HOME      Khutba      அநீதியை அஞ்சிக்கொள்ளுங்கள்! | Tamil Bayan - 929   
 

அநீதியை அஞ்சிக்கொள்ளுங்கள்! | Tamil Bayan - 929

           

அநீதியை அஞ்சிக்கொள்ளுங்கள்! | Tamil Bayan - 929


அநீதியை அஞ்சிக்கொள்ளுங்கள்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அநீதியை அஞ்சிக்கொள்ளுங்கள்!
 
வரிசை : 929
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 20-12-2024 | 19-06-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் அனைவருக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை, தக்வாவை நினைவூட்டியவனாக; அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றுமாறு, அல்லாஹ்வுடைய சட்டங்களை பேணி நடக்குமாறு, அல்லாஹ் ஏவிய கட்டளைகளை கடமைகளை நிறைவேற்றுமாறு, அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விலகி இருக்குமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக; அல்லாஹ் தந்த குர்ஆனின் நசீஹத்தை கூறியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹு தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! அவன் நேசித்த நல்லோரோடு இந்த உலக வாழ்க்கையில் நம்மை சேர்த்து வைப்பதோடு நாளை மறுமையில் சொர்க்கத்தில் அவர்களோடு அல்லாஹு தஆலா நம்மையும் நமது சந்ததிகளையும் ஒன்று சேர்ப்பானாக! ஆமீன். 
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா அவனது கண்ணியமிக்க வேதம் அல்குர்ஆனிலே ஒரு தன்மையை நமக்கு வலியுறுத்தி கொண்டே இருக்கின்றான். கட்டளையாக வலியுறுத்துகின்றான். நிகழ்வுகளாக கூறி வலியுறுத்துகிறான். இந்த மார்க்கத்தின் அடிப்படையை அல்லாஹு தஆலா எதன் மீது அமைத்திருக்கின்றானோ அந்த அடிப்படையை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றான். அந்த அடிப்படை கட்டளை தான் நீதம் என்ற தன்மை. 
 
اِنَّ اللّٰهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَآىِٕ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْىِ‌ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏
 
நிச்சயமாக அல்லாஹ், (நீங்கள்) நீதம் செலுத்துவதற்கும், நல்லறம் புரிவதற்கும், உறவினர்களுக்கு கொடுப்பதற்கும் (உங்களை) ஏவுகிறான். மேலும், மானக்கேடானவை, பாவம், அநியாயம் ஆகியவற்றை விட்டும் அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக உங்களுக்கு (இவற்றை) உபதேசிக்கிறான். (அல்குர்ஆன் 16:90)
 
சூரத்துன் நஹ்ல் (16) உடைய 90 வது வசனம். குலஃபாக்கள் காலத்திலிருந்து இந்த வசனம் மிம்பரியிலே ஓதுவதை இஸ்லாமிய சமுதாயம் கேட்டு வருகிறது. இன்றும் இந்த வசனம் ஓதாமல் மார்க்க அறிஞர்கள், இஸ்லாமிய அழைப்பாளர்கள் தங்களது குத்பாவை முடிப்பதில்லை. ஆனால் ஏதோ நமக்கு இந்த அடிப்படையை நாம் உணர்வதுமில்லை. புரிவதே இல்லை. 
 
மேலும், அல்லாஹு தஆலா சொல்கிறான்: 
 
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌  اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தை நிலைநிறுத்துபவர்களாக; அல்லாஹ்விற்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்! நீதம் உங்களுக்கு அல்லது பெற்றோருக்கு அல்லது உறவினர்களுக்கு எதிராக இருந்தாலும் சரியே. (யாருக்கு எதிராக சாட்சி கூறப்படுகின்றதோ) அவர் செல்வந்தராக அல்லது ஏழையாக (இருந்தாலும் சரி. ஏனெனில் யாராக) இருந்தாலும் அல்லாஹ்தான் அவர்களுக்கு மிக ஏற்றமானவன். (நீங்கள் அல்ல.) ஆகவே, நீங்கள் நீதி செலுத்துவதில் (உங்கள்) ஆசைகளை பின்பற்றாதீர்கள்! (ஏழை, பணக்காரன், உறவுக்காரன், தூரமானவன், தன் சமூகத்தவன், வேறு சமூகத்தவன் என்று வேறுபாடு பார்க்காதீர்கள்!) நீங்கள் (சாட்சியத்தை) மாற்றினால் அல்லது (சாட்சியத்தை) புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான். (ஆகவே, அதற்குரிய விசாரணை மறுமையில் கண்டிப்பாக உண்டு.) (அல்குர்ஆன் 4:135)
 
வசனத்தின் கருத்து : முஃமின்களே! நீங்கள் மூமின்கள் என்றால் நீதத்திற்கு சாட்சியாக இருங்கள். நீதத்தை நிலை நிறுத்த கூடியவர்களாக அல்லாஹ்வுக்கு சாட்சியாளராக இருங்கள். 
 
ஒருவன் நீதத்திற்கு சாட்சி சொல்வது, அவன் அல்லாஹ்வுடைய சாட்சியாளனாக அங்கே மாறுகிறான். ஆகவேதான் நீதத்தை நிலை நிறுத்தக்கூடியவர்களாக நீங்கள் இருங்கள் என்று அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த கட்டளையில்
 
شُهَدَآءَ لِلّٰهِ
 
அல்லாஹ்வின் சாட்சியாளராக இருங்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான். 
 
