கும்.
அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் அவனுக்கு அல்லாஹ்வின் மீது அன்பு அதிகமாகும். அதிகம் அல்லாஹ்வை நினைக்க ஆரம்பிப்பான்.
وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا
மேலும் (உண்மை) முஃமின்கள் (எதிரி)ப்படைகளை கண்ணுற்ற பொழுது " இது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்த ஒன்றாகும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே கூறினார்கள்" என்று சொன்னார்கள்.அது அவர்களுக்கு ஈமானையும் (அல்லாஹ்வுக்கு) வழிபடுவதையுமே அல்லாமல் (வேறு எதனையும்) அதிகரிக்க செய்திடவில்லை. (அல்குர்ஆன் 33 : 22)
அல்லாஹு தஆலா அந்த அஹ்ஸாப் யுத்தத்தை வர்ணிக்கின்றான்.
إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا
உங்களுக்கு மேற்புறத்தில் இருந்தும், உங்களின் கீழ் புறத்தில் இருந்தும், அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த பொழுது, (உங்களது) பார்வைகள் (பீதியினால் மருண்டு) சாய்ந்து, இதயங்கள் தொண்டை(க் குழி)களை அடைந்தும் இருந்த சமயத்தில் (அல்லாஹ் உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்). அல்லாஹ்வைப் பற்றிய பல (தவறான) எண்ணங்களை நீங்கள் எண்ணிய சமயத்தில் (அல்லாஹ் உங்களுக்குச் செய்த பேரருளை நினைத்துப் பாருங்கள்). (அல்குர்ஆன் 33 : 10)
மேலிருந்தும் வந்தார்கள்; கீழிருந்தும் வந்தார்கள்; ஒருபக்கம் மதீனாவின் வெளிப்புறத்திலிருந்து குறைஷிகள் ஆயிரக்கணக்கான வீரர்களோடு, இன்னொரு பக்கம் மதீனாவின் உள்புறத்தில் இருந்து பனூ குரைழா யூதர்கள், இப்படியாக சூழ்ந்து கொண்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் :
பயத்தால் உங்களுடைய நெஞ்சங்கள் எல்லாம் தொண்டைக்குழிக்குள் வந்துவிட்டன என்று. அந்த நேரத்திலே பலவீனமானவர்கள் பல எண்ணங்களை எண்ணினார்கள். முனாஃபிக்குகள் கூறினார்கள்;
وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏமாற்றத்தை தவிர (வேறு எதையும்) நமக்கு வாக்களிக்கவில்லை என்று நயவஞ்சகர்களும் எவர்களுடைய இதயங்களில் (பலவீனம், சந்தேகம், போன்ற) நோய் இருந்ததோ அவர்களும் கூறியதையும் (நினைவு கூறுவீராக!). (அல்குர்ஆன் 33 : 12)
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் எங்களுக்கு ஏமாற்றமான ஒரு வாக்கை கொடுத்துவிட்டார்கள் என்று அவர்கள் நம்பிக்கை இழந்தார்கள். ஆனால் சகோதரர்களே!
உண்மை முஃமின்களைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதரோடு தனது உயிரையும் பொருளையும் அர்ப்பணிக்க வந்த அந்த ஸஹாபாக்களைப் பார்த்து அல்லாஹ் சொல்கின்றான். அந்த சஹாபாக்கள் எதிரிகளுடைய அந்த ராணுவங்களை பார்த்தபோது, அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு வாக்கு அளித்தது இதுதான்.
எவ்வளவு எதிரிகள் ஆயுதங்களோடு வந்தார்களோ அதை பார்க்க பார்க்க அவர்கள் சொன்னார்கள். இதுதான் அல்லாஹ் நமக்கு வாக்களித்தது;
وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا
அவர்களுக்கு ஈமானும் அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கை ஏற்பட்டது அல்லாஹ்வுடைய கட்டளையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது முற்றிலுமாக அல்லாஹ்விடம் அவர்கள் சரணடைந்தார்கள். (அல்குர்ஆன்: 33 : 22)
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த துக்கமான கஷ்டமான நேரத்தில் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கி அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு என்றே நமக்கு அழகான துஆக்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
இன்று நாம் மக்களிடத்திலே புலம்புகிறோம். நம்முடைய பிரச்சினை என்னவென்றால் நம்முடைய கஷ்டங்களை சிரமங்களை மக்களிடத்திலே புலம்புகிறோம். அல்லாஹ்விடத்தில் புலம்புவது இல்லை. திக்ரை கொண்டு நமது உள்ளங்களுக்கு ஆறுதல் கொடுப்பதில்லை.
