இரவு வணக்கமும் இறை நெருக்கமும் | Tamil Bayan - 582
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
இரவு வணக்கமும் இறை நெருக்கமும்
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! முஸ்லிம் பெருமக்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவை முன்னிறுத்தி வாழுமாறு உபதேசம் செய்தவனாக, அல்லாஹ் ஹராமாக்கியதை விட்டு விலகி, அல்லாஹ் ஹலாலாக்கியதைக் கொண்டு போதுமாக்கி, அல்லாஹ் உடைய வேதத்தை பின்பற்றியும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவைப் பின்பற்றியும் வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம் அனைவருடைய பாவங்களை மன்னிப்பானாக! இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை நமக்கு தந்தருள்வானாக! நாளை மறுமையில் அல்லாஹ் பொருந்திக்கொண்ட நல்லடியார்களில் உங்களையும் என்னையும் எல்லா முஸ்லிம்களையும் சேர்த்தருள் புரிவானாக! ஆமீன்!
அன்பிற்குரிய சகோதரர்களே! படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாம், நமக்கு ஒரு பெரிய பாக்கியம், மிகப்பெரிய ஒரு நற்பேறு இருக்கிறதென்றால் அது படைத்த இறைவனாகிய அல்லாஹ்விற்கு முன்னால் பணிவது, அந்த ரப்பிற்கு முன்னால் கை கட்டி நின்று நான் உனது அடிமை, என்னுடைய உண்மையான எஜமானன் ஆகிய உனக்கு முன்னால் உன்னை வணங்குவதற்காக நான் நிற்கின்றேன் என்று அடியான் அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்தவனாக, பயந்தவனாக நிற்பதில் இருக்கிறது. எப்படி ஒரு நாள் மறுமையில் அல்லாஹ்விற்கு முன்னால் நிற்க வேண்டும் என்பதை நினைத்தவன் ஆக இந்த உலகத்தில் நிற்பது. அப்படி நிற்கக் கூடிய பாக்கியம் கிடைப்பது, நமக்கு கிடைக்கக்கூடிய அருள்களில், அல்லாஹ் உடைய நிஃமத்துகளில் மிகப்பெரிய நிஃமத்.
ஈமான், இஸ்லாம் என்ற அந்த மிகப்பெரிய நிஃமத்திற்குப் பிறகு அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்குரிய நற்பாக்கியம் யாருக்கு அதிகம் அதிகம் கிடைக்க பெறுகிறதோ அவர்கள் தான் மிகப் பெரிய செல்வம் பெற்றவர்கள்.
الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلًا
(ஆகவே,) செல்வமும் ஆண்பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே (தவிர நிலையானவையல்ல). என்றுமே நிலையான நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலிகிடைப்பதற்கு மிகசிறந்ததும், நல்லாதரவுவைப்பதற்கு மிகசிறந்ததும் ஆகும். (அல்குர்ஆன் 18 : 46)
நாம் சேர்த்து வைத்திருக்கக்கூடிய செல்வங்களை கொண்டு நாம் பெருமை அடிக்க முடியாது. நாம் கட்டிய வீடுகளாக இருக்கட்டும், நாம் செய்கின்ற வியாபாரங்கள் ஆக இருக்கட்டும், கண்டிப்பாக நாம் அவற்றை விட்டுப் பிரிந்தே தீருவோம். ஆனால், எந்த இபாதத்துகளை அல்லாஹ்விற்காக பரிசுத்தமாக நாம் செய்து கொண்டோமோ அது தான் நமக்கு பலனளிக்கும்.
أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ
பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன் 39 : 3)
அந்த பரிசுத்தமான இபாதத்துகள் இம்மையிலும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை, அல்லாஹ்வுடைய அன்பை, அரவணைப்பை, பாதுகாப்பை நமக்கு தரக்கூடியவை. அது போன்று கப்ரிலே, பிறகு மஹ்ஷர் மைதானத்திலே பிறகு இந்த இபாதத்துகளைக் கொண்டு தான் ஒரு அடியான் சொர்க்கம் என்ற மிகப்பெரிய இன்ப லோகத்தை அடையப் பெறுகிறான். அல்லாஹ்வின் ரஹ்மத்தின் இல்லத்தை அடையப் பெறுகிறான். அங்கே அல்லாஹ்வைப் பார்க்க கூடிய பாக்கியத்தை அடையப் பெறுகிறான்.
تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
இதோ! இந்த சொர்க்கம் நீங்கள் செய்த அமலுக்காக உங்களுக்கு கொடுக்கப்படுகிறது என்று அல்லாஹ் கூறுவான். (அல்குர்ஆன் 7 : 43)
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ
உங்களுடைய உலக வாழ்க்கையில் நீங்கள் செய்த இபாதத்துகளுக்காக இந்த சொர்க்கத்தை அனுபவியுங்கள். இதனுடைய நிஹ்மத்துகளை அனுபவியுங்கள். இன்பமாக மகிழ்ச்சியாக தங்கு தடையின்றி நீங்கள் உண்ணுங்கள்.பருகுங்கள்.எங்கு வேண்டுமானாலும் நீங்கள் சுற்றுங்கள் என்பதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு வாழ்த்து கூறுவான். (அல்குர்ஆன் 69 : 24)
கண்ணியத்திற்குரியவர்களே! இங்கு மிக வருத்தமான ஒரு செய்தி என்னவென்றால் இன்று இபாதத் செய்தாலும் கூட சிலர் அந்த இபாதத்துகளை சுமையாக நினைத்து செய்கிறார்கள்; அந்த இபாதத்துகளை ஒரு நிர்பந்தமாக நினைத்துச் செய்கிறார்கள்;
ஆர்வமில்லாமல் அலட்சியமாக செய்கிறார்கள். கவனக் குறைவோடு செய்கிறார்கள். அந்த இபாதத்துகளுக்கு அவர்கள் வரும் போது அவர்களுடைய முகத்தில் ஒரு உற்சாகம் இருப்பதில்லை.
பள்ளிக்கு வரும்போது சோம்பேறிகளாக, அலட்சியம் செய்தவர்களாக, வீண் விளையாட்டில் ஈடுபடுபவர்களாக, வேறு கவனம் உள்ளவர்களாக வருகிறார்கள். ஆனால் பள்ளியிலிருந்து திரும்ப செல்லும் போது மிகுந்த உற்சாகத்தோடு செல்கிறார்கள்; சுறுசுறுப்பாக செல்கிறார்கள்; விரைந்து செல்கிறார்கள். மஸ்ஜிதிற்கு வரும்போது சோம்பேறிகளாக தாமதமாக வருகிறார்கள். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى
அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக் (கவிரும்பு) கிறார்கள். (அல்குர்ஆன் 4 : 142)
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான். அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 107 : 4-5)
தொழாதவர்களை அல்லாஹ் இங்கே சொல்லவில்லை சகோதரர்களே! தொழுகிறார்கள் ஆனால் அலட்சியத்தோடு, கவனக் குறைவோடு, நேரங்களை பேணாமல், ஒரு தொழுகையின் நேரத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்கிறார்கள். முதல் நேரம், இரண்டாவது நேரம் என்று கடைசி நேரம் வரை அதை தள்ளி தள்ளி பிறகு அவசர அவசரமாக தொழுகிறார்கள். இவர்களை அல்லாஹ் சொல்கின்றான் ''இவர்களுக்கு நாசம் உண்டாகட்டும்!! அல்லாஹ் பாதுகாப்பானாக!