ஒரு மனிதன் அக்கிரமத்திற்கு துணை போவது, அவன் இப்லீஸுக்கு சாட்சியாளனாக இருக்கின்றான். அவன் இப்லீஸ் உடைய கூட்டத்தில் சேர்ந்து விட்டான் என்று பொருள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
இந்த வசனத்திலே எத்தகைய கட்டளையை அல்லாஹ் சொல்கின்றான்! இந்த வசனம் ஒரு இடத்தில் அல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட பல இடங்களிலே அல்லாஹ் சொல்கிறான். அப்படி சொல்லும் பொழுது உங்களுடைய வேலை நீதத்திற்கு துணையாக இருப்பது.  நீதம் எங்கு இருக்கின்றதோ அங்கு நீங்கள் இருக்க வேண்டும். உங்களுடைய சொல்லால் செயலால் நீங்கள் அந்த நீதத்திற்கு தான் ஆதரவு அளிக்க வேண்டும்.
 
وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ
 
அந்த நீதம் உங்களுக்கே எதிராக இருந்தாலும் சரி. 
 
என்னை பாதிக்கின்றது என்பதற்காக சத்தியத்தை நீங்கள் மறைக்காதீர்கள். அநீதத்திற்கு துணை போகாதீர்கள். 
 
ஏன்? எந்த பெற்றோருக்காக உயிரையே கொடுங்கள் என்று அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் வழிகாட்டினார்களோ; இந்த உலகத்தில் ஒரு முஃமினான முஸ்லிமான அடியானுக்கு அல்லாஹ், அல்லாஹ்வுடைய தீன், அல்லாஹ்வுடைய ரசூலுக்குப் பிறகு பெற்றோர்கள்தான். அவர்களை மீறி மதிக்கப்படக்கூடிய, மரியாதை செலுத்தப்பட வேண்டிய, கண்ணியப்படுத்த வேண்டிய ஒன்றுமில்லை. 
 
அப்படிப்பட்ட பெற்றோர்களே அநியாயத்திற்கு துணை போனால் அவர்களுக்கு எதிராக இருந்தாலும் சரி, நீங்கள் நீதத்திற்கு சாட்சி சொல்லுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்கின்றான் என்றால் என்ன சொல்வது யோசித்துப் பாருங்கள்! 
 
பெற்றோருக்காக நீங்கள் உயிரை கூட கொடுக்க வேண்டும், உங்களது செல்வத்தை எல்லாம் அவர்கள் பறித்துக் கொண்டாலும் மனமுவந்து அவர்களுக்கு நீங்கள் கொடுத்து விட வேண்டும். நீங்கள் கட்டிய வீட்டிலிருந்து சேகரித்த சொத்திலிருந்து நீ வெளியே போ என்று சொன்னால் மனமுவந்து வெளியே போய் விட வேண்டும், அவர்களுக்காக அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும் என்கிற மார்க்கம், அப்படிப்பட்ட பெற்றோர் அநியாயத்திற்கு துணை போனால் நீங்கள் அவர்களோடு சேர்ந்து அநியாயத்திற்கு துணை போகாதீர்கள் என்று மார்க்கம் வழி காட்டுகிறது.
 
ரப்பு எப்படி சொல்கிறான்?
 
وَالْاَقْرَبِيْنَ‌
 
பெற்றோர் மட்டுமல்ல, இன்னும் உனக்கு எவ்வளவு நெருக்கமான உறவினராக இருந்தாலும் சரி, எவ்வளவு வேண்டியவராக இருந்தாலும் சரி, அவருக்கு எதிராக இருந்தாலும் நீ நீதத்திற்கே சாட்சி சொல், நீ நீதத்திற்கே துணை நில்! 
 
فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا
 
ஏழை பணக்காரர் என்று பார்க்காதே! நீதத்தை நிலை நிறுத்துவதிலே நீங்கள் மன விருப்பத்தை பார்க்காதீர்கள்! நிறத்தை பார்க்காதீர்கள்! மொழியை பார்க்காதீர்கள்! உங்களது சமூகத்தவன்; வேறு சமூகத்தை சேர்ந்தவன். உங்களது நாட்டுக்காரன்; உங்களது ஊர்க்காரன்; உங்களது ஜமாத்துக்காரன்; உங்களது இயக்கத்தை சேர்ந்தவன்; உங்களது அமைப்பை சேர்ந்தவன்; என்று யாரையும் பார்க்க கூடாது. வேதம் எங்கு இருக்கிறதோ அங்கு தான் ஒரு முஃமின் ஆதரவளிக்க வேண்டும்.
 
அல்லாஹ் சொல்கிறான்: நீங்கள் நீதத்திலிருந்து விலகினால் அதை புறக்கணித்தால் உங்களது செயல்களை அல்லாஹ் கண்காணித்து கொண்டிருக்கிறான். (அல்குர்ஆன் 4:135)
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து, அதுபோன்று சஹாபாக்களை பார்த்து அல்குர்ஆனிலே ஒரு குறிப்பிட்ட இடங்களில் தான் அல்லாஹு தஆலா ரொம்ப கடுமையாக பேசியிருப்பான். 
 
பெரும்பாலும் ரொம்ப மென்மையாகவே அல்லாஹு தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே பேசுவான். ரொம்ப அன்பாக பரிவாக பேசுவான். ஒரு சில கோபமான இடங்களில் கூட அல்லாஹு தஆலா தனது நபியின் மீது அன்பை வெளிப்படுத்தாமல் இருக்க மாட்டான். 
 
