بسم الله الرحمن الرحيم
ரமழானுக்குப் பிறகு!!
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்புக்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! கண்ணியத்துக்குரிய முஸ்லிம் பெருமக்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவை நினைவூட்டியவனாக, இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அன்புக்குரிய சகோதரர்களே! அல்லாஹு தஆலா நமக்கு வழங்கிய மிகப் பெரிய அருளாகிய ரமழான் மாதத்தை முடித்து ஷவ்வால் மாதத்திலே இருக்கின்றோம். இப்போது நாம் நம்மை பற்றி சில விஷயங்களை சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஒன்று, இந்த ரமழான் நம்மிடமிருந்து எப்படி பிரிந்தது.? இந்த ரமழானில் நாம் என்ன செய்தோம்? அல்ஹம்துலில்லாஹ் ஏதோ சில நன்மைகளை முடிந்த அளவு செய்திருந்து பாவங்களை விட்டுவிலகி இருந்தால் அதற்கு அல்லாஹ் இடத்தில் நன்றி செலுத்த வேண்டும்.
காரணம் அதுவும் அல்லாஹ்வுடைய அருளைகொண்டுதான் முடிந்ததே தவிர சாத்தியமானதே தவிர நம்முடைய திறமையைக்கொண்டு அல்ல. அல்லாஹ்வுடைய அருள் இல்லை என்றால் நம்மால் எதுவும் செய்திருக்க முடியாது. எந்த நன்மைகளையும் நாம் நெருங்கி இருக்க முடியாது.
ரசூலில்லாஹி (ஸல்) அவர்கள் தங்களையை பற்றி கூறுகிறார்கள்; அல்லாஹ்வுடைய அருள் இல்லையென்றால் நாங்கள் தொழுது இருக்கமுடியாது; நாங்கள் நோன்பு இருக்க முடியாது;. நாங்கள் தர்மம் செய்து இருக்கமுடியாது; நாங்கள் ஹிஜ்ரத் செய்து இருக்க முடியாது; . நாங்கள் அல்லாஹ்வுடைய பாதையிலே போர் புரிந்திருக்க முடியாது. .
அல்லாஹ்வுடைய தூதர் ரசூல் (ஸல்) அவர்களே தங்களை பற்றி கூறுகிறார்கள் என்றால் அல்லாஹ்வுடைய அருள் இல்லாமல் எந்த நன்மைகளையும் செய்ய முடியாது என்ற இந்தக் கூற்றுக்கு நாம் எவ்வளவு கடமைப்பட்டு இருக்கிறோம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் .
அடுத்ததாக இந்த ரமழானுக்கு பிறகு அந்த நன்மைகளில், ரமழானில் எப்படி அந்த நன்மைகளை அதிகப்படுத்தி செய்தோமோ அந்த அளவு அடுத்து வரக்கூடிய மாதங்களில் செய்ய முடியவில்லை என்றாலும், நன்மைகளை விட்டு முற்றிலும் தூரமாகிவிடாமல், நன்மைகளை முற்றிலும் விட்டு விடாமல், முடிந்த அளவு அந்த நன்மைகளோடு நெருக்கம் காட்டியவர்களாக, பர்ளான வாஜிபான பிறகு சுன்னத்தான அமல்களை முடிந்த அளவு நாம் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து நடப்பவர்களாக இருக்க வேண்டும். ரமழானோடு இபாதத்துகளை முடித்து விடக்கூடாது .
ஒரு கூட்டம் எப்படி என்றால் ரமழான் வந்ததிற்கு பிறகு எல்லாப் பாவங்களையும் விட்டு விட்டு, ரமழானுக்கு முன்பு அவர்கள் அமல்களிலே காட்டிய அலட்சியங்களை எல்லாம் தவிர்த்து கொண்டு ரமழானிலேயே முழு மூச்காக இபாதத்துகளிலும் நன்மைகளிலும் இருந்தார்கள் .
அவர்கள் என்ன விளங்கிக்கொண்டார்கள்? ரமழான் மட்டும் தான் இபாதத்துக்குரிய மாதம் என்று. அப்படி அல்ல அன்பிற்குறிய சகேதரர்களே! ரமழான் இபாதத்தை அதிகப்படுத்துவதற்குரிய மாதம். ரமழான் வணக்க வழிபாடுகளை அதிகப்படுத்துவதற்குரிய மாதமே தவிர ரமழான் மட்டும் தான் இபாதத்குரிய மாதம் என்று எங்கும் இல்லை. குர்ஆனிலோ ஹதிஸிலோ ரமழான் மட்டும் தான் இபாதத்குரிய மாதம் பாவங்களை விட்டு விலகி இருக்கவேண்டிய மாதம் என்று அப்படி ஒன்றுமில்லை..
ரமழான் மாதம் சென்ற மாதங்களில் கழிந்த மாதங்களில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக, பாவ மன்னிப்புக்காகவும் அதிகமான நன்மைகளை தேடி நஃப்சை பக்குவப்படுத்துவதற்காகவும் கொடுக்கப்பட்ட மாதமே தவிர ரமழானில் மட்டும் இபாதத் செய்யுங்கள்; பிறகு ரமழான் முடிந்தவுடன் இபாதத்தை முடித்துக்கொள்ளுங்கள் என்று நம்முடைய மார்க்கத்தில் நமக்கு வழிகாட்டல் இல்லை.
