HOME      Khutba      அல்லாஹ்வின் பக்கம் ஆர்வப்படுவோம்! | Tamil Bayan - 584   
 

அல்லாஹ்வின் பக்கம் ஆர்வப்படுவோம்! | Tamil Bayan - 584

           

அல்லாஹ்வின் பக்கம் ஆர்வப்படுவோம்! | Tamil Bayan - 584


بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வின் பக்கம் ஆர்வப்படுவோம்!
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்லாஹு தஆலாவை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை கொண்டு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம் அனைவரையும் அவனை அஞ்சிகொண்ட, அவனுடைய திருப்பொருத்தத்தை தேடக்கூடிய, அவன் பக்கம் ஆசை உள்ள, அவனுடைய திருமுகத்தை பார்க்கக்கூடிய, ஆர்வமும், தேட்டமும் உள்ள நல்லோர்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
 
இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு இன்பம் உண்டு. அந்த இன்பம் அவர் அவருடைய விருப்பத்தை பொருத்ததாக இருக்கலாம். ஒவ்வொருவரும் ஒரு பொருளை, அல்லது ஒரு காரியத்தை, அல்லது ஏதாவது ஒரு விஷயத்தை தேடக்கூடியவராக இருப்பார்.
 
நாம் விரும்பக்கூடிய அனைத்திலும் மிக மிக முக்கியமானது மிக மிக சிறந்தது, உயர்ந்தது, ஈடு இணையற்றது, நிகரற்றது, அல்லாஹ்வுடைய பொருத்தம். அல்லாஹ்வுடைய அன்பு, அல்லாஹ்வை பார்க்க வேண்டும், அந்த சந்திக்கின்ற நாளில் அல்லாஹ் என் மீது திருப்தி கொண்டவனாக இருக்கின்ற நிலையில் அவனுடைய திருமுகத்தை நான் காண வேண்டும்.
 
அல்லாஹ்வின் சந்திப்பை ஆசை வைப்பதைவிட, அல்லாஹ்வுடைய திருமுகத்தை பார்க்கவேண்டும் என்ற அந்த இன்பத்தை விட வேறு ஒரு இன்பம் இந்த உலகத்திலே இருக்க முடியாது. இந்த உலகத்தில் எதையெல்லாம் நாம் தேடுகின்றோமோ அதுவெல்லாம் ஒரு அற்பமான ஒன்று. அழிந்து விடக்கூடிய ஒன்று.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னர்கள்;
 
عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُبِّبَ إِلَيَّ مِنَ الدُّنْيَا النِّسَاءُ، وَالطِّيبُ، وَجُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ» (مسند أحمد14037 - ) 
 
இந்த துன்யாவில் எனக்கு பெண்கள் விருப்பமாக்கப்பட்டிருக்கிறார்கள் ஆனால் என்னுடைய கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்கின்றது என்று கூறியதிலிருந்து நாம் புரிந்துக் கொள்ளலாம்.
 
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 14037
 
காரணம் என்ன? அந்த தொழுகைதான் அல்லாஹ்விற்கும் நமக்கும் இடையில் உண்டான இந்த உலகத்திலே மிகப்பெரிய ஒரு உறவு. ஒரு அடியான் தொழுகையில் நிற்கும் பொழுது அல்லாஹ்விடத்திலே அவன் பேச ஆரம்பித்து விடுகின்றான்.
 
இந்த உலகத்திலே நாம் துன்யாவுடைய பல வேலைகளிலே மூழ்கி நம்முடைய எண்ணங்களை சிதறடித்து வைத்திருக்கின்றோம். நம்முடைய உள்ளத்தின் ஆசைகளை இந்த உலக வஸ்துக்கள், உலக மோகங்களின் மீது நாம் பரப்பி வைத்து இருக்கின்றோம். 
 
நாம் ஒவ்வொருவருடைய தேடலும் ஒவ்வொருவருடைய இன்பமும் அவர் எந்த துறையில் இருக்கின்றாரோ அதில் இருக்கும். சிலருக்கு அரசியலில் இருந்தால் பதவியின் மீது, பொருள் சம்பாதிக்கின்ற வியாபாரத்தில் இருந்தால் காசு, பணம், வியாபாரத்தில் முன்னேறுவதின் மீது ஆசை இருக்கும். 
 
இப்படி உலகத்திலே நாம் நம்முடைய இந்த உள்ளத்தை உலக வஸ்துகளுக்கு பறிகொடுத்துவிட்டு இந்த உள்ளத்தை அல்லாஹ்விற்கு கொடுப்பதற்குரிய இடமற்றதாக வைத்திருக்கின்றோம். அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும். 
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா அன்பு என்ற ஒன்றை படைத்து இருக்கின்றான். இது முதன்முதலாக அல்லாஹ்விற்கு கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த ஆசைக்கு “ஷவ்க் -ஆர்வம்.” என்று சொல்வார்கள்.
 
நீங்கள் வளர்க்கின்ற ஒரு பிராணி உங்களை பார்க்கவில்லை என்றால், அதற்குக் கூட உங்களை பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை, ஒரு தேடல் இருக்கும். நீங்கள் வந்துவிட்டால் அதற்கு ஒரு மகிழ்ச்சி, ஒரு சந்தோசம், ஒரு குதூகலம் இருக்கும்.
 
இது போன்ற ஒரு நிலை தான் பிரிந்திருக்கக்கூடிய எல்லோருக்கும் இருக்கும்.
 
இப்படியான இந்த ஷவ்க் –ஆர்வம், அன்பு இது அல்லாஹ்வுக்கு முழுமையாக கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. ஆர்வம், ஆசை, உள்ளத்தின் தேடல், உள்ளத்தின் அந்தத் துடிப்பு  இது அல்லாஹ்விற்கு முழுமையாக கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. முதன்முதலாக அல்லாஹ்விற்கு தான் இதை நாம் பரிசுத்தமாக கொடுக்க வேண்டும்.
 
