HOME      Khutba      ஹஜ்ஜின் ஈமானிய தத்துவங்கள் | Tamil Bayan - 969   
 

ஹஜ்ஜின் ஈமானிய தத்துவங்கள் | Tamil Bayan - 969

           

ஹஜ்ஜின் ஈமானிய தத்துவங்கள் | Tamil Bayan - 969


ஹஜ்ஜின் ஈமானிய தத்துவங்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹஜ்ஜின் ஈமானிய தத்துவங்கள் 
 
வரிசை : 969
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 23-05-2025 | 25-11-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கு முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக; அல்லாஹ்வின் தூதர் மீதும், மற்றும் அவர்களது குடும்பத்தார் மீதும் தோழர்கள் மீதும் அல்லாஹ் உடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாகவும்; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை உபதேசம் செய்தவனாகவும்; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அருளையும் வேண்டியவனாகவும் இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நேர்மையாக வாழ்வதற்கும், அல்லாஹ்வின் அன்போடும் அல்லாஹ்வுடைய கருணையின் ஆதரவோடும், அல்லாஹ்வுடைய தண்டனையின் பயத்தோடும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து மறுமையின் மகத்தான வெற்றியை அடைவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
 
சென்ற ஜுமுஆவிலே அல்லாஹு தஆலா நம் மீது கடமையாக்கிய (இபாதத்து) வணக்கங்களில் மிக முக்கியமான ஒரு (இபாதத்) வணக்கமாகிய ஹஜ்ஜினுடைய ஈமானிய உணர்வுகளில் சிலவற்றைப் பார்த்தோம். 
 
ஹஜ் என்பது நம்முடைய ஈமானையும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய ரூஹையும் உயிரையும் பக்குவப்படுத்துவதற்காக, அல்லாஹ்வுடைய அன்பிலும் அல்லாஹ்வுடைய பயத்திலும் நம்மை தர்பியத் செய்வதற்காக, அதைத் தொடர்ந்து இந்த வாழ்க்கையில் அல்லாஹ்வுடைய சட்டங்களை எப்படி பேண வேண்டும் என்ற அந்த பயிற்சி நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹு தஆலா நம் மீது கடமையாக்கிய  மிக முக்கியமான ஒரு இபாதத். 
 
ஒவ்வொரு இபாதத்திலும் அந்த இபாதத்தின் மறுபக்கம் இருக்கும். நாம் அல்லாஹ்விற்கு அடிமை; அல்லாஹ்விற்கு கட்டுப்படக் கூடியவர்கள்; அவன் நம்முடைய எஜமானன் என்பதை வெளிப்படுத்துவதோடு, அதே நேரத்தில் அந்த இபாதத்தின் மூலமாக நமக்கு ஒரு ஈமானிய பயிற்சி கொடுக்கப்படும். நமக்கு ஒரு ஒழுக்க பயிற்சி கொடுக்கப்படும். நமக்கு ஒரு கட்டுப்பாடு சக்தி நமது உள்ளங்களில் நம்முடைய ஆன்மீகத்திலே வருவதற்கு பயிற்சி கொடுக்கப்படும். அந்தக் கட்டுப்பாடு தான் தக்வா. அந்த ஆன்மீக பயிற்சி தான் தக்வா. அந்த தர்பியத்திற்காக ஒவ்வொரு இபாதத்தும் அமைந்திருப்பதை பார்க்கிறோம். 
 
நம்முடைய ஈமானிய உணர்வுகளை அதிகப்படுத்தக் கூடியதாக, நம்முடைய இறை நெருக்கத்தை அதிகப்படுத்தக் கூடியதாக, நம்முடைய நற்குணங்களை செதுக்கக் கூடியதாக, ஒவ்வொரு வணக்கமும் இருக்கும். அந்த அடிப்படையில் இந்த ஹஜ் உடைய வணக்க வழிபாட்டிலும், பத்திற்கு மேற்பட்ட ஈமானிய தர்பியத்துகளை அறிஞர்கள் பட்டியலிட்டு இருக்கிறார்கள். 
 
குறிப்பாக இந்த ஹஜ்ஜிலே ஒரு முஃமினுக்கு தவ்ஹீத் உடைய பயிற்சி கொடுக்கப்படுகிறது. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; நான் அல்லாஹ்வை வணங்கி வழிபடக்கூடியவன்; நான் அவனுக்கு எதையும் யாரையும் எந்த வகையிலும் எந்தத் தருணத்திலும் இணையாக்க மாட்டேன் என்ற அந்த தவ்ஹீதுனுடைய பயிற்சி இந்த ஹஜ்ஜினுடைய   வணக்கத்தில் முக்கியமான பயிற்சி. 
 
ஒன்றை சிந்தித்துப் பாருங்கள்! அரஃபாவுடைய நாள், எப்பேற்பட்ட நாள்! அல்லாஹ்வுடைய தூதர் ﷺ கூறிய ஹதீஸை நினைவு கூருங்கள். இமாம் திர்மதி பதிவு செய்கிறார். இந்த ஹதீஸை சிந்தித்தால் தவ்ஹீத் இந்த மார்க்கத்தில் எவ்வளவு ஒரு முக்கியமான அடிப்படை என்பது உங்களுக்கு புரிய வரும்.
 
