بسم الله الرحمن الرحيم
கவலைகள் நீங்க வேண்டுமா?
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ஸுபஹானஹு தஆலாவைப் போற்றிப் புகழ்ந்தும், வணங்கத்தகுதியான இறைவன் அல்லாஹ் ஒருவன் தான் என்றும் அவனைத் தவிர வணங்கத்தகுதியான இறைவன் வேறு யாரும் இல்லை என்றும் சாட்சி கூறியவனாகவும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும், அல்லாஹு தஆலாவின் ஸலவாத்தும் சலாமும் அவனுடைய தூதர் மீதும், மதிப்பிற்குரிய தூதரின் குடும்பத்தார் மீதும், தூதரின் பாசத்திற்குரிய தோழர்கள் மீதும் நிலவட்டும் என்று அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாகவும், உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அருளையும் மனநிம்மதியையும் சாந்தியையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்வுடைய அன்பை உணர்ந்தவர்களாகவும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை கொண்டு மனநிம்மதி அடைந்தவர்களாகவும், ஸகீனா என்ற விசேஷமான அல்லாஹ்வுடைய அமைதியை கொண்டு அமைதி பெற்றவர்களாகவும் அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!
இவ்வுலக மற்றும் மறுமையின் துக்கங்கள், கவலைகள், சஞ்சலங்கள், அச்சங்கள், குழப்பங்கள், வேதனைகள், பிரச்சனைகள் அனைத்தை விட்டும் என்னையும் உங்களையும் நமது முஸ்லிம் சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்!!
அன்பிற்குரிய சகோதரர்களே! இவ்வுலக வாழ்க்கையில் நாம் பிறக்கும் பொழுதே நம்முடன் ஒட்டிப்பிறந்த ஒன்றுதான் கவலைகளும் சஞ்சலங்களும் அச்சங்களும். சில நேரங்களில் நாம் சந்தோஷமாக இருக்கும்பொழுது திடீரென நமக்கு எப்படித்தான் அந்த கவலை வருகிறதோ?!
காலையில் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் மாலையில் கவலையாக இருப்பதை நாம் பார்க்கிறோம். மாலையில் மகிழ்ச்சியாக இருப்பவர்களை காலையில் கவலையுடன் இருப்பதை காண்கிறோம்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலாவின் சோதனைகளில் ஒன்று இந்த கவலை துக்கம் மன சஞ்சலம்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா மகிழ்ச்சியை கொடுத்தும் ஒரு அடியானை சோதிப்பான்; கவலையை கொடுத்தும் ஒரு அடியானை சோதிப்பான்.
அல்லாஹ் கூறுகிறான்;
وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ
நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 21 : 35)
شَّرِّ – ஷர் என்று சொன்னால் ஒரு மனிதனுக்கு துக்கம் தரக்கூடியது, கவலை தரக்கூடியது. மனிதனுடைய மனதிற்கு எது சங்கடத்தை கொடுக்கக்கூடியதோ அதற்கு சொல்லப்படும்.
خَيْرِ –கைர் என்பது மனிதனுக்கு மனமகிழ்ச்சியை அவனது முகத்தில் ஒரு மறுமலர்ச்சியை ஒரு மனசந்தோஷத்தை கொடுக்கின்றதோ அதற்கு சொல்லப்படும்.
நமது மனதுக்கு கவலைத் தரக்கூடிய ஒரு நிகழ்வு நடந்தாலும் அதுவும் ஒரு சோதனை. நமது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வு நடந்தாலும் அதுவும் ஒரு சோதனை.
நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்றால் ஒரு கவலையோ துக்கமோ நடந்தால் மட்டுமே அதை அல்லாஹ் நமக்களித்த சோதனையாக பார்க்கிறோம். மாறாக செல்வமோ வசதி வாய்ப்புகளோ மகிழ்ச்சியான வாழ்க்கையோ அதை நமக்கு அல்லாஹ் அளித்த நிஃமத்துகளாக மட்டுமே நாம் பார்க்கிறோம். அதை நாம் சோதனையாக என்றுமே நினைப்பதில்லை!
சகோதரர்களே! நாம் இங்கு ஒரு விஷயத்தை கருத்தில் கொள்ளவேண்டும். கண்டிப்பாக அது அல்லாஹ்வுடைய அருட்கொடையாக எப்பொழுது அமையும் என்றால் ஓர் அடியான் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அது அவனுக்கு கிடைக்கப் பெற்றிருந்தால்.
மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி கொண்டிருக்கும் நிலையில் செல்வமோ வசதி வாய்ப்புகளோ அவனுக்கு அமையப் பெற்றிருந்தால் அது அல்லாஹ்வுடைய அருட்கொடையாகவும் பரக்கத்தாகவும் இருக்கும்.
இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்; அதாவது அவ்வாறு அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அருட்கொடையாக செல்வம் ,வசதி வாய்ப்பு ,நல்ல வாழ்க்கை ஆகியவற்றை வழங்கிய பிறகும் அவன் தனது ஈமானையும் இஸ்லாத்தையும் பாதுகாத்து கொண்டவனாக, அல்லாஹ்வுடைய பாதையில் இருந்து திரும்பி விடாமல் தொடர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்பவனாகவும், அவனுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடைகளை எண்ணி பெருமையில்லாமல் பணிவோடு நடப்பதன் மூலமாகவும் தான் அது அவனுக்கு அருட்கொடையாக கொள்ளப்படும்.
