HOME      Khutba      பெற்றோரை பேணுவோம்!! | Tamil Bayan - 897   
 

பெற்றோரை பேணுவோம்!! | Tamil Bayan - 897

           

பெற்றோரை பேணுவோம்!! | Tamil Bayan - 897


பெற்றோரை பேணுவோம்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : பெற்றோரை பேணுவோம்!
 
வரிசை : 897
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 26-07-2024 | 20-01-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த கண்ணியத்திற்குரிய தூதர் உடைய பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை உபதேசம் செய்தவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அருளையும் அன்பையும் மறுமையில் மகத்தான வெற்றியையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நம்மை மன்னிப்பானாக! நம்முடைய சிறிய பெரிய தவறுகள், குற்றங்கள், பாவங்கள், பிழைகள், குறைபாடுகள் அனைத்தையும் மன்னித்து விடுவானாக! அல்லாஹ் நம்மை பொருந்திக் கொண்ட நிலையில் நம்முடைய உயிர்களை கைப்பற்றுவானாக! நம்முடைய மறுமை வாழ்க்கையை இவ்வுலக வாழ்க்கையை விட சிறந்த சொர்க்க வாழ்க்கையாக ஆக்கி அருள்வானாக! ஆமீன். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! மனிதர்களாகிய நாம் எவ்வளவுதான் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேண வேண்டும்; அல்லாஹ்வுடைய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று முயற்சி செய்தாலும் சில நேரங்களிலே நம்மிடம் சில குறைகள். சில பாவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. சில பெரும் கடமைகளை அலட்சியம் செய்து விடுகிறோம்.
 
அதற்காக அல்லாஹு தஆலா நமக்கு இஸ்திக்ஃபாரை பாவ மன்னிப்பு கொடுத்து இருக்கிறான். அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு தேடிக் கொண்டே இருக்க வேண்டும். 
 
நம்முடைய கவனம் எதுவரை சுய பரிசோதனையில் இருக்காதோ, அதாவது நான் என்ன தவறுகளை செய்கிறேன்? என்னிடத்திலே என்ன பிழைகள் குற்றங்கள் இருக்கின்றன? என்று நாம் ஒவ்வொருவரும் நம்மை கவனிக்கவில்லை என்றால், நான் என்னை திருத்த வேண்டும் என்று நினைக்கவில்லை என்றால் அந்த குறைகளை நாம் பார்க்க முடியாது. நாம் செய்கிற குறைகள் நமது கண்ணுக்கு தெரியாது. 
 
அது சிறிய பாவங்களாக இருந்தால் நம்மை அறியாமலேயே நாம் உளூ செய்யும் போது மன்னிக்கப்பட்டு விடும். நம்முடைய தொழுகையை கொண்டு மன்னிக்கப்பட்டு விடும். முந்திய ஜுமுஆவில் இருந்து இந்த ஜுமுஆ வரை அந்த சிறு பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடும். 
 
ஆனால், அதே நேரத்தில் அது பெரும் பாவமாக இருந்தால், அல்லாஹ்விற்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடிய, அல்லாஹ்விற்கு வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றமாக இருந்தால் நம்முடைய நிலைமை என்னவாக இருக்கும் யோசித்துப் பாருங்கள்! 
 
அதை நாம் திருத்திக் கொள்ளவில்லை என்றால், அதிலிருந்து மீளவில்லை என்றால், அல்லாஹ்விடத்தில் அதற்காக வருந்தி தவ்பா செய்யவில்லை என்றால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! அவர்களுடைய மறுமை நிலை மிக ஆபத்தானதாக இருக்கும்! 
 
இந்த பெரும் பாவங்களில் சில பாவங்கள் இருக்கின்றன. மறுமையில் அல்லாஹு தஆலா தண்டனையை கொடுப்பதற்கு முன்பாக உலகத்திலும் அதற்குரிய தண்டனையை தீவிரமாக விரைவாக கொடுத்து விடுவான். 
 
நாம் அலட்சியம் செய்திருக்கக் கூடிய பாவங்கள், நாம் பாழாக்கிய கடமைகளில் ஒன்று தான், பெற்றோர்கள் விஷயத்தில் நாம் நடந்து கொண்டது. 
 