அரஃபா மைதானத்தில் கை தூக்கினாலே, ரொட்டியும் பருப்பும் தான் கேட்க வேண்டும் என்றும், வீட்டையும் சொத்தையும் சுகத்தையும் தான் கேட்க வேண்டும் என்றும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்
 
அல்லாஹ்வின் அடியார்களே! அரஃபா மைதானம் அதற்கான மைதானம் அல்ல. பாவமன்னிப்புக்காக ஏங்குவதற்கான மைதானம். சொர்க்கத்தை வேண்டி அழுவதற்கான மைதானம். ஈமானை உறுதிப்படுத்து ரப்பே! என்று உறக்க முழங்குவதற்கான மைதானம். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்: 
 
நான் மட்டுமல்ல எனக்கு முன்னால் வந்த எல்லா நபிமார்களும், அரஃபாவிலே கேட்ட துஆக்களிலேயே மிக சிறந்த துஆ இந்த தவ்ஹீதுடைய துஆ. இது திக்ரு மட்டும் அல்ல. 
 
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
 
அறிவிப்பாளர் : தல்ஹா இப்னு உபைதில்லாஹ் இப்னு கரீஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 3585, இமாம் மாலிக் 726.
 
இது ஈமானிய பிரார்த்தனை. இதை சொல்லும்போது அடியான், யா அல்லாஹ்! இந்த கலிமாவின் மீது எனக்கு யக்கீனை கொடு! எனக்கு நம்பிக்கையைக் கொடு! இதை கொண்டு என்னுடைய ஈமானை பலப்படுத்து! என்னுடைய இறை நெருக்கத்தை உயர்த்து! என்று அவன் வேண்டிக்கொண்டே இந்த கலிமாவை சொல்லுவான். 
 
எப்படி சொன்னார்கள்? அரஃபா தினத்திலே அதுவும் மாலை நேரத்திலே, நானும் எனக்கு முன்னால் வந்த நபிமார்களும் கேட்ட துஆக்களிலே சிறந்தது, இந்த தவ்ஹீத் உடைய வார்த்தை தான் என்பதாக. 
 
ஆகவே,  அன்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வின் வீட்டிற்கு செல்லக்கூடிய ஹாஜிகள் எப்போதும் அவர்களுடைய கவனம் இந்த தவ்ஹீதிலே மிகத் தெளிவாக உறுதியாக இருக்க வேண்டும். இதிலே அவர்கள் தங்களுடைய முன்னேற்றங்களை அதிகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 
 
அதுபோன்றுதான், ஹஜ்ஜின் வணக்கத்தில் மிக உயர்ந்த தத்துவங்களில் ஒன்று, அல்லாஹ்விற்கு முன்னால் தம்முடைய அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவது. 
 
யா அல்லாஹ்! நீ என்னுடைய எஜமானன். ஒரு அடிமை யார்? தன்னுடைய எஜமானனுக்கு முன்னால் முற்றிலும் சிரம் தாழ்த்தி, பணிந்து, பயந்து, நீ எது சொன்னாலும் நான் செய்வேன் என்ற அந்த உயரிய அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவது. 
 
அல்லாஹ்விற்கு நம்முடைய இபாதத் அதிலே உபூதிய்யத் அடிமைத்தனம் இல்லை என்றால், அந்த இபாதத்தை அல்லாஹ் திரும்பி பார்க்க மாட்டான். நாம் கைகட்டி நிற்கிறோம்! குனிகிறோம்! நம்முடைய நெற்றியை பூமியில் வைக்கிறோம்! இது அந்த உபூதிய்யத்தின் வெளிப்பாடு. யா அல்லாஹ்! உனக்கு நான் அடிமை.
 
நான் நாட்டிற்கு அரசனாக இருக்கலாம், அல்லது ஏதாவது ஒரு சமூகத்திற்கு தலைவனாக இருக்கலாம், எப்படி இருந்தாலும் சரி. ரப்பே! நீ எனக்கு எஜமானன். நான் உனக்கு அடிமை. அல்லாஹ்விற்கு அது ரொம்ப பிடிக்கும். அல்லாஹ்விற்கு முன்னால் தன்னை அப்து- அடிமை என்று ஒத்துக் கொள்வது. 
 
ஸய்யிதுள் இஸ்திக்ஃபார் என்ற ஒரு துஆ இருக்கிறது. இஸ்திக்ஃபார் எல்லாம் தலையாய துஆ. அல்லாஹ்வுடைய தூதர் ﷺ இஸ்திக்ஃபார் என்ற ஒரு துஆவை சொல்லிக் கொடுத்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முஸ்லிம்களும் காலையில் ஒரு முறை ஓத வேண்டும். அந்த துஆவினுடைய வாக்கியத்தின் ஆரம்பத்தை பாருங்கள்.  
 
اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ
 
இந்த உபுதியத்தை வெளிப்படுத்தக்கூடியது தான் இந்த ஹஜ் உடைய வணக்கம். (குறிப்பு:1)
 
அறிவிப்பாளர் : ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6306.
 
அதனால்தான் அல்லாஹு தஆலா நபிமார்களை சொல்லும் போதெல்லாம் என்னுடைய அடிமை என்னுடைய அடியார் என்று அவர்களை குறிப்பிடுகின்றான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ என்னை நீங்கள் புகழ்வது என்றால் சொல்லுங்கள். 
 
عبدُ اللَّهِ وَرَسُولُهُ 
 
நான் அல்லாஹ்வுடைய அடிமை அல்லாஹ்வுடைய ரஸூல் என்று என்னை சொல்லுங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ﷺ  வழிகாட்டினார்கள். 
 
அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3445.
 
சகோதரர்களே! நாம் சொல்லக்கூடிய அந்த தல்பியா, அல்லாஹ்வுடைய அழைப்பை ஏற்று, நம்முடைய செல்வத்தை செலவு செய்து, எந்த செல்வத்தைக் கொண்டு நம்முடைய வாழ்க்கையின் சுகத்தை தேவைகளை தேட முடியுமோ, அதை அல்லாஹ்விற்காக ஒரு சில நாட்களுக்காக, இவ்வளவு பெரிய செல்வத்தை செலவு செய்து, அந்த சிரமங்களை எல்லாம் தாங்கிக் கொள்கிறோமே, எதற்காக? என்னுடைய எஜமானனின் விருப்பம். அந்த எஜமானனுடைய கட்டளை.. ஆகவே இதை நான் செலவு செய்வேன். இதில் நான் கருமித்தனம் காட்ட மாட்டேன். 
 
