கல்வியே கண்ணியம் | Tamil Bayan - 731
கல்வியே கண்ணியம்
ஜுமுஆ குத்பா தலைப்பு : கல்வியே கண்ணியம்
வரிசை : 731
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 09-07-2021 | 16-09-1444
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
மதிப்பிற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹு தஆலா உடைய அருளினால்இந்த அமர்வை நமக்கு அவன் ஏற்படுத்திக் கொடுத்தான். கல்வி கற்கக்கூடிய மாணவர்கள் ஆகிய நமக்கு இந்த கல்வியைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பது, நினைவூட்டி கொண்டே இருப்பது, கல்வி தொடர்பான குர்ஆன் வசனங்களை கொண்டும், நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களை கொண்டும்,
நம்முடைய சான்றோர், சஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், நல்லோர்களுடைய அறிவுரைகளைக் கொண்டும், நமக்கு நினைவூட்டி கொண்டே இருப்பது, இந்த கல்வி பயணத்திலே தொடர்ந்து நாம் நீடித்திருப்பதற்கு, இந்தப் பயணத்திலேயே, நாம் இருக்கின்ற நிலையிலேயே, நமக்கு அல்லாஹுவுடைய அந்த தவணை மரணம் வருவதற்கு, அல்லாஹுத்தஆலா நம்மை எல்லாம் உலமாக்களுடைய அந்தக் கூட்டத்திலேயே எழுப்புவதற்கு, மிகவும் நெருக்கமான அமலாக இருக்கும் என்று ஆதரவு வைத்தவனாக! இந்த அமர்வை நாம் தொடங்குகின்றோம்.
அல்லாஹுசுப்ஹானஹுவதஆலா நமக்கு நல்லெண்ணத்தை கொடுப்பானாக! அந்த நல்லெண்ணத்தை ஏற்று அல்லாஹு அருள் புரிவானாக ஆமீன்! அல்லாஹுசுப்ஹானஹுவதஆலா அவனுடைய கண்ணியத்துக்குரிய வேதம் அல்குர்ஆன் சூரா தவ்பாவிலே 122 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِيَنْفِرُوْا كَآفَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآٮِٕفَةٌ لِّيَـتَفَقَّهُوْا فِى الدِّيْنِ وَ لِيُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُوْنَ
நம்பிக்கையாளர்கள் அனைவருமே (நபியை தனியாக விட்டுவிட்டு ஊரிலிருந்து) புறப்படுவது சரியல்ல. மார்க்கத்தில் அவர்கள் ஞானம் பெறுவதற்காகவும் தங்கள் சமுதாயத்திடம் திரும்பும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் உங்களில் ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு கூட்டம் (மட்டும் போருக்கு) புறப்பட்டிருக்க வேண்டாமா? (ஊரில் தங்கிய) அவர்கள் (இதன் மூலம்) எச்சரிக்கையாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 9 : 122)
அல்லாஹுத்தஆலா கூறுகிறான். முஃமின்கள், நம்பிக்கையாளர்கள் தங்களுடைய ஊரை விட்டு மொத்தமாக வெளியேறிவிட வேண்டாம். அவர்களில் ஒரு கூட்டம் கல்வி கற்பதற்காக வெளியேறட்டும். மார்க்க கல்வியை அவர்கள் கற்றுக் கொண்டு பிறகு, அவர்கள் தங்கள் ஊருக்கு திரும்ப வந்து அந்தக் கல்வியை கற்றுக் கொடுக்கட்டும்.
தங்களுடைய கூட்டத்தார்களுக்கு அவர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யட்டும். இந்த வசனத்தில் இருந்து நாம் என்ன விளங்குகின்றோம்? இந்த உம்மத்துடைய ஒரு கூட்டம் தீனுடைய இல்மை கற்பதற்காக வேண்டி முழுமையாக ஒதுங்கி விட வேண்டும். ஆண்கள், பெண்கள் இருபாலரிலும் எல்லோரும் மார்க்க கல்வியை பொதுவாக கற்க வேண்டும் அது தனி.