அல்லாஹு தஆலா கடிந்து கொண்ட கோபப்பட்ட விஷயங்களில் ஒன்று, சில நேரங்களில் யாருக்கு சாதகமாக போவது? முஸ்லிம்கள் என்ற பெயரில் இருக்கக்கூடிய முனாஃபிக்குகளுக்காகவா அல்லது யூதர்களுக்காகவா அல்லது நமக்கு எதிராக இருக்கக்கூடிய சமுதாயத்திற்காகவா என்ற குழப்பங்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஏற்படாமல் இல்லை. 
 
நமக்கு எல்லாவற்றுக்கும் அழகிய முன்மாதிரியை அல்லாஹ்வுடைய தூதரிடத்திலே அல்லாஹ் வைத்திருக்கிறான். கண்ணியத்திற்குரிய சஹாபாக்களிடத்திலே அல்லாஹு தஆலா வைத்திருக்கிறான். அப்படிப்பட்ட அந்த தடுமாற்றமான நேரங்களில் அல்லாஹ் இறக்கிய வசனம்:
 
وَلَا تُجَادِلْ عَنِ الَّذِيْنَ يَخْتَانُوْنَ اَنْفُسَهُمْ‌  اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِيْمًا ۙ‌ ‏
 
வசனத்தின் கருத்து : நபியே! யார் தங்களுக்கு மோசடி செய்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்காதீர்கள்! நீங்கள் சச்சரவுக்கு வராதீர்கள்! வாக்குவாதம் செய்யாதீர்கள்! அநீதத்திற்கு துணை போய் தங்களுக்கு தாங்களே மோசடி செய்து கொள்கிறார்களே அவர்கள் சார்பாக நீங்கள் பேசாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் மோசடிக்காரர்களை நேசிக்க மாட்டான். பாவத்தில் பிடிவாதம் பிடிக்கும் முரடர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4:107)
 
ஒருவர் பாவம் செய்தால் உடனே விலக வேண்டும். அது சுட்டிக்காட்டப்பட்டால் திருந்த வேண்டும். பிடிவாதம் பிடிக்கக்கூடாது. நான் செய்வதுதான் சரி என்று அவன் ஆணவம் கொள்ளக்கூடாது. 
 
அல்லாஹ் சொல்கிறான்: 
 
يَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ يُبَيِّتُوْنَ مَا لَا يَرْضٰى مِنَ الْقَوْلِ‌ وَكَانَ اللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطًا‏
 
இவர்கள் (தம் குற்றத்தை) மக்களிடம் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்விடம் மறைக்க முயற்சிப்பதில்லை. அல்லாஹ் விரும்பாத பேச்சை இவர்கள் இரவில் சதித்திட்டம் செய்யும்போது அவன் அவர்களுடன் இருந்தான். இன்னும், அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்(தறிந்)தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:108)
 
அடுத்து அல்லாஹ் எப்படி வசனத்தை கொண்டு போகிறான் பாருங்கள்! முதலாவதாக நபியை பார்த்து இந்தப் பாவிகளுக்கு, நபியே தர்க்கம் செய்யாதீர்! வாக்குவாதம் செய்யாதீர்கள்! என்று அல்லாஹ் சொல்லி விட்டான்; 
 
பிறகு அல்லாஹு தஆலா நபியை அப்படியே விட்டுவிட்டு நம்மை பார்த்து சொல்கிறான்:
 
هٰۤاَنْتُمْ هٰٓؤُلَۤاءِ جَادَلْـتُمْ عَنْهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا فَمَنْ يُّجَادِلُ اللّٰهَ عَنْهُمْ يَوْمَ الْقِيٰمَةِ اَمْ مَّنْ يَّكُوْنُ عَلَيْهِمْ وَكِيْلًا‏
 
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இவர்கள் சார்பாக இவ்வுலக வாழ்க்கையில் வாதிடுகிறீர்களா? ஆக, மறுமை நாளில் இவர்கள் சார்பாக அல்லாஹ்விடம் யார் வாதிடுவார்? அல்லது, (அல்லாஹ்விடம் தர்க்கம் செய்வதற்கு) இவர்கள் சார்பாக யார் பொறுப்பாளராக இருப்பார்? (அல்குர்ஆன் 4:109)
 
வசனத்தின் கருத்து : முஃமின்களே! முஸ்லிம்களே! என்று பொதுவாக அழைத்துச்சொல்வது ஏனென்றால் நம்மில் ஒருவர் தவறு செய்தால் அதை நாம் கரம்பிடித்து தடுக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் அதை செய்தது போன்று தான்,.
 
இன்று ஒருவர் குற்றம் செய்கிறார். ஒரு சமுதாயத்தை நோக்கி உபதேசம் செய்யப்படுகிறது என்றால் யாரோ ஒருத்தர் செய்றதுனால எங்களை ஏன் பார்த்து மொத்தமாக சொல்கிறீர்கள்? என்று யாரும் கேட்க முடியாது; கேட்கக் கூடாது. 
 
குர்ஆனே அப்படித்தான் பேசுகிறது: சஹாபாக்களில் ஒருவர் நல்லது செய்தால் மொத்த சஹாபாக்களையும் குர்ஆன் வாழ்த்துகிறது. ஒருவர் தவறு செய்தால் எல்லோரையும் சேர்த்து குர்ஆன் கண்டிக்கின்றது. அப்படித்தான் அறிவுரை உபதேசம் என்பது ஒரு சமூகத்திற்கு சொல்லப்படுமே தவிர தனி ஒருவருக்கு மட்டுமல்ல, அந்த உபதேசம் அந்த நசீஹத் என்பது. 
 
