HOME      Khutba      அல்லாஹ்வின் பக்கம் தேவையாகுதல்!! | Tamil Bayan - 592   
 

அல்லாஹ்வின் பக்கம் தேவையாகுதல்!! | Tamil Bayan - 592

           

அல்லாஹ்வின் பக்கம் தேவையாகுதல்!! | Tamil Bayan - 592


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
 
அல்லாஹ்வின் பக்கம் தேவையாகுதல்
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவனுடைய அடியார்களுக்கு மறுமையின் வெற்றியை கொடுப்பதற்காக  இந்த உலகத்திலே சில அமல்களை அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றான். அந்த அமல்கள் இல்லாமல் ஒரு மனிதன் மறுமையிலே வெற்றி பெற முடியாது. இந்த உலகத்தின் செல்வம் ஒரு மனிதனை மறுமையில் வெற்றியாளராக தீர்மானிக்காது; ஒரு மனிதனுடைய பதவி, இந்த உலகத்தில் அவனுக்கு இருக்கக்கூடிய கண்ணியம், இப்படி இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு வஸ்துவும் நாளை மறுமையிலே மனிதனுக்கு கண்ணியத்தை தேடித் தராது. 
 
இந்த உலகத்திலேயே கண்ணியமாக இருக்கக்கூடிய பலர் நாளை மறுமையில் கேவலமானவர்களாக இருப்பார்கள்.இந்த உலகத்திலேயே கேவலமாக, பலவீனமாக பார்க்கப்பட்ட பலர் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்திலே கண்ணியவான்களாக உயர்ந்தவர்களாக சிறந்தவர்களாக மதிப்பு மிக்கவர்களாக இருப்பார்கள். 
 
அல்லாஹு தஆலா சில அமல்களை உடல் உறுப்புகளால் நாம் செய்யும்படி நமக்கு கட்டளையிட்டிருக்கிறான்; சில அமல்கள் இருக்கின்றன அவை நம் உள்ளத்தோடு சம்பந்தப்பட்டவை; நம்முடைய உடல் மட்டும் அல்லாஹ்வை வணங்கினால் போதாது. நம்முடைய உள்ளமும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்க வேண்டும். ஒரு அடியான் தொழுகையிலேயே நிற்கிறான் என்றால் அல்லாஹு அக்பர் என்று அவனுடைய நாவு கூறும்போது அல்லாஹ்வின் அந்த வல்லமையை, அந்தப் பெருமையை அல்லாஹ்தான் மிகப் பெரியவன் என்ற தூய திரு வார்த்தையை கூறும்போது அவனுடைய நாவு எப்படி கூறுகின்றதோ அதை அவனுடைய உள்ளம் உணர வேண்டும் என்னுடைய ரப்பு தான்  மிகப்பெரியவன்.
 
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ
 
உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள்முன்) நினைவுகூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். (அல்குர்ஆன் 8 : 2)
 
நாவு அல்லாஹ்வை நினைவு கூறும்; அவனுடைய உள்ளம் அந்தரப்புடைய மகத்துவத்தை கண்ணியத்தை  வல்லமையை கம்பீரத்தை நினைவு கூர்ந்து அந்த உள்ளத்திலே பயமும் அச்சமும் பாசமும் கலந்து அல்லாஹ்வுடைய மதிப்பும் கண்ணியமும் கலந்த ஒருவிதமான நடுக்கம் வரும்; அந்த நடுக்கத்தோடு அந்த தக்பீர் வெளியாகும்போது தான் அவனுடைய உள்ளமும் அல்லாஹ்வை வணங்குகிறது; அவனுடைய நாவும் அல்லாஹ்வை நினைவு கூறுகிறது.
 
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
 
நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். (அல்குர்ஆன் 23 :1-2)
 
எப்படி ஒருவன் சரியான முறையில் ஒளூசெய்து  கிப்லாவை முன்னோக்கி சுத்தமான நிலையில் சுத்தமான இடத்தில் அவன் நிலையை ருகூவை சுஜுதை  இருப்பை இப்படி தொழுகையின் ஒவ்வொரு உள் ருக்னுகளையும் சரிசெய்து தொழ வேண்டுமோ அப்படித்தான் அடியார்களாகிய நம்முடைய உள்ளமும் அந்த தொழுகையிலேயே ஒருங்கிணைய வேண்டும். அந்த உள்ளமும் தொழுகையில் நம்முடன் சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய உடல் உறுப்பு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறிக்கொண்டே இருக்கின்றது . நிலையிலிருந்து ருகூவு  ருகூவிலிருந்து சுஜூத் இப்படியாக; ஆனால் உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பணிவு பயம் நான் ஒரு அடிமை எனது எஜமானனுக்கு முன்னால் நிற்கின்றேன் .அவன் தேவையற்றவன் என்னுடைய இபாதத்  அவனுக்கு தேவையில்லை என்னுடைய திக்ரு துஆ எதுவும் அவனுக்கு தேவையில்லை. அவன் மிகப் பரிசுத்தமானவன்; மிக தேவையற்றவன்.அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா கூறுகின்றான்.
 
