بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
மறதியும் அலட்சியமும் வேண்டாம்
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே சகோதரிகளே! அல்லாஹு சுப்ஹானஹு தஆலா உடைய தக்வாவை -பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாகவும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றுவதுதான் நம்முடைய இவ்வுலக வாழ்க்கை மற்றும் மறு உலக வாழ்க்கை உடைய வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்பதை நினைவூட்டியவனாகவும், அல்லாஹு சுப்ஹானஹு தஆலா உடைய வேதமாகிய அல்குர்ஆனை பற்றிப் பிடிப்பது நபி (ஸல்) அவர்களுடைய சுன்னாவாகிய நேர்வழியை பற்றிப்பிடிப்பது இதுதான் நம்முடைய எல்லா காரியங்களுக்கும் தீர்வாக அமையும் இதுதான் நேர்வழி. இதில் தான் நம்முடைய உயிர்,பொருள், உடல், நம்முடைய அறிவு அனைத்திற்கும் பாதுகாப்பு இருக்கிறது. இதுதான் அல்லாஹ்விடத்திலேயே நெருக்கமாக்கி வைக்கக்கூடிய வழி சொர்க்கத்தின் வழி என்பதை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம் அனைவருடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹு தஆலா இவ்வுலக வாழ்க்கையிலும் நமக்கு வெற்றி தருவானாக மறுமையிலும் வெற்றி தருவானாக. அல்லாஹு சுப்ஹானஹு தஆலா பாதுகாத்து அருள் புரிந்த நல்லவர்களில் என்னையும் உங்களையும் உலக முஸ்லிம்கள் அனைவரையும் ஆக்கி அருள்வானாக ஆமீன்.
மதிப்பிற்குரிய சகோதரர்களே! எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எதிர்பார்த்ததை அடைந்துவிட்டோம். பிறகு அந்த எதிர்பார்த்த புனித மாதம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஒரு பகலாக ஒரு ஒரு இரவாக நம்மை விட்டு பிரிந்து கொண்டே இருக்கின்றது. இறுதியாக அதனுடைய இறுதி பத்தையும் நாம் இன்னும் ஓரிரு நாட்களிலேயே நாம் அடைய இருக்கின்றோம்.
அன்பு சகோதரர்களே! நான் இப்படி ஆகி விடக்கூடாது. எப்படி? எந்த மனிதனை ரமலான் அடைந்து அவன் அல்லாஹ்வுடைய மன்னிப்பைப் பெறாமல் 'எந்த மனிதன் ரமலானை அடைந்து அல்லாஹ்வுடைய மன்னிப்பைப் பெறாமல். அவனை விட்டும் ரமலான் பிரிந்துவிட்டதோ…. அத்தகைய துர்ப்பாக்கிய சாலியாக அத்தகைய கெட்ட நசீப் உடையவனாக நாம் ஆகிவிடக்கூடாது அல்லாஹ் பாதுகாப்பானாக!
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் உடைய துஆவிற்கு ஆமீன் கூறினார்கள். யார் ரமலானைப் பெற்று அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வில்லையோ அவன் நாசமாகட்டும். அவன் இழிவு அடையட்டும் .ரசூலுல்லாஹ் (ஸல்) ஆமீன் என்று கூறினார்கள்.
நூல் :இப்னு ஹிப்பான், எண்: 409
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். இந்த அலட்சியம் இந்த மறதி இவை இரண்டும் பொதுவாக மனிதர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பெரிய ஆபத்தான நோய். ஒன்று மறதி. இரண்டாவது அலட்சியம். இந்த மறதி, அலட்சியம் பொதுவாக உலக காரியங்களில் நமக்கு எது முக்கியமோ அதில் அறவே இருக்கக்கூடாது என்று இருக்கும்போது எந்த ஒரு மார்க்கம் இல்லை என்றால் நம்முடைய மறுமை கேள்விக்குறியாக ஆகிவிடுமோ நம்முடைய ஆகிரத்திற்கு பாதிப்பு ஏற்படுமோ, எந்த பாதிப்பு நிரந்தரமான பாதிப்போ அந்த மறுமையின் விஷயத்திலே மறதி இருக்குமேயானால் அலட்சியம் இருக்குமேயானால் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் அது நமக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை எவ்வளவு பெரிய நஷ்டத்தை கொடுக்கும் என்பதாக.
சகோதரர்களே! ஒரு மனிதன் தொழுகையிலே மறந்து விட்டால் தான் தொழுத ரக்அத்துகள் எத்தனை என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும் கூட நாம் இப்போது இரண்டு தொழுகிறோமா அல்லது மூன்றாவது ரக்அத்தில் இருக்கிறோமா இரண்டாவது ரக்அத்தா? மூன்றாவது ரக்அத்தா? என்ற அந்த அளவுக்கு மறதி ஏற்பட்டாலும்கூட பிறகு தான் இரண்டாவது தான் தொழுகிறேன் மூன்றாவது தான் தொழுகிறேன் என்று உறுதி செய்து கொண்டாலும் ஏற்பட்ட மறதிக்காக ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.ஏற்பட்ட தடுமாற்றத்திற்காக ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும். அப்போது மறதி என்பது ஒரு பாவம் ஆகிவிட்டது. தொழுகையில் நமக்கு ஏற்பட்ட அந்த மறதி அலட்சியம் ஒரு பாவமாக ஆகிவிட்டது. அதற்கு பரிகாரமாக இரண்டு ஸஜ்தாக்களை செய்யும்படி அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் வழி காட்டியிருக்கிறார்கள்.
