மரணம் பற்றி மாநபியின் எச்சரிக்கை! | Tamil Bayan - 878
மரணம் பற்றி மாநபியின் எச்சரிக்கை!
ஜுமுஆ குத்பா தலைப்பு : மரணம் பற்றி மாநபியின் எச்சரிக்கை!
வரிசை : 878
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 19-04-2024 | 03-10-1445
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதம். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை. காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை. ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடு.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை தக்வாவை உபதேசம் செய்தவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பையும் மறுமையின் மகத்தான வெற்றியும் வேண்டியவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா இவ்வுலக வாழ்க்கையை நமக்கு எளிதாக்கி தருவானாக! நம்முடைய பாலஸ்தீன சகோதரர்களுக்கு விரைவான மகத்தான வெற்றியை தந்தருள்வானாக! அல்லாஹ்வுடைய எதிரிகளுக்கு கேவலமான தோல்வியை விரைவாக அல்லாஹுத்தஆலா தந்தருள்வானாக! ஆமீன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா இந்திய முஸ்லிம்களாகிய நமக்கு அவனுடைய அருளையும் அன்பையும் கொடுத்து இது நாள் வரை நம்முடைய முன்னோர்களிலிருந்து நம்முடைய இந்த தலைமுறை வரை இஸ்லாம் எப்படி இங்கே பாதுகாக்கப்பட்டதோ, வளர்ந்ததோ, ஓங்கியதோ அதுபோன்று இறுதி நாள் வரை மேலும் இஸ்லாம் வளர்வதற்கும், ஓங்குவதற்கும், முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைப்பதற்கும் முஸ்லிம்களுடைய உயிர், பொருள், உடைமை, அவர்களுடைய மார்க்கம் பாதுகாக்கப்படுவதற்கும் அல்லாஹுத்தஆலா தகுந்த நல்ல சூழ்நிலைகளை நல்ல ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பானாக! ஆமீன்!
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! சென்ற வாரத்தில் மௌத்தை பற்றிய சில வசனங்களை பார்த்தோம். அதன் தொடரிலே மரணத்தை நினைவு கூர்ந்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சில ஹதீஸ்களை நாம் இப்போது பார்க்க இருக்கின்றோம்.
மரணம் என்பது ஒரு எதார்த்தமான உண்மை. ஆனால் நாம் அதிகமாக மறந்து விடுகிறோம். கண்ணுக்கு முன்னால் பார்க்கிறோம்; கேள்விப்படுகிறோம். ஏன், நமது வீட்டுக்குள்ளயே நடக்கிறது. இருந்தாலும் நாம் அதை அப்படியே கடந்து சென்றுவிடுகிறோம்.
இந்த மரணத்தை நாம் நினைவு கூர்ந்து கொண்டே. இதைப் பற்றி நாம் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். காரணம் என்ன? அந்த அளவு குர்ஆனும். ஹதீசும் நினைவூட்டுகிறது.
மரணத்திற்கு முன் உள்ள வாழ்க்கை ஓர் அற்பமான மயக்கக்கூடிய ஏமாற்றக்கூடிய தற்காலிகமான வாழ்க்கை. மரணத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய வாழ்க்கை தான் உண்மையான நிரந்தரமான யதார்த்தமான வாழ்க்கை. அந்த உண்மையான பின்னால் இருக்கக்கூடிய வாழ்க்கையை அல்லாஹுத்தஆலா இந்த முன் உள்ள வாழ்க்கையில் மனிதன் எப்படி இருக்கிறானோ அதற்கு ஏற்ப அமைக்கிறான்.