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! அல்குர்ஆனிலே ரப்புல் ஆலமீன் அவனுடைய தவ்ஹீதுக்கு பிறகு, அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் கொடுத்திருக்கக் கூடிய கட்டளைகளுக்கு பிறகு, அடுத்ததாக ரப்புல் ஆலமீன் சொல்வது; 
 
وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌  اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏
 
மேலும், (நபியே!) உம் இறைவன் (உமக்கும் உமது சமுதாயத்திற்கும்) கட்டளையிடுகிறான்: “அவனைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்காதீர்கள்; இன்னும், பெற்றோருக்கு நல்லுபகாரம் புரியுங்கள்!” (மனிதனே!) உன்னிடம் அவ்விருவர்களில் ஒருவர்; அல்லது, அவர்கள் இருவரும் முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் (உதாசினப்படுத்தி) ‘ச்சீ’ என்று சொல்லாதே; இன்னும், அவ்விருவரையும் அதட்டாதே; இன்னும், அவ்விருவரிடமும் மிக கண்ணியமாக பேசு. (அல்குர்ஆன் 17:23)
 
இஹ்ஸான் என்பது இஸ்லாமிய மார்க்கத்திலே மிக உயர்ந்த நிலைக்கு பயன்படுத்தப்படக்கூடிய சொல்.
 
‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‌‏
 
அல்லாஹ்விற்கு பிரியமானவர்கள் இஹ்ஸானுடையவர்கள். (அல்குர்ஆன் 3:134)
 
அந்த வார்த்தையை அல்லாஹு தஆலா பெற்றோர்கள் விஷயத்தில் பயன்படுத்துகிறான். அவர்களோடு பேசுவதிலே அழகு. அவர்களுக்கு பணிவிடை செய்வதிலே அழகு. அவர்களுக்கு கொடுப்பதிலே அழகு. 
 
இப்படி அனைத்து விதமான உறவுகளிலும் உயர்ந்த தரத்தை பெற்றோரோடு பேணுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
நீங்கள் அல்லாஹ்விற்கு பிறகு, அல்லாஹ்வுடைய தூதருக்கு பிறகு, அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு பிறகு இந்த பூமியிலே ஒருவரை அதிகம் நேசிக்க வேண்டும் என்றால் அது உங்களுடைய பெற்றோராக தான் இருக்க வேண்டும். 
 
மனைவி அல்ல. பிள்ளைகள் அல்ல. நம்முடைய தந்தை தாய்க்கு பிறகு தான் மனைவியும் பிள்ளைகளும்; நண்பர்களும் தோழர்களும்; நாம் சேகரிக்கக் கூடிய உலக செல்வங்களும். 
 
அவர்களுக்கு போக மிச்சம் தான் நமக்கு. நம்முடைய குடும்பத்தார்கள் நம்முடைய மனைவிக்கு அல்ல. நம்முடைய பிள்ளைகளுக்கு அல்ல. நமக்கே, நாம் சாப்பிடுவதற்கே நம்முடைய பெற்றோருக்கு கொடுத்த பிறகுதான்; அவர்களை திருப்தி படுத்திய பிறகுதான். 
 
நீங்கள் ஹதீஸ் நூல்களை படிப்பீர்கள் என்றால், நம்முடைய இமாம்கள் எல்லோரும் (அல்லாஹ் அவர்கள் மீது கருணை காட்டுவானாக! அவருடைய கப்ர்களை பிரகாசமாக்குவானாக!) ஹதீஸ் நூல்களிலே ஒரு தனி அத்தியாயத்தை அமைப்பார்கள். கிதாபுல் ஆதாப் -ஒழுக்கத்தைப் பற்றிய அத்தியாயம் என்று. 
 
நீங்கள் ஸஹீஹுல் புகாரியிலே பார்க்கலாம்; முஸ்லிமிலே பார்க்கலாம்; எல்லா ஹதீஸ் கிதாபுகளிலும் இப்படி ஒரு அத்தியாயம் கண்டிப்பாக இருக்கும். அந்த அத்தியாயத்தின் முதல் பாடமே بر الوالدين -பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்வது; பெற்றோருக்கு நன்மை செய்வது என்றே இருக்கும் 
 
ஏனென்றால், அல்குர்ஆனிலே ரப்புடைய حقوق களுக்கு பிறகு, அவனுடைய வாஜிபுகளுக்குப் பிறகு ஒரு வாஜிப் -கட்டாய கடமை நம் மீது இருக்கின்றது என்றால் அது நம்முடைய பெற்றோருடைய கடமைதான். 
 