மேலும் தனக்கு கொடுக்கப்பட்ட அந்த செல்வத்தில் உறவுகளையும், ஏழைகளையும், அனாதைகளையும் வழிப்போக்கர்களையும், சேர்த்துக்கொண்டு அந்த செல்வத்திற்குரிய ஹக்கை அறிந்து கொண்டால், அந்த செல்வம் கிடைத்த பிறகும் அவன் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக இருக்கும் போது அந்த செல்வம் அவனுக்கு சொர்க்கத்திற்கான காரணியாக அமைந்துவிடும்.
சகோதரர்களே! இப்போது நாம் பார்க்க இருக்கும் விஷயம் என்னவென்று சொன்னால் பொதுவாக நமது வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கவலைகள், நமக்கு சஞ்சலம் தரக்கூடியவை, துக்கம் தரக்கூடியவை நாம் ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவரிடம் அவருடைய கவலைக்கான காரணத்தை கேட்கபோனால் ஒன்று அல்ல இரண்டு அல்ல பல காரணங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள்.
மனிதர்கள் எத்தனை வகையினரோ அத்தனை வகையான கவலைகளும் அந்த கவலைகளுக்கு அவர்கள் கூறும் பல்வேறு காரணங்களும் இருக்கின்றன.
மக்கள், மனம் கவலையாக சஞ்சலமாக இருக்கும் போது அதற்கான ஒரு தீர்வை தேடி தனது கவலையை தான் மறக்க வேண்டுமே என்று பலர் பல்வேறு வழிகளை தேடுகின்றனர்; பல இடங்களுக்கு செல்கிறார்கள்; பல செயல்களை செய்கிறார்கள்; பல மனிதர்களிடத்தில் சென்று தனது மனவேதனைக்கு மருந்து கிடைக்குமா என்று பார்க்கிறார்கள்.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய மார்க்கம், குர்ஆன், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நமது இத்தகைய பிரச்சனைக்கு ஒரு வழிகாட்டுதலை கொடுக்காமல் இருந்திருப்பார்களா? சிந்தியுங்கள்!.
அந்த வழிகாட்டுதலை அறிந்து அதன்படி ஒரு முஸ்லிம் தனது கவலையை போக்குவதற்கும் தனது சஞ்சலத்தை போக்குவதற்கும் முயற்சி செய்யவேண்டும். தனது மனம் அமைதி பெறுவதற்கான வழியை தேட வேண்டும்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமக்கு ஈமானை இஸ்லாமை கொடுத்திருப்பது மிகப்பெரிய அருட்கொடை.
இந்த உலகத்தில் யாருக்கு ஈமானும் இஸ்லாமும் கிடைக்க பெறவில்லையோ அவர்கள் தனது வாழ்க்கையில் சஞ்சலத்திலேயும் துக்கத்திலேயும் உழன்று தங்களையே இறுதியில் மாய்த்துக் கொள்கிறார்கள். இன்னும் நிராசை அடைந்து விடுகிறார்கள் என்பதை பார்க்கும்பொழுது,
ஒரு முஃமினுக்கு அவனுடைய ரப்பாகிய அல்லாஹ் கிடைத்திருப்பது கொண்டு, அவனுடைய திருப்பெயர்களை நினைவு கூறுவது கொண்டு, அவனுடைய திக்ருகளை செய்வது கொண்டு அவனுடைய வேதமாகிய அல்குர்ஆனை ஓதுவது கொண்டு, அவனுடைய நபியாகிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவது கொண்டு, ஓர் அடியானின் உள்ளத்திற்கு ஏற்படக் கூடிய மன அமைதி, மன நிம்மதி மனமகிழ்ச்சி அவனுடைய துக்கமும், சஞ்சலமும் அவனைவிட்டு களைவது இவையாவும் உலகத்தில் பல கோடிகளை செலவழித்தால் கூட முஸ்லிமல்லாதவர்களுக்கு அது கிடைக்கப் பெறாது.
அல்லாஹ் சுபஹானல்லாஹு தஆலா அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனில் எப்படி கூறுகிறான் பாருங்கள்;
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே!) அறிந்துகொள்வீராக. (அல்குர்ஆன் 13 : 28)
நீங்கள் தேடக்கூடிய மன நிம்மதி உங்களது செல்வத்தில் இருக்காது; உங்களது வசதிகளில் இருக்காது; உங்களது பதவியில் இருக்காது; நீங்கள் செல்லக்கூடிய சுற்றுலாத்தலங்களில் இருக்காது; இன்னும் எத்தனை பட்டியலை நீங்கள் வைத்திருக்கிறார்களோ அதில் எதிலேயும் நிம்மதி கிடைக்காது. அல்லாஹ்வுடைய திக்ரைத் தவிர. அவ்வளவு பெரிய சக்தியை அல்லாஹ் திக்ரில் வைத்திருக்கிறான்.
ரப்பு சொல்கிறான்; அல்லாஹ்வுடைய நினைவு ஒன்றில் மட்டும்தான் உள்ளங்கள் நிம்மதி அடைய முடியும்.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ
அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். (அல்குர்ஆன் 29 : 45)
الله أكبر -அல்லாஹ் மிகப் பெரியவன்!
அல்லாஹ்வை நினைவு கொள்வது மிகப்பெரிய காரியம். அதற்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தன்மைகளைக் கொண்டு அல்லாஹ்வை யார் அறிந்தாரோ அவர்களுக்குத்தான் அவனை நினைவு கொள்வதில் உள்ள இனிமை புரியவரும்.
இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் கை கால்கள் கட்டப்பட்டு நெருப்பு ஜுவாலைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வரும் பொழுது எவ்வளவு சாந்தமாக சொல்கிறார்கள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: " كَانَ آخِرَ قَوْلِ إِبْرَاهِيمَ حِينَ أُلْقِيَ فِي النَّارِ: حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الوَكِيلُ (صحيح البخاري4564 -)
نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்) என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன். (அல்குர்ஆன் : 8 : 40)
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 4564.
என்று தனது முழு توكل ஐ வெளிப்படுத்துகிறார்கள்.
ஜிப்ரீல் திரும்பி சென்று விடுகிறார். பிறகு அந்த நெருப்பிற்கு அல்லாஹு தஆலா கட்டளையிட்டான்.
قُلْنَا يَانَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ
(அவ்வாறே அவர்கள் இப்ராஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) "நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!" என்று நாம் கூறினோம். அல்குர்ஆன் 21:69
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும். அவர்களுடைய தோழர்களுக்கும் இப்படி ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.
அப்போது அவர்களுக்கு சொன்னார்கள்;
الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (173) فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ لَمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَاتَّبَعُوا رِضْوَانَ اللَّهِ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ
(சில) மக்கள் அவர்களிடம் (வந்து) ‘‘உங்களுக்கு எதிராக (போர்புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர் (ஆதலால்,) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. மேலும், ‘‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவன் (பாதுகாவலன்)'' என்றும் கூறினார்கள்.
ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே பின்பற்றிச் சென்றார்கள். (பொருளை விரும்பிச் செல்லவில்லை.) அல்லாஹ்வோ மகத்தான கொடையுடையவன். (ஆகவே, பொருளையும் அவர்களுக்கு அளித்தான்.) (அல்குர்ஆன் 3 : 173-174)
அல்லாஹு தஆலா நடக்க இருந்த ஒரு பெரிய யுத்தத்தை மாற்றி விட்டான். அந்த எதிரிகளின் உள்ளத்தில் கோழைத் தனத்தையும் பயத்தையும் போட்டு அவர்கள் கொண்டுவந்த சாமான்களை எல்லாம் விட்டுவிட்டு ஓடச் செய்தான்.
"ஹஸ்புனல்லாஹ்" என்று அவர்கள் கூறிய அந்த ஒரு வார்த்தை. அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்! என்று நபியும் நபித்தோழர்களும் கூறினார்கள்.
அல்லாஹு தஆலா அபூஸுஃப்யான் அவரோடு வந்த மிகப்பெரிய வீரர்கள் அவர்களுடைய உள்ளங்களில் கோழைத் தனத்தையும் பயத்தையும் போட்டான். கொண்டுவந்த அத்தனை சாமான்களையும் மைதானத்திலேயே விட்டுவிட்டு முஸ்லிம்கள் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே பயந்து ஓடி விட்டார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹம்ரா உல் அஸத் என்ற அந்த இடத்திற்கு செல்கிறார்கள். (1)
அங்கே பார்த்தால் அந்த குறைஷிகள் முஸ்லிம்கள் விட்டுச்சென்ற உணவுகள் தானியங்கள் ஆயுதங்கள் இன்னும் எத்தனை சுமைகளை அவர்கள் விட்டுச் சென்றார்களோ அவற்றையெல்லாம் கனீமத்தாக எடுத்துக்கொண்டு அவர்கள் திரும்புகிறார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: சுனன் குப்ரா நஸாயி, எண்: 11017
சகோதரர்களே!அல்லாஹ்வுடைய பெயர் அவ்வளவு வலிமையானது. உள்ளத்தில் எவ்வளவு யகீன் உறுதி இருக்குமோ, அவ்வளவு நிம்மதியும் பாதுகாப்பும் அந்த அடியான் உணருவான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا
அவர் தனது தோழரிடம் கூறினார்; கவலைப்படாதீர்கள்; அல்லாஹ் நம்முடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 9 : 40)
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்களா இல்லையா?
إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ
அதற்கு (மூஸா) "அவ்வாறன்று. நிச்சயமாக என்னுடைய இறைவன் என்னுடன் இருக்கின்றான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் நமக்கு அறிவிப்பான்" என்றார். (அல்குர்ஆன் 26:62)
கடல் என்ன இன்னும் எத்தனை ஆபத்துக்கள் வந்தாலும் சரி, அந்த பிர்அவ்னை போன்று ஆயிரம் பிர்அவ்ன் வந்தால் என்ன? என்னோடு எனது ரப்பு இருக்கிறான் அவன் எனக்கு வழி காட்டுவான்.
சகோதரர்களே! அடக்கி ஆளக்கூடியவன் அல்லாஹ். ஆட்சி செலுத்தக் கூடியவன் அல்லாஹ்!
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப் படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 3 : 26)
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை கொடுக்கிறான். தான் நாடியவர்களிடமிருந்து ஆட்சியை பிடுங்கி விடுகிறான். அவர்கள் ஆட்சி, அதிகாரம் , பலம் , எவ்வளவு பெரிய அந்தஸ்தோடு வாழ்ந்தாலும் சரி. பலம் என்று மக்கள் எதையெல்லாம் கருதுகிறார்களோ அவை அனைத்திற்கும் சொந்தக்காரனாகவே இருந்தாலும் சரி.