அல்லாஹு தஆலா கூறுகின்றான்;
 
وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ
 
முஃமின்கள் அல்லாஹ்வை நேசிப்பதிலே மிகக் கடுமையாக இருப்பார்கள். மிக உறுதியாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2 : 165)
 
அல்லாஹ்வுடைய நேசத்திற்கு நிகராக எப்படி வணக்க வழிபாட்டில் அல்லாஹ்வை வணங்குவதில் வேறு யாரையும் அவர்கள் கூட்டாக்க மாட்டார்களோ, இணை வைக்க மாட்டார்களோ அதுபோன்றுதான் அல்லாஹ்வை நேசிப்பதிலே. அல்லாஹ்வுடைய அந்த அன்பில் வேறு யாரையும் அவர்கள் கூட்டாக்க மாட்டார்கள்.
 
அல்லாஹு தஆலா இதையும் அல்குர்ஆனில் பல இடங்களில் தெளிவுபடுத்தி சொல்கின்றான்.
 
இன்று நம்முடைய பிரச்சினைகள், உள்ளத்தின் நோய்கள், நம்முடைய மன உளைச்சல்கள், இன்னும் இப்படி உள்ளம் சார்ந்த எத்தனையோ நோய்கள், அதைத்தொடர்ந்து பிறகு உலகப் பிரச்சனைகள் அனைத்திற்கும் இதை காரணமாக கூறலாம்.
 
பல காரணங்களை கூறலாம். அதில் மிக முக்கியமான காரணம் இந்த உள்ளத்தை அல்லாஹ்வைத் தவிர பிறருக்கு நாம் பறிகொடுத்துவிட்டு, நம்முடைய ஆசையை பிறர் மீது வைத்துவிட்டு, அதை இழந்ததற்காக அல்லது அந்த இழப்பிற்காக நாம் வருந்தி கொண்டிருக்கின்றோம்.
 
அல்லாஹ்வின் மீது அந்த அன்பை வைத்து இருப்போமேயானால் அல்லாஹ் சுபஹானஹு தஆலா நம்மை மிக உயர்ந்த பதவிகளை கொண்டு கண்டிப்பாக உயர்த்தி இருப்பான்.
 
இந்த அல்லாஹ்வின் மீது வைக்கும் அன்பு, நேசம், ஷவ்க், ஆசை, தேடல் இதைப்பற்றி அல்குர்ஆனிலும் அல்லாஹ் கூறுகின்றான்; ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தங்களது ஹதீஸ்களிலே கூறியிருக்கின்றார்கள். கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள், தாபியீன்கள், தபவுத்தாபியீன்களும் தங்களுடைய கூற்றுகளில் இதை நமக்கு விவரித்து இருக்கின்றார்கள்.
 
மூஸா அலைஹிவஸ்ஸலாத்து வஸ்ஸலாம் தங்களுடைய சமுதாயத்தை எல்லாம் விட்டுவிட்டு அவர்கள் தாமதமாக வந்து கொண்டிருக்க குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக ஓடோடி விரைந்து வருகின்றார்கள். அல்லாஹு தஆலா கேட்கின்றான்,
 
وَمَا أَعْجَلَكَ عَنْ قَوْمِكَ يَامُوسَى (83) قَالَ هُمْ أُولَاءِ عَلَى أَثَرِي وَعَجِلْتُ إِلَيْكَ رَبِّ لِتَرْضَى
 
(மூஸா தூர் ஸீனாய் மலைக்கு விரைந்து வந்த சமயத்தில், அவரிடம்) ‘‘மூஸாவே! நீர் உமது மக்களை விட்டுப் பிரிந்து இவ்வளவு அவசரமாக ஏன் வந்தீர்?'' (என்று இறைவன் கேட்டான்).
அதற்கவர் ‘‘அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே! நீ திருப்திபடுவதற்காக அவசர அவசரமாக (முன்னதாகவே) உன்னிடம் வந்தேன்'' என்று கூறினார். (அல்குர்ஆன் 20 : 83,84)
 
என் இறைவா! நீ என்னை பொருந்தி கொள்ள வேண்டும். உன்னுடைய மகிழ்ச்சி எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வளவு அவசரமாக ஓடோடி வந்தேன் என்று.
எந்த நபியிடம் அல்லாஹ் நேரடியாக பேசினானோ, யாரை தன் அன்பிற்கு தேர்ந்தெடுத்தானோ அந்த நபிக்கு அல்லாஹ்வின் மீது உண்டான பாசத்தைப் பாருங்கள்.
 
அல்லாஹு தஆலா குறித்த அந்த நேரத்தை விட ஓடோடி வந்து அல்லாஹ்விற்கு முன்பு நின்று கொண்டு, ரப்பே! நான் இவ்வளவு சீக்கிரம் ஏன் ஓடிவந்தேன் தெரியுமா? இவ்வளவு அவசரமாக ஏன் வந்தேன் தெரியுமா?  நீ என்னை கொண்டு திருப்தி அடைய வேண்டும்; உன்னுடைய மகிழ்ச்சி, உன்னுடைய திருப்தி எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் ஓடி வந்தேன் என்று கூறுகின்றார்கள்.
 
இதற்குத் தான் الشوق الى الله அல்லாஹ்வின் பக்கம் ஆர்வம் கொள்ளுதல், அல்லாஹ்வின் பக்கம் உள்ளத்தின் தேடல் மிகைத்து விடுதல், அன்பு, பாசம், அந்த நேசம் கலந்த அந்த உயர்ந்த ஒரு தேடலுக்கு சொல்லப்படும்.
 