 يَا أَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
 
மக்களே! நீங்கள் தான் அல்லாஹ்வின் பக்கம் தேவையுடையவர்கள். அல்லாஹு தஆலா எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் அனைத்தையும் விட்டு தேவையற்றவன். (அல்குர்ஆன் 35 : 15)
 
அல்லாஹ்விற்கு நபிமார்களின் இபாதத்தும் தேவையில்லை; எந்த இறைநேசரின் இபாதத்தும் தேவையில்லை; எந்த மலக்குடையை இபாதத்தும் தேவையில்லை; யார் அல்லாஹ்வை வணங்குகின்றார்களோ அவர்கள் தங்களுடைய தேவைக்காக ரப்பின் பக்கம் தேவை உள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தி  அந்த ரப்புடைய பயத்தால் அவர்கள் வணங்குகின்றார்கள் ரப்புக்கு தேவை என்பதால் அல்ல. அந்த உள்ளத்திலே அப்படிப்பட்ட எண்ணம் ஏற்பட வேண்டும். ஒரு அடியான் நிலையிலே நிற்கும் போது ருகூவிற்க்கு சுஜூதிற்க்கு செல்லும்போது இப்படி தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஜகாத்தாக, ஹஜ்ஜாக  இப்படி எந்த ஒரு இபாதத்தை செய்தாலும் சரி அடியானுடைய உள்ளத்திலே என்னுடைய ரப்பு மகத்துவமிக்கவன்; அவன் கம்பீரமானவன்; அர்ஷுடைய அதிபதி; அவனுக்கு என்னுடைய தேவையில்லை; எனக்கு அவனுடைய தேவை இருக்கின்றது. நான் ஒரு சாதாரணமான அடிமை; நான் ஒரு ஃபகீர் அல்லாஹ்வின் பக்கம் தேவை உடையவன். பதவியிருக்கலாம்; வசதி இருக்கலாம்; உலகத்தின் செல்வம் இருக்கலாம்; இப்படி ஒரு மனிதனிடத்தில் எது இருந்தாலும் சரி அவன்  அல்லாஹ்வின் முன்னிலையிலே அவன் ஒரு சாதாரண அடிமை. 
 
தான் அடிமை என்கிற பணிவும் நான் அல்லாஹ்வின் பக்கம் தேவை உள்ளவன் என்ற அந்த உணர்வும் ஓர் அடியானுக்கு வரவில்லையென்றால் அவன் முஃமினாகவே முடியாது. அல்லாஹு தஆலா கூறுகின்றான்;
 
لَا جَرَمَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ
 
நிச்சயமாக அல்லாஹ் அவர்கள்மறைத்துக் கொள்வதையும் (அதற்குமாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான்என்பதில்ஒருசந்தேகமுமில்லை. நிச்சயமாக அவன் கர்வம் கொண்ட (இ)வர்களை விரும்புவதில்லை. (அல்குர்ஆன் 16 : 23)
 
யாருடைய உள்ளத்திலே பெருமை இருக்குமோ அது கல்வியால் இருக்கட்டும்; செல்வத்தால் இருக்கட்டும்; பதவியால் இருக்கட்டும்; அழகினால் இருக்கட்டும்; இந்த உலக வஸ்துக்களில் எதைக்கொண்டு இருந்தாலும் சரி; ஒரு மனிதனுடைய உள்ளத்திலே தான் என்ற பெருமை இருக்குமேயானால் அல்லாஹ்விற்கு முன்னால் பணிகின்ற அந்த பணிவு இல்லை என்றால் அல்லாஹுத்தஆலா அவனுடைய ஈமானை ஏற்றுக்கொள்வது இல்லை.
 
ஈமான் என்பது இஸ்லாம் என்பது தனது ரப்புக்கு முன்னால் பணிந்து நான் ஒன்றுமே இல்லை என் இறைவா! எனக்கு நீதான்; உன்னை கொண்டுதான் எனக்கு எல்லாம்; லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் -நான் எந்த நன்மையும் செய்ய முடியாது நான் எந்த தீமையில் இருந்தும் என்னை பாதுகாக்க முடியாது உன்னுடைய அருளைக் கொண்டே தவிர; எல்லா நிலையிலும் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இப்படிப்பட்ட ஒரு தாழ்மை உணர்வு அல்லாஹ்வுக்கு முன்னால் அடியான் தன்னுடைய தலையை தாழ்த்தியவனாக, தன்னுடைய ரப்பை உயர்ந்தவனாக,  தன்னை தேவை உள்ளவனாக தன்னுடைய ரப்பை தேவையற்றவனாக, தன்னைப் பணிந்தவனாக தன்னுடைய ரப்பை கண்ணியமானவனாக கம்பீரமானவனாக உணர்ந்து அந்த ஈமானிய எண்ணம் அவருடைய உள்ளத்திலே தரிப் பட்டிருக்க வேண்டும்; எப்போதும் நீடித்திருக்க வேண்டும். 
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹு தஆலா நபிமார்களின் வாழ்க்கையை  நமக்கு உதாரணமாக சொல்லிக் காட்டுகின்றான். ஒவ்வொரு நபியும் அல்லாஹ்விற்கு முன்னால் எப்படி பணிந்தார்கள்; எப்படி அவர்கள் அழுதார்கள்; அவர்களுடைய ஒவ்வொரு துவாவை அல்லாஹுத்தஆலா நமக்கு சுட்டிக்காட்டுகின்றான். இன்று பலருக்கு பல கேள்விகள்  இருக்கலாம்; உள்ளத்திலே நாமும் துவா கேட்கின்றோம்; நபிமார்களும் துவா கேட்டார்கள்; நல்லவர்களும் துவா கேட்டார்கள்; அவர்களுடைய துவாக்கள் அங்கீகரிக்கப்பட்டன; அந்த துஆக்களூக்கு வானத்தில் இருந்து பதில் வந்தது; ஆனால். நம்முடைய துஆக்களுக்கு வானத்திலிருந்து பதில் வருவதில்லையே! நம்முடைய துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லையே! 
 
