HOME      Khutba      மவ்லிதும் மீலாதும் அன்பா, அனாச்சாரமா? | Tamil Bayan - 908   
 

மவ்லிதும் மீலாதும் அன்பா, அனாச்சாரமா? | Tamil Bayan - 908

           

மவ்லிதும் மீலாதும் அன்பா, அனாச்சாரமா? | Tamil Bayan - 908


மவ்லிதும் மீலாதும் அன்பா, அனாச்சாரமா?
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : மவ்லிதும் மீலாதும் அன்பா, அனாச்சாரமா?
 
வரிசை : 908
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 06-09- 2024 | 03-03-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்கும் கண்ணியத்திற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய பாசத்திற்குரிய நேசத்திற்குரிய தூதர் முஹம்மது அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை உபதேசம் செய்தவனாக; 
 
அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களை பின்பற்றி வாழும்படி அல்லாஹ் இறக்கிய வேதத்தை கற்று அதனுடைய சட்டங்களை பேணும்படி, அல்லாஹ் அனுப்பிய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறைகளை கற்று அந்த சுன்னாக்களை பின்பற்றி வாழும் படி உபதேசம் செய்தவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும் அவனுடைய கருணையையும் மறுமையின் சிறந்த வாழ்க்கையான சொர்க்கத்தையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ் நம்மை பொருந்தி கொள்வானாக! அவனை கொண்டு பொருந்தி கொண்ட நல்லவர்களில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் நமது பெற்றோர்களையும்  சந்ததிகளையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன். 
 
அன்பான அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு முஃமின் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவன், மறுமையை நம்பிக்கை கொண்டவன், அல்லாஹ் இறக்கிய இந்த மார்க்கம் இஸ்லாம் தான்; என்னுடைய உயிர் என்னுடைய வாழ்க்கை இதற்காகத்தான் நான் வாழ்கிறேன்; இந்த தீன் எனக்கு என்னுடைய உடலுக்குள் இருக்கக்கூடிய உயிரை விட, இந்த உலகத்தில் நான் சொந்தமாக்கி இருக்கக்கூடிய என்னுடைய செல்வங்களை விட, என்னை பெற்றெடுத்த எனது பெற்றோரை விட, நான் பெற்றெடுத்த எனது பிள்ளைகளை விட எனக்கு அல்லாஹ்வுடைய தீன் தான் பெரியது; அல்லாஹ்வுடைய தீன் தான் எனக்கு உயர்வானது; இதுதான் எனக்கு எல்லாமே இதை மீறிய எதிலும் நானும் இல்லை என்னிலும் இல்லை என்ற அந்த கொள்கையோடு வாழக்கூடியவன் தான் உண்மையான முஃமின்.
 
முஃமின்களாக இருந்த சஹாபாக்கள், போரிலே தந்தை எதிரணியில் இறைமறுப்போர் குஃப்பாருடைய அணியிலே இருந்தால் அவரை தீர்த்துகட்டுவதை பாக்கியமாக பெரும்பேறாக கருதினார்கள். எதிர் அணியிலே பிள்ளை இருந்தால் தாய் மாமன் இருந்தால் அவனை அல்லாஹ்விற்காக வெட்டி சாய்த்திட துடித்தார்கள். அதிலே கொஞ்சமும் தயங்கியதில்லை.
 
அல்லாஹ்வுடைய தூதரை ஏசியவன் தன்னுடைய தந்தையாக இருந்தாலும் அவனுடைய கழுத்தில் (கத்தியை ) வாளை வைத்து இதற்காக நீ மன்னிப்பு கேட்காவிட்டால், உன்னை மதினாவிற்குள் நுழைய விடமாட்டேன் என்று தனது தந்தையையே எதிர்த்தவர்கள். 
 
ஈமானுடைய சுவை ஈமானுடைய இனிமை என்பது தொழுகையால் மட்டும் கிடைத்து விடாது. தொழுகை என்பது ஒரு இபாதத்.  செய்தே ஆக வேண்டும். நோன்பு ஜக்காத் ஹஜ் இன்னும் இப்படி எத்தனையோ அமல்கள் இருக்கின்றன. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீஸை சிந்திக்க வேண்டும். 
 