திக்ரை கொண்டு நமது உள்ளங்களுக்கு மனவலிமையை கொடுப்பதில்லை. பயம் ஏற்படுகிறது என்று பயத்தால் பிதற்றுகின்றோமே தவிர வருந்துகிறோமே தவிர பயத்தால் நாம் சஞ்சலப்படுகின்றோமே தவிர அந்த நேரத்தில் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்குவோம் அல்லாஹ்வை நினைவு கூறுவோம் என்ற எண்ணம் என்ற உறுதி ஈடுபாடு நமக்கு ஏற்படுவது இல்லை.
குர்ஆனை நீங்கள் எடுத்துப் படித்துப் பாருங்கள். அல்லாஹு தஆலா ஸஹாபாக்களுக்கு எங்கெல்லாம் போரைப் பற்றிக் கூறுகின்றானோ அங்கு அல்லாஹ்வுடைய திக்ரை குறித்து கூறுகின்றான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا
முஃமின்களே! அல்லாஹ்வை மிக அதிகமான அளவு நினைவு கூறுதலாக நினைவு கூறுங்கள். (அல்குர்ஆன் 33 : 41)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை நீங்கள் அதிகமாக (உரக்க) சப்தமிட்டுக் கூறுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 8 : 45)
அல்லாஹுவை நினைவு கூறுவது சகோதரர்களே! இதுபோன்ற கஷ்டமான ஆபத்தான பிரச்சினைகளில் சூழ்நிலைகளில் நாம் உறுதியாக இருப்பதற்கு தடுமாற்றம் இல்லாமல் இருப்பதற்கு பலவீனம் படாமல் இருப்பதற்கு நமக்கு மிகப்பெரிய ஒரு சான்று மிகப் பெரிய ஆதாரம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கஷ்ட நேரங்களில் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்குவதற்கு என்றே அந்தத் துன்ப நேரங்களில் அல்லாஹு தஆலாவை அழைப்பதற்கு என்றே அழகான திக்ரை சொல்லிக் கொடுத்தார்கள்.
لا اله الا الله العظيم الحليم
மகத்தான மிகப்பெரிய சகிப்பாளனாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.
لا اله الا الله رب العرش العظيم
மகத்தான அர்ஷுடைய இறைவனைத் தவிர இறைவனாகிய அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.
لا اله الا الله رب السموت ورب الارض ورب العرش الكريم
ஏழு வானங்களுக்கும் பூமிகளுக்கும் அதிபதியாகிய மேலும் அர்ஷ் உடைய அதிபதியாகிய அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண் : 6345, 6346
இந்த திக்ரை ஒரு அடியான் நினைவு கூறும் போது அவனுடைய உள்ளத்தில் சஞ்சலமான நேரங்களில், குழப்பமான நேரங்களில் மிகப்பெரிய ஈமானிய உணர்வுகள் உடைய நம்பிக்கை ஏற்படுகின்றது.
காஃபிர்களை பாருங்கள்; செல்வந்தனாக இருப்பான் வசதியிலே இருப்பான் சின்ன துக்கத்தை அவனால் தாங்க முடியாது. தன்னுடைய கடவுள் தன்னை கைவிட்டதாக நினைப்பான். இனி வாழ்வதற்கு வேறு வழி இல்லை என்பதாக நினைப்பான். உடனே தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வான்.
ஒரு முஸ்லிம் அதுபோன்று செய்யவே மாட்டான். அவனுடையஉள்ளத்திலே அந்த எண்ணம் ஏற்படாது காரணம் என்ன? அவன் அல்லாஹ்வின் பக்கம் தன்னை ஒப்படைத்து விட்டான்.
இந்த திக்ர் ஏழு வானங்கள் உடைய அதிபதியான அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறேன். என்னை அவன் கைவிடமாட்டான். நான் அவனை சுகமான நேரத்தில் என்னுடைய மகிழ்ச்சியான நேரத்தில் அழைத்தேன் அவன் எனக்கு இந்த கவலையான நேரத்தில் கை கொடுப்பான். என்னுடைய ரப்பு இருக்கிறான் என்ற எண்ணம் அவனுடைய உள்ளத்திலே எப்பேற்பட்ட ஈமானிய பலத்தைக் கொடுக்கும் என்றால்,
அவன் தடுமாற மாட்டான், பொய் பேச மாட்டான், வாக்குகளை மீற மாட்டான், சோதனைகளை சந்திப்பதற்கு மிக மகிழ்ச்சியோடு இன்முகத்தோடு அவன் தயாராக இருப்பான். ஏன் அவன் தூக்கு மேடைக்கு ஏற்றப்படும் போதுகூட அவனை எதிரிகள் சூழ்ந்து அணுஅணுவாக கொல்வதற்கு தயாராக ஆனாலும்கூட அவனுடைய உள்ளத்தில் எந்த பதட்டமும் இருக்காது. எந்தவிதமான சஞ்சலமும் இருக்காது.