சகோதரர்களே! இந்த ரமலானிலே ஒரு மனிதருக்கு ஒரு முஸ்லிமுக்கு மறதி ஏற்பட்டு விட்டால் அலட்சியம் ஏற்பட்டுவிட்டால் அடுத்த ஒரு ரமலானை இவன் எதிர்பார்த்திருக்க வேண்டும். அடுத்த ஒரு ரமலான் வரை இவன் ஆரோக்கியமாக உயிரோடு வாழ்ந்து அந்த ரமலானை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இவனுக்கு கிடைக்கவேண்டும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது எவ்வளவு ஒரு நீண்ட காரியம் நமக்கு அதற்கு யார் உறுதி கொடுப்பார்கள் நமக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் சகோதரர்களே.
இந்த ரமலானுடைய பாக்கியம் அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்திருக்கிறான் நம்முடைய முன்னோர்களுடைய வாழ்க்கையை பார்க்கும்போதுதான் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் முதன்மையானவர்களாக முதலாமவர்களாக பிறகு நபித்தோழர்கள் பிறகு அவர்களின் அந்த மாணவர்கள் பிறகு அவர்களின் வழித்தோழர்கள் என்று எந்த அளவு இந்த ரமலானுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
ரசூலுல்லாஹ் (ஸல் ) ரமலான் வருவதற்கு முன்பே அதற்குண்டான தயாரிப்பு. பொதுவாக மாதங்களை பிறர் சொல்வதைக் கேட்டு நபி ஸல் அவர்கள் முடிவு செய்து கொண்டே இருப்பார்கள்.ஆனால் ஷஃபான் மாதம் வந்த உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஷஃபான் உடைய பிறையை எண்ண ஆரம்பித்துவிடுவார்கள் .இந்த ஷஃபான் எத்தனை? நாளை ?நாளை? ஷஃபான் மாதம் உடைய ஒவ்வொரு பிறையாக. இன்று 10 அடுத்து 11 ,12 இப்படியாக எண்ணிக் கொண்டே இருப்பார்கள். ரசூல் (ஸல்) அவர்கள் ரமலானுடைய பிறைக்காக வேண்டி.
أَحْصُوا هِلَالَ شَعْبَانَ لِرَمَضَانَ
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 687
எப்பேற்ப்பட்ட முக்கியத்துவம் பாருங்கள். மக்களுக்குச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். ரமலானுடைய மாதம் அருகாமையில் வந்து விட்டது என்பதாக. ரமழானுடைய மாதத்தை அடைய பெறுவதற்காக பிறைகளைப் பாருங்கள் என்று கட்டளையிட்டார்கள் .
சகோதரர்களே! அத்தோடு இந்த ரமலானுடைய அம்மாதத்தில் நுழைந்துவிட்டால் நபி (ஸல்)அவர்களுடைய நோன்பு குர்ஆன் ஓதுவது, இபாதத்தில் இருப்பது, இரவு வணக்கங்கள் இப்படி முந்திய இருபது இரவுகளிலே பல வணக்க வழிபாடுகளில் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவார்கள். பிறகு இந்த இறுதி பத்து வந்து விடுமேயானால் மற்ற மக்களிடத்திலே முந்திய 20 நாட்களிலேயே கொஞ்சம் கூடுதல் குறைவாகவோ அல்லது வேறு ஏதோ ஒரு வகையிலே சில பழக்கவழக்கங்களில் இருந்தாலும் கூட அனைத்து விதமான மக்கள் தொடர்பையும் தங்களுடைய மனைவிமார்கள் தொடர்பை கூட ரசூலுல்லாஹ் (ஸல்) ஒதுக்கிவிட்டு அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கி விடுவார்கள்.(2)
புகாரி எண் 2024,முஸ்லிம் எண்1174
وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا
ரப்பு சொல்லுகிறான்; நபியே! நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் முற்றிலுமாக ஒதுங்கி விடுங்கள். (அல்குர்ஆன் 73 : 8)
அன்பு சகோதரர்களே! நிரந்தர துறவறம் என்பது நம்முடைய மார்க்கத்தில் இல்லை. ஒரு மனிதன் இறை வழிபாட்டிற்கு இபாதத்திற்கு எனக்கு மனைவி பிள்ளைகள் இடையூறாக இருக்கிறார்கள். எனவே எனக்கு மனைவி வேண்டாம், பிள்ளைகள் வேண்டாம், அல்லது திருமணத்திற்கு முன்பே திருமணமே வேண்டாம் அல்லது வியாபாரமே வேண்டாம் என்று சன்னியாசியாக துறவியாக செல்வதற்கு அல்லாஹ்வுடைய தீனில் இடமில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் துறவறத்திற்கு அனுமதி இல்லை.