அன்பு சகோதரர்களே! உண்மையில் ரமழானில் ஒருவர் வணக்க வழிபாடுகளை அதிகப்படுத்தி இருந்திருப்பாரேயானால் . எப்படி அல்லாஹ் உடைய தூதர் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» (صحيح البخاري38 -)
யார் ரமழானில் ஈமானோடும் நன்மையையை எதிர்ப்பார்த்தும் நோன்பு வைப்பாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 38
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» (صحيح البخاري 1901 -)
யார் லைலத்துல் கத்ருடைய இரவிலே ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும். யார் ரமலானில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்பாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 1901
இந்த எல்லா ஹதீஸ்களிலும் நீங்கள் ஒரு விஷயத்தை கவனிங்கள். ஈமானோடும் நன்மையை எதிர் பார்த்தும் என்ற ஒரு நிபந்தனையை அல்லாஹ் உடைய தூதர் (ஸல்) இணைத்து கூறி வருகிறார்கள். ஒரு முஃமினுடைய ஈமான் என்பது ரமழானில் இருக்கும் அதற்குப்பிறகு முடிந்து விடும் என்றால் அது எப்படி ஈமானாக இருக்க முடியும் ? நன்மையை எதிர்ப்பார்ப்பது என்பது ரமழானில் மட்டும் இல்லை. ஒவ்வொரு அமலுக்கும் காலம் எல்லாம் அல்லாஹூத்தாலா நன்மைகளை வாரி வழங்குக்கின்றான்.ரமழானில் நன்மைகளை அல்லாஹ் அதிகப்படுத்துகின்றான் .
அன்பு சகோதர்களே ! உண்மையில் அவர் ஈமானோடும் நன்மையை எதிர்ப்பார்த்து மட்டும் வணங்கி இருப்பாரே என்றால் அந்த ஈமான் அவருக்கு மற்ற பதின்னொன்று மாதங்களிலும் இருக்க வேண்டும். அந்த நன்மையின் எதிர்ப்பார்ப்பு என்பது அவருக்கு மற்ற பதின்னொன்று மாதங்களில் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான் அவர் ரமழானில் ஈமானோடு நன்மை எதிர்ப்பார்த்து அமல் செய்தார் என்பது உண்மையாக இருக்கும். அப்படி இல்லையென்றால் சில அறிஞர்கள் கூறுவதுப்போல அவர் ரமழானை வணங்கினார். அல்லாஹ் பாதுகாப்பானாக !
யார் ஒருவர் ரமழானில் இபாதுக்களை பேணுதலாக செய்து விட்டு அல்லது அதிகமாக செய்துவிட்டு .ரமழான் முடிந்தவுடன் இபாதுத்துகளை முடித்துக் கொண்டாரோ,..குறிப்பாக நம்முடைய நாட்டில் அப்படி பலரை பார்க்கலாம். ஐந்து நேர தொழுகையாளியாக ரமழான் மாதத்திலே மாறி விடுவார்கள்...எப்போது பெருநாள் தொழுதார்களோ அன்றே பள்ளிக்கு தலாக் விட்டுவிடுவார்கள்...முடிந்தது அவ்வளவுத்தான்
அதற்குப்பிறகு ஜும்ஆவிற்கு வருவார்கள். அல்லது அடுத்த பெருநாளை எதிர்ப்பார்ப்பார்கள்...அல்லது அடுத்த ரமழானை எதிர்ப்பார்ப்பார்கள்...அவ்வளவுத்தான் இவர்களைப்பற்றி சில அறிஞர்கள் கூறக்கூடிய கருத்து என்னவென்றால் இவர்கள் அல்லாஹ்வை வணங்கவில்லை.
காரணம் என்ன? அல்லாஹ் ரமழான் மாதத்தில் மட்டும் தான் இருக்கின்றானா? இவர்கள் ரமழானை வணங்கினார்கள். எனவே தான் ரமழான் முடிந்தவுடன் இபாதத்துகளை முடித்து கொண்டார்கள்..இவர்கள் அல்லாஹ்வை வணங்கி இருந்தால் என்றும் உயிரோடு இருக்கக்கூடிய அல்லாஹ்வை எப்போதும் வணங்கிக் கொண்டு இருப்பார்கள்..அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப!!
ஆகவே அன்பிற்குரியவர்களே! யார் அமல் செய்தார்களோ அவர்களுக்கும் பொறுப்பு மிக அதிகமாக இருக்கின்றது..தன்னுடைய அமல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அமல் அல்லாஹ்விடத்தில் நன்மைக்குரிய அமலாக மாற வேண்டும் என்று சொன்னால் அவர் ரமழானுக்கு பிறகும் அந்த அமலோடு தொடர்புடையவராக அந்த அமல்களில் நீடிப்பவராக இருக்க வேண்டும்.
அல்லாஹு தஆலா ஒரு அடியானுக்கு செய்யக்கூடிய மிகப் பெரிய கருணையிலே ஓன்று. அல்லாஹு தஆலா ஓரு அடியானுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய சிறப்பான விசேஷ அருள்களில் ஓன்று அந்த அடியானுக்கு அல்லாஹ் நன்மையை நாடும் போது அவனுக்கு நல்ல அமல் செய்வதற்கான தவ்ஃபீக்கை கொடுத்து அந்த நிலையிலே உயிர் கை பற்றுவது..
ஏன்? எந்த நிலையில் நம்முடைய முடிவு ஏற்படுகின்றதோ அதைக் கொண்டுத்தான் நம்முடைய ஏடுகள் முடிக்கப்படும்..ஓரு மனிதன் பாவத்தில் இருந்தான். ஆனால் அவன் உயிர் பிரியும் போது அவன் நன்மைக்கு வந்து விடுவான் என்றால் அவனுடைய மொத்த பாவங்களும் மன்னிக்கப்பட்டு நல்லவர்களில் அவன் எழுதப்படுகின்றான்.
சிலர் நன்மைகளில் இருந்தார்கள். ஆனால் சில தவறான நட்புகளாளோ அல்லது தவறான பழக்கவழக்கங்களாளோ அந்த நன்மையை விட்டு விலகி பாவத்தில் செல்கிறார். அந்த நிலையில் அவருக்கு மரணம் வந்து விடுகிறது என்றால் அவருடைய முடிவு மிகப் பெரிய கெட்ட முடிவாகி விடும். தான் செய்த நன்மைகளை அவர்கள் அழித்து கொண்டார். அல்லாஹ்விற்கு கோபமான நிலையிலே அவர் தனது முடிவிற்கு சென்று விட்டார்.
அன்பு சகோதர்களே!!. ஆகவே யார் அமல்களில் ஈடுபட்டார்களோ அவர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். இரண்டாவது ஓரு கூட்டம் ரமழான் வந்ததும் அவர்களுக்கு தெரியாது; ரமழான் முடிந்ததும் அவர்களுக்கு தெரியாது.