அங்கே சென்றபிறகு நாம் வெற்றியைத் தேடிக் கொள்வேன்; பிறகு நான் சொர்க்கத்தை தேடிக்கொள்வேன் என்று யாரும் சொல்ல முடியாது. இங்கிருந்தே சொர்க்கத்தை தேடி கொண்டு சொர்க்கவாசியாக சென்றால் தான் அங்கே சொர்க்கம். யார் இங்கிருந்து செல்லும்போதே அவனுடைய அமல்களில் அவன் நரகவாதி என்பதாக முடிவு செய்யப்பட்டு விடுகிறதோ அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! அவன் நரகத்திலே தங்கி விடுவான்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த மரணத்தை குறித்து நமக்கு அழகிய அறிவுரைகளை வழங்கினார்கள். ஒன்று, இந்த மரணத்திற்காக நாம் தயாரிப்போடு இருப்பது. அதாவது எனக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் வரும் என்ற உண்மையை உணர்ந்து அதற்கு ஏற்ப அமல்களோடு, தவ்பாவோடு, மார்க்கப் பற்றோடு அல்லாஹ்வின் சந்திப்பின் மீது உண்டான ஆசையோடு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது.
இது யாருக்கு முடியும் என்றால், யாருடைய உள்ளத்திலே ஈமான் குடியேறியதோ, மறுமையின் பற்று இருக்கிறதோ, யார் சொர்க்கத்திற்காக அமல் செய்கிறார்களோ இங்கே சேர்த்ததை விட மறுமைக்கு அனுப்பியது அதிகமாக இருக்குமோ அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா உள்ளத்தை விசாலமாக்கி வைத்திருப்பான். அவர்கள் மறுமையின் அந்த ஆசையிலே இருப்பார்கள்.
இன்னொரு கூட்டம். அவர்களுக்கு மௌத் என்றாலே பிடிக்காது. மௌத்தை பற்றி பேசுவதை ஒரு துர்ச்சகுனமாக பார்ப்பார்கள். ஏன் அவர்கள் தங்களுடைய மனதை ஆசையை இந்த உலகத்திலே பறி கொடுத்து விட்டார்கள். மறுமைக்காக எதையும் செய்யவில்லை. எனவே மறுமை, மரணம் என்றால் அவர்களுக்கு பயம். திடுக்கம். வெறுப்பு வந்துவிடும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் காட்டுகின்றார்கள்.
اثنتان يكرههما ابن آدم: الموت، والموت خير للمؤمن من الفتنة، ويكره قلة المال، وقلة المال أقل للحساب
இரண்டு விஷயங்கள். மனிதன் அதை வெறுக்கிறான். ஒன்று, மரணம். அடுத்து பொருளாதாரபற்றாக்குறை முஃமினுக்கு மரணம் குழப்பத்தை விட சிறந்தது. குழப்பத்தில் சிக்கி மார்க்கம் பறிபோவதை விட அதற்கு முன்பே மரணித்து விடுவது சிறந்தது. பொருளாதார குறை நாளைய கணக்கு வழக்குக்கு எளிதானது.
ஆகவே தான், மஃசுரான துஆக்களிலே ஒன்று வரும்;
واذا اردت بقوم فتنه فتوفنا غير مفتونين
யா அல்லாஹ்! ஒரு கூட்டத்தை நீ சோதிக்க நினைத்தால் அந்த சோதனைக்கு நாங்கள் சிக்கிவிடாமல் எங்களை அதற்கு முன்பே உன் பக்கம் நீ எங்களை உயர்த்திக் கொள்! அழைத்துக் கொள்!
சகோதரர்களே ஃபித்னா சாதாரண ஒன்றல்ல. ஈமான் பறி போகலாம். அமல்கள் அழிந்து விடலாம். ஆகவேதான் ஃபித்னா காலங்களிலே கவனமாக இருக்க வேண்டும். முதலாவது மனிதன் வெறுப்பது மௌத்தை. அந்த மவுத் அவனுக்கு பித்னாவை விட சிறந்தது.
அடுத்து சொன்னார்கள்: வசதி வாய்ப்பு செல்வம் குறைவாக இருப்பதை மனிதன் விரும்புவதில்லை. வெறுக்கிறான்.
ஆனால் வசதி வாய்ப்பு இல்லாமல் இருப்பது செல்வம் குறைவாக இருப்பது மறுமையில் அவனுக்கு விசாரணை எளிதாவதற்கு, விசாரணை மிக குறைவாக நடப்பதற்கு அவனுக்கு போதுமானது.