ثلاثٌ مَنْ كُنَّ فيه وجَدَ حلاوَةَ الإيمانِ: أنْ يكونَ اللهُ ورسولُهُ أحبَّ إليه مِمَّا سِواهُما
 
மூன்று தன்மைகள் இருந்தால் தான் ஈமானுடைய ஹலாவத் -சுவை உணரமுடியும் என்று சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :16, முஸ்லிம் எண்: 43. 
 
மூன்று தன்மைகள் மூன்று குணங்கள் உங்களுக்குள் வரவேண்டும். உங்களுடைய இபாதத் உங்களுடைய வணக்க வழிபாடுகள் அமல்கள். தொழுதாலும்  தர்மம் கொடுத்தாலும் அல்லாஹ் பொருந்தி கொள்ள வேண்டும்; சொர்க்கம் கிடைக்க வேண்டும்; என்ற ஒரு நோக்கத்தை நோக்கி ஒரு கொள்கையை நோக்கி இருக்க வேண்டும் 
 
யாருக்கு நீங்கள் உதவினாலும் அல்லாஹ் பொருந்தி கொள்ள வேண்டும். சொர்க்கம் கிடைக்க வேண்டும். இதுதான் நமக்கு நோக்கம். ஒரு முஃமினை பொறுத்தவரை அவன் நல்லதை செய்ய வேண்டும். நல்லதைக் கொண்டு அல்லாஹ்வுடைய பொருத்தத்தை சொர்க்கத்தை நாட வேண்டும். அதில் முதலாவதாக ஃபர்ளுகளை செய்ய வேண்டும். பிறகு முடிந்த அளவு உபரியான நன்மைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்று தன்மைகள் இருந்தால் தான் உங்களுடைய ஈமானிலே உங்களுக்கு டேஸ்ட் சுவை தெரியும். நான் ஒரு முஃமின் என்ற உணர்வு உங்களுக்குள் இருக்கும். அந்த ஈமானை கொண்டு உங்களுக்கு ஈமானிய வீரம் ஈமானிய குணங்கள் பிறக்கும். உங்களது தொழுகையிலே அந்த ஈமானிய தன்மைகள் வெளிவரும். 
 
முதலாவது சொன்னார்கள்: 
 
أنْ يكونَ اللهُ ورسولُهُ أحبَّ إليه مِمَّا سِواهُما
 
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் அவர்கள் அல்லாத மற்ற அனைவரையும் விட அவனுக்கு விருப்பமானவர்களாக நேசத்திற்குரியவர்களாக அன்பிற்குரியவர்களாக ஆகிவிட வேண்டும்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :16, முஸ்லிம் எண்: 43.  
 
எல்லா மனிதர்களுடைய பிரியத்தையும் விட எல்லா பொருள்களுடைய பிரியத்தையும் விட அல்லாஹ்வுடைய முஹப்பத் அன்பு நேசம், அவனுடைய ரசூலுடைய அன்பு நேசம் முஹப்பத் அளவு கடந்து இருக்க வேண்டும். அவனுடைய உள்ளத்திலே உயிரோட்டமாக ஆழமாக விசாலமாக உறுதியாக பரவி இருக்க வேண்டும். வேரூன்றி இருக்க வேண்டும். 
 
அப்போதுதான் அல்லாஹ்விற்காக ஒருவரை தவிர்க்கக்கூடிய, அல்லாஹ்விற்காக ஒருவரை பகைக்கக்கூடிய அந்த ஈமானுடைய உறுதி கிடைக்கும். தனக்குப் பிடிக்கிறது, அல்லாஹ்விற்கு பிடிக்கவில்லை. அல்லாஹ்வுடைய அன்பு மிகைத்திருந்தால்தான் தனக்கு பிடித்ததை அது அல்லாஹ்விற்கு பிடிக்கவில்லை என்பதற்காக நாம் தவிர்ந்து கொள்ள முடியும். 
 
இல்லையென்றால் அதை கொஞ்சம் அப்படியே கண்டுக்காமல் ஓரத்திலே விட்டுவிட்டு நம்முடைய முஹப்பத்துக்கு ஆசைக்கு நாம் முன்னுரிமை கொடுத்து. அல்லாஹ்வுக்கு விருப்பமானதை அலட்சியம் செய்வோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
அலட்சியம் செய்யப்பட வேண்டியது நம்முடைய ஆசையா? அல்லாஹ்வுடைய கட்டளையா? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். 
 