அல்லாஹு தஆலா நபியை வைத்துக்கொண்டு, சஹாபாக்கள் பிறகு அவர்களுடைய வழியிலே வரக்கூடிய நாம் எல்லோருக்கும் அல்லாஹ் சொல்கின்றான்: 
 
நீங்கள் இப்படியா இருப்பீர்கள்? சரி, அக்கிரமங்கள், அநியாயங்கள் செய்பவர்களுக்கு, மோசடி செய்பவர்களுக்கு, அநீதி செய்பவர்களுக்கு இந்த உலக வாழ்க்கையில் நீங்கள் வக்காலத்துப்பேச வந்து விட்டீர்கள். நாளை மறுமையிலே அல்லாஹ்விடத்திலே அவர்கள் சார்பாக யார் பேச வருவார்? யாருக்கு துணிவு இருக்கும்!?
 
அடுத்து அல்லாஹ் கேட்கிறான்: அவர்கள் சார்பாக வக்காலத்து வாங்குவதற்கு எனக்கு முன்னால் யார் வந்து நிற்க முடியும்! 
 
எப்பேற்பட்ட கோபத்தை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான் பாருங்கள்! இன்று நமக்கு ஷிர்க் கண்ணுக்கு தெரிகிறது. பித்அத் கண்ணுக்கு தெரிகிறது. கபூர் வணக்கம் கண்ணுக்கு தெரிகிறது. விபச்சாரம் குற்றம் என்று புரிகிறது. திருடுதல் குற்றம் என்பது புரிகிறது. அன்றாட வாழ்க்கையிலே எந்த உணர்வும் இல்லாமல் எவ்வளவு சாதாரணமாக இந்த அநீதியை அநியாயத்தை அக்கிரமத்தை கடந்து சென்று விடுகிறோம். 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا (110) وَمَنْ يَكْسِبْ إِثْمًا فَإِنَّمَا يَكْسِبُهُ عَلَى نَفْسِهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا (111) وَمَنْ يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا (112) وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُ لَهَمَّتْ طَائِفَةٌ مِنْهُمْ أَنْ يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَضُرُّونَكَ مِنْ شَيْءٍ وَأَنْزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا
 
4:110. இன்னும், எவர், ஒரு தீமையைச் செய்வாரோ; அல்லது, தனக்குத்தானே அநீதி இழைப்பாரோ; பிறகு, அவர் (அதிலிருந்து விலகி, கைசேதப்பட்டு) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரோ அவர்  அல்லாஹ்வை மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாகக் காண்பார்.
 
4:111. இன்னும், எவர் ஒரு பாவத்தைச் சம்பாதிக்கிறாரோ அவர் அதைச் சம்பாதிப்பதெல்லாம் தனக்கெதிராகத்தான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
 
4:112. இன்னும், எவர் ஒரு குற்றத்தை அல்லது ஒரு பாவத்தை செய்வாரோ; பிறகு, அதை ஒரு நிரபராதி மீது சுமத்துவாரோ அவர் திட்டமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையும் (தன்மீது) சுமந்து கொண்டார்.
 
4:113. (நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனின் கருணையும் உம்மீது இல்லாதிருந்தால் உம்மை வழி கெடுத்துவிட அவர்களில் ஒரு பிரிவு திட்டமாக (உள்ளத்தில்) உறுதியாக நாடியிருப்பார்கள். அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்கமாட்டார்கள். அவர்கள் உமக்கு எதையும் தீங்கிழைக்க மாட்டார்கள். அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கினான். இன்னும், நீர் அறிந்திருக்காதவற்றை உமக்குக் கற்பித்(து கொடுத்)தான். இன்னும், உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் 4:110-113)
 
அன்பான சகோதரர்களே! நினைத்துப் பாருங்கள்! இன்று, நாம் நமது குடும்பங்களில் கணவன் மனைவியின் மீது செய்கின்ற அக்கிரமத்தை நினைத்துப்பாருங்கள்! 
 
அநீதம் என்றால் என்ன? ஒருவருடைய உரிமையை பறிப்பது; ஒருவருடைய உரிமையை தடுப்பது; ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உரிமையை கொடுக்க மறுப்பது; ஒருவரை அவர் செய்யாத குற்றத்திற்காக தண்டிப்பது; ஒருவர் மீது அவர் செய்யாத குற்றத்தை சுமத்துவது; ஒருவருக்கு தொடர்பில்லாத ஒரு சம்பவத்தில் அவரை தொடர்புபடுத்துவது; அவருடைய உரிமைகளை அவருடைய அனுமதி இல்லாமல் எடுப்பது. 
 
அநியாயம் என்பது பெரிய விசாலமான பரந்துபட்ட ஒன்று. ஒரு ஆட்சியாளர் அநியாயக்காரராக இருக்கலாம். ஒரு குடும்பத் தலைவன் அநியாயக்காரனாக இருக்கலாம். ஒரு நிறுவனத்தின் தலைவன் அநியாயக்காரனாக இருக்கலாம். ஒரு இயக்கத்தில் ஒரு அமைப்பின் தலைவன் அநியாயக்காரனாக இருக்கலாம். 
 
யாராக இருந்தாலும் சரி, யார் அல்லாஹ்வின் அடியார்கள் மீது அவர்கள் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கின்றார்களோ, அவர்களின் உரிமைகளை பறிக்கின்றார்களோ, அவர்கள் மீது கடுமை காட்டி அவர்கள் மீது பழி போட்டு அவர்களை இம்சிக்கின்றார்களோ, அவர்களுடைய சுதந்திரங்களை பறிக்கின்றார்களோ இவர்கள் எல்லோரும் அநியாயக்காரர்கள். 
 