அவர்களை பொறுத்தவரை பலவகையான மக்களை குறிப்பிடலாம். ரமழானில் கூட நோன்பு நோற்காத மக்கள் நம்மிலே இருந்தார்கள். அலட்சியம் செய்தவர்கள் இருந்தார்கள். பல படித்தவர்கள் இன்றும் கூட ரமழானை கிண்டல் செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.
எதற்கு இந்த காலத்தில் நோன்பு வைத்துக்கொண்டு? அந்த காலத்தில் பசி ,பட்டணியில் இருந்தார்கள். நோன்பு வைத்தார்கள். இப்படி திமிர் தனமாக பேசக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.!
அன்பு சகோதர்களே! இன்னும் பல வகையான சிந்தனை உடையவர்கள் இருக்கிறார்கள். ரமழான் வந்ததும் தெரியவில்லை, சென்றதும் தெரியவில்லை. ஒரு கூட்டம் ரமழான் வந்தது சென்றது ஏதோ நோன்பு நோற்றார்கள் மக்களோடு சேர்ந்து சில தொழுகைகளை தொழுதார்கள். ஆனால் ரமழானுக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அப்படித்தான் ரமழானிலும் இருந்தார்கள். அதுப்போன்று ரமழானும் இப்பொழுது முடிந்துவிட்டது.
அன்பு சகோதரர்களே! அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இப்படிப்பட்டவர்ககளின் விஷயத்திலும் அவன் நிராசையாகி விடுவது இல்லை. ரமழானை பாலாக்கிய குற்றம் ரமழானை வீணடித்த குற்றம் இவர்கள் மீது இருந்தாலும் அல்லாஹு தஆலா இவர்களையும் தன்னுடைய அருளில் இருந்து நிராசை அடைய செய்யவில்லை.
தவ்பாவின் வாசல் அவர்களுக்கு திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. பாவ மன்னிப்பின் வாசல் அவருக்கு திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. தான் ரமழானில் செய்த அலட்சியத்திற்காக, ரமழானில் தன்னிடம் ஏற்ப்பட்ட கவனக்குறைவிற்க்காக ரமழானை பாழாக்கிய குற்றத்திற்காக இப்போது இவர் வருந்தி யா அல்லாஹ்! இனி வரக்கூடிய ரமழானை நான் நல்ல முறையிலே கழிப்பேன்; என்னை மன்னித்துவிடு! என்று அல்லாஹ்விடம் கேட்டால் கண்டிப்பாக அல்லாஹ் அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இவரையும் மன்னிக்க தயாராக இருக்கிறான். இவனுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறான்.
ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே! சில அலட்சியங்கள் ஏற்பட்டாலும் அந்த அலட்சியங்களை நாம் நம்முடைய தெளஃப இஸ்திக்பாரை கொண்டு அல்லாஹ்விடத்தில் மன்னிப்பாக மாற்றிக் கொள்ளலாம் தெளஃப இஸ்திக்பார் என்பது உண்மையாக இருக்க வேண்டும். அதாவது அந்த ஒருமையோடு உருக்கத்தோடு கவலையோடு உண்மையாக இருக்க வேண்டும்.
உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்களை பற்றி வருகிறது அவர்கள் குறிப்பாக ரமழானுடைய கடைசி காலங்களில் தங்களுடைய கவர்னர்களுக்கு தங்களுடைய ஆளுநர்களூக்கு கடிதம் எழுதுவார்கள்! நீங்கள் அதிகமான இஸ்திக்பார் செய்யுங்கள். உங்களது மக்களுக்கும் அதிகமான பாவமன்னிப்பு தேடும் படி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்..
அன்பு சகோதர்களே! இஸ்திக்பார் என்பது ஓரு அமலை நாம் முடிக்கும் போது செய்யவேண்டிய மிகப்பெரிய நன்மையான காரியம். அதன் மூலமாக அந்த அமல் செய்ததற்குப் பிறகு நம்முடைய உள்ளத்தில் பெருமை ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாக்கின்றான். நான் எப்பேற்ப்பட்ட அமலை செய்துவிட்டேன் தெரியுமா? நான் அப்படி செய்தேன், இப்படி செய்தேன்! என்று நஃப்ஸிலே பெருமை வருவதில் இருந்து அல்லாஹ் பாதுகாக்கின்றான்.
இரண்டாவது அந்த அமலில் நமக்கு ஏற்பட்ட மறதி குறைகளை அல்லாஹு தஆலா இந்த இஸ்திக்பாரின் மூலமாக மன்னித்து விடுகிறான்.
ரசூல்லாஹ் (ஸல்) அவர்களின் அமலை பார்கின்றோம். தொழுகைக்குப் பிறகு அவர்கள் இஸ்திக்பார் செய்வார்கள். அதுப்போன்று ஹஜ்ஜுடைய அமல்களுக்கு பிறகு அவர்கள் இஸ்திக்பார் செய்து இருக்கிறார்கள். இப்படி பல நல்ல அமல்களுக்கு பிறகு. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்திக்பார் செய்ததை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆகவே ரமழானுடைய இறுதியிலும் அந்த ரமழான் இறுதி முடிந்ததற்கு பிறகும் இப்போதும்
நாம் அந்த ரமழான் நினைத்து அல்லாஹ்விடத்தில் இஸ்திக்பார் செய்வோமேயானால், ஒன்று அந்த ரமழானில் நாம் செய்த அமல்களில் இருந்த குறைகள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ் அந்த அமல்களை நிறைவாக்கி ஏற்றுக்கொள்வான்.
இரண்டாவது அமல்களில் நம் புறத்திலிருந்து ஏதாவது அலட்சியம் ஏற்பட்டிருந்தால் அந்த அலட்சியத்திற்காக வேண்டியும் நம்முடைய இஸ்திக்பார் இருக்குமானால் அல்லாஹு தஆலா கண்டிப்பாக பிழை பொறுத்து நம்முடைய அமல்களை நிறைவு செய்வான்.
உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குர்ஆனுடைய வசனங்கள் ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி சொன்னார்கள்;
மக்களே! நீங்கள் உங்களுடைய தந்தை ஆதம் எப்படி பாவமன்னிப்பு தேடினாரோ? அப்படி பாவமன்னிப்புத் தேடுங்கள்.
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
எங்கள் இறைவா! நாங்கள் எங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டோம்; எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம். நீ எங்களை மன்னிக்கவில்லை என்றால் நீ எங்களுக்கு கருணை காட்டவில்லை என்றால் நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம். (அல்குர்ஆன் 7 : 23)
அன்பு சகோதரர்களே! இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும் குர்ஆனிலே சொல்லப்பட்டு இருக்கக்கூடிய துஆக்களை நபிமார்கள் வாயிலாக நமக்கு அல்லாஹு தஆலா குர்ஆனிலே கற்றுக் கொடுக்கக்கூடிய துஆக்கள் எப்படிப்பட்டவை என்றால்? காலமெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். யார் வேண்டுமானாலும் கேட்கலாம்
அப்படி ஒரு பொதுவான துஆ...
யார் எந்த தப்பு செய்திருந்தாலும் நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக இந்த துஆவை அவர்கள் செய்திருந்தாலும் கூட அவர்களுக்கு அல்லாஹ் சொல்லிக்கொடுத்த அந்த தூஆவுடைய வாசகம் எப்படி என்றால் எல்லா குற்றவாளிகளுக்கும் எல்லா பாவிகளுக்கும், தங்களுடைய ஆன்மாக்களுக்கு அநீதி இழைத்துக் கொண்ட எல்லோருக்குமே பொதுவாக இருக்கும் படி தான் அந்த துஆக்களுடைய வாசகங்கள் இருக்கும்.
இந்த துஆ, யா அல்லாஹ்! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். இந்த துஆவை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்; நம்முடைய தாய் ஹவ்வா (அலை) அவர்கள் சொன்னார்கள்; எதன் காரணமாக? மரத்திலிருந்து ஒரு கனியை சாப்பிட்ட காரணத்திற்காக.
அன்பு சகோதரர்களே! அதே போன்று இந்த துஆவையும் நாம் நம்முடைய எந்தப் பாவத்திற்கு வேண்டுமானாலும் கூறலாம். காரணம் என்ன? எதுவாக இருந்தாலும் அது தடுக்கப்பட்ட ஒரு காரியமாக இருக்குமேயானால் அதை செய்வது மூலமாக நாம் நமக்குத்தான் தீங்கு இழைத்துக் கொண்டோம்; அதை செய்வது மூலமாக நாம் நமக்குத்தான் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டோம்.
ஆகவே எந்த ஓரு தவறுக்கு பிறகும் அந்த துஆக்கள் கேட்கும் படியாகத்தான் இருக்குமே தவிர ஒரு குறிப்பிட்ட நிலைக்கு நபிமார்கள் கேட்டார்கள்; அவர்களோடு இந்த துஆ முடிந்து விட்டது என்று இருக்காது.
அதுபோன்றுதான் மேலும் அவர்கள் சொல்வார்கள்; நூஹ் அலைஹி வசல்லம் அவர்கள் துஆ கேட்டது போன்று நீங்களும் கேளுங்கள்; நூஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُنْ مِنَ الْخَاسِرِينَ
என் இறைவா! நீ என்னை மன்னிக்கவில்லை என்றால், எனக்கு நீ கருணை காட்டவில்லை என்றால், நான் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவேன். (அல்குர்ஆன் 11 : 47)
எந்த ஒரு பாவத்தை செய்த அடியானாக இருந்தாலும் சரி, அவன்அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்ய வரும்போது இஸ்திக்பார் செய்ய வரும்போது இந்த துஆவை அவன் கேட்கலாம்.
அதுபோன்று தான் இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆவை நினைவு கூறுவார்கள்; இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவார்கள்;
وَالَّذِي أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ
அந்த ரப்பு என்னுடைய ரஹ்மான் எப்படிப்பட்டவன் என்றால் நான் அவனிடத்திலே ஆசை வைக்கிறேன்; நாளை தீர்ப்பு நாளில் கூலி கொடுக்கப்படக்கூடிய நாளிலே அவன் என்னுடைய பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று. (அல்குர்ஆன் 26 : 82)
கலீலுல்லாஹ் இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் எவ்வளவு பணிவாக எவ்வளவு பயத்தோடு விண்ணப்பம் செய்கிறார்கள் பாருங்கள்! ரஹ்மானே! உன் மீது நம்பிக்கை நான் எப்படி வைத்திருக்கிறேன் என்றால் உன்னுடைய அருளின் மீது உன்னுடைய கருணையின் மீது எப்படி ஆசை வைத்திருக்கிறேன் என்றால், தீர்ப்பு நாளில் கூலி கொடுக்கக்கூடிய நாளிலே விசாரணை நாளிலே நீ எனது பாவங்களை எல்லாம் மன்னிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
சகோதரர்களே! நபிமார்களுக்கும் நல்லோர்களுக்கும் இந்த உலகத்திலே ஓரு ஆசை இருந்தது என்றால் இதுதான் அவர்களுடைய ஆசையாக இருந்தது.
உலகத்தை நேசிப்பவர்களுக்கு உலகத்தை தேடக்கூடியவர்களுக்கு உலகத்திலே பல ஆசைகள் இருக்கலாம்; பல தேவைகள் இருக்கலாம். ஆனால் நபிமார்களுக்கு இருந்த தேவை என்ன தெரியுமா? அல்லாஹ் பாவங்களை மன்னிக்க வேண்டும்; ஈமான் இஸ்லாமோடு மரணிக்க வேண்டும்; நல்லோர்களோடு சேரவேண்டும்.
ஆட்சி அதிகாரங்கள் கொடுக்கப்பட்ட யூசுப் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களைப் பாருங்கள்; அவர்களுடைய துஆவை பாருங்கள்.
رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங்களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!' (என்று பிரார்த்தித்தார்.) (அல்குர்ஆன் 12.101)
அன்பு சகோதரர்களே! ஒவ்வொரு நபியுடைய துஆவாகவும் ஆசையாகவும் இருந்தது அல்லாஹ் தன்னை மன்னிக்க வேண்டும் என்று. அல்லாஹ்வுடைய மன்னிப்பு என்பது அவ்வளவு விசாலமான ஒன்று
அதுபோன்றுதான் மூசா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கேட்டதுபோன்று கேளுங்கள் என்று கூறி அவர்களுடைய துஆவை நினைவூட்டுவார்கள். ரப்பு கூறுகின்றான்;
رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
என் இறைவா! எனக்கு நானே தீங்கு இழைத்துக் கொண்டேன்; அநியாயம் செய்துகொண்டேன். ஆகவே என்னை நீ மன்னித்து விடுவாயாக! (அல்குர்ஆன் 28 : 16)
வாழ்க்கையிலே ஒரே ஒருமுறை ஓரு பெரும் பாவத்தை செய்தார்கள். அதுவும் நபித்துவம் கொடுக்கப்படுவதற்கு முன்பு; அதுவும் வேண்டுமென்று அல்ல. தெரியாமல் செய்து விட்டார்கள். உதவி செய்வதற்கு போய் அந்த உதவிக்காக வேண்டி அவர்கள் செய்த ஓர் அடி; சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்களை விலக்குவதற்காக அநியாயம் செய்து கொண்டு இருந்த அந்த எதிரியை கொஞ்சம் வேகமாக விலக்கி விட்டார்கள். அதிலே அவன் விழுந்து இறந்து விட்டான். இதை நினைத்து செய்த அவர்களுடைய தவ்பாவை பாருங்கள்.
என் இறைவா எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன்! என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!
அன்பு சகோதரர்களே! அது போன்று தான் உமர் இப்னு அப்துல் ஹஜீஸ் ரஹிமஹுல்லாஹு மேலும் சொல்வார்கள்; யூனூஸ் (அலை) அல்லாஹ்விடத்தில் எப்படி இஸ்திக்பார் செய்தார்களோ அப்படி நீங்கள் இஸ்திக்பார் செய்யுங்கள்; உங்களுக்கு தெரியும் அல்லாஹ்வுடைய அனுமதி வருவதற்கு முன்பாக அவர்கள் அந்த ஊரை விட்டு வெளியேறி விட்டார்கள். அவர்கள் செய்த குற்றம் இதுதான்.
அன்பு சகோதரர்களே! அதற்குப்பின் மீன் வயிற்றில் அவர்கள் சிக்கிய போது எவ்வளவு வருந்தினார்கள்.
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
உன்னைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமே இல்லை. நீ மிக பரிச்சுத்தமானவன்; நீ மிக தூய்மையானவன். நிச்சயமாக நான்தான் அநியாயக்காரர்களில் ஓருவனாக இருக்கின்றேன். (அல்குர்ஆன் 21 : 87)
ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே! நம்முடைய அந்த நல்லவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்றால் ஒன்று அமல்களோடு நெருக்கமாக இருப்பார்கள். பிறகு அந்த அமல்களுக்கு பிறகு இஸ்திக்பார் செய்துக்கொண்டே இருப்பார்கள். இது நல்லவர்களுடைய உயர்ந்த தரஜா.
இரண்டாவது! சாதாரண ஒரு நிலையில் இருக்கக்கூடிய ஒரு முஃமின் பாவங்களையும் செய்து விடுகிறான். சில நன்மைகளையும் செய்கிறான் என்றால் இப்படிப்பட்ட ஒரு முஃமின் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை எப்போது ஆதரவு வைக்க முடியும் என்றால் அவன் இந்த தவ்பா இஸ்திக்பாரை அதிகப்படுத்தி இந்த பாவத்தில் இருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவனாக இருக்கும் போது.
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
ரப்புல் ஆலமீன் கூறுகின்றான்;
இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள் பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.) (அல்குர்ஆன் 3 : 135)
அன்பு சகோதரர்களே! அப்படி இருக்கின்ற மக்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு தங்களுடைய காலங்களிலே ஏற்பட்ட அந்த குறைகளுக்காக அல்லாஹ்விடத்தில் தவ்பா இஸ்திஃபார் செய்யவேண்டும். அடுத்து வரக்கூடிய காலங்களில் இப்படிப்பட்ட தவறு நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேட வேண்டும்.
அன்பு சகோதரர்களே! ஒன்று இந்த ரமழானுடைய மாதம், கழிந்த ரமழானுடைய மாதம் நமக்கு தக்வாவுக்காக வேண்டிக் கொடுக்கப்பட்ட மாதம். இதனுடைய தொழுகையாக இருக்கட்டும் நோன்பாக இருக்கட்டும் ஒவ்வொரு வணக்கமும் நம்முடைய தக்வாவை அதிகப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட மாதம். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவனுடைய அடியார்களிடம் இருந்து அமல்களை அவர்கள் இடத்தில் இருக்கக்கூடிய தக்வாவிற்கு ஏற்ப அமல்களை ஏற்றுக்கொள்கிறான்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! சஹாபாக்களில் சிலர் இஸ்லாமை ஏற்றார்கள்; ஈமானை ஏற்றார்கள், சில நாட்கள்தான் உயிரோடு இருந்தார்கள்; பின்னர் இறந்து விட்டார்கள். சிலர் கொல்லப்பட்டார்கள். ஆனால் அந்த சிலருடைய சில நாள் அல்லது சில மணி நேர அமல் நம்முடைய வாழ்நாள் அவலைவிட அல்லாஹ்விடத்தில் கனமானதாக இருக்குமா? அல்லது அதிக நாட்கள் நாம் செய்த நம்முடைய நல்ல அமல்கள் அவர்களுடைய சில நாட்கள் அமல்களை விட கனமானதாக இருக்குமா?