வசதியான வீட்டிலே வசித்து வந்த நான் என்னை மைதானத்தில் படுக்க சொல்லுகிறானா? ஒரு சத்திரத்தில் கூடாரத்தில் தங்க சொல்கிறானா? அதற்கும் நான் தயார். அப்படிப்பட்ட அப்தியத்தை அங்கு வெளிப்படுத்துகின்றோம். எப்போதும் உயர்ந்த அழகிய சொகுசு வாகனத்தில் சென்ற நான் என்னை அல்லாஹ் நடக்க சொல்கிறானா? என்னை அல்லாஹ் என்ன செய்ய சொல்கிறான். 
 
லப்பைக் லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் ரப்பே லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் தர்பியாவின் முழக்கத்தை ஓதி ஓதி ஜமராத்துக்கு செல்லும்போது, அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்ற அந்த ரப்புடைய கிப்ரியா ரப்புடைய மலகூத் ரப்புடைய ஜபருத் உடைய அந்த வார்த்தைகளை கூறி கூறி அல்லாஹு தஆலாவிற்கு முன்னால் அடியான் தன்னுடைய அப்தியத்தை வெளிப்படுத்துகின்றான். 
 
சகோதரர்களே! இந்த அப்தியத் அடியானுக்கு மிக முக்கியமான தேவை. இது அவனை பெருமையில் இருந்து பாதுகாக்கும். ஆணவத்தில் இருந்து அகம்பாவத்தில் இருந்து செருக்கிலிருந்து பாதுகாக்கும். யா அல்லாஹ்! என்னிடத்தில் எதுவுமே இல்லை எல்லாம் நீ கொடுத்தது தான். உனக்கே எல்லா புகழும். 
 
இந்த ஒரு பணிவு அப்தியத்தை வெளிப்படுத்துதல், அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுக்கும் நபிமார்களுக்கும், முழுமையாக கிடைக்கப்பெற்றது.
 
இன்று நாம் பார்க்கிறோம்; இந்த உபூதியத்தை இந்த அப்தியத்தை புரியாத காரணத்தால், நமக்குள் பணத்தால் பெருமை; கல்வியால் பெருமை; வசதியால் பெருமை; ஊரினால் பெருமை; இன்னும் மனிதன் கற்பனைகள் செய்து கொண்டு தனக்கு ஒரு பெருமை, தனக்கு ஒரு பெரிய கவுரவம் இருப்பதாக நினைக்கிறான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! ஈமானும், தக்வாவும், அமல் ஸாலிஹும் இல்லை என்றால், அல்லாஹ்விடத்தில் கண்ணியத்தை அடைய முடியாது. அல்லாஹ்விடத்திலே கண்ணியத்தை அடைய முடியாத மனிதன் இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய மதிப்பு மிக்கவனாக கவுரவம் மிக்கவனாக வலம் வந்தாலும் சரி, நாளை மறுமையிலே கேவலப்படுவான்; இழிவடைவான். அந்த இழிவுக்கு பிறகு ஒரு கண்ணியம் இருக்காது. ஒரு அடியான் அவன் ரப்பு இடத்திலே கேவலமானவனாக இருக்கும்போது மக்களிடத்திலே உயர்வாக கருதப்பட்டு என்ன பிரயோஜனம்?. 
 
ஆகவே, ஹஜ் உடைய வணக்கத்தில் மிக முக்கியமான ஒன்று, அந்த அப்தியத்தை வெளிப்படுத்துவது. 
 
سُئِلَ: أَيُّ الحَجِّ أَفْضَلُ؟ قَالَ: العَجُّ وَالثَّجُّ
 
ரஸூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்: அவர்களிடத்திலே கேட்கப்பட்டது; எந்த ஹஜ்ஜிலே தல்பியா உரக்க சொல்லப்பட்டதோ, எந்த ஹஜ்ஜிலே குர்பானி அதிகமாக கொடுக்கப்பட்டதோ அது சிறந்த ஹஜ். 
 
அறிவிப்பாளர் : அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 827.
 
இந்த தல்பியாவின் ரகசியம் என்ன? 
 
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்று அடியான் சதா கத்தி கொண்டே இருப்பது. நீங்கள் பாருங்கள்; எல்லா திக்ர்களையும் பொதுவாக அமைதியாக சொல்ல வேண்டும். 
 
பணிந்து, பயத்தோடு, அமைதியாக தாழ்ந்த குரலிலே சொல்ல வேண்டும். ஆனால் இந்த தல்பியா மட்டும்தான் உரத்த குரலில் சொல்ல வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். காரணம் என்ன? அடியானிடமிருந்து அந்த அப்தியத் வெளிப்பட வேண்டும். 
 
அடுத்து, இந்த ஹஜ்ஜுடைய வணக்க வழிபாடுகளில் முக்கியமான படிப்பினைகளில் ஒன்று, அல்லாஹு தஆலா சென்ற காலத்தில் வாழ்ந்த நபிமார்களோடு நம்முடைய அந்த ஈமானை தொடர்பு படுத்துகின்றான். 
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயர்த்தி கட்டிய கஅபா, இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்து தஃவா செய்த அந்த மக்கா நகரம்; அது மட்டுமா, எல்லா நபிமார்களும் ஹஜ்ஜுக்காக வந்து சென்ற அந்தப் புனித கஅபா புனித மக்காவிற்கு அழைத்துச் சென்று, முஃமினே முஸ்லிமே அந்த நபிமார்களை நினைத்து பார்!
 