ஆகவேதான், நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள்: நீ பாவத்தை பார்த்து அந்த பாவம் சிறிய பாவம் தானே என்று முடிவு செய்யாதே! நீ அந்த பாவத்தை கொண்டு எத்தகைய மகத்தான இறைவனுக்கு மாறு செய்கிறாய் என்று அவனுடைய மகத்துவத்தை பார்! அப்போதுதான் ஒவ்வொரு சிறிய பாவத்தையும் உன்னால் கைவிட முடியும். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த முஹப்பத் அது ஈமானுடைய உரம். இது ஈமானுக்கு அரண். இந்த முஹப்பத்தை கொண்டு தான் சஹாபாக்களுக்கு அல்லாஹு தஆலா வாக்களித்திருந்தவற்றை அடைந்தார்கள். இந்த துன்யாவில் அவர்கள் அடைய வேண்டியதையும் அடைந்தார்கள். நாளை மறுமையிலும் அவர்கள் அடைவார்கள் 
 
ஈமானுடைய நிபந்தனைகளில் இந்த முஹப்பத் ஒரு நிபந்தனை. குர்ஆனுடைய வசனங்கள் தொழுகையை மட்டுமா பேசுகின்றன? அல்லாஹ்வை நேசிக்க வேண்டும் என்று பேசுகின்றன. அல்லாஹு தஆலா நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَسَوْفَ يَاْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَ يُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤٮِٕمٍ‌  ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌  وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
 
வசனத்தின் கருத்து : மூமின்களே! நீங்கள் தடம் புரண்டு விட்டால், நீங்கள் வழி கெட்டு விட்டால், நீங்கள் பாதையில் இருந்து சருகி விட்டால், அல்லாஹு தஆலா வேறு ஒரு கூட்டத்தைக் கொண்டு வருவான். அந்த கூட்டத்தார்களை அல்லாஹ் நேசிப்பான். அவர்கள் அல்லாஹ்வை நேசிப்பார்கள். 
 
மூமின்களுக்கு எத்தனையோ தன்மைகள் இருக்கின்றன. அந்த தன்மைகளில் அல்லாஹு தஆலா தேர்ந்தெடுத்தது எல்லா தன்மைகளுக்கும் வேறாக இருக்கக்கூடியது, ஈமானுடைய தன்மை. அந்த ஈமானுடைய தன்மைக்கு உரமாக இருக்கக்கூடிய தன்மை அல்லாஹ்வுடைய நேசம் அவனுடைய ரசூலுடைய நேசம். 
 
அதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அந்தக் கூட்டத்தாரிடம் அல்லாஹ்வுடைய அன்பு இருக்கும். அல்லாஹ்வுடைய ரசூலுடைய அன்பு இருக்கும். 
 
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றும் பொழுது பழிப்பவர்கள் பழித்தாலும் சரி, அதற்காக பயப்பட மாட்டார்கள். அதற்காக ஒருபோதும் மார்க்கத்தை விட மாட்டார்கள். (அல்குர்ஆன் 5:54)
 
இன்று, அல்லாஹ்வுடைய தீனை பின்பற்றக் கூடியவர்களுக்கு எத்தனை விதமான பெயர்கள்; பிற்போக்குவாதிகள், பழமை வாதிகள், முரடர்கள், பல மாதிரியான அடைமொழிகள். 
 
ஒரு மனிதன் சுன்னத்தை பின்பற்ற ஆரம்பித்து விட்டால் அவனுக்கு லேபில் குத்துவதற்காகவே ரெடிமேடாக வைத்திருப்பார்கள். மனிதர்களை பயந்தே இன்று மார்க்கத்தை விடக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய அன்பு அல்லாஹ்வுடைய ரசூலுடைய அன்பு, இது இருந்தால் தான் ஈமானுடைய சுவை கிடைக்கும். 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
 
நபியே நீங்கள் சொல்லுங்கள்! கற்றுக் கொடுங்கள்! யார் உங்களை ஈமான் கொண்டார்களோ உங்களை பின்பற்றி வந்து விட்டார்களோ அவர்களுக்கு சொல்லுங்கள். இந்த வசனத்தின் விளக்கத்திலே மார்க்க அறிஞர்கள் சொல்வார்கள்; 
 
அல்லாஹ் இந்த வசனத்தை ஒரு உரைக்கல்லாக கொடுத்து விட்டான். இந்த வசனம் ஒரு டெஸ்டிங் மெஷின். நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அன்பு இருக்கிறதா? இல்லையா? என்பதற்கு இது ஒரு டெஸ்டிங் பாயிண்ட். இதை வைத்து நாம் முடிவு செய்து கொள்ளலாம். 
 