அவ்வளவு அமைதியாக இருப்பான். இது வரலாற்றிலே முந்திய நபிமார்களில் இருந்து சாலிஹீன்கள் வரை நீங்கள் வரலாற்றை படித்துப் பார்த்தால் இந்த உண்மையை புரிந்துகொள்ள முடியும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலே, குபைப் (ரழி) குறைஷிகளால் சூழப்படுகின்றார். இன்னும் சில நிமிடங்களில் அவருடைய உடல் சல்லடையாக ஆகப்போகிறது. காரணம் அவர் ஒரு திசையிலே நிறுத்தப்பட்டு இருக்கிறார். குறைஷி வீரர்கள் எல்லாம் அம்புகளை கொண்டும் ஈட்டிகளை கொண்டும் அவர்களுடைய உடலை குறி பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
அபூஸுஃப்யான் உடைய ஒரு கட்டளை வந்தால் போதும் அந்த குறைஷி வீரர்களுடைய அம்புகளும் ஈட்டிகளும் குபைப் உடைய உடலை பதம் பார்த்து விடும்.
அவ்வளவு அமைதியாக இருக்கிறார். எனக்கு அனுமதி தாருங்கள் இரண்டு ரக்அத் தொழுது கொள்கிறேன் என்று கூறுகிறார்கள். இரண்டு ரக்அத் நிதானமாக தொழுகிறார். நான் இன்னும் நீட்டி தொழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆசைப்பட்டேன்.
ஆனால் மரணத்தின் பயத்தால் தொழுகையில் இருக்கிறேன் என்று நீங்கள் சொல்லி விடக்கூடாது என்பதற்காக தொழுகையை சுருக்கமாக முடிக்கிறேன் என்று சொல்கிறார்; அந்த எதிரிகளை பார்த்து பேசுகிறார்.
மிக நிதானமாக. என்னுடைய இறைவா! என்னுடைய தூதருக்கு என்னுடைய நிலைமையை சொல்வாயாக!!
என்னுடைய சலாமை நீ சேர்த்து வைப்பாயாக!
என்று அல்லாஹ்விடத்தில் முறையிடுகிறார்.
பிறகு அல்லாஹ்விடத்தில் பேசுகின்றார்.
யா அல்லாஹ்! இங்கு இருக்கக்கூடிய அத்தனை குறைஷிகளையும் நீ எண்ணிக்கொள்வாயாக! இவர்களை விட்டு விடாதே!
நான் இப்போது கொல்லப்பட்டால் என் இறைவா! கொல்லப்படக்கூடிய துண்டு துண்டாக ஆக்கக்கூடிய என்னுடைய எலும்பிலும் என்னுடைய நரம்புகளிலும் என்னுடைய சதைகளிலும் நீ பரக்கத் செய்வாயாக! என்று அவர் சொல்லி முடிக்கின்றார்.
குறைஷிகளுடைய அம்புகளும் ஈட்டிகளும் அவருடைய உடல்களை சல்லடையாக ஆக்குகின்றது.
அறிவிப்பாளர்: அபூ ஹுறைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 3045, 3989, 4086
அன்பு சகோதரர்களே! எப்படிப்பட்ட ஈமானிய உணர்வு பாருங்கள். எப்பேற்பட்ட யகீன் என்று பாருங்கள். அல்லாஹு தஆலா இது போன்ற வரலாற்றை குர்ஆனிலே சொல்லிக் காட்டுகின்றான். ஹபீப் நஜ்ஜார் உடைய வரலாறு நமக்கு யாசீனில் சொல்லப்படுகின்றது.
தஃவா கொடுக்கின்றார். எல்லோரும் சூழ்ந்து கொள்கிறார்கள்; அவர் தனது சமுதாய மக்களிடத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார்; சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَاقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ (20) اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ
மேலும், அப்பட்டணத்தின் கடைக் கோடியிலிருந்து, ஒரு மனிதர் விரைந்து வந்து, "எனது சமுதாயத்தவர்களே! நீங்கள் இத்தூதரைப் பின்பற்றுங்கள் "எனக் கூறினார்.
"உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்காதவர்களான இத்(தூதர்களை) பின்பற்றுங்கள். இன்னும் இவர்கள் (நேர்வழியை போதிப்பவர்கள் மட்டுமல்ல) நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள் (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் : 36: 20-21)
ஆனால் அந்த மக்களோ, என்ன நீ எங்கள் சமூகத்தில் இருந்து கொண்டு இவர்களைப் பின்பற்றி விட்டாயா? என்று அவரை சூழ்ந்து கொள்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் எழுதுகிறார்கள்:
ஒரு கூட்டம் அவர் வயிற்றில் ஏறி மிதிக்கிறது; இன்னொரு கூட்டம் அவர் கழுத்தை ஆடு அறுப்பது போன்று அறுக்கிறது.
நூல்: தஃப்ஸீர் தபரி.
அந்த நேரத்திலே அவர் சொல்கிறார்:
وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ
என்னை படைத்தானே அத்தகையவனே நான் வணங்காது இருக்க எனக்கு என்ன (நேர்ந்தது ?) இன்னும் அவன் பக்கமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 36 : 22).
أَأَتَّخِذُ مِنْ دُونِهِ آلِهَةً إِنْ يُرِدْنِ الرَّحْمَنُ بِضُرٍّ لَا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنْقِذُونِ
அவனையன்றி வேறு தெய்வங்களை நான் எடுத்துக் கொள்வேனா ? அர் ரஹ்மான் எனக்கு ஏதேனும் தீங்கு நாடினால் இவர்களுடைய பரிந்துரை என்னை விட்டும் எதையும் தடுத்து விடாது. இன்னும் என்னை (அத்தீங்கிலிருந்து) இவர்கள் விடுவிக்கவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 36 : 23).
உங்களுடைய கடவுள்கள் எனக்கு என்ன செய்ய முடியும்? அல்லாஹ் எனக்கு தீங்கை நாடினால் உங்களுடைய கடவுள்கள் என்னை பாதுகாக்க முடியுமா? அவர்களுடைய சிபாரிசு எனக்கு பலனளிக்குமா?
என்று கூறிக் கொண்டே இருக்கிறார் அவருடைய உயிர் பிரிந்து கொண்டே இருக்கிறது.
அந்த நேரத்திலே அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவருக்கு சொர்க்கத்தை காட்டுகின்றான்.
என்னுடைய கூட்டத்திற்கு அல்லாஹ் எனக்கு கொடுத்த கண்ணியம் தெரிய வேண்டுமே! என்னை சொர்க்கவாசிகளில் அல்லாஹ் என்னை ஆக்கினானே அதை என் சமூகம் புரிந்து கொள்ள வேண்டாமா? என்று அந்த நேரத்திலே தனது சமூக மக்களின் மீது இரக்கம் கொள்கிறார்.
அன்பு சகோதரர்களே! இதுதான் ஒரு முஃமினுடைய யகீன். ஒரு முஃமின் தனது ரப்பால் கைவிடப்பட்டு விட்டோம், என்னுடைய ரப்பு என்னை விட்டு ஒதுங்கி விட்டான் என்ற எண்ணம் அவனது உள்ளத்திலே கடுகளவும் ஏற்பட முடியாது, ஏற்படக்கூடாது.
அல்லாஹ்விற்கு முன்னால் சஜ்தா செய்கிறோம். உலகம் எனக்கு ஏதும் பெரிதல்ல அல்லாஹு அக்பர் என்று கூறி அவனைத் தொழுது அவனுக்கு முன்னால் முற்றிலுமாக தன்னை அர்ப்பணம் செய்ய கூடிய நிலைதான் அங்கு இருக்கும்.
இந்த சுஜூது ருகூவை செய்கின்ற முஸ்லிம் அல்லாஹ் என்னை கைவிட்டு விட்டான் என்று எப்படி என்ன முடியும்.?
சூழ்நிலைகள் மாறலாம், ஆட்சி இருக்கலாம், ஆட்சி போகலாம், சுகம் இருக்கலாம், நோய் வரலாம், எந்த நிலை மாறினாலும் ஒரு முஸ்லிமுடைய யகீன் என்பது அல்லாஹ்வை முன்னோக்கி உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிக் கொடுத்த துஆக்களில் ஒன்று,
ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் இரவிலும் பகலிலும் ஒவ்வொரு தொழுகையிலும் தொழுகைக்கு பின்பும் இந்த யகீனை அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்குதல், அல்லாஹ்வின் மீது பாரத்தைப் போடுதல், இதை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமின்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் இருந்ததில்லை.