அன்பு சகோதரர்களே! இபாதத் உடைய பாக்கியம் கிடைக்கப் பெறுவது, இதைவிட பெரிய பாக்கியம் இந்த உலகத்திலே இல்லை. ஒரு மனிதனுக்கு செல்வம் இல்லாமல் போகலாம்; குழந்தை இல்லாமல் போகலாம்; கண் தெரியாமல் போகலாம் அல்லது உடல் உறுப்புகளில் பல உறுப்புகள் அவனுக்கு செயலிழந்து போகலாம். ஆனால், அது அவனுக்கு ஒரு பெரிய இழப்பல்ல. காரணமென்ன?
இவை எல்லாம் நாளை மறுமையில் இவன் சொர்க்கவாசியாக இருந்தால் மிக நிறைவாக, முழுமையாக, சிறப்பாக, அழகாக அவனுக்கு கொடுக்கப்பட்டு விடும். சுவர்க்கத்திற்க்கு செல்பவர்கள் குருடர்களாக இருக்க மாட்டார்கள்; ஊனர்களாக இருக்க மாட்டார்கள்.
ஆனால், ஒரு மனிதனுக்கு இந்த துனியாவில் அல்லாஹ்வை வணங்கக்கூடிய இபாதத்துடைய பாக்கியம் கிடைக்கவில்லை என்றால் ரப்புக்கு முன்னால் நிற்கக்கூடிய அந்த தவ்பீஃக், அருள் அவனுக்கு கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் அவனுடைய நிலையை மறுமையில் நினைத்துப் பாருங்கள்! எப்படி இருக்கும் அவனுடைய நிலை என்று!! அந்த கைசேதத்தை ஈடுகட்ட முடியுமா?
وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِي الْأَرْضِ لَافْتَدَتْ بِهِ
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வை வணங்கி வழிபடாமல் பாவங்களில் கழித்து வந்த ஆன்மா, நாளை மறுமையில் அது என்ன ஆசைப்படும் என்றால் இந்த உலகம் எல்லாம் எனக்கு செல்வமாக இருந்து, எனக்கு உரிமையான செல்வமாக இருந்தாலும், நான் இறைவா! உனக்கு நான் அதை கொடுத்துவிடுவேன். எனக்கு நீ விடுதலை தருவாயாக! என்று. (அல்குர்ஆன் 10 : 54)
அன்பு சகோதரர்களே! ஆகவேதான் ரப்பு கூறுகிறான் :
وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ
நீங்கள் ஒருநாளைப்பற்றியும் பயந்துகொள்ளுங்கள்: (அந்நாளில்) எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதையும் (கொடுத்து அதன்கஷ்டத்தைத்) தீர்க்கமாட்டாது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதற்காக ஒரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், அவர்கள் (எவராலும்எவ்வித) உதவியும் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 48)
لَا يَجْزِي وَالِدٌ عَنْ وَلَدِهِ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَنْ وَالِدِهِ شَيْئًا
தந்தை தன்னுடைய பிள்ளைக்கு உதவ முடியாது. மகன் தன்னுடைய தந்தைக்கு உதவ முடியாது. (அல்குர்ஆன் 31 : 33)
அல்லாஹ் கேட்கிறான்:
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (17) ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (18) يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ
(நபியே!) கூலிகொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா? பிறகு, கூலிகொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா? அந்நாளில் ஓர்ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும். (அல்குர்ஆன் 82 : 17-19)
பாவிகளைப் பற்றி அல்லாஹ் சொல்லும் பொழுது,
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ (14) يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ (15) وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ
நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள். கூலிகொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள். அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பிஓடி) விட முடியாது. (அல் குர்ஆன் 82 : 14-16)
யார் பாவிகள்? சகோதரர்களே! அல்லாஹ்வை வணங்காதவன் பாவி.
திருடியவன் மட்டுமல்ல, விபச்சாரம் செய்தவன் மட்டுமல்ல, குடித்தவன் மட்டுமல்ல. சிலர் பேசிக் கொள்கிறார்கள், நான் ஏன் வணங்க வேண்டும்? நான் யாருக்கும் எந்த அநியாயமும் செய்யவில்லையே! நான் யாருக்கு எந்த துரோகமும் செய்யவில்லையே! நான் ஏன் வணங்க வேண்டும்? என்பதாக. நான் எந்த தப்பும் பண்ணவில்லையே! என்பதாக.
அன்பு சகோதரர்களே!! அல்லாஹ்விற்கு முன்னால் ஒரு அடியான் பணிந்து நிற்காததை விட ஒரு பெரிய அநியாயம் இருக்க முடியுமா? நீங்கள் உறவுகளைப் பேணுபவர்களாக இருக்கலாம். தர்மம் கொடுப்பவர்களாக இருக்கலாம். இன்னும் ஆயிரக்கணக்கான நல்ல குணங்கள் உங்களிடத்தில் இருக்கலாம். இருக்க வேண்டும். ஆனால், அந்த நன்மைகள் எல்லாம், அந்த சிறந்த நற்காரியங்கள் எல்லாம் அல்லாஹ்வுடைய இபாதத்.
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
(நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று கட்டளையிட்டிருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 23)
அல்லாஹ்வுடைய இபாதத், அல்லாஹ்வை வணங்குதல் என்ற ஒரு அமல் இல்லை என்றால் உங்களுடைய நற்கருமங்களுக்கு எல்லாம் இந்த உலகத்திலேயே கூலி கொடுக்கப்பட்டு நாளை மறுமையிலே வரும்போது எந்த அமலும் இல்லாமல் எந்த நன்மையும் இல்லாமல் வருவீர்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! பாவிகள் அவர்கள் நரகத்திலே நுழைவார்கள். மறுமை நாளில் அவர்கள் தப்பிக்க முடியாது. உங்களுக்கு தெரியுமா? மறுமை நாள் என்னவென்று?
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ
அங்கே ஒரு ஆன்மா இன்னொரு ஆன்மாவிற்கு எதையும் செய்ய சக்தி இருக்காது. (அல் குர்ஆன் 82 : 19)
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய இபாதத், அல்லாஹ்வை வணங்குவது இதனுடைய அருமையை மனிதன் மறுமையிலே அறிவான். ஆனால் அப்போது அறிவதால் அவனுக்கு எந்த விதமான பலனும் கிடைக்க பெறாது.
يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى
அங்கே அவனுக்கு நல்ல அறிவு வரும். ஆனால் அந்த நல்லறிவால் அவனுக்கு என்ன பலன் கிடைக்கும்? என அல்லாஹ் கேட்கிறான். (அல்குர்ஆன் 89 : 23)
يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي
இந்த வாழ்க்கைக்காக இந்த மறுமைக்காக நான் அமல்களை செய்திருக்க வேண்டுமே! என்று அவன் கைசேதப்படுவான். அல்லாஹ் சொல்கிறான், என்ன பயன் ? (அல்குர்ஆன் 89 : 24)
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகள் இன்று பலர் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றால், அதுதான் ரமழானில் வணங்கி விட்டோமே!
ரமழான் வந்தது நோன்பு வைத்தோம்; தொழுதோம்; முடிந்தது அவ்வளவு தானே!
அன்பு சகோதரர்களே! ரமழான் இபாதத்துகளை அதிகப்படுத்துவதற்கான மாதம் தான். ரமழான் மட்டும் தான் இபாதத்திற்குரிய மாதம் அல்ல. எப்படி தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள்? ரமழான் மட்டும் தான் இபாதத்திற்கு, பிறகு ரமழான் முடிந்து விட்டால் அல்லாஹ்வை வணங்க தேவை இல்லை.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
வாழ்நாளெல்லாம் இந்த அடியான் என்னை வணங்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனை நான் படைத்தேன் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 51 : 56).