அன்பு சகோதரர்களே! துஆ கேட்கக்கூடிய நேரத்தில் நபிமார்கள் இடத்தில் இருந்த பணிவு பயம். குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்படக்கூடிய  ஸாலிஹீன்களுடைய  அந்த துஆவிலே அவர்களுடைய அமல்களிலே சொல்லப்பட்டதை பார்க்கின்றோம். இன்று நம் உள்ளத்திலே பெருமை ஒட்டிக் கொண்டே இருக்கின்றது; ஏதாவது ஒரு வகையில், ஏதாவது ஒரு காரணத்தில், நான் என்ற ஒரு ஆணவம் தனக்கென்று ஒரு கண்ணியம் இருப்பதாக எனக்கென்று ஒரு மதிப்பு என்கிற எண்ணங்கள், இது எந்த அளவு நம்மை மோசமாக்கி விடுகிறது என்றால் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்; அல்லாஹ்விற்கு முன்னால் வந்து நிற்கும்போது கூட, ருகூ சுஜூது செய்யும் போது கூட அவன் தன்னை ஒரு அடிமையாக ரப்புடைய சாதாரண ஒரு அடிமையாக அவன் உணர முடியாமல், அந்த உணர்வு எண்ணம் கூட அவனுக்கு வராமல் அவனை தடுத்து விடுகின்றது. 
 
மூசா அலைஹிவசல்லம் அவர்களுடைய துவாவை அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்; களைத்தார்கள்; பயணித்தார்கள்; இறுதியிலேயே அல்லாஹ்விடத்திலே அவர்கள் மன்றாடுகிறார்கள்; முறையிடுகிறார்கள்;  
 
رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
 
என்இறைவனே! எதை நீ எனக்குத்தந்த போதிலும் நிச்சயமாக நான் அதை விரும்பக்கூடியவனாகவே இருக்கிறேன். (அல்குர்ஆன் 28 : 24)
 
இன்று யாராவது நம்மில் ஃபக்கீர் என்ற பெயரை சொல்வதற்கு தயாராகுவோமா? நம் செல்வம் நமக்கு நினைவுக்கு வரும்; நம்முடைய பதவி நமக்கு நினைவுக்கு வரும்; நமக்கு மக்களிடத்திலே இருக்கக்கூடிய கௌரவம் அந்தஸ்து நமக்கு நினைவுக்கு வரும்; அல்லாஹ் பேசிய ஒரு நபி அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ரசூல் அவர்கள் சொல்கிறார்கள்; என் இறைவா! அந்த ரப்பு என்ற வார்த்தையை சொல்லும் போது நபிமார்களின் வார்த்தையை கேளுங்கள்; குர்ஆனிலே ஒவ்வொரு துஆவின் ஆரம்பத்திலும் ரப்பி எனது எஜமானனே! எனது அரசனே! என்னுடைய இறைவனே! எனது இரட்சகனே! என்ற அந்த பயமும் அச்சமும் ஆதரவும் பணிவும் கலந்தது தான் தேவை உள்ளவன்; இந்த துவா இல்லை என்றால் இந்த துஆ அங்கீகரிக்கவில்லை என்றால், நான் நஷ்டம் அடைந்து விடுவேன்; அவன் என் கையைப் பிடித்து கரம் பிடித்து காக்கவில்லை என்றால் நான் அவ்வளவுதான் அழிந்து நாசமாகி விடுவேன். 
 