நாம் சிந்தித்துப் பார்த்து இருக்கிறோமா? குர்ஆன் ஓதுகிறோமே? என்றைக்காவது கொஞ்சம் யோசனை செய்து பார்த்து இருக்கிறோமா? 
 
அல்லாஹு தஆலா எத்தனை வசனங்களில் சொல்லி இருக்கிறான். 
 
(அல்குர்ஆன் 19:16) (அல்குர்ஆன் 19:41) (அல்குர்ஆன் 19:51)
 
وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِبْرٰهِيْمَ
 
وَاذْكُرْ فِى الْكِتٰبِ مُوْسٰٓى‌
 
وَاذْكُرْ فِى الْـكِتٰبِ اِسْمٰعِيْلَ‌
 
இந்த வேதத்திலே இப்ராஹீமை நினைவு கூருங்கள்! இந்த வேதத்திலே இஸ்மாயிலை நினைவு கூருங்கள்! இந்த வேதத்திலே மரியமை நினைவு கூருங்கள்! இந்த வேதத்திலே இத்ரீஸை நினைவு கூருங்கள்!
 
சகோதரர்களே! அந்த நபிமார்களுடைய நினைவு நம்மை பரிசுத்தமாக்குவதற்கு, அந்த நபிமார்களுடைய இறையச்சத்தின் பாடத்தை படிப்பதற்கு, அவர்களுடைய தியாகங்களை நினைவு கூர்வதற்கு, இந்த ஹஜ் முக்கியமான ஒரு பாடமாக படிப்பினையாக இருக்கின்றது.   
 
அங்கே சென்று இந்த உலக வஸ்துகளை சிந்திக்காமல், இந்த உலகத்தைப் பற்றிய பேச்சுகளை பேசாமல், நபிமார்களின் வாழ்க்கைகளை, குர்ஆனிலே அல்லாஹ் நபிமார்களை எப்படி சொல்லி இருக்கிறான் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ ஹஜ்ஜுகு வந்த போது சொன்னார்கள். இதோ நான் பார்க்கிறேன் மூஸா தல்பியா கூறியவராக இந்த மலையில் இருந்து வருவதை. கன்றை தொலைத்த மாடு எப்படி கத்தி கதறுமோ அந்த சத்தத்தில் மூஸா தல்பியா சொல்லி வருவதை நான் பார்க்கிறேன். இதோ இந்த மலையில் இருந்து பார்க்கிறேன். ஈஸா தல்பியா சொல்லி கொண்டு வருவதை. (குறிப்பு:2)
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 166.
 
அல்லாஹ்வுடைய ஞானம் அல்லாஹ்வுடைய நுட்பம் எவ்வளவு மகத்துவமானது! அல்லாஹு தஆலா நபிமார்களுக்கு கொடுக்கக்கூடிய அற்புதங்களில் ஒன்று. அல்லாஹு தஆலா நபிமார்களை ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கு காண்பித்தான். அவர்களுடைய ஹஜ் அவர்களின் வாழ்நாள் மட்டுமல்ல அவர்கள் இறந்ததற்குப் பிறகும் அங்கே வருவதை அல்லாஹு ஸுபஹானஹு வதஆலா ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கு காண்பித்து கொடுத்தான். ஸஹீஹ் புகாரியுடைய அறிவிப்பாக இது இல்லை என்றால் இதை யாராவது சந்தேகப்படலாம்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இது மிக ஆதாரப்பூர்வமான ஹதீஸ். அல்லாஹு தஆலா அவனுடைய அற்புதங்களை காட்டி நம்முடைய ஈமானை பலப்படுத்துகிறான். 
 
அதுபோல இந்த ஹஜ்ஜுடைய நோக்கங்களில் மிக முக்கியமான நோக்கம். ஜாஹிலியத்துடைய அத்தனை சடங்குகளையும் அறியாமைக் காலத்தினுடைய மூடப்பழக்கங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் அனைத்தையும் அழித்து ஒழிப்பது. முஷ்ரிக்குகள் வேறு நாம் வேறு. அவர்களுடைய இபாதத்து வேறு நம்முடைய இபாதத்து வேறு என்ற மிகப்பெரிய அந்த வேறுபாட்டை ஈமானில் கொண்டு வருவது. 
 
இன்று, நம்முடைய ஈமான் ஏன் பலவீனம் அடைகிறது?  இன்று ஏன் நம்முடைய ஈமானின் அமல்கள்  சோர்வடைகிறது? முஷ்ரிக்குகளோடு  வியாபாரம் ரீதியாக மற்றும் பழக்க ரீதியாக  தொடர்பு வைத்து கலப்பது மட்டும் அல்ல. கலாச்சாரத்தால் செயல்பாடுகளால் பழக்கவழக்கங்களால். அவர்களாகவே நம்மில் பலர் மாறிவிடுகின்றார்கள்.
 
அல்லாஹ் உடைய தூதர் ﷺ அவர்களுக்கு அல்லாஹ் எச்சரிக்கை செய்தான். 
 
وَأَذَانٌ مِنَ اللَّهِ وَرَسُولِهِ إِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْأَكْبَرِ أَنَّ اللَّهَ بَرِيءٌ مِنَ الْمُشْرِكِينَ وَرَسُولُهُ فَإِنْ تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَإِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِي اللَّهِ وَبَشِّرِ الَّذِينَ كَفَرُوا بِعَذَابٍ أَلِيمٍ
 
இன்னும், இணைவைப்பவர்களிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகியவர்கள் என்று அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து, மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் (அறிவிக்கப்படும்) அறிவிப்பாகும் இது. ஆகவே, (இணைவைப்பதிலிருந்து) நீங்கள் திருந்தினால் அது உங்களுக்கு மிக நல்லதாகும். நீங்கள் (திருந்தாமல்) விலகினால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை உண்டு என்று நற்செய்தி கூறுவீராக.
 