நமக்கு இன்று புரியவில்லை. நம்முடைய அவசர கால உலகத்திலே, நம்முடைய இந்த உலக பிசிலே பெற்றோரை வெகு சீக்கிரமாக மறந்து விடக்கூடிய சமுதாயமாக நாம் மாறிவிட்டோம். 
 
பலர், பெற்றோருக்கு சலாம் சொல்வதில்லை. பெற்றோருக்கு துஆ செய்வதில்லை. பெற்றோர் இறந்து விட்டார்கள். அவர்களுக்காக துஆ கேட்பது; அவர்களுக்காக தான தர்மங்கள் செய்வது; அவர்களுக்காக அழுது அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு தேடுவது. இப்படி நூற்றுக்கணக்கான அமல்கள் இருக்கின்றன. பெற்றோருக்காக நாம் செய்ய வேண்டியது. 
 
இன்று, மனிதன் உறவுகளிலேயே ஒரு அற்பமான உறவாக எடுத்துக் கொண்டிருக்கிறான் என்றால் (அல்லாஹ் மன்னிப்பானாக! பாதுகாப்பானாக!) அது தனது பெற்றோருடைய உறவைதான். 
 
இன்று, எத்தனை தொழுகையாளிகள், மார்க்கத்தை பேசக்கூடியவர்கள், மார்க்கத்தை தெரிந்தவர்கள் தன்னுடைய தாய் தந்தையின் உறவை முறித்து வாழ்கிறார்கள் என்றால் அவர்களுடைய தொழுகையைக் கொண்டு என்ன பலனை அவர்கள் அடைவார்கள்! அல்லாஹ்வை எப்படி திருப்திப்படுத்துவார்கள்! 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கப்படுகிறது;
 
سَأَلْتُ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أيُّ العَمَلِ أحَبُّ إلى اللَّهِ؟ قالَ: الصَّلاةُ علَى وقْتِها، قالَ: ثُمَّ أيٌّ؟ قالَ: ثُمَّ برُّ الوالِدَيْنِ، قالَ: ثُمَّ أيٌّ؟ قالَ: الجِهادُ في سَبيلِ اللَّهِ
 
நபியே! அல்லாஹ்விடத்தில் அமல்களில் அல்லாஹ்விற்கு மிக உகப்பான மிகப்பெரிய அல்லாஹ்வுக்கு ரொம்பவும் பிடித்தமான அமல் எது? 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
الصَّلاةُ علَى وقْتِها -தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது. 
 
அல்லாஹ்வின் தூதரே! பிறகு எந்த அமல்? برُّ الوالِدَيْنِ -பெற்றோருக்கு நன்மை செய்வது. 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 527.
 
பிர் - برُّ அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் கவனமாக சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ் இஹ்ஸான் என்பதை பயன்படுத்துகிறான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிர் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். 
 
எல்லா நன்மைகளையும், பிறருக்கு செய்யக்கூடிய உதவி, உபகாரம், கருணை, அவர்கள் மீது அக்கறை செலுத்துவது, நம்மை விட அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது. 
 
இப்படியாக அனைத்து வகையான ஒரு உயர்ந்த தர்மங்களை, உயர்ந்த புண்ணியங்களை, சிறப்பான மனிதாபிமானத்தை உணர்த்தக் கூடிய வார்த்தை தான் இந்த இஹ்ஸான் என்பது பிர் என்பது.
 
அதைத்தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெற்றோர்கள் விஷயத்திலே நமக்கு பயன்படுத்துகிறார்கள். 
 
ஹதீஸின் தொடர் : பிறகு எது? அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையிலே அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக ஜிஹாத் செய்வது. நீங்கள் உங்களது உயிரை உங்களது செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையிலே சென்று அழிப்பது. 
 