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ
நபியே! உங்களுக்கு மரணம் வருகின்ற வரை உங்களது ரப்பை வணங்குங்கள் என்று அல்லாஹ் தன்னுடைய நபிக்கு கட்டளையிடுகின்றான். (அல்குர்ஆன் 15 : 99)
அன்பு சகோதரர்களே! இன்று வேதனையாக இருக்கிறது. ரமழானில் நிரம்பி இருந்த மஸ்ஜிதுகள், ரமழானுக்கு பிறகு இமாமும் முஅத்தினும் தொழுகைக்கு யாரும் வருவார்களா? என்று எதிர்பார்த்து இருக்கக்கூடிய நிலை பல இடங்களில். பல இடங்களிலே ஸப்புகள் காலி. பிறகு இன்னொரு பக்கம் அந்த ரமழானின் வருகையோடு நிறுத்தி வைத்திருந்த பாவங்களை எல்லாம் இப்பொழுது செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்றால், இவர்களுடைய ரமழானால் இவர்களுக்கு என்ன பிறயோஜனம்?
ஒன்று பர்லுகளை விடுவது, இபாதத்துக்களை விடுவது, இரண்டாவது அல்லாஹ் ஹராமாக்கிய பெரும் பாவங்களை செய்ய ஆரம்பித்து விடுவது. எப்பேற்பட்ட நாசம் சகோதரர்களே! ஒரு மனிதன் இந்த உலகத்திலேயே ஒரு பெரிய ஆபத்தை நம்மால் கற்பனை செய்ய முடியும் என்றால் அதைவிட மிகப் பெரிய ஆபத்து, ஒரு அடியான் அல்லாஹ் அவன் மீது பர்லாக்கிய இபாதத்தை பாழ் ஆக்குவது; அல்லாஹ் அவன் மீது ஹராமாக்கிய ஹராமை தடுத்த பெரும் பாவங்களை செய்வது; இந்த உலகத்தில் நாம் ஒரு பெரிய ஆபத்து, ஒரு பெரிய சுனாமி அல்லது ஒரு பெரிய பூகம்பத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக! இப்படி எப்பேர்பட்ட ஆபத்துகளை நாம் கற்பனை செய்தாலும் கூட அதை விட மிகப் பெரிய ஆபத்து ஒரு பர்ளை அல்லாஹ் கடமை ஆக்கிய ஒரு நேர பர்ளை
விடுவதில் இருக்கிறது.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
مَنْ فَاتَتْهُ صَلَاةُ الْعَصْرِ حَبِطَ عَمَلُهُ
அஸருடைய ஜமாத்தை ஒருவன் தவறவிட்டால் அவனுடைய அமலெல்லாம் நாசம் என்பதாக. (1)
அறிவிப்பாளர்: புரைதா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: எண்: 686
யோசித்துப்பாருங்கள் சகோதரர்களே!
عَنْ ابْنِ عُمَر أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلُهُ وَمَالُهُ(سنن ابن ماجه677 -)
அவனுடைய குடும்பம் எல்லாம் அவனை விட்டு குடும்பத்தை எல்லாம் அவன் இழந்ததற்கு சமம் என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா, எண்: 677
கண்ணியத்திற்குரியவர்களே! இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் பார்க்க இருக்கிறோம். ரமழானுடைய காலத்தில் இரவு வணக்கங்களில் ஈடுபட்டவர்கள், ரமழான் முடிந்ததற்கு பிறகு, அந்த இரவு வணக்கங்களை முடித்து கொண்டார்கள். இவர்கள் நல்லவர்கள்; ஐந்து நேர தொழுகைகளை தொழுகிறார்கள்; ஹராமை செய்வதில்லை; பெரும் பாவங்களை செய்வதில்லை; மற்ற கடமைகளை பாழாக்குவதில்லை.
ஆனால், இத்தோடு அவர்கள் நிறுத்திக் கொண்டு தன்னுடைய ரப்பிடமிருந்து தூரமாகவே இருக்க நினைக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! ரமழானிலே ஏற்பட்ட அந்த நெருக்கத்தை, ரமழானிலே அல்லாஹ் இந்த அடியான் மீது செய்த இந்த பேரருளை ஏன் இவர்கள் அதிகப்படுத்திக் கொள்ள கூடாது? அல்லாஹ் அவனுக்கு முன்னால் நிற்கக்கூடிய அந்த கியாமுல் லைல் உடைய பாக்கியத்தை கொடுத்தானே! அதை ஏன் வாழ்நாளெல்லாம் கிடைக்கப் பெறுகின்ற பாக்கியமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது?
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமழானில் மட்டும் இரவு தொழுதார்கள் என்று எங்கேயாவது நாம் பார்க்கிறோமா? ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடத்திலே ரசூல் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையைப் பற்றி கேட்கப்பட்ட பொழுது, அன்னையவர்களே! ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய இரவு தொழுகை எப்படி இருந்தது என்று. அவர்கள் கூறிய பதில் என்ன? நினைத்துப் பாருங்கள்!படித்துப் பாருங்கள்! அறிஞர்களிடத்திலே கேட்டுத் தெரிந்து பாருங்கள்!
عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا كَيْفَ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزِيدُ فِي رَمَضَانَ وَلَا فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُصَلِّي أَرْبَعًا فَلَا تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلَا تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ثُمَّ يُصَلِّي ثَلَاثًا قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ فَقَالَ يَا عَائِشَةُ إِنَّ عَيْنَيَّ تَنَامَانِ وَلَا يَنَامُ قَلْبِي (صحيح البخاري1079 -)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமழானிலும் சரி, ரமழான் அல்லாத காலங்களிலும் சரி இரவிலே பதினொரு ரக்அத்துகள் தொழுவார்கள். நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதனுடைய அழகைப் பற்றி நீ கேட்க முடியுமா? அதனுடைய நீளத்தைப் பற்றி நீ கேட்க முடியுமா? கேட்காதே! அது உனக்கு முடியாது.
பிறகு நான்கு ரக்அத் தொழுவார்கள்; அதனுடைய அழகை அதனுடைய நீளத்தை நீ கேட்காதே! பிறகு இரண்டு ரக்ஆத் தொழுவார்கள். பிறகு ஒரு ரக்அத் தொழுவார்கள். இப்படியாக ரசூல் (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரவுத் தொழுகையை நம்முடைய பாசத்திற்குரிய நேசத்திற்குரிய மதிப்பிற்குரிய தாய் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக்குரிய மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் போது ரமழானிலும் தொழுதார்கள். ரமலான் அல்லாத காலங்களிலும் தொழுதார்கள் .
நூல்: புகாரி , எண்: 1079
அன்பு சகோதரர்களே! என்ன வித்தியாசம்? ரமழானிலே ஜமாத்தோடு நாம் அதை தொழுவோம். ரமழான் அல்லாத காலங்களில் அதை நாம் தனியாக தொழ வேண்டும். இன்று நாம் எப்படி விளங்கி வைத்துக்கொண்டோம். ரமழான் முடிந்ததோடு அது முடிந்துவிட்டது. பிறகு மூன்று ரக்அத் வித்ரோடு அல்லது ஒரு ரக்அத் வித்ரோடு என்னுடைய இரவு வணக்கம் முடிந்துவிட்டது. அதுவும் இஷா தொழுகையோடு சேர்த்து. பிறகு இரவிலே அந்த பரிசுத்தமான பகுதி,
عَنْ أَبِي سَلَمَةَ وَأَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ (صحيح البخاري1077 -)
இரவுடைய அந்த மூன்றாவது இரவுப் பகுதி ரப்புல் ஆலமீன் முதல் வானத்தில் இறங்கி கேட்கிறானே? யாராவது பாவ மன்னிப்பு தேடுபவர் இருக்கிறார்களா? நான் மன்னிக்க தயாராக இருக்கிறேன். தேவையை கேட்பவர் யாரும் இருக்கிறாரா? நான் தேவையை கொடுக்க நிறைவேற்ற தயாராக இருக்கிறேன். தவ்பா செய்பவர் யாரும் இருக்கிறாரா? நான் தவ்பாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 1077
அன்பு சகோதரர்களே! ரப்புல் ஆலமீன் நம்மிடத்திலே கேட்கிறான். ஆனால் நாமோ தூங்கிக் கொண்டு இருக்கிறோம்.
