HOME      Khutba      மவ்லூதும் மடமையும் | Tamil Bayan - 911   
 

மவ்லூதும் மடமையும் | Tamil Bayan - 911

           

மவ்லூதும் மடமையும் | Tamil Bayan - 911


மவ்லூதும் மடமையும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : மவ்லூதும் மடமையும் 
 
வரிசை : 911
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 20-09-2024 | 07-03-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலாவை போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை தக்குவாவை உபதேசம் செய்தவனாக; அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்ற வேண்டும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்க வேண்டும், அவர்களை நேசிப்பதற்குரிய அடையாளம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்த, விட்டு சென்ற சுன்னாவை கற்பதும் பின்பற்றுவதும் தான் என்பதை எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த ஜுமுஆவை ஆரம்பம் செய்கிறேன்.
 
மதிப்பிற்குரிய சகோதரர்களே! பொதுவாக தமிழ்நாட்டிலே ஓதப்படக்கூடிய இந்த ஸுப்ஹான மௌலித் அதைத்தொடர்ந்து இருக்கக்கூடிய மொய்தீன் மௌலித், ஹசனன் மௌலித், அப்பறம் நாகூர் ஷரீப் மௌலித் இதைப்பற்றி தான் சில ஜுமுஆக்களாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
 
கண்டிப்பாக இவற்றைப் பற்றி நாம் பேசியாக வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கிறோம். இதை இதற்கு முன்னால் யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? அதை பற்றிய சர்ச்சைகளுக்கு நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய எண்ணங்கள் எப்படி இருந்தன? அவற்றைப் பற்றி ஆராய வேண்டிய கட்டாயமும் நமக்கு இல்லை. 
 
நம்மை பொறுத்தவரை அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல் என்ன?, நபியினுடைய வழிகாட்டுதல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்ன? முஃமினே, முஸ்லிமே! நீ ஒரு காரியத்தை செய்தால் அதை நீ அறிந்து செய்ய வேண்டும். அதற்கு உனக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வழிகாட்டுதல் இருக்கிறதா? உன்னுடைய நபியிடமிருந்து உனக்கு அதற்கு வழி காட்டுதல் இருக்கிறதா? என்று நீ பார்க்க வேண்டும். 
 
அதுதான் உன் மீது கடமையாக்கப்பட்டதே தவிர, என்னுடைய முன்னோர் செய்தார்கள் அல்லது இதை செய்த முன்னோர் நல்லவர்களாக இருந்தார்கள்; நல்ல எண்ணத்தில் செய்திருந்தார்கள். எனவே நானும் இதை செய்கிறேன் என்று கண்மூடித்தனமாக ஒரு வழியிலே செல்வதற்கு அல்லாஹ்வும் நமக்கு அனுமதி அளிக்கவில்லை; அல்லாஹ்வுடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நமக்கு அனுமதி அளிக்கவில்லை. 
 
இந்த தீன் -மார்க்கம் என்பது தெளிவான ஆதாரத்தின் மீது அமைக்கப்பட்டது. இந்த மார்க்கத்தில் உண்மை மட்டும்தான் இருக்க வேண்டும். பொய் இருக்கவே கூடாது. இதுதான் அல்லாஹ்வுடைய தீனுடைய விசேஷ தன்மை.
 
وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ هَدٰٮنَا لِهٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَاۤ اَنْ هَدٰٮنَا اللّٰهُ‌ 
 
இந்த இஸ்லாமிற்கு அல்லாஹ் நமக்கு வழிகாட்டினானே அந்த ரப்புக்கே எல்லா புகழும். அவன் நமக்கு இந்த மார்க்கத்திற்கு வழிகாட்டி இருக்கவில்லை என்றால் நாம் ஒருபோதும் நேர்வழி பெற்று இருக்க முடியாது. (அல்குர்ஆன் 7:43)
 
அடுத்து ஹதீஸின் கருத்து : இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் மிகப்பெரிய சிறப்பு தன்மை என்னவென்றால், இந்த மார்க்கம் உண்மையானது. இந்த மார்க்கத்தை கொடுத்த அல்லாஹ் ஹக் -உண்மையானவன். அல்லாஹ் அனுப்பிய நபிமார்கள் உண்மையானவர்கள். மார்க்கம் என்பது உண்மை. குர்ஆன் என்பது உண்மை.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1120.
 