முற்றிலுமாக இந்த உலக தொடர்புகளை முடித்துவிட்டு இறை வணக்கத்திற்காக ஒதுங்குவதற்கு அனுமதி இல்லை. ஆனால் குடும்ப தொடர்புகளில் இருந்து கொண்டு பொருளாதாரத் திட்டங்களில் இருந்து கொண்டு கொடுக்கல் வாங்கல் தொழில் துறை வேலை அலுவலகங்களில் இருந்து கொண்டு அதிலிருந்து ஒரு நேரத்தை அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை முழுமையாக அல்லாஹ்விற்கு ஒதுக்கவேண்டும் என்பது அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் வழிகாட்டல். தொழுகை உடைய நேரம் வந்துவிட்டதா அத்துணை உலக தொடர்புகளையும் முறித்துக்கொண்டு அதாவது நிறுத்திவிட்டு என்னுடைய ரப்புடைய தொடர்புக்காக நான் இப்போது ஒதுக்குகிறேன்.(3)
புகாரி எண்: 5363, சுனன் குப்ரா-பைஹகி எண்: 3170
ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் எங்களுடன் இருப்பார்கள் வீட்டிலேயே எங்களிடம் பேசுவார்கள், எங்களுக்கு பணிவிடை செய்வார்கள், வீட்டிலுள்ள வேலைகளை செய்வார்கள், ஆனால் தொழுகைக்கு அதான் சொல்லப்பட்டு விட்டால் எங்களை விட்டுவிட்டு அவர்கள் மஸ்ஜிதுக்கு செல்வார்கள்.எப்படி என்றால் அவர்களோ எங்களை அறியாதவர்கள் போல. ஒரு அறியாத மனிதர் இடத்தில் உட்கார்ந்துவிட்டு நமக்கு ஒரு தேவை ஏற்பட்டு விட்டால் எப்படி அந்த இடத்தை விட்டு நாம் எழுந்து செல்வோமா இல்லையா? அவர்களிடத்திலே நாம் போகட்டுமா அனுமதி தருவீர்களா? இன்னும் கொஞ்சம் நேரம் உட்காரட்டுமா? அதெல்லாம் இருக்காது. அப்படி அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய பக்கம் சென்று விடுவார்கள்.
அன்பு சகோதரர்களே! இப்படித்தான் இந்த ரமலான் மாதத்திலே நமக்கு இருக்கக்கூடிய பொருளாதார, அதுபோன்று குடும்பம் சார்ந்த, உறவு சார்ந்த, பணி சார்ந்த மற்ற விதமான பொறுப்புகள் இருந்தாலும்குறிப்பாக இந்த இரவை நாம் அல்லாஹ்விற்காக ஒதுக்கவேண்டும். அந்த இரவிலும் முந்திய இருபது இரவுகளில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கும் ஒரு விசேஷமான சலுகை உங்களுடைய மனைவியுடன் இருக்கலாம். உங்களுடைய பிள்ளைகளோடு இருக்கலாம், குடும்பத்தோடு இருக்கலாம், பிறகு அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா முஃமின்களுக்கு ஒரு விசேஷத்தை தருகிறான். அந்த விசேஷம் எப்படி இந்த கடைசி பத்திலே அதிலும் இந்த இரவு நேரத்திலே நீங்கள் எனக்காக முற்றிலும் ஒதுங்கி விடுங்கள் நீங்கள் இறை வழிபாட்டிற்காக இபாதத்திற்க்காக தொழுகைக்காக திக்ருக்காக குர்ஆன் ஓதுவதற்காக நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
சகோதரர்களே! இப்படிப்பட்ட ஒரு குறிப்பிட்ட அளவுக்குண்டான முற்றிலுமான முழுமையான ஒதுங்குதல் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் நமக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் பிற நாட்களில் பிற நேரங்களில் நமக்கு ஏற்படக்கூடிய அந்த மறதி அலட்சியம் அல்லது சோம்பேறித்தனம் இதற்கெல்லாம் இந்த நாள் இந்த இரவுகள் நமக்கு கஃப்பாராக நம்முடைய பாவ மன்னிப்புக்கு காரணமாக நம்முடைய நன்மைகள் அதிகமாகுவதற்கு காரணமாக அல்லாஹு தஆலா ஏற்படுத்திவிடுகின்றான்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ (صحيح البخاري1884 -)
புகாரி எண் :2024, முஸ்லிம் எண் :1174
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எப்படி கூறுகிறார்கள் பாருங்கள். அவர்களுடைய செயல்பாட்டை பாருங்கள். ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். இமாம் புகாரி இமாம் முஸ்லிம் ரஹீமஹுல்லாஹு பதிவு செய்கிறார்கள். இந்த இறுதிப் பத்து வந்துவிட்டால் நபி (ஸல்)அவர்கள் முழு இரவிலும் விழித்திருப்பார்கள். மனைவிகளை எழுப்பி விடுவார்கள். தன்னுடைய கீழ்ஆடையை இறுக்கிக் கட்டிக் கொள்வார்கள். இபாதத்திலே தீவிரமாக முயற்சி செய்வார்கள். நபி (ஸல்)அவர்களுடைய சாதாரண நாளுடைய அந்த இபாதத் அந்த முயற்சியிலே ஒரு சிறிய அளவை கூட நாம் எட்டவில்லை. நபி (ஸல்)அவர்கள் பொதுவாக ஒவ்வொரு இரவும்,
يَاأَيُّهَا الْمُزَّمِّلُ (1) قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا (2) نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا (3) أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
நபியே! இரவினுடைய பாதி நீங்கள் அல்லாஹ்விற்காக நின்று வணங்குங்கள். கொஞ்சம் வேண்டுமானால் குறைத்துக் கொள்ளுங்கள். இரவினுடைய சம பாதி நீங்கள் ரப்புக்காக நின்று வணங்குங்கள் கொஞ்சம் வேண்டுமானால் குறைத்துக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 73 :1-4)
إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ
ரசூல் ஸல் அவர்களுடைய இரவு வணக்கம் எப்படி இருந்தது என்றால் ரப்பு கூறி காட்டுகின்றான்.
