அல்லாஹ்விற்காக வாழ்வதே இன்பமும் வெற்றியும் | Tamil Bayan - 910
அல்லாஹ்வுக்காக வாழ்வதே இன்பமும் வெற்றியும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வுக்காக வாழ்வதே இன்பமும் வெற்றியும்
வரிசை : 910
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 11-10-2024 | 08-04-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை பயந்து கொள்ளுங்கள் என்று எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக; அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அல்லாஹ்வுடைய வேதத்தின் சட்டங்களை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை கற்று, பற்றிப்பிடித்து, அவற்றின் ஒழுக்கங்களை பேணி வாழும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா, நம்மையும் நமது பெற்றோரையும் நமது குடும்பத்தாரையும் மன்னித்து அருள்வானாக! அல்லாஹு தஆலா, நம் அனைவரையும் உண்மையான மூஃமின்களாக முஸ்லிம்களாக வாழவைத்து நாளை மறுமையில் சொர்க்கத்தின் மகத்தான வெற்றியை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உலக வாழ்க்கை நமக்கு ஒரு முறை தான். மீண்டும் நம்மில் யாரும் இந்த உலகத்திலே பிறக்கப் போவதில்லை. கண்டிப்பாக நமக்கு மரணம் இருக்கிறது. நம்புகிறோம். நம் கண் முன்னால் அந்த மரணத்தை நமது குடும்பத்தில், உற்றார் உறவினர்களில், நண்பர்களில், நமது சமூகத்தில் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
அழிந்து போகக்கூடிய முடிந்து போகக்கூடிய இந்த தற்காலிக வாழ்க்கை எதற்காக? இந்த வாழ்க்கையை கொடுத்த அல்லாஹ்வுக்கு நாம் கொடுத்துவிட்டால் இதைவிட மிகப்பெரிய வெற்றி வேறொன்றும் இருக்காது. நாளை மறுமையில் சொர்க்கத்தினுடைய வெற்றிக் காத்துக் கொண்டிருக்கிறது.
அல்லாஹ்வுடைய பொருத்தம் அவனுடைய வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கை இன்பமான வாழ்க்கை அருள்களும் அருட்கொடைகளும் இன்பங்களும் சுகங்களும் நிறைந்த முடிவுறாத நிரந்தர வாழ்க்கை அங்கே நமக்கு காத்துக் கொண்டிருக்கிறது.
அல்லாஹ் கூறுகிறான்:
نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ وَلَـكُمْ فِيْهَا مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ
“நாங்கள் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் உங்கள் நேசர்கள் ஆவோம். அ(ந்த சொர்க்கத்)தில் உங்கள் மனங்கள் விரும்புவதும் உங்களுக்கு உண்டு. இன்னும், அதில் நீங்கள் (வாய்விட்டு) கேட்பதும் உங்களுக்கு உண்டு.” (அல்குர்ஆன் 41:31)
وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ
இன்னும், உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சொர்க்கத்தின் பக்கமும் விரையுங்கள். வானங்களும் பூமியும் (சேர்ந்தது) அதன் அகலமாகும். (அது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133)
سَلٰمٌ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ
(உங்கள் மீது) ஸலாம் உண்டாகட்டும் என்று மகா கருணையாளனாகிய இறைவன் புறத்திலிருந்து கூறப்படும். (அல்குர்ஆன் 36:58)
اُولٰٓٮِٕكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَيُلَقَّوْنَ فِيْهَا تَحِيَّةً وَّسَلٰمًا ۙ
அவர்கள் பொறுமையாக இருந்ததால் அறை(கள் நிறைந்த உயரமான மாளிகை)களை கூலியாக கொடுக்கப்படுவார்கள். இன்னும், அதில் அவர்களுக்கு முகமன் கூறப்பட்டும் ஸலாம் கூறப்பட்டும் அவர்கள் வரவேற்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 25:75)
وَسِيْقَ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَى الْجَـنَّةِ زُمَرًا حَتّٰٓى اِذَا جَآءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِيْنَ
இன்னும், தங்கள் இறைவனை அஞ்சியவர்கள் கூட்டம் கூட்டமாக சொர்க்கத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக, அவர்கள் அதற்கருகில் வரும்போது அவர்களுக்கு (உள்ளே நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும். இன்னும்) அதன் வாசல்கள் திறக்கப்படும். மேலும், அதன் காவலாளிகள் கூறுவார்கள்: “உங்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகட்டும். நீங்கள் (செயலாலும் குணத்தாலும்) நல்லவர்களாக இருந்தீர்கள். ஆகவே, இ(ந்த சொர்க்கத்)தில் - நீங்கள் நிரந்தரமானவர்களாக இருக்கும் நிலையில் - நுழையுங்கள்!” (அல்குர்ஆன் 39:73)
சகோதரர்களே! இந்த வாழ்க்கையை அந்த ரஹ்மான் அந்த ரப்புக்காக இந்த உலகத்திலே கொடுப்பது, அதுதான் ஒரு முஃமினுடைய நற்பாக்கியம். என்னுடைய ரப் என்னை திருப்தி பட வேண்டும். எதை செய்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்வது. அல்லாஹ்வுடைய கூலியை மட்டுமே எதிர்பார்த்து செய்வது.
நன்மைகளை செய்யும் போது, ஒரு சிறிய நன்மையாக இருந்தாலும் சரி, நான் இதை ஏன் செய்கிறேன் என் ரப்பு என்னை கொண்டு திருப்தி அடைவதற்காக. என்னுடைய இந்த செயலை என்னுடைய ரப் ஏற்றுக் கொள்வதற்காக.
சகோதரர்களே! நீங்கள் உங்களது பிள்ளைகளை கொஞ்சுவதாக இருந்தாலும், உங்களது மனைவிக்கு ஒரு கவள உணவை ஊட்டி விடுவதாக இருந்தாலும், உங்கள் பெற்றோருக்கு உங்கள் பொருளாதாரத்தை செலவு செய்வதாக இருந்தாலும், எதை செய்தாலும், தர்மமோ, தொழுகையோ, திலாவத்தோ, எதுவானாலும் அல்லாஹ்வுடைய பொருத்தம் நாட வேண்டும்.
அதுபோக இன்னும் ஒன்று இருக்கிறது. இபாதத்துகளை அல்லாஹ்வுக்காக செய்து விடுகிறோம். ஏதோ முடிந்த அளவு, குறைகள் கண்டிப்பாக இருக்கும். அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்.
மூஃமின்களிலே அல்லாஹ்வுடைய நேசர்கள், அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள், விசேஷமானவர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா? இதைத் தாண்டியவர்கள்.
அவர்களிடத்தில் இருக்கக்கூடிய சிறப்பு தன்மை என்ன தெரியுமா? அல்லாஹ்வுக்காக இழப்பை தாங்கிக் கொள்வார்கள். அல்லாஹ்வுக்காக சோதனைகளை தாங்கிக் கொள்வார்கள். கிடைக்கும்போது அல்ஹம்து லில்லாஹ் சொல்வது பெரிய சாதனை அல்ல.
அல்லாஹ்வை மறக்காமல் அல்ஹம்து லில்லாஹ் சொல்வதும் மிகப்பெரிய விஷயம். இழக்கும்போது நஷ்டம் ஏற்படும் போதும் அந்த நிலை வர வேண்டும்.