قُلْ فَلِلّٰهِ الْحُجَّةُ الْبَالِغَةُ‌  
 
மிக உண்மையான உறுதியான தெளிவான ஆதாரம் அல்லாஹ்வுடைய குர்ஆன். (அல்குர்ஆன் 6:149)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
قُلْ هٰذِهٖ سَبِيْلِىْۤ اَدْعُوْۤا اِلَى اللّٰهِ ‌ؔعَلٰى بَصِيْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِىْ‌ 
 
தெளிவான உண்மையான சத்தியமான ஆதாரத்தில் இருந்து கொண்டு மக்களை நான் அழைக்கிறேன். (அல்குர்ஆன் 12:108)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البِرِّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا. وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا
 
உண்மையை பேசுங்கள். உண்மையாக நடந்து கொள்ளுங்கள். உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மை பேச வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும் என்று அவன் உறுதியாக தேடிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்விடத்திலே சித்திக் உண்மையாளனாக எழுதப்படுவான். பொய் பேசாதீர்கள், பொய் பாவத்திற்கு வழிகாட்டும். பாவம் நரகத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் பொய் பேசிக் கொண்டே இருப்பான். இறுதியாக அல்லாஹ்விடத்தில் அவன் பொய்யனாக எழுப்பப்படுவான். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6094.
 
அன்பான சகோதரர்களே! ஒரு செய்தி அல்லது ஒரு காரியம் வழிகேடு என்பதற்குள்ள அடையாளங்களில் மிக முக்கியமான அடையாளம், அது குறித்து பொய் பேசப்படுவது. உண்மையான ஆதாரங்கள் இல்லாத போது பொய்யை இட்டு கட்டுவது. 
 
இந்த மௌலிது கிதாப் என்பது அவர்கள் எதைஎதை தேடி எழுதினார்களோ அல்லாஹ் அறிந்தவன். மறுமையிலே அதை விசாரிக்க அல்லாஹ் போதுமானவன். 
 
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் நமக்கு கொடுத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையிலே அதிலே எழுதப்பட்டிருக்கக் கூடிய செய்திகளில் பெரும்பாலானவை பொய்களும் கற்பனையும் தான் .
 
சில உதாரணங்களை சென்ற அமர்விலே பார்த்தோம். தொடர்ந்து சில விஷயங்களை பார்ப்போம்.
 
மவ்லித் வரி : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் நேரம் வந்தபோது, உலகமெல்லாம் வெளிச்சம் பெற்றது. அவர்கள் தான் குழந்தை பெற்றெடுக்க போகிறோம் என்ற உணர்வு இல்லாமல் இருந்தார்கள். எப்போது வீடெல்லாம் வெளிச்சமாக ஆகிவிட்டதோ, அதற்குப் பிறகு வீட்டிற்கு மலக்குகளும் சுவனத்து மங்கைகளும் (ஹூர்) வந்துவிட்டார்கள். அவர்களுடைய வீட்டை சுற்றி வகை வகையான பறவைகள் வந்துவிட்டன. அந்த பறவைகளும் மலக்குகளும் சுவனத்து மங்கைகளும் (ஹூர்) ரசூலுல்லாஹ்வின் வருகையால் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தபோது அதை வைத்து தான் தனது குழந்தை பிறக்கப் போகிறது என்பதையே ஆமினா அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்று (30 வது பக்கத்தில்) எழுதி இருக்கிறார்கள். 
 
மறுப்பு : ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய படைப்புகளிலே சிறந்தவர்கள் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா? இருக்க முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (காத்தமுல் அன்பியா) நபிமார்களில் இறுதியானவர் என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இல்லை. அல்லாஹ்விடத்தில் அவர்களை விட சிறந்தவர்கள் வானவர்களிலும் இல்லை, மனிதர்களிலும் இல்லை. முடிந்து விட்டது. 
 