அல்லாஹு தஆலா எதற்காக அடியார்களை தண்டிக்க கூடாது என்றானோ அதற்காக அடியார்களை தண்டிப்பது. எதை அல்லாஹு தஆலா கடமையாக்கவில்லையோ அதை அடியார்கள் மீது கடமையாக்கி அவர்களை குற்றவாளியாக ஆக்குவது. இவையெல்லாம் அநியாயங்கள் அக்கிரமங்களிலே வரும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய தோழர்களை நீதத்தின் மீது கட்டமைத்தார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுத்த ஈமானிலே, அவர்கள் சொல்லிக் கொடுத்த இஸ்லாமிலே, அவர்கள் சொல்லிக் கொடுத்த தக்வாவிலே இந்த நீதம் முதன்மை இடத்தை பெறுகிறது. எந்த உபதேசத்தையும் இந்த நீதம் இல்லாமல் அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆக்கமில்லை.
 
குறிப்பாக ஆட்சியாளராக தங்களது தோழர்கள் உருவாகுவார்கள் என்பது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நன்கு தெரியும். தங்களது காலத்திலேயே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது தோழர்களை பல இடங்களுக்கு ஆட்சியாளர்களாக அனுப்பினார்கள். 
 
அவர்களுக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுத்த சொல்லி அனுப்பிய உபதேசம் என்ன? அங்கே சென்று அந்த செல்வ வளங்களை கொண்டு நீங்கள் இவ்வளவு காலம் சிரமப்பட்டதற்கு சுகபோகமான வாழ்க்கையை தேடி கொள்ளுங்கள்! நீங்கள் அங்கிருந்து செல்வங்களையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்! என்பதல்ல
 
(பொதுவாக ஒரு மன்னராக இருந்திருந்தால் அதைத்தான் வெளிப்படையாக சொல்லி இருப்பார். இல்லை என்றால் அதைத்தான் அவர் செய்ய வலியுறுத்தி இருப்பார்.)
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த துன்யாவை அவர்கள் விரும்பி இருந்தால் அல்லாஹு தஆலா உஹது மலையை தங்கமாக்கி தந்திருப்பான்
 
ஆனால், இந்த துன்யாவுக்காக இஸ்லாம் இல்லை. இந்த துன்யாவுக்காக தூதர் இல்லை. இந்த துன்யாவுக்காக முஸ்லிம்களில்லை. முஸ்லிம்கள் இந்த துன்யாவிலே நீதத்திற்காக இருக்கிறார்கள். அல்லாஹ்விற்காக இருக்கிறார்கள். மக்களுக்கு மக்களுடைய உரிமைகளை கொடுப்பதற்காக இருக்கிறார்கள். 
 
கண்ணியத்திற்குரிய தோழர்கள் எத்தனை பெரும் மன்னர்களை சந்தித்தார்கள்! அங்கே அவர்கள் இஸ்லாமின் பக்கம் மட்டும் மக்களை அழைத்தார்களா? முஸ்லிமாகிவிடு என்று சொன்னார்களா? அது மட்டும் சொன்னார்களா? இல்லையே! 
 
உங்களை நாங்கள் அல்லாஹ்வின் பக்கம் அழைக்க வந்திருக்கின்றோம். பிற மதங்களின் அநியாயங்கள், அக்கிரமங்கள், அடக்கு முறைகளில் இருந்து விடுவித்து, இஸ்லாம் என்ற நீதத்திற்கு அவர்களை அழைக்க நாங்கள் வந்திருக்கின்றோம். இந்த நெருக்கடியான உலக வாழ்க்கையை நீங்கள் அவர்களுக்கு அனுபவிக்க வைத்திருக்கிறீர்களே! அதிலிருந்து அவர்களை விடுதலை செய்து ஒரு விசாலமான துன்யாவை அவர்களுக்கு காட்டுவதற்காக, அதன் பக்கம் அழைப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸஹாபாக்கள் ஏன் கிஸ்ராவை அழித்தார்கள் ஏன் கைசரை அழித்தார்கள்? ஏன் ரோம பேரரசுகளை பாரசீக பேரரசுகளை எச்சரித்தார்கள்?
 
إِذَا هَلَكَ كِسْرَى فلا كِسْرَى بَعْدَهُ، وإذَا هَلَكَ قَيْصَرُ فلا قَيْصَرَ بَعْدَهُ
 
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு ஸமுரா ரழியல்லாஹு அன்ஹு, புகாரி எண்: 3121.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கிஸ்ராவே கைசரே உன்னுடைய ஆட்சியில் என்னுடைய குதிரை வீரர்களின் கால் படும் என்று எச்சரித்தார்கள்.
 
அல்லாஹ்வுடைய தீனுக்கு நீ பணியவில்லை என்றால் உன்னுடைய ஆட்சியை என்னுடைய தோழர்கள் கைப்பற்றுவார்கள் என்று. 
 
மதினாவின் ஒரு கிராமத்திலே கூடாரத்திலே உட்கார்ந்து கொண்டு, ஒரு சாதாரண கீற்றுக் கொட்டகையிலே இருந்து கொண்டு, உலகத்தில் பேரரசுகளை ஈமான் நீதம், ஒழுக்கம், மக்களுக்கான உரிமை என்ற அப்படியான உரிமைகளின்றி மக்கள் வேதனை பட்டுக் கொண்டு இருந்தபோது, அந்த சக்தியை கொண்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமும் சஹாபாக்களும் எச்சரித்தார்கள். மக்கள் நிம்மதி அடைந்தார்கள். இந்தப் பக்கம் பாரசீகத்தில் இருந்து அப்படியே ரஷ்யா வரை கிஸ்ராவின் ஆட்சி. இந்த பக்கம் ஷாமிலிருந்து ரோம் வரை கைசரின் ஆட்சி. இவர்கள் எல்லாம் மண்டியிட்டார்கள். அத்துடன் முடிந்தது அவர்களுடைய சாம்ராஜ்யம். அவர்களின் சாம்ராஜ்யம் உருவாக முடியாது. 
 