எதிரிகளால் கொல்லப்படுவதை விட உங்களுடைய செல்வங்கள் அல்லாஹ்வின் பாதையிலே செலவளிக்கப்படுவதை விட நீங்கள் உங்கள் பெற்றோரை திருப்திப்படுத்துவது, அவர்களுக்கு பணிவிடை செய்வது, அவர்களுக்கு நன்மை செய்வது, உங்களுடைய உயிரைக் கொண்டும் செல்வத்தைக் கொண்டும் அவர்களை தேர்ந்தெடுப்பது அல்லாஹ்விடத்திலே அவ்வளவு பிரியமானது. 
 
மற்றொரு ஹதீஸை பாருங்கள்.
 
جَاءَ رَجُلٌ إلى النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَاسْتَأْذَنَهُ في الجِهَادِ، فَقَالَ: أحَيٌّ والِدَاكَ؟، قَالَ: نَعَمْ، قَالَ: فَفِيهِما فَجَاهِدْ
 
ஒருவர் நபியவர்களிடம் வருகிறார். அல்லாஹ்வின் தூதரே! நான் முடிவு செய்து விட்டேன். இனி எனது வாழ்க்கை ஜிஹாதிற்காகத்தான். அல்லாஹ்வுடைய பாதையிலே நான் போக வேண்டும். நீங்கள் அனுமதி கொடுத்து விடுங்கள் என்று நபியிடத்தில் கேட்கின்றார். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்: உன்னுடைய பெற்றோர் தாய் தந்தை உயிரோடு இருக்கின்றார்களா? அவர் சொன்னார்; ஆம் அல்லாஹ்வின் தூதரே. 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: நீ ஜிஹாத் உடைய நன்மையை அந்த இருவரில் தேடுவாயாக. அல்லாஹ்வின் பாதையிலே போர் செய்து நீ கொல்லப்பட வேண்டும் ஷஹீதாக வேண்டும் என்று ஆசையா? உனது செல்வங்கள் எல்லாம் இந்த மார்க்கத்திற்காக அல்லாஹ்வுடைய பாதையிலே செலவழிக்கப்பட வேண்டும் என்ற ஆசையா? உன்னுடைய பெற்றோருக்கு செலவு செய். உன்னுடைய வாழ்க்கையை உன்னுடைய பெற்றோருக்கு பணிவிடை செய்வதில் ஆக்கு! அது, அல்லாஹ்வின் பாதையிலே நீ ஜிஹாது செய்வதற்கு சமமானது. நீ ஷஹீதாகுவதற்கு சமமானது. 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3004.
 
உங்களுக்கு தெரியும். உவைசுல் கர்னி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சம்பவம். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உயிரோடு இருக்கும் பொழுதே இஸ்லாமை ஏற்றுக் கொண்ட தோழர். ஆனால் நபியை சந்திக்க வரவில்லை. அவருக்கு ஆசை இருந்தது. யாருக்குத்தான் ஆசை இருக்காது. 
 
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله 
 
என்று சொல்லியதற்குப் பிறகு கஅபாவை பார்ப்பதற்கும் மதினாவிற்கு செல்வதற்கும் யாருக்குத்தான் ஆசையில்லாமல் இருக்கும்! 
 
அவ்வளவு ஆசை. ஆனால், அவர் அதைவிட தன்னுடைய வயதான தாய்க்கு பணிவிடை செய்வதை தேர்ந்தெடுத்தார். அல்லாஹ்வுடைய தூதர் அவரை கோபித்துக் கொள்ளவில்லை. அதற்காக அல்லாஹ்வுடைய தூதர் அவர் மீது வருத்தப்படவில்லை. அவருடைய செயலை அங்கீகரித்தார்கள். 
 
நபி உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அந்த நபியை சந்தித்து, அவரிடமிருந்து மார்க்க இல்மை  ஒருவர் கற்பதை விட அவர்தம்  பெற்றோருக்கு பணிவிடை செய்வதைப்போன்று வேறு ஒரு சிறந்த அமல் இருக்க முடியாது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உவைஸுடைய அந்த அமலை தேர்ந்தெடுத்தார்கள். விரும்பினார்கள். சரி கண்டார்கள். அவருக்காக துஆ செய்தார்கள். 
 