ஒருமுறை அம்மார் இப்னு யாசீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதில் தொழுதார்கள்; நஃபில் தொழுகையை சுருக்கமாக தொழுதார்கள். தொழுதுவிட்டு திரும்ப செல்லும்போது அவர்களுடைய மாணவர்களில் ஒருவர் அஸ்ஸாஹிக் இப்னு மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கேட்டார்கள் (முஸ்னது அஹ்மது எண் 18325) (1)
 
அம்மார் அவர்களே! இப்போது நீங்கள் தொழுதீர்கள்; ரொம்ப சுருக்கமாக தொழுதுவிட்டு செல்கிறீர்களே? அப்போது அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்; நான் சுருக்கமாக தொழுதேன். ஆனாலும் அந்த சுருக்கமான தொழுத தொழுகையில் நான் ஒரு துஆவை கேட்டேன். எந்த துஆவை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தார்களோ அவர்கள் ஓத நான் கேட்டேனோ அந்த துஆவை இந்த தொழுகையிலே நான் கேட்டேன் என்று கூறுகிறார்கள்.
 
இந்த இடத்தில் ஒரு சிறிய விஷயத்தை நாம் பார்த்து செல்வோம். இன்று பெரும்பாலோருக்கு தொழுகையில் துஆ செய்வது தெரியவில்லை. தொழுகைக்குப் பிறகு நீண்ட நேரம் துஆவில் உட்கார்ந்திருக்கிறார்கள். அது தவறு இல்லை. ஆனால் தொழக்கூடிய அந்தத் தொழுகையின்  நிலை இருக்கின்றதே அது துஆவுக்குண்டான நேரம். நாம் தொழும் தொழுகையில் இரண்டு ரக்அத் தொழுதோமேயானால் நான்கு முறை சஜ்தா செய்கிறோம் .இருப்பில் அத்தய்யியாத்து இவையெல்லாம் துஆவிற்குள்ள மிகப்பெரிய நேரம்.
 
அந்த நேரத்தில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நமக்கு கற்றுக்கொடுத்த துஆக்களை மனப்பாடம் செய்துகொண்டு அதனுடைய அர்த்தங்களை விளங்கிக்கொண்டு நாம் ஓதுவோமேயானால் மிகப் பெரிய நன்மைகளை நாம் அடைந்து கொள்ளலாம்.
இன்று பொதுவாகவே நம் முஸ்லிம் மக்களிடத்தில் மார்க்கத்தை கற்றுக் கொள்வதிலே மிகப்பெரிய சோம்பேறித்தனம் அவ்வளவு அலட்சியம் இருக்கிறது. உலகம் என்று வந்துவிட்டால் நம்மைவிட சுறுசுறுப்பானவர்கள் யாருமே இல்லை. 4 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கும் தயார். இரவு வேலை பார்க்கவேண்டும் என்றால் அதற்கும் தயார். சீசன் நேரங்களில் 12 மணி நேரம் 15 மணி நேரம் நின்று வியாபாரம் செய்ய வேண்டுமென்றால் அதற்கும் தயார்.
 
துன்யாவுடைய லாபத்திற்காக அத்தனையையும் நாம் இழக்க தயார். கொடுக்கத் தயார். சந்திக்க தயார். சாதிக்க தயார். ஆனால் மார்க்க இல்மு என்று வந்துவிட்டால் நம்மை விட கேவலமானவர்கள் யாருமில்லை. அல்லாஹ் பாதுகாப்பானாக! என்னென்ன வார்த்தைகளை சோம்பேறிகளுக்கு அதுபோன்று அலட்சியம் செய்யக்கூடியவர்களுக்கு புறக்கணிக்கக்கூடியவர்களுக்கு சொல்லலாமோ, அத்தனை வார்த்தைகளையும் இன்று சொல்வதாக இருந்தால் பொருத்தமானதாக இருக்கும். 
 
அதிலும் குறிப்பாக கோபித்துக் கொள்ள வேண்டாம். தமிழ் முஸ்லிம்களுக்கு சொல்வதாக இருந்தால் மார்க்க கல்வியின் மீது இந்த தமிழ் முஸ்லிம்கள் காட்டக்கூடிய அலட்சியம் இருக்கின்றதே அந்த புறக்கணிப்பு இருக்கின்றதே அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! என்ன கேட்கின்றார்கள். உங்களுக்கு இந்த துஆ ஒத தெரியவில்லை என்றால் தமிழில் கூட நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். ஜனாசா தொழுகையில் நீங்கள் தமிழில் துஆ செய்து கொள்ளுங்கள். 
 
இதனால் என்ன ஆனது? என்ன கேட்கிறார்கள்? ஏன் தமிழில் துஆ கேட்க கூடாதா? ஸுஜூதில் துஆ கேட்க கூடாதா? நாங்க எங்க மொழியில் கேட்டுக்கொள்கின்றோம். என்னிடத்தில் ஒருவர் இதனை கேட்டார். அப்பொழுது நான் சொன்னேன். நீங்கள் இப்போதுதான் புதிதாக கலிமா சொல்லி இருந்தீர்கள் என்றால் பரவாயில்லை. உங்களுக்கு துஆவை படிப்பதற்கு இன்னும் நேரம் இருந்திருக்காது.
 
லுஹருக்குதான் கலிமா சொல்லி வந்திருக்கிறார். என்ன பண்ணுவது பரவாயில்லை. நீங்கள் தமிழில் கேட்டுக்கொள்ளலாம். வாழ்நாளில் எல்லாவற்றுக்கும் நமக்கு நேரம் இருக்கின்றது. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தொழுகைக்காக நமக்கு கற்றுக்கொடுத்த துஆக்களை மனப்பாடம் செய்வதற்கு மட்டும் நமக்கு நேரமில்லை.
 