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ
கருத்து : பொருளாதாரம் சேதம் அடையும்போது வியாபாரம் நஷ்டம் அடையும்போது ஆபத்துகள் சூழும் போது எதிரிகள் தாக்கும் போது உயிர்கள் பறிபோகும் போது நம்முடைய இல்லங்களில் இருந்து நாம் வெளியேற்றப்படும் போது நம்முடைய உடமைகள் பறிக்கப்படும் பொழுது அந்த நேரத்திலே அல்லாஹ் உன்னுடைய தீனுக்காக நான் இதை ஏற்றுக் கொள்கிறேன் இந்த சோதனைகளிலும் நான் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வேன். (அல்குர்ஆன் 2:155)
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا هُوَ مَوْلٰٮنَا وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
கருத்து : அல்லாஹ் விதித்ததை தவிர எங்களுக்கு எதுவும் நடந்து விடப்போவதில்லை. அவன் எங்களுடைய எஜமானன். (அல்குர்ஆன் 9:51)
நாமே அவனுக்காகத்தான். அவன் பக்கம் தான் திரும்பப் போகிறோம் என்ற அந்த ஈமானிய உறுதியோடு யக்கீனோடு சோதனையில் அல்லாஹ்வை திருப்தி கொள்வது.
இன்பங்களில் அல்லாஹ்வை திருப்தி கொண்டது போன்று, இன்பங்களில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியது போன்று, சுகமாக வாழும்போது அல்லாஹ்வை நினைத்தது போன்று, துன்பத்தில் துயரத்தில் இன்னல்களில் சோதனைகளில் உலகமே சூழ்ந்து ஒரு உம்மத்தை அழிக்க நினைக்கும் போது அந்த நேரத்திலே; அல்லாஹ் உன்னுடைய மார்க்கத்திற்காக உன்னுடைய தீனுக்காக உன்னுடைய மார்க்கம் காட்டிய வழியிலே உன்னுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டிய வழியிலே நாங்கள் உறுதியாக இருந்து, இந்த சோதனைகளை சகிப்போம்; தாங்குவோம்; எதிர்த்து நிற்போம்; நாங்கள் உன்னை குறை சொல்ல மாட்டோம்; எங்களை குறை சொல்வோம். எங்களது தவறுகளை சொல்வோம்.
அல்லாஹ் சொல்கிறான்:
وَكَاَيِّنْ مِّنْ نَّبِىٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ
وَمَا كَانَ قَوْلَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِىْۤ اَمْرِنَا وَ ثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ
எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் (சேர்ந்து எதிரிகளிடம்) அதிகமான இறை நேச நல்லடியார்கள் போர் புரிந்தனர். ஆக, அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட (சிரமத்)தின் காரணமாக (எதிரிகள் முன்) அவர்கள் துணிவிழக்கவில்லை; இன்னும், பலவீனமடையவில்லை; இன்னும், பணியவில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்கள் மீது அன்பு வைக்கிறான்.
இன்னும், “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியத்தில் நாங்கள் வரம்புமீறியதையும் எங்களுக்கு மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இன்னும், நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!’’ என்று கூறியதைத் தவிர அவர்களுடைய கூற்றாக (வேறொன்றும்) இருக்கவில்லை. (அல்குர்ஆன் : 3:146,147)
நானும் ஒரு முஸ்லிம் என்று. நானும் ஒரு முஃமின் என்று. இன்று நம்மை சொல்லலாம்; யாருக்காக வாழ்ந்தாய்? எந்த உணர்வோடு வாழ்ந்தாய்? எனது மார்க்கத்தின் மீது போர் தொடுக்கப்பட்டபோது உனக்கு உள்ளம் வலித்ததா? உனக்கு வேதனை ஏற்பட்டதா?
என்னுடைய அடியார்களுக்கு சோதனை ஏற்பட்டபோது நீ சிரித்து கொண்டிருந்தாயே? மகிழ்ச்சியாக இருந்தாயே? கவலைபட்டாயா? அவர்களுக்காக துஆ செய்தாயா? அவர்களின் நன்மைகளைப் பற்றி பேசினாயா?