அல்லாஹ் நாடுகின்ற வரை தான் அந்த பலம் அவனோடு இருக்கும். அல்லாஹ் அவனுடைய நாட்டத்தை நீக்கிவிட்டால் அவனுக்கு எந்த பலமோ ஆற்றலோ ஆட்சியோ வசதியோ திட்டமோ எதுவுமே அவனிடம் இருக்க முடியாது; அவனை பாதுகாக்க முடியாது; அவனுக்கு பலன் தராது.
பிர்அவ்னை பாதுகாத்தது அவனுடைய படையும் வளமுமா? இல்லவே இல்லை. நமது சம காலத்தில் எத்தனை அதிபர்களையும் மன்னர்களையும் இந்த உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆட்சியிலிருந்து இறக்க முடியாது அசைக்கவே முடியாது என்று எண்ணியவர்கள் எல்லாம் இன்று மண்ணறையில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
அன்பானவர்களே! அல்லாஹு தஆலாவை வேண்டி நிற்பது, அவனை நம்புவது, அவன் பக்கம் ஒதுங்குவது, இந்த எண்ணம் ஒரு முஃமினுடைய உள்ளத்தில் உறுதியை ஏற்படுத்துகிறது.
கவலைகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றால் அல்லாஹ் நம்முடன் இருக்கும் போது நாம் ஏன் சஞ்சலப்பட வேண்டும்? என்ற மனஉறுதி ஏற்பட வேண்டும். கவலைகளோ மன சஞ்சலங்களோ ஏற்படுவது இயற்கை தான். வரலாம்.
ஆனால் அந்த கவலைக்கு பிறகு நிராசையடைந்தவர்களாக பலவீனப்பட்டு, செய்வதறியாது திகைத்து அவன் பாதை மாறி விடக்கூடாது என்பதற்காகத்தான் குர்ஆன் வழிகாட்டுகிறது.
அந்த கவலையில் அவன் எப்படி இருக்க வேண்டும்? எங்கே வர வேண்டும்? எதை நோக்கி அவனது மனம் திரும்ப வேண்டும்?
சிலர் இருக்கிறார்கள்; திடீரென்று அவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். ஏனென்று கேட்டால் மனதிற்கு கவலையாக இருந்தது; மனது சரியில்லை. அதனால் பள்ளிக்கு வரவில்லை என்று சொல்வார்கள்.
இவர்கள் அறியாத மனிதர்கள்! அவர்களுக்கு கவலை ஏற்பட்டால் இன்னும் அதிகமாகத்தானே மஸ்ஜிதுக்கு வரவேண்டும். அதிகமாக தொழுக வேண்டும் அதிகமாக திக்ரு செய்ய வேண்டும். அதிகமாக குர்ஆன் ஓத வேண்டும். அதிகமாக இஸ்திஃபார் செய்யவேண்டும்.
عَنْ حُذَيْفَةَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْرٌ، صَلَّى» (سنن أبي داود1319 -) ]حكم الألباني] : حسن
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஏதேனும் மனவருத்தங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே தொழுகையை நோக்கித்தான் விரைவார்கள்.
அறிவிப்பாளர்: ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னது அஹ்மது எண்: 23299, அபூதாவூத், எண்: 1319.
சந்திரகிரகணமா? சூரியகிரகணமா? இடியா? மழையா? மின்னலா? அல்லது எதிரிகளின் ஆபத்தா? இப்படி எதுவாக இருந்தாலும் அவர்கள் தொழுகையை நோக்கித்தான் செல்வார்கள்.
அன்பானவர்களே! இன்று நமக்கு நம்மை சுற்றி பயம் இல்லையா? நாம் அழிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் இல்லையா? அடுத்த தலைமுறை நமக்கு எப்படி இருக்கும்? வருங்காலம் நமக்கு எப்படி இருக்கும் என்று கவலை இல்லையா? வாழ்வாதாரத்தை பற்றி கவலை இல்லையா? நமது அடுத்த தலைமுறையை நமது இஸ்லாத்தில் எப்படி இருப்பார்கள் என்பதைப் பற்றிய பயமோ கவலையோ நமக்கில்லையா? இப்படி எத்தனை கவலைகளை நாம் எண்ணிக் கொண்டே போகலாம் .
இவற்றுக்கெல்லாம் தீர்வு அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்குவது, அல்லாஹ்வை நினைவு கூறுவது, அல்லாஹ்விடம் மன்றாடுவது.
சிலர், குடும்பங்களில் யாராவது இறந்ததால் அல்லது அவருடைய வியாபாரங்கள் தொழில்துறைகளில் நஷ்டம் ஏற்பட்டதால், நோய் நொடிகளில் அவருடைய குடும்பத்தார்களில் யாராவது சிக்கித் தவிப்பதால் இப்படி வெளிரங்கமான பல காரணங்களால் யார் கவலையில் இருக்கிறார்களோ? அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்கு சில திக்ருகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தருகிறார்கள்.
இமாம் புகாரி, முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கிறார்கள்;
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو عِنْدَ الكَرْبِ يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَرَبُّ العَرْشِ العَظِيمِ» (صحيح البخاري6345 -)
அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன். மிகவும் சாந்தம் உடையவன். அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி. அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவனே வானங்களுக்கும் அதிபதி. பூமிக்கும் அதிபதி. சங்கைமிகு அர்ஷின் அதிபதியும் ஆவான்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6345.