அல்லாஹ் கூறினான்: நபியே நீங்கள் சொல்லுங்கள். இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மக்களே! தங்களை எல்லாம் மூஃமின்கள் என்று சொல்பவர்களே! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் நீங்கள் என்னை பின்பற்ற வேண்டும். அப்படி நீங்கள் நபியாகிய என்னை பின்பற்றினால் தான் அல்லாஹ் உங்களது அன்பை ஏற்று அவனும் உங்கள் மீது அன்பு வைப்பான். உங்களது அமல்களை ஏற்று உங்களது பாவங்களை உங்களுக்கு மன்னித்தருள்வான். (அல்குர்ஆன் 3:31)
 
ஒரே வசனத்தில் மொத்த மார்க்கத்தையும் அல்லாஹ் கொண்டு வந்து விட்டான். நீங்கள் இந்த நபியை பின்பற்றாத வரை அல்லாஹு தஆலா திரும்பியே பார்க்க மாட்டான். 
 
ஒரு மனிதன் ஷஹாதா(கலிமா) சொல்லாமல் தொழுதால் அது ஏற்றுக்கொள்ளப்படாது, அவனுக்கு வேண்டுமானால் தொழுகையால் ஒரு மன அமைதி மனதிற்கு ஒரு நிம்மதி கிடைத்துவிடும். ஆனால் அல்லாஹ்விடத்திலே அது ஏற்றுக்கொள்ளப்பட்டு சொர்க்கத்திற்கான அமலாக ஆகுமா? 
 
ஒரு மனிதன் தர்மம் கொடுக்கிறான், தர்மத்தால் இந்த துன்யாவில் என்ன பலன் கிடைக்கும் என்று அல்லாஹ் வாக்களித்தானோ அது கிடைத்து விடும். ஆனால், தர்மத்திற்கு அல்லாஹு தஆலா மறுமையிலே சொர்க்கத்தை வாக்களித்திருக்கிறானே, நரகத்திலிருந்து பாதுகாக்க கூடிய கேடயமாக அந்த தர்மம் இருக்கும் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானே, அந்த நற்பாக்கியம் ஷஹாதா சொல்லாதவருக்கு கிடைக்குமா? கிடைக்காது.
 
அந்த சட்டத்தைபோலவே இந்த சட்டமும். அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்: உங்களுடைய எந்த ஒரு செயலாக இருந்தாலும் சரி, நீங்கள் அந்த செயலை அல்லாஹ்விடத்தில் நன்மையை எதிர்பார்த்து இதனால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும், இதனால் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டும், இதனால் உங்களுக்கு அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் என்ற எதிர்பார்ப்பில் என்ற எண்ணத்தில் நீங்கள் செய்பவர்களாக இருந்தால் அதற்கு ஒரே வழி இந்த ரசூலை பின்பற்றி வந்து விடுங்கள். 
 
இந்த ரசூல் செய்ததை செய்யுங்கள். இந்த ரசூல் செய்யாததை விட்டுவிடுங்கள். 
 
وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ 
 
இந்த மார்க்கத்திலே ரசூல் எதை கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். எதை விட்டு தடுத்தாரோ அதை விட்டு விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 59:7)
 
قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ‌‌
 
அல்லாஹுவுக்கு கட்டுப் படுங்கள்! தூதருக்கு கட்டுப் படுங்கள்! (அல்குர்ஆன் : 3:32) (3-132) (4-59) (5-92) (8-1) (8-20) (8-46) ( 24-54) ( 47-33) (58-13) (64-12)
 
நபியை பின்பற்றுவது என்றால் என்ன? மார்க்கத்தில் அல்லாஹ் என்ன சொன்னானோ அதை செய்யுங்கள். அதை மீறாதீர்கள்.; மார்க்கத்தில் நபி என்ன சொன்னாரோ அதை செய்யுங்கள். மீறாதீர்கள். உங்களது விருப்பத்திற்கு ஏற்ப மார்க்கத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வளைத்துக் கொள்ள முடியாது.
 
اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ 
 
வசனத்தின் கருத்து : அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் ரசூலுடைய இறுதி ஹஜ்ஜில் தெள்ளத் தெளிவான வசனத்தை அல்லாஹ் இறக்கி விட்டான். நபியே உங்களுக்கு மார்க்கம் முழுமையாக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வுடைய அருள் நிறைவு செய்யப்பட்டு விட்டது. இஸ்லாமை மார்க்கமாக பொருந்தி கொண்டேன். முடிந்தது. இதுதான் இறுதி மார்க்கம். இந்த மார்க்கம் நிறைவு செய்யப்பட்டு விட்டது. (அல்குர்ஆன் 5:3)
 
அல்லாஹ்வுடைய தூதரின் செயல்களால் தொழுகை நமக்கு காண்பித்து கொடுக்கப்பட்டது. நோன்பு நமக்கு காண்பித்துக் கொடுக்கப்பட்டது. இதுதான் உதாரணம். இந்த மார்க்கம் நிறைவு செய்யப்பட்டு விட்டது. இனி யாரும் இதிலே எக்ஸ்ட்ரா ஒரு ஃபிட்டிங் ஒரு நட்டு போல்டை கூட உள்ளே கொண்டு வந்து சொருக முடியாது. நிறைவு செய்யப்பட்டு விட்டது. நன்மை என்று இபாதத் என்று ஒன்றை செய்வதாக இருந்தால் அதற்கான ஆதாரம் நமக்கு தேவை.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தெளிவான அறிவிப்பு;
 
مَن أَحْدَثَ في أَمْرِنَا هذا ما ليسَ فِيهِ، فَهو رَدٌّ
 
யார் நம்முடைய இந்த மார்க்கத்தில் அதில் இல்லாததை நம்முடைய கட்டளை என்று சொல்கிறார்களோ அதாவது அல்லாஹ் ரசூலுடைய கட்டளைகளிலே அதில் இல்லாததை கொண்டு வருகிறார்களோ அது மறுக்கப்பட்டது. 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் :  புகாரி, எண் : 2697.
 
من عمل عملا ليس عليه أمرنا فهو رد
 
ஒருத்தன் ஒரு காரியத்தை செய்கிறான் நாம் அதை அவனுக்கு ஏவவில்லை, ஒருத்தன் ஒரு காரியத்தை செய்கிறான் அதை நாம் அவருக்கு சொல்லி தரவில்லை என்றால் அது மறுக்கப்பட்டது. அங்கீகரிக்கப்படாது. (அந்த செயலுக்கு நன்மை கிடைக்காதது மட்டுமல்ல. சொல்லாததை செய்த பாவமும் சேர்ந்துவிடும்)
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 1718.
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! இதுதான் தீன். அல்லாஹ்வுடைய முஹப்பத் இருந்தால் அங்கே அல்லாஹ்வுடைய கட்டளை செயல்படுத்தப்பட வேண்டும். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னா அங்கே பின்பற்றப்பட வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய மார்க்கம் என்பது கற்றுக் கொண்டு கற்றதை செயல்படுத்துவது தானே தவிர நாமாக உருவாக்குவது அல்ல. 
 
இமாம் ஷாஃபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்வார்கள்: வணக்க வழிபாடுகள் என்பது முடிவு செய்யப்பட்டவை. 
 
இப்படித்தான் சொல்ல வேண்டும். அல்லாஹ்விற்கு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன. அல்லாஹு அர் ரஹ்மான் என்று. அதைக் கொண்டு தக்பீர் கட்ட முடியுமா? அல்லாஹு ரப்புல் ஆலமீன் என்று தக்பீர் கட்ட முடியுமா? முடியாது. இப்படி நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. 
 
மார்க்கம் என்பது முடிவு செய்யப்பட்டது. இதில் யாரும் சேர்க்கவும் முடியாது. குறைக்கவும் முடியாது. இதில் யாரும் எதையும் உள்ளே கொண்டு வரவும் முடியாது. இருப்பதை யாரும் குறைக்கவும் முடியாது. அதற்கு பெயர் தான் தீன். 
 