உங்களில் சிலர் இப்போது கேட்கலாம்; சில சாம்ராஜ்யங்கள் உருவாகி உலகத்தை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறதே என்று. 
 
ஆம்! முஸ்லிம்கள் நீதவான்களாக இல்லை. அதனால் அவர்கள் தலைதூக்கி இருக்கிறார்கள். முஸ்லிம்களுடைய ஆட்சியாளர்கள் நீதவான்களாக இருந்திருந்தால் ஒருபோதும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்த கூற்றுக்கு மாற்றமான நிகழ்வு நடந்திருக்க முடியாது. 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய தோழருக்கு சொல்வார்கள். 
 
முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏமன் நாட்டிற்கு அனுப்பினார்கள். 
 
எமன் சாம்ராஜ்யம் என்பது பாரசீகர்களின் கையில் இருந்த மிகப்பெரிய சாம்ராஜ்யம். படித்து பாருங்கள் வரலாறுகளை. அந்த சாம்ராஜ்யம் அப்படியே விழுந்தது, நூறுலிருந்து ஆயிரம் வரை சில வீரர்கள் தான் சஹாபாக்களின் படைகளுக்கு முன்னால். பல பல ஆயிரங்களைக் கொண்ட பாரசீக சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த ஏமன் அப்படியே விழுந்தது. மண்டியிட்டு விட்டார்கள். 
 
ஆம்! நீதம் இருப்பவர்கள் இடத்திலே வீரம் இருக்கும். அநியாயக்காரர்கள் பார்ப்பதற்கு மிகப்பெரிய படை உள்ளவர்களாக, பலம் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லாஹ் அவர்களது உள்ளத்திலே கோழைத்தனத்தை கண்டிப்பாக போடுவான். நீதவான்களுக்கு முன்னால் அவர்கள் சமாளிக்க முடியாமல் தோற்று ஓடுவார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஆதுக்கு சொன்னார்கள்: முஆதே உனக்கு நான் ஒரு உபதேசம் செய்கிறேன். உங்களை நான் கவர்னர் ஆக ஆளுநராக ஆட்சியாளராக நான் அனுப்பப் போகிறேன். முஆதே! நீ மிகப்பெரிய சஹாபியாக இருக்கலாம். பெரிய கல்வியாளராக இருக்கலாம். 
 
اتَّقِ دَعْوَةَ المَظْلُومِ، فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ
 
அநியாயம் இழைக்கப்பட்டவரை பயந்து கொள்! அவருடைய துஆவை பயந்து கொள். அவருடைய துஆவுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலே எந்த திரையும் இருக்காது.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2448. 
 
ஒரு ஆட்சியாளரை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எத்தகைய அறிவுரையை கொண்டு அனுப்புகிறார்கள்! 
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
 اتَّقُوا الظُّلْمَ، فإنَّ الظُّلْمَ ظُلُماتٌ يَومَ القِيامَةِ، واتَّقُوا الشُّحَّ، فإنَّ الشُّحَّ أهْلَكَ مَن كانَ قَبْلَكُمْ، حَمَلَهُمْ علَى أنْ سَفَكُوا دِماءَهُمْ واسْتَحَلُّوا مَحارِمَهُمْ
 
அநீதிஇழைப்பதை பயந்து கொள்ளுங்கள்! மறுமை நாளில் அநியாயம் என்பது மிகப்பெரிய இருள்களாக வந்து நிற்கும். 
 
மேலும், கருமித்தனத்தை கஞ்சத்தனத்தை பயந்து கொள்ளுங்கள்! உலக பேராசைகளை பயந்து கொள்ளுங்கள்! 
 
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2578.
 
(இன்று முஸ்லிம் நாடுகள் முஸ்லிம் மக்கள் எத்தகைய சோதனைகளை கொடுமைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்களோ அந்த எல்லா கொடுமைகளுக்கும் பின்னால் ஆட்சியாளர்களுடைய அந்த பேராசையானது, தனக்கு போட்டியாக யாரும் வந்து விடுவார்களோ என்ற பயத்தால் மக்களை நசுக்கத்  தூண்டுகின்றது. ஒடுக்கத் தூண்டுகிறது.)
 
ஹதீஸின் தொடர் : இந்த உலகப் பேராசை தான் உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை அழித்தது. தங்களின் ரத்தங்களை ஓட்டுவதற்கும், அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலால் ஆக்கிக் கொள்வதற்கும் அவர்களை தூண்டியது. 
 
மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
அநியாயக்காரன், அவன் சில காலத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் குதிக்கலாம். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, தனது படையை கொண்டு, பலத்தைக் கொண்டு, ஆட்சியை கொண்டு, தனக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ராணுவத்தைக் கொண்டு அவன் எவ்வளவு வேண்டுமானாலும் ஆட்டம் போடலாம். 
 