அது மட்டுமல்ல, அவர் செய்த இத்தகைய மாபெரும் பணிவிடையால் முஸ்தஜாபுத் துஆ -அல்லாஹ்விடத்திலே துஆ அங்கீகரிக்கப்படக்கூடிய ஒரு சாலிஹின் நல்லவர்களில் ஒருவராக அல்லாஹ் அவரை ஆக்கிவிட்டான். அவரை நீங்கள் சந்தித்தால் அவரிடத்திலே உங்களுக்காக இஸ்திஃபார் உங்களுக்கு பாவ மன்னிப்பு தேடும்படி அவரிடத்தில் சொல்லுங்கள் என்று அவருடைய தரஜாவை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உயர்த்தினார்கள். 
 
இது எந்த நன்மையின் பொருட்டால்? தன்னுடைய தாய்க்கு அவர்கள் செய்த பணிவிடையின் பொருட்டால்.  நமக்கு புரியவில்லை. சிலருக்கு பெற்றோரை உதாசீனப்படுத்துவது அவ்வளவு சாதாரணமாக ஆகிவிட்டது. அது ஒரு குற்றமாகவே தெரிவதில்லை. பாவமாகவே தெரிவதில்லை. 
 
ஷிர்க்  -இணைவைத்தலுக்கு பிறகு ஒரு பெரும் பாவம் அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்திலே இருக்கிறது என்றால், அது பெற்றோருக்கு மாறு செய்வதுதான். பெற்றோருக்கு தொந்தரவு தருவது. பெற்றோரின் மனங்களை காயப்படுத்துவது. அவர்களுக்கு சங்கடங்களை வருத்தங்களை ஏற்படுத்துவது. அவர்களுக்கு அதிருப்தியை கொடுப்பது. அவர்களை கோவிக்க வைப்பது. அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்குவது. 
 
அவர்களால் சங்கடப்படுவது. அவர்களின் பேச்சுகளை, அவர்கள் சொல்லக்கூடிய சொல்களை, செயல்களை சகித்துக் கொள்ளாமல் அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வது. இதுதான் பெற்றோருடன் முரண்படுவது, பெற்றோருக்கு மாறு செய்வது அரபியில் உகூகுல் வாலிதைன். 
 
சிலர் நினைக்கிறார்கள்; அதான் நான் எங்க அத்தா அம்மாவுக்கு சோறு போட்டுறேனே?! அட பிச்சைக்கார பயலே! பிச்சைக்கார ஃபக்கீரே! நீ என்னடா உங்க அத்தா அம்மாவுக்கு சோறு போடுறது. அவர்களுக்கு படைத்த ரப்பு சோறு போடுவான். 
 
சில பேர் பேசுறாங்க; அதான் எங்க அத்தா அம்மாவுக்கு மாச மாசம் நான் காசு கொடுத்துடுறேன் என்று. மார்க்கத்தை அறியாத முட்டாள்கள், வீணர்கள், அல்லாஹ்வை இந்த தீனை புரியாதவர்கள் இப்படி பேசுவார்கள். 
 
நீயும் உன்னுடைய செல்வமுமே உன்னுடைய பெற்றோருக்கு என்றால் அவர்களுக்கு நீ உணவளிப்பது உன் மீது கட்டாயம். அவர்களுக்கு உணவளிக்காமல் நீ உணவு உண்பது ஹராம்.
 
பெருமையாக பேசுகிறார்கள். நான் மாசம் செலவுக்கு கொடுத்து விடுகிறேன் என்று. அவர்களுக்கு நீ செய்ய வேண்டிய பணிவிடை எங்கே? அவர்களை நீ பார்த்து, அனுசரித்து, ஸலாம் சொல்லி சுகநலம் விசாரிப்பது எங்கே? இதையெல்லாம் யார் செய்வார்கள்? 
 
அவர்களை பார்ப்பது நன்மை. அவர்களோடு பேசுவது நன்மை. அவர்களோடு பழகுவது நன்மை. அவர்களிடத்திலே அமர்வது நன்மை. 
 
அல்லாஹ் பேசச் சொல்கிறான்.
 
وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏
 
தாய் தந்தையிடத்திலே அன்பாக பேசுங்கள். மரியாதையாக பேசுங்கள். கனிவாகப் பேசுங்கள் என்று. (அல்குர்ஆன் 17:23)
 
அந்த பேச்சு எங்கே போகும்? எத்தனை புண்ணியங்களை உன்னுடைய தாய் தந்தையின் மூலம் நீ சம்பாதிக்க வேண்டியது இருக்கிறது. 
 