நபியே! நீங்கள் இரவின் உடைய மூன்று பகுதிகளில் இரவை மூன்றாக ஆக்கினால் சூரியன் மறைந்ததிலிருந்து ஃபஜ்ருடைய நேரம் வரை அந்த பதினோரு மணி நேரத்தை அல்லது பத்தரை மணி நேரத்தை மூன்று பகுதிகளாக ஆக்கினால் மூன்றில் இரண்டு பகுதிகள் ரசூல் (ஸல்)அவர்கள் எல்லா நாட்களிலும் இரவிலே இபாதத்தில் இருப்பார்கள். கொஞ்சம் குறைவாக இருக்கும் அவ்வளவுதான். அடுத்ததாக இரவின் உடைய சம பாதி மேலும் பயணம் அல்லது பயணத்தின் களைப்பு அல்லது உடல் நிலை சரியில்லை என்றால் குறைந்தபட்சம் இரவின் மூன்றில் ஒரு பகுதியாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை இரவில் வணங்குவார்கள். இதற்கு குறைவாக நபி (ஸல்) அவர்கள் இரவு வணக்கம் செய்தது இல்லை. (அல்குர்ஆன் 73 : 20)
அன்பு சகோதரர்களே! எதை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களும் எதை ஸஹாபாக்களும் தாபியீன்களும் ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருந்தார்களோ, இரவிலே இரண்டரை மணி நேரம் மூன்றரை மணி நேரம் தொழுவதை, அதைத்தான் இந்த ரமலானிலே நம்மால் செய்ய முடியாமல் இருக்கிறது. ஆண்டெல்லாம் செய்தை இந்த ஒரு மாதத்திற்கு கூட செய்வதற்கு நாம் திணறிக் கொண்டிருக்கிறோம். மூச்சு முட்டுகிறது மயக்கம் வருகிறது. இடுப்பு வலி, குறுக்குவலி, நஃப்ஸ், ஷைத்தான் விளையாடுகிறான், என்னென்ன பிரச்சனைகள் மூட்டுகின்றான், ஏதோ உலகத்தில் சுனாமி வந்தது போல் இப்படியா அப்படியா அன்பு சகோதரர்களே !கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இதே கடைசி பத்து வந்துவிட்டால் இரவின் முழு பகுதியையும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) இபாதத்துக்காக ஒதுக்கி விடுவார்கள்.
ஏன் சகோதரர்களே! அல்லாஹு தஆலா அந்த கடைசி பத்திலே லைலத்துல் கதர் என்ற அந்த இரவை வைத்திருக்கிறான்.
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
குர்ஆன் இறக்கப்பட்ட அந்த இரவு لوح محفوظ என்ற பதிவேட்டில் இருந்து குர்ஆன் இறக்கப்பட்டது முதல் வானத்திற்கு, இந்த கடைசி பத்தில் இருக்கக்கூடிய இந்த புனிதமான இரவு தான் இந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. (அல்குர்ஆன் 97 : 1)
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு இஸ்ரவேலர்களில் பல நூறு ஆண்டுகள் இபாதத்திலே கழித்தவர்களை பற்றிக் கூறியபோது சஹாபாக்கள் கவலைப்பட்டார்கள். பல முறை நீங்கள் படித்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள். நமக்கும் ஸஹாபாக்களுக்கும் உண்டான வித்தியாசம் ஸஹாபாக்கள் மறுமைக்காக ஏங்கினார்கள் நாம் உலகத்திற்காக ஏங்குகிறோம்.
சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அமலுக்காக கேள்வி கேட்டார்கள். இன்று நாம் ஒரு ஆலிம் இடத்திலேயே சென்று கேள்வி கேட்பதாக இருந்தால் ஏதாவது வியாபாரத்தில் பரக்கத் வருவதற்காக ஏதாவது அவ்லாத் -குழந்தைகள் இருக்கிறதா அல்லது வேற மாதிரி ஒரு கூட்டமாக இருந்தால் ஏதாவது தாயத் தகடு ஏதாவது இருந்தா வைக்கலாமா மார்க்கத்தை இதற்குத்தான் விளங்கி வைத்திருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! (தஃப்ஸீர் தபரி அல்குர்ஆன் 97 : 1)
சஹாபாக்கள் உடைய கேள்விகள் எல்லாம் நபியே சொர்க்கத்தின் பாதையைக் காட்டிதாருங்கள், அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு உரிய அமலை காட்டி தாருங்கள். மறுமையிலும் நாங்கள் வெற்றி பெறுவதற்கு உண்டான அமலை காட்டித்தருங்கள், நரகத்திலிருந்து அல்லாஹ் எங்களைப் பாதுகாப்பதற்கு உரிய அமலை காட்டிதாருங்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்ரவேலர்களுடைய இபாதத்களை பற்றி சொன்னவுடன் ஸஹாபாக்களுக்கு ஏக்கம் வந்துவிட்டது. அல்லாஹ்வுடைய தூதரே! அவர்கள் அவ்வளவு நீண்ட காலம் வணங்கினார்கள், இபாதத்செய்தார்கள், எங்களுக்கு இந்த ஐம்பது, அறுபது, எழுபது வயதில் நாங்கள் எப்படி அவ்வளவு நன்மைகளை அடைய முடியும் கவலையை பார்த்தீர்களா!