ஆதம் அலைஹி வஸ்ஸலாம் சொன்னார்கள்; 
 
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
 
இறைவா! நீ எங்களை மன்னிக்கவில்லை என்றால் நீ எங்கள் மீது கருணை காட்டவில்லை என்றால் நாங்கள் நஷ்டம் அடைந்து விடுவோம். (அல்குர்ஆன் 7 : 23)
 
 மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் சொல்கின்றார்கள்; 
 
رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
 
இறைவா! நீ எனக்கு எதை தர போகிறாயோ நன்மைகளை செல்வத்தை என்னுடைய தேவைகள் நிறைவேற்றக்கூடிய அந்த வசதியை பக்கீர் நானொரு தேவை உள்ளவனாக இருக்கின்றேன்.  (அல்குர்ஆன் 28 : 24) 
 
இதைத்தான் மார்க்கத்திலே  الافتقار الى اللهஇஃப்திகாரு இலல்லாஹ் என்று சொல்வார்கள். அடியான் எப்போதும் தன் உள்ளத்திலே அல்லாஹ்விற்கு முன்னால் தன்னை ஒரு ஏழையாக, தேவை உள்ளவனாக, ரப்பின் அருளின் பக்கம், மன்னிப்பின் பக்கம், உதவியின் பக்கம், இரட்சிப்பின் பக்கம், பாதுகாப்பின் பக்கம், ஆதரவின் பக்கம், தன்னை தேவை உள்ளவனாக அந்த உணர்வோடு பணிந்து அல்லாஹ்விற்கு முன்னால் இருக்க வேண்டும். இது உள்ளத்தின் பெரிய இபாதத் . உள்ளத்தின் மிகப்பெரிய வணக்கம்; இது உள்ளத்திற்கு உண்டான சோதனை; இந்த உள்ளம் அல்லாஹ்வை விட்டு விலகினால், அல்லாஹ்வை விட்டு தேவையற்றதாக கருதினால் அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும்; அவர்கள் அபூஜஹ்லை போல, அபூலஹபை போல அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்;
 
أَنْ رَآهُ اسْتَغْنَى (7) إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى
 
தன்னை அல்லாஹ்விடமிருந்து தேவையற்றவனாக அவன் கருதினான். (அல்குர்ஆன் 96 :7-8) 
 
அபூஜஹல் உடைய அந்த தீய எண்ணத்தை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். 
 
நல்லவர்களுக்கு அபூபக்ர் உடைய ஈமானை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
 
فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى (5) وَصَدَّقَ بِالْحُسْنَى (6) فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى
 
ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து,  (இந்தமார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ,அவருக்கு சொர்க்கப்பாதையை நாம் எளிதாக்கித்தருவோம். (அல்குர்ஆன் 92 : 5-7)
 
அபூஜஹல் அபூலஹப் என்ற கொடிய காஃபிர்கள் இடத்திலிருந்த மூன்று குணங்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; 
 
1.  ஒன்று சத்தியத்தை ஏற்க மறுப்பது சத்தியத்தைப்  பொய்பிப்பது. 
 
2.  தன்னை தேவையற்றவனாக  கருதுவது; தன்னை அல்லாஹ்வின் அருளில் இருந்து தேவையற்றவன் ஆக தன்னை கருதுவது. 
 
3.  தன்னை பெரியவனாக கருதுவது. 
 
இவர்களுக்கு நரகத்தின் பாதையை தான் நாம் லேசாக்கி கொடுப்போம் என்று அல்லாஹ்  சொல்கின்றான்.
 
இமாம் இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், இந்த இஃப்திகாரு இலல்லாஹ் அல்லாஹ்வின் பக்கம் தேவை ஆகுவது என்றால் என்ன? அவனுடைய உள்ளம் ஒரு பக்கீர் உடைய உள்ளமாக அல்லாஹ்வின் பக்கம் எந்தநேரமும் பணிந்து பயந்து ஆதரவோடு யா அல்லாஹ்! எனக்கு சக்தி எல்லாம் உன்னை கொண்டுதான்; நீதான் கொடுப்பவன்; நீ கொடுத்தால் யாரும் தடுக்க முடியாது; நீ தடுத்தால் யாரும் கொடுக்க முடியாது; மக்கள் எல்லாம் சேர்ந்து எனக்கு கண்ணியத்தை கொடுக்க நினைத்தால்   நீ நினைக்கவில்லை என்றால் கொடுக்க முடியாது; மக்கள் எல்லாம் சேர்ந்து என்னை இழிவுபடுத்த நினைத்தால் நீ நினைக்கவில்லை என்றால் நீ கண்ணியப்படுத்த நினைத்தால் என்னை யாரும் இழிவு படுத்த முடியாது.  
 
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
 
(நபியே! பிரார்த்தித்து) கூறுவீராக: ‘‘எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கிவிடுகிறாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகிறாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன்கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய். (அல்குர்ஆன் 3 : 26)
 