அறிவிப்பாளர் : மஹ்மூத் இப்னு லபீத் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுத் தர்கீப் எண் : 3210.
பெரிய ஒப்பீட்டை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் காட்டுகிறார்கள்! இந்த உலகத்தில் யார் எந்த அளவு வசதி உடையவர்களாக இருக்கிறாரோ அதுவும் எப்போது அவர் ஹலாலிலே சம்பாதித்து ஹலாலிலே செலவு செய்திருந்தால், அவருக்கு நாளை மறுமையில் அந்த அளவு கேள்வி கணக்கு இருக்கும், மாறாக சம்பாதித்ததும் ஹராம்; செலவு செய்ததும் ஹராம் அல்லது சம்பாதித்ததோ எண்ணமோ ஹலால் ஆனால் செலவழித்தது ஹராம் என்றால் முடிந்தது கதை. அவ்வளவுதான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! விசாரணை ஹலாலுக்கு... ஹராமுக்கு அல்ல.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு அறிவூட்டினார்கள்; மார்க்கப்பற்று இபாதத் இந்த நிலையில் ஒரு அடியான் பயணம் செய்யும்போது சில நேரங்களில் அவனுக்கு ஏற்படும் சில குழப்பங்களை சில பிரச்சனைகளை பார்க்கும்போது நாம் மௌத்தாகி விட்டால் என்ன! அல்லாஹ்விடத்தில் மௌத்தை கேட்போமே!
அதையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு சொன்னார்கள். நமக்கு எல்லாம் குறிப்பிடப்பட்டு விட்டது. மரணத்தின் தேதி நேரம் எல்லாம் அல்லாஹ்விடத்தில் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. உங்கள் மீது என்ன கடமையோ அதை நீங்கள் செய்து கொண்டிருக்க வேண்டியதுதான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு மரணத்தை தேடாதீர்கள்! மரணத்தை நீங்கள் ஆசை வைத்து கேட்காதீர்கள் என்று தடை செய்தார்கள். ஆகிரத்தின் மீது பிரியம் இருக்க வேண்டும். மௌத்திற்காக தயாரிப்பு இருக்க வேண்டும். ஆனால், அது உங்களை இந்த உலகத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டு சடைவு ஏற்படக்கூடிய நிலையில் உங்களை தள்ளி விடக்கூடாது. அது நிராசையிலே தள்ளிவிடும். குடும்ப வாழ்க்கையிலே உங்கள் பொறுப்புகளை வீணாக்கி விடும்.
நீங்கள் சமூகத்தின் ஒரு உறுப்பினராக இருக்கும் நிலையில் அந்த சமூகத்துக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான கடமைகளை பொறுப்புகளை உங்கள் மீது சுமத்தப்பட்ட சுமைகளை நீங்கள் வீணாக்கக்கூடிய நிலையிலே உங்களை ஆக்கிவிடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நீண்ட ஹதீஸிலே சொல்கிறார்கள்:
உங்களிலே யாரும் தன்னுடைய அமலால் சொர்க்கம் செல்ல முடியாது. யாரையும் அவருடைய அமல் சொர்க்கத்திற்குள் நுழைத்து விடாது. சஹாபாக்கள் கேட்டார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே நீங்களுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; ஆம்! நானும் தான் அல்லாஹ் அவனுடைய அருளால் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர.
உங்களால் முடிந்த அளவு நீங்கள் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்க முயற்சி செய்யுங்கள். நல்ல வழியிலே நடங்கள். நல்ல வழியில் நடக்க முயற்சி செய்யுங்கள். உங்களில் யாரும் மரணத்தை ஆசைப்பட வேண்டாம். அவர் நல்லவராக இருந்தால் அவருடைய ஒவ்வொரு நாளும் வாழ்க்கையிலும் அவர் நன்மையை அதிகம் தேடிக் கொள்ளலாம். அவர்கள் கெட்டவராக இருந்தால் தவ்பா செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆகவே, மரணத்தை வேண்டுமென்று நீங்களாக ஆசைபடாதீர்கள் என்ற வழிகாட்டுதலையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5673.