(தஃப்ஸீர் தபரி அல்குர்ஆன் 97:1)
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இந்த நபித்தோழர்களின் கவலையைப் போக்கும் விதமாக இந்த உம்மத்திற்கு சிறப்பான குர்ஆன் இறக்கப்பட்ட அந்த இரவை இந்த உம்மத்திற்கு அல்லாஹு தஆலா அந்த இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆயுல் காலத்தை விட சிறந்ததாக ஆக்கி கொடுத்து இது ஆயிரம் மாதங்களைவிட சிறந்தது இந்த ஓர் இரவில் நீங்கள் இபாதத் செய்வது ஆயிரம் மாதங்கள் இபாதத் செய்வதற்குரிய சிறப்பை விட அதிகமான சிறப்பு உங்களுக்கு கிடைக்கும். ஒரு முஸ்லிமிற்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறப்பு கிடைக்கப்பெற்றால் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அமல் செய்த நன்மை அவனுக்கு கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
(புகாரி எண் 2107, முஸ்லிம் எண் : 1167)
அன்பு சகோதரர்களே! இதை தேடித்தான் ரசூல் (ஸல்) அவர்கள் இருந்தார்கள் முதல் பத்தியிலேயே இருந்தார்கள் எனக்கு கிடைக்கவில்லை இரண்டாவது பத்தில் இருந்தார்கள் சொன்னார்கள் எனக்கு அது கிடைக்கவில்லை மூன்றாவது பத்தில் இருந்தார்கள் இதில்தான் இருக்கிறது இந்த இரவு இந்த கடைசி பத்தில் அதை நீங்கள் தேடுங்கள் என்று குறிப்பாக ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள் என்று ரசூல் (ஸல் ) அவர்கள் சொன்னார்கள். பிறகு அந்த இரவுக்கு உண்டான அடையாளங்களை அல்லாஹ்வுடைய தூதர் ரசூல் (ஸல்)அவர்கள் சொன்னார்கள். மேலும் அந்த இரவிலே நாம் வணங்க வேண்டும் என்பதற்காக மிக சிறப்பான ஒரு அந்த வணக்கத்தையும் அதற்கு உண்டான நன்மையையும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதாவது நின்று வணங்குவது அந்த இரவிலே நின்று இபாதத் செய்வது ஒரு மஸ்ஜிதில் எவ்வளவு தொழுதார்களோ தொழ முடிந்ததோ தொழுங்கள். அதற்குப் பிறகு வீட்டிலே நீங்கள் சென்றதற்கு பிறகும் அந்த இரவு வணக்கத்தை நபிலான தொழுகையில் ஈடுபடலாம் குர்ஆன் ஓதுவதிலே ஈடுபடலாம், திக்ருகளிலே, துஆக்களில் ஈடுபடலாம்.
ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» (صحيح البخاري37 - )
யார் இந்த ரமலானில் ஈமான் -இறை நம்பிக்கையோடு இன்னும் நன்மையை எதிர்பார்த்து அல்லாஹ்விடத்திலே நன்மை ஆதரவு வைத்து நின்று வணங்குவாரோ அவருடைய முந்திய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 1904,1905
சகோதரர்களே! நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது அல்லாஹ்விடத்தில் நமக்கு எவ்வளவு பெரிய அந்த சிறப்பு நன்மை என்று யோசித்துப் பாருங்கள்.
அல்லாஹு தஆலா ஒரு பாவத்திற்காக நம்மிடத்தில் அவன்கேள்விகேட்டு நம்மை நிறுத்தினால் நாம் என்ன பதில் சொல்ல முடியும்? அல்லாஹு தஆலா நம்முடைய பாவங்களை எண்ண ஆரம்பித்துவிட்டால் நம்மால் தப்பிக்க முடியாது. ஆகவேதான் அல்லாஹ்வுடைய தூதர் ரசூல் (ஸல்) அவர்கள் பல அமல்களில் நமக்கு அந்த பாவமன்னிப்புக்கு உண்டான விஷயத்தை சுட்டிக்காட்டினார்கள். இந்த மஃபிரத் என்பது தேடிக் கொண்டே இருக்க வேண்டும் இறுதிவரை பாவ மன்னிப்பு என்ற அந்த விஷயத்தில் ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான நன்மைகள் இருக்கின்றன
குறிப்பாக அந்த லைலத்துல் கத்ர் உடைய இரவில் அதை நாம் தேடும் போது ஒவ்வொரு இரவும் அதற்காக விசேஷமான துஆவை அல்லாஹ்வுடைய தூதர் ஸல் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய கேள்வியைப் பாருங்கள் அல்லாஹ்வுடைய தூதரே! லைலத்துல் கத்ரை நான் பெற்றுக் கொண்டால் அந்த இரவிலே நான் என்ன துஆவை கூறவேண்டும்? சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
قَالَتْ عَائِشَةُ: يَا نَبِيَّ اللهِ، أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ، مَا أَقُولُ؟ قَالَ: " تَقُولِينَ: اللهُمَّ إِنَّكَ عَفُوٌّ (1) تُحِبُّ الْعَفْوَ، فَاعْفُ عَنِّي ") مسند أحمد(25384 -
அல்லாஹ் நீ மிகப்பெரிய பெருந்தன்மையாளன் மிக பெரிய பெருந்தன்மையாளன் அடியார்களின் பாவங்களை மன்னித்து விடுவதில் ஏட்டிலிருந்து அதை அழித்து விடுவதில் நீ மிகப்பெரிய பெருந்தன்மையாளன். பெருந்தன்மையை நீ விரும்புகிறாய். மன்னிப்பின் உடைய இன்னொரு வார்த்தை பெருந்தன்மை. மன்னிப்பை நீ விரும்புகிறாய் ஆகவே நீ பெருந்தன்மையாக என்னை நீ மன்னித்துவிடு.