ஒரு கூட்டத்தார்கள் அவர்கள் இந்த இல்மை தேடிச் சென்று எங்கெல்லாம் ஆலிம்கள் இருக்கின்றார்களோ, அறிஞர்கள் இருக்கின்றார்களோ, அவர்களிடத்திலே தேடிச் சென்று அவர்களிடத்திலே உடன் தங்கி அந்தக் கல்வியை கற்றுக்கொண்டு அவர்கள் தங்களுடைய ஊர்களுக்கு திரும்ப வேண்டும். கல்வியை கற்று திரும்பி வந்த மக்கள் தங்களுடைய ஊரில் உள்ளவர்களுக்கு கல்வியை கற்றுக் கொடுக்கட்டும், போதிக்கட்டும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யட்டும். இந்த ஆயத்தில் இரண்டு விஷயம் விளங்குகின்றோம்.
இந்த தீனுடைய இல்மை முழு நேரமாக கற்றுக் கொள்வதற்கென்று இந்த உம்மத்தில் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இல்லையென்றால் மொத்த உம்மத்தும் அல்லாஹுவிடத்தில் குற்றவாளிகளாக வந்து நிற்பார்கள். ஒவ்வொரு ஊரிலிருந்தும் அந்த ஊரில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை மார்க்கக் கல்வியை கற்பதற்காக அனுப்ப வேண்டும். அப்படி ஊரில் உள்ள சில குறிப்பிட்ட சில பேரையாவது அனுப்பவில்லை என்றால் மொத்த ஊரார்களும் குற்றவாளிகள்.
இப்பொழுது நாம் என்ன செய்கிறோம் என்றால், வெளியூரில் உள்ள ஆலிம்சாவை அழைத்து வந்து, நம் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு சொல்லித் தரும்படி கூறுகிறோம். ஆனால் குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் எவ்வாறு இருந்தார்கள் என்றால், ஒவ்வொரு ஊரார்களும், தங்களுடைய ஊரில் உள்ள புத்திசாலி பிள்ளைகளை மார்க்க கல்வியை கற்பதற்காக தேடி அனுப்பி விடுவார்கள். அந்தப் பிள்ளைகள் தங்களுடைய ஊருக்கு திரும்ப வந்து, தங்களுடைய ஊரார்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பார்கள்.
எல்லா கௌமில் இருந்தும், கபிலாக்களில் இருந்தும், மதினாவிற்கு அனுப்பிவிடுவார்கள். நபியவர்களுடைய மரணத்திற்குப் பிறகு சஹாபாக்கள் மதினாவில் இருந்தார்கள், தாயிபில் இருந்தார்கள், மக்காவில் இருந்தார்கள், ஈராக்கில் கூபா, பஷராவில் இருந்தார்கள். இந்த இடங்களுக்கு சஹாபாக்களுக்கு பிறகு வந்த அடுத்த தலைமுறை தங்களுடைய பிள்ளைகளை அனுப்பி விடுவார்கள் அதேபோல ஷாம், திமிஷ்க் அந்த இடங்களுக்கும் அனுப்பி விடுவார்கள்.
அங்கே அனுப்பி, தங்களுடைய பிள்ளைகளை கல்வி கற்க வைப்பார்கள். அந்தப் பிள்ளைகள் ஊருக்கு வந்த பிறகு அந்த ஊரில் உள்ள மஸ்ஜிதிலே இமாமத் செய்வார்கள், அந்த ஊரில் உள்ள மக்களுக்கு மார்க்கத்தை சொல்லிக் கொடுப்பார்கள். இன்று சிலர் வீட்டில் உள்ள குழந்தைகளை மருத்துவர், பொறியாளர் படிக்க வைக்கிறார்கள். அந்தக் குழந்தைகளை காசு கொடுக்கும் மரமாக ஆக்குகிறார்கள். மார்க்க கல்வியை பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுகிறார்கள்.
முஸ்லிம்களில் சிலர் அல்லாஹுவை வணங்குவதை விட காசையே வணங்குகின்றார்கள். அல்லாஹு பாதுகாக்க வேண்டும். நாம் என்ன செய்கிறோம் நன்றாக படிக்கின்ற குழந்தைகளை இந்த உலகத்தை படிக்க அனுப்புகிறோம். நம்முடைய மார்க்கத்திற்கு வெளியூரிலிருந்து ஆட்களை எதிர்பார்க்கிறோம். அல்லாஹு அக்பர் நாம் எந்த அளவுக்கு அல்லாஹுவுடைய கட்டளைகளை புறக்கணித்தவர்களாக இருக்கிறோம்.