தாபியீன்களிலே மிகப்பெரிய ஒரு அறிஞர் தாவூஸ் இப்னு கைஸா, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மாணவர் ஒருமுறை சஹர் நேரத்திலேயே ஒரு தேவைக்காக தன்னுடைய சகோதரர் ஒருவருடைய வீட்டினுடைய கதவை தட்டுகின்றார். மனைவி சொல்கின்றார்கள்; அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று. தாபியீ கூறுகிறார்; சுபஹானல்லாஹ் இந்த நேரத்திலே யாராவது தூங்குவார்களா? என்று.
இன்று நவீன குர்ஆன் ஹதீஸ் என்ன தெரியுமா? சுப்ஹு தொழுகைக்கு கூட அதற்காக தனியாக மெனக்கெடத் தேவையில்லை. எப்போது எழுந்திருக்கிறோமோ அப்பொழுது தொழுது கொள்ளலாம். நவீன தவ்ஹீத். எப்படி? அதுதான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொல்லியிருக்கின்றார்களே,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الرَّجُلِ يَغْفُلُ عَنْ الصَّلَاةِ أَوْ يَرْقُدُ عَنْهَا قَالَ يُصَلِّيهَا إِذَا ذَكَرَهَا (ابن ماجة 687 -)
"ஒருவன் தூங்கிவிட்டால் மறந்து விட்டால் அவன் எப்போது நினைவு படுத்தி கொள்கிறானோ எப்போது எழுந்து இருக்கிறானோ அப்போது அவன் தொழுது கொள்ளட்டும்"என்று.
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா, எண் : 687
எந்த விதமான ஏற்பாடும் இவர்கள் செய்ய மாட்டார்கள்; எந்த விதமான முயற்சியும் இவர்கள் செய்து வைத்திருக்க மாட்டார்கள்; தூங்குவார்கள். ஹதீஸ் இருக்கிறது. அன்பு சகோதரர்களே! இது தான் குதர்க்கம். இது தான் ஹதீஸை புரிவதிலே ஷைத்தான் இவர்களுக்கு கொடுக்கக்கூடிய விளக்கம், இப்லீஸ் அல்லது நப்ஸ் இவர்களுக்கு கொடுக்கக்கூடிய விளக்கம்.
அல்லாஹு தஆலா நல்லடியார்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பாக்கியம் இந்த இரவு வணக்கம் என்பது. அல்லாஹ்விற்கு முன்னால் தனிமையிலே இரவிலே நின்று அல்லாஹ்வைத் தொழுவது; அல்லாஹ்விடத்திலே பேசுவது; அல்லாஹ்விடத்திலே உரையாடுவது; தனது குறையை அவனிடத்திலே சொல்வது; தன்னுடைய கஷ்டங்களை அவனிடத்திலே சொல்வது. அவனுடைய அருளைக் கொண்டு அவனை புகழ்வது; அவன் செய்த நிஹ்மத்களை அவனிடத்திலே நாம் சொல்லிக் காட்டுவது. ரப்பே!நீ எனக்கு அதை கொடுத்தாய்! எனக்கு இதைச் செய்தாய்! என்னை இப்படி கவனித்தாய்! என்று அல்லாஹ்வைப் புகழ்வது. ரஹ்மானே!! உன்னை நான் எப்படி தொழாமல் இருக்க முடியும். உன்னை நான் எப்படி புகழாமல் இருக்க முடியும். யார் யாரையோ புகழ்கிறோமே, அற்ப காசுகளுக்காக! அர்ப்ப பதவிகளுக்காக! அர்ப்ப லாபங்களுக்காக!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
وَمَا أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ الْمَدْحُ مِنْ اللَّهِ
அல்லாஹ்வை விட புகழை விரும்பக் கூடியவர் யாருமில்லை. அவன் புகழப்படுவதற்கு தகுதியானவன். (2)
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 4819
எத்தனை சூராக்களின் ஆரம்பங்களை எடுத்து பாருங்கள்.' அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்', 'ஸப்பஹ லில்லாஹ்', 'யுஸப்பிஹு லில்லாஹ்' அல்லாஹுதஆலா தான் புகழப்படுவதை விரும்புகிறான். அவனை விட புகழுக்கு தகுதியானவர்கள் யார்? சகோதரர்களே! இந்த நாவு ரப்பைக் குறை கூறிக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக! இந்த நாவு அல்லாஹ்வின் நிஹ்மத்துகளை குறைத்துப் பேசிக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இப்படிப்பட்ட நாவுகளிலிருந்து!! இந்த நாவு அல்லாஹ்வைப் புகழ வேண்டாமா?
அய்யூப் அலைஹிஸ்ஸலாத்துவஸ்ஸலாம் 18 ஆண்டுகள் தொடர்ச்சியான நோயிலே, பிணியிலே, உடல் ரீதியான குறைகளிலே எல்லா விதமான இழப்புகளிலும் இருந்தார்கள். ஆனால் ஒரு முறை கூட அவர்கள் சடைந்து கொள்ளவில்லை. அல்லாஹ்வை அவனுடைய நிஃமத்துகளை அவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை.
அல்லாஹ் சொல்கிறான், அய்யூபை நினைத்துப் பாருங்கள். அவர் தன்னுடைய ரப்பை எப்படி அழைத்தார் என்று. 18 ஆண்டுகள் உடைய சிரமத்திற்குப் பிறகு கூட அல்லாஹ்விடத்திலே தன்னுடைய நோயை நீக்கும் படி அவர்கள் துஆ செய்த முறையை அல்லாஹ் சொல்கிறான்.
وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
ஐயூபையும் (நாம் நம்தூதராக அனுப்பிவைத்தோம்). அவர்தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக்கொண்டது. (அதைநீநீக்கிவிடு.) நீயோ கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்றுபிரார்த்தனை செய்தார். (அல்குர்ஆன் 21 : 83)
எவ்வளவு மரியாதையாக ரப்புக்கு முன்னால் பேசக்கூடிய அந்த அதபைப் பேணி பேசுகிறார்கள் பாருங்கள். இன்று நாம் தீமை அனைத்தையும் அல்லாஹ்விடம் சேர்த்து விடுகிறோம். நன்மையெல்லாம் நம் பக்கம் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் மார்க்கம், குர்ஆன், ஹதீஸ் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? நன்மைகளை அல்லாஹ்வின் பக்கம் சேருங்கள். தீமைகளை உங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பதாக.
அன்பு சகோதரர்களே! இரவிலே தொழக்கூடிய அந்த மக்களை ரப்புல் ஆலமீன் புகழ்கிறான்.
تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (16) فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, தங்கள் இறைவனிடம் (அவனதுஅருளை) ஆசைவைத்தும், (அவனது தண்டனையை) பயந்தும் பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள். அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண்குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ளமுடியாது. (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன.) (அல் குர்ஆன் 32 : 16-17)
அந்த நல்லடியார்கள் அவர்களின் விலாக்கள் படுக்கையில் இருந்து விலகி இருக்கும்.
தங்களுடைய ரப்பிடத்திலே அவர்கள் துஆ கேட்டுக் கொண்டிருப்பார்கள். குர்ஆனிலே 'يَدْعُو' என்று வரக்கூடிய அந்த வார்த்தைக்கு ஒன்று கையேந்தி அல்லாஹ்விடத்திலே பிரார்த்தனை செய்வது, இன்னொன்று அல்லாஹ்வை தொழுவது. இபாதத்து வணக்க வழிபாடு செய்வது. காரணமென்ன? தொழுகையே முழுக்க துஆ தான். தக்பீர் கட்டியதில் இருந்து ஸலாம் கொடுக்கின்ற வரை தொழுகை துஆக்களைக் கொண்டு சேர்ந்தது.