இமாம் இப்னுல் கையூம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கின்றார்கள்; தன்னை ஒரு பக்கிராக, அல்லாஹ்வின் பக்கம் தேவை உள்ளவனாக கருதுவது என்றால் என்ன? நீ உனக்காக இருக்கக்கூடாது; உனக்காக எதுவும் இருக்கக்கூடாது; எல்லாம் அல்லாஹ்விற்காக இருக்க வேண்டும்; நீ அப்படி உன்னை உனக்காக கருதிக் கொண்டால், உனக்காக ஒரு தேவையை அல்லாஹ்வுடைய தேவையைவிட தேர்ந்தெடுத்தவனாக இருந்தால் நீ அல்லாஹ்வுடைய ஆட்சியிலே போட்டி போடுகின்றாய்;  அல்லாஹ்விடத்தில் தேவையற்றவனாக கருதுகின்றாய்; இது அல்லாஹ்வின் பக்கம் தேவையாகுதல் என்ற அந்த ஏழ்மை தன்மைக்கு எதிரான ஒன்று.  ஏழ்மை தன்மை என்றால் என்ன எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவனாக கருதுவது. தன்னுடைய உள்ரங்கமான வெளிரங்கமான எல்லா காரியத்திலும் தான் அல்லாஹ்வின் பக்கம் முழுமையான தேவையானவன் என்பதை உணர்வது; இப்படிப்பட்ட நிலை ஒரு அடியானுக்கு வரவேண்டும். இந்த நிலையைத்தான் அல்லாஹ் சுபஹானஹு தஆலா நமக்கு உணர்த்துகின்றான்;
 
ஒவ்வொரு நாளும் ஓதுகிறோம்; தொழுகையிலும் ஓதுகின்றோம்; அல்லாஹ்விடத்தில் இதைக் கூறுகின்றோம்; ஆனால் இதை உணர்ந்தவர்களாக கூறுகின்றோமா? இதன் தத்துவத்தை இதனுடைய ஆழ்ந்த ஞானத்தைப் புரிந்தவர்களாக அதை வாழ்க்கையிலேயே செயல்படுத்தி கூறுகின்றோமா? நாம் சிந்திக்க வேண்டும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (162) لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ
 
நபியே! நீங்கள் சொல்லுங்கள்; என்னுடைய தொழுகை, என்னுடைய அமல்கள், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய மரணம், நான் இந்த உலகத்தில் வாழ்வதும் சரி, நான் இந்த உலகத்தில் மரணிப்பதும் சரி, லில்லாஹி ரப்பில் ஆலமீன். அகிலங்களின் இறைவனாகிய அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்விற்கு தான். அவனுக்கு எந்த இனையும் இல்லை.அவனுடைய ஆட்சியில் அவனுடைய அதிகாரத்தில் அவன் வணங்கப்படுபவன் என்ற அந்த உளூஹியத்திலே அவனுக்கு இணை துணை இல்லாதது போன்று நான் என்னை அவனுக்கு முழுமையாக சமர்ப்பித்து விடுகின்றேன். (அல்குர்ஆன் 6 :1 62-163)
 
என்னுடைய தலையிலிருந்து உள்ளங்கால் வரை என்னுடைய ஒவ்வொரு அசைவுகளும் அல்லாஹ்வுடைய திருப்திக்காக செயல்படுவேன். உலக மக்கள் எல்லாம் என்னை ஒரு விஷயத்தைக் கொண்டு அச்சுறுத்தினாலும் என்னுடைய ரப்பு உடைய கட்டளையாக இருக்குமேயானால் உலக மக்களின் அச்சுறுத்தல் எல்லாம் என் உள்ளத்தை தடுமாற செய்யாது. 
 
என்னுடைய ரப்பு என்னுடைய எஜமானனுக்கு ஒன்று பிடிக்குமேயானால் உலக மக்களெல்லாம் அதைப் பிடிக்காமல் இருந்தால், உலக மக்களெல்லாம் என்னை அதிலிருந்து திருப்ப நினைத்தாலும் என்னுடைய ரப்பிற்காக நான் அதை செய்தே தீருவேன். உலக மக்கள் எல்லாம் ஒரு விஷயத்தை செய்யும்படி என்னைத் தூண்டுகிறார்கள்; ஆர்வம் ஊட்டுகிறார்கள்; ஆனால் அது என்னுடைய ரப்பிற்கு வெறுப்பானதாக என்னுடைய ரப்பிற்குப் பிடிக்காததாக இருக்குமேயானால் நான் எக்காரணத்தைக் கொண்டும் அதன் பக்கம் நெருங்கவே மாட்டேன். 
 
அன்பு சகோதரர்களே! இதுதான் ஒரு அடியான் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவனாக அல்லாஹ்வை பயந்தவனாக பணிந்தவனாக இருக்கின்றான் என்பதற்கு உரிய அடையாளம். இதைத்தான் அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்.
 
அல்லாஹ்விற்கு முன்னால் நமது பணிவை நாம் வெளிப்படுத்தி அதன் மூலம் நாம் வாழ்க்கை எல்லாம் அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்தவர்களாக  தேவை உள்ளவர்களாக நாம் வாழ்வதற்குரிய மிகப்பெரிய பயிற்சி இந்த தொழுகை.  
 
إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ
 
நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். (அல்குர்ஆன் 29 : 45)
 
இந்தத் தொழுகை அடியானுக்கு மிகப்பெரிய ஒரு தர்பியா மிகப்பெரிய பயிற்சி. ஆனால் இன்று எப்படி? நம் முன்னோர்களின் கூற்றுகளில் சொல்லப்படுகின்றது. தொழக் கூடியவர்கள் அதிகமாகி விட்டார்கள் உள்ளச்சம் உடையவர்கள் எங்கே? என்பதாக. பள்ளிகளில் கூட்டம் அதிகமாகிவிட்டது; ஆனால் அதில் உள்ளச்சத்தோடு தொழக்கூடியவர்களை காணமுடியாது என்று அந்த நிலையை தான் இன்று நாம் பார்க்கின்றோமா என்று கவலைப்படக் கூடிய நிலையிலே நாம் இருக்கின்றோம். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒவ்வொரு துஆக்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்; எப்படிப் பணிந்து பயந்து தன்னை ஒரு சாதாரண அடிமையாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தன்னை எப்போதும் ஒரு அடிமையாக அபுது அபுது  என்று கூறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இன்று நமக்கு பட்டங்களையும் புகழ்களையும் சேர்த்து கூறப்படவில்லை என்றால்  எழுதப்படவில்லை என்றால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் ஷைத்தான் நம்முடைய தலைகளிலே சவாரி செய்ய ஆரம்பித்து விடுகின்றான். 
 
யாஅல்லாஹ்! உனக்காகத்தான் நான் குனிந்தேன். அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கின்ற ஒரு அடியான் எப்படி நிற்க வேண்டும் என்று பாருங்கள். எவ்வளவு பெரியவனாக இருக்கட்டும்; அரசனாக இருக்கட்டும் அல்லாஹ்விற்கு முன்னால் வந்து நின்று அல்லாஹ் தான் பெரியவன் என்று அந்த நினைவைக் கூறி இரண்டு கைகளை ஒரு அடிமை தனது எஜமானனுக்கு முன்னால் கட்டுவதை போன்று பயந்து கட்டிக்கொண்டு தனது தலையை தாழ்த்த வேண்டும் தன்னுடைய புஜத்தை தாழ்த்த வேண்டும். 
 
وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
 
பணிந்தவர்களாக பயந்தவர்களாக எனக்கு முன்னால் நில்லுங்கள். (அல்குர்ஆன் 2 : 238)
 
அவனுடைய தலை தாழ்ந்து இருக்க வேண்டும்; அவனுடைய புஜங்கள் தாழ்ந்து  இருக்க வேண்டும்; அவனுடைய பார்வை சஜ்தாவின் இடத்தை நோக்கி இருக்க வேண்டும்; அங்குமிங்கும் அவனுடைய பார்வை இருக்கக் கூடாது; இப்படி பணிந்து நின்று ஓதவேண்டிய வசனங்களை ஓதி பிறகு ருகூச் செய்கின்றான் குனிகின்றான் ருகூ என்பது அல்லாஹ்விற்கு மிக பிடித்தமான ஒரு அமல் எனவேதான் அல்குர்ஆனிலே பல இடங்களில் அல்லாஹு தஆலா கூறுகின்றான்; 
 
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
 
தொழுகையை கூறும்போது ருகூ செய்பவர்களோடு சேர்ந்து ருகூ செய்யுங்கள் என்று சொல்கின்றான். தொழுபவர்களோடு சேர்ந்து தொழுங்கள்.  (அல்குர்ஆன்  2 : 43)
 
மொத்த தொழுகைக்கும் ருகூ என்பதாக சொல்கின்றான். ருக்கு என்ற வார்த்தையில் இருந்து வரக்கூடிய ரக்ஆத் என்பது ஒரு ராகாத்திலே நிலை இருக்கின்றது ருக்௨ இருக்கின்றது சுஜூது இருக்கின்றது இரண்டு சுஜூத் இருக்கின்றது இப்படிப் பல நிலைகளில் இருந்தும்கூட அந்தத் தொழுகையின் ஒரு அமைப்பிற்கு ருக்௨ என்ற பெயரில் இருந்து வரக்கூடிய  ரக்ஆத்  என்ற அந்த வார்த்தை வைக்கப்பட்டிருக்கின்றது.எனவே இந்த நிலை அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான நிலை. 
 
இந்த உணர்வு இல்லாத காரணத்தால் தான் இன்று பலரால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி குனிந்தார்களோ அப்படி குனிய முடிவதில்லை. குனிகின்றார்கள்; உடனே எழுந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அந்த முதுகை சரி செய்வதில்லை; அந்தப் பணிவு  அங்கே வருவது இல்லை. சில தஸ்பீகளை கூறினோமா உடனே அங்கிருந்து எழுந்து விடுவோம் என்று எழுகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் நிலையிலேயே எவ்வளவு ஓதுவார்களோ அந்த அளவுக்கு ருகூவிலே இருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் நிலையிலேயே சூரத்துல் பகராவை ஓதினார்கள் என்றால் அந்த சூரத்துல் பகராவை  ஓதுகின்ற அளவுக்கு நெருக்கமாக   ருகூவிலே இருப்பார்கள் என்றால் வாழ்நாளிலே என்றாவது ஒரு ருகூ நாம் அப்படி செய்திருக்கின்றோமா?
 