என்ன காரணம் சகோதரர்களே? அவர்களுடைய சில நாட்களுடைய அமல்கள் நம்முடைய வாழ்நாள் அமல்களை விட கனமானதாக இருக்கும். அதுபோன்றுதான் ஒவ்வொரு சிறந்த நல்லவர்கள் உடைய அமல்களும். பிறருடைய அமல்கள் உடைய நாட்களும் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தாலும் அவர்களுடைய சில அமல்கள் அல்லாஹ்விடத்தில் அதிகமாக கனமாக இருப்பதற்கு காரணம் அவர்களுடைய உள்ளத்தில் இருந்த தக்வா, அந்த உள்ளத்தில் இருந்த இறையச்சம், ஈமான், யகீன் அதற்கு ஏற்ப அந்த நன்மையும் கனமாக ஆரம்பித்துவிடுகிறது.
ஒரு மனிதன் எந்த அளவுக்கு ஈமானோடும் இறை நம்பிக்கையோடும் அல்லாஹ்வின் மீது உண்டான உறுதியான யகீனோடும் அதுபோன்று பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வுக்கு பிடிக்காத செயல்களை விட்டு விலகி உண்மையான மறுமை பயத்தோடு அல்லாஹ்வுக்கு முன் நின்று வணங்குகிறாரோ அவர் வெற்றியாளர்.
ரப்பு சொல்கிறான்;
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர். அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். (அல்குர்ஆன் 23 : 1,2)
நம்மிலே பலர் உண்மையில் பள்ளிக்கு தொழுகைக்காக தான் வருகிறார்கள் சந்தேகமில்லை. தொழுகைக்கு உளு செய்கிறார்கள். ஆனால் பள்ளிக்கு வரும்போதும் துன்யாவை சிந்தித்துக் கொண்டு, உளு செய்துக்கொண்டு இருக்கும் போதும் துன்யாவை சிந்தித்துக்கொண்டு, பிறகு அல்லாஹ்வை நினைவு கூறுகின்ற நிலையிலும் அல்லாஹ்வை மறந்தவர்களாக .நாவு அல்லாஹ்வை நினைவு கூறுகின்றது. அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வை நினைவு கூறுகின்றது. ஆனால் உள்ளம் அல்லாஹு தஆலாவை நினைவு கூறவில்லை. பிறகு அவர் குர்ஆன் ஓதுகின்றார்; திக்ரூ செய்கின்றார்; .ஸுஜூது செய்கின்றார்; ருகூஃ செய்கின்றார். எல்லாம் அவருடைய நாவு செய்கின்றது. உடல் உறுப்புகள் செய்கின்றன. ஆனால் அவருடைய உள்ளமோ வேறு எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறது.
அன்பு சகோதரர்களே! இப்போது நமக்கு நாம் நீதமாக தீர்ப்பு அளிப்போம்; இந்த தொழுகைக்கு அல்லாஹு தஆலா எப்படி ஒரு கணத்தை ஒரு வெற்றியை ஓர் உயர்வை கொடுப்பான்?
அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; சிலர் தொழுவார்கள்; ஆனால் அவர்களுடைய தொழுகையிலிருந்து அவர்களுக்கு கிடைப்பதோ பத்தில் ஒன்றுதான். (1)
அறிவிப்பாளர்: ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 18879
சலாம் கொடுக்கும்போது நினைவுக்கு வந்துவிடும். நாம் தொழுகையில் இருக்கிறோம் என்று. அதற்கு முன்பு வரை அவருக்கு நினைவு வராது. சலாம் கொடுக்கும்போது நினைவு வந்துவிடும். காரணம் என்ன? ஷைத்தானுக்கு இனி வேலை இல்லை.
அன்பு சகோதரர்களே! நல்லவர்கள் உடைய அமல்கள் அவர்களின் தொழுகை எப்படி இருந்தது ?
அந்தக் காலத்திலே இன்று நாம் அனுபவிக்கக்கூடிய வசதிகளில் எதுவுமே இல்லை. சாதாரண மணலிலே தொழுதார்கள்; கற்கள் இருந்த மணல்களிலே தொழுதார்கள். அவர்களுடைய நெற்றிகள் எல்லாம் காய்ந்திருந்தது. அவர்களுடைய கூரை கடும் வெயில்களை தாங்கக் கூடியதாக இல்லை. மணல் எல்லாம் சுட்டெரிக்க கூடியதாக இருக்கும். இந்த நிலையிலும் அவர்கள் உள்ளத்தைப் பறி கொடுக்காமல் நீண்ட நேரம் நின்று அல்லாஹ்வை வணங்கினார்கள் என்றால் .இன்று எல்லா இன்பங்களையும் சுகங்களையும் அனுபவித்து கொண்டு கொஞ்ச நேரம் கூட நம்மால் நிற்க முடியவில்லையே!
சிலர் சொல்கிறார்கள்! ஐந்து நிமிஷத்துக்கு மேல என்னால தொழுகையில நிற்க முடியவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொழுகை வைத்தார்கள் என்றால் எப்படி நிற்க முடியும்? மனது எங்கேயோ போகுது. சர்வ சாதரணமாக சொல்கிறார்கள்.
சரி ஒருநாள் முடியவில்லை பழகுவோம். இரண்டாவது நாள் முடியவில்லை. எப்படி ஒன்றை பழக முடியும்? எந்த ஒன்றையுமே தொடர்ந்து நாம் செய்யாமல், அதற்காக ஓர் முயற்சி எடுக்காமல் எப்படி நமக்கு வரும்? துன்யாவில் ஒவ்வொன்றுக்காக பயிற்சி எடுக்கிறோம் சாதரணமாக ஒரு டிரய்விங் லய்சன்ஸ் வேண்டும் என்றால் அதற்கு ஒரு மாதம் ஓடுகின்றோம். ஒருநாளைக்கு ஒருமணி நேரம் இரண்டு மணி நேரம் கொடுக்கின்றோம்.