அல்லாஹுத்தஆலா ஒரு கண்ணியத்தை வைத்திருக்கிறான் யாருக்கு என்றால் முஸ்லிம்களுக்கு. அல்லாஹுத்தஆலா அந்த கண்ணியத்தை கொடுப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறான். அந்த கண்ணியம் எதைக் கொண்டு கிடைக்கும் என்றால் ஒரு கூட்டம் கல்வியை கற்க வேண்டும் பிறகு, அவர்கள் ஊருக்கு வந்து அவர்களுடைய மக்களுக்கு கல்வியை கற்று கொடுக்க வேண்டும் அல்லாஹு கூறுகிறான்.
يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ
உங்களில் நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் உயர்த்துவான். இன்னும் கல்வி கொடுக்கப்பட்டவர்களை பல தகுதிகள் அவன் உயர்த்துவான். (அல்குர்ஆன் 58 : 11)
உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹு பதவிகளை உயர்த்துவான். எல்லாம் முஃமின்களுக்கும் கண்ணியம் உள்ளது அதிலும் குறிப்பாக இல்ம் உள்ளவர்களுக்கு கண்ணியம் இருக்கிறது. இது மிக முக்கியமான ஒரு வசனம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினா வந்தவுடன் சமுதாயத்தை உருவாக்கி கல்வியை கொடுத்தார்கள். மக்காவில் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால், அங்கும் நபியவர்கள் விடவில்லை மலைக்குப் பின்னாடி அர்க்கம் சஹாபியின் வீட்டில் முஸ்லிம்களை வர வைத்து காலையிலிருந்து மதியம் வரை இல்மை கற்றுக் கொடுப்பார், குர்ஆனை கற்றுக் கொடுப்பார், ஞானத்தை கற்றுக்கொடுத்தல், ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தல், அல்லாஹு யார் ,மார்க்கம் என்றால் என்ன? எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார்கள்.
மக்காவில் தொழுகை கடமையாகியது மக்காவில் ஜமாத்தாக தொழ வைக்கவில்லை. ஆனால் கல்வியை கற்றுக் கொடுத்தார்கள். மதினா வந்த பிறகு ஜமாத் தொழுகை நடத்தினார். பத்ர் போர் நடந்த போது பல குறைஷிகள் கைதியாக மாட்டிக் கொண்டார்கள். நபி விரும்பியிருந்தால் குறைஷிகளை சிரியாவில் விற்றிருந்தால் ஒரு அரபு கைதிகளுக்கும் ஆயிரக்கணக்கான தீனார்களை நபி அவர்கள் சம்பாதித்து இருக்கலாம். அடிமைகளை விட அரபு அடிமைகளுக்கு விலை அதிகம். அமல்களுக்கான நன்மையில் அரபு அடிமையை உரிமை இட்ட நன்மை கிடைக்கும் இஸ்மாயில் வம்சத்தில் வந்த அரபு அடிமையை உரிமை இடுங்கள் என்று ஹதீஸில் கூறப்படுகிறது.
ஒரு அடிமையை வைத்து பல ஆயிரகணக்கான தீனார்களை சம்பாதிப்பதை விட அந்த அடிமையை ஆசிரியர் ஆக்கி அவரிடத்தில் இருக்கக்கூடிய கல்வியை தன்னுடைய சமுதாயத்துக்கு கொடுக்கவே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கவனம் இருந்தது. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னுடைய இந்த உம்மத்துடைய கண்ணியம் கல்வியில் இருக்கின்றது என்று சொன்னார்.
அல்லாஹுவின் தூதர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சரியாக திட்டம் செய்து 10 வருடத்தில் மதினாவில் உள்ள 70 வயதானவர்களில் இருந்து 7 வயது குழந்தை வரையிலும் எல்லோர்களையும் நன்றாக மார்க்கத்தை படிக்க வைத்து விட்டுதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்தார்கள்.