ஒன்றுமே இல்லையே! அன்றாடம் நீ எழுவாய். சாப்பிடுவாய். உனது மனைவி மக்கள் குடும்பம் உன்னை எது கவலை படுத்தியது? உன்னை எது மகிழ்ச்சி படுத்தியது? உன்னுடைய வாழ்க்கையில் உனக்கு ஏற்பட்ட சேதம் உனக்கு கவலையை கொடுத்தது; உன்னுடைய வாழ்க்கையில் உனக்கு ஏற்பட்ட இன்பம் உனக்கு மகிழ்ச்சி கொடுத்தது என்றால் நீ யாருக்காக வாழ்ந்தாய்?
அல்லாஹ்வுடைய நபியின் உம்மத்துக்கு ஏற்பட்ட சோதனை உனக்கு கவலையை கொடுக்கவில்லை என்றால், உனது மனதை வருத்தம் அடைய செய்யவில்லை என்றால் உனது துஆக்களில் ஒரு பகுதியை அவர்களுக்காக நீ ஒதுக்கவில்லை என்றால், நீ எந்த வகையான முஃமின்? நீ எந்த இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருக்கிறாய்? உன்னுடைய இஸ்லாம் எது?
நான் குர்ஆனிலேயே சொல்லி இருக்கக்கூடிய இஸ்லாமா? நான் குர்ஆனிலே சொல்லி இருக்கக்கூடிய ஈமானா?
நம்முடைய அகராதியிலே நாம் ஒரு இஸ்லாம், ஈமானை வைத்திருக்கிறோம். தொப்பி போட்டா பாய்; தாடி வைத்தால் பாய் என்று.
குர்ஆன் என்ன சொல்கிறது?
وَمَا لَـكُمْ لَا تُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْـقَرْيَةِ الظَّالِمِ اَهْلُهَا وَاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ وَّاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ نَصِيْرًا
அல்லாஹ்வுடைய பாதையிலும் (எதிரிகளால் அநீதி இழைக்கப்பட்ட, துன்புறத்தப்படுகிற) ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகிய பலவீனர்களுடைய பாதையிலும் (அவர்களை பாதுகாப்பதற்காக) நீங்கள் போரிடாமல் இருக்க உங்களுக்கென்ன (நேர்ந்தது)? “எங்கள் இறைவா! எங்களை இவ்வூரிலிருந்து வெளியேற்று, இந்த ஊர்வாசிகள் அநியாயக்காரர்கள். எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஏற்படுத்து! எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஓர் உதவியாளரை ஏற்படுத்து!” என்று (பலவீனமான) அவர்கள் (பிரார்த்தனையில்) கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 4:75)
சோதனைகளை தாங்குவது எல்லாருக்கும் எளிதானது அல்ல. துன்பப்படக்கூடிய நேரத்திலே அந்த நாவில் இருந்து அல்லாஹ்வுடைய புகழ் வெளிப்பட வேண்டும். என்னுடைய ரப்புடைய கட்டளை இல்லாமல் நான் கொல்லப்பட மாட்டேன். அவனுடைய அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது.
وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ
அல்லாஹ்வுடைய அனுமதியில்லாமல் எந்த உயிரும் சாக முடியாது. (அல்குர்ஆன் 3:145)
அல்லாஹ்வுடைய தீனுக்காக உயிர் போவதை விட, அல்லாஹ் உடைய மார்க்கத்திற்காக சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதை விட, அல்லாஹ்வுக்காக அந்த இழப்புகளை தாங்குவதை விட, வேறு என்ன பாக்கியம் இருக்க முடியும்!
அந்த இழப்பின் நேரத்தில் சோதனையின் நேரத்திலே அல்லாஹ்வை நினைப்பது; அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக ஏங்குவது; ஏற்றுக் கொள்வது; அந்த சோதனை நேரத்திலே அல்லாஹ்வை புகழ்வது.
அது ஒரு ஈமானிய இன்பம். அது ஒரு ஈமானிய சுகம். அது சாதாரணமானவர்களுக்கு கிடைத்து விடாது. அதற்கு தேவை அல்லாஹ்வின் மீது அன்பு. அல்லாஹ்வின் மீது பாசம். அல்லாஹ்வுக்காக ஏங்க வேண்டும். ரப்புக்காக ஏங்க வேண்டும்.