நூல் : முஸ்னத் அஹ்மத் எண்: 25384, இப்னு மாஜா எண்: 3850, திர்மிதி எண்: 3510
சகோதரர்களே! என்னை மன்னித்துவிடு என்று கேட்டது இரண்டாவது, பெருந்தன்மையாக என்னை மன்னித்துவிடு என்று சொன்னால் மன்னிப்பதற்கு நான் தகுதியானவனா என்று பார்க்காதே அப்படிப்பார்த்தால் அல்லாஹ்விடம் மன்னிப்பு நமக்கு கிடைக்குமா நம்மிடத்தில் என்ன அமல் இருக்கிறது என்ன நிய்யத் இருக்கிறது என்ன குணம் இருக்கிறது? சகோதரர்களே! அவ்வளவு பலவீனத்திலும் அவ்வளவுக்கவ்வளவு குறைகளுக்கும் மத்தியில் நாம் இருக்கிறோம். ஆகவேதான் இந்த குறிப்பான லைலத்துல் கத்ர் உடைய இரவிலே மன்னிப்புக் கேட்கும்போது, யா அல்லாஹ் உன்னுடைய பெருந்தன்மையால் என்னை மன்னித்துவிடு. என்னிடத்திலே ஒரு அமல் இல்லை என்னைப்பற்றி நான் சொல்வதற்கு அல்லது நீ எனக்கு மன்னிப்பு கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதற்கு என்னிடத்தில் தகுதி இல்லை. கண்டிப்பாக அல்லாஹ் தான் நம்மை மன்னிக்க வேண்டும் என்னுடைய அமலை பார்க்காதே என்னுடைய பலவீனத்தை பார்க்காதே.
உன்னுடைய பெருந்தன்மையால் உன்னுடைய அருளால் என்னை மன்னித்துவிடு. சுபஹானல்லாஹ்! யோசித்துப் பாருங்கள். சகோதரர்களே! எவ்வளவு பெரிய ஒரு துஆவை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய மனைவிக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த இஃதிகாஃப் உடைய வணக்கத்தை பொறுத்தவரை இந்த லைலத்துல் கத்ரை தேடி அந்த இரவிலும் அதனுடைய பகலிலும் இபாதத் செய்ய வேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃபிலே மஸ்ஜிதிலே தங்குவது மட்டுமல்லாமல் தனக்கென்று ஒரு திரையை அமைத்துக் கொள்வார்கள். மக்களிடத்திலே பேசாமல் இருப்பதற்காக என்றால் எந்த அளவு இபாதத்துக்காக முற்றிலும் அல்லாஹ்விடம் அவர்கள் ஒதுங்கி விட்டார்கள்.
அன்பு சகோதர்களே! இன்று பல வியாபாரிகளோ அல்லது வேலை செய்யக் கூடியவர்களோ தொழில் நடத்தக் கூடியவர்களோ தங்களுடைய நிர்பந்தத்தை கண்டிப்பாக அவர்கள் உணரலாம். அல்லது கூறலாம். ஆனால் அதற்காக முற்றிலுமாகவே இந்த இரவுகளை புறக்கணித்து விடுவது அல்லது முற்றிலுமாகவே இந்த இபாதத்களை விட்டு அலட்சியமாக இருப்பது என்பது இது மறுமைக்கு உகந்த செயல் அல்ல.
நம்முடைய வியாபாரத்திற்காக நம்முடைய தொழிலுக்காக நம்முடைய உலக தேவைகளுக்காக நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்து கொடுத்ததற்கு பிறகு அதிலிருந்து நம்மால் எவ்வளவு முடியுமோ அதிகமான நேரங்களை அமலுக்காக ஆகிரத்துக்காக ஒதுக்கி அல்லாஹ்வுடைய இல்லங்களில் ஒரு இல்லத்திற்கு வந்து அந்த இடத்திலே நம்முடைய உள்ளத்தையும் நம்முடையும் சிந்தனைகளையும் அல்லாஹ்விற்காக முற்றிலுமாக ஈடுபடுத்தி ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அல்லது சில மணி நேரங்கள் அங்கே இருந்தாலும் முற்றிலுமாக இபாத்திலே ஈடுபட கூடிய அளவிற்கு நம்மை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
சகோதரர்களே! இன்று மிகப் பெரிய சோதனை பலவீனம் என்னவென்று சொன்னால் நமக்கு உண்மையில் நாம் கவனமாக நேரத்தை செலவழித்து இபாத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினால் கண்டிப்பாக நம்மால் செய்ய முடியும். ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு என்னவென்று சொன்னால் என்ன இபாதத் செய்தால் பெரியதாக ஆகப்போகிறது இப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள்.
நான் இபாதத் செய்து என்ன ஆகப்போகிறது. இந்தா செல்கிறோம் வருகிறோம் கூட்டம் கூட்டமாக அடித்துக் கொண்டு போறது மாறி. போதும் இது நமக்கு என்பதாக. அவர்கள் இந்த இபாதத் விஷயத்திலே அமல்களின் விஷயத்திலே தங்களுக்கென்று ஒரு லிமிட்டை வைத்திருக்கிறார்கள். அந்த லிமிட்டை தாண்டமட்டார்கள்.
ஆனால் துன்யா என்று வந்துவிட்டால் உலக ஆசை என்று வந்துவிட்டால் அதற்கு அவர்கள் லிமிட் வைத்திருக்க மாட்டார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் சரி எவ்வளவு வேண்டுமானாலும் சரி.
அன்பு சகோதரர்களே! இதுவல்ல மறுமையை முன்னோக்க கூடிய ஒரு இறை அடியான் உடைய குணம் மறுமையை முன்னோக்க கூடிய மறுமையின் தேட்டம் உடைய ஒரு இறையடியான் உடைய குணம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அமல்கலை தேடித்தேடி செய்வது நன்மைகளை நிறைந்து செய்வது ஆசையோடு செய்வது ஆர்வத்தோடு செய்வது இன்னும் செய்ய முடியுமா என்ற ஏக்கம் அந்த தேடுதல் இருப்பது.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களுடைய இஃதிகாஃப் அவர்களை தொடர்ந்து அவர்களுடைய மனைவிமார்களுடைய இஃதிகாஃப் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா சொல்லுகிறார்கள். இமாம் புகாரி இமாம் முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி பதிவு செய்கிறார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானுடைய இறுதி பத்துகளில் இஃதிகாஃப் இருந்தார்கள் அவர்கள் உயிர் பிரிகின்ற வரை. நபி ஸல் அவர்களுடைய கடைசி ரமலான் வரை கடைசி பத்தில் இஃதிகாஃப் இருந்திருக்கிறார்கள் .அதற்குப் பிறகு அவர்களுடைய மனைவிமார்களும் மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருந்திருக்கிறார்கள்.