குர்ஆனின் விரிவுரையாளர் இமாம் ஹஸன் பஸரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த இடத்தில் வித்தியாசமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டு இருக்கக்கூடிய அந்த அருளை, கண் குளிர்ச்சியான அந்த நற்பாக்கியங்களை யாரும் அறிய மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே! மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறானே! தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறக்கூடிய அல்லாஹு தஆலா சொர்க்கம் உங்களுக்காக தயாரிக்கப்பட்டிருக்கிறது, ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறக் கூடிய அல்லாஹுதஆலா, இந்த இடத்திலே ,
கண் குளிர்ச்சியான இன்பங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது அவர்களுக்காக சொர்க்கத்திலே என்று கூறுகிறானே! விளக்கம் சொல்கிறார்கள்; என்ன காரணம் தெரியுமா? இவர்களும் இரவிலே யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து இஹ்லாசோடு அல்லாஹ்வை வணங்கினார்கள். எனவே, இவர்களுக்குள்ள அந்த நிஃமத்துகளை அல்லாஹு தஆலா மறுமையிலே யாருக்கும் காட்ட மாட்டான். இவர்களுக்காக விஷேசமாக அல்லாஹ் கொடுப்பான்.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்விடத்திலே ஒரு சட்டம் என்னவென்று சொன்னால், எப்படி அமலோ அதற்கேற்ப கூலி. அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்; ஹதீஸ் குதுஸியிலே, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,
يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ
"ஆதமுடைய மகனுடைய அமல்கள் எல்லாம் அவனுக்காக. ஆனால், நோன்பைத் தவிர. நோன்பு எனக்காக. ஏன்? அவன் எனக்காக குடிப்பதில்லை. எனக்காக உண்பதில்லை. எல்லாவற்றையும் எனக்காக விட்டு விடுகிறான். நோன்பு எனக்காக. எனவே, நான் அவனுக்கு விசேஷமாக கொடுக்க போகிறேன். (3)
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 1761
அன்பு சகோதரர்களே! இத்தகைய புகழ் நமக்கு வேண்டாமா? இதை ரமழானோடு முடித்துக் கொள்ளலாமா? மேலும், பாருங்கள் அல்லாஹு சுபஹானஹு தஆலா
தக்வா உடைய காரணங்களாகவும் தக்வா உள்ளவர்களுடைய அந்த குணங்களில் ஒன்றாகவும் அல்லாஹுதஆலா குறிப்பிடுகின்றான். அவர்கள் இரவிலே தொழுவார்கள். இரவு இபாதத்துகளிலே அவர்கள் இருப்பார்கள்.
இன்று, சிறிது காலத்திற்கு முன்பு வரை டிவி கலாச்சாரம். இப்போது இந்த செல்போன் கலாச்சாரம். மனிதனுடைய இரவை மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்த, அவனுக்கு சொந்தமான இபாதத்திற்கான நேரத்தை அல்லாஹ்வுடைய ஹக்குகள், அல்லாஹ்வுடைய இபாதத்துகளுக்கு கொடுப்பதில் இருந்து பறித்து, மனிதனை அற்ப காரியங்களிலே ஈடுபடுத்தி வைத்திருக்கிறது.
தொழு! என்று சொன்னால், ஓது! என்று சொன்னால், அல்லாஹ்வை நினைவு கூறு! என்று சொன்னால், கண் வலிக்கிறது; தூக்கம் வருகிறது; காலையிலே எழ வேண்டும்; வேலை இருக்கிறது. ஆனால் செல்போன் பார்! விளையாடு! அல்லது பேசு! என்று சொன்னால் இவையெல்லாம் அவனுக்கு ஞாபகம் வருவதில்லை.
وَمِنَ اللَّيْلِ فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا
இரவிலே அல்லாஹ்விற்காக சுஜூதிலே இருங்கள். இரவின் நீண்ட பகுதி அல்லாஹ்வைத் தொழுது கொண்டு இருங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல் குர்ஆன் -76:26)
அன்பு சகோதரர்களே! வாழ்க்கையை எப்படி மாற்றி வைத்திருக்கிறோம் பாருங்கள். வீண்
விளையாட்டுகளிலே இருக்கும் போது மனது அப்படியே சுகமாக இருக்கிறது. இபாதத்துகளுக்கு வரும் பொழுது மனது சுருங்கிவிடுகிறது. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
حبب إلي النساء و الطيب و جعلت قرة عيني في الصلاة
எனக்கு மனைவிமார்கள் மிக பிரியமானவர்கள், திருமணம் நிக்காஹ் எனக்கு மிக விருப்பமானது. பெண்கள் எனக்கு விருப்பமாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய கண் குளிர்ச்சியோ, தொழுகையிலே இருக்கிறது என்று சொன்னார்கள்.
முஸ்னது அஹ்மது எண்:12293, சுனன் குப்ரா- நசாயீ எண் :8836
அன்பு சகோதரர்களே! வாழ்நாளில் நம்முடைய மரணத்திற்கு முன்பு குறைந்த பட்சம் இந்தத் தொழுகையின் கண் குளிர்ச்சியை ஒரு இரண்டு ரக்அத்துகளில் கூட நாம் அடைய பெறாமல் இறந்து விட்டால், அது எவ்வளவு பெரிய கைசேதமாக இருக்கும் யோசித்து பாருங்கள்!!
இமாம் கொஞ்சம் நீட்டி விட்டால், தொழுகையில் ருகூவையோ கியாமையோ கொஞ்சம் நீட்டி விட்டார் என்று சொன்னால், அவ்வளவுதான்! அன்று! பள்ளிவாசலில் கியாமத்து வந்து விடும். 'ஸல்ஸலா' பூகம்பம் வந்துவிடும். பள்ளிக்கு வெளியிலே சென்று ஒரே பேச்சாக இருக்கும்; பெரிய ஒரு கலகம் ஏற்பட்டு விடும். ஏன்? சகோதரர்களே! இதே மக்கள் பள்ளிக்கு வெளியிலே சென்று செய்திகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள்; டீ கடையிலே நின்று கொண்டிருப்பார்கள்; அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது அவர்களுக்கு கால் வலி தெரியாது. அப்போது அவர்களுக்கு வேலை நினைவுக்கு வராது. பிள்ளை நினைவுக்கு வராது. ஆனால் மஸ்ஜிதிலே அல்லாஹ்வுடைய இபாதத்திலே நிற்கும் போது அவர்களுக்கு எல்லா பிரச்சினைகளும் ஞாபகதிற்கு வரும்.
அல்லாஹ் உடைய நல்லடியார்கள் யார் தெரியுமா? அல்லாஹு தஆலா சொல்கிறான் அந்த தக்வா உள்ளவர்கள், இரவிலே ஒரு பெரும் பகுதியை தன்னுடைய ரப்புக்காக ஒதுக்கி இருப்பார்கள். அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த வசனத்தை பாருங்கள்.
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ (15) آخِذِينَ مَا آتَاهُمْ رَبُّهُمْ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُحْسِنِينَ (16) كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ (17) وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களிலும், நீரருவிகளுக்கு அருகிலும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் இறைவன் கொடுப்பதை(த்திருப்தியுடன்) பெற்றுக்கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் இரவில் வெகுசொற்ப (நேர)மே நித்திரை செய்பவர்களாக இருந்தனர். அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்துதங்கள் இறைவனை வணங்கி, அவனிடம் பாவ) மன்னிப்புக்கோருவார்கள். (அல்குர்ஆன் 51 : 15-18)
இமாம் ஹஸன் பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கிறார்கள். ஆம், அவர்கள் இரவினுடைய முற்பகுதி தூங்கி இரவினுடைய நடுப்பகுதிக்கு பிறகு விழித்து விடுவார்கள்.