எவ்வளவு மகத்தான வார்த்தைகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.
அல்லாஹ்வின் மகத்துவத்தை உணர்த்தக்கூடிய, அல்லாஹ்வை கண்ணியப்படுத்தக்கூடிய, அல்லாஹ்வின் பக்கம் அவனை நெருக்கமாக்கக் கூடிய மிகப்பெரிய வார்த்தைதான் லா இலாஹ இல்லல்லாஹ்.
நாம் இன்று பொதுவாக மறைவானதை நம்புவதில் மிகவும் பலவீனர்களாக இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
அல்லாஹ்வுடைய முதல் நிபந்தனைகளில் ஒன்று
يُؤْمِنُونَ بِالْغَيْبِ
முஃமின்கள் என்பவர்கள் யார்? அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்.(அல்குர்ஆன் 2 : 3)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்களுடைய பாதங்களை உறுதியாக்கி விடுவான்.(அல்குர்ஆன் 47 : 7)
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர்கள் ஒருவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை கொள்ளவும்.
(அல்குர்ஆன் 3 : 160)
அல்லாஹ்வுடைய உதவி எனக்கு கண்டிப்பாக இருக்கும் அவன் எனக்கு உதவி செய்வான் காரணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனாக அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக எனக்கு வந்தே தீரும் என்ற நம்பிக்கை அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டும்.
நாம் ஒன்றை உதவியாக நினைக்கலாம். ஆனால் அது நமக்கு தீங்காக மாறலாம். ஒன்றை நாம் தீங்காக நினைக்கலாம் ஆனால் அது நமக்கு உதவியாக மாறலாம். அல்லாஹ்வுடைய செயல்பாடுகள் என்பது மனிதனுடைய கற்பனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. அவனுடைய திட்டம் என்பது மனிதர்களுடைய எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது.
சகோதரர்களே! நாம் என்ன நினைக்கிறோம் என்றால் நம்முடைய கவலைகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தி துஆ கேட்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
எனவே மக்கள் எப்போது துஆ விலே உற்சாகம் அடைவார்கள் என்றால் துஆவில் துன்யாவைப் பற்றி கேட்கப்பட்டால், இந்த துன்யாவில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய குழப்பங்களும் கவலைகளும் நீங்க வேண்டும் என்று அவர்களுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டால் மிகவும் சந்தோஷம் அடைவார்கள்.
தோழர்களே! நாம் என்னென்ன கவலைகளுக்காக, கஷ்டங்களுக்காக, துயரங்களுக்காக இப்படி என்னவெல்லாம் மனநிம்மதியை இழக்கச் செய்யும் அனைத்து காரணங்களையும் சொல்லி கேட்பதைவிட அதற்கான தீர்வாய் நபி (ஸல்) அவர்கள் ஒரே வார்த்தையை சொல்லிக் கொடுத்தார்கள். நீங்கள் அல்லாஹ்வை தவ்ஹீதை கொண்டு புகழுங்கள்.
தவ்ஹீதை உங்கள் உள்ளங்களுக்குள் கொண்டு வாருங்கள். உங்களுடைய அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
மேற்சொன்ன இந்த ஹதீஸை நீங்கள் படித்துப்பாருங்கள். கவலை பட்டவர் இதை ஓதினால் அல்லாஹ் உங்கள் கவலையைப் போக்கி விடுவான் என்று இருக்கிறதா? கூறப்பட்டுள்ளதா? துஆவில் எந்த வார்த்தையிலும் நான் கவலையில் இருக்கிறேன் என்றோ என் கவலையை நீக்கு என்பதாகவோ இல்லை.
யாருக்கு கடந்தகாலத்தில் நிகழ்ந்ததை பற்றிய வருத்தம் இருக்குமோ? தமது வருங்காலத்தை பற்றிய துக்கமோ பயமோ இருக்குமோ? அல்லது நிகழ்காலத்தில் இன்று தன்னுடைய நிலை என்னவாக இருக்கும்? என்ற மனசஞ்சலங்களும் கவலைகளும் இருக்குமோ அவர் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு திக்ரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
ஒரு அடியான் அல்லாஹ்வை நம்பி, வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு பரிசுத்தமாக்கி வைத்து, ஈமானை உறுதிப்படுத்தி அல்லாஹ்வைப் புகழும் போது அவனுடைய இறைவன் அவன் மீது சந்தோஷப்பட்டு அவனுடைய அனைத்து கவலைகளையும் துக்கங்களையும் அவனை விட்டு அவன் போக்கி விடுகிறான். அவனுடைய அத்தனை துக்கங்களையும் அல்லாஹ் அவனுக்கு மகிழ்ச்சியானதாக மாற்றி கொடுத்து விடுகிறான்.
இந்த இடத்தில் நாம் ஒரு சம்பவத்தையும் அல்குர்ஆன் கூறக்கூடிய வரலாற்றையும் நாம் இங்கு நினைவு கூற வேண்டும்.
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார். (அல்குர்ஆன் 21 : 87)
சகோதரர்களே! அந்த இக்கட்டான சூழ்நிலையில் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வளவு புலம்பல்களை புலம்பி இருக்கலாம். ஆனால் அவரோ அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தார். அந்த இக்கட்டான நிலைமையில் அல்லாஹ் அவர்களுக்கு அவர்களின் பிரார்த்தனையை ஏற்று உதவி செய்தான்.