நாம் உலகத்திலே பலருக்காக ஏங்கி இருக்கிறோம். பலரை எதிர்பார்த்து இருக்கிறோம். பலரைத் தேடி இருக்கிறோம். அல்லாஹ்வை தேடினோமா? அல்லாஹ்வுக்காக ஏங்கியிருக்கின்றோமா? எதிர்பார்த்து இருக்கின்றோமா?
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள்! நபித்தோழர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்!
ஒரு சில நிகழ்வுகளை பார்ப்பதற்கு முன்னால் இந்த இடத்தில் பொருத்தமாக இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறிய அந்தக் கூற்று எவ்வளவு அற்புதமான கூற்றாக இருக்கிறது பாருங்கள்!
நம்மை பார்த்து அவர்கள் பேசுவதைப் போன்று இருக்கிறது. சோர்ந்து விட்டோம். உலகத்திலே மூழ்கி விட்டோம். உலக இன்பங்கள் நம்மை மயக்கி விட்டது. இபாதத்துகளின் இன்பத்தை விட சுகத்தை விட அல்லாஹ்வின் பாதையின் சுகத்தை விட உலக சுகம் நம்மை மிகைத்து விட்டது. மறுமையின் தேடலை விட உலகத்தின் தேடல் தான் நமக்கு அதிகமாக இருக்கிறது.
இப்னுல் கய்யிம் இடித்துரைத்து சொல்கிறார்கள்:
மன உறுதியால் பொட்டைகளாக போனவர்களே!
அல்லாஹு அக்பர்! என்ன வார்த்தை!
ரிஜால் - வீரர்கள் (ஆண்கள்-ஆண் பிள்ளைகள்=ஆம்புள) என்று அல்லாஹ் சொல்கிறான்.
مِنَ الْمُؤْمِنِيْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَّنْ قَضٰى نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ يَّنْتَظِرُ وَمَا بَدَّلُوْا تَبْدِيْلًا ۙ
வசனத்தின் கருத்து : அல்லாஹ்வுக்காக இழப்பை சந்தித்து மகிழ்ச்சி அடைந்தவர்கள். அல்லாஹ்விற்காக இழப்பை சோதனைகளை சந்தித்து அதுதான் வெற்றி என்று உறுதி கொண்டவர்கள். அல்லாஹ்வின் பாதையிலே கொல்லப்படுவதையும் அல்லாஹ்வுக்காக சொத்துக்கள், சுகங்கள் அனைத்தும் பறிபோவதையும் வெற்றியாக பார்த்தவர்கள். ஒரு கூட்டம் கொல்லப்பட்டு அல்லாஹ்விடம் சென்று விட்டார்கள். ஒரு கூட்டம் நாங்களும் போரிலே கொல்லப்பட வேண்டும் என்று அந்த கொல்லப்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். அவர்களை ரிஜால் (ஆண்கள்-ஆண் பிள்ளைகள்) என்று சொல்கிறான். (அல்குர்ஆன் 33:23)
ஈமான் உறுதி இல்லாதவர்களை பார்த்து, இப்னுல் கய்யிம் சொல்கிறார்கள்: ஈமானின் உறுதி இல்லாத பொட்டைகளே! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? எந்த மார்க்கத்தில் இருக்கிறீர்கள்? எந்த எண்ணத்தில் இருக்கிறீர்கள்? நாம் செல்ல வேண்டிய பாதை எத்தகைய பாதை தெரியுமா?
இந்த பாதையிலே ஆதம் களைத்திருக்கிறார். நூஹ் இந்தப் பாதையிலே அல்லாஹ்விடத்திலே அழுது பிரலாபித்திருக்கிறார். நெருப்பு குண்டத்திலே இப்ராஹிம் தூக்கி எறியப்பட்டார். அல்லாஹ்வின் பாதையிலே அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக அறுக்கப்படுவதற்காக இஸ்மாயில் படுக்க வைக்கப்பட்டார்.