நினைத்துக் கொண்டார்கள்; தொழுது விட்டால் போதும் என்று. ஆட்சி செய்து விட்டால் போதும் என்று. எல்லா தர்மங்களும் நாளை மறுமையிலே வரும்போது வீணாகிவிடும் ஒருவன் தாய் தந்தைக்கு மாறு செய்தவனாக வந்தானேயானால். தன்னுடைய பெற்றோருக்கு நோவினை செய்தவனாக வந்தானேயானால் அவனை யாரும் நாளை மறுமையிலே அல்லாஹ்விடத்திலே காப்பாற்ற முடியாது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் சொல்கிறார்கள்: 
 
رِضَا الرَّبِّ في رِضَا الوالدِ، وسَخِطُ الرَّبِّ في سَخَطِ الوالدِ
 
உன்னுடைய ரப் உடைய பொருத்தம் உன்னுடைய தந்தையின் பொருத்தத்தில் இருக்கிறது. உன்னுடைய ரப்புடைய வெறுப்பு உன்னுடைய தந்தையின் வெறுப்பிலே இருக்கிறது.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி எண் : 1899.
 
அல்லாஹ்விடத்திலே சொல்வாரா? நான் தொழுது விட்டேன் என்று. அல்லாஹ் கேட்பான்; அதற்கு அடுத்த வசனத்தை ஓதினாயா? என்று. அது எங்கே சென்றது? என்று அல்லாஹ் கேட்க மாட்டான்.
 
எவ்வளவு உயர்ந்த வாக்கியங்களை ரப்பு சொல்கிறான்!
 
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ ‏
 
கருத்து : ஒழுக்கங்களின், பண்பாடுகளின், சிறந்த நற்குணங்களின் உச்சத்தை அல்லாஹ் சொல்கிறான். பணிவினால் அவர்களுக்கு முன்னால் அப்படியே உனது புஜத்தை தாழ்த்திக் கொள். (அல்குர்ஆன் 17:24)
 
பெற்றோருக்கு முன்னால் தனது நெஞ்சை நிமிர்த்தியவனாக, புஜத்தை நிமிர்த்தியவனாக, பெருமையோடு, தனது நண்பர்களோடு உட்காரும் பொழுது உட்காருகிறான் அல்லவா! உன்னை போன்று தான் நானும் என்று, அப்படி தன்னுடைய தாய் தந்தைக்கு முன்னால் உட்கார முடியாது. ஒரு அடிமையை போன்று தாய் தந்தைக்கு முன்னால் இருக்க வேண்டும். 
 
அல்லாஹ் அக்பர்! நம்முடைய கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள், தாபியீன்கள் அவர்கள் எத்தனை விளக்கங்களை இந்த வசனங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்! 
 
உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன்; குறிப்பாக இந்த வசனத்திற்கு. 
 
முஹம்மத் இப்னு சீரின் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தன்னுடைய தாயிடத்திலே பேசும்நிலையில் புதிதாக யாராவது பார்த்தால் முஹம்மத் இப்னு சீரினுக்கு நோய் இருக்கிறது போல, காய்ச்சலில் இருக்கிறார் போல, அதான் மெதுவாக பேசுகிறார் இவ்வளவு சவுண்ட் கம்மியா இருக்கு என்று விளங்கிக் கொள்வார்கள். 
 
இவங்க யார்? முஹம்மது பின் சீரின் பெரிய சஹாபாக்களின் மாணவர். தாபியீன்களிலே கிபாருதாபியீன் -மூத்த தாபியீன்களிலே ஒருவர். நம்முடைய ஹதீஸ் கலை ஃபிக்ஹ் கலையின் தாபியீன்களிலே உள்ள இமாம்களிலே மிக மூத்தவர். அவ்வளவு பெரிய அறிஞர். 
 
தன்னுடைய தாயிடத்திலே பேசுவதற்காக செல்லும் பொழுது அவ்வளவு சத்தம் குறைவாக இருக்கும். பார்ப்பவர் இவர் நோயாளி போல் இருக்கு, அதான் சத்தம் வெளியே வர மாட்டேங்குதுன்னு நினைத்துக் கொள்வார்; 
 
அது மட்டுமல்ல, தன்னுடைய தாய்க்கு அவர்கள் ஆடை வாங்க சென்றால் ஆடைகளிலேயே மிக மென்மையான ஆடையை வாங்குவார்கள். பெருநாள் வந்து விட்டால் அந்த ஆடைக்கு அவர்கள் சாயம் பூசி அந்த ஆடையை தனது தாய்க்கு கொடுப்பார்கள். தன்னுடைய சத்தத்தை தாயின் சப்தத்திற்கு மேலாக உயர்த்த மாட்டார்கள். 
 