நபியவர்களுக்கு மஃரிப் நேரத்தில் திருமணம் முடிந்தது நபியவர்களுக்கு திருமணம் நடந்தபோது நபியவர்கள் ஒரு டிபன் பாக்ஸை கொண்டு வந்து, தோழர்களே! வீட்டில் உள்ள உணவைக் கொண்டு வந்து பள்ளியில் சாப்பிடலாம் என்று கூறினார்கள். எல்லா சஹாபாக்கள் கொண்டு வந்ததை கலந்து விட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனைவருக்கும் பிரித்துக் கொடுங்கள் என்றார். பிரித்துக் கொடுத்த பின் வாங்க தோழர்களே! உங்கள் நபிக்கு திருமணம் ஆகிவிட்டது. வந்து வலிமா சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று கூறினார்.
எவ்வளவு எளிமையாக திருமணம் முடிந்தது. ஆனால் இன்றைய காலத்தில் அதை பெரிதாக்கி கொண்டிருக்கிறார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சரியாக திட்டம் செய்து10 வருடத்தில் மதினாவில் உள்ள எல்லோர்களையும் நன்றாக மார்க்கத்தை படிக்க வைத்து விட்டுதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்தார்கள். அந்த சமுதாயத்தில் உள்ள ஏழு வயது சிறுவன் உலகத்திற்கே கல்வியை,
அரசியலை, அரசாங்கத்தை நடத்த கூடிய அளவிற்கு கற்றுக் கொடுக்க கூடிய அளவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உருவாக்கினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவிற்கு வரும்பொழுது முஆத் இப்னு ஜபல் அவர்களுக்கு 10 வயது அவர் கல்வியை கற்ற உடன் ரசூலுல்லாஹ் தந்தையுடைய எமன் நாட்டிற்கு கவர்னராக அனுப்புகிறேன் என்று கூறுகிறார்கள்.
இது மட்டுமல்லாமல் நபி அவர்கள் சான்றிதழ் கொடுக்கிறார் இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாமில் உள்ள ஹலால் ஹராமை பற்றி துல்லியமாக படித்தவர் என்று. அடுத்து நபியுடைய சிறிய தந்தையின் மகன் 13 வயது உடைய அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அவர்களை நபியவர்கள் எவ்வாறு உருவாக்குகிறார்கள்? என்றால் உமர் பாருக் உடைய மந்திரி சபையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு தான் பிரதான ஆலோசகர்.
அடுத்து அனஸ் இப்னு மாலிக் இவருக்கு 20 வயதாக இருக்கும் பொழுது நபியவர்கள் மரணம் அடைந்தார்கள் நபியவர்கள் இவரை பேரறிஞராக மாற்றினார்கள் தன்னிடத்தில் வேலைக்கு சேர்ந்தவர்களை கூட நபியவர்கள் வேலையாட்களாக வைக்கவில்லை. அவர்களை அறிஞர்களாக மாற்றி சென்றார். அது போன்று தான் சஹாபாக்களும். இந்தக் கல்வியை கொண்டு நபியவர்கள் 10 வருடத்தில் முட்டாள்களாக இருந்த அரபுகளை கல்வியினுடைய உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தி உலகத்தை ஆளக்கூடிய அறிவை உலகத்தை வழிநடத்த கூடிய அறிவை நபியவர்கள் அள்ளிக் கொடுத்து சென்றுள்ளார் அதை வைத்து சஹாபாக்கள் ரோம பேரரசையும் பாரசீக பேரரசையும் சிறப்பாக ஆட்சி செய்தார்கள் என்றால் யோசித்துப் பாருங்கள்!
அப்துல் மலிக் இப்னு மர்வான் இவர் பெரிய மன்னர் அவர்கள் தன்னுடைய பிள்ளைகளுக்கு கூறுகிறார்கள் என் பிள்ளைகளே! நீங்கள் கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் பிள்ளைகளே! கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் இந்த கல்விக்காக வேண்டி ஒரு மணி நேரம் நீ கஷ்டப்படவில்லை என்றால், நீ கசப்பை சுவைக்கவில்லை என்றால், கல்வி தேடுதல் கல்வி கற்றுக் கொள்ளுதல் என்ற கசப்பை நீ சுவைக்கவில்லை என்றால், வாழ்நாள் எல்லாம் மடமையின் இழிவை மிடறு மிடறுவாக நீ அள்ளிக் குடிக்க வேண்டியது வரும் என்று கூறுகிறார்.