அதற்கு பிறகு அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஹஜ்ஜுக்கு அனுப்பும்போது, அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஹஜ்ஜுக்கு அனுப்பும் போது அதற்குப் பிறகு அல்லாஹ்வுடைய தூதர் ﷺ ஹஜ்ஜுக்கு வரும்போது, இந்த விஷயத்தை ஆழமாக அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்தினார்கள். 
 
أَلَا كُلُّ شَيءٍ مِن أَمْرِ الجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَيَّ مَوْضُوعٌ
 
அறிந்து கொள்ளுங்கள்! அறியாமை காலத்திலே என்னென்ன மூடப் பழக்கவழக்கங்கள், என்னென்ன சடங்குகள், நம்பிக்கைகள் இருந்ததோ அவை அனைத்தையும் எனது இரண்டு கால்களுக்கு கீழே போட்டு புதைத்து விட்டேன். 
 
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1218.
 
எவ்வளவு அழுத்தம் திருத்தமாக சொன்னார்கள். ஜாஹிலியத்துடைய பழக்கவழக்கங்களை எந்த அளவு அல்லாஹ்வுடைய தூதர் ﷺ வெறுத்து இந்த உம்மத்து ஒதுங்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். ஜாஹிலியத் உடைய அனைத்து காரியங்களையும், அனைத்து செயல்களையும் எனது கால்களுக்கு கீழே போட்டு புதைத்து விட்டேன்.  
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று முஸ்லிம்கள், எந்த அளவு இந்த ஈமானிய கொள்கையில், ஈமானிய பணியிலே சோர்ந்து விட்டார்கள், பலவீனப்பட்டு விட்டார்கள் என்றால் அந்த சமூகத்தால் அந்த மக்களோடு அவர்களுடைய சடங்குகளோடு, ஏன் இன்றைய காலத்தில் அல்லாஹ் பாதுகாப்பானாக நம்மை மன்னிப்பானாக. வரக்கூடிய காலம் இன்னும் எவ்வளவு மோசமாக இருக்குமோ என்று தெரியவில்லை. குறிப்பாக சமீப காலங்களில் இது அதிகமாகி விட்டதை பார்க்கிறோம். 
 
சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் சமூக ஒற்றுமை என்ற பெயரிலே ஷிர்க் செய்வதற்கு முஸ்லிம் உம்மத் அங்கே இறங்கி கொண்டிருக்கிறது. அந்த ஷிர்க்கான செயலை முஷ்ரிக்குகள் செய்யும் போது அதை ஆதரிப்பதும், வரவேற்பதும், அவர்களுக்கு உதவி செய்வதும் சமூக நல்லிணக்கம் என்ற மிகப் பெரிய தவறான புரிதலை மக்களுக்கு மத்தியிலே பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! சமூக நல்லிணக்கம் என்றால் என்ன? அவர்களை அவர்களுடைய மதக் கொள்கையில் விட்டு விடுவது. அதிலே நாம் அவர்களுக்கு தொந்தரவு தராமல் இருப்பது. அதுதானே தவிர, அவர்களுடைய ஷிர்க்கான சடங்குகளில் அவர்களுக்கு நாம் துணை செய்வதோ அல்லது அவர்களுக்கு நாம் செய்து காட்டுவதோ இது ஒருபோதும் நல்லிணக்கம் அல்ல. இது நாம் இஸ்லாமை விட்டு வெளியேறுவது. மார்க்கத்தை விட்டு மதம் மாறுவது. அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அல்லாஹ்வின் அடியார்களே! ஹஜ்ஜின் தத்துவங்களில் முக்கியமான தத்துவம் ஒன்று இந்த ஹஜ். நமக்கொரு வஹ்தத் -ஒருமைப்பாட்டை, நமக்கு ஒரு ஒற்றுமையை கற்றுக்கொடுக்கிறது. அல்லாஹ்வுடைய தூதர் ﷺ எல்லா ஹாஜிகளும் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் சரி, அவர்கள் வசதியின் பின்புலத்தில் இருந்து வந்தாலும் சரி, ஒரே ஆடையில் இஹ்ராமுடைய ஆடையில் இருக்க வேண்டும். அவர்கள் ஒரே தல்பியாவை சொல்ல வேண்டும். அவர்கள் ஒரே இடத்தில் தங்க வேண்டும். மினா அரஃபா முஸ்தலிபா எல்லோரும் அப்படியே அந்த இடத்திலே. இது நமக்கு மிகப்பெரிய ஒற்றுமையை கற்றுக் கொடுக்கிறது. 
 
அது மட்டுமா! சொல்லக்கூடிய அந்த திக்ருகள்; லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், எந்த ஹாஜியும் திரும்பி பாருங்கள்! அவர்களுடைய வாயில் இருந்து மொழியக் கூடிய அந்த சொல் தல்பியா என்ற சொல். இது நமக்கு மிகப்பெரிய ஒற்றுமையை கற்றுக் கொடுக்கிறது.
 
ஆனால், இன்று இந்த உம்மத் எதை கொண்டு பிரயோஜனம் பெறுகிறது. எதைக்கொண்டு படிப்பினை பெறுகிறது. இவ்வளவு பெரிய மகத்தான வழிபாட்டிலே கொண்டு வந்து, பெரிய தர்பியத்தை கொடுக்கப்பட்டதற்கு பிறகு கூட, அவர்கள் ஒற்றுமையை நோக்கி செல்லவில்லை என்றால், தங்களுக்கு மத்தியிலே நாடுகளால், அதுபோல சமூகங்களால், ஒற்றுமை அடையவில்லை என்றால், அதற்கு ஒரு மிகப்பெரிய இழிவான அல்லது மோசமான அல்லது ஆபத்தான நிலையை தான் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்த காசா மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா இந்த ஹஜ்ஜின் மூலமாக, முஸ்லிம்கள் ஒரே உடல் ஒரே உம்மத் என்று உறுதிப்படுத்துகின்றான். அந்த உறுதி அங்குள்ள ஒவ்வொரு ஹாஜிக்கும் வர வேண்டும். ஒற்றுமையை நோக்கி அவர் தன்னுடைய வாழ்க்கையை அமைக்க வேண்டும். 
 