இந்த நபியினுடைய சிறப்பை சொல்வதற்கு இப்படிப்பட்ட மகா பெரிய பொய் தேவையா? யோசித்துப் பாருங்கள்! இந்த பொய்களை நம்பித்தான் இந்த மௌலிதை ஓதி கொண்டு இருக்கிறார்கள். 
 
மவ்லித் வரி : அடுத்து சொல்கிறார்கள்: சொர்க்கத்துடைய ஹூர் பெண்கள் பிரசவம் பார்க்க இறங்கி வந்து விட்டார்கள். உலகத்தினுடைய பெண்கள் பிரசவம் பார்க்கவில்லை. அதற்குப் பிறகுதான் அவர்களுக்கு பிரசவ வலி வந்தது. 
 
அடுத்து சொல்கிறார்கள்: உலகமெல்லாம் வெளிச்சம் பெற்று எல்லாம் வெளிச்சமானதற்கு பிறகு ஆமினா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பெற்றெடுத்தார்கள். பெற்றெடுத்த நிலையிலே அந்த ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி பிறந்தார்கள் என்றால், ஸஜ்தா செய்த நிலையிலேயே பிறந்தார்களாம். அதற்குப் பிறகு அவர்கள் பிறக்கும் போதே கத்னா செய்யப்பட்டு பிறந்தார்களாம். அவர்களுக்கு பிறக்கும்போது தலைமுடியிலே எண்ணெய் தடவப்பட்டிருந்ததாம். கண்களிலே சுருமா போடப்பட்டிருந்ததாம். 
 
இப்படி தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்தார்கள் என்று இந்த கதையிலே எழுதுகிறார்கள். 
 
அடுத்த கதையை கேளுங்கள்! குழந்தை பிறந்து விட்டது. அதற்குப் பிறகு என்ன நடந்தது? அந்த குழந்தை பிறந்த குழந்தையை பார்க்கிறார்கள். அதனுடைய அழகிலே திகைத்து விட்டார்கள். 
 
அடுத்த செய்தியை தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சுற்றி வரிசையாக மலக்குகள் நின்றார்களாம். அந்த நேரத்திலே ஆமினா அவர்கள் ஒரு சத்தத்தை கேட்டார்களாம். பிறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு மலக்குகளே நீங்கள் வானக் கோடிகளிலே சுற்றி வாருங்கள். வானத்தில் இருக்கக்கூடிய மலக்குகளுக்கு எல்லாம் காட்டி வாருங்கள். பூமிக்கும் கடலுக்கும் காட்டி வாருங்கள் என்று அந்த மலக்குகளுக்கு ஒரு கட்டளை வந்ததை ஆமினா அவர்கள் கேட்டார்கள். 
 
கேட்டது மட்டுமல்ல, கொஞ்ச நேரத்திற்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குழந்தையாக இருந்தவர்கள் அங்கே காணாமல் போய்விட்டார்கள். பிறகு கண் சிமிட்டும் நேரத்திற்குள் மலக்குகள் வானங்களுக்கெல்லாம் கடல்கள் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று அங்கு உள்ளவர்கெல்லாம் காட்டப்பட்டு பிறகு கொண்டு வரப்பட்டார்கள். 
 
அன்பான சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மேன்மைப்படுத்துவதற்கு. இத்தனை பொய்கள் தேவையா? இத்தகைய பொய்களின் அடிப்படையில் எழுதப்பட்ட  கதைகளை இந்த உளறல் கவிதைகளை படித்து என்ன புண்ணியம் தேடப் போகிறார்கள்? 
 
மார்க்கம் என்பதே உண்மை சத்தியத்தை கொண்டு தான் அல்லாஹ்வை வணங்க வேண்டும். ஒரு முஃமின் உண்மையை நம்பிக்கை கொள்ள வேண்டும். உண்மையை பேச வேண்டும். உண்மையை பரப்ப வேண்டுமே தவிர, அல்லாஹ்வின் பக்கம் நான் ஒரு நன்மையை செய்கிறேன் என்பதற்காக கூட ஒரு பொய்யை சொல்லக்கூடாது. வாழ்க்கையிலே பொய் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்றால் அநியாயக்காரனுக்கு பயந்து பொய் சொல்லலாம். ஒரு பொய்யை கொண்டு அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் எதையும் நாம் செய்ய முடியாது. செய்யக்கூடாது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என் மீது யார் பொய் சொல்வானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் வைத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்கள்:
 
அறிவிப்பாளர் : முகீரா இப்னு ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1291.
 