பாருங்கள் யார் ஒருவர் தன்னுடைய வாலிப தொடக்கத்தில் கல்வி கற்றுக் கொள்வது அவருக்கு தவறிவிட்டதோ அவருடைய மரணத்திற்கு இப்பொழுதே நான்கு தக்பீர் கூறுங்கள் என்றார். அதுபோன்று இன்னொரு அறிஞர் கூறுகிறார், கல்வி கற்காதவர் இருக்கிறார்களே அவர்கள் உலகத்தில் வாழும் போதே அவர்கள் மய்யத்தானவர்கள தான்.
கல்வியாளர்கள் எப்பொழுதும் உயிருடன் இருக்கக்கூடியவர்கள் அவர்கள் இறந்தாலும் சரியே.
இந்த இல்மையே இந்த உம்மத்திற்கு அல்லாஹுதஆலா கண்ணியமாக ஆக்கி வைத்தான். நபியவர்களை அல்லாஹு முதலில் படியுங்கள் என்றான்:
اِقْرَاْ
ஓதுவீராக (அல்குர்ஆன் 96 :1 )
فَاعْلَمْ اَنَّه لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ
ஆக, (நபியே!) “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை” என்பதை நன்கறிந்து கொள்வீராக! (அல்குர்ஆன் 47 : 19)
ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இஸ்லாமிய தொடக்கமே கல்வியில் இருந்து தான் ஆரம்பமாகிறது. அல்லாஹு நமக்கு கண்ணியத்தை கொடுக்க விரும்புகிறான் அந்த கண்ணியம் எதைக்கொண்டு என்றால் ஈமானை கொண்டு, இல்மை கொண்டு ஆகும்.
இந்த இல்மை கற்றுக் கொள்வது என்பது இருக்கிறதே அல்லாஹுவிற்கு மிக பிடித்தமான செயல். தொழுவதும் அல்லாஹுவிற்கு பிடித்த செயல் ஒன்றே, நோன்பு வைப்பதும் அல்லாஹுவிற்கு பிடித்த செயல் ஒன்றே, இது அனைத்துமே கல்வியுடன் இருக்க வேண்டும் என்று அல்லாஹு விரும்புகிறான்.
கல்வியை கற்றுக் கொள்வதே தனி ஒரு அமல் ஹதீஸில் கூறப்படுகிறது நீங்கள் கல்வியை தேடி வீட்டிலிருந்து நடக்க ஆரம்பித்தாலே அல்லாஹுத்தஆலா உங்களுக்கு சொர்க்கத்தினுடைய பாதையை உங்களுக்கு லேசாக்கி விடுகிறான் சொர்க்கத்தின் பாதையிலே உங்களை நடக்க வைத்து விடுகிறான் கல்வியைத் தேடிச் செல்பவர்களுக்கு சொர்க்கத்தை எளிதாக்கி வைக்கிறான். சொர்க்கத்தினுடைய பாதை இந்த இல்முடைய பாதை. இந்த ஹராம் ஹலால் உடைய இல்ம்இருக்கிறதே மிக முக்கியமான ஒரு இல்ம்.
فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا
ஆக, (தாங்கள் தேடிச் சென்ற இடத்தை அறியாமல் அதை) அவ்விருவரும் கடந்து சென்றபோது (மூஸா) தன் வாலிபரை நோக்கி, “நம் உணவை நம்மிடம் கொண்டுவா. திட்டவட்டமாக இந்த நம் பயணத்தில் (அதிக) களைப்பைச் சந்தித்தோம்” என்று கூறினார். (அல்குர்ஆன்18 : 62)
ஹித்ர் அலைஹிஸ்ஸலாம் மூசா அலைஹிஸ்ஸலாம் சந்தித்துக் கொண்ட சம்பவம் நமக்குத் தெரியும். அல்லாஹுத்தஆலா ஹித்ரிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏன் அனுப்பினான்? மூசா உன்னை விட படித்தவர்களிடம் நீ படித்து வா என்று ஹித்ரிடம் அனுப்பினான். சுபஹானல்லாஹ்نَصَبًا நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம் என்று (மூஸா) கூறினார்.