அது மட்டுமல்ல; ஹஜ் உடைய தத்துவங்களிலேயே மிக முக்கியமான ஒன்று. நம்முடைய உள்ளத்திலே அல்லாஹ்வின் அடியார்களுக்கு மத்தியிலே எந்தவிதமான ஏற்றத்தாழ்வையும் நாம் காண்பிக்க கூடாது. ஹஜ் என்பது தன்னை அல்லாஹ்விற்கு முன்னால் நிறுத்தி எல்லா மக்களும் என்னுடைய சகோதரர்கள்; எல்லா மக்களும் அல்லாஹ்வின் அடியார்கள் என்ற ஈமானிய உணர்வை கொண்டு வர வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ தங்களுடைய இறுதி ஹஜ் பிரசங்கத்திலே எவ்வளவு தெளிவாக இதை வலியுறுத்தினார்கள் பாருங்கள்! 
 
أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا أَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى
 
ஒரு அரபியருக்கு அரபி அல்லாதவரை விட சிறப்பு கிடையாது. ஒரு அரபி அல்லாதவருக்கு அரபியின் மீது மேன்மை கிடையாது. வெள்ளையன் மீது கருப்பருக்கு, கருப்பரின் மீது  வெள்ளையனுக்கு எந்த மேன்மையும் கிடையாது தக்வாவை தவிர, சொன்னார்கள். நீங்கள் எல்லோரும் ஆதமிடமிருந்து ஆதம் மண்ணிலே படைக்கப்பட்டவர்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ நழ்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 23489.
 
மேலும், அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்:
 
قَدْ أَذْهَبَ اللَّهُ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَفَخْرَهَا بِالْآبَاءِ، مُؤْمِنٌ تَقِيٌّ، وَفَاجِرٌ شَقِيٌّ، وَالنَّاسُ بَنُو آدَمَ وَآدَمُ مِنْ تُرَابٍ
 
அல்லாஹு தஆலா ஜாஹிலியத்தின் மமதைகளை, பெருமைகளை, கர்வங்களை. அதுபோன்று மூதாதையர்களை கூறி பெருமை பேசுவதை உங்களிடம் இருந்து போக்கிவிட்டான். 
 
இரண்டே இரண்டு கூட்டம் தான். ஒன்று, அல்லாஹ்வை இறையச்சம் கொண்டு நம்பிக்கை கொண்ட முஃமின். அடுத்தவன், கெட்டவன்; துர்பாக்கியம் உடையவன். இந்த இரண்டைத் தவிர வேறு ஒரு வகை இல்லை. நீங்கள் ஆதமுடைய சந்ததிகள். ஆதம் மண்ணில் இருந்து வந்தவர்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 8970, திர்மிதி, எண் 3956.
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்:
 
، لَيَدَعَنَّ رجال فخرهم بأقوام إنما هم فحم من فحم جهنم أو لَيَكُونُنَّ أهون على الله من الْجِعْلاَنِ التى تَدْفَعُ بِأَنْفِهَا النَّتْنَ
 
தங்களுடைய மூதாதையர்களை கூறி பெருமை பேசுபவர்கள், அதை விட்டு விடட்டும்; விலகிக் கொள்ளட்டும். யார் அந்த மூதாதையர்கள்? முஷ்ரிக்குகள். நரகத்தின் கட்டைகளிலே நெருப்பு கட்டைகள் தானே தவிர அவர்களைக் கொண்டு பெருமை அடிப்பதற்கு என்ன இருக்கிறது. சொன்னார்கள்; அல்லது அல்லாஹ்விடத்திலே தங்களின் மூதாதையர்களின் பெயர்களை கூறி பெருமை அடிக்கின்றார்களோ, அவர்கள் எப்படி என்றால் அல்லாஹ்விடத்தில் மட்டமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். எப்படி அந்த மலப்பூச்சி இருக்கிறதோ தன்னுடைய மூக்கால் அந்த மலத்தை தள்ளுகிறதோ அதைவிட  கேவலமானவர்களாக அல்லாஹ்விடத்தில் ஆகிவிடுவார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 8970, திர்மிதி, எண் 3956.
 
ஆகவே, இந்த ஹஜ் என்பது நமக்கு மத்தியிலே அந்த ஈமானிய சமத்துவத்தை கொடுக்கக் கூடியது. 
 
அதுபோன்று இந்த ஹஜ்ஜின் வணக்க வழிப்பாட்டுகளின் தத்துவங்களில் ஒன்று, அடியான் பிறருக்கு தொந்தரவு தராமல் இருப்பது. பாதுகாப்பை உணர்த்துவது. எப்படி அடியானுக்கு அல்லாஹ் ஹலால் ஆக்கிய வேட்டை பிராணியை கூட இஹ்ராம் அணிந்து விட்டால் அதை நீ வேட்டையாடக் கூடாது என்று அல்லாஹுதஆலா கட்டளை இட்டிருக்கும்போது, இந்த ஒரு பயிற்சியானது எப்படி நோன்பு நேரத்திலே ஹலாலை விட்டு நாம் பயிற்சி எடுக்கின்றோமோ, நோன்பு அல்லாத  காலங்களில் ஹராமை விட்டு  விலகுவதற்கு அதுபோன்று பயிற்சி இந்த ஹஜ்ஜுடைய நேரத்திலே ஹலால்கள் எல்லாம் அங்கே தடுக்கப்பட்டு விடுகின்றன. 
 