எல்லா நேரங்களிலும் இது போன்று துஆக்களை சிறுவர்கள் இருந்து பெரியவர்கள் வரை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்துக் கொண்டே இருந்தார்கள்.
சிறிய பிள்ளை இப்னு அப்பாஸ். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் போது அவர்களுக்கு 13 வயது இருக்கும். அந்த சிறு பிள்ளையை தன்னோடு அமர வைத்துக் கொண்டு இப்னு அப்பாஸ் இடத்திலே பேசுகின்றார்கள்.
அல்லாஹ்வை பாதுகாத்துக் கொள்; அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான்.
அல்லாஹ்வை பாதுகாத்துக் கொள்; அவனை உனக்கு முன்னால் காண்பாய்.
இப்னு அப்பாஸ்! உலக மக்களெல்லாம் ஜின்கள் மனிதர்கள் எல்லோரும் சேர்ந்து உனக்கு ஒரு தீங்கு செய்ய நாடினால் அல்லாஹ் உனக்கு எழுதியதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது.
இப்னு அப்பாஸ்! உலக மக்கள் எல்லாம் மனிதர்கள் எல்லாம் சேர்ந்து உனக்கு நன்மையை செய்ய நாடினால் அல்லாஹ் விதித்ததை தவிர உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. (1)
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னது அஹ்மது, எண் : 2669, திர்மிதி எண் : 2516
பதிமூன்று வயது பச்சைபாலகன் அந்த குழந்தைக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுக்கக் கூடிய யகீனை பாருங்கள். நாம் ஒவ்வொரு நாளும் தூங்கும் பொழுது அழகிய துஆவை ஓத வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். அந்த துஆ உடைய மொத்த சாரம்சம் என்ன ?
தன்னை அல்லாஹ்விடம் சரண் அடையச் செய்வது அல்லாஹ்வின் பக்கம் ஒதுக்கி விடுவது அல்லாஹ்வின் மீது பாரத்தைப் போடுவது.
اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
யா அல்லாஹ்! நான் என்னை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன்.
எனது முகத்தை உன் பக்கம் திருப்பி விட்டேன்.
என்னுடைய எல்லா காரியங்களையும் உன்பக்கம் ஒப்படைத்து விட்டேன்.
என்னுடைய முதுகை நான் உன் பக்கம் ஒதுங்க வைத்து விட்டேன்.
உன்னையே ஆசைப்படுகின்றேன்!
உன்னையே பயப்படுகிறேன்!
யா அல்லாஹ்! நான் எங்கே செல்வேன்.
நான் எங்கே தப்பிப்பேன்.
உன்னிடமிருந்து உன்னிடமே சென்றடைவேன்.
என்னை பாதுகாப்பதற்கு நீதான்!
நீ என்னை தண்டிக்க நினைத்தால் உன்னைத் தவிர வேறு யாராலும் உன் தண்டனையிலிருந்து பாதுகாக்க முடியாது!
நீ எனக்கு சூழச்சி செய்ய நாடிவிட்டால் அந்த சூழ்ச்சியிலிருந்து உன்னைத் தவிர வேறு யாராலும் என்னை பாதுகாக்க முடியாது!