கண்ணியத்திற்குரியவர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த அழகிய வழிமுறைகளில் ஒன்று, கப்ர்களுக்கு செல்வது; ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வது ஜனாஸாக்களை சுமந்து செல்வது; ஜனாஸாக்களை அடக்கம் செய்வது; இறந்தவருடைய வீட்டிலே சென்று ஆறுதல் சொல்வது.
காரணம் என்ன? இதை எல்லாம் மனிதர்களுக்கு மரணத்தை மறுமையை நினைவூட்டி கொண்டு அவர்களுடைய உள்ளங்களை மென்மையாக்கி கொண்டிருக்கும். உள்ளத்தில் உள்ள அந்த கடின தன்மையை போக்கிவிடும்.
மரணத்தை நினைக்காதது, மறுமையை நினைக்காதது, நம்முடைய உள்ளங்களை இறுக செய்துவிடும்.
نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ، فَزُورُوهَا، فَإِنَّ فِي زِيَارَتِهَا تَذْكِرَةً
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முந்தைய காலங்களிலே ஷிர்க்கில் இருந்து மனிதர்கள் வெளியே வந்த பொழுது, சொன்னார்கள் ‘’கப்ர்களுக்கு நீங்கள் செல்ல வேண்டாம் என்று தடுத்து வைத்திருந்தேன். இப்பொழுது நீங்கள் ஸியாரத் செய்யுங்கள். கப்ருக்கு நீங்கள் செல்வதிலே அங்கே உங்களுக்கு மறுமையின் நினைவூட்டல் இருக்கிறது. அங்கே உங்களுக்கு ஆகிரத்தின் நினைவூட்டல் இருக்கிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
அறிவிப்பாளர் : புரைதா இப்னு அல்ஹுஸைப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூது, எண்: 3235.
மேலும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணத்தை குறித்து செய்த உபதேசங்களிலே ஒன்று,
يَتْبَعُ المَيِّتَ ثَلاَثَةٌ، فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى مَعَهُ وَاحِدٌ: يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ
ஒரு மைய்யத் இறந்து விட்டால் மூன்று விஷயங்கள் அவனை தொடருகின்றன. இரண்டு விஷயங்கள் திரும்ப வந்து விடுகின்றன. ஒன்று, அவனோடு தங்கி விடுகிறது. அவனுடைய செல்வமும் அவனுடைய குடும்பமும் அவனை பின் தொடர்கிறார்கள். ஆனால் அவனுடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுவார்கள். அவனுடைய அமல் மட்டுமே அங்கே அவனோடு தங்கப்போகிறது.
அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண்: 6514.
எந்த அமல் நம்மோடு கப்ரிலே தங்குமோ அந்த அமலுக்காக நாம் கொடுக்கக்கூடிய நேரம் என்ன? அக்கறை என்ன? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கப்ர் என்பது அது தனி உலகம். அது மறுமையின் முதல் வீடு. அதிலிருந்து தான் ஆகிரத்தினுடைய வாழ்க்கை ஆரம்பம் ஆகும்.
உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு கப்ரை பார்த்து விட்டால் தாடி நனையும் அளவிற்கு அழுவார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸை உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
إِنَّ القَبْرَ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الآخِرَةِ، فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ
மறுமையின் இல்லங்களில் முதல் இல்லம் கப்ர். அதிலிருந்து ஒருவன் தப்பித்து விட்டால் அதற்கு பின்னால் உள்ளதெல்லாம் அதைவிட மிக எளிதாக இருக்கும். அதிலிருந்து ஒருவன் தப்பிக்கவில்லை என்றால் அதற்குப் பின்னால் இருக்கக்கூடியது அதைவிட மிக கடினமானதாக பயங்கரமானதாக இருக்கும்.
அறிவிப்பாளர்: உஸ்மான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண்: 2308.