இதன் மூலமாக அல்லாஹு தஆலா மிகப்பெரிய ஒரு தக்வா உடைய பயிற்சி கொடுக்கின்றான். சண்டை சச்சரவு செய்யக்கூடாது; யாரிடத்திலும் நாம் தகராறு செய்யக்கூடாது; மனைவியாக இருந்தாலும் அவளிடத்தில் ஆபாசமான இச்சையான பேச்சுகளை பேசக்கூடாது. இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய தர்பியத்தை அல்லாஹு தஆலா தக்வா உடைய பாடங்களாக அல்லாஹ் கொடுக்கின்றான்.
 
அதுபோல, ஹஜ் உடைய படிப்பினைகளில் ஒன்று, நம்முடைய மௌத்தை நினைவு கூர்வது. நம்முடைய மரண வாழ்வை நினைவு கூர்வது. எப்போது ஒரு அடியான் இஹ்ராமை அணிகின்றானோ அதாவது கண்ணியமாக உணரக்கூடிய அழகு படுத்தக்கூடிய அந்த ஆடைகளை உடம்பிலிருந்து கழட்டுகின்றானோ அப்போதே நாம் ஒரு மைய்யத்தை போல. 
 
எப்படி ஒரு மைய்யத்தில் இருந்து அவர் அணிந்த ஆடைகள் கழட்டப்பட்டு வெள்ளை துணி அவர் மீது போர்த்தப்படுகிறதோ அதனுடைய மிகப்பெரிய நினைவூட்டல் தான் இந்த இஹ்ராமுடைய ஆடை. நம்முடைய ஆடைகளை களைந்து நாம் மறுமைக்காக தயாராகுவதைப் போன்று இந்த இஹ்ராமுடைய ஆடை.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா எப்பேற்பட்ட படிப்பினையை வைத்திருக்கிறான். இஹ்ராமிற்காக அல்லாஹ் தேர்ந்தெடுத்த அந்த ஆடையை பாருங்கள். அலங்காரம் இல்லாத ஆடை. தைக்கப்படாத ஆடை. இரண்டு வெள்ளை நிற ஆடைகள். எப்படி மையத்திற்கு போர்த்தப்படுமோ அதேபோன்றுதான். 
 
சில நேரங்களில் பார்க்கலாம். ஹாஜிகள் தூங்கும்போது அந்த இஹ்ராமுடைய ஆடையில் தூங்கும்போது அப்படியே ஒரு மையத்தை படுக்க வைத்தது போன்றே இருக்கும். இது நமக்கு நாம் ஆஹிரத்தை முன்னோக்கியவர்கள்; மரணத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்; துன்யாவிலே மூழ்கி அதை நம்முடைய உள்ளத்திலே கொண்டு வந்து துன்யாவிலே மயங்கி விடக்கூடாது; ஆஹிரத்தை மறந்து விடக்கூடாது என்ற அந்த நினைவூட்டல் தருகிறது.
 
அதுபோல இந்த ஹஜ் என்பது, நாம் ஒன்று சேரக்கூடிய எந்த ஒரு சூழ்நிலையாக இருக்கட்டும், தவாஃபை எடுத்து பாருங்கள். அரஃபா மைதானத்தை எடுத்து பாருங்கள். மினாவிலே ஜம்ராத்தை எடுத்துப் பாருங்கள். லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுகிறார்களே இது ஆஹிரத்திலே மஹ்ஷர் மைதானத்திலே அல்லாஹ்விற்கு முன்னால் இருக்கக்கூடிய அந்த மகத்தான நாளை நமக்கு நினைவூட்டுகிறது. 
 
அல்லாஹ் கேட்கிறான்:
 
يَّوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِيْنَ‏
 
அந்நாளில் இறைவனுக்கு முன்னால் மக்கள் நிற்க வேண்டுமே! (அல்குர்ஆன் 83:6)
 
அந்த நாளை பயப்பட மாட்டார்களா?
 
அல்லாஹ்வின் அடியார்களே! இப்படியாக ஹஜ்ஜின் வணக்க வழிபாடுகள் என்பது, நமக்கு அல்லாஹ்வுடன் நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. மார்க்கத்தில் நமக்கு உறுதியை ஏற்படுத்தக்கூடிய உலக வாழ்க்கையை சுருக்கமாக்கி ஆஹிரத்துடன் நம்மை நெருக்கமாக்கி மரணத்திற்கான அந்த  தயாரிப்பை நினைவூட்டக்கூடிய நாம் மறந்திருக்கக் கூடிய உள்ளங்களுக்கு ஈமானை கொண்டு தக்வாவை கொண்டு அல்லாஹ்வின் முஹப்பத்தைக் கொண்டு அல்லாஹ்வின் அச்சத்தை கொண்டு பசுமையாக்க கூடிய படிப்பினைகள் நிறைந்தது. 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா நம் எல்லோருக்கும் ஹஜ்ஜுடைய நஸீபை தந்தருள்வானாக! ஹஜ் செய்யக் கூடியவர்களுக்கு அந்த ஹஜ்ஜை ஈமானுடைய உணர்வுகளோடு புரிந்து அல்லாஹ்வுடைய அந்த தக்வாவோடு முஹப்பத்தோடு ஹஜ் பாக்கியத்தை தந்தருள்வானாக!
 