தொழுகை என்பது அது ஒரு இபாதத். அதற்கு என்று வாசகங்கள் இருக்கின்றன. அதற்கு என்று ஒழுங்கு முறைகள் இருக்கின்றன. இப்படி எந்த மொழியில் வேண்டுமானாலும் ஓதலாம் என்று நீங்கள் வாசலைத் திறந்தால் ஆதாரமில்லாமல் அதற்குப்பிறகு தொழுகையில் ஃபாத்திஹா சூராவை கையில் எடுப்பீர்கள். அரபியில் ஓதினால் ஒரு இன்ட்ரஸ்டாக இல்லை. தமிழில் நம்ம மொழியில் ஓதினால் கொஞ்சம் நல்ல உணர்வாக இருக்குமே. இப்படி மாற்றி ஓதுதல். இப்படித்தான் சமீபகாலத்திலே ஸ்ரீலங்காவில் ஒரு கூட்டம் வந்தது. குர்ஆனை அப்படியே தமிழிலே மனப்பாடம் செய்துகொண்டு அவர்கள் அல்லாஹு அக்பர் என்பதிலிருந்து சலாம் கொடுக்கின்ற வரை எல்லாவற்றையுமே தமிழிலே ஓதுவார்கள்.
 
அல்லாஹ் மன்னிக்க வேண்டும்! வழிகேட்டிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்! இந்த இபாதத் என்பது குறிப்பாக தொழுகை என்பது அல்லாஹு அக்பர் என்று கூறுவதிலிருந்து அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறுகின்ற வரை குறிப்பிட்ட வாசகங்களை கொண்டு அல்லாஹ்வுடைய தூதரால் வரையறுக்கப்பட்ட ஒன்று.
 
அம்மார் இப்னு யாசிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தையை கவனியுங்கள் நான் இந்த தொழுகையில் துஆ செய்தேன். எந்த துஆவை ஓதினேன் என்று சொல்கிறார்கள்? எதை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓத நான் கேட்டேனோ அந்த துஆவை நான் ஓதினேன் என்று கூறிவிட்டு செல்கிறார்கள்.
 
இங்கேதான் தாபியீன்கள் உடைய ஆர்வத்தை பார்க்கின்றோம். இதைக் கூறிவிட்டு அம்மார் அவர்கள் வேகமாக சென்று விட்டார்கள். ஆனால் மாணவர் சாஹிப் இப்னு யஸித் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்னால் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சொன்னார்கள்; அம்மார் அவர்களே! அது என்ன துஆ? அதை எனக்கு கற்றுத் தாருங்கள். பிறகு அம்மார் இப்னு யாசிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்;
 
اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ
 
அல்லாஹ்வே! நீ மறைவான அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறாய். உன்னுடைய அறிவைக்கொண்டு உன்னிடத்திலே கேட்கின்றேன்
 
وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ
 
படைப்பினங்கள் அனைத்தின் மீதும் சர்வவல்லமை உடையவனாக நீ இருக்கின்றாய். அந்த உன்னுடைய வல்லமையைக் கொண்டு உன்னிடத்தில் கேட்கின்றேன் 
 
أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي
 
யா அல்லாஹ்! என்னுடைய வாழ்க்கை எனக்கு நன்மை என்று நீ அறிந்து இருக்கின்ற வரை என்னை வாழ வை.
 
وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي
 
எனக்கு மரணம் சிறந்ததாக இருக்குமேயானால் என்னை நீ உயிர் கைப்பற்றிக்கொள். 
 
பிறகு சொன்னார்கள்;
 
وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى
 
தர்மம் செய்வதில் வரம்பு மீறாமல் கைகளை இறுக்கி கொள்ளாமல் அது போன்று அனைத்தையும் கொடுத்துவிட்டு பிறகு தானே தேவையாக கூடிய நிலையில் நிற்கின்றது. இந்த இரண்டு நிலைகள் இல்லாமல் நடுநிலையோடு. அதுபோன்று வாழ்வதிலும் செலவழிப்பதிலும் சரி. ஒன்று அனாவசியமாக தேவையில்லாத இடங்களில் செலவு செய்வது; தேவையான இடங்களிலும் தேவைக்கு அதிகமாக செலவு செய்வது; 
 
அதுபோன்று செல்வம் இருந்தாலும் செலவு செய்யாமல் கைகளை இறுக்கிக் கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்வது இப்படியெல்லாம் இல்லாமல் யாஅல்லாஹ்! வறுமையில் இருந்தாலும் செல்வத்தில் இருந்தாலும் நடுநிலையோடு இருக்க கூடிய அந்த நிலையை, அந்த ஒரு நிதான நிலையை சமநிலையை உன்னிடத்திலே கேட்கின்றேன்.
 
எப்பேற்ப்பட்ட அழகான வார்த்தைகளை பாருங்கள். இன்று பல செல்வந்தர்கள் தங்களுடைய செல்வ செழிப்பின் காலத்திலே ஊதாரித்தனமாக அனாவசியமாக செலவு செய்துவிட்டு பிறகு சிரமப்படுவதை பார்க்கின்றோம்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸை பார்க்கின்றோம்
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا عَالَ مَنِ اقْتَصَدَ» (مسند أحمد4269 -)
 
இன்று இந்த இக்திஸாத் என்பதற்கு அரபியில் மொழி பெயர்க்கும் பொழுது எக்கனாமிக் என்று சொல்வார்கள். அது உங்களுக்கு இலகுவாக புரியும்.
 
யார் எக்கனாமிக்காக செலவு செய்கிறார்களோ அவர்கள் ஒருபோதும் பிறரிடம் தேவையுள்ளவராக ஆகமாட்டார்கள். 
 
அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 4269
 
யார் செலவு செய்யும் பொழுது செல்வம் இருந்தாலும் ஒரு நிதானத்தோடு செலவை கொண்டு போவாரோ பிறகு அவர் யார் பக்கமும் தேவையுடையவராக மாட்டார். 
 
சிலரை நீங்கள் பார்க்கலாம். கையில் கொஞ்சம் காசு வந்த உடனே. அவர்கள் இடத்தில் இருப்பது சில லட்சம். ஆனால் பல லட்சத்திற்கு ஓராண்டுக்கு அக்ரிமெண்ட் போட்டு விடுவார். கையிலே இருப்பது சில லட்சம் பல லட்சத்திற்கு ஒரு வீட்டை வாங்கி விடுவார். அல்லது ஆடம்பரமான காரை வாங்கி விடுவார். அல்லது ஆடம்பரமான பொருட்களை வாங்கி குவித்து விடுவார்கள். 
 