அந்த அளவிற்கு ஓடவிட்டான் இந்த கல்விக்காக. ஹித்ர் மூசாவிடம் கூறுகிறார் இம்ரான் உடைய மகனே! இன்னும் கல்வியை கற்றுக்கொள் எதற்காக வேண்டி? அந்தக் கல்வியைக் கொண்டு நீ அமல் செய்வதற்காக வெறும் மக்களுக்கு இந்த கல்வியை சொல்லிக் கொடுப்பதற்காக தேடாதே அவ்வாறு செய்தால் உனக்கு அந்த கல்வி நாசமாகவும், மற்றவர்களுக்கு பிரகாசமாகவும் ஆகிவிடும். நாம் இந்த கல்வியை குர்ஆன் சுன்னாவை கற்றுக்கொள்ள வேண்டும் நம் வாழ்க்கை பிரகாசமாக்குவதற்காக, செழிப்பாக ஆக்குவதற்காக,
இபாதத்தாக ஆக்குவதற்காக கற்றுக்கொள்ள வேண்டும். அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள் கல்வியை கற்றவர்களே! இந்த கல்வியைக் கொண்டு நீங்கள் அமல் செய்யுங்கள். யார் தான் கற்றபடி அமல் செய்கிறாரோ யாருடைய அமல் அவருடைய கல்விக்கு ஏற்ப இருக்கிறதோ அவர்தான் ஆலிம்.
அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள் ஒரு காலத்தில் சில மக்கள் வருவார்கள், கல்வி கற்பார்கள். ஆனால் அவரின் தொண்டைக்கு கீழ் அந்த கல்வி செல்லாது. அல்லாஹு பாதுகாக்க வேண்டும். அவருடைய அமல் வேற மாதிரியாக இருக்கும் இல்ம் வேற மாதிரியாக இருக்கும் அவருடைய அமல் இல்முக்கு முரண்பாடாக இருக்கும் அவருடைய உள்ரங்கம் வெளிரங்கத்திற்கும் முரணாக இருக்கும் அல்லாஹு பாதுகாக்க வேண்டும். அவர்கள் கூட்டமாக அமர்ந்திருப்பார்கள்.
ஒருவர் மற்றவரை பார்த்து பெருமை தான் பேசுவார். என்னை சுற்றி மக்கள் கூட்டம் இருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள். அல்லாஹு பாதுகாக்க வேண்டும். நாளை மறுமை நாளில் ஒரு நபி அல்லாஹுவிடத்திலே வருவார்கள் அவருடன் ஒருவரும் இருக்க மாட்டார்.அவருடைய மனைவி கூட இருக்க மாட்டார்கள்.
அவர் தனியாக வருவார்.இன்னொரு நபி வருவார் அவருடன் யார் இருப்பார் என்றால் ஒருவரே இருப்பார்.இன்னொரு நபி வருவர் அவருடன் இருவரோ, மூவரோ இருப்பர். இன்னொரு நபி வருவார் அவருடன் 10 பேருக்கு குறைவாகவே இருப்பார். இத்தகைய அவர்களுடைய அமல்கள் அல்லாஹ்வின் பக்கம் உயர்வதே கிடையாது.
ஹசன் ஹுசைன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள் நீங்கள் கல்வி கற்கும் பொழுது உங்கள் கல்வியை நீங்கள் எதிர்பார்க்கும் அந்த பங்கு நீங்கள் எதிர்பார்க்கும் அந்த எதிர்பார்ப்பு என்னை மக்கள் ஆலிம் என்று கூற வேண்டும் அப்படி என இருந்து விட வேண்டாம் என கூறுகிறார்கள். நாம் இல்முடைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.அடுத்து அந்த இல்மை அமலுடன் கோர்க்க வேண்டும். அடுத்த தலைமுறையை இந்த இல்முக்காக வேண்டி வாழக்கூடியவர்களாக உருவாக்க வேண்டும். அல்லாஹு சுபஹானஹுதஆலா அந்த சிறப்பான ஒரு கண்ணியமான வருங்காலத்தை நமக்கும் நம்முடைய வருங்கால சந்ததியினருக்கும் தந்தருள்வானாக.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/