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண் : 6311
ஆசையும் அல்லாஹ்விடம் இருக்கவேண்டும், பயமும் அல்லாஹ்விடம் இருக்க வேண்டும்.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய அருள் நம்மைவிட்டு எடுபட்டு விட்டால் அவ்வளவுதான் ஒரு நிமிடம் கூட இந்த உலகத்தில் நம்மால் பாதுகாப்பாக வாழ முடியாது. அல்லாஹு தஆலா பல இடங்களிலே சஹாபாக்களுக்கு சொல்லிக் காட்டுகின்றான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ وَمَنْ يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ مَا زَكَى مِنْكُمْ مِنْ أَحَدٍ أَبَدًا وَلَكِنَّ اللَّهَ يُزَكِّي مَنْ يَشَاءُ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
முஃமின்களே! ஷைத்தான் உடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். எவர் ஷைத்தான் உடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவாரோ அப்பொழுது நிச்சயமாக அவன் அவருக்கு மானக்கேடான வற்றையும் வெறுக்கத்தக்க வற்றையும் ஏவுவான்.இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் கருணையும் இல்லாது இருப்பின் உங்களில் எவரும் ஒருபோதும் பரிசுத்தமாக முடியாது. எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களை பரிசுத்த படுத்துகிறான். மேலும் அல்லாஹ் அனைத்தையும் செவியேற்று நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் :24 : 21)
எத்தனை வசனங்கள் அல்லாஹ் உங்களை பாதுகாத்தான் என்று பத்ருப் போரில் அல்லாஹு தஆலா நபிக்கு சொல்கிறான்:
فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى وَلِيُبْلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
பத்ருப் போரில் பகைவர்கள் ஆகிய அவர்களை நீங்கள் உங்களது வலிமையினால் வெட்டவில்ல; ை எனினும் அல்லாஹ்தான் அவர்களை வெட்டினான். மண்ணை அவர்கள் மீது நீர் எரிந்த பொழுது அதை நபியே நீர் எறியவில்லை எனினும் அல்லாஹ்தான் எறிந்தான். முஃமின்களுக்கு தன் புறத்திலிருந்து வெகுமதி வழங்குவதற்காக அழகான சோதனையாக சோதிப்பதற்காக இவ்வாறு செய்தான்.நிச்சயமாக அல்லாஹ் செவியுறுவோனும் நன்கு அறிந்தோனுமாவான். (அல்குர்ஆன் : 8 : 17)
அன்பு சகோதரர்களே! இந்த யகீன். அல்லாஹு தான் நமக்கு. அல்லாஹ் கை கொடுத்தால் வேறு யார் கைவிட்டாலும் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. அல்லாஹ் கைவிட்டு விட்டால் வேறு யார் கை கொடுத்தாலும் அது நமக்கு கை கொடுக்காது.
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும். (அல்குர்ஆன் 3 : 160)
அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை யாரும் மிகைக்க முடியாது. அவன் உங்களை கைவிட்டால் அவனுக்குப் பின்னால் உங்களுக்கு உதவ கூடியவர்கள் வேறு யார் இருக்கிறார்கள். துஆவில் தொடர்ந்து வருகிறது;
آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
நீ இறக்கிய வேதத்தை நான் நம்பிக்கை கொண்டேன்!
நீ அனுப்பிய நபியையும் நம்பிக்கை கொண்டேன்!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
இந்த துஆவை ஓதி அந்த இரவிலே உங்களுக்கு மௌத் ஏற்பட்டுவிட்டால் நீங்கள் உங்களுக்கு அல்லாஹ்வுடைய நேரிய மார்க்கத்திலே மௌத்.
நீங்கள் காலையை அடைந்து கொண்டால் அல்ஹம்து லில்லாஹ் மிகப் பெரிய நன்மையை அடைந்து கொண்டீர்கள்.
அன்பு சகோதரர்களே! எப்படிப்பட்ட அந்த யகீனை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு சொல்லித் தருகிறார்கள். நபிமார்களுடைய வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் நமக்கு இதைத்தான் சொல்லுகின்றது.
ஐயூப் (அலை) அந்த அழகிய துஆவை பாருங்கள் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
(நபியே!) அய்யூபையும் (நினைவு கூறுவீராக!) நிச்சயமாக ஒரு துன்பம் என்னை தொட்டு விட்டது. நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கிறாய் "என்று தனது ரப்பை அவர் அழைத்த போது,
فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ
அவருக்கு நாம் பதிலளித்து அவருக்கிருந்த துன்பத்தையும் நீக்கிவிட்டோம். அவருடைய குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் அவருக்கு நாம் கொடுத்தோம். இது நம்மிடத்தில் இருந்துள்ள கிருபையாகவும் வணக்கசாலிகளுக்கு நினைவூட்டுதலாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன்: 21 : 83-84)
அல்லாஹு தஆலா இதே தொடரில் யூனுஸ் (அலை) அவர்களை நினைவு படுத்துகிறான். யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சிரமம் அவர்கள் பட்ட துன்பம் தெரியும். அந்த மீன் வயிற்றிலே அல்லாஹ்விடத்தில் சொல்கிறார்கள்;
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87) فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ
துன்னூனையும் (மீன் உடையவரான யூனுஸையும் நீர் நினைவு கூறுவீராக! அவர் தம் சமூகத்தாரை விட்டு) கோபம் கொண்டவராக அவர் சென்ற பொழுது, " அவர் மீது நாம் நெருக்கடியை உண்டாக்க மாட்டோம்" என்று அவர் எண்ணிக் கொண்டார். (மீனின் வயிற்றின்) இருள்களில் (நெருக்கடிக்குள்ளான அவர்) உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் (வேறு ஒருவனும்) இல்லை; நீ மிகத் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களின் உள்ளவன் ஆகிவிட்டேன்" என்று பிரார்த்தனை செய்து அழைத்தார்.