சில நாட்கள் கழித்ததற்கு பிறகு உதாரணமாக அவருக்கு ஜாப் போயிடுச்சு. இப்போ அவர் சாப்பிடவேண்டும். மாத செலவு இருக்கின்றது. குடும்பத்திற்கு பிள்ளைகளுக்கு செலவு செய்ய வேண்டும். இப்போது ஆடம்பரமான கார் இருக்கின்றது. ஆடம்பரமான வீடு இருக்கின்றது. பெரிய நிலம் இருக்கின்றது. ஆனால் இப்போது அவர் தன்னுடைய மாதத் தேவைக்கே பிறர் பக்கம் தேவை உள்ளவராக ஆகி விடுகின்றார்.
 
இவ்வளவு பெரிய வீட்டில் இருந்து கொண்டு அவர் யார் இடத்திலாவது சென்று என்னுடைய பிள்ளைக்கு அல்லது என்னுடைய தேவைக்கு என்று கேட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள்? சொல்லுங்கள்.
 
எவ்வளவு அழகாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
 
யார் எக்கனாமிக்காக -நடுநிலையோடு செலவு செய்து கொள்வாரோ அவர் எப்போதும் பிறருடன் தேவை உள்ளவராக ஆக மாட்டார்.
 
அடுத்த வார்த்தையை கவனியுங்கள்;
 
وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَنْفَدُ
தீர்ந்து விடாத அருளை, அருட்கொடையை உன்னிடத்தில் நான் கேட்கின்றேன்.
 
இன்று நிஃமத்துகள் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் அந்த நிஃமத்துக்கு நாம் நன்றி செலுத்தாத காரணத்தினால் அந்த நிஃமத்துகள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விடுகின்றன. அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
 
ஒரு நிஃமத் ஒரு அடியாரிடமிருந்து பறிக்கப்படுகின்றது என்றால் அந்த நிஃமத்திற்கு அவன் நன்றி கெட்டதனமாக நடந்து இருக்கின்றான். அந்த நிஃமத்தை அவன் மதிக்கவில்லை ஒரு நிஃமத்தை நாம் நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமேயானால் அதற்கு நன்றி உடையவராக நாம் இருக்க வேண்டும்.
 
ஆகவேதான் எப்பொழுதுமே அல்ஹம்துலில்லாஹ் என்ற இந்த வார்த்தையை நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே இடைவிடாமல் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்.
 
அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான ஒரு வழியை நமக்கு காட்டிக் கொடுத்துவிட்டார்கள். ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் அதுபோன்று இரவில் தூங்கும்போது இப்படியாக அல்ஹம்துலில்லாஹ் என்ற இந்தத் தூய திருவாசகத்தை நாம் கூறும் பொழுது,
 
அல்லாஹ் நீ எனக்கு கொடுத்த நன்றிக்காக உன்னை நான் புகழ்கின்றேன் என்ற உணர்வோடு அடியான் இந்த அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லும் போது கண்டிப்பாக அந்த நிஃமத்திற்கு அவன் நன்றி செலுத்தியவனாக ஆகிவிடுகின்றான்.
 
அடுத்ததாக சகோதரர்களே! ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்;
 
وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ
 
யா அல்லாஹ்! நீங்கி விடாத கண்குளிர்ச்சியை கேட்கின்றேன். துண்டித்து விடாத அறுபட்டு விடாத கண்குளிர்ச்சியை கேட்கின்றேன்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; தீர்ந்து விடாத நிஃமத்தை உன்னிடம் நான் கேட்கின்றேன்; அருந்து விடாத முடிந்து விடாத கண்குளிர்ச்சியை உன்னிடத்தில் நான் கேட்கின்றேன்; இதில் மிகப்பெரிய ஒரு நீண்ட விரிவான விளக்கம் இருக்கிறது சகோதரர்களே!
 
ஒன்று இன்று நாமெல்லாம் நம்முடைய வியாபாரத்தை குறித்து பயந்து கொண்டிருக்கின்றோம். இந்த மனிதனுடைய சூழ்ச்சிகளால் நடக்கக்கூடிய இந்த பொருளாதாரத்தை குறித்தே பயந்து கொண்டிருக்கின்றோம். ஆனால்,
 
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
 
மேலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.) (அல்குர்ஆன் 65 : 3)
 
தன்னுடைய மவுத் அதற்கு குறிப்பிட்ட நேரத்தை முந்தியும் வந்துவிடாது. தனக்கு முடிவு செய்யப்பட்ட ரிஸ்க்கை வேறு யாரும் பறித்துக் கொள்ளவும் முடியாது. ஆகவே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட மனிதர் இந்த இரண்டையும் குறித்து பயப்படத் தேவையில்லை என்பதாக அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய ஒரு கூற்றை நாம் படிக்கின்றோம்.
 
இந்த நிஃமத்துகள் அதில் குறிப்பாக இந்த கண் குளிர்ச்சி என்பது குடும்பத்தை குறித்து சொல்லப்படும். அல்லாஹு சுப்ஹானஹு தஆலா குடும்பத்தை பற்றி சொல்லும் போது நமக்கு இந்த துஆவை சொல்லிக் தருகிறான்;
 
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
 
யா அல்லாஹ்! எங்கள் மனைவிமார்கள் மூலமாக எங்களுடைய பிள்ளைகள் மூலமாக எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (அல்குர்ஆன் 25 : 74)
 
சகோதரர்களே! ஒரு மனைவி அழகாக இருப்பது கணவனுக்கு கண் குளிர்ச்சி அல்ல. அல்லது பிள்ளைகள் அழகாக அறிவாளிகளாக புத்திசாலிகளாக இருப்பது கண் குளிர்ச்சி அல்ல. அதெல்லாம் ஒரு சாதாரண விஷயம். இந்த உலகத்திலே மாறி வரக்கூடிய, அல்லாஹ் விதித்த ஒரு விஷயம். ஆனால் அவர்கள் ஒழுக்கமானவர்களாக, ஈமான் உள்ளவர்களாக, பெற்றோர்களுக்கு கீழ்ப்படியகூடியவர்களாக, பெற்றோருடைய மனம் நோகாமல் அவர்களுக்கு பணிவிடை செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். 
 