இப்படிப்பட்ட உயர்ந்த குணத்தை தான் சஹாபாக்களிடமிருந்து இந்த தாபியீன்கள் படித்தார்கள். அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியும். தன்னுடைய தாய் உயிராக இருந்தவரை அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லவில்லை. 
 
எப்படி உவைஸுல் கர்னி தனது தாய் உயிரோடு இருந்தவரை வயதான தாய்க்கு பணிவிடை செய்வதற்காக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திக்க வரவில்லை. ஸஹாபாக்களில் மிகப்பெரிய ஃபிக்ஹ் ஞானமுடைய அபூ ஹுரைரா, ஹதீஸ்களின் பெரிய அறிவிப்பாளர் தனது தாய்க்கு பணிவிடை செய்வதற்காக அவர் ஹஜ் என்ற அந்த மகத்தான கடமையை தாமதப்படுத்தினார். 
 
பெற்றோருக்கு செலுத்த வேண்டிய கடமை எவ்வளவு மகத்தான கடமை என்று சிந்தித்துப் பாருங்கள்!
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சம்பவத்தை நமக்கு அறிவிக்கின்றார்கள். 
 
நாம் நினைத்துக் கொள்வோம்; எத்தனையோ பல காரியங்களை செயல்களை செய்து விட்டு பெரிய தியாகம் செய்ததாக. உண்மையான தியாகம் என்ன? உண்மையான மகத்தான அமல் என்ன? 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக்கூடிய இந்த சம்பவத்தை உற்று கவனியுங்கள். பலமுறை கேட்டு இருப்போம். 
 
மூன்று பேர் காட்டுக்கு சென்றார்கள். கடும்மழை ஏற்பட்டது. காட்டுக் குகையிலே ஒதுங்கினார்கள். பாறை மேலே இருந்து கீழே விழுந்து உருண்டு குகையின் வாசலை அடைத்துக் கொண்டது. வெளியே செல்ல முடியாது. 
 
அவர்கள் சொன்னார்கள்; நாம் செய்த இக்லாஸான அமலை கொண்டு தான் அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய முடியும். 
 
(அவர்கள் தங்களுடைய நபியின் பொருட்டால் துஆ கேட்கவில்லை. வாழ்ந்த அவ்லியா இறந்து போன அவ்லியாவின் பொருட்டால் துஆ கேட்கவில்லை. கேட்க முடியாது. அல்லாஹ்விடத்தில் அவனுடைய பொருட்டால் மட்டுமே கேட்கப்பட வேண்டும். அல்லாஹ்விடத்தில் அவனுக்காக அவனுடைய திருமுகத்திற்காக செய்த அமலை கொண்டு மட்டும்தான் கேட்க முடியும்.)
 
சொன்னார்கள்: நீங்கள் செய்த இக்லாஸான அமலை தேடுங்கள். ஒவ்வொருவரும் ஒரு அமலை நினைவு கூர்கிறார். 
 
(நாமெல்லாம் அதை ஒரு அமலாகவே நினைத்திருக்க மாட்டோம். ஏன்னா நம்ம மண்டையில இருக்கக்கூடிய சரக்கு எல்லாம் குப்பை. குர்ஆனை புரிந்தோமா? அதனுடைய உயிரோட்டங்களோடு வாழ்கின்றோமா? அதனுடைய உணர்வுகளை எங்கே கொண்டு வந்தோம்?)
 
அதிலே ஒருவர் கூறுகிறார்; யா அல்லாஹ்! எனக்கு வயதான பெற்றோர் இருந்தார்கள். நான் என்னுடைய கால்நடைகளை எடுத்துக்கொண்டு மேய்க்க சென்று, பால் கறந்து விட்டு எனது பெற்றோரிடத்தில் வருவேன். மனைவி மக்களிடத்திலே வருவேன். முதலில் எனது பெற்றோருக்கு கொடுத்துவிட்டு பிறகு மனைவி பிள்ளைகளுக்கு கொடுப்பேன். 
 