சகோதரர்களே! கப்ருடைய அதாபிலிருந்து ஒவ்வொரு தொழுகையிலும் பாதுகாப்பு தேடிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்
ஒரு யூத பெண் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடத்திலே வந்து கப்ருடைய வேதனையை பற்றி பேசுகிறார்கள். பேசிவிட்டு அல்லாஹ் உன்னை கப்ருடைய அதாபிலிருந்து பாதுகாக்கட்டும் என்று சொல்கிறார்கள். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வந்தவுடனே இப்படி ஒரு யஹூதிப் பெண் வந்து, கப்ருடைய அதாபில் இருந்து அல்லாஹ் என்னை பாதுகாக்க வேண்டும். என துஆ செய்துவிட்டு சென்றாள். என்று சொன்னபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆம் கப்ர் உடைய அதாப் இருக்கிறது என்று சொன்னார்கள்
பிறகு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அமலை கவனித்து ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, சொல்கிறார்கள் அதற்கு பின்னால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த தொழுகையை தொழுதாலும் கப்ருடைய அதாபிலிருந்து பாதுகாப்பு தேடாமல் அந்த தொழுகையை முடித்ததில்லை இது நான் கவனித்தது என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, சொன்னார்கள்
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி எண் : 1372.
அன்பான சகோதரர்களே! இப்படிப்பட்ட ஒரு பயப்பட வேண்டிய ஒரு இல்லம் தான் அந்த கப்ருடைய வாழ்க்கை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நீண்ட ஹதீஸை சொல்கிறார்கள்:
ஒரு மைய்யத் கப்ருக்கு வந்து விட்டால் அந்த சாலிஹான அந்த நல்ல மனிதராக இருந்தால் அவரை கப்ரிலே உட்கார வைக்கப்படும். அவருக்கு பயம் இருக்காது. திடுக்கம் இருக்காது. எந்த விதமான துக்கமும் இருக்காது.
அவரிடத்திலே கேட்கப்படும்; நீ என்ன கொள்கையில் இருந்தாய்? என்ன மார்க்கத்தில் இருந்தாய்? அவர் சொல்வார்: நான் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்தேன். பிறகு அவரிடத்தில் கேட்கப்படும்; இந்த மனிதரைப் பற்றி என்ன சொல்லப்பட்டது என்பது உனக்கு தெரியுமா?
அவர் சொல்வார்: இவர் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அல்லாஹ்வின் புறத்திலிருந்து அத்தாட்சிகளை கொண்டு வந்தார். இவரை நாங்கள் உண்மையாளராக ஏற்றுக் கொண்டோம்.
பிறகு அவரிடத்தில்; நீ அல்லாஹ்வை பார்த்து இருக்கிறாயா? என்று கேட்கப்படும். அவர் சொல்வார்: உலகத்தில் அல்லாஹ்வை பார்ப்பதற்கு யாருக்கும் அந்த தகுதி இல்லை அதற்குப் பிறகு நரகத்தை நோக்கி அவருக்கு ஒரு இடைவெளி வழிகாட்டப்படும். அந்த நரகம் அப்படியே கொதித்துக் கொண்டு ஒன்றின் மீது ஒன்றாக அலைகளாக மோதிக்கொண்டிருக்கும்.
அப்போது அவருக்கு, இந்த நரகத்தை பார்த்தாயா? இதிலிருந்து அல்லாஹ் உன்னை பாதுகாத்தான் என்று சொல்லப்பட்டு பிறகு சொர்க்கத்தை நோக்கி அவருக்கு வாசல் திறக்கப்படும். அந்த சொர்க்கத்தை அவர் பார்ப்பார். அதனுடைய அழகை தோற்றங்களை செழிப்பை பார்ப்பார்.: இதுதான் உன்னுடைய இடமாக இருக்கும். பிறகு அவருக்கு. நீ இந்த ஈமானிய உறுதியிலே வாழ்ந்தாய்! இதே நம்பிக்கையிலே நீ இறந்து போனாய்! இதே நம்பிக்கையிலே நீ மறுமையிலே இன்ஷா அல்லாஹ் எழுப்பப்படுவாய் என்று சொல்லப்படும்.