அதுபோன்று பெற்றோர்கள் இந்த பிள்ளைகளின் வணக்க வழிபாடுகளை பார்க்கும் பொழுது அதன் மூலமாக அவர்களுக்கு ஏற்படக்கூடிய அந்த மனபூரிப்பு இதை அல்லாஹு தஆலா அவரிடத்தில் குடும்பத்தின் விஷயத்தில் கேட்கும்படி நம்மிடத்தில் கூறுகின்றான்;
 
இதுதான் உண்மையான கண் குளிர்ச்சி. படித்து பெரிய பட்டதாரியாக ஆகி விடுவதோ அல்லது பெரிய புகழுக்கு சொந்தக்காரனாக பிள்ளைகள் ஆகிவிடுவதோ இது ஒரு தந்தை தாய்க்கு உண்மையான கண் குளிர்ச்சி அல்ல. 
 
உண்மையான கண் குளிர்ச்சி என்ன? அந்தப் பிள்ளைகள் பெற்றோர்களை பார்க்கும் பொழுது பாசத்தோடு பார்ப்பது; அவர்களிடத்தில் பேசும்பொழுது நேசத்தோடு பணிவோடு பேசுவது; அவர்களுக்கு பணிவிடை தேவைப்படும் பொழுது அவர்கள் கூப்பிடாமலேயே அழைக்காமலேயே ஓடோடி சென்று அவர்களுக்கு பணிவிடை செய்வது; குறிப்பாக அவருடைய வயோதிக காலத்தில்.
 
இந்த இரண்டையும் அல்லாஹ்விடத்தில் கேட்கும்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தருகின்றார்கள்;
 
அடுத்த வார்த்தையை பாருங்கள்;
 
وَأَسْأَلُكَ الرِّضَاءَ بَعْدَ الْقَضَاءِ
 
யா அல்லாஹ்! நீ ஒன்றை முடிவு செய்துவிட்டால், நீ ஒன்றை தீர்ப்பளித்து விட்டால் அந்த தீர்ப்பை பொருந்திக் கொள்ளக்கூடிய அந்த பொருத்தத்தை உன்னிடத்தில் நான் கேட்கின்றேன்.
 
அல்லாஹ் நமக்கு எதை விதித்து விட்டானோ, அல்ஹம்துலில்லாஹ், இதில் அல்லாஹ் எனக்கு ஒரு நன்மை வைத்திருப்பான். யா அல்லாஹ் இதிலுள்ள தீமையிலிருந்து என்னை பாதுகாப்பாயாக! என்று அல்லாஹ்வுடைய விதியை பொருந்திக் கொள்ளக்கூடிய அந்த பொருத்தத்தை அல்லாஹ்வே உன்னிடத்தில் கேட்கின்றேன்.
 
وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ
 
மரணத்திற்குப் பிறகு குளிர்ச்சியான வாழ்க்கையை உன்னிடத்தில் நான் கேட்கின்றேன். மரணத்திற்குப் பிறகு அங்கே நரகம் என்பது உஷ்ணமான வாழ்க்கை. குளிர்ச்சியான வாழ்க்கை என்பது சொர்கத்துடைய வாழ்க்கை. மரணத்திற்குப் பிறகு குளிர்ச்சியான வாழ்க்கையை நான் உன்னிடத்தில் கேட்கின்றேன், அதாவது சுவர்க்கத்தை சுவர்க்கத்தின் நிழலை உன்னிடத்தில் கேட்கின்றேன்
 
அடுத்து வரக்கூடிய அந்த வாசகத்தை பாருங்கள். இதுதான் நம்முடைய இன்றைய தலைப்புடைய வாசகம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தருகின்றார்கள்
 
وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ
 
யா அல்லாஹ்! உன்னுடைய முகத்தை பார்க்க கூடிய இன்பத்தை உன்னிடத்தில் கேட்கின்றேன். 
 
அல்லாஹ்வுடைய முகத்தைப் பார்ப்பது அவ்வளவு இன்பமான ஒன்று. அந்த இன்பத்திற்கு நிகரானது இந்த துன்யாவிலும் இல்லை. சுவர்க்கத்திலும் இல்லை. அல்லாஹ்வுடைய அந்த முகத்தைப் பார்க்கக் கூடிய அந்த பாக்கியம் ஒரு அடியானுக்கு கிடைப்பது மிகமிக இன்பமானது.
 
وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ
 
உன்னை சந்திக்க வேண்டும் என்ற அந்த அஷ்ஷவ்க் -ஆசையை உன்னிடத்தில் கேட்கின்றேன்.
 
சகோதரர்களே! இந்த இரண்டு வாசகத்தை கவனித்துப் பாருங்கள். ஒரு முஃமினுடைய உள்ளத்தில் ஆழ் மனதில் இது எப்பொழுதும் இருக்க வேண்டும். வாலிபர்களுக்கு திருமணத்தின் மீது ஆசை இருக்கலாம். வியாபாரத்தை ஆரம்பித்தவர்களுக்கு வியாபாரம் வெற்றியாக நடக்க வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். அரசியலில் இறங்கியவர்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். ஆனால் இதெல்லாம் அற்பமான ஆசை என்பதாக நாம் உறுதி கொள்ள வேண்டும்.
 
இதெல்லாம் கிடைக்கவும் செய்யலாம். கிடைக்காமலும் போகலாம். கிடைத்தால் இதில் நன்மை கண்டிப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. எத்தனையோ பேர் ஒரு பெண்ணை விரும்புவார்கள். அவளிலே தனக்கு நன்மை இருக்குமென்பதாக நினைப்பார்கள். 
 