அன்பான சகோதரர்களே! அடுத்து பாருங்கள்! இந்த செய்திகளை எல்லாம் அதாவது மலக்குமார்கள் வந்தது, ஹூர் பெண்கள் பிரசவம் பார்த்தது, அறைகளை பறவைகள் எல்லாம் சுற்றிக்கொண்டது. பிறகு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எடுத்துச் செல்லப்பட்டு உலகமெல்லாம் காண்பித்து பிரபஞ்சம் எல்லாம் காண்பித்துவரப்பட்ட செய்திகளை எல்லாம் ஆமினா அவர்கள் அப்துல் முத்தலிப்புக்கு சொன்னார்களாம்: 
 
மறுப்பு : ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து நபித்துவம் கொடுக்கப்படுவதற்கு முன்பே ஆமினா இறந்து விட்டார்கள். வயிற்றில் சுமந்திருக்கும் போதும் சரி, குழந்தையாக பெற்றெடுத்ததற்கு பிறகும் சரி, ஆமீனா அவர்களுக்கு இவர் நபியாக ஆகுவார் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒருபோதும் தெரியாது.
 
அப்படி நான் நபியாக ஆகுவேன் என்பதை தனது தாய் அறிந்திருந்ததாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புறத்திலிருந்து ஒரு பலவீனமான செய்தி கூட கிடையாது. 
 
ஹதீஸ்களிலே ஸஹீஹ் என்பது ஆதாரப்பூர்வமானது. பலமானதற்கு கீழே உள்ளது பலவீனமான செய்தி,  அறிவிப்பாளர்களுக்கு ஏதாவது சில ஞாபகம் மறதி இருக்குமேயானால் அது பலவீனமான செய்தி. அப்படிப்பட்ட ஒரு பலவீனமான செய்திகளில் கூட, நான் ரசூலுல்லாஹ் நான் இந்த உலகத்திற்கு தூதராக அனுப்பப்படுவேன் என்ற செய்தி ஆமினா அவர்களுக்கு நான் வயிற்றிலே இருக்கும்பொழுது தெரியும் என்ற ஒரு செய்திகூட வரலாறு நூல்களிலோ ஹதீஸ்களிலோ இல்லை.
 
அதற்குப் பிறகு அப்துல் முத்தலிப் அவர்கள் அந்த குழந்தையை வாங்கிக் கொண்டு காபாவிற்கு சென்று அங்கே தவாஃப் செய்து அந்த குழந்தைக்கு முஹம்மது என்று பெயர் வைத்ததாக அதற்கு சில கவிதை வரிகள்.
 
அடுத்து, 44ஆவது பக்கத்திலே (இப்படி எல்லாம் புகழ்ந்து இதை கதையாக சொல்வார்கள். கதையாக சொன்னதை பிறகு கவிதையாக சொல்வார்கள்.) இப்படி சொல்லிவிட்டு கடைசியில என்ன எழுதுகிறார்கள்: 
 
வழிகேட்டினுடைய வாசல்கள், ஷிர்க்குடைய குஃப்ருடைய வாசல்கள் நிறைய இருக்கின்றன. அதில் ஒன்றுதான் அல்லாஹ்வுடைய அந்த புகழ்ச்சியை, புகழை, ரப்பு, படைத்தவன், இறைவன், அர்ஷுக்கு மேல் உள்ள அந்த பரிசுத்தமான அந்த அதிபதியைப் புகழ வேண்டிய புகழ்ச்சியை கொண்டு, அவனை கண்ணியப்படுத்த வேண்டிய கண்ணியத்தைக் கொண்டு படைப்புகளை கண்ணியப்படுத்துவது; அந்த புகழ்ச்சியை அப்படியே   படைப்புகளுக்கு புகழ்வது. இது ஷிர்க்கினுடைய ஒரு வாசல். இதிலே மனிதன் நுழைவானேயானால்  அவன் கண்டிப்பாக முஷிரிக்காகத்தான் வெளியே வருவான். கிறிஸ்தவர்களைப் போல. 
 