அன்பு சகோதரர்களே! ஒரு இறையச்சம் உள்ள தொழுகையாளியாக ஆகி மறுமையில் வெற்றியடைய வேண்டுமென்றால் அதற்காக நேரம் கொடுப்பதற்கு அவரிடத்திலே வசதி இல்லை என்றால் அல்லது அவருக்கு மனம் இல்லை என்றால் அவர் எந்த சொர்க்கத்தை அல்லாஹ்விடத்தில் எதிர்பார்ப்பார்? அல்லது எந்த பாவமன்னிப்பு அல்லாஹ்விடத்தில் எதிர்பார்ப்பார்? ரப்புக்காக அவர் என்ன செய்தார் என்று யோசித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வுடைய அடியார்களே! அறிஞர்கள் கூறுவது என்னவென்றால் அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இந்த நிறுவையில், அளவையில் மோசடி செய்பவர்களை மிகக்கடுமையாக கண்டிக்கின்றான்;
وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3) أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ (4)لِيَوْمٍ عَظِيمٍ
அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான்.
அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர்.
மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர்.
மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? (அல்குர்ஆன் 83 : 1-5)
அன்பிற்குரியவர்களே! அறிஞர்கள் கூறுகிறார்கள்; மக்களுக்கு கொடுப்பதிலே அடியார்களுக்கு கொடுப்பதிலேயே மோசடி செய்பவனை குறைத்து கொடுப்பவனை இப்படி அல்லாஹ் கண்டிக்கிறான் என்றால், அல்லாஹ்விற்காக செய்யக்கூடிய இபாதத் அல்லாஹ்விற்கு இந்த அடியான் கொடுக்கக்கூடிய இந்த இபாதத்,
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ
என்னுடைய உடல் சார்ந்த வணக்கங்கள், என்னுடைய உயிர் சார்ந்த வணக்கங்கள், என்னுடைய பொருள் சார்ந்த வணக்கங்கள் என் இறைவா! அல்லாஹ்வே! இவை எல்லாம் உனக்கே காணிக்கைகள். அல்லாஹ்விற்கு நன்றியாக அடியான் கொடுக்கின்றான். அல்லாஹ்விற்கு அந்த இபாதத்களுடைய தேவை இல்லை என்றாலும் அடியான் அல்லாஹ்விற்கு கடமையாகவும் மனமுவந்து செய்யக்கூடிய இந்த அன்பளிப்புகள் கடமைகள் அல்லாஹ்விற்காக செய்யப்படக்கூடிய இபாதத்கள் ஆகும். (2)
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 835, 1202
அறிஞர்கள் என்ன கேட்கிறார்கள்? அடியார்களுக்கு கொடுக்கக்கூடிய ஒரு பொருளில் ஒரு மோசடி செய்து குறைத்துக் கொடுப்பவனுக்கு இப்படிப்பட்ட கேடு என்றால் படைத்த இறைவனாகிய ரஹ்மானுக்கு ஒரு அடியான் செய்யக்கூடிய இபாததில் மோசடி செய்தால்!
தொழுகிறான்; ஒழுங்காக ஓதவில்லை. தொழுகிறான்; ஒழுங்காக ருகூ செய்யவில்லை; ஒழுங்காக சுஜூது செய்யவில்லை. கவனத்தைக் கொண்டு வரவில்லை. இப்படியாக ஒரு இபாதத் செய்து இதை அல்லாஹ்விற்கு கடைசியிலே அத்தஹியாத்தில் உட்கார்ந்து அத்தஹிய்யாத்து லில்லாஹி என்று கூறுகிறான்.
அத்தஹிய்யாத்து எப்போது ஓதப்படும்? தொழுகையின் உடைய இறுதி நிலையில். இவன் அந்த காணிக்கையை அல்லாஹ்விற்கு மறந்தவனாக கொடுக்கிறான்
அதுபோன்றுதான் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்; கழிந்த இந்த ரமழான் உடைய நோன்பு இந்த நோன்பை நாம் அல்லாஹ்விற்கு எந்த நிலையிலே சமர்பித்தோம்?அந்த நோன்புடைய இறுதி முடிவு எப்படி இருந்தது?
பெரும்பாலும் எப்படி என்று சொன்னால், மனிதன் ரமழானுடைய மாதம் வந்துவிட்டால் ரமழான் மாதம் வந்துடுச்சி! ரமழான் மாதம் வந்துடுச்சி! அமல் செய்யனும்! முதல் நாளும், இரண்டாவது நாளும், மூன்றாவது நாளும் பள்ளிவாசலை பார்த்தீர்கள் என்றால் எப்பொழுதும் தொழுக வருபவர்களுக்கு இடம் கிடைக்காது. எப்பொழுதும் முன் சஃப்பில் தொழுபவர்களுக்கு இடம் கிடைக்காது. பள்ளிவாசல் நிரம்பி இருக்கும்.
பிறகு மூன்று நாட்களுக்கு அப்படியே குறைந்துக்கொண்டே வரும். பிறகு எப்பொழுதும் போல வழமையாக இருக்குற மாதிரி அந்த மக்கள் இருப்பார்கள்.
என்ன செய்வார்கள் இந்த மக்கள்? அப்பா! ரமழான் முடிந்தது நன்மை செய்து விட்டோம்! கடைசி பத்துல பார்த்துக்கொள்ளலாம். கடைசி பத்துல பார்த்துக்கலாம். சொல்லி இருபத்தி ஓன்றுக்கு வருவார்கள். பிறகு இருபத்தி ரெண்டு.
அவ்வளவுத்தான் முடிந்து போச்சு. அதோடு முடித்துக்கொண்டு இருபத்து ஏழுல பார்த்துக்கலாம். முடிந்தது. பிறகு இருபத்து ஏழு பார்த்தீர்கள் என்றால் சுபஹானல்லாஹ் பள்ளி வாசல்கள் எல்லாம் விளக்கு போட்டு அலங்கரித்து பெரிய ஒரு விருந்து மாதிரி ஏற்பாடு செய்து எல்லாம் வந்து இருப்பார்கள். 27 முடிந்தவுடன் ரமழானும் முடிந்து விட்டது.