புகாரி எண் :2026 முஸ்னது அஹ்மது எண்: 24613
அன்பு சகோதரர்களே! இந்த இஃதிகாஃப் என்பது எல்லா மஸ்ஜிதுகளிலும் இருக்கலாம். நம்முடைய ஊரில் இருக்கக்கூடிய முஹல்லாவில் இருக்கக்கூடிய ஜும்மா தொழுகை நடைபெறக்கூடிய எல்லா மஸ்ஜித்கள் வேண்டுமென்றாலும் இஃதிகாப் இருக்கலாம். இன்று சிலர் ஒரு ஹதீஸை எடுத்துக் கூறி மூன்று பள்ளிகளைத் தவிர வேறு எங்கும் இஃதிகாஃப் இருக்க கூடாது என்பதாக மக்களுக்கு மத்தியிலே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்பு சகோதரர்களே! அப்படி அந்த ஹதீஸ் உறுதியான ஸஹிஹான ஹதீஸாக இருக்குமேயானால் அதற்கு என்ன கருத்தாக அறிஞர்கள் கூறுகிறார்கள் என்றால் மற்ற பள்ளிகளில் இஃதிகாஃப் இருப்பதற்காக அந்தப் பள்ளிவாசலை தேடிச் செல்லக்கூடாது. ஆனால் இஃதிகாஃப் இருப்பதற்காக ஒரு மஸ்ஜிதை நாம் தேடி செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது என்றால் அது அந்த மூன்று மஸ்ஜிதுகள் கஅபத்துல்லா, மஸ்ஜிதுன் நபவி, அல் மஸ்ஜிதுல் அக்ஸா. (4)
முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா:9669
அதுபோக மற்ற மஸ்ஜிதுகளில் இஃதிகாஃப் இருப்பதற்கு அதற்காக தனியாக பயணம் செய்து சிரமப்பட்டு நாம் செல்லக்கூடாது. நம்முடைய முஹல்லாவிலே நம்முடைய ஊரிலே என்ன மஸ்ஜிது இருக்கிறதோ அந்த மஸ்ஜிதிலே நாம் இஃதிகாஃப் இருக்கவேண்டும். காரணம் என்ன குர்ஆனிலே அல்லாஹு தஆலா இஃதிகாஃபை பற்றி சொல்லும்போது.
وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ
நீங்கள் மனைவிகள் இடத்தில் உறவு கொள்ளாதீர்கள். நீங்கள் மஸ்ஜிதிலே இஃதிகாஃப் இருக்கும் போது என்று பொதுவாக சொல்லுகிறான். (அல்குர்ஆன் 2 : 187)
அதுபோன்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கல்வி பயின்ற சஹாபாக்கள் மதினாவில் இருந்து பல இடங்களில் சென்று குடி பெயர்ந்த போது அவர்கள் அந்தந்த மஸ்ஜிதுகளில் இஃதிகாஃப் இருந்திருக்கிறார்கள். மற்ற மஸ்ஜிதுகளில் இஃதிகாஃப் இருக்கக்கூடாது என்று இருந்திருக்குமேயானால் கண்டிப்பாக அந்த தோழர்கள் செய்திருக்க மாட்டார்கள். அப்படி யாராவது செய்து இருந்தால் அது தப்பாக இருந்திருக்குமேயானால் அதை அறிந்த தோழர்கள் கண்டிப்பாக திருத்தி இருப்பார்கள் கண்டித்து இருப்பார்கள்.
ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே! பொதுவாக எப்படி என்றால் சில ஆலிம்கள் உடைய சில அழைப்பாளர்கள் உடைய மனநிலை எப்படி என்றால் அவர்களும் அமல் செய்ய மாட்டார்கள் அமல் செய்பவர்களையும் அமல் செய்ய விடமாட்டார்கள்.
நன்மையான காரியங்களில் அமல் செய்வதற்கு ஒரு ஹதீஸ் ஹசனுடைய தரஜாவில் இருந்தால் போதுமானது. ஃபர்ழை நிலைநிறுத்துவதற்கு அந்த ஹதீஸ் சஹிஹ் உடைய தரஜாவில் இருக்க வேண்டும்.
சகோதரர்களே! எப்படியாவது மக்கள் அமல் செய்யக்கூடிய ஹதீஸை அதை பலவீனமாக்கி அவர்களை நன்மையிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காகவே அழைப்பாளர்களின் ஒரு கூட்டம் வேலை செய்து கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் ஒரு ஹதிஸை மட்டம் தட்டி பலவீனப்படுத்தி அவ்வளவுதான் முடிந்துவிட்டது அமலை கெடுத்துவிட வேண்டும்.
கண்ணியத்திற்குரியவர்களே! இது ஒரு அழைப்பாளர்களின் குணமாக ஒரு ஆலிமின் குணமாக இருக்காது. எந்த ஹதீஸை அறிஞர்கள் ஹஸன் என்று சொல்லிவிட்டார்களோ அதைத் தோண்டித் துருவி நாம் புதிதாக குறைகளை கண்டுபிடித்து இருக்கிறேன் என்பதாக ஆராய்ச்சி செய்கிறேன் என்பதற்கு அனுமதி இல்லை.