அல்லாஹ்வின் தூதர் அந்த ருக்கூவிலே அல்லாஹ்விற்கு முன்னால் சொல்வார்கள்; 
 
اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي وَعَصَبِي
 
உனக்கு நான் பணிந்து விட்டேன்; உன்னை நம்பிக்கை கொண்டேன்; உனக்கு முன்னால் முற்றிலும் நான் சரண் அடைந்து விட்டேன்; என்னுடைய அனைத்து உடமைகளோடும் நான் உனக்கு முன்னால் வந்து விட்டேன்; என்னுடைய செவி, எனது பார்வை, என்னுடைய அறிவு, என்னுடைய மூளை, என்னுடைய எலும்பு, என்னுடைய நரம்பு எல்லாம் உனக்கு முன்னால் பணிந்து விட்டது. (1)
 
அறிவிப்பாளர்: அலி இப்னு அபூதாலிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 1290 
 
எப்படிப்பட்ட பணிவின் உச்சத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள் பாருங்கள். அல்லாஹ்விற்கு முன்னால் எப்படி பணிய வேண்டும்? தன்னுடைய அறிவு அல்லாஹ்விற்கு பணிய வேண்டும் அல்லாஹ்வுடைய கட்டளையை மீறி சிந்திக்கக் கூடாது; தன்னுடைய சேவை அல்லாஹ்விற்கு பணிய வேண்டும் அல்லாஹ் ஹலாலாக்கியதை  தவிர வேறு எதையும் கேட்கக்கூடாது; தன்னுடைய பார்வை அல்லாவிற்கு பணியவேண்டும் அல்லாஹ் ஹலாலாக்கிய பார்வையை தவிர வேறு எதையும் பார்க்கக்கூடாது; நம்முடைய நரம்பு    நம்முடைய உடல், ரத்தம் அனைத்தும் அல்லாஹ் ஹலாலாக்கியதைத் தவிர எந்த ஒன்றும் அதற்குள் செல்லக்கூடாது. 
 
அன்பு சகோதரர்களே! இந்த பணிவை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விற்கு முன்னால் புகழ்ந்து வெளிப்படுத்துகின்றார்கள்.  
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேலும் சொல்வார்கள்; 
 
தொழுகை உடைய இரண்டு முக்கியமான நிலை, ஒன்று ருக்கூ இரண்டாவது சுஜூத். அடியான் அல்லாஹ்விற்கு முன்னால் தான் ஒரு தேவை உடையவன் தான் ஒரு பக்கீர் யா ரப்பே! உன்னுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து உன்னுடைய அதாபிலிருந்து பயந்து உன்னிடத்திலே வந்திருக்கின்றேன்; உன்னுடைய சொர்க்கத்தின் மீது ஆசை வைத்து வந்திருக்கின்றேன்; உன்னுடைய மன்னிப்பை ஆதரவு வைத்து வந்திருக்கின்றேன்; என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பதற்காக வந்திருக்கின்றேன்; நீ என்னை இரட்சித்து உன்னுடைய  பாதுகாப்பில்லே வைக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கின்றேன்.
 
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْيَقُلْ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ وَإِذَا خَرَجَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْيَقُلْ اللَّهُمَّ اعْصِمْنِي مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ
 
மஸ்ஜிதிற்க்கு வரும்போது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிஸ்மில்லாஹ் கூறி, சலவாத்து கூறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து,
 
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
 
பிறகு மஸ்ஜிதில் இருந்து வெளியேறினால் அல்லாஹ்விடத்திலேயே அவனுடைய அந்த அருளை கேட்டவர்களாக,
 
اللَّهُمَّ اعْصِمْنِي مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ
 
பொருள்: யா அல்லாஹ்! உன்னுடைய பாதுகாப்பிலிருந்து உன்னுடைய பாதுகாப்பு நிறைந்த இடத்திலிருந்து இப்போது நான் என்னுடைய தேவைகளுக்காக செல்கின்றேன்; யா அல்லாஹ்! ஷைத்தானிடமிருந்து என்னை பாதுகாப்பாயாக! சைத்தானின் வலைகளில் சிக்குகின்ற அந்த பரிதாப நிலையிலிருந்து என்னை பாதுகாப்பாயாக! என்று துவா செய்து விட்டு செல்லுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டுகிறார்கள். 
 
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா, எண்: 773
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்பித்தார்கள்;
 
فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ
 
ருக்கூவிலே நீங்கள் அல்லாஹ்வை மகத்துவம் மிக்கவனாக கண்ணியப்படுத்துங்கள். எவ்வளவு கண்ணியப்படுத்த முடியுமோ, எந்த அளவு நம்மை தாழ்த்திக் கொள்வோமோ? அந்த அளவு அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டும். ஒரு ராஜாவிற்கு முன்னால் ஒரு பெரிய பதவி உள்ளவருக்கு முன்னால் நீங்கள் நிற்கிறீர்கள்; அவர் கண்ணியமானவர்; பதவிக்கு தகுந்தவர்; பயப்படப்பட வேண்டியவர் என்று நீங்கள் பயந்து இருந்தால் அவருக்கும் முன்னால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நேரடியாக நேருக்குநேர் கண் பார்த்துக்கொண்டு திமிராக ஆணவமாக நிற்க முடியுமா? கண்டிப்பாக ஒருத்தரும் நிற்க மாட்டான்.
 