பிறகு 28 பார்த்தீங்க என்றால் ஒரு இரண்டு சஃப்பு, மூன்று சஃப்பு இருக்கும். பிறகு 29 பார்த்திங்க என்றால் அது ஒரு நோன்பே கிடையாது. அது ஒரு இரவே கிடையாது. அதற்கு ஒரு மதிப்பே கிடையாது. முடிஞ்சி போச்சி .அப்புறம் பிறை 30 என்று ஒரு அறிவிப்பு செய்தார்கள் என்றால் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற கவலை என்னைக்குமே இருக்காது. 29 ல் பிறை பார்க்கலே பிறை 30 என்று அறிவிப்பு செய்தார்கள் என்றால், என்ன? ஆஹா? முப்பதா? பார்க்கலையா? இப்பத்தான் சிலபேர் சொல்வார்கள்; சவூதியில் உள்ளது எடுத்துக்க முடியாதா? சொல்லிட்டு, முதல் பிறைக்கு மட்டும் நம்ம ஊர்ல பார்க்கனும்னு சொல்வாங்க. இப்போ கடைசில முடிக்கும் போது அங்க பார்த்துட்டாங்களே, கேரளாவுல பார்த்தாங்களே, இங்க பார்த்தாங்களே? ஏன் இவரு அறிவிப்பு செய்யமாட்டுகிறாங்க? இது என்னப்பா வம்பாக இருக்கிறது? எந்த ஊர் பிறையை கொண்டு ஆரம்பித்தீர்களோ? அந்த ஊர் பிறையைக்கொண்டு அறிவிப்பு கொண்டு முடிக்க வேண்டும். ஆரம்பிக்கிறது இந்த ஊர், முடிப்பதற்கு கேரளாவை கொண்டு வந்து விடுவார்கள்.
அப்ப அந்த கடைசி ஓரு நோன்புக்கூட தாங்க முடியாது. அந்த ஒரு இரவு கூடுதலா தொழுவதுகூட தாங்கிக்க முடியாமல் இருக்கிறார்கள். நம்முடைய மனநிலையை அறிந்து கொள்வதற்காக சொல்கிறேன். அப்போ என்ன? அல்லாஹ்விற்கு என்று வந்துவிட்டால் ஏதோ ஏனோதானோ என்று. இந்த மிஷ்கீனுக்கு போடுற சாப்பாடு மாதிரி எப்படி போட்டாலும் மிஸ்கின் என்ன பண்ணுவார் அஸ்தஃபிருல்லாஹல் அழீம்!!
அன்பு சகோதரர்களே!!
وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا
அல்லாஹ் சொல்கிறான்; எதை நீங்கள் உங்களுக்காக அல்லாஹ்விடத்தில் மறுமையில் முற்படுத்திக் கொள்கிறீர்களோ அதைத்தான் மிக சிறந்த நன்மையாக, மிக மகத்தான கூலியாக பெறுவீர்கள். (அல்குர்ஆன் 73 : 20)
நாம் செய்யக்கூடிய தொழுகையாக இருக்கட்டும் அல்லது திக்ருகளாக இருக்கட்டும் அல்லது தர்மமாக இருக்கட்டும் எதை மறுமைக்கும் நாம் முற்படுத்திக் கொள்கிறோமோ அதை மறுமையில் பெற்றுக்கொள்வோம்.
وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ
நாளை மறுமைக்காக நீ என்ன செய்து வைத்து இருக்கிறாய் என்பதை ஆன்மாவே நீ பார்த்துக்கொள். நாளை மறுமைக்காக அல்லாஹ்வைப் பயந்து கொள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 59 : 18)
ஆகவே கண்ணியத்துக்குரியவர்களே! இந்த உலகத்திற்காக அத்தனை உழைப்புகளும் என்ன ஒரு காரியமாக இருந்தாலும் சரி இந்த உலகத்தோடு அழிந்து விடக்கூடியது. நமது கபூரோடு முடிந்து விடக் கூடியது.
மறுமைக்காக நாம் செய்யக்கூடிய அமல்கள் மறுமைக்காக நாம் தேடிக் கொள்ளக்கூடிய அந்த நற்கருமங்கள் தான் நம்மோடு வரக்கூடியது. ஆகவே நம்முடைய கவனங்களை அந்த மறுமைக்குண்டான அமல்களிலே கொடுத்து ரமழான் முடிந்துவிட்டாலும் அமல்களை முடித்துவிடாமல் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு வைப்பது. பிறகு நம்மால் முடிந்த அளவு தர்மங்களை செய்துக்கொண்டே இருப்பது. திக்ருகள் துஆக்கள் இஸ்திஃபார்கள் அதுபோன்று குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பது. இப்படிப்பட்ட அமல்களோடு நாம் நம்முடைய தொடர்புகளை முடித்து விடாமல் அதிகப்படுத்திக் கொண்டே இருப்போமாக! மீண்டும் ஒரு ரமழானை அடைந்து அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளை சிறப்பாக செய்வதற்கு அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் தவ்ஃபீக் செய்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1).
حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِيهِ، أَنَّ عَمَّارًا، صَلَّى رَكْعَتَيْنِ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَارِثِ: يَا أَبَا الْيَقْظَانِ، لَا أَرَاكَ إِلَّا قَدْ خَفَّفْتَهُمَا، قَالَ: هَلْ نَقَصْتُ مِنْ حُدُودِهَا شَيْئًا؟ قَالَ: لَا، وَلَكِنْ خَفَّفْتَهُمَا قَالَ: إِنِّي بَادَرْتُ بِهِمَا السَّهْوَ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الرَّجُلَ لَيُصَلِّي، وَلَعَلَّهُ أَنْ لَا يَكُونَ لَهُ مِنْ صَلَاتِهِ إِلَّا عُشْرُهَا، وَتُسْعُهَا، أَوْ ثُمُنُهَا، أَوْ سُبُعُهَا» حَتَّى انْتَهَى إِلَى آخِرِ الْعَدَدِ (مسند أحمد 18879 -)
குறிப்பு 2).
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا إِذَا كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلاَةِ، قُلْنَا: السَّلاَمُ عَلَى اللَّهِ مِنْ عِبَادِهِ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لاَ تَقُولُوا السَّلاَمُ عَلَى اللَّهِ، فَإِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، وَلَكِنْ قُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِنَّكُمْ إِذَا قُلْتُمْ أَصَابَ كُلَّ عَبْدٍ فِي السَّمَاءِ أَوْ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ، فَيَدْعُو " (صحيح البخاري -835 )