ஆகவே அவருக்கு நாம் பதில் அளித்தோம். அவருடைய கவலையிலிருந்து நாம் ஈடேற்றம் அளித்தோம். இவ்வாறே நாம் நல்லடியார்களான முஃமின்களையும் காப்பாற்றுவோம். (அல்குர்ஆன் 21 : 87-88)
அன்பு சகோதரர்களே! நபிமார்களுடைய இது போன்ற துஆக்களை அல்லாஹு தஆலா நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். அவர்கள் வைத்திருந்த அந்த யகீனை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். எப்படி அல்லாஹ்வின் பக்கம் முற்றிலுமாக அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நம்பிக்கையில் உறுதியாக இருந்து அல்லாஹ்விடமே அவர்கள் உதவி தேடினார்கள்.
அன்பு சகோதரர்களே! இன்று நமது வணக்க வழிபாடுகள் பலவீனமாக இருக்கின்றது. நம்முடைய துஆக்கள் பலவீனமாக இருக்கின்றன. அதற்கு என்ன காரணம் ??
உள்ளத்திலே உள்ள ஈமான் யகீன் பலவீனமாக இருக்கின்றது. பலர் துஆ செய்யும்பொழுது அல்லாஹ்விடம் கேட்டுப் பார்ப்போம்..செய்தாலும் செய்யலாம்; உதவி வந்தாலும் வரலாம், அல்லாஹ் செய்தாலும் செய்வான். இப்படியாக பலவீனமான நம்பிக்கையோடு அரைகுறை நம்பிக்கையோடு துண்டிக்கப்பட்ட ஈமானோடு பலர் கையேந்துகிறார்கள்
இப்படிப்பட்ட துஆகளுக்கு அல்லாஹ்விடத்தில் பதில் கிடையாது. எத்தகைய துஆக்களுக்கு அல்லாஹ் பதில் அளிப்பான்.
எந்த துஆ அல்லாஹ்விடம் பதில் அளிக்கப்படும் என்றால், எந்த துஆவை கேட்கக்கூடிய அந்த முஃமின் உறுதியான நம்பிக்கையோடு அல்லாஹ் கொடுப்பான், அல்லாஹ் கொடுத்ததை நான் பொருந்திக் கொள்வேன் என்னுடைய நிலைமை அல்லாஹ்விற்கு தெரியும் என்று அல்லாஹ்விடத்தில் கையேந்தி தனது தேவைகளை மன்றாடிக் கேட்கின்றானோ. அந்த அடியான் உடைய துஆ அல்லாஹ்விடத்தில் கபூல் செய்யப்படும்.
அல்லாஹு தஆலா இதற்கும் நமது ரசூலை முன்னுதாரணமாக ஆக்கி இருக்கின்றான்.
பத்ருப் போரில் அவ்வளவு பெரிய சூழ்ச்சிகளோடு ஆயிரம் எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் 313 வீரர்கள்தான். அதிலும் சரியான ஆயுதங்கள் இல்லை. எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை.
அல்லாஹ்விடத்தில் துஆ எப்படி கேட்டார்கள்:
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ
உங்கள் ரப்பிடம் நீங்கள் பாதுகாவல் தேடியபோது அணி அணியாக உங்களைப் பின் தொடர்ந்து வரக்கூடிய ஆயிரம் வானவர்களை கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதில் அளித்தான். (அல்குர்ஆன் 8 : 9)
ஹதீஸில் வருகின்றது; அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்;
கையை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அழுகிறார்கள், அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்னால் இருந்துகொண்டு ஹஸ்புக யாரசூலல்லாஹ்! ஹஸ்புக யாரசூலல்லாஹ்!
அல்லாஹ்வுடைய தூதரே! உங்களுடைய துஆக்களை அல்லாஹ் கேட்டுக் கொண்டான் என்று அவர்கள் ஆறுதல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய கைகளை தூக்கி...
