HOME      Khutba      மக்கா நோக்கி புறப்படுங்கள்! | Tamil Bayan - 880   
 

மக்கா நோக்கி புறப்படுங்கள்! | Tamil Bayan - 880

           

மக்கா நோக்கி புறப்படுங்கள்! | Tamil Bayan - 880


மக்கா நோக்கி புறப்படுங்கள்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : மக்கா நோக்கி புறப்படுங்கள்!
 
வரிசை : 880
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 26-04- 2024| 17-10-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதம். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை. காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை. ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடு.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக; அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது அவர்கள் மீது இன்னும் அவர்களுடைய குடும்பத்தார் தோழர்கள் மீது அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக; தக்வாவை உபதேசம் செய்தவனாக; அல்லாஹ்விடத்தில் அவனது மன்னிப்பையும் அவனது அன்பையும் வேண்டியவனாக; இம்மை மறுமை வாழ்க்கையின் மகத்தான வெற்றியை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! காசா மக்களுக்கு அருள் புரிவானாக! அவர்களது பாதங்களை உறுதிப்படுத்துவானாக! அவர்கள் இழந்த செல்வங்களை விட சிறந்ததை அல்லாஹ் அவர்களுக்கு தந்தருள்வானாக! அவர்களுடைய முஜாஹிதுகளுக்கு உதவி செய்வானாக! அவர்களது எதிரிகளுக்கு எதிராக மகத்தான வெற்றியை அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு தந்தருள்வானாக! ஆமீன். 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய மார்க்க கடமைகளில் மிக முக்கிய மிக மகத்தான கடமையாகிய ஹஜ்ஜை பற்றி சில விஷயங்களை நாம் இந்த அமர்விலும் இன்னும் சில அமர்வுகளிலும் தெரிந்து கொள்வோம். 
 
இதுவரை அல்லாஹ்வுடைய வீட்டிற்கு செல்லாதவர்கள் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் மேலும் உம்ராவுக்காகவோ ஹஜ்ஜுக்காகவோ. சென்று வந்தவர்கள் மீண்டும் மீண்டும்  ஹஜ் செய்வதற்கும் உம்ரா செய்வதற்கும் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் வருவதற்காகவும் சில விஷயங்களை கண்டிப்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 
 
அல்லாஹுத்தஆலா சொல்கிறான்:
 
 ‌ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏
 
அல்லாஹுவிற்காக இந்த வீட்டை ஹஜ் செய்ய வருவது யாருக்கு முடியுமோ அந்த மக்கள் மீது கடமையாக இருக்கிறது. யார் நிராகரிப்பாரோ உலக மக்கள் அனைவரையும் விட்டு அல்லாஹுத்தஆலா தேவையற்றவன். (அல்குர்ஆன் : 3:97)
 
அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய வீட்டை நோக்கி நம்முடைய உள்ளங்கள் ஏங்குவதற்கு அல்லாஹ்வுடைய ஆலயத்தை நோக்கி தொடர்ந்து நமது பயணத்தை அமைத்துக் கொள்வதற்கு இந்த ஒரு வசனம் போதுமானது. 
 
அல்லாஹுத்தஆலாவுடைய அருளினால் கருணையினால் பொருளாதார வசதி இருந்தால் உடல் தகுதி இருந்தால் அவர்கள் மீது கடமையாக்கி விட்டு மற்றவர்கள் மீது உபரியாக அல்லாஹ் ஆக்கிவிட்டான். இது அல்லாஹ்வுடைய அருள். அல்லாஹ்வுடைய கருணை. 
 
அதே நேரத்தில் இந்த வீட்டை தரிசிப்பதன் மூலமாக இந்த வீட்டை நோக்கி செல்வதின் மூலமாக இந்தப் பயணத்தில் அங்கே செய்யப்படக்கூடிய இபாதத்துகளில் அல்லாஹு தஆலா அவனுடைய அன்பின் ஒரு முழுமையை ஒரு எல்லையை வைத்திருக்கிறான். 
 
எந்த உள்ளங்கள் அல்லாஹ்வை தேடுமோ, எந்த உள்ளங்கள் அல்லாஹ்வின் பாசத்திற்காக ஏங்குமோ எந்த உள்ளங்களுக்கு இபாதத்திலே ஒரு சுவையும் இனிமையும் இருக்குமோ அந்த உள்ளங்கள் ஒருபோதும் மவுத் வரை இபாதத்தை கொண்டு நிரம்பி விடாது. தேடிக் கொண்டே இருக்கும், தேடிக்கொண்டே இருக்கும், ஆசைப்பட்டு கொண்டே இருக்கும். 
 
அப்படிப்பட்ட இபாதத்துகளில் ஒன்று தான் ஹஜ். ஹஜ் செய்து வரும் போது உம்ரா செய்து வரும்போது மீண்டும் அங்கே செல்ல வேண்டுமென்ற ஆர்வத்தோடு அங்கிருந்து திரும்புவது அல்லாஹுத்தஆலாவுடைய உண்மையான வீடு என்பதற்குரிய அத்தாட்சிகளில் ஒன்று.
 
اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌‏
 
(அல்குர்ஆன் : 3:96)
 
فِيْهِ اٰيٰتٌ  بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ 
 
(அல்குர்ஆன் : 3:97)
 
கஃபத்துல்லாவிலே, அல் மஸ்ஜிதுல் ஹராமிலே, பைத்துள்ளாஹ்விலே மிகத் தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன என்பதையும்; மக்கள் திரும்பத் திரும்ப வந்து தரிசிப்பதற்கு ஆசைப்படும் ஒரு இடமாக ஒரு இல்லமாக நாம் இந்த கஃபாவை ஆக்கி வைத்திருக்கிறோம் என்பதையும் நினைவு கூருங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
ஈமான் என்பது அல்லாஹ்வுடைய அன்போடு அல்லாஹ்வுடைய பாசத்தோடு அல்லாஹ்வை நினைத்து ஏங்க வேண்டும். எப்படி நமக்கு பிரியமான நமது தாய், தந்தை, நமது பிள்ளை, நமது மனைவி, மனைவிக்கு கணவன் என்று அந்த ஏக்கம் இருக்குமோ இதைவிட ஒப்பிட முடியாத, உவமை கூற முடியாத ஒரு ஏக்கம் ஒரு அன்பு ஒரு தேடல் ஒரு பாசம் அல்லாஹ்வின் மீது ஒரு அடியானுக்கு இருக்க வேண்டும். 
 
அப்படி இருக்கிறது என்பதற்கு அடையாளம் தான் அந்த அடியான் இபாதத்தை நோக்கி விரைவது. அந்த அடியான் இபாதத்திலே ஆசைப்படுகிறான் என்றால் அவனுக்கு அல்லாஹ்வின் மீது அன்பு ஆசை இருக்கிறது என்று பொருள். 
 
ஒருவன் இபாதத்திலே சோம்பேறியாக அலட்சியமாக வெறுமையான உள்ளத்தோடு இருக்கிறான். இபாதத்திலே அவனுக்கு நாட்டம் இல்லையென்றால் அவனுக்கு அல்லாஹ்வின் மீது ஆசை இல்லை அன்பு இல்லை என்று பொருள். 
 
அல்லாஹுத்தஆலா அவனுடைய விசேஷமான நிழலிலே ஏழு விசேஷமான அடியார்களுக்கு நிழல் கொடுக்கும் போது யாருடைய உள்ளங்கள் மஸ்ஜிதிலே தொங்கப்பட்டு இருக்குமோ அவர்களுக்கு ஒரு இடத்தை அல்லாஹ் ஒதுக்குகிறான். அவர்கள் அல்லாஹ்வை தரிசிப்பதற்காக அல்லாஹ்வுடைய வீட்டுக்கு வர வேண்டும். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1423.
 
அல்லாஹ்வுடைய வீட்டில் இருப்பது, அங்கே அல்லாஹ்வை தொழுவது, அவர்களுடைய உள்ளத்தில் இருக்கக்கூடிய அல்லாஹ்வின் அன்பின் வெளிப்பாடு. ஏன் ரமழானை எதிர்பார்க்கிறோம்? ஏன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமழானை கொண்டு சந்தோஷப்பட்டார்கள்? காலமெல்லாம் உபரியான நோன்புகள் வைத்தாலும் கூட அந்த ரமழானுடைய நோன்புக்காக ஏங்கினார்களே! 
 
அதுதான் அல்லாஹ்வுடைய பிரியம். பாசம். அப்படித்தான் இந்த ஹஜ் என்பது. எல்லா வணக்கங்களுக்கும் சில சிறப்புகளை தனி உயர்வுகளை மதிப்புகளை அல்லாஹ் வைத்திருக்கிறான். இந்த ஹஜ்ஜுக்கு அல்லாஹ் மிக மிக சிறப்பான உயர்வான நன்மைகளை கொடுத்து இருக்கிறான.  
 
ஏனென்றால், இந்த ஹஜ்ஜிலே உடலும் அங்கே வணங்குகிறது. நம்முடைய பொருளாலும் அங்கே அல்லாஹ்வை வணங்குகிறோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் பல சிரமங்கள் அனைத்தையும் இந்தப் பயணத்திலே தாங்கிக் கொள்கிறோம். 
 
மஸ்ஜிதிற்கு வந்து தொழுவதிலே சில அசௌகரியங்கள் இருக்கலாம். நோன்பிலே சில அசௌகரியங்கள் இருக்கலாம். ஜகாத்திலே சதக்காவிலே சில சிரமங்கள் இருக்கலாம். ஆனால் இங்கே எல்லா சிரமங்களையும் நீங்கள் கொஞ்சம் ஹஜ்ஜுடைய சிரமத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த ஹஜ் பயணம் என்பது இது ஈமானுக்கு மிகப்பெரிய ஒரு சோதனையாக இருக்கும். 
 
ஆகவேதான், ஆட்சி செய்வதற்கு ஒரு விசேஷமான மன உறுதி ஒரு துடிப்பு ஒரு அதிகப்படியான ஒரு பயம் தேவை.  அமீருல் முஃமினீன் உமர் இப்னு ஹத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அது போன்று அலி ரலியல்லாஹு அன்ஹு இந்த ஹஜ்ஜை நமக்கு வலியுறுத்தும் போது எப்படி எச்சரித்தார்கள் தெரியுமா?
 
யாருக்கு ஹஜ் செய்வதற்குரிய ஆற்றல் இருந்தும் ஹஜ் செய்யவில்லையோ அவர் இறந்துவிட்டால் அவர் எஹூதியாக தான் இறப்பார். நஸ்ராணியாகத்தான் இறப்பார். 
 
அந்த அளவுக்கு இது ஈமானுக்கு ஒரு சோதனை. ஹஜ்ஜை அலட்சியம் செய்வது மனிதனை நிராகரிப்பிலே தள்ளி விடக்கூடிய அளவிற்கு உண்டான ஒரு பெரும் பாவமாக குர்ஆனும் சொல்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஸஹாபாக்களும் எச்சரிக்கை செய்கிறார்கள். 
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய அந்த வீட்டை நோக்கி ஹஜ் செய்ய செல்வது. இது ஒரு பெரிய பாக்கியம். இது ஒரு மிக சிறப்பு. அல்லாஹ்வுடைய அடியார்களாக அல்லாஹ்வுடைய விருந்தினர்களாக அல்லாஹ்வுடைய வீட்டிற்கு உலகத்தில்  உள்ள அத்தனை மஸ்ஜிதுகளுக்கும் தாயாக இருக்கக்கூடிய, உலகத்தில் உள்ள அத்தனை நகரங்களுக்கும் தாயாக இருக்கக்கூடிய, எந்த நகரத்தை அல்லாஹுத்தஆலா தன்னோடு சேர்த்தானோ, பூமியே அல்லாஹ்வுடைய பூமி. அதில் ஒரு ஊரை இது என்னுடைய ஊர் என்று அல்லாஹ் சேர்த்தான். எல்லாம் மஸ்ஜிதுகளும் அல்லாஹ்வுடைய மஸ்ஜித். அதில் ஒரு வீட்டை என்னுடைய வீடு,
 
فَلْيَـعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْتِۙ‏
 
(அல்குர்ஆன் : 106:3)
 
இந்த வீட்டுடைய இறைவனை வணங்கட்டும் என்று இந்த வீட்டோடு அல்லாஹ் தன்னை சேர்த்து தன்னுடைய மகத்துவத்தை நிலைநிறுத்துகிறான் என்றால் இது எவ்வளவு ஒரு உன்னதமான பயணமாக இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலிருந்து விரட்டப்பட்டார்கள் அந்த வீட்டிற்கு திரும்ப செல்ல வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். கனவிலே காட்டப்பட்டது. ஆசை தாங்க முடியவில்லை. சஹாபாக்களுக்கு அறிவிப்பு செய்தார்கள். 1400 தோழர்கள் உடனடியாக தயாராகி விட்டார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தலைமையிலே உம்ராவை நிறைவேற்றுவதற்கு உலகத்திலேயே சிறந்த, உலகத்திலேயே மிக உயர்வான ஒரு உம்ரா குழு சென்று இருக்கும் என்றால் அது  ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தலைமை தாங்கிய அந்த உம்ரா உடைய குழுதான். எவ்வளவு சிறந்த ஒரு பயணமாக இருந்திருக்கும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் வழிகாட்ட அதில் அபூபக்ரும் உமரும் உஸ்மானும் அலியும் இருக்க ரலியல்லாஹு அன்ஹும் எவ்வளவு ஒரு உன்னதமான ஆன்மீகப் பயணமாக இருந்திருக்கும். எவ்வளவு  தேடலோடு சென்று இருப்பார்கள். 
 
ஆனால் ஹுதைபியாவிலே தடுக்கப்பட்டார்கள். ஏக்கம் தாங்க முடியவில்லை. மௌத் வரை போர் செய்வதற்கு பைஅத் -மெய்வாக்குறுதி செய்து கொடுத்து விட்டார்கள். அல்லாஹ்வுடைய வீட்டை தரிசிக்காமல் திரும்பி விடுவதா? இஹ்ராமை கழற்ற மனமில்லை. மொட்டை அடிக்க மனமில்லை. கொண்டுவந்த குர்பானிகளை அறுக்க மனமில்லை. 
 
அவ்வளவு துடிக்கிறார்கள் தோழர்கள். அல்லாஹ்வுடைய சோதனை. நபியின் கட்டளை. நபிக்கு கீழ்படிவது தான் மார்க்கம். திரும்பி விட்டார்கள். அடுத்த ஆண்டு உம்ராவிற்கு வருகிறார்கள். பிறகு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்கா வெற்றிக்கு வருகிறார்கள். அப்போது உம்ரா செய்கிறார்கள். 
 
அரபுகளுடைய வழக்கம், அவர்கள் மாதங்களை முற்படுத்துவார்கள், பிற்படுத்துவார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மாதமும் அதற்கு அல்லாஹ் நிர்ணயித்த அந்த தவணையிலே வருவதற்கு. 
 
அதனால் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஜ்ஜுக்கு செல்லவில்லை. முதலாவதாக அபூபக்கரை அனுப்பி வைத்து இனிமேல் அப்படி செய்யக்கூடாது என்று சொன்னார்கள். அடுத்த ஆண்டு ஹஜ்ஜை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹஜ் செய்தார்கள்.
 
கலீபா அபூ பக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இரண்டு ஆண்டுகள் குழப்பங்கள் நிறைந்த காலம். எங்கு பார்த்தாலும் சண்டை. இஸ்லாமை ஏற்ற கிராமத்து அரபிகள் இஸ்லாமை புறக்கணித்து திரும்ப ஓடிவிட்டார்கள். ஜகாத்தை மறுத்த கூட்டம் இப்படியாக பல யுத்தங்களை ஓரிரு ஆண்டுகளிலே சந்தித்து இஸ்லாமிய சிலாபத்தை நிலை நிறுத்தக்கூடிய அந்த கட்டாயத்தில் இருந்தார்கள். அவர்களால் ஹஜ் செய்ய முடியவில்லை. 
 
ஆனால்,  கலிபா உமருல் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு பத்து ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்கள். முதலாம் ஆண்டு இறுதியாக அவர்கள் கொல்லப்பட்ட ஆண்டு. ஆக 2 இரண்டு ஆண்டுகளை தவிர  இந்த ஆண்டு அவர்கள் செல்ல வேண்டி இருந்தும் கொல்லப்பட்டு விட்டார்கள். மீதம் எட்டு ஆண்டுகளும் கலிபா உமர் ரலியல்லாஹு அன்ஹு தொடர்ந்து ஹஜ் செய்து கொண்டே இருந்தார்கள். 
 
யோசித்துப் பாருங்கள்! இன்று இவ்வளவு வசதி, அருட்கொடைகள் எல்லாம் கொடுக்கப்பட்டு மிக சுகமான ஹஜ்ஜாக இருந்தும் கூட சில செல்வந்தர்களை பார்க்கிறோம்; ஒருமுறை ஹஜ் செய்து விட்டாலே என்னமோ சிராத் பாலத்தை கடந்தது போன்று போதுமடா இதற்கு மேலே வேண்டாமடா என்ற அளவிற்கு போய்விட்டது. 
 
அது செல்வத்தை செலவழிப்பதிலே உள்ள கருமித்தனமா? அல்லது அல்லாஹ்விற்காக சிரமங்களை தாங்கிக் கொள்வதிலே உள்ள இயலாமையா? தெரியவில்லை. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! ரப்புக்காக ரப்பு கொடுத்த செல்வத்தை செலவழிப்பதை விட ஒரு பாக்கியம் இருக்க முடியுமா? இந்த உடலும் உடல் உறுப்புகளும் நமக்கு அல்லாஹ் கொடுத்த சக்தியும் ரப்புக்காக  களைப்புறுவதை விட அல்லாஹ்வை வணங்கி நம்முடைய ரப்பை வணங்கி அதிலே நமக்கு ஏற்படக்கூடிய வலிகளை சிரமங்களை அந்த அசவுகரியங்களை எல்லாம் தாங்கிக் கொள்வதில் தானே அந்த அல்லாஹ்வுடைய அன்பு இருக்கிறது? 
 
நீங்கள் யாரை நேசிப்பீர்களோ அவர்களுக்காக நீங்கள் தியாகம் செய்வீர்கள் தானே? அவர்களுக்காக சிரமப்படுவதிலே இன்பம் காண்பீர்கள். ஏன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கால் வலிக்க நின்று வணங்கினார்கள்? ஏன் ஒரே ஸஹரை கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல நோன்புகளை வைத்தார்கள். சஹாபாக்களும் வைத்தார்கள், வேண்டாம் உங்களால் முடியாது என்று தடுத்துவிட்டார்கள். 
 
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய முஹப்பத் என்பது அடியானுடைய உள்ளத்திலே அப்படி இருக்க வேண்டும். அடுத்து நடுத்தர மக்கள். இவர்களை பொறுத்தவரை இவர்களுடைய முட்டாள்தனம் இவர்களுடைய மடமை எப்படி என்று சொன்னால் மொத்தமாக காசு கொட்டும் அதை வைத்து ஹஜ் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
மொத்தமாக காசு வரட்டும் நான் ஹஜ்ஜுக்கு செல்வேன். எங்களிடம் அந்த அளவுக்கு காசு இல்லையே என்று இது நடுத்தர வர்க்கம். அதற்கு கீழ் உள்ளவர்கள் அவர்களுடைய அறியாமை. முட்டாள்தனம். 
 
அன்பானவர்களே! நம்முடைய தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் பாருங்கள் யாருக்காவது பெண் குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்கிறார்கள்? அந்த பெண் குழந்தையை கரை சேர்ப்பதற்காகவே அது பிறந்த அந்நாளிலிருந்தே அதற்காக வேண்டி சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்! இல்லையா? போதாது பத்தாது இன்னும் சேர்த்துப்போம்! பொம்பள புள்ள இருக்கே! பொம்பள புள்ள இருக்கே! என்று சொல்லி அது ஹயாத்தா பிறக்குமா? பிறக்காதா? பிறந்தா ஹயாத்தா இருக்குமா இருக்காதா? எல்லாம் அல்லாஹ்வுடைய இல்மில் இருக்கிறது! இல்லையா? 
 
யோசித்துப் பாருங்கள்! நம்முடைய மனநிலையை பாருங்கள்! எதை அல்லாஹ் கடமையாக்கவில்லையோ, பொம்பள புள்ளைக்கு நகை போட்டு சீர்வரிசை செஞ்சி இவ்வளவு ஆடம்பரமாக கல்யாணம் பண்ணி வைக்கிறது. இது ஃபர்லா? வாஜிபா? சுன்னத்தா? 
 
ஒரு மகள் அவள் பருவ வயதை அடைந்து விட்டால் அவளுக்குரிய மணமகன் கிடைத்துவிட்டால் திருமணம் முடித்து வைப்பது கட்டாயம். திருமணம் முடிக்கக் கூடிய மணமகன் தான் இஸ்லாமிலே மஹர் கொடுத்து அந்த மஹரை பெண்ணுடைய தகப்பனார் வாங்கி அந்த பெண்ணிற்கு தேவையானதை செய்து கொடுத்து அனுப்ப வேண்டுமே தவிர, இஸ்லாமிலே பெண் பிள்ளை பெற்று விட்டால் அவளுக்காக செல்வத்தை சேர்க்க வேண்டும் என்று எங்குமே நீங்கள் பார்க்க முடியாது. 
 
இப்படிப்பட்ட ஒரு நிலை இருக்க, பொம்பள புள்ளைங்க பேர சொல்லியே சொத்து சேர்ப்பார்கள். சரி இப்படி வையுங்கள்; அல்லாஹ் நம் மீது கடமையாக்கவில்லை ஃபர்லாக்கவில்லை இருந்தாலும் முஃமின்களாகிய நாம் எத்தனையோ செலவுகளை செய்கின்றோமே நம்முடைய அன்றாட செலவுகளில் ஒவ்வொரு மாதமும் சில தொகையை நாம் சேமித்தாலே சில ஆண்டுகளில் நமது வீட்டில் ஒருவரை ஹஜ்ஜுக்கு அனுப்பி விடலாம். இது பொதுவாக நடுத்தர குடும்பத்தில் இருக்கக்கூடிய நிலை. 
 
ஆனால், நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன நினைப்பிலே இருக்கிறார்கள்? காசு மொத்தமா எங்கிருந்தாவது வரட்டும்; அதுக்கப்புறம் ஹஜ்ஜுக்கு போகலாம் என்று. 
 
அன்பானவர்களே! அப்படி இல்லை. அல்லாஹ்வுடைய நாட்டமும் அல்லாஹ்வுடைய தேடலும் நமக்கு இருக்குமேயானால் அதற்காக நம்முடைய செல்வத்தை சேர்க்க ஆரம்பித்து விடுவோம். நமது அனாவசியமான செலவுகளை நாம் குறைத்துக் கொள்வோம். நம்முடைய உபரியான செலவுகளை நிறுத்திக் கொள்வோம். நம்முடைய செல்வத்திலிருந்து ஒரு பகுதியை இந்த இபாதத்துக்காக அல்லாஹ்வுடைய வீட்டை பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசைக்காக நாம் சேமிக்க ஆரம்பித்து விடுவோம். 
 
கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் தாபியீன்கள் இந்த ஹஜ் வணக்கத்திலே எப்படி ஈடுபட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் குலஃபாக்கள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஏறக்குறைய 11 ஆண்டுகள் அவர்களும் அப்படித்தான் ஒரு ஆண்டு கூட தவறவில்லை. தொடர்ந்து ஹஜ்ஜுக்கு சென்று கொண்டே இருந்தார்கள். 
 
யோசித்துப் பாருங்கள்! எவ்வளவு சிரமம் இருந்திருக்கும். இஸ்லாமிய ஜனாதிபதி! அதுவும் எப்பேர்ப்பட்ட சாம்ராஜ்யம்! அவர்களுக்கு இருக்கக்கூடிய வேலைகளை விடவா நமக்கு வேலை அதிகம்? அவர்களுக்கு இருந்த அந்த சிரமத்தை விடவா? 
 
ஏன் இன்னும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்ததற்கு பிறகு ஏறக்குறைய 40 ஆண்டுகள் அவர்கள் வாழ்கிறார்கள். கலிஃபா அபூ பக்கர் அவர்களுடைய அந்த  இரண்டு ஆண்டு காலம் பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலத்தில் இருந்து தான் மரணிக்கின்ற வரை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ஓராண்டு கூட ஹஜ்ஜை தவறவிட்டதில்லை. 
 
கேட்கப்படுகிறது; இவ்வளவு வயதாகி விட்டது; சிரமம் ஆகிவிட்டது; பலவீனமாக இருக்கிறீர்கள்; காரணம், காலமெல்லாம் நோன்பு வைப்பவர்கள், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் தொடர்ந்து நோன்பு வைத்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று வாழ்நாளெல்லாம் நோன்பு வைத்தவர்கள். அதுவும் எப்படிப்பட்ட நோன்பாக அவர்களுடைய நோன்பு இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்! 
 
நம்முடைய நோன்பை போன்று சஹரும் இஃப்தாரும் ஐந்து வேளைக்கு சமமான உணவைக் கொண்டு அல்ல. சில பேரீத்தம் பழங்களையும் சில மிடறு தண்ணீரையும் கொண்டுள்ள அவர்களின்  நோன்பிலே எவ்வளவு பலவீனப்பட்டு இருப்பார்கள். அந்த பலவீனத்தோடு அவர்கள் இறுதி வரை ஹஜ் செய்து கொண்டிருந்தார்கள்.
 
கேட்கப்பட்டது; அன்னையாரே இவ்வளவு பலவீனத்தோடு சிரமத்தோடு ஹஜ் செய்யவேண்டுமா? சொன்னார்கள்: நான் அல்லாஹ்வுடைய தூதர் இடத்திலே கேட்டேன். பெண்களாகிய எங்களுக்கு அல்லாஹ்வுடைய பாதையிலே போர் புரிவதற்கு அனுமதி கொடுங்கள் என்று அல்லாஹுவின் தூதர் அல்லாஹுத்தஆலா பெண்கள் மீது ஜிஹாதை கடமையாக்கவில்லை என்றார்கள். 
 
ஆனால், ஜிஹாத் உடைய சிறப்பை உணர்ந்த சகாபிய பெண்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கு எங்களுக்கும் நீங்கள் உத்தரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். யோசித்துப் பாருங்கள். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 2875, இப்னு மாஜா 2901.
 
இன்னொரு சம்பவத்தை நினைவு கூர்வோம்; ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் படுத்து இருக்கிறார்கள். உம்மு ஹிராமுடைய வீட்டிலே சிரித்தவர்களாக எழுகிறார்கள். உம்மு ஹிராம் கேட்கிறார். அல்லாஹ்வின் தூதரே சிரிக்கின்றீர்களே! கனவில் என்ன பார்த்தீர்கள்? சொன்னார்கள்: என்னுடைய உம்மத் கடலிலே பயணம் செய்கிறார்கள். கட்டில்களிலே மன்னர்கள் உட்கார்ந்து இருப்பது போன்று அல்லாஹ்வுடைய பாதையிலே முஜாஹிதுகளாக அவர்கள் செல்வதை பார்த்தேன். சந்தோஷப்பட்டு சிரித்தேன் என்று. உடனே உம்மு ஹிராம் சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே அந்த முஜாஹிதுகளில் நானும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்திலே துஆ செய்யுங்கள்! அல்லாஹ்வின் தூதர் நீயும் அந்த படையிலே இருப்பாய் என்று துஆ செய்தார்கள். 
 
பிறகு தூங்கி  எழுந்தார்கள். பிறகு சிரித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இப்போது எதற்கு சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். மீண்டும் அப்படிப்பட்ட ஒரு கனவை பார்த்தேன் என்று சொன்னார்கள். அப்படியா அல்லாஹ்வின் தூதரே இந்தப் படையிலும் நான் இருக்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள் என்று சொன்னார்கள். அப்போது நீங்கள் முந்திய படையை சேர்ந்தவர்கள், என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். 
 
என்ன பொருள்? அந்த படையில் நீங்கள் கொல்லப்பட்டு விடுவீர்கள்! அப்படித்தான் உம்மு ஹிராம்  ரலியல்லாஹு அன்ஹா தன்னுடைய கணவனார் உபாதாவோடு செல்கிறார்கள். கப்பலில் இருந்து கீழே இறங்கி தன்னுடைய குதிரையிலே ஏறுகின்ற நேரத்திலே குதிரை மிரண்டு விடுகிறது; கீழே விழுகிறார்கள்; குதிரையின் கால் அவர்களுடைய குரல்வளையை நெறித்து விடுகிறது; அங்கேயே ஷஹீதாகி விடுகிறார்கள்.
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 2875, இப்னு மாஜா 7001.
 
அன்பான சகோதரர்களே! இதுதான் அல்லாஹ்வுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும் என்று அந்த தோழர்களின் உள்ளத்திலே இருந்த ஏக்கம், தேடல், அல்லாஹ் கொடுத்த உயிரை அல்லாஹ் கொடுத்த செல்வத்தை அல்லாஹ் கொடுத்த உடல் ஆரோக்கியத்தை அல்லாஹ் கொடுத்த இந்த உலக வாழ்க்கையை அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வுடைய இபாதத்திற்காக அல்லாஹ்வுடைய தீனுக்காக அல்லாஹ்வுடைய திருப்திக்காக கொடுக்கவில்லை என்றால் எவ்வளவு பெரிய துர்பாக்கியம்?  அல்லாஹ்விற்காக இவற்றையெல்லாம் கொடுப்பதை விட ஒரு சிறந்த நர்பாக்கியம் இருக்க முடியுமா? 
 
பிறகு சொன்னார்கள்; ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வுடைய தூதரிடத்திலே நான் அனுமதி கேட்ட போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ஆயிஷா உங்களுக்கு நான் ஒரு ஜிகாதை கற்றுத் தருகிறேன். அந்த ஜிகாதிலே  சண்டை இருக்காது; அந்த ஜிகாதிலே எதிரிகளோடு  நேருக்கு நேர் மோதுவது இருக்காது; அப்படிப்பட்ட ஒரு ஜிஹாதை கற்றுத் தருகிறேன். அதுதான் உங்களுக்கு ஹஜ் என்று சொன்னார்கள். 
 
இந்த ஹதீஸை நேரடியாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான் கேட்டதற்கு பிறகு இந்த ஹஜ்ஜை நான் விடுவேனா என்று கேட்டார்கள். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 2875, இப்னு மாஜா 2901.
 
இதுதான் அந்த கண்ணியத்திற்குரிய சஹாபாக்களுக்கு வணக்கத்தின் மீது இருந்த ஆசை. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்; இரண்டே இரண்டு வணக்கம் ஹஜ்ஜும் உம்ராவும் அந்த இரண்டிலே எனது முடிகள் எல்லாம் பரட்டையாக களைப்போடு நான் செய்யக்கூடிய அந்த ஹஜ் எனக்கு கிடைத்து விட்டால் இந்த உலகத்தை விட எனக்கு எல்லாவற்றையும் விட அதுதான் எனக்கு பிரியமானது. 
 
அபூ மூசா அல்அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலே ஒருவர் கேட்கிறார். நான் ஹஜ் செய்வதற்காக ரொம்ப சிரமம் எடுத்துக் கொண்டு ஹஜ் செய்து கொண்டிருந்தேன். தொடர்ந்து ஹஜ் செய்து கொண்டிருந்தேன். இப்போது எனக்கு வயதாகி விட்டது; நான் பலவீனம் அடைந்து விட்டேன்; நான் என்ன செய்வது? ஹஜ்ஜுக்கு சமமான ஒரு இபாதத் இருக்குமா? எனக்கு அதை கற்றுக் கொடுங்கள் நான் செய்கிறேன் என்று சொன்னார்கள். 
 
அபு மூசா அல்அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹா அப்படியா? சரி, இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சந்ததிகளிலிருந்து எழுபது அடிமைகளை உன்னால் உரிமையிட முடியுமா? அந்த சந்ததிகளில்  அடிமையாக்கப்பட்டவர்களில் 70 அடிமைகளை வாங்கி உரிமையிட உனக்கு சக்தி இருக்கிறதா? சரி அப்படியே அதற்கு நீ சக்தி பெற்றால் கூட, இந்த அரஃபா மினா முஸ்தலிபாவிலே அலைய வேண்டிய அந்த அலைச்சல் இருக்கின்றதே அதற்கு சமமாக ஒரு இபாதத்தை ஒரு வணக்கத்தை நான் காண மாட்டேன் என்று அபு மூசா அல்அஷ்அரி  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இமாம் தாவூஸ் (ரஹ்) மிகப்பெரிய தாபியி. அவர்களிடத்திலே கேட்கப்படுகிறது; ஒருவர் ஃபர்லான ஹஜ்ஜை செய்துவிட்டார்; அடுத்து உபரியான ஹஜ்ஜை செய்வது சிறந்ததா? அல்லது தான தர்மங்கள் செய்வது சிறந்ததா? கேட்டார்கள்; சரி! தான-தர்மங்கள் செய்யட்டும்! ஆனால், இந்த மினாவிற்கு செல்வது, அரபாவிற்கு செல்வது, விழித்திருப்பது, களைப்புறுவது, காபாவிலே தவாப் செய்வது, காபாவிலே வணங்குவது, ஜம்ராத்துகளிலே கல் எறிவது இந்த சிரமங்களுக்கெல்லாம் அவர் எந்த இபாதத்தை கொண்டு ஈடு கட்டுவார் என்று.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இன்னும் பல விஷயங்களை நாம் அறிய வேண்டி இருக்கிறது. ஒரு சாதாரணமான வணக்கம் அல்ல இது! ஒரு சாதாரணமான இபாதத் அல்ல! சென்றவர்கள் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டும் என்று ஆர்வப்படக்கூடிய ஒரு இபாதத். 
 
செல்லாதவர்கள் எப்படியாவது எனது செல்வத்திலே முதலாவதாக நான் அல்லாஹ்வுடைய வீட்டிற்கு செல்வது, உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் என்று தனது செல்வத்தை சேமிப்பது, தன்னிடத்தில் இருக்கக்கூடிய உபரியான சொத்துகளை விற்பது, உபரியான செல்வங்களை இதற்காக செலவு செய்து தங்களுடைய அதாவது வாழ்க்கையினுடைய ஒரு லட்சியமாக ஒரு குறிக்கோளாக இதை ஆக்குவது. நமக்கு மிக முக்கியமான ஒன்று. காரணம் அவ்வளவு சிறப்பிற்குரியது. 
 
அல்லாஹ்விடத்திலே அவ்வளவு விருப்பமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹு தஆலா நம் அனைவருக்கும் ஹஜ் உடைய பாக்கியத்தை தந்தருள்வானாக! உம்ராவுடைய பாக்கியத்தை தந்தருள்வானாக! நம்முடைய ஹஜ் உம்ராவை அல்லாஹுத்தஆலா ஏற்றுக்கொள்வானாக! 
 
இக்லாஸோடு மனத்தூய்மையோடு அல்லாஹ்வுடைய அன்போடு ஈமானை அதிகப்படுத்துவதற்காக அல்லாஹ்வுடைய முஹப்பதை பயத்தை தக்வாவை அதிகப்படுத்துவதற்காக நம்முடைய ஹஜ் உம்ராக்களை அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/