எப்படிப்பட்ட நற்பாக்கியமாக இருக்கும் யோசித்துப் பாருங்கள்!
கெட்ட மனிதன் கப்ரிலே வரும் பொழுது அவனை உட்கார வைக்கப்படும். பயந்தவனாக கவலையுற்றவனாக, திடுக்கிட்டவனாக, பைத்தியத்தை போன்று இருப்பான்.
அவனிடத்திலே கேட்கப்படும்; நீ என்ன கொள்கையிலே இருந்தாய்? அவன் சொல்வான் எனக்கு அது தெரியாது. இந்த மனிதரை தெரியுமா? ஏதோ மக்கள் சொன்னார்கள் அவ்வளவுதான். அதற்கு மேல் எனக்கு தெரியாது. பிறகு அவனுக்கு சொர்க்கத்தை நோக்கி வாசல் திறக்கப்பட்டு அவன் அந்த சொர்க்கத்தின் செழிப்பை, பூக்களை, அந்த சொர்க்கத்தின் தோட்டங்களை பார்ப்பான். சொல்லப்படும் இதை அல்லாஹ் உனக்கு தடுத்து. இதிலிருந்து அல்லாஹ் உன்னை திருப்பி. இந்த பாக்கியத்தை அல்லாஹ் உனக்கு எடுத்து விட்டான் என்று சொல்லப்படும்.
பிறகு நரகத்தை நோக்கி அவனுக்கு ஒரு வழி திறக்கப்படும். அந்த நரகத்தை பார்ப்பான். அலைகளைப் போன்று ஒன்றன்பின் ஒன்று மோதி கொண்டிருக்கும். சொல்லப்படும் இங்கேதான் நீ தங்கப் போகிறாய். நீ சந்தேகத்திலேயே இருந்தாய். இஸ்லாத்தைப் பற்றி இதே சந்தேகத்திலேயே நீ இறந்து போனாய் இதே அவநம்பிக்கையில் தான் நீ இருந்தாய், அவநம்பிக்கையிலேயே இறந்து போனாய் அவநம்பிக்கையிலே நீ எழுப்பப்படுவாய் என்பதாக அவருக்கு சொல்லப்படும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3462.
அன்பான சகோதரர்களே! கப்ரை பற்றி மௌத்தை பற்றி ஹதீஸ்களை நாம் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய குடும்பத்தார்களுக்கு நினைவூட்டி கொண்டே இருக்க வேண்டும். எவ்வளவுதான் நாம் கப்ரை ஆகிறத்தை நினைத்தாலும் சரி, சகோதரர்களே அது மிகக் குறைவு தான்.
காரணம், நம்முடைய உள்ளம் அந்த அளவு உலக மோகத்தால் உலக இன்பங்களால் நம்முடைய பாவங்களால் துரு ஏறி இருக்கிறது. நம்முடைய உள்ளத்தை சுத்தம் செய்வதற்கு ஆகிரத்துடைய நினைப்பு தேவை. தவ்பா தேவை. அல்லாஹ்வுடைய பயம் தேவை. தனிமையிலே அல்லாஹ்வை நினைத்து மறுமையின் தண்டனையை நினைத்து அழ வேண்டும். அதற்கு இந்த கப்ருடைய நினைவு நமக்கு மிக முக்கியமானது.
அல்லாஹு சுபஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் சக்ராத்தை எளிதாக்கி கப்ருடைய அதாபிலிருந்து பாதுகாத்து நாம் இறந்த பிறகு நல்லோரில் என்னையும் உங்களையும் சேர்த்து வைப்பானாக!
வாழும் போதும் நல்லோர்களோடு வாழக்கூடிய நற்பாக்கியத்தை தந்தருள் புரிவானாக! அல்லாஹு சுபஹானஹு வ தஆலா முஃமின்களுக்கு முஸ்லிம்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் இரட்சிப்பையும் தந்தருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/