ஹாஜிகளுக்கு அல்லாஹு தஆலா எல்லா விதமான சிறிய பெரிய  ஆபத்துகளில் இருந்து துன்பங்களிலிருந்து அசௌகரியங்களில் இருந்து பாதுகாப்பானாக‌! அல்லாஹு தஆலா நம் அனைவருக்கும் அல்லாஹ்வுடைய அன்பையும் பொருத்தமிக்க மறுமையின் சொர்க்கத்தையும் தந்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு: (1)
 
سَيِّدُ الِاسْتِغْفارِ أنْ تَقُولَ: اللَّهُمَّ أنْتَ رَبِّي لا إلَهَ إلَّا أنْتَ، خَلَقْتَنِي وأنا عَبْدُكَ، وأنا علَى عَهْدِكَ ووَعْدِكَ ما اسْتَطَعْتُ، أعُوذُ بكَ مِن شَرِّ ما صَنَعْتُ، أبُوءُ لكَ بنِعْمَتِكَ عَلَيَّ، وأَبُوءُ لكَ بذَنْبِي فاغْفِرْ لِي؛ فإنَّه لا يَغْفِرُ الذُّنُوبَ إلَّا أنْتَ. قالَ: ومَن قالَها مِنَ النَّهارِ مُوقِنًا بها، فَماتَ مِن يَومِهِ قَبْلَ أنْ يُمْسِيَ، فَهو مِن أهْلِ الجَنَّةِ، ومَن قالَها مِنَ اللَّيْلِ وهو مُوقِنٌ بها، فَماتَ قَبْلَ أنْ يُصْبِحَ، فَهو مِن أهْلِ الجَنَّةِ. الراوي : شداد بن أوس | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 6306 | خلاصة حكم المحدث : [صحيح]
 
நபி ﷺ அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதில் மிகச் சிறந்த வழி இதுதான்: 'அல்லாஹும்ம அன்த்த ரப்பீ லா இலாஹ இல்லா அன்த்த, கலக்தனீ வ அன அப்துக, வ அன அலா அஹ்திக வ வஃதிக மஸ்ததஃது, அஊது பிக மின் ஷர்ரி மா ஸனஃது, அபூஉ லக பினிஃமதிக அலைய்ய, வ அபூஉ லக பி தன்பீ ஃபஃக்பிர்லீ ஃப இன்னஹு லா யஃக்பிரு அத்துனூப இல்லா அன்த்த.'" நபி ﷺ அவர்கள் மேலும் கூறினார்கள். "எவரேனும் இதை உளப்பூர்வமான நம்பிக்கையுடன் பகலில் ஓதி, அன்றைய தினமே மாலை நேரத்திற்கு முன்பு இறந்துவிட்டால், அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராவார்; மேலும் எவரேனும் இதை உளப்பூர்வமான நம்பிக்கையுடன் இரவில் ஓதி, காலை நேரத்திற்கு முன்பு இறந்துவிட்டால், அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராவார்."
 
அறிவிப்பாளர் : ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6306.
 
குறிப்பு: (2) 
 
أنَّ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ مَرَّ بوادِي الأزْرَقِ، فقالَ: أيُّ وادٍ هذا؟ فقالوا: هذا وادِي الأزْرَقِ، قالَ: كَأَنِّي أنْظُرُ إلى مُوسَى عليه السَّلامُ هابِطًا مِنَ الثَّنِيَّةِ، وله جُؤارٌ إلى اللهِ بالتَّلْبِيَةِ، ثُمَّ أتَى علَى ثَنِيَّةِ هَرْشَى، فقالَ: أيُّ ثَنِيَّةٍ هذِه؟ قالوا: ثَنِيَّةُ هَرْشَى، قالَ: كَأَنِّي أنْظُرُ إلى يُونُسَ بنِ مَتَّى عليه السَّلامُ علَى ناقَةٍ حَمْراءَ جَعْدَةٍ عليه جُبَّةٌ مِن صُوفٍ، خِطامُ ناقَتِهِ خُلْبَةٌ وهو يُلَبِّي قالَ ابنُ حَنْبَلٍ في حَديثِهِ: قالَ هُشيمٌ: يَعْنِي لِيفًا. الراوي : عبدالله بن عباس | المحدث : مسلم | المصدر : صحيح مسلم الصفحة أو الرقم: 166 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : من أفراد مسلم على البخارى
 
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "இது எந்தப் பள்ளத்தாக்கு?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்அஸ்ரக் பள்ளத்தாக்கு" என்று பதிலளித்தனர். அப்போது அவர்கள், "மூசா (அலை) அவர்கள் தம் இருவிரல்களைக் காதுகளுக்குள் நுழைத்தவர்களாக உரத்த குரலில் தல்பியாச் சொன்னபடி இந்தப் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றுகொண்டிருப்பதை நான் (இப்போதும்) காண்பதைப் போன்று உள்ளது" என்று கூறினார்கள். -அப்போது மூசா (அலை) அவர்களது நிறத்தைப் பற்றியும் முடியைப் பற்றியும் ஏதோ குறிப்பிட்டார்கள். ஆனால் அது அறிவிப்பாளர் தாவூத் (ரஹ்) அவர்களது நினைவிலில்லை.
 
பிறகு நாங்கள் பயணம் செய்து ஒரு மலைக் குன்றுக்கு வந்துசேர்ந்தோம். அப்போது "இது எந்த மலைக் குன்று?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், "ஹர்ஷா" அல்லது "லிஃப்த்" என்று பதிலளித்தனர். அப்போது, "யூனுஸ் (அலை) அவர்கள் சிவப்பு நிற ஒட்டகத்தின் மீது கம்பளி நீளங்கி அணிந்தவர்களாக தல்பியா சொன்னவாறு இந்த (மலைக் குன்றின்) பள்ளத்தாக்கைக் கடந்துசெல்வதை நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது. அவர்களது ஒட்டகத்தின் கடிவாளம் ஈச்ச நார் (கொண்டு பின்னப்பட்டது) ஆகும்" என்று சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 166.
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/