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي قُبَّةٍ: «اللَّهُمَّ إِنِّي أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ، اللَّهُمَّ إِنْ شِئْتَ لَمْ تُعْبَدْ بَعْدَ اليَوْمِ» فَأَخَذَ أَبُو بَكْرٍ بِيَدِهِ، فَقَالَ: حَسْبُكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَدْ أَلْحَحْتَ عَلَى رَبِّكَ وَهُوَ فِي الدِّرْعِ، فَخَرَجَ وَهُوَ يَقُولُ: {سَيُهْزَمُ الجَمْعُ، وَيُوَلُّونَ الدُّبُرَ بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ، وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ} [القمر: 46]، وَقَالَ وُهَيْبٌ، حَدَّثَنَا خَالِدٌ، يَوْمَ بَدْرٍ (صحيح البخاري 2915 -)
யா அல்லாஹ்! உன்னுடைய வாக்கை நிறைவேற்று! இந்தக் கூட்டம் அழிந்துவிட்டால் இந்த பூமியில் உன்னை இபாதத் செய்பவர்கள் இருக்க மாட்டார்களே!
என்று அல்லாஹ்விடத்தில் மன்றாடி கொண்டு இருந்தார்கள். அதிகாலையில் அல்லாஹு தஆலா வசனத்தை இறக்குகிறான்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண் : 2915, முஸ்னது அஹ்மது எண் : 3042
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ (45) بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ
மிக விரைவில் இக்கூட்டம் தோற்கடிக்கப்படும். அவர்கள் புறமுதுகு காட்டி ஓடுவார்கள். எனினும் மறுமை நாள் இவர்களுக்கு வேதனையைக் கொண்டு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமைநாள் அதனுடைய வேதனை மிக்கடுமையானது மிகக் கசப்பானது. (அல்குர்ஆன் 54 : 45-46)
அதுபோன்று அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நடத்திக் காட்டினான்.
கண்ணியத்திற்குரியவர்களே! இன்று நமக்குத் தேவை நம்முடைய திட்டங்களின் மீது அல்ல, நம்முடைய சூழ்ச்சிகளின் மீது நமக்கு இருக்க வேண்டிய நம்பிக்கை அல்ல, இன்று நம்மிடத்தில் இருக்கக்கூடாத பயம் என்ன? நம்முடைய எதிரிகளின் மீது அவர்கள் நமக்கு எதிராக செய்யக்கூடிய சூழ்ச்சிகளின் மீது அல்ல.
நம்முடைய பயம் அல்லாஹ்வின் மீது இருக்க வேண்டும். நம்முடைய நம்பிக்கை அல்லாஹ்வின் மீது இருக்க வேண்டும்.
இந்த நிலையில் அல்லாஹ்வை முன்னோக்கி, அல்லாஹ்வின் பக்கம் பொறுப்பு சாட்டியவர்களாக, நம்முடைய வணக்க வழிபாடுகளை சீர்செய்து, பாவங்களை விட்டு மீண்டவர்களாக, பாவங்களை விட்டு விலகியவர்களாக, தவ்பா செய்தவர்களாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பற்றி பிடித்தவர்களாக, அல்லாஹ்வின் பக்கம் நாம் ஒதுங்கினோமேயானால் அல்லாஹ்வின் மீது நம்முடைய பாரத்தை சுமத்தினோமேயானால் கண்டிப்பாக அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்மை பொறுப்பேற்பான்.
பொறுப்பேற்பதற்கு அவன் சிறந்தவன். நம்மை அல்லாஹ் பாதுகாப்பான். பாதுகாப்பதில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்!
والله خير حافظا وهو ارحم الراحمين
பாதுகாப்பதில் அல்லாஹ் மிகச் சிறந்த பாதுகாவலன். அவன் கருணையாளர்களுக்கு எல்லாம் மகா கருணையாளன். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய உள்ளத்திலே அத்தகைய உறுதியான ஈமானை யகீனை தருவானாக!
தடுமாற்றங்களிலிருந்தும், குழப்பங்களில் இருந்தும் சந்தேகங்களிலிருந்தும், ஈமான், யகீன் பலகீன படுவதிலிருந்தும் அல்லாஹு தஆலா பாதுகாத்து, வணக்க வழிபாடுகளிலும் ஈமானுடைய குணங்களிலும் முன்னேற கூடிய அந்த உறுதியான ஈமானும் சிஃபத்துகளையும் தந்து அருள் புரிவானாக!
ஆமீன்
குறிப்புகள் :
குறிப்பு 1).
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، وَابْنُ لَهِيعَةَ، عَنْ قَيْسِ بْنِ الحَجَّاجِ، ح وحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا أَبُو الوَلِيدِ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي قَيْسُ بْنُ الحَجَّاجِ، المَعْنَى وَاحِدٌ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ: «يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ، احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ، وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ، وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ، رُفِعَتِ الأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ " (سنن الترمذي2516 -) حكم الألباني] : صحيح