ஆனால், இன்று நம்முடைய காலத்தில் நமக்கு புடித்த முசிபத் என்ன தெரியுமா? நாம் தூங்குவதே இரவினுடைய இரண்டு பகுதிகளுக்கு பிறகுதான்.
ஒரு அறிஞர் உபதேசம் செய்யும்போது மிக அழகாக உபதேசம் செய்தார். ஸஹாபாக்கள் இரவு வணக்கத்திற்காக எழுந்திருந்த நேரத்தில் தான் இன்று நாம் தூங்க செல்கிறோம். ஸஹாபாக்கள் இரவு வணக்கத்திற்காக அவர்கள் எழுந்து இருந்த நேரம் அது எது? நடுஇரவு. இரவினுடைய நடுப்பகுதி. அதிலிருந்து அவர்கள் இபாதத்திற்காக தயார் ஆகி விடுவார்கள். இன்று நம்முடைய முசிபத் என்னவென்று சொன்னால் அப்போது தான் நாம் படுக்கைக்கே செல்கிறோம்.
ஸஹாபாக்கள் மக்ரிபிற்குப் பிறகு அவர்களுடைய இரவு உணவில் இருந்து அவர்கள் ஓய்வு பெற்று விடுவார்கள். பிறகு இஷாவுடைய தொழுகையை எதிர்பார்த்து இருப்பார்கள். இஷா முடிந்ததற்கு பிறகு அவ்வளவுதான் படுக்கைக்கு சென்று விடுவார்கள். பிறகு இரவினுடைய நடுப்பகுதியில் எழ ஆரம்பித்து விடுவார்கள். வணக்க வழிபாடுகள், பின்னர் ஸஹருடைய நேரத்திலே இஸ்திக்பார் செய்வார்கள்.
சொல்கிறார்கள் ஹஸன் பஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், ஆம் அவர்கள் இரவிலே நிலையிலே ஸுஜூதிலே ருக்கூவிலே மாறி மாறி அவர்கள் தொழுது கொண்டே இருப்பார்கள். ஸஹருடைய நேரம் வந்துவிட்டால் அந்த இபாதத்தை இஸ்திக்பாரைக் கொண்டு முடிப்பார்கள்.
கண்ணியத்திற்குரியவர்களே!! அல்லாஹ் சுபஹானஹுதஆலா இந்த இரவு வணக்கத்திலே அப்பேற்பட்ட ஒரு பாக்கியத்தை வைத்திருக்கிறான். காபிர்கள் முஃமீன்கள் சமமாக மாட்டார்கள். நல்லவர்கள் பாவிகள் சமமாக மாட்டார்கள். இந்த நல்லவர்களிலும் கூட இரவிலே நின்று வணங்கியவர்கள், அல்லாஹ்விற்கு முன்னால் நின்ற அந்த மக்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு சமமாக மற்றவர்களை அல்லாஹ் ஆக்க மாட்டான்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கேட்கின்ற அந்த தொனியைப் பாருங்கள்;
أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ
எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம்பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருப்பவனா (நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவான்)? (நபியே!) நீர் கேட்பீராக: கல்வி அறிவுடையவரும், கல்வி அறிவில்லாதவரும் சமமாவார்களா? (இந்த குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தான். (அல்குர்ஆன் 39 : 9)
அன்பு சகோதரர்களே! நாம் இன்று உலக மக்கள் இடத்திலே புகழை தேடுகின்றோம். மதிப்பை தேடுகின்றோம். கல்வியைக் கொண்டு, நம்முடைய திறமையைக் கொண்டு அல்லது பதவியைக் கொண்டு, செல்வத்தைக் கொண்டு உலக மக்கள் கொடுத்து விடலாம். நாம் தேடக் கூடிய மதிப்பை அல்லது நாம் தேடக் கூடிய அந்தப் புகழை அவர்கள் கொடுத்து விடலாம். ஆனால், உலக மக்கள் கொடுத்து விட்ட அந்த மதிப்பிற்காக அவர் அல்லாஹ்விடத்திலும் மதிப்புடையவராக இருப்பாரா? என்றால், இல்லை சகோதரர்களே! எத்தனையோ மனிதர்கள் மக்களிடத்திலே மதிப்போடு இருந்தவர்கள். ஆனால், மக்களுடைய ரப்பிடத்திலே கேவலமானவர்களாக இருப்பார்கள்.
அதற்குத்தான் அல்லாஹு சுபஹானஹு தாலா நமக்கு துஆ சொல்லிக் கொடுக்கின்றான்.
وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ
யா அல்லாஹ்! மறுமையிலே எங்களை கேவலப்படுத்தாதே! (அல் குர்ஆன் 3 : 194)
அல்லாஹ்வுடைய கலீல் இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் கேட்கிறார்கள்.
وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
ரஹ்மானே! மக்களை எழுப்பக்கூடிய உன் அடியார்களை எழுப்பக்கூடிய அந்த நாளிலே என்னை நீ இழிவுபடுத்திவிடாதே! கேவலப்படுத்திவிடாதே! (அல்குர்ஆன் 26 : 87)
அல்லாஹ் கொடுக்கக்கூடிய கண்ணியம் எதில் இருக்கிறது தெரியுமா? அல்லாஹ் ஒரு மனிதனை உயர்த்துகின்றான் இரவுத் தொழுகையைக் கொண்டு, அல்லாஹ் கேட்கிறான்.இரவிலே எனக்கு முன்னால் என்னுடைய அதாபை பயந்து, என்னுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து, சுஜூதிலும் நிலையிலும் இருக்கக்கூடிய மனிதனுக்கு பிறர் சமம் ஆகி விடுவார்களா?
هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? (அல்குர்ஆன் 39 : 9)
யார் அறிந்தவர்கள் என்று சொல்கிறான். பட்டம் வாங்கியவர்களை அல்ல. பெரிய டிகிரிகளை குமித்திருப்போர்களை அல்ல. பெரிய புத்திசாலிகளை அல்ல. புத்திசாலிகள் யார்? மறுமையை, நிரந்தரமான வாழ்க்கை என்றும், பிறகு அதற்கான அமல்களை செய்து கொண்டவரும் தான் புத்திசாலிகள்.
அல்லாஹ் சொல்லக்கூடிய புத்திசாலிகள் யார் தெரியுமா? அவர்களை மக்கள் விவரம் இல்லாதவர்கள், விளக்கம் இல்லாதவர்கள், இவர்களுக்கு சம்பாத்திக்கத் தெரியாது, இவர்கள்...எப்படியெல்லாமோ பேசிக் கொள்ளலாம். ஆனால், மறுமையிலே, அல்லாஹு தஆலா அல்லாஹ்வுடைய அந்த ஏட்டிலே புத்திசாலிகள் யார் தெரியுமா? அல்லாஹ்வை வணங்கி அல்லாஹ்வுடைய நெருக்கத்தை பெற்றவர்கள். அன்புக்குரிய சகோதரர்களே! அல்லாஹ் சுபஹானஹு தாலா அப்பேற்பட்ட சிறப்பை அந்த இரவு வணக்கத்தில் வைத்து இருக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: இமாம் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிவு செய்கிறார்கள்:
أَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ الصَّلَاةُ فِي جَوْفِ اللَّيْلِ
பர்லான தொழுகைகளுக்குப் பிறகு மிகச் சிறந்த தொழுகை இரவினுடைய தொழுகை. பர்லான தொழுகைகளுக்குப் பிறகு அடியான் செய்யக்கூடிய உபரியான வணக்க வழிபாடுகளிலே, உபரியான தொழுகைகளிலே மிக சிறந்தது இரவினுடைய தொழுகை. (4)
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 1983
இந்த ஹதீஸிற்கு விளக்கம் எழுதும் போது அறிஞர் இப்னு ரஜபு ஹம்பல் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மூன்று விளக்கங்களை சொல்கிறார்கள். ஏன்? இரவுத் தொழுகை அல்லாஹ்விடத்தில் மிக உயந்ததாக சிறந்ததாக இருக்கிறது என்றால், அது யாருக்கும் தெரியாமல் தனிமையிலே செய்யப்படுகிறது. எனவே அதிலே இஹ்லாஸ் அதிகமாக இருக்கிறது.