யா அல்லாஹ்! உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. நீ பரிசுத்தமானவன்! நிச்சயமாக நானோ தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவர்களில் ஒருவனாக இருக்கிறேன்!
அவ்வளவுதான் சொன்னார்கள். அல்லாஹ் தஆலா அவரை மீன் வயிற்றில் இருந்து காப்பாற்றினான். காப்பாற்றியது மட்டுமில்லை இப்படித்தான் நாம் உங்களையும் காப்பாற்றுவோம்! என்றும் சொல்கிறான்.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் பக்கம் மட்டுமே ஒதுங்கிவிடக் கூடியவர்கள், தங்கள் தவறுகளை நினைத்து வருத்தப்பட்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கக் கூடியவர்கள் இவர்களை அல்லாஹ் கண்டிப்பாக பாதுகாப்பேன் என்று கூறுகிறான்.
அன்பு சகோதரர்களே! இமாம் அபூதாவுத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அஸ்மா பின்த் உமைஸ் மூலமாக ஹதீஸை பதிவு செய்கிறார்கள்;
عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُعَلِّمُكِ كَلِمَاتٍ تَقُولِينَهُنَّ عِنْدَ الْكَرْبِ - أَوْ فِي الْكَرْبِ -؟ أَللَّهُ أَللَّهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا»ٍ» (سنن أبي داود1525 -) ]حكم الألباني] : صحيح
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அஸ்மா பின்த் உமைஸ் அவர்களுக்கு சொல்கிறார்கள்; உனக்கு கவலைகளும் மனசஞ்சலங்கள் கஷ்டங்களும் ஏற்படும்போது, الْكَرْبِ -கர்ப் என்றால் தாங்கிக்கொள்ள முடியாத கஷ்டத்திற்க்கு சொல்லப்படும். அப்படிப்பட்ட நேரங்களில் நீ சொல்லக் கூடிய ஒரு துஆவை நான் உனக்கு சொல்லித் தரட்டுமா? என்று கேட்கிறார்கள்.
أَللَّهُ أَللَّهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا
அல்லாஹ்! அல்லாஹ்வே! என் இரட்சகன் அவனுக்கு எதையும் நான் இணையாக்கமாட்டேன். அல்லாஹ் மட்டுமே எனது இறைவன். எனது ரப்புக்கு நான் எதையும் யாரையும் இணையாக மாட்டேன்.
இதை சொல்லிக் கொண்டே இரு. அல்லாஹுத்தஆலா உன் கவலையைப் போக்கி விடுவான்.
நூல் : அபூதாவூது, எண் :1525.
மனநிம்மதியை வேண்டி சுற்றுலா தலங்களுக்கு செல்ல தேவையில்லை. ஆயிரக்கணக்கான பணங்களை செலவழித்து மனமகிழ்ச்சியை வாங்க வேண்டிய அவசியமில்லை. மன நிம்மதியை தேடி இங்கும் அங்கும் ஓட தேவையில்லை. இந்த துஆவை மட்டும் நாம் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும்.
இந்த துஆ நமக்கு என்ன சுட்டிக்காட்டுகின்றது? என்றால் அல்லாஹ்விடத்தில் முழுமையாக சரணடைந்து விடுவது; அல்லாஹ்விடத்தில் முழுமையான நம்பிக்கையையும் ஈமானையும் வைப்பது; அவனுக்கு நான் எதையும் இணையாக மாட்டேன் என்று தவ்ஹீதை வெளிப்படுத்துவது.
இன்னொரு ஹதீஸை பாருங்கள்; அபூ பக்ரா (ரழி) அறிவிக்க அபூதாவூது ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்;
நீங்கள் ஒன்றை எதிர்பார்ப்பீர்கள். ஆனால் அது உங்களுக்கு தாமதமாகலாம். அல்லது கிடைக்காமல் கூட போகலாம். நீங்கள் ஒரு பிரச்சனையை நினைத்து பயந்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் பயந்த மாதிரியே அந்த பிரச்சனை உங்களை அணுகியும் விடலாம். நீங்கள் அதில் சிக்கியும் விடலாம். அதற்காக வேண்டி நீங்கள் மனம் துவண்டு விட வேண்டிய அவசியமில்லை.
அந்த சிக்கலில் இருக்கும் நிலையிலும் அல்லாஹ்விடத்தில் சரணடைந்து பிரார்த்தனை செய்யக்கூடிய ஒரு துஆவை நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். (1)
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو
யா அல்லாஹ்! உனது கருணையை ரஹ்மத்தை ஆதரவு வைக்கிறேன்.
فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ
என்னை ஒரு கண் சிமிட்டும் நேரம் கூட என்னுடைய ஆன்மாவின் பக்கம் என்னை தனித்து விட்டு விடாதே!
وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ
எனது எல்லா காரியங்களையும் சீர்படுத்தி விடு!
لَا إِلَهَ إِلَّا أَنْتَ
உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.
அறிவிப்பாளர்: அபூ பகரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத், எண்: 5090
ஒரு சிலர், நாம் தமிழிலேயே துஆ செய்யலாமா? நமக்கு வேண்டியது எல்லாம் சுஜூதில் கேட்க முடியுமே? நமது மொழியில் கேட்டால் தானே நமது உள்ளத்தில் இருப்பதை இறைவனிடம் கேட்க முடியும்? என்றெல்லாம் கேட்கிறார்கள்.