ஆனால், ஒரு நாள் நான் மேய்ச்சலை தேடி சென்ற போது நேரமாகிவிட்டது. இரவின் சில பகுதிகள் கழிந்ததற்குப் பிறகுதான் எனது கால்நடைகளை ஒட்டிக்கொண்டு வீடு திரும்ப முடிந்தது. அதற்குள் என்னுடைய பெற்றோர் தூங்கி விட்டார்கள். எனது பெற்றோருக்கு கொடுப்பதற்கு முன்பாக எனது பிள்ளைகள் மனைவிக்கு கொடுப்பதை நான் விரும்பவில்லை. எனவே கரந்த பாலை கிண்ணத்திலே வைத்துக் கொண்டு என்னுடைய பெற்றோரின் தலைமாட்டிலே அவர்கள் விழித்து குடித்ததற்கு பிறகு எனது பிள்ளைகளுக்கு கொடுப்பதற்காக நின்று கொண்டே இருந்தேன். அவர்களோ காலையில் தான் விழித்தார்கள். அதுவரை என்னுடைய பிள்ளைகள் பசி பசி என்று என்னுடைய காலை சுற்றிக் கொண்டிருந்தனர். நான் அவர்களுக்கு கொடுக்கவில்லை. அல்லாஹ்வே! இதை உன்னுடைய திருப்திக்காக நான் செய்திருந்தால் எங்களுடைய கஷ்டத்தை நீக்கு என்று சொன்னார். அல்லாஹ் அந்த பாறையை அகற்றி விட்டான். அந்த மூவரின் ஒவ்வொருடைய துஆவுக்கு பதிலாக பாறையினுடைய மூன்றில் ஒரு பகுதி நீக்கப்படுகிறது. 
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2743.
 
இன்று, மக்களுக்கு புரியவில்லை. எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள். பொருளாதாரம் தான் வாழ்க்கை; காசு தான் வாழ்க்கை; பணம்தான் வாழ்க்கை; உலகத்திலே தான் பிரபல்யமாவது; என்னுடைய தொடர்பு என்னுடைய வியாபாரம் என்னுடைய பிசினஸ் பார்ட்னர் என்னுடைய நட்பு இதுதான் பெரியது என்று அலைந்து கொண்டிருக்கக் கூடிய இந்த உலக வாழ்க்கையிலே, ஆடம்பரத்தையும் சுகபோக வாழ்க்கைக்கும் அடிமையான இந்த வாழ்க்கையிலே மக்கள் பெற்றோரை மறந்து விட்டார்கள். 
 
அவர்களை ஏசுவது, திட்டுவது, கோபிப்பது, அவர்கள் மீது வருத்தப்படுவது, அவர்களது மனதை காயப்படுத்துவது, இவை ஒவ்வொன்றும் மிகப்பெரிய பாவங்கள். சாதாரண பாவங்கள் அல்ல. குர்ஆனை படியுங்கள்! ஹதீஸை படியுங்கள்! 
 
அல்லாஹ் நாடினால் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பல சம்பவங்களை பார்ப்போம். அல்லாஹு தஆலா மறுமையில் தண்டனை வைத்து இந்த உலகத்திலும் அந்த தண்டனையை தீவிரப்படுத்தி விடுகின்றான் என்றால், அத்தகைய பாவங்களில் ஒன்றுதான் பெற்றோருக்கு அக்கிரமம் செய்வது, பெற்றோருக்கு தொந்தரவு தருவது, பெற்றோருக்கு மாறு செய்வது. அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். 
 
அல்லாஹு தஆலாவிடத்திலே துஆ செய்வோம். நம்முடைய தவறுகளை குற்றங்களை திருத்துவோம். நாமும் நம்முடைய பெற்றோர்களை மதிக்க கூடியவர்களாக, நம்முடைய பிள்ளைகளுக்கும் அந்த மார்க்க கடமையை போதிக்க கூடியவர்களாக நாம் மாறுவோமாக! அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களை பேணுவதற்கும் அதன்படி வழிநடப்பதற்கும் அருள் புரிவானாக! நம்முடைய தவறுகளை குற்றங்களை அல்லாஹ் மன்னித்து அருள்வானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/