இந்த இஃதிகாஃபை பொருத்தவரை அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களுடைய அமலை நாம் ஸஹிஹுல் புகாரி, முஸ்லிமில் பார்க்கும் போது நபி (ஸல்)அவர்கள் இரவிலே இபாதத்திலே இருந்துவிட்டு சுபுஹ் தொழுததற்க்கு பிறகு அந்த இஃதிகாஃபிற்க்கு என்று அவருக்கு ஒதுக்கப்பட்ட அந்த கூடாரத்திற்கு சென்று விடுவார்கள். (5)
முஸ்லிம் எண் 1172
ஆகவே இந்த ரமலானுடைய பிறை 21 அந்த பிறை பிறக்கும்பொழுதே மஸ்ஜிதுக்குள் வந்துவிடுவது. பிறகு ஷவ்வாளுடைய பிறை பார்த்ததற்கு பிறகு மஸ்ஜிதிலிருந்து செல்வது.
அன்பிற்குரியவர்களே! இந்த இஃதிகாஃப் உடைய சிறப்பு மிகவும் பாக்கியமானது. இஃதிகாஃப் என்பது அல்லாஹ்விற்காக தன்னை முற்றிலும் ஒதுக்கி, அல்லாஹ்வே அடியான் உன்னிடத்தில் வந்து, உனக்காக ஒரு இடத்திலே ஒதுங்கி விட்டேன் என்று தன்னை தானே சமர்ப்பித்து கொள்வது.
அன்பிற்குரியவர்களே! இப்படி ஏராளமான அமல்கள் இருக்கின்றன. குறிப்பாக ஸக்காத்தை கொடுப்பதற்காக தாமதித்து வைத்திருந்தவர்கள் இந்த கடைசிப் பத்து நாட்களில் அதற்குரிய செல்வத்திற்குரிய ஸக்காத்தை நிறைவேற்றுவது. அதுபோன்று சதகா மற்ற நன்மைகள் உறவுகளுக்கும் ஏழைகளுக்கும் அல்லாஹ்வுடைய அடியார்களுக்கும் என்னென்ன சதக்காக்களை கொடுக்க வேண்டும் என்று நிய்யத்து வைத்திருந்தீர்களோ அந்த சதக்காக்களை கொடுப்பதற்கு உண்டான சிறந்த தருணம் நமக்கு இப்போது நெருங்கி விட்டது.
ஆகவே அன்பிற்குரியவர்களே! எந்த அளவு நன்மைகளால் அல்லாஹ்வை நாம் நெருங்க முடியுமோ அந்த நெருங்குவதற்குன்டான காலம் இன்று சொற்பமாக நம்மிடத்தில் இருக்கின்றது. அல்லாஹ் சுபஹானஹு தஆலா , அந்தக் காலத்தைப் பயன்படுத்தி, அந்த நேரத்தைப் பயன்படுத்தி, அல்லாஹ்வுடைய அன்பை மன்னிப்பை அடைவதற்குரிய நற்பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் தந்தருள்வானாக
ஆமீன்
குறிப்புகள் :
குறிப்பு 1).
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ حَجَّاجٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ أَحْصُوا هِلَالَ شَعْبَانَ لِرَمَضَانَ (سنن الترمذي
623 -)
குறிப்பு 2).
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ» (صحيح البخاري-
2024 )
குறிப்பு 3).
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَصْنَعُ فِي البَيْتِ؟ قَالَتْ: «كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا سَمِعَ الأَذَانَ خَرَجَ» (صحيح البخاري-5363)
குறிப்பு 4).
حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ وَاصِلٍ الْأَحْدَبِ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: جَاءَ حُذَيْفَةُ إِلَى عَبْدِ اللَّهِ فَقَالَ: «أَلَا أَعْجَبَكَ مِنْ قَوْمِكَ عُكُوفٌ بَيْنَ دَارِكَ وَدَارِ الْأَشْعَرِيِّ» يَعْنِي الْمَسْجِدَ؟ قَالَ عَبْدُ اللَّهِ: وَلَعَلَّهُمْ أَصَابُوا وَأَخْطَأْتُ، فَقَالَ حُذَيْفَةُ: «أَمَا عَلِمْتَ أَنَّهُ لَا اعْتِكَافَ إِلَّا فِي ثَلَاثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ، وَالْمَسْجِدِ الْأَقْصَى، وَمَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا أُبَالِي أَعْتَكِفُ فِيهِ أَوْ فِي سُوقِكُمْ هَذِهِ» (مصنف ابن أبي شيبة- 9669)
குறிப்பு 5).
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الْفَجْرَ، ثُمَّ دَخَلَ مُعْتَكَفَهُ وَإِنَّهُ أَمَرَ بِخِبَائِهِ فَضُرِبَ، أَرَادَ الِاعْتِكَافَ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، فَأَمَرَتْ زَيْنَبُ بِخِبَائِهَا فَضُرِبَ، وَأَمَرَ غَيْرُهَا مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخِبَائِهِ فَضُرِبَ، فَلَمَّا صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَجْرَ، نَظَرَ، فَإِذَا الْأَخْبِيَةُ فَقَالَ: «آلْبِرَّ تُرِدْنَ؟» فَأَمَرَ بِخِبَائِهِ فَقُوِّضَ، وَتَرَكَ الِاعْتِكَافَ فِي شَهْرِ رَمَضَانَ، حَتَّى اعْتَكَفَ فِي الْعَشْرِ الْأَوَّلِ مِنْ شَوَّالٍ (صحيح مسلم- 1172)
__________