இரண்டாவது அந்த தொழுகையிலே ஒரு சிரமம் இருக்கிறது. ஆகவே தான் அல்லாஹ் சுபஹானஹு தாலா அந்த இரவுத் தொழுகையைச் சொல்லும் போது,
وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ
நபியே! நீங்கள் குர்ஆனை ஓதி இரவிலே சிரமப்பட்டு எழுந்து நின்று தொழுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 17 : 79)
சாதாரணமா! களைப்பு இருக்கிறது. ஓய்வு தேவை. நாளை பகலிலே பல காரியங்கள் இருக்கலாம். இருந்தும் கூட அந்த வலிகளை எல்லாம் அல்லாஹ்விற்காக தாங்கிக் கொண்டு, ரப்புக்காகத் தாங்கிக்கொண்டு, முடிவு இல்லாத அந்த மறுமை வாழ்க்கையிலே, நிரந்தரமான அந்த இன்பலோக சுவர்க்கத்திலே அல்லாஹ் என்னைச் சேர்ப்பானே!அ தற்கு நான் நன்றியுள்ளவனாக ஆக வேண்டாமா?
أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنْ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ فَقَالَتْ عَائِشَةُ لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ أَفَلَا أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا فَلَمَّا كَثُرَ لَحْمُهُ صَلَّى جَالِسًا فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَقَرَأَ ثُمَّ رَكَعَ
எப்படி நம்முடைய தாய், நம்முடைய நபி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கும் போது, அல்லாஹ்வின் தூதரே! கால் வீங்கி இப்படி வணங்குகின்றீர்களே! அல்லாஹ் உங்களது முன் பின் பாவங்களை மன்னித்து இருக்கிறானே! நபியவர்கள் சொன்னார்கள்; நான் நன்றியுள்ள ஒரு அடிமையாக இருக்க வேண்டாமா? என்று.
நூல்: புகாரி, எண்: 4460
அடுத்து மூன்றாவதாக அந்த நேரத்திலே ஒரு அடியான் குர்ஆன் ஓதும் போது அது அவனுடைய உள்ளத்திலே ஆழமாக இறங்குகிறது. அந்த குர்ஆனுடைய வசனங்களை அவன் சிந்திப்பதற்கு உண்டான மிகப்பெரிய ஒரு தனிமையை அவன் அடையப் பெறுகிறான். எனவே தான் ரப்புல் ஆலமீன் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இரவுத் தொழுகையைச் சொல்லும்போது,
يَا أَيُّهَا الْمُزَّمِّلُ (1) قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا (2) نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا (3) أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا (4) إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا (5) إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَطْئًا وَأَقْوَمُ قِيلًا
போர்வை போர்த்திக்கொண்டிருப்பவரே! (நபியே!) இரவில் நீர் (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது:) அதில் பாதி (நேரம்). அதில் நீர் சிறிது குறைத்தும் கொள்ளலாம்; அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். (அதில்) இந்த குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுவீராக. நிச்சயமாக நாம் அதிசீக்கிரத்தில், மிக உறுதியான ஒரு வார்த்தையை உம்மீது இறக்கி வைப்போம். நிச்சயமாக இரவில் எழுந்திருப்பது, (ஆத்மாவை) மிக அதிகம் பழக்கி, (அடக்கிவைப்பதுடன்) எதையும் உள்ளமும், நாவும் ஒத்துக்கூறும்படியும் செய்கிறது. (அல்குர்ஆன் 73 : 1-6)
இரவிலே குர்ஆன் ஓதுவது அது உங்களுடைய உள்ளத்திலே ஆழமாகப் பதியும். நீங்கள் அதை சிந்திக்கலாம். அதில் இருந்து நீங்கள் நேர்வழி அடையலாம் என்று அல்லாஹ் சொல்கிறான்.
ஆனால், இங்கே இன்னொரு பிரச்சனை என்ன தெரியுமா? குர்ஆனுடைய மொழியையும் படிப்பது கிடையாது. அரபிக்கும் நமக்கும் சம்பந்தமே இருப்பது கிடையாது. சரி, குறைந் தபட்சம் அதனுடைய மொழி பெயர்ப்பைக் கொண்டாவது குர்ஆனை அணுகலாமா? என்றால், அதற்கும் நம்மிடத்தில் நேரமில்லை என்றால் அல்லாஹ்வுடைய கலாமை புறக்கணித்தவர்கள் என்று நாளை மறுமையிலே அல்லாஹ் நம்மை ஒதுக்கினால் என்ன செய்ய முடியும்? யோசித்துப் பாருங்கள்.
எத்தனையோ தொழுகையாளிகளுக்கு சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு கூட சரியான அர்த்தம் தெரியாது இதுவரை. சூரத்துல் இக்லாஸுக்கு அர்த்தம் தெரியாது. அவர்கள் தொழுகையிலே ஓதுகின்ற திக்ர்கள், தஸ்பீஹ்கள் அத்தஹிய்யாத், தஷஹ்ஹுது, துஆ, ஸலவாத் குறைந்தபட்சம் அடிப்படை அதற்காவது, அதனுடையப் பொருளைப் படித்து வைத்திருக்கிறோமா? நேரம் இருக்கிறதா? பிஸி, என்ன பிஸி? முன்கர் நகீர் வரும் போது அல்லது மலக்குல் மவ்த் வரும்போது சொல்லலாம், நான் பிஸி என்பதாக! முடியுமா?
அல்லாஹ்வுடைய வேதத்தை வார்த்தைகளைக் கொண்டு பலர் மனப்பாடம் செய்துவிட்டார்கள். ஆனால், அதனுடைய அர்த்தம் இல்லாமல் வார்த்தை இருக்கிறதா? சகோதரர்களே! பொருள் இல்லாமல் ஒரு வசனமா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ்விடத்தில் பேசுகிறான்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னார்கள்; அல்லாஹ் ஹதீஸ் குதுசியிலே சொல்கிறான்.
إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلَاتِهِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ
அடியான் தொழுகையிலே குர்ஆன் ஓதினால் அவன் என்னிடத்திலே பேசுகிறான் என்பதாக. அவன் என்னிடத்தில் உரையாடுகிறான் என்பதாக அல்லாஹ் கூறுகிறான். (5)
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 390
குறைந்தபட்சம் நாம் மனப்பாடம் செய்து இருக்கக்கூடிய சூராக்கள், நாம் தொழுகையிலே ஓதக் கூடிய திக்ருகள் அவற்றை அதனுடைய அர்த்தங்களை தெரிந்து உணர்ந்து ஓதுவோமேயானால், நம்முடைய தொழுகை எப்பேற்பட்ட உயிரோட்டமுள்ள தொழுகையாக, இறை நெருக்கத்தைக் கொடுக்கக்கூடியத் தொழுகையாக இருக்கும் சிந்தித்துப் பாருங்கள்! அதுபோன்று தான் இந்த இந்த இரவு தொழுகை என்பது நாம் அல்லாஹ்வுடைய அந்த சொர்க்கத்தை மிக இலகுவாக பெறுவதற்குரிய காரியம் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்.
இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹ் பதிவு செய்கிறார்கள்:
أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصَلُّوا وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ
நீங்கள் ஏழைகள் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; ரத்த உறவுகளை சேர்த்து வாழுங்கள்; மக்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது இரவிலே நீங்கள் தொழுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுடைய அந்த சொர்க்கத்திலே மிக இலகுவாக சஸாமத்தோடு பாதுகாப்போடு, மஹ்ஷரின் அந்த பெரும் அமளிகளில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்களாக நீங்கள் சொர்க்கம் செல்லலாம். (6)
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 2409
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு, மிகப்பெரிய ஒரு பற்றற்ற மனிதர், ரசூலுல்லாஹ்வுடைய நெருக்கத்திற்காக அப்பேர்ப்பட்ட தியாகங்களைச் செய்தவர்கள். கலீபா உமருடைய மகனார். ரசூல் (ஸல்) அப்துல்லாஹ் இப்னு உமரைப் புகழ்கிறார்கள். இந்த சின்ன வயசிலே இபாதத்திலே இவ்வளவு ஆர்வம்! இல்மிலே இவ்வளவு ஆர்வம்! அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதிலே இவ்வளவு ஆர்வம்! சொன்னார்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால், நீங்கள் இரவில் தொழக்கூடியவராக இருந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பிற்குரியவர்களாக இருப்பீர்கள் என்று.
உஹது போரிலே, அவர்களுக்கு வயது குறைவாக இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை.15 வயதுக்கும் குறைவான நிலை. ரசூல் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது ஏறக்குறைய ஒரு 23,24 வயது தான். அன்பு சகோதரர்களே! எல்லா விஷயமும் இருக்கிறது. ஆனால்,
نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ لَوْ كَانَ يُصَلِّي مِنْ اللَّيْلِ فَكَانَ بَعْدُ لَا يَنَامُ مِنْ اللَّيْلِ إِلَّا قَلِيلًا
"அப்துல்லாஹ்! நீங்கள் இரவிலே தொழ ஆரம்பித்து விட்டால் எவ்வளவு உயர்ந்த மனிதராக ஆகி விடுவீர்கள்! அவ்வளவுதான், இந்த ஒரு வார்த்தையை அல்லாஹ்வுடைய தூதரிடம் இருந்து கேட்டது தான், வாழ்நாளெல்லாம் அவர்கள் தஹஜ்ஜத்தை விடவில்லை. ஒரு வார்த்தையை கேட்டது தான் வாழ்நாளெல்லாம் இரவுத் தொழுகையை அவர்கள் விட்டதில்லை".
புஹாரி எண்:1054
இந்த ஹதீஸிற்கு விளக்கம் எழுதும்பொழுது, இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் எழுதுகிறார்கள். யாரெல்லாம் இரவிலே தொழுவார்களோ அவர்களெல்லாம் ரசூலுல்லாஹ்வுடைய வாயினால், ரசூல் (ஸல்) அவர்கள் நாவினால் சிறந்த மனிதர் என்ற அந்தப் புகழுக்கு அந்தப் பட்டத்திற்கு உரித்தானவராக ஆகிவிடுவார்.
இது அப்துல்லாஹ் இப்னு உமருக்கு மட்டும் சொன்னதல்ல. யாரெல்லாம் இரவு தொழுவார்களோ அவர்களுக்கெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள். அவர் சிறந்த மனிதர் என்று.
ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! ரமழான் முடிந்தாலும் இபாதத்கள் முடிவதில்லை. குறிப்பாக ரமழானிலே யார் இபாதத்களோடு அமல்களோடு தங்களுடைய வாழ்க்கையை ஈடுபடுத்தினார்களோ, அவர்கள் இந்த ரமழான் முடிந்ததற்குப் பிறகும் இரவின் ஒரு பகுதியை அல்லாஹ்விற்காக ஒதுக்கிக் கொள்ளட்டும். இரவுனுடைய அந்த தொழுகைக்காக ஒதுங்கிக் கொள்ளட்டும். அந்த நேரத்திலே முடிந்த அளவு தொழுது, அல்லாஹ்விடத்திலே துஆ கேட்டு, இத்தகைய பெரிய இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ளட்டும்.
அல்லாஹு சுபஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அந்தகைய உயர்ந்த நற்பாக்கியத்தைத் தருவானாக! மறதியிலும் அலட்சியசத்திலும் நாம் கழித்த இரவுகளை அல்லாஹுத ஆலா நமக்கு மன்னித்து அருள்வானாக! வரக்கூடிய காலங்களில் அல்லாஹ்வை வணங்கி, வழிபட்டு அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும், அன்பையும் பெற்று, அவனுடைய விசேஷமான நல்லடியார்களில் அல்லாஹுதஆலா என்னையும் உங்களையும் எல்லா முஸ்லிம்களையும் நம்முடைய குடும்பத்தார்களையும் ஆக்கி அருள்வானாக!!
ஆமீன்
குறிப்புகள் :
குறிப்பு 1).
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَا حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْمُهَاجِرِ عَنْ بُرَيْدَةَ الْأَسْلَمِيِّ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ فَقَالَ بَكِّرُوا بِالصَّلَاةِ فِي الْيَوْمِ الْغَيْمِ فَإِنَّهُ مَنْ فَاتَتْهُ صَلَاةُ الْعَصْرِ حَبِطَ عَمَلُهُ (سنن ابن ماجه 686 -)
குறிப்பு 2).
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ شَقِيقٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ مِنْ اللَّهِ مِنْ أَجْلِ ذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ وَمَا أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ الْمَدْحُ مِنْ اللَّهِ (صحيح البخاري4819 -)
குறிப்பு 3)
.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا (صحيح البخاري1761 -)
குறிப்பு 4).
و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَرْفَعُهُ قَالَ سُئِلَ أَيُّ الصَّلَاةِ أَفْضَلُ بَعْدَ الْمَكْتُوبَةِ وَأَيُّ الصِّيَامِ أَفْضَلُ بَعْدَ شَهْرِ رَمَضَانَ فَقَالَ أَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ الصَّلَاةُ فِي جَوْفِ اللَّيْلِ وَأَفْضَلُ الصِّيَامِ بَعْدَ شَهْرِ رَمَضَانَ صِيَامُ شَهْرِ اللَّهِ الْمُحَرَّمِ (صحيح مسلم1983 -)
குறிப்பு 5).
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ فَشَقَّ ذَلِكَ عَلَيْهِ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ فَقَامَ فَحَكَّهُ بِيَدِهِ فَقَالَ إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلَاتِهِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ أَوْ إِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ فَلَا يَبْزُقَنَّ أَحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمَيْهِ ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ فَبَصَقَ فِيهِ ثُمَّ رَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ فَقَالَ أَوْ يَفْعَلُ هَكَذَا (صحيح البخاري390 -)
குறிப்பு 6).
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ وَابْنُ أَبِي عَدِيٍّ وَيَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عَوْفِ بْنِ أَبِي جَمِيلَةَ الْأَعْرَابِيِّ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ قَالَ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ انْجَفَلَ النَّاسُ إِلَيْهِ وَقِيلَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجِئْتُ فِي النَّاسِ لِأَنْظُرَ إِلَيْهِ فَلَمَّا اسْتَثْبَتُّ وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَفْتُ أَنَّ وَجْهَهُ لَيْسَ بِوَجْهِ كَذَّابٍ وَكَانَ أَوَّلُ شَيْءٍ تَكَلَّمَ بِهِ أَنْ قَالَ أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصَلُّوا وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ(سنن الترمذي2409 -)