إنَّ اللهَ عَزَّ وجَل يُملي للظَّالمِ، فإذا أخَذَه لم يُفلِتْه. ثُمَّ قَرَأ وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ
 
அல்லாஹு தஆலா அவனுக்கு கொஞ்சம் உயிர் கொடுத்திருக்கிறான். அவனை கொஞ்சம் விட்டு இருக்கிறான். அவ்வளவுதான். அல்லாஹ் அவனை பிடித்து விட்டால் அவன் அல்லாஹ்வுடைய பிடியிலிருந்து தப்ப முடியாது. பிறகு, அல்லாஹ் உடைய தூதர் ஓதி காட்டினார்கள்: அல்லாஹுத்தஆலா அவனுடைய பிடி இப்படித்தான் இருக்கும். அல்லாஹு தஆலா ஊர்க்காரர்களை அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் பொழுது பிடித்து விட்டால் அல்லாஹ்வுடைய பிடி கடுமையானது.
 
அறிவிப்பாளர் : அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மதி, எண் : 4686.
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்: 
 
ثلاثةٌ لا تُردُّ دعوتُهم الصَّائمُ حتَّى يُفطرَ والإمامُ العادلُ ودعوةُ المظلومِ يرفعُها اللهُ فوق الغمامِ وتُفتَّحُ لها أبوابُ السَّماءِ ويقولُ الرَّبُّ وعزَّتي لأنصُرنَّك ولو بعد حينٍ 
 
மூன்று நபர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய துஆக்கள் மறுக்கப்படாது. நோன்பாளி நோன்பு திறக்கின்ற வரை. நீதமான அரசன். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மதி, எண் : 3598.
 
அல்லாஹ்விடத்திலே ஒரு ஆலிமை விட, அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளிலேயே திளைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு உத்தமரை விட அல்லாஹ்விடத்திலே பிரியமானவர், நீதமாக ஆட்சி செய்யக்கூடிய அரசர். நபிமார்களுக்கு அடுத்து அல்லாஹ்விடத்திலே கண்ணியத்தால் உயர்ந்தவர், நீதமாக ஆட்சி செய்யக்கூடிய அரசர். 
 
ஹதீஸில் வருகிறது? நாளை மறுமையில் மக்கள் எல்லாம் அந்த வெயிலிலே சிரமத்தில் சிக்கி வேதனையிலே தடுமாறிக் கொண்டிருக்கும் பொழுது, ஏழு வகையான கூட்டத்தை அல்லாஹ் அப்படியே பாதுகாத்து அவனுடைய நிழலிலே இடம் கொடுப்பான். 
 
எத்தனை அறிவிப்புகள் அது குறித்து வந்தாலும் ஸஹீஹுல் புகாரியிலே படித்து பாருங்கள்! எல்லாவற்றிலும் வரிசைப்படுத்தலில் முன் பின் இருக்கலாம். ஆனால், முதல்வகை நபரில் எந்த மாற்றமும் இருக்காது. அந்த முதல் நபர் யார்? இமாமுன் ஆதிலுன் -நீதம் செலுத்தக்கூடிய அரசர். நீதமாக நடக்கக்கூடிய மன்னர். நீதமாக ஆட்சி செலுத்தக்கூடிய ஆட்சியாளர்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 660, 1423.
 
ஹதீஸின் தொடர் : அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
மூன்று நபர்கள் உடைய துஆ மறுக்கப்படாது. ஒருவர், நோன்பாளி. அவர் நோன்பு திறக்கின்ற வரை. அவருடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இரண்டாவது, நீதமாக ஆட்சி செலுத்தக்கூடிய அந்த ஆட்சியாளர். மூன்றாவது, அநீதி இழைக்கப்பட்டவனுடைய பிரார்த்தனை. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
மேகத்துக்கு மேலே அவர்களுடைய துஆவை அல்லாஹ் உயர்த்தி விடுவான். அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதற்காக, வானத்தின் அத்தனை கதவுகளும் திறக்கப்பட்டு விடும். அல்லாஹு தஆலா அவனது பிராத்தனையை அவன் கேட்டவுடன் அவனை நோக்கி சொல்கிறான்: என்னுடைய கண்ணியத்தின் மீது சத்தியமாக! நான் உனக்கு உதவி செய்வேன் சிறிது காலம் கழித்தாகிலும் சரியே. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மதி, எண் : 3598.
 
அல்லாஹுத்தஆலா சில நோக்கத்திற்காக சில ஞானத்திற்காக சில நேரங்களிலேயே அநீதி இழைக்கப்பட்டவர் சிரமப்படுவதை அல்லாஹ் விட்டு வைப்பான். உடனே தண்டனையை அல்லாஹுத்தஆலா கொடுத்து விட மாட்டான் அவன் திருந்துவதற்கான வாய்ப்பை கொடுப்பான்.
 
அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய மிகப் பெரிய இரண்டு எச்சரிக்கைகளை பாருங்கள். 
 
முதலாவது இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள். அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக. 
 
من كانت عِندَه مَظلَمةٌ لأخيه فلْيتَحَلَّلْه منها، فإنَّه ليس ثَمَّ دينارٌ ولا دِرهَمٌ، مِن قَبلِ أن يُؤخَذَ لأخيه مِن حَسَناتِه، فإنْ لم يكُنْ له حَسَناتٌ أُخِذَ مِن سَيِّئاتِ أخيه، فطُرِحَت عليه
 
யாராவது யாருக்காகிலும் அநீதி இழைத்திருந்தால் இப்போதே அவர்களிடத்தில் சென்று மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்! அந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுங்கள்! உங்களுக்கு மத்தியில் உள்ள அந்த உரிமைகளை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள்! ஏனென்றால் நாளை மறுமையில் வந்து விட்டால் அங்கே தீனாரும் இருக்காது. திர்ஹமும் இருக்காது. யார் அநீதி இழைத்தாரோ அவருடைய நன்மைகள் எல்லாம் எடுத்து அநீதி இழைக்கப்பட்டவருக்கு கொடுக்கப்படும். இறுதியாக அவர்கள் இடத்திலே நன்மை இல்லை என்றால் அநீதி இழைக்கப்பட்டவருடைய பாவங்களை எடுத்து அவருடைய தலையிலே சுமத்தப்படும். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6534.
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னைக் குறித்து சொன்னார்கள்: 
 
إنَّما أنَا بَشَرٌ، وإنَّه يَأْتِينِي الخَصْمُ، فَلَعَلَّ بَعْضًا أنْ يَكونَ أبْلَغَ مِن بَعْضٍ، أقْضِي له بذلكَ وأَحْسِبُ أنَّه صَادِقٌ، فمَن قَضَيْتُ له بحَقِّ مُسْلِمٍ فإنَّما هي قِطْعَةٌ مِنَ النَّارِ، فَلْيَأْخُذْهَا أوْ لِيَدَعْهَا
 
சிலர் என்னிடத்திலே பிரச்சனைகளோடு வருகிறார்கள். வழக்காட வருகிறார்கள். தங்களுடைய பங்காளிகளை அழைத்துக் கொண்டு. வாதி பிரதிவாதி வருகிறார்கள். சில நேரங்களிலே யார் என்னிடத்திலே பிரச்சனையை கொண்டு வருகிறாரோ அவர் அநியாயக்காரராக இருக்கிறார். யாரைப் பற்றி முறையிட வருகிறாரோ உரிமை அவருடையதாக இருக்கிறது. 
 
ஆனால், தன்னுடைய பொய்யான வாதங்களை கொண்டு, தன்னுடைய பொய்யான சாட்சிகளை கொண்டு அவர் என்னிடத்திலே திறம்பட வாதிட்ட அவருக்கு சாதகமாக நான் தீர்ப்பு சொல்லும்படி என்னை செய்து விடுகிறார். அநீதி இழைக்கப்பட்டவனோ அவனிடத்திலே சாட்சிகள் இல்லை. அவனுக்கு ஆதரவாக ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தினால் அவன் உரிமைகளை பறித்துக் கொள்கிறான். 
 
அவர் ஆதாரத்தால் மிகைத்து விடுகின்ற காரணத்தால் அவரை உண்மையாளர் என்று நினைத்து நான் அவருக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லி விடுகிறேன். என்னுடைய தீர்ப்பால் அவருக்கு நான் தீர்ப்பளித்து விட்டதால் அது ஒருபோதும் ஹலால் ஆகி விடாது. நான் இன்னொரு முஸ்லிமுடைய ஹக்கை யாருக்காவது தீர்ப்பளித்திருப்பேனேயானால், தீர்ப்பு யாருக்கு எதிராக அளிக்கப்பட்டதோ அவரிடத்திலே ஆதாரம் இல்லாத காரணத்தால், சாட்சி இல்லாத காரணத்தால் யாருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டதோ அவர் பொய்யான ஆதாரங்களை கொண்டு வந்தார். பொய்யான சாட்சிகளை ஏற்படுத்தினார். எனவே நான் அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்து விட்டதால் அவர் அதை தனக்கு ஆகுமானதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் நரகத்தின் ஒரு துண்டை தான் ஒரு பகுதியை தான் அவர்களுக்கு தீர்ப்பளித்தேன். அவன் விரும்பினால் அந்த நரகத்தின் பகுதியை எடுத்துச் செல்லட்டும் இல்லையென்றால் விட்டு செல்லட்டும். 
 
அறிவிப்பாளர் : உம்மு ஸவமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 7185.
 
அன்பான சகோதரர்களே! இன்னும் நீதத்தை பற்றியும் அநியாயத்தை பற்றியும் நம்முடைய வேதத்திலும் சுன்னாவிலும் எச்சரிக்கப்பட்ட நிறைய எச்சரிக்கைகள் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜுமுஆக்களிலே பார்ப்போம். 
 
அல்லாஹ்வை நாம் பயந்து கொள்ள வேண்டும்! நம்முடைய ஈமான் நம்முடைய இஸ்லாம் நம்முடைய தக்வா உண்மை என்பதற்கான சாட்சிகளிலே ஒன்று, நாம் சொல்லால் செயலால் நீதவான்களாக இருக்க வேண்டும். அல்லாஹ் நீதவான்களை நேசிக்கின்றான். அல்லாஹ்வுடைய வேதம் நீதத்தின் மீது இறக்கப்பட்டது. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீதத்தை நிலை நிறுத்துவதற்காக அனுப்பப்பட்டார்கள். இந்த இஸ்லாமிய சமுதாயம் நீதத்திற்காக வேண்டி அனுப்பப்பட்ட சமுதாயம். 
 
அல்லாஹு தஆலா நம்மை நீதவான்களோடு, சத்தியவான்களோடு, உண்மையாளர்களோடு ஆக்கி வைப்பானாக! யாருக்கும் எந்த விதமான துரோகங்களோ, அநியாயங்களோ, அக்கிரமங்களோ செய்வதிலிருந்தும், அவர்களுடைய உரிமைகளை பறிப்பதிலிருந்தும், எல்லா விதமான கொடுமைகள் அக்கிரமங்களில் இருந்தும், அல்லாஹு தஆலா நம்மையும் நமது உம்மத்தையும் பாதுகாப்பானாக! நமக்கும் நம்முடைய உம்மத்துக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் அல்லாஹு தஆலா நேர்வழி காட்டுவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/