அதனால் தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
لَا تُطْرُونِي كما أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ؛ فإنَّما أَنَا عَبْدُهُ، فَقُولوا: عبدُ اللَّهِ وَرَسُولُهُ
 
என்னை வரம்பு மீறி புகழாதீர்கள். புகழிலே என்னை நீங்கள் உயர்த்தி கொண்டே போகாதீர்கள். என்னை புகழ நினைத்தால் நீங்கள் சொல்லுங்கள். நான் அல்லாஹ் உடைய அப்து அடியான் என்று. அல்லாஹ்வுடைய ரசூல் என்று என்னைப் பற்றி சொல்லுங்கள். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நஸராக்கள் சொன்னது போன்று என்னை உயர்த்தி கொண்டே சென்று கடைசியிலே அல்லாஹ்வுடைய குழந்தை என்று சொல்வதிலே நின்றார்கள் அல்லவா; கடைசியிலே அல்லாஹ் என்று சொல்வதிலே நின்றார்கள் அல்லவா அந்த நிலைக்கு நீங்கள் போய் விடாதீர்கள்! 
 
அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3445.
 
இவர்கள் அந்த நிலைக்குப் போய் விட்டார்கள். இதுதான் மவ்லிது கிதாபை ஓதக்கூடிய, சூஃபியத்தை ஆதரிக்க கூடிய, தரிக்காவை ஆதரிக்கக் கூடியவர்களுடைய உச்சகட்ட நிலைப்பாடு. 
 
தொடக்கத்திலே உங்களிடத்திலே சொல்ல மாட்டார்கள். நீங்கள்  அவர்களிடத்திலே ஐக்கியமாகிவிட்டால் அதைத்தான் உங்களுக்கு சொல்வார்கள். 
 
அந்த வரியை கவனியுங்கள்! என்ன சொல்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது ஸலவாத் சொல்கிறார்கள். அகிலத்தார்களிலேயே மிக அறிந்தவர் ஆகிய முஹம்மதின் மீது, ரசூல் மார்களில் மிகச் சிறந்தவர். 
 
அடுத்து, இந்த பிரபஞ்சத்தின் உள்ளமையின் பொக்கிஷத்தின் பொக்கிஷமே! அல்லாஹ்வின் அருட்கொடையின் பொக்கிஷங்களின் சாவியே! அல்லாஹ்வுடைய கிப்லாவே! படைப்புகளின் கிப்லாவே! 
 
வாஜித் -என்றால் அல்லாஹ். மவ்ஜூத் என்றால் படைப்பு. அல்லாஹ்வுடைய கிப்லாவே! படைப்புகளின் கிப்லாவே! 
 
இடையிலே ஒரு நல்லது வரும். அப்புறம் 10 கெட்டது வரும். இதுதான் இதனுடைய விசேஷம். அதனாலதான் மக்கள் மயங்கி விடுகிறார்கள். 
 
அடுத்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை (எப்படி இந்துக்களுடைய புராண கவிதைகளில் புராணக் கதைகளில் வரக்கூடிய அந்த கதைகளை போன்று) நபியவர்களை எழுதுகிறார்கள்: (அல்லாஹ் இவர்களை பாதுகாக்க வேண்டும்! மன்னிக்க வேண்டும்!) 
 
அல்லாஹ்வுடைய வானலோக ஆட்சியின் அந்த கிரகங்களில் வசிக்கக்கூடிய புறாவே! அல்லாஹ்வுடைய சன்னிதானத்தில் இருக்கக்கூடிய மயிலே! இதை கதையா எழுதும் போது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் ஒளியா படைச்சு, அதுக்கு பிறகு அந்த ஒளி ஒரு அழகான பெண்ணாக மாறி, பிறகு அந்த அழகான பெண் ஒரு மயிலாக மாறி அல்லாஹ்விடத்திலே டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது. 
 
சரி அடுத்து, வானத்தில் இருக்கக்கூடிய மஸ்ஜிதுடைய ஆசிரியரே! 
 