அல்லாஹ்வின் பாதையிலே அல்லாஹ்வின் பொருத்தத்தை ஏற்றுக் கொண்டு யூசுஃப் மிஸ்ரின் கடை தெருவிலே அற்ப விலைக்கு விற்கப்பட்டார். அல்லாஹ்வுக்காக சிறையிலே தங்கி இருந்தார்.
அல்லாஹ்வின் அருளுக்குரிய பாசத்திற்குரிய நபி ஜக்கரியா ரம்பத்தால் அறுக்கப்பட்டார். அல்லாஹ்வின் பாசத்திற்குரிய நேசத்திற்குரிய நபி யஹ்யா யூதர்களால் அறுக்கப்பட்டார். படுகொலை செய்யப்பட்டார். அய்யூப் அலைஹிஸ்ஸலாம் நோய் நொடிகளை அல்லாஹ்விற்காக தாங்கினார்கள்.
ஒரே ஒரு தவறுக்காக தாவூத் அழுதார் அழுதார் அழுது கொண்டே இருந்தார். அல்லாஹ்வின் பாதையிலே அல்லாஹ்வின் மார்க்கத்தை அல்லாஹ்வின் மக்களுக்கு எடுத்து சொல்வதற்காக ஈஸா ஊர் ஊராக அலைந்தார். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்நாளெல்லாம் வறுமையிலே நெருக்கடிகளிலே எதிரிகளின் தாக்குதலுக்கு மத்தியிலே இன்னல்களுக்கு மத்தியிலே முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்நாளை கழித்து கொண்டு இருந்தார்கள்.
ஆனால், நீ உனது ஆடம்பர வாழ்க்கையில் உனது பகட்டு வாழ்க்கையில் உனது சுகத்தில் இன்ப விளையாட்டுகளிலே கேளிக்கைகளிலே நீ உனது வாழ்க்கையை போக்கிக் கொண்டிருக்கிறாயா?
யோசித்துப் பாருங்கள்! நாம் எங்கே இருக்கிறோம்?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எத்தகைய சிரமங்களை தாங்கினார்கள்! உர்வா இப்னு ஜுபைர் அறிவிக்கிறார்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ருல் ஆஸ் மூலமாக.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஷ்ரிக்குகள் இடத்திலே பட்ட கஷ்டத்திலே ஒரு பெரிய கஷ்டத்தை சொல்ல முடியுமா என்று. சொன்னார்கள்: உக்பா இப்னு அபி முயீத்தை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுது கொண்டிருக்கும் பொழுது அவன் வந்தான். கொலை செய்வதற்காக தன்னுடைய போர்வையை நபியின் கழுத்திலே போட்டு அப்படியே இறுக்கினான்.
அபூ பக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓடோடி வந்து அவனை தடுத்து நபியை பாதுகாத்து சொன்னார்கள்:
(குர்ஆனிலே அபூ பக்ருடைய வாக்கியத்தை வசனமாகவே அல்லாஹ் இறக்கி விட்டான். சூரா காஃபிருடைய 28 ஆவது வசனத்திலே அபூ பக்கருடைய அந்த சொல்லை அல்லாஹு தஆலா வசனமாகவே இறக்கி விட்டான்.)
அந்த மக்கா மக்களை பார்த்து அபூ பக்கர் கேட்டார்கள்: அல்லாஹ் என்று சொன்னதற்காக இந்த மனிதரை நீங்கள் கொல்கிறீர்களா? உங்களிடத்திலே எவ்வளவு தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்திருக்கிறார்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3856.
அன்பான சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, அவர்களுடைய உஹது போரை, தாயிஃப் சம்பவத்தை நினைத்துப் பாருங்கள்! இப்படி ஒவ்வொரு நபியின் போரை எடுத்துப் பாருங்கள் வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள்!