இந்த ரபிஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் மக்களில் ஒரு கூட்டம் கிளம்பி விடும். அல்லாஹ்வின் மீது ரசூலின் மீது அன்பு இருப்பதாக சொல்வார்கள். மௌலித் ஓதுவார்கள். மௌலிது ஓதுவது; மீளாது கொண்டாடுவது; ரசூல் மீது உண்டான முஹப்பத்திலே நாங்கள் செய்கிறோம்; அவர்கள் மீதுள்ள அன்பிலே நாங்கள் செய்கிறோம்; பக்தி பரவசத்திலே செய்கிறோம் என்று அலப்பறை தாங்காது 
 
விதமான விதமான ஏற்பாடுகள்! ஆடம்பர செலவுகள்! கேலிக்குரிய நிகழ்ச்சிகள்! அதற்கான வரவு செலவு ஏற்பாடுகள்!
 
சகோதரர்களே! நீங்கள் கொஞ்சம் புரிந்து பாருங்கள்! இந்த சுன்னாவிற்கும் பித்அத்திற்கும், அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே சொல்லப்பட்ட முஹ்கமான ஒரு சட்டத்திற்கும் மக்கள் உருவாக்கிய முஹ்தஸ் -நூதனமான புதிய அனுஷ்டானங்களாகிய காரியங்களுக்கும் இடையிலே ஒரு பெரிய வித்தியாசத்தை பார்ப்பீர்கள். 
 
அல்லாஹ்வுடைய தீன் என்பது, எது அல்லாஹ்வுடைய குர்ஆனிலே ஸஹிஹான ஹதீஸ்களிலே இருக்கிறதோ அது. எளிமையாக இருக்கும். பகட்டுகள் இல்லாமல் இருக்கும். எல்லோராலும் எந்த செலவும் இல்லாமல் செய்யக்கூடியதாக இருக்கும். அதற்காக எந்தவிதமான விசேஷ நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு பைசா செலவில்லாத இலவசமானதாக இருக்கும்
 
நீங்கள் தொழுகிறீர்கள். அதற்காக ஏதாவது விசேஷமான ஏற்பாடுகள் செய்கிறீர்களா? அதற்காக பள்ளிகள் அலங்கரிக்கப்படுகிறதா? பூக்களால் அலங்காரம் உண்டா? அதற்காக விசேஷமா இமாம்கள் வரவழைக்கப்படுகின்றார்களா? 
 
நோன்பு, ஜக்காத், ஹஜ், நூற்றுக்கணக்கான ஃபர்ளான சுன்னாவான அமல்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்காக ஏதாவது விசேஷமான ஏற்பாடுகள் செய்கிறீர்களா? இல்லையே! ஆனால் மக்கள் உருவாக்கிய ஒவ்வொரு பித்அத்தையும் நீங்கள் எடுத்து பாருங்கள். 
 
விளம்பரங்கள் ஜோடிப்பு, அலங்காரங்கள் இல்லாமல், பகட்டு ஆடம்பரங்கள் இல்லாமல், அதற்காக வீண் செலவுகள் இல்லாமல் மக்கள் யாரும் அதை செய்ய முன்வர மாட்டார்கள். அதற்காக கூலிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்காக தனியாக செலவுகள் செய்யப்பட வேண்டும். அதற்கான ஆடம்பரமான ஏற்பாடுகளுக்கு செலவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அங்கே அவர்கள் கூடுவார்கள். 
 
இது புரிந்து கொள்வதற்கான ஒரு விளக்கம். அதிலே ஆட்களை கூட்டுவதற்கு அதை செய்வதற்கு. அல்லாஹ்வுடைய தீனில் இல்லாத ஒன்றை இவர்கள் உருவாக்கினார்கள். அதற்காகத்தான் இவ்வளவு சிரமப்படுகிறார்கள். 
 
அடுத்து, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முஹப்பத் உடைய அடையாளம் மீலாது கொண்டாட வேண்டும் என்று சொல்கிறார்களே? ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முஹப்பத்தின் அடையாளம் ரபிஉல் அவ்வல் மாதத்திலே முதல் அந்த 12 தினங்களிலே அவர்களைப் பற்றிய புகழ் பாட்டுகளை பாட வேண்டும் என்பதாக சொல்கிறார்களே? 
 
எங்கிருந்து இவர்கள் ஆதாரங்களை கொண்டு வந்தார்கள்? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய பிறந்தநாளை அறிந்தவர்களா? இல்லையா? அப்படியே அவர்கள் அதை தெரிந்து இருக்கவில்லை என்றாலும், அந்த பிறந்த நாளை நினைவு வைத்து அதை சிறப்பிக்க வேண்டும் என்பது அல்லாஹ்விற்கு பிடித்தமான ஒரு செயலாக இருந்திருக்குமேயானால் அல்லாஹு தஆலா தன்னுடைய நபிக்கு அதை உணர்த்தி இருப்பானா? இல்லையா? 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபித்துவம் கொடுக்கப்பட்டு மக்காவிலே 13 ஆண்டுகள் மதினாவிலே 10 ஆண்டுகள் 23 ஆண்டுகள் நபியாக ரசூலாக இருந்து இந்த தீனுல் இஸ்லாமை மக்களுக்கு போதித்தார்கள். கற்றுத் தந்தார்கள். 
 
அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கமாக்கி வைக்க கூடிய ஒவ்வொரு சிறிய பெரிய அமல்களையும் ஏன், நாம் கழிவறைக்கு எப்படி செல்ல வேண்டும்? சுத்தம் எந்த கையால் செய்ய வேண்டும்? என்பதை கூட விடாமல், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக் கொடுத்தார்களே! 
 
இன்று இவர்கள் சொல்வது போல ஈமானுக்கு அடையாளமாக, அல்லாஹ்வுடைய முஹப்பத் ரசூலுடைய முஹப்பத்துக்கு அடையாளமாக, சுன்னத் வல் ஜமாத் உடைய அடையாள சின்னமாக விளங்க கூடியதாக இந்த செயல் இருந்திருக்குமேயானால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏன் இதை நேரடியாகவும் சொல்லவில்லை, சாடை மாடையாகவும் சொல்லவில்லை, சுட்டிக் காட்டவும் இல்லை. 
 
23 ஆண்டுகளிலே ஒரு முறை கூட இன்று என்னுடைய பிறந்தநாள் என்பதாக எதையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்யவில்லையே? அவர்கள் காலத்தில் என்ன இனிப்பு இல்லையா? அவர்களுடைய காலத்திலே தோழர்கள் நபியின் பிறந்த நாளுக்காக ஒன்று சேருங்கள் என்றால் ஒன்று கூடி இருக்க மாட்டார்களா? தன்னுடைய உயிரை கொடுப்பதற்கே ஓடி வந்தார்களே? அந்த தோழர்கள்.
 
அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் முடிகிறது. 30 ஆண்டுகள் கலீஃபாக்களின் ஆட்சி. அபூ பக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிலிருந்து இறுதியாக ஹசன் ரலியல்லாஹு அன்ஹு வரை கிலாபத்துடைய 30 ஆண்டுகால ஆட்சி, அல்லாஹ்வுடைய தீனின் அடையாளச் சின்னங்களை உயிர்பிக்க வேண்டும்; மார்க்கத்தின் ஒவ்வொரு சட்டங்களையும் அமல்படுத்த வேண்டும்; அல்லாஹ்வுடைய தூதரின் சுன்னாவில் எதுவும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஆட்சி செய்தவர்கள் கலீஃஃபாக்கள். 
 
அவர்களில் யாராவது ஒருவர் இந்த மௌலிது என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்களா? செய்திருக்கிறார்களா? அவர்களிடத்திலே என்ன கவிதைகளுக்கு பஞ்சமா? ஹஸ்ஸான் இப்னு சாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நூற்றுக்கணக்கான கவிதைகள் உள்ளன. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து. அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நூற்றுக்கணக்கான கவிதைகள் உள்ளன.
 
இப்படி எத்தனை சஹாபா கவிஞர்கள் இருந்து இருக்கிறார்கள். அவர்களுடைய கவிதைகள் எல்லாம் எல்லா தோழர்களுக்கும் பெரும்பாலான தோழர்களுக்கு மனப்பாடம் ஆயிற்றே! கூடி உட்கார்ந்து செய்து இருக்கலாம் அல்லவா? ரசூலுல்லாஹ்வுடைய பிறந்த தினத்திலே அவர்களின் வரலாறுகளை சொல்லி மீளாது மாநாடு மீலாது விழா மீலாது ப்ரோக்ராம் நடத்த வேண்டும் அதிலே ஏதாவது ஒரு நன்மை என்று இருந்திருக்குமேயானால் இவ்வளவு பெரிய பேரரசை நிறுவி இஸ்லாமை பரப்பிய அந்த கலீஃபாக்கள் இதில் குறை செய்து விட்டார்களா? விட்டுவிட்டார்களா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! 
 
அல்லாஹ் உடைய தூதரின் நகரம் மதினா நகரம். அங்கே ஆட்சி செய்தார்கள். இப்படி எந்தவிதமான செயலையும் அவர்கள் செய்யவில்லையே? அதற்குப் பிறகு உமவியாக்கள், முஆவியா இப்னு அபுசுஃப்யான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி ஏறக்குறைய 90 ஆண்டுகள். 
 
அவர்களின் பரம்பரையிலே வந்தவர்கள் ஆயிரக்கணக்கான மூத்த சஹாபாக்கள் இருந்தார்கள். லட்சக்கணக்கான மூத்த கிபாருத்தாபியின், ஹசன் பசரி போன்ற, முஹம்மது இப்னு சீரின் போன்ற மிகப்பெரிய தாபியுடைய அறிஞர்கள் இருந்தார்கள். பிறகு தபவுதாபியீன் இருந்தார்கள். யாரும் செய்யவில்லையே? இப்படிப்பட்ட ஒரு நினைவே அவர்களுக்கு வரவில்லையே? இப்படிப்பட்ட எந்த ஒரு செயலையும் அவர்கள் செய்யவும் இல்லை. சிந்திக்கவும் இல்லை. தூண்டவும் இல்லை. 
 
அதற்குப் பிறகு அப்பாசி மன்னர்களுடைய ஆட்சி. 300 ஆண்டுகள் வரை ஹதீஸ் கலையின் இமாம்கள், ஃபிக்ஹ் கலையினுடைய இமாம்கள், இஸ்லாமிய கல்வியின் மூத்த மாபெரும் அறிஞர்கள்  இமாம் அபூ ஹனிபா, இமாம் மாலிக், இமாம் ஷாஃபி, இமாம் அஹமது இப்னு ஹம்பல் போன்ற அவ்வளவு பெரிய அறிஞர்கள் இருந்தார்களே? 
 
இது இஸ்லாமிய மார்க்கத்தில் செய்ய வேண்டிய ஒரு சிறப்பான ஒரு காரியமாக இருந்திருக்குமேயானால், ஹதீஸ் நூல்களில் அவர்கள் அப்படி ஏதாவது ஒன்றை அறிவித்து இருப்பார்கள் அல்லவா? மார்க்கத்தினுடைய ஃபிக்ஹ் சட்ட நூல்களிலே அவர்கள் எழுதி இருப்பார்கள் அல்லவா? 
 
ஒவ்வொரு சட்டத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து, புதிய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் ஏற்கனவே இருக்கக்கூடிய ஹதீஸ்களில் இருந்து எப்படி நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்கள் இவற்றையெல்லாம் கொடுத்தவர்கள், இந்த மௌலூது மீளாதை காட்டி தராமல் சென்று இந்த சமுதாயத்திற்கு அநியாயம் செய்து விட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? 
 
இஸ்லாமிற்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லாமல் பின்னால் மொரோக்கோ நகரத்திலே உருவாகிய பாத்திமி மன்னர்கள் மூலமாக உருவாக்கப்பட்ட மேற்கத்தியர்கள் காப்பியிலே கொண்டுவரப்பட்டது தான் இந்த சடங்குகள் எல்லாம். 
 
அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இறப்புக்கு 300 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட சடங்குகள். இதன் மூலமாக ஆடம்பரங்களும் அனாவசியமான செலவுகளும் வீணான பகட்டு வெளிபாடுகளும் நோக்கமே தவிர, இது உண்மையில் அல்லாஹ்வுடைய தூதரை கண்ணியப்படுத்துவதற்காகவோ, அல்லாஹ்வுடைய தூதரின் மீது உண்டான அன்பை வெளிப்படுத்துவதற்காகவோ அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்! 
 
அல்லாஹு சுபஹானஹு வ தஆலா நம்முடைய சமுதாயத்தை பாதுகாப்பானாக! மன்னிப்பானாக! நேர்வழியின் பக்கம் திருப்புவனாக! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மார்க்கம் எதுவோ அதை கற்று அதை பின்பற்றி அதை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய நற்பாக்கியத் தை தந்தருள்வானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/