சகோதரர்களே! யாருக்கு எவ்வளவு பிரச்சனையோ அந்த எல்லா பிரச்சனைகளுக்குமான துஆவை நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
அல்லாஹ்விடத்தில் கேட்கும் போது நபியவர்கள் இப்படித்தான் கேட்பார்கள். அர்த்தங்கள் நிறைவான விசாலமான ஆனால் வார்த்தைகளில் சுருக்கமானதைக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனிடம் துஆ கேட்பார்கள்.
எல்லா ஹதீஸையும் நீங்கள் படித்துக் கொண்டே வாருங்கள். அதனுடைய ஆரம்பம் தவ்ஹீதாக இருக்கும். அல்லது அதனுடைய முடிவு தவ்ஹீதாக இருக்கும்.
இந்த தவ்ஹீதில் ஓர் அடியான் எவ்வளவு தன்னை உறுதிப்படுத்திக் கொண்டே செல்கிறான்? அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதும் அல்லாஹ்வைச் சார்ந்து நம்பிக்கை வைத்திருப்பதிலும் எவ்வளவு உறுதியாக இருக்கிறான்? இன்னும் முக்கியமாக "ஷிர்க்"-உடைய அத்தனை வழிகளை விட்டும் பெரிய சிறிய இன்னும் அத்தனை விதமான ஷிர்குகளையும் விட்டு நீங்கி ஷிர்கை வெறுத்தவனாக, ஷிர்கை விட்டு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறானோ அப்போது அல்லாஹ் தஆலா அவனுக்கு அப்படி ஒரு நீங்க முடியாத மனநிம்மதியை கொடுக்கிறான்.
அன்பு சகோதரர்களே! இன்னுமொரு துஆவை துயரங்களில் கஷ்டங்களில் துன்பங்களில் உழன்று கொண்டிருப்பவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;
நீங்கள் துஆ செய்யும் போது அந்த துஆவில் அல்லாஹ்வைப் புகழ மறந்துவிடாதீர்கள். நீங்கள் எவ்வளவுதான் கஷ்டத்திலும் துயரத்திலும் வேதனையிலும் இருக்கும் நிலையில் கூட எந்த ஒரு துஆவிலும் அல்லாஹ்வைப் புகழ மறந்துவிடாதீர்கள்!
எந்த நிலையிலும் இதை கூறுங்கள்;
الحمد لله على كل حال
எல்லா நிலைமையிலும் அல்லாஹ்வே போதுமானவன்! அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்!
الحمد الله! الحمدلله!
என்று அல்லாஹ்வின் புகழ்ச்சியை விட்டு ஒருபோதும் நீங்கி விடாதீர்கள்!.
அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களை யா ரஹ்மான்! யா ரஹீம்! என்று அல்லாஹ்வுடைய கருணையின் பெயர்களை கூறிக் கொண்டே இருங்கள்.
அல்லாஹ்விடத்தில் கையேந்தி பிரார்த்தனை செய்யுங்கள்! என்ற ஒழுக்கத்தையும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.
இன்னும் ஒரு ஹதீஸ் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் அறிவிக்க இமாம் அஹ்மத் அவர்கள் பதிவு செய்கிறார்கள்;
யார் ஒருவருக்கு மனத் துக்கங்களும் சஞ்சலங்களும் துயரங்களும் இப்படி எது ஏற்பட்டாலும் சரி அவர் இப்படி துஆ கேட்கட்டும்.
اَللّٰهُمَّ إِنِّي عَبْدُكَ، اِبْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِيْ بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِّنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ، وَنُوْرَ صَدْرِيْ، وَجَلَاءَ حُزْنِيْ، وَذَهَابَ هَمِّيْ أحمد، ۱/۳۹۱، ٤٥۲، والحاكم، ۱/٥۰۹
அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உனது அடிமை. உன் அடிமையின் மகன். உனது அடிமைப் பெண்ணின் மகன். என் உச்சி முடி உன் கையில்தான் இருக்கிறது. என்னில் உன் தீர்ப்பு நிறைவேறியே தீரும். என் விஷயத்தில் உனது தீர்ப்பு மிக நீதமானது. உனக்கென நீ வைத்துக் கொண்ட அல்லது உனது நூலில் கூறியிருக்கும் அல்லது உனது படைப்பினங்களில் ஒருவருக்கு நீ கற்றுக் கொடுத்திருக்கும் அல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான அறிவில் நீ மட்டும் தெரிந்து வைத்திருக்கும் அனைத்து பெயர்களைக் கொண்டும் உன்னிடம் நான் கேட்கிறேன். குர்ஆனை என் உள்ளத்திற்கு வசந்தமாக என் இதயத்திற்குப் பிரகாசமாக. என் கவலையை அகற்றக் கூடியதாக என் துக்கத்தை நீக்கக் கூடியதாக ஆக்கிவிடு!
முற்றிலுமாக அல்லாஹ்விடத்தில் சரணடைந்து விடுவது. அடியாரில் யார் ஒருவர் இறைவனிடத்தில் முழுமையாக சரணடைந்து விடுவார்களோ .... அவர்களுடைய துக்கங்களையும் மனசஞ்சலம் கவலைகளையும் அல்லாஹ் கண்டிப்பாக போக்கி விடுவான்.