ஆனால், திருமணமாகி சில மாதங்களிலேயே தலாக்கிற்க்கு வந்து நிற்பார்கள். சிலர் அரசியலில் சாதிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் அந்த அரசியலே அவருடைய ஈமானுக்கும் துன்யாவிற்க்கும் ஃபித்னாவாக அமையலாம். இப்படி இந்த துன்யாவிலே எந்த ஒன்றாக இருந்தாலும் சரி. அது முழுக்க நன்மை என்பதாக நாம் சொல்ல முடியாது. அதனுடைய இறுதி முடிவை பற்றி தான் நாம் சொல்ல முடியும்.
 
ஆனால் சகோதரர்களே! அல்லாஹ்விடத்தில் நாம் கேட்கக் கூடிய மறுமை சம்பந்தப்பட்ட நிஃமத்துகள் தான் மிகச் சிறந்தது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிக் காட்டினார்கள்.
 
அல்லாஹ்வே உன்னுடைய முகத்தை பார்க்க கூடிய அந்த இன்பத்தை உன்னிடத்தில் நான் கேட்கின்றேன். என்ன கருத்து சகோதரர்களே! அல்லாஹ்வின் முகத்தை பார்ப்பது கண்டிப்பான இன்பமான ஒன்று. அதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த இன்பத்திற்கு நிகராக எதுவும் இருக்க முடியாது. அல்லாஹ்விடத்தில் என்ன கருத்திலே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தருகிறார்கள் என்றால்,
 
யா அல்லாஹ்! உன்னுடைய முகத்தை பார்க்க கூடிய அந்த இன்பம் அந்த தேடல் எனக்கு வேண்டும். அந்த தேடலை தொடர்ந்து அதற்கு தகுதியான அமலை நான் செய்ய வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் இடத்திலே அவர்களுடைய பணியாளர் ஒருவர் கேட்டார்,
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பணியாளர் இடத்திலே கேட்கின்றார்கள். பணியாளரே! உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கூறுங்கள் அல்லாஹ்விடத்தில் நான் உங்களுக்கு துஆ கேட்கின்றேன். அந்த தோழர் என்ன கேட்டார். 
 
யா ரசூலல்லாஹ்! நான் சொர்க்கத்தில் உங்களுடைய தோழனாக இருக்க வேண்டும். நான் சுவர்க்கத்தில் உங்களோடு இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; அப்படி என்றால் அதிகமாக தொழுது நீ எனக்கு உதவி செய்.
 
இதற்கு அல்லாஹ்விடத்தில் நான் உனக்கு துஆ கேட்க வேண்டும் என்றால் மறுமையில் நான் உனக்கு சிபாரிசு செய்ய வேண்டுமென்றால் இதை செய்வீராக!
 
فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ
 
அதிகமாக உபரியான தொழுகைகளைத் தொழுது அதற்கு நீ தகுதி உடையவனாக ஆகு. அப்பொழுதுதான் நான் உனக்கு அல்லாஹ்விடத்தில் கேட்கமுடியும் என்று சொன்னார்கள். (2)
 
அறிவிப்பாளர்: ரபீஆ இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 488
 
ரசூலுல்லாஹ் அவர்களுக்கு பணியாளராக இருந்தாலும் கூட ரசூலுல்லாஹ்வோடு தோழனாக ஆகவேண்டும், சொர்க்கத்தில் இருக்க வேண்டும் என்று அந்த தகுதி கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு இன்னும் நீ அதிக அமல்கள் செய்ய வேண்டும்.
 
சகோதரர்களே! அந்த ஹதீஸோடு இதை நாம் நினைத்துப் பார்த்தால், யா அல்லாஹ் உன்னுடைய முகத்தை பார்க்கக்கூடிய இன்பம் எனக்கு வேண்டுமென்றால் அந்த இன்பத்தை பெறுவதற்குரிய தகுதியுடையவர்களாக அதற்குரிய அமல் உடையவர்களாக நான் ஆகுவதை உன்னிடத்தில் கேட்கின்றேன்.
 
யார் அதிகமாக ஆகிரத்துக்காக அமல் செய்திருப்பார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். யார் துன்யாவிலே மூழ்கி மறுமையை மறந்து இருப்பார்களோ அவர்களுடைய உள்ளத்தில் எப்படி அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்ற ஆசை வரும்?
 
ஆகவே அல்லாஹு தஆலா விடத்திலே அந்த அமல்களுக்குரிய பாக்கியம், அல்லாஹ்வின் மீதான ஆசையை நாம் திரும்பத் திரும்ப அல்லாஹ்விடத்தில் துஆவில் கேட்கும் பொழுது அந்த அமலுக்குரிய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு தருகிறான். அந்த அமலுக்குரிய ஆர்வத்தை அல்லாஹ் நம்முடைய உள்ளத்திலே கொடுக்கின்றான்.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னார்கள்;
 
وَأَعُوذُ بِكَ مِنْ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَفِتْنَةٍ مُضِلَّةٍ
 
யா அல்லாஹ்! நான் உன்னை சந்திக்க வேண்டும். எனக்கு மரணம் வரும் பொழுது நான் உன்னை சந்திக்க வேண்டும் என்ற ஆசை மிகைக்க வேண்டும். அந்த நிலை எனக்கு எப்படி இருக்க வேண்டும் என்றால், எனக்கு தொந்தரவு தரக்கூடிய இடையூறு தரக்கூடிய என்னுடைய அமல்களிலோ, என்னுடைய ஆஹிரத்துடைய இபாத்துகளிலோ எனக்கு இடையூறு தரக்கூடிய வறுமையோ நோய் நொடிகளோ இருக்ககூடாது. அதுபோன்று என்னை வழி கெடுக்கக்கூடிய குழப்பத்திலும் இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் எனக்கு மரணத்தை  கொடு.
 