இப்படியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய புகழைப் பரப்புகிறார்கள். இதில் எது குர்ஆனிலே சொல்லப்பட்டிருக்கிறது? அதற்குப் பிறகு அவர்கள் வரம்பு மீறி எந்த அளவு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய புகழ்ச்சியை கொண்டு போய்  ஷிர்க்கிலே விழுகிறார்கள் பாருங்கள். 
 
இதற்கு அடுத்து, இந்த புத்தகத்தினுடைய தொடரிலே பர்சன் ஜி மவுலித் என்று வரும். அதனுடைய 68வது பக்கத்திலே என்ன எழுதுகிறார்கள் என்றால், இதுதான் ரொம்ப முக்கியமானது. 
 
இவர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வைத்திருக்கக் கூடிய அந்த நம்பிக்கை. ஆகவே தான் இவர்கள் நபியின் மீது அந்த சலவாத்தும் சலாமும் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, அவர்கள் கேட்கக்கூடிய அந்த துஆக்களை பார்த்தால், அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டிய துஆக்களை நபியிடத்திலே கேட்பார்கள். 
 
பாவங்களை மன்னிப்பது, சிரமங்களை அகற்றுவது, இன்னல்கள் துயரங்கள் துன்பங்களை நீக்குவது, எதிரிகளுக்கு எதிராக வெற்றிகளை கோருவது இப்படி எந்த ஒன்றாக இருந்தாலும், அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டியதை நபியிடத்தில் கேட்பார்கள். 
 
இதற்கு காரணம் என்னவென்றால், அவர்களுடைய அகீதாவிலே ஊறிவிட்ட ஒன்று. அவர்களுடைய அகீதாவிலே என்ன இருக்கிறது? 
 
சொல்கிறார்கள்: அல்லாஹு தஆலா தன்னுடைய முஹம்மது என்ற யதார்த்தத்தை வெளிப்படுத்த நாடிய போது, அல்லாஹுத்தஆலா தனக்குள் இருக்கக்கூடிய முஹம்மது என்ற ஹக்கீகத்தை அல்லாஹ் வெளிப்படுத்த நாடிய போது, அதை தனக்குள் இருக்கக்கூடிய முஹம்மது என்ற ஒளிக்கு ஒரு உடலை கொடுத்து ஒரு உருவத்தை கொடுத்து அதை வெளிப்படுத்த அல்லாஹ் நாடிய பொழுது அதை தனக்குள் இருந்து ஆமினாவிற்குள் கொண்டு வந்தான். 
 
(கிறிஸ்தவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வுடைய குழந்தை என்று நம்பக்கூடிய நம்பிக்கைக்கும் இவர்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நம்பக்கூடிய நம்பிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசித்துப் பாருங்கள்!) 
 
அடுத்து, அல்லாஹு தஆலா தன்னுடைய ஒளியின் மூலமாக தன்னுடைய  முஸ்தபாவிற்கு ஆமினாவை தேர்ந்தெடுத்தான். அதற்குப் பிறகு வானங்களிலும் பூமிகளிலும் பறைசாற்றப்பட்டது; அழைப்பு கொடுக்கப்பட்டது; எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது; ஆமினா அல்லாஹ்வுடைய தாத்துடைய ஒளியை சுமந்து கொண்டார் என்று. 
 
அரபி வார்த்தைக்கு அப்படியே அர்த்தம் வைக்கிறேன். அல்லாஹ்வுடைய உள்ளமையின் ஒளிகளை ஆமினா சுமந்து கொண்டார். அதை கொண்டு கர்ப்பம் ஆகிவிட்டார் என்ற செய்தி வானலோகத்தில் (!) இருக்கக்கூடிய மக்களுக்கெல்லாம் அறிவிக்கப்பட்டது. பூமியில் இருக்கக்கூடிய மக்களுக்கெல்லாம் அறிவிக்கப்பட்டது. 
 
இப்படியாக கதை தொடர்கிறது.
 
இங்கே நாம் என்னென்ன முக்கியமான கருத்துக்களை கவனிக்க வேண்டும்? முதலாவது இந்த கிதாப் யார் எழுதியது? என்பதே உறுதியில்லாