புனிதங்களை மதிப்போம்! | Tamil Bayan - 882
புனிதங்களை மதிப்போம்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : புனிதங்களை மதிப்போம்!
வரிசை : 882
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 17-05- 2025 | 09-11-1445
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் அவருடைய இறுதி இறைத்தூதர் மீதும் அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் அனைவரும் மீதும் நிலவட்டும்! இந்த குத்பாவின் தொடக்கத்தில் எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை உபதேசம் செய்தவனாக தக்வாவை இறையச்சத்தை நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! நாம் மறைவில் செய்த, வெளிப்படையாக செய்த, அறிந்து செய்த, அறியாமையில் செய்த, விளையாட்டாக செய்த, வேண்டும் என்று செய்த, அனைத்து தவறுகளையும் குற்றங்களையும் பாவங்களையும் அல்லாஹுத் தஆலா மன்னித்து அருள்வானாக!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இந்த மார்க்கத்துடைய சிறப்பு அம்சங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அல்லாஹ் நமக்கு கொடுத்து இருக்கக்கூடிய சிறப்புகளின் ஒரு மொத்த சங்கமம் இந்த தீன்.
அல்லாஹுத்தஆலா உயர்ந்த சிறந்த மேன்மை மிக்க மார்க்கத்தை நமக்கு கொடுத்திருக்கிறான். இதனுடைய வணக்க வழிபாடுகள், இந்த மார்க்கம் போதிக்கக் கூடிய ஒழுக்கங்கள், இந்த மார்க்கம் போதிக்கக்கூடிய குடும்ப சட்டங்கள், பொருளாதார சட்டங்கள் என்ற அனைத்துமே மிக சிறப்பானவை; உயர்வானவை. அல்லாஹ்! எப்படி நாம் அவனை கண்ணியப்படுத்த வேண்டும்? மகத்துவப் படுத்த வேண்டும்?
அல்லாஹ்வுடைய தூய பெயர்களில் ஒன்று என்ன? அல் அழீம்
العظيم
மிக மகத்தானவன்; மிக உயர்ந்தவன். அவனை நாம் பெருமை படுத்த வேண்டும். அவனுடைய பெருமையைப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்
وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ لَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهٗ وَلِىٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيْرًا
நபியே உமது இறைவனின் பெருமையை பேசிக்கொண்டே இருங்கள். அவனை பெருமை படுத்திக் கொண்டே இருங்கள். பெருமைக்கு தகுதியானவன் அவன். (அல்குர்ஆன் : 17:111)
شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ
கருத்து : அல்லாஹுத்தஆலா சொல்கிறான்: உங்களுக்கு நோன்புக்கு வழிகாட்டினானே, ஒரு அழகிய பெருநாளை கொண்டாடுவதற்கு வழி காட்டினானே, இந்த மார்க்கத்திற்கு வழிகாட்டினானே, அதற்காக உங்களது ரப்பை பெருமைப்படுத்துங்கள். (அல்குர்ஆன் : 2:185)
மக்கள் எல்லாம் வழிபாடு என்றால் என்னவென்று தெரியாமல் சடங்குகளையும் வீணான சுமைகளையும் ஷைத்தான் அவர்களுக்கு சொல்லக்கூடிய சந்தேகங்களையும் சங்கதிகளையும் தங்களுக்கு வழிபாடுகளாக ஆக்கிக் கொண்டு வீண் சிரமங்களுக்கு கேவலங்களுக்கு அவமானங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு கண்ணியத்தை கொடுக்கக் கூடிய மன அமைதியை கொடுக்கக்கூடிய சுய கௌரவத்தை பேணக்கூடிய ஒழுக்கமிக்க வழிபாடுகளை அல்லாஹ் கொடுத்தானே அல்லாஹ்வை பெருமை படுத்துங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இந்த மார்க்கத்தினுடைய சிறப்பு அம்சங்களிலே ஒன்று என்ன? அல்லாஹ்வுடைய நேசத்தின் வெளிப்பாடாக அல்லாஹுவை நாம் பெருமை படுத்துவது போன்று, அல்லாஹ்வை நாம் மகத்துவப்படுத்துவது போன்று, அதனுடைய வெளிப்பாடாக அல்லாஹுத்தஆலா இந்த பூமியிலே அவனுக்கென்று சில அடையாளங்களை வைத்திருக்கிறான். சில புனிதங்களை அல்லாஹ் வைத்திருக்கின்றான்.
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட முஃமின், அல்லாஹுத்தஆலா எதை கண்ணியப்படுத்தினானோ அதனுடைய கண்ணியத்தையும் போற்ற வேண்டும்; அதனுடைய மகத்துவத்தை போற்ற வேண்டும். அதாவது, அவற்றை மதித்து நடக்க வேண்டும், எந்த மதிப்பை அல்லாஹுத்தஆலா கொடுக்க வேண்டும் என்று சொன்னானோ அந்த அளவு மதிப்பு. அவற்றில் எல்லை மீறி விடவும் கூடாது; அவற்றை குறைத்து விடவும் கூடாது.
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா இப்படிப்பட்ட பல புனிதங்களை நமக்கு கொடுத்திருக்கிறான். இதன் மூலமாக அல்லாஹுத்தஆலா நம்மை சோதிக்கிறான். ஷிர்கிர்க்கும் தவ்ஹீதுக்கும் இடையிலே நமக்கு மிகப்பெரிய ஒரு சோதனை இருக்கிறது.
முஷ்ரிக்குகள் எப்படிப்பட்டவர்கள்? புனிதங்களை மதிக்கின்றோம் என்ற பெயரில் அந்த புனிதங்களையே வணங்க ஆரம்பித்து விடுவார்கள். அல்லாஹ் கண்ணியப்படுத்தியதை கண்ணியப்படுத்துகிறோம் என்ற பெயரில் அதையே வணங்கி விடுவார்கள். ஷிர்க்கிலே அவர்கள் சென்று விடுவார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
மூஃமின்கள் அல்லாஹ்வுடைய நேசத்தை கொண்டு அதை நேசித்து அல்லாஹ் கண்ணியப்படுத்த வேண்டும் என்று கூறிய கட்டளையை கொண்டு அதை கண்ணியப்படுத்தி, அதன் மீது ஈமானிய அன்பை வைப்பார்கள்.
அல்லாஹ் நமக்கு அங்கே பேண வேண்டும் என்று கூறிய ஒழுக்கங்களை பேணுவார்கள். அதாவது அவற்றை எப்படி மதிக்க வேண்டும் என்று அல்லாஹ்வும் ரசூலும் வழிகாட்டினார்களோ அந்த முறையில் அந்த ஒழுக்கங்களை அவர்கள் பேணுவார்கள்.
இது அல்லாஹ்விற்காக, அல்லாஹ்வை கண்ணியப்படுத்துகிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக. எடுத்துக்காட்டாக தொழுகை இருக்கிறது. இது அல்லாஹ்வுடைய ஒரு அடையாளச் சின்னம். நோன்பு, ஜக்காத், ஹஜ், வணக்க வழிபாடுகள் போன்ற இவை எல்லாம் அல்லாஹ்வுடைய பல அடையாளச் சின்னங்கள்.
இப்படி வணக்க வழிபாட்டிலே அல்லாஹுத்தஆலா ஏராளம் வைத்திருக்கிறான். அது போன்று தான் காலங்களிலே அல்லாஹுத்தஆலா புனிதங்களை வைத்திருக்கிறான். இடங்களிலே அல்லாஹுத்தஆலா புனிதத்தை வைத்திருக்கிறான். காலங்களிலே அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா நான்கு மாதங்களை புனித மாதங்களாக தேர்ந்தெடுத்தான்.
ذو القعده ،ذو الحج، محرم ،رجب
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ
நான்கு மாதங்கள் மிகவும் கண்ணியமானவை; மிகவும் மதிக்கத்தக்கவை; புனிதமானவை என்று அல்லாஹ் கூறுகிறான் இது வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த போதே இந்த நான்கு மாதங்களை புனித மாதங்களாக அல்லாஹ் எழுதி விட்டான். (அல்குர்ஆன் : 9:36)
அன்பான சகோதரர்களே! அதுபோன்றுதான் அல்லாஹ்வுடைய கஅபா இருக்கிறது. மக்கா நகரம் இருக்கிறது. மினா, முஜ்தலிஃபா, அரஃபா இருக்கின்றன. ஸஃபா, மர்வா மலைகள் இருக்கின்றன. அங்கே குர்பானி கொடுக்கப்படக்கூடிய குர்பானி பிராணிகள் இருக்கின்றன.
இவையெல்லாம் அல்லாஹ் புனிதமாக்கியவை; அல்லாஹ் கண்ணியப்படுத்தியவை. அல்லாஹ்வுடைய அடையாளச் சின்னங்கள். இவற்றோடு நம்முடைய வணக்க வழிபாடுகள் சம்பந்தப்படுகின்றன.
இங்கே சென்று நாம் நம்முடைய ரப்பை வணங்குகிறோம். அந்த இடத்தில் இந்த புனிதத்தை உணர்ந்தவர்களாக செல்ல வேண்டும். இந்த புனிதத்தையும் மதித்தவர்களாக செல்ல வேண்டும். இந்த புனிதங்களின் மீது நேசம் உள்ளவர்களாக செல்ல வேண்டும்.
அல்லாஹு தஆலா அல்குர்ஆனிலே ஒரு வசனத்தில் கூறியிருந்தாலே அது மிகப்பெரிய கட்டளையாக இருக்கும் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட பல வசனங்களில் அல்லாஹுத்தஆலா இந்த புனிதங்களை குறித்து நமக்கு வழிகாட்டுகின்றான்.
இங்கு அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்று அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறான். விசேஷமான வழிபாடுகளுக்காக இந்த இடங்களுக்கு அல்லாஹ் உங்களை அழைத்திருக்கிறான். இந்த குர்பானி பிராணிகளை நீங்கள் அறுத்து அல்லாஹ்விற்காக பலியிட வேண்டும் என்று அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறான். பணிந்தவர்களாக, இஹ்ராம் அணிந்தவர்களாக, தல்பியா கூறியவர்களாக இந்த ஊருக்குள் வாருங்கள் என்று அல்லாஹ் உங்களை தனது விருந்தாளியாக அழைத்து இருக்கிறான்.
அல்லாஹ் புனிதமாக்கிய, பாதுகாத்த, அபயம் அளிக்கக்கூடிய நகரத்திற்கு அல்லாஹ் உங்களை வரவழைத்து இருக்கிறான். அல்லாஹ்வுடைய ஊருக்கு அல்லாஹ்வுடைய வீட்டிற்கு அல்லாஹ்வுடைய மஸ்ஜித்திற்கு அல்லாஹ் வரவழைத்து இருக்கிறான்.
ரப்புல் ஆலமீன் சொல்கின்றான்:
ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ
இவையெல்லாம் அல்லாஹ்வுடைய அடையாள சின்னங்கள். (அல்குர்ஆன் : 22:32)
மேலும் அல்லாஹுத்தஆலா சொல்கிறான்: அல்லாஹ்வுடைய இந்த அடையாளங்களை யார் மகத்துவப்படுத்துகிறார்களோ யார் கண்ணியப்படுத்துகிறாரோ இது அவர்களுடைய உள்ளங்களில் அல்லாஹ்வுடைய தக்வா -பயம் இருக்கிறது என்பதின், அல்லாஹ்வை அவர்கள் பயந்தவர்கள் என்பதின் வெளிப்பாடு.
இது ஒரு மனிதன் மக்காவிற்குள்ளே செல்லும் பொழுது பயந்தவனாக, பணிந்தவனாக, அமைதியானவனாக தல்பியா கூறியவனாக, அல்லாஹ்வுடைய திக்ரை கூறியவனாக செல்கிறான் என்றால் அந்த மக்கா நகரத்திலே தங்கி இருக்கும் பொழுது திக்ருகள் துஆக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறான்; குர்ஆன் ஓதுகிறான்; அங்கே வீணான ஆபாசமான பேச்சுகளை பேசுவதில்லை. தவறான செயல்களில் அங்கே ஈடுபடுவதில்லை. கஅபத்துல்லாவை தவாப் செய்கிறான். அந்த காபாவை மரியாதையோடு பார்க்கிறான். அதை சுற்றுவதை அல்லாஹ்வுடைய வணக்கமாக செய்கிறான். அங்கே துஆ கேட்பதை அல்லாஹ்வுடைய வணக்கமாக செய்கிறான். அங்கே தங்கி அவன் குர்ஆன் ஓதுகிறான். திக்ரு செய்கிறான்.
وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ
கருத்து : இப்ராஹீமே! இஸ்மாயிலே! என்னுடைய வீட்டை என்னுடைய ஆலயத்தை சுத்தபத்தமாக வைத்திருங்கள். இங்கே ஷிர்க்கை நீங்கள் நுழைய விட்டு விடாதீர்கள். இங்கே அசுத்தங்களை நுழைய விட்டு விடாதீர்கள். இங்கே தவாப் செய்ய வரக்கூடியவர்களுக்காக இங்கே தங்கி அல்லாஹ்வை வணங்கக் கூடியவர்களுக்காக ருகூஃ, சுஜூதிலே இருப்பவருக்காக இந்த வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். (அல்குர்ஆன் : 2:125)
அங்கே அவர் தங்குகிறார்; ஓதுகிறார்; திக்ரு செய்கிறார்; குர்ஆன் ஓதுகிறார். அன்பான சகோதரர்களே இது அவர் அல்லாஹ்வை கண்ணியப்படுத்துகிறார். அந்த வீட்டை கண்ணியப்படுத்துவது என்றால் மஸ்ஜித்திற்கு விலை உயர்ந்த சாமான்களை கொண்டு வருவது; சாமான்களை கொடுப்பது என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள்; இது அல்லாஹ்வுடைய பாதையில் கொடுப்பது, உயர்ந்தது ஒரு சிறந்த தானம் தர்மம் என்பதிலே சந்தேகமில்லை.
ஆனால் அல்லாஹ்வுடைய வீடுகளை கண்ணியப்படுத்துவது என்றால் அங்கே இபாதத் செய்வது, அங்கே திக்ரு செய்வது, குர்ஆன் ஓதுவது, மார்க்க கல்வியை கற்பது கற்பிப்பது, அங்கே வீணான பேச்சுகளை தவிர்ப்பது, ஆபாசமான பேச்சுகளை தவிர்ப்பது, பாவமான பேச்சுகளை தவிர்ப்பது.
ஒரு மனிதர் மஸ்ஜிதுக்கு வரும் பொழுது உயர்ந்த ஆடைகளோடு வருகிறார். உயர்ந்த பொருள்களை மஸ்ஜித்திற்கு கொடுக்கிறார். ஆனால் அங்கே வழிபாடு செய்வதில்லை. அங்கே தொழுவதில்லை. அங்கே தங்கி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பதில்லை என்று சொன்னால் அவர் உண்மையில் அந்த மஸ்ஜிதை கண்ணியப்படுத்தக்கூடிய விதத்தில் கண்ணியப்படுத்தவில்லை.
கண்ணியத்திற்குரியவர்களே! ஒரு மஸ்ஜித்திற்கு சென்றால் நீங்கள் இரண்டு ரக்அத் தொழாமல் நீங்கள் உட்காராதீர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டினார்களே. இது எதை உணர்த்துகிறது? அல்லாஹ்வுடைய வீட்டிற்கு வந்தோம். அல்லாஹ்வுடைய வீட்டின் காணிக்கையாக அல்லாஹ்வை தொழுவது. இது அந்த மஸ்ஜிதை கண்ணியப்படுத்துவது.
அல்லாஹுத்தஆலா சொல்கிறான்: இப்படி யார் புனிதங்களை நேசிப்பாரோ அல்லாஹ்வுடைய அடையாளங்களை மதிப்பாரோ இது உள்ளத்தில் இருக்கக்கூடிய தக்வாவின் வெளிப்பாடு. இறையச்சத்தின் வெளிப்பாடு என்று சொல்கிறான்.
அன்பான சகோதரர்களே!. இந்த உள்ளம் ஒரு மரத்தைப் போல. எப்படி ஒரு மரம் பசுமையாக இருப்பதற்கு காய்கனிகளை கொடுப்பதற்கு அதற்கு நீர் தேவையோ அது போன்று தான் இந்த கல்பு உள்ளம்.
இதனுடைய ஆக்கப்பூர்வமான நல்ல தன்மைகளை வெளிப்படுத்துவதற்கு, இந்த கல்வியில் இருந்து ஆக்கபூர்வமான நல்ல தன்மைகள் நல்ல குணங்கள் நல்ல பண்பாடுகள் வெளியே வருவதற்கு இந்த கல்பிற்கு தண்ணீர் தேவை. அந்த தண்ணீர் தான் அல்லாஹ்வுடைய பயம். அந்த தண்ணீர் தான் அல்லாஹ்வுடைய நேசம். அந்த தண்ணீர் தான் அல்லாஹ்வுடைய இபாதத். அந்த தண்ணீர் தான் அல்லாஹுத்தஆலா புனிதப்படுத்தக்கூடிய அந்தப் புனிதங்களை மதிப்பது நேசிப்பது.
இன்று, எத்தனையோ ஹாஜிகள் உம்ரா பயணிகள் ஹஜ்ஜுக்கு வருவதை பார்க்கிறோம்; அல்லாஹ் மிக அறிந்தவன். அவர்களிலே பெரும்பானவர்களிடம் அது ஒரு வணக்கம்; அதை நிறைவேற்ற வேண்டும் அவ்வளவுதான். மற்றபடி அல்லாஹ்வுடைய அந்த வீட்டை நேசித்தவர்களாக, அதைத் தேடியவர்களாக அங்கே செல்ல வேண்டுமே! அந்த காபாவை பார்க்க வேண்டுமே! அங்கே என்னுடைய ரப்புடைய பொருத்தத்தை தேட வேண்டுமே! என்று எண்ணுவோர் எத்தனை பேர்?
காபாவை சுற்றி வருவதில் என்னுடைய கால் வலிக்கும் பொழுது ஸபா மர்வா மலையிலே சயி செய்யும்பொழுது அங்கே நின்று துஆ கேட்கும் போது அங்கே ருகூஃ சுஜூதிலே நபிலான வணக்க வழிபாடுகளிலே நீண்ட நேரம் தொழும் பொழுது எனக்கு ஏற்படக்கூடிய அந்த வலிகள் அந்த சிரமங்கள் அங்கே செல்லக்கூடிய பாதையில் ஏற்படக்கூடிய பயணத்தின் சிரமங்கள் இவற்றையெல்லாம் நான் அல்லாஹ்விற்காக அனுபவித்து அல்லாஹ்வுடைய அன்பை பொருத்தத்தை மன்னிப்பை தேடுகிறேன்; அல்லாஹ்வுடைய அந்த வீட்டை கண்ணியப்படுத்துகிறேன் என்று அந்த ஏக்கத்தோடு அந்த தேடலோடு அந்த ஆசையோடு அந்த துடிதுடிப்போடு செல்லக்கூடிய ஹாஜிகள், உம்ரா பயணிகள் எங்கே? எத்தனை பேர் யோசித்துப் பாருங்கள்!
பயம் வேண்டாமா? ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி வருகிறது. அவர்கள் வாகனத்தில் உட்கார்ந்து ஹஜ்ஜுக்காக உம்ராவிற்காக மதினாவில் இருந்து புறப்பட்டார்கள் என்றால் அப்படியே அமைதியாகி விடுவார்கள். தல்பியா சொல்வதற்கு அவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கும். அப்படியே அமைதியாக இருப்பார்கள். தலை குனிந்து விடுவார்கள். அவர்களுடைய முகத்தை பார்த்தால் முகமெல்லாம் பயத்தால் வெளுத்து போயிருக்கும். நடுநடுங்கி கொண்டிருப்பார்கள். பயந்து விடுவார்கள். தல்பியாவை சொல்ல முயற்சிப்பார்கள். சொல்ல முடியாது.
அல்லாஹ் அக்பர்! அந்த தல்பியா உடைய மகத்துவத்தை பாருங்கள்! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸை நினைத்து பார்த்தார்கள். ஒருவர் தல்பியா சொல்வார்
لبيك اللهم لبيك
அல்லாஹ்வின் புறத்திலிருந்து பதிலளிக்கப்படும்;
لا لبيك ولا سعديك
உனது தல்பியா நிராகரிக்கப்பட்டு விட்டது. உன்னுடைய ஆடை ஹராம், உன்னுடைய உணவு ஹராம், உன்னுடைய தல்பியா நிராகரிக்கப்பட்டு விட்டது என்று எனக்கு கூறப்பட்டு விடுமோ என்று பயந்தார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அல் ஜாமிஉஸ் ஸகீர் 557, தரம் : பலவீனமானது.
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய அந்த மகத்துவத்தை உணராமல் செய்யப்படக்கூடிய இபாதத்துகள் அது இபாதத்துகள் அல்ல. அது வெறும் உடல் அசைவுகள். அல்லாஹுத்தஆலா இந்த ஹஜ்ஜுடைய வணக்க வழிபாட்டிலே சஃபா மர்வா மலைகளிடையே செய்யும் அந்த சயீ யை எப்படி சொல்கிறான் பாருங்கள்! அந்த ஸஃபா மலையும் மர்வா மலையும் அல்லாஹ்வுடைய அடையாளச் சின்னங்கள்.
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ
யார் ஹஜ்ஜுக்கு உம்ராவிற்கு வருவாரோ அவர் தவாப் செய்வது இந்த இரண்டு மலைகளுக்கு இடையே சஃயி செய்வது அது குற்றமான காரியம் அல்ல. அது நன்மையான காரியம் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் : 2:158)
அது மட்டுமா? அல்லாஹுத்தஆலா கோபத்தோடு எச்சரிக்கையும் செய்கிறான். யார் அந்த புனிதங்களை பாழாக்குகிறார்களோ, அங்கே பாவங்கள் புரிகிறார்களோ, அந்த புனிதங்கள் கெடும்படியான செயல்களில் ஈடுபடுகிறார்களோ அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
புனிதங்களை பாழ்படுத்துவது என்றால் என்ன? அங்கே பாவங்களை செய்வது. அல்லாஹ்வுடைய கட்டளைகளை மீறுவது. அங்கே அலட்சியமாக அந்த புனிதங்களின் கண்ணியம் கெடும்படியான செயல்களை செய்வது பேச்சுகளை பேசுவது.
அல்லாஹ் சொல்கிறான்:
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَآٮِٕرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ الْحَـرَامَ
விசுவாசிகளே! நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை நீங்கள் பாழ்படுத்தி விடாதீர்கள். ஹலால் ஆக்கி விடாதீர்கள். அதனுடைய புனிதத்தை கெடுத்து விடாதீர்கள். (அல்குர்ஆன் : 5:2)
அந்த புனித மாதங்களில் ஒன்றான துல்கஃதா மாதத்தில் தான் நாம் இப்போது இருந்து கொண்டிருக்கிறோம்.. இந்த நான்கு மாதங்கள்; துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப். இந்த நான்கு மாதங்களில் பாவம் செய்வது மற்ற மாதங்களில் பாவம் செய்வதை விட குற்றத்தால் இன்னும் கடுமையானது.
வணக்க வழிபாடுகளிலே அலட்சியம் செய்வது மற்ற மாதங்களில் குற்றம் கடுமையானதுதான். ஆனால் அதை விட இந்த மாதங்களில் குற்றம் என்பது மேலும் கடுமையானது.
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் புனித அடையாளங்களையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) குர்பானியையும், மாலையிடப்பட்ட குர்பானிகளையும், தங்கள் இறைவனிடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடியவர்களாக புனிதமான (கஅபா) ஆலயத்தை நாடி வருகின்றவர்களையும் (அவமதிப்பதை) ஆகுமாக்காதீர்கள். இன்னும், நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால் நீங்கள் வேட்டையாடுங்கள்! (அது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது.) புனிதமான மஸ்ஜிதைவிட்டு அவர்கள் உங்களைத் தடுத்த காரணத்தால் (அந்த) சமுதாயத்தின் (மீது உங்களுக்கு ஏற்பட்ட) துவேஷம் (வெறுப்பு, பகைமை) நீங்கள் (அவர்கள் மீது) எல்லை மீறி நடக்க உங்களைத் தூண்ட வேண்டாம். இன்னும், நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். இன்னும், பாவத்திற்கும் அநியாயத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் : 5:2)
وَلَاۤ آٰمِّيْنَ الْبَيْتَ الْحَـرَامَ
கண்ணியமான புனிதமான ஆலயமாகிய இந்த காபாவை நாடி ஹஜ் உம்ராவிற்காக வருகிறார்களே அவர்களையும் நீங்கள் பாழாக்கி விடாதீர்கள்; அவர்களுடைய கண்ணியத்தை கெடுத்து விடாதீர்கள்; அவர்களோடு மரியாதையாக நடப்பது; அன்பாக நடப்பது; சண்டை சச்சரவு வாக்குவாதம் செய்யாமல் இருப்பது; அவர்களின் பொருள்களை திருடாமல் இருப்பது; அவர்களுக்கு எந்த விதமான இடையூறும் செய்யாமல் இருப்பது.
இவையெல்லாம் நம்முடைய ஈமானிய கடமை. இவையெல்லாம் அல்லாஹ்வுடைய புனிதங்கள் என்று சொல்கிறான். இவற்றை அல்லாஹ் நேசிக்கின்றான். இவை கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.
ரப்புல் ஆலமீன் சொல்கிறான் பாருங்கள்
جَعَلَ اللّٰهُ الْـكَعْبَةَ الْبَيْتَ الْحَـرَامَ قِيٰمًا لِّـلنَّاسِ وَالشَّهْرَ الْحَـرَامَ وَالْهَدْىَ وَالْقَلَاۤٮِٕدَ ذٰ لِكَ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
புனித வீடாகிய கஅபாவை மக்களுக்கு பாதுகாப்பாக அல்லாஹ் ஆக்கினான். இன்னும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) பலியையும், மாலை (இடப்பட்ட பலி)களையும் அல்லாஹ் ஏற்படுத்தினான். அ(வ்வாறு அல்லாஹ் ஏற்படுத்திய)து ஏனெனில், வானங்களிலுள்ளதையும் பூமியிலுள்ளதையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான் என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும். (அல்குர்ஆன் : 5:97)
அன்பானவர்களே! அல்லாஹுத்தஆலா நம்மிடத்திலே உள்ளத்தின் இந்த தன்மையை எதிர்பார்க்கிறான். வெறும் அசைவுகளையோ அல்லது சில செலவுகளையோ அல்லாஹுத்தஆலா எதிர்பார்க்கவில்லை. அந்த அசைவு உணர்வோடு இருக்க வேண்டும். சொல் ஈமானோடு இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் ஹஜ்ஜுக்கு செல்லும் பொழுது லப்பைக் என்று சொல்கிறார் என்றால் அங்கே உணர வேண்டும்; அவர் லப்பைக் யாஅல்லாஹ் உனக்கு முன்னால் ஆஜராகி விட்டேன்; உனது வீட்டுக்கு வந்து விட்டேன்; வரப்போகிறேன்; வந்து கொண்டிருக்கிறேன்; என்று அந்த உணர்வோடு இருக்க வேண்டும்.
அந்த ஒரு உணர்வோடு செய்யப்படுகின்றவற்றுக்கு இருப்பதைப் போன்று கணம்; மதிப்பு. உணர்வோடு ஒன்றாமல் சொல்லப்படக்கூடிய சொற்களோ, செய்யப்படக்கூடிய செயல்களோ அது ஒரு சாதாரணமான ஒன்றுதான். அல்லாஹ்விடத்திலே அதற்கு கணம் இருக்காது. எந்த செயல்கள் சொல்கள் அல்லாஹுவிடம் பொருள்படுமோ அதற்குத்தான் அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்கு வழிகாட்டுகின்றான்; இந்த புனிதங்களை பேண வேண்டும் என்று.
தொழுகை, இது ஒரு அல்லாஹ்வுடைய அடையாளச் சின்னம். இதை அல்லாஹு அக்பர் என்று ஆரம்பித்து அந்த தொழுகை முடிகின்ற வரை அல்லாஹ் சொல்கிறான்; பயந்தவர்களாக பணிந்தவர்களாக அமைதியாக தொழுகையிலே நில்லுங்கள் என்று.
நோன்பு, அது ஒரு புனிதம். வீணான பேச்சுகளை பேசக்கூடாது. புறம் பேசக்கூடாது. பார்வைகளை பாதுகாக்க வேண்டும். யார் வீணான பேச்சுகளை பேசுவதை விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலே தாகித்திருப்பதிலே அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லுகிறார்கள்.
அது போன்று தான், ஹஜ் உம்ரா உடைய இந்த பயணம் என்பது, ஏதோ நமக்கு செல்வம் இருக்கிறது அல்லது இது நம்முடைய மார்க்கத்தினுடைய ஒரு கடமை செய்து விட்டு வருவோம். எல்லோரும் செல்கிறார்கள், நாமும் செல்வோம். என்று செய்யப்படக்கூடிய வணக்கம் அல்ல.
அல்லாஹுத்தஆலா அவனுடைய நேசத்தை நான் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவனுடைய புனிதத்தை நான் மதிக்கிறேன் உணருகிறேன் அவனோடு எனக்கு நேசம் இருக்கிறது அந்த புனிதங்களின் மதிப்பு எனது உள்ளத்திலே இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்காக என்னுடைய உள்ளத்தில் அவனுக்கு இருக்கக்கூடிய அன்பை சோதிப்பதற்காக அவனுக்காக நான் எவ்வளவு சிரமங்களை தியாகங்களை தாங்கிக் கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை வெளிப்படையாக காட்டுவதற்காக அல்லாஹ் என்னை அழைக்கிறான்.
அன்பானவர்களே! அறிஞர் இடத்திலே கேட்கப்பட்டது; ஹஜ் செய்வது சிறந்ததா? அல்லது அதாவது ஒரு ஹஜ்ஜுக்குப் பிறகு இன்னொரு ஹஜ் அல்லது தர்மங்கள் செய்வது சிறந்ததா? என்று. என்ன அழகாக சொன்னார்கள்: தர்மம் செய்வது இவை எல்லாம் வணக்கம் தான். இவைகள் எல்லாம் சிறந்த வழிபாடுகள் தான்.
ஆனால், இந்த அரஃபா, மினா, முஸ்தலிபாவிலே ஹாஜிகள் படக்கூடிய அந்த சிரமங்களுக்கான நன்மைகளை எங்கிருந்து பெற முடியும்?
யோசித்துப் பாருங்கள்! அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா அந்த சிறிய அளவுடைய காலம், அந்த சிறிய இடத்திலே இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை தன்னுடைய அடியார்களை கூட்டி அவர்கள் தனக்காக எந்த அளவு வணக்க வழிபாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அந்த இடங்களின் புனிதத்தை மதித்தவர்களாக, இவ்வளவு சிரமங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு, எத்தகைய பெரிய செல்வந்தராயினும் எல்லோரும் அந்த இடத்திலே சமமாக அல்லாஹ்வை வணங்கியவர்களாக இருக்கக்கூடிய அந்த தியாகத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பார்த்து சந்தோஷப்படுகிறான்.
அதுவும் குறிப்பாக அரஃபா மைதானம், அது ஹரமுடைய எல்லைக்கு வெளியில் இருக்கக்கூடிய இடம்.
அரஃபா தான் ஹஜ் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வலியுறுத்தினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2975.
அன்பிற்குரியவர்களே! அந்த புனிதங்களோடு ஒரு முஃமினுடைய உள்ளம் எப்படி ஈடுபாடு கொண்டு இருக்கிறது என்பதை பார்த்து அல்லாஹ் சந்தோஷப்படுகிறான்.
ஆகவே, அல்லாஹுத்தஆலா அந்த ஈமானை நமக்கு கொடுக்க வேண்டும். அந்த இக்லாஸை நமக்கு கொடுக்க வேண்டும். அந்த முஹப்பத்தை நமக்கு கொடுக்க வேண்டும். அந்த பயத்தை நமக்கு கொடுக்க வேண்டும் என்று துஆ செய்ய வேண்டும்.
எப்படி வணக்க வழிபாடுகளுக்கு நாம் துஆ கேட்கின்றோமோ அது போன்று அந்த வணக்க வழிபாடுகளை உணர்வோடு அச்சத்தோடு அன்போடு பாசத்தோடு அந்த ஈமானிய உணர்வோடு அல்லாஹ்வுடைய நெருக்கத்திற்காக ஏங்க கூடிய அந்த ஏக்கத்தோடு செய்ய வேண்டும். அந்தப் பிரியத்தோடு செய்ய வேண்டும் என்று அல்லாஹ்விடத்திலே அந்த தவ்பீக்கை நாம் வேண்ட வேண்டும்.
அதுதான் ஈமானுடைய உண்மையான அடிப்படையாக இருக்கிறது. நபிமார்கள் ஏன் இபாதத்திலே அழுதார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: தங்களுடைய இறுதி ஹஜ்ஜில் இதோ நான் மூசாவை பார்க்கிறேன். இதோ நான் ஈசாவை பார்க்கிறேன். கத்தியவர்களாக கதறியவர்களாக தல்பியா கூறிக் கொண்டு வருவதை நான் பார்க்கிறேன் என்று சொன்னார்களே!
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண்: 166.
அது எதை உணர்த்துகிறது? அல்லாஹ்வுடைய அந்த ஏக்கம், அல்லாஹ்வுடைய அந்த பாசம் அந்த புனிதங்களின் மீது இருக்கக்கூடிய அந்தத் தேடல்!
சகோதரர்களே! இன்று, ஹஜ்ஜுக்கு செல்லக்கூடிய ஹாஜிகள் உம்ரா பயணத்திற்கு செல்லக்கூடிய ஹாஜிகள் அது போன்று அவர்களை வழி அனுப்ப கூடியவர்கள் இந்த ஈமானிய உணர்வை அவர்களுக்கு கண்டிப்பாக சொல்லவேண்டும்.
இல்லை, சென்றோம்; சுற்றினோம்; பொருள்களை வாங்கினோம்; ஏதோ நமது கடமை முடிந்தது என்ற நினைப்போடு அல்லது பெருமையோடு அல்லது வேறு விதமான எண்ணங்களோடு திரும்புவார்களேயானால் அது உண்மையான பரிபூரணமான ஹஜ் உம்ராவாக இருக்காது. மாறாக அங்கு செல்லும் பொழுது அல்லாஹ் எனக்கு இந்த ஹஜ்ஜுக்கான வாய்ப்பை தவ்ஃபீகை கொடுத்தானே! யாஅல்லாஹ் இந்த ஹஜ்ஜை ஏற்றுக் கொள்! உண்மையான சரியான வணக்க வழிபாடுகளை செய்வதற்கு எனக்கு தவ்ஃபீக் கொடு! என்ற பயத்தோடு செல்ல வேண்டும். திரும்பி வரும் பொழுது யா அல்லாஹ் அங்கே என்னுடைய குற்றங்களால் குறைகளால் தவறுகளால் என்னுடைய ஹஜ்ஜை நீ நிராகரித்து விடாதே! என்னுடைய குற்றங்களை மன்னித்து என்னுடைய ஹஜ்ஜை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கு! என்று அந்த துஆவோடு பயத்தோடு திரும்பக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.
அல்லாஹ் தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய வீட்டை மீண்டும் மீண்டும் ஹஜ் உம்ரா செய்வதற்கான நற்பாக்கியத்தை தந்தருள்வானாக! நம்மிலே யாருக்கு இதுவரை அந்த வாய்ப்பு ஏற்பட வில்லையோ அவர்களுக்கான அந்த வாய்ப்பை அல்லாஹ் தஆலா எளிதாகவும் விரைவாகவும் ஆக்கி அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/