எத்தனையோ பேர் வாலிப காலத்திலே அமல்களிலே இருப்பார்கள். கொஞ்ச காலம் ஆகிவிடும் பொழுது ஒன்று செல்வம் மிகைத்த காரணத்தினால் அல்லது நட்புகள் மாறி விட்ட காரணத்தினால் அல்லது முஸ்லிம்களை விட்டு தூரமாகிவிட்ட காரணத்தினால் அவர்கள் ஈமானிலே சோதிக்கப்பட்டு விடுகின்றார்கள்.
 
அமல்களிலே சோதிக்கப்பட்டு விடுகிறார்கள். ஈமானை விட்டு அமலை விட்டு தூரமாகி பல நேரங்களிலே ஒரு முஃமினுக்கு எந்த நிலையில் மரணம் வரக்கூடாதோ அந்த நிலையிலே எல்லாம் மரணித்த பலரைப் பார்த்திருக்கிறோம். வாலிபத்தில் அமல்களில் இருந்தவர்கள், இபாதத்தில் இருந்தவர்கள் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! அவர்களுடைய இறுதி நேரம் மிக மோசமான முடிவாக ஆகி இருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் பல இடங்களிலே பார்க்கின்றோம்; கேள்விப்படுகிறோம்.
 
இதைத்தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கச் சொன்னார்கள்.
 
அந்த மரணத்தருவாயில் என்னுடைய ஈமானிலே தடுமாற்றம் ஏற்பட்டுவிடாமல் என்னுடைய அமல்களில் குறைகள் ஏற்பட்டு பலவீனப்பட்டு விடாமல் இருக்கின்ற நிலையில் யா அல்லாஹ்! உன்னை நான் சந்திக்க வேண்டும்.
 
இதற்கு காரணம் என்ன? ஒரு மனிதனுடைய காலத்தில் அவனுடைய அமல் எப்படி இருக்கின்றதோ அதனை கொண்டுதான் அவனுடைய முழு வாழ்க்கையும் முடிவு செய்யப்படுகின்றது.
 
மேலும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னார்கள்;
 
اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الْإِيمَانِ
 
யா அல்லாஹ்! ஈமானின் அலங்காரத்தை கொண்டு எங்களை அலங்கரிப்பாயாக!
 
وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ
 
எங்களை நேர்வழி காட்டக்கூடியவர்களாகவும் நேர்வழி பெற்றவர்களாகவும் ஆக்கி வைப்பாயாக!
 
முக்கியமான அடிப்படை விஷயம் என்னவென்றால் நம்முடைய உள்ளத்திலே அல்லாஹ்வின் மீது ஆசை ஏற்பட வேண்டும். அல்லாஹ்வின் மீது அன்பு ஏற்பட வேண்டும். அல்லாஹ்வின் மீது தேடல் ஏற்பட வேண்டும். அந்த ஆசை அந்த தேடல் அந்த விருப்பம் அந்த ஆர்வம் இது நம்முடைய அமல்களை அதிகப்படுத்துவதற்குரிய மிக முக்கியமான ஒரு உந்துதல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
 
இன்னும் இது குறித்த பல விஷயங்களை இன் ஷா அல்லாஹ், அல்லாஹ் நாடினால் அடுத்த தொடரில் பார்ப்போம்.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவன் மீது ஆசை கொண்ட நேசம் கொண்ட, அவனுடைய அந்த சந்திப்பின் மீது ஆர்வம் கொண்ட நல்லோர்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து, அல்லாஹ்விற்கு பொருத்தமான நல்லோர்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
குறிப்பு 1).
 
حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ، عَنْ شَرِيكٍ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، قَالَ [ص:265]: صَلَّى بِنَا عَمَّارٌ صَلَاةً، فَأَوْجَزَ فِيهَا، فَأَنْكَرُوا ذَلِكَ، فَقَالَ: أَلَمْ أُتِمَّ الرُّكُوعَ وَالسُّجُودَ؟ قَالُوا: بَلَى، قَالَ: أَمَا إِنِّي قَدْ دَعَوْتُ فِيهِمَا بِدُعَاءٍ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِ: «اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ، وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي، أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَكَلِمَةَ الْحَقِّ فِي الْغَضَبِ وَالرِّضَا، وَالْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى، وَلَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ، وَأَعُوذُ بِكَ مِنْ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَمِنْ فِتْنَةٍ مُضِلَّةٍ، اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الْإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مَهْدِيِّينَ» (مسند أحمد18325 -)
 
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبيٍّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّى بِنَا عَمَّارُ بْنُ يَاسِرٍ صَلَاةً، فَأَوْجَزَ فِيهَا، فَقَالَ لَهُ بَعْضُ الْقَوْمِ: لَقَدْ خَفَّفْتَ أَوْ أَوْجَزْتَ الصَّلَاةَ، فَقَالَ: أَمَّا عَلَى ذَلِكَ، فَقَدْ دَعَوْتُ فِيهَا بِدَعَوَاتٍ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَامَ تَبِعَهُ رَجُلٌ مِنَ الْقَوْمِ هُوَ أُبَيٌّ غَيْرَ أَنَّهُ كَنَى عَنْ نَفْسِهِ، فَسَأَلَهُ عَنِ الدُّعَاءِ، ثُمَّ جَاءَ فَأَخْبَرَ بِهِ الْقَوْمَ: «اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ، وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي، اللَّهُمَّ وَأَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى، وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَنْفَدُ، وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَاءَ بَعْدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ، اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الْإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ» (سنن النسائي1305 -) [حكم الألباني] صحيح
குறிப்பு 2).
 
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى أَبُو صَالِحٍ، حَدَّثَنَا هِقْلُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ الْأَوْزَاعِيَّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ كَعْبٍ الْأَسْلَمِيُّ، قَالَ: كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي: «سَلْ» فَقُلْتُ: أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ. قَالَ: «أَوْ غَيْرَ ذَلِكَ» قُلْتُ: هُوَ ذَاكَ. قَالَ: «فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ» (صحيح مسلم(489)
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/