அவர் மதிப்பு மிக்கவர் என்பதை வெளிப்படுத்துவதற்காக முதலாவதாக அவருக்கு முன்னால் தன்னை அப்படியே  பணிய வைப்பார். அவருடைய பார்வையிலே பணிவு தெரியும்; அவருடைய பேச்சிலே பணிவு தெரியும்; அவருடைய அசைவுகளிலே பணிவு தெரியும்; அவர் நிற்கின்ற அந்த நிலையிலேயே பணிவு தெரியும்.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வை விட யார் கண்ணியமானவன்? அவனை விட மிகப்பெரிய அதிகாரத்திற்கு கம்பீரத்திற்கு உரியவர்கள் யார்? அல் ஜலில், அல் முத்தக்கப்பீர், அல் முத்தஆல், அல் கஹ்ஹார்.  
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; நீங்கள்  ருக்கூவிலே அல்லாஹ்வை  தஃழீம் செய்யுங்கள். எனவேதான் ருகூவில் இருக்கும் போது சுப்ஹான ரப்பியல் அழீம் மகத்துவமிக்க என்னுடைய ரப்பை நான் தஸ்பீஹ் செய்கின்றேன். பிறகு சொன்னார்கள்; ஸுஜூதில் இருக்கும் போது அதிகம் துஆ செய்யுங்கள்; அந்த துஆ   உங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். 
 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, நூல்: முஸ்லிம், எண்: 772
 
ஸுஜூது செய்யும் பொழுது முழுக்க முழுக்க ஒரு அடியான் தன்னுடைய நெற்றியை பூமியிலே வைத்து விடுகின்றான்; தன்னுடைய முழு உறுப்புகளையும் தரையிலே வைத்து விடுகின்றான்; சுப்ஹான ரப்பியல் அஃலா என்னுடைய மிக மிக உயர்ந்த என்னுடைய ரப்பு மிகப் பரிசுத்தமானவன். 
 
அன்பு சகோதரர்களே! இப்படிப்பட்ட பணிவு அடியானுடைய உள்ளத்திலே எப்பொழுதும் இருக்க வேண்டும்; செல்வத்தில் இருந்தாலும் இருக்கவேண்டும்; வறுமையில் இருந்தாலும் இருக்க வேண்டும்; மகிழ்ச்சியிலும் இருக்க வேண்டும்; கவலையிலும் இருக்க வேண்டும்; சுகத்திலும் இருக்கவேண்டும்; நோய்நொடிகளிலும் இருக்கவேண்டும். இப்படி எந்த நிலையிலும் என்னுடைய ரப்பின் பக்கம் தான் நான் தேவை உடையவன், அவனுடைய அருளுக்கு அன்புக்கு ஆதரவுக்கு கருணைக்கு மன்னிப்புக்கு நான் தேவை உள்ளவன், என்ற  இஃப்திகாருடைய நிலை நமக்கு ஈமானிய ருசியைத் தரும். அல்லாஹ்வை நம்மோடு நெருக்கமாக்கும். 
 
அல்லாஹ் சுபஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த நல்ல தன்மையை நசீப் ஆக்குவானாக! பெருமையில் இருந்தும், ஆணவத்தில் இருந்தும், ஒவ்வொரு தீமையில் இருந்தும்,  கெட்ட குணத்தில்  இருந்தும் என்னையும் உங்களையும் ஒவ்வொரு முஸ்லிமையும் பாதுகாப்பானாக! அல்லாஹ் விரும்பக்கூடிய நற்குணங்களை கொண்டு நம்மை அலங்கரிப்பானாக! அல்லாஹ் வெறுக்கக்கூடிய, அல்லாஹ் தடுத்த ஒவ்வொரு தீய குணத்திலிருந்தும்  அல்லாஹ் நம்மை பரிசுத்தப்படுத்துவானாக!
 
                    ஆமீன்
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
1290 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا يُوسُفُ الْمَاجِشُونُ حَدَّثَنِي أَبِي عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ قَالَ وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنْ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ وَإِذَا رَكَعَ قَالَ اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي وَعَصَبِي وَإِذَا رَفَعَ قَالَ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ وَإِذَا سَجَدَ قَالَ اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ ثُمَّ يَكُونُ مِنْ آخِرِ مَا يَقُولُ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
 
و حَدَّثَنَاه زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ح و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا أَبُو النَّضْرِ قَالَا حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ عَمِّهِ الْمَاجِشُونِ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ الْأَعْرَجِ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ كَبَّرَ ثُمَّ قَالَ وَجَّهْتُ وَجْهِي وَقَالَ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ وَقَالَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ وَقَالَ وَصَوَّرَهُ فَأَحْسَنَ صُوَرَهُ وَقَالَ وَإِذَا سَلَّمَ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ إِلَى آخِرِ الْحَدِيثِ وَلَمْ يَقُلْ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/