அவர்களுடைய துக்கங்களை நீக்குவது மட்டுமல்ல. அவர்களுடைய துக்கங்களுக்கு கவலைகளுக்கு பகரமாக அல்லாஹ் மனதிற்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் வழங்கி விடுவான்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் தோழர்கள் வினவினார்கள் ,"நபியவர்களே! நாங்கள் இந்த துஆவை கற்றுக் கொள்ளட்டுமா? அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்," நீங்கள் மட்டுமல்ல யாரெல்லாம் இந்த துஆவை செவியுறுவார்களோ அவர்களும் இந்த துஆவை கற்றுக் கொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னது அஹ்மது எண்: 4318.
இப்படி அல்லாஹ்வுடைய மார்க்கம் கூறுகின்ற முறையில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கின்ற முறையிலே அல்லாஹ்வுடைய திக்ருகளை கூறி அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தி, நமது பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை துஆவின் மூலமாக தேட வேண்டும். மனசஞ்லங்களை அல்லாஹ் தஆலாவிடம் கூறி சரணடைந்து விடுவதன் மூலமாக தேட வேண்டும்.
இவ்வாறு நமது மனக்கவலைகளுக்கான தீர்வை பெற வேண்டுமே தவிர, நமது மனோ இச்சைகளைப் பின்பற்றி நமது விருப்பங்களுக்கு ஏற்ப, இன்னும் மாற்றார்கள் போல் அல்லாஹ்விற்கு விருப்பமில்லாத அல்லாஹ் வெறுக்கத்தக்க செயல்களின் மூலம் மன மகிழ்ச்சியை தேடுகின்றார்களோ.!
அப்படிப்பட்ட வழியில் ஒரு முஃமின் தேடுவானானால்?
அவனுக்கு மிஞ்சுவது கேவலமாக மட்டுமே இருக்கும். இழிவு தான் கிடைக்கும். பிரச்சினைகள் அதிகமாகுமே தவிர அதிலிருந்து அவன் வெளியேற முடியாது. இன்னும் மன உளைச்சல்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இன்னும் ஒரு பிரச்சனையில் இருந்து அவன் வெளியேறினால் அடுத்ததாக அதைவிட பெரிய பிரச்சினைகளில் அவன் சிக்கி விடுவான்.
யாரொருவர் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித் தராத வழியில் தனது மன நிம்மதியை மன மகிழ்ச்சியை தேடுவாரோ அவர்களுடைய முடிவு கெட்டதாகத் தான் இருக்க முடியும்.
அப்படிப்பட்ட கெட்ட தீய முடிவுகளிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! அழகிய முடிவை அல்லாஹ் நமக்கு தருவானாக !
அல்லாஹ்வை கொண்டு ஆறுதல் பெற்றவர்களாகவும் அல்லாஹ்வுடைய திக்ருகளைக் கொண்டு, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை கொண்டு, அல்லாஹ்வை நினைவு கூறுவதை கொண்டு மன மகிழ்ச்சியையும் மன நிறைவையும் மன ஆறுதலையும் பெறக் கூடியவர்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி வைப்பானாக!
குர்ஆனை ஓதி, அல்லாஹ்வை நினைவு கூறி, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உறுதியாகப் பின்பற்றி அல்லாஹ்விடத்தில் உதவி தேடுபவர்களாக உங்களையும் என்னையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1).
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: لَمَّا انْصَرَفَ الْمُشْرِكُونَ عَنْ أُحُدٍ وَبَلَغُوا الرَّوْحَاءَ، قَالُوا: لَا مُحَمَّدًا قَتَلْتُمُوهُ، وَلَا الْكَوَاعِبَ أَرْدَفْتُمْ، وَبِئْسَ مَا صَنَعْتُمُ ارْجِعُوا، فَبَلَغَ ذَلِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَدَبَ النَّاسَ فَانْتَدَبُوا حَتَّى بَلَغُوا حَمْرَاءَ الْأَسْدِ وَبِئْرَ أَبِي عِنَبَةَ، فَأَنْزَلَ اللهُ تَعَالَى: {الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ} [آل عمران: 172] وَقَدْ كَانَ أَبُو سُفْيَانَ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَوْعِدُكَ مَوْسِمُ بَدْرٍ حَيْثُ قَتَلْتُمْ أَصْحَابَنَا، فَأَمَّا الْجَبَانُ فَرَجَعَ، وَأَمَّا الشُّجَاعُ فَأَخَذَ أَهُبَّةَ الْقِتَالِ وَالتِّجَارَةِ، فَلَمْ يَجِدُوا بِهِ أَحَدًا وَتَسَوَّقُوا، فَأَنْزَلَ اللهُ تَعَالَى {فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِنَ اللهِ وَفَضْلٍ لَمْ يَمْسَسْهُمْ سُوءٌ} [آل عمران: 174]( السنن الكبرى للنسائي
11017 -)
குறிப்பு 2).
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْجَلِيلِ بْنِ عَطِيَّةَ، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، أَنَّهُ قَالَ لِأَبِيهِ: يَا أَبَتِ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ «اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، تُعِيدُهَا ثَلَاثًا، حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي»، فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ، قَالَ عَبَّاسٌ فِيهِ: وَتَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي، فَتَدْعُو بِهِنَّ» فَأُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: دَعَوَاتُ الْمَكْرُوبِ «اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَبَعْضُهُمْ يَزِيدُ عَلَى صَاحِبِهِ» (سنن أبي داود5090 -)حكم الألباني] : حسن الإسناد