இன்று நாம் அனுபவிக்கக் கூடிய உலக சுகங்கள் அவர்களின் பெயரால், அவர்களின் வம்சாவளிகள் அரபு மக்கள் இன்று அனுபவிக்க கூடிய செல்வங்களை சுகங்களை இன்பங்களை நினைத்துப் பாருங்கள்!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் இதையெல்லாம் அனுபவிக்காமலேயே தியாகங்களை செய்து விட்டு, தன்னுடைய உம்மத் அனுபவிக்கட்டும் என்று அல்லாஹ்விடத்தில் சென்றார்களே! அவர்கள் எங்கே?! அவர்களுடைய தோழர்கள் எங்கே?! நாம் எங்கே?! கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!
அல்லாஹு தஆலா சொல்வதைப் போன்று,
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ
பொறுமையாளர்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள். (அல்குர்ஆன் 2:155)
அல்லாஹ்வை வணங்குவதிலே பொறுமை தேவை. அல்லாஹ்விற்காக அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக சோதனைகளை தாங்கிக் கொள்வதிலே பொறுமை தேவை. அல்லாஹ் தடுத்த பாவங்கள் குற்றங்களை விட்டு மனதை கட்டுக்குள் வைத்து அவற்றை விட்டு விலகி இருப்பதிலேயே பொறுமை தேவை. இத்தகைய பொறுமையாளர்களுக்குதான் அல்லாஹ் நற்செய்தி சொல்கிறான். அவர்கள் தான் உண்மையான முஃமின்கள்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! ஒவ்வொரு நாளும் நாம் நம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டும். என்னுடைய ஈமான் எப்படி இருக்கிறது? என்னுடைய யக்கீன் எப்படி இருக்கிறது? அல்லாஹ்வோடு எனக்குள்ள உறவு எப்படி இருக்கிறது?
என்னுடைய வாழ்நாள் முடிந்து கொண்டே இருக்கிறது. அல்லாஹ்வை சந்திப்பதற்குரிய நாள் என்னை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. நான் அதற்கு தயாராகி விட்டேனா? அல்லாஹ்வுடைய பாசம் எனக்கு கூடிக் கொண்டே போகிறதா? அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்ற ஆசை தேடல் எனக்குள் கூடிக் கொண்டே போகிறதா? அதற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை அமைக்க வேண்டும். அதுதான் மகத்தான வெற்றி.
அல்லாஹ் சொல்கிறான்:
اِنَّ لِلْمُتَّقِيْنَ مَفَازًا ۙ
அல்லாவை அஞ்சி அல்லாஹ்வுக்காக யார் வாழ்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்திலே வெற்றி இருக்கிறது. (அல்குர்ஆன் 78:31)
ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ
(அல்குர்ஆன் 9:89)
ذٰلِكَ الْفَوْزُ الْكَبِيْرُ
(அல்குர்ஆன் 85:11)
وَ ذٰ لِكَ الْـفَوْزُ الْمُبِيْنُ
(அல்குர்ஆன் 6:16)
எதை மகத்தான வெற்றி என்று, தெளிவான வெற்றி என்று , மிகப்பெரிய வெற்றி என்று அல்லாஹ் சொல்கிறான்.
அல்லாஹ்வுக்காக வாழ்ந்து அல்லாஹ்வுக்காக மரணித்து அல்லாஹ்வுடைய சொர்க்கத்தை அடைவது.
அல்லாஹு தஆலா, எனக்கும் உங்களுக்கும் அந்த சொர்க்கத்தின் மகத்தான வெற்றியை அல்லாஹ்வுக்காக வாழக்கூடிய அல்லாஹ்வுடைய அந்த நற்பாக்கியத்தை தந்தருள்வானாக! நம்முடைய நோக்கங்களை லட்சியங்களை அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக அல்லாஹ்வினுடைய பொருத்தத்திற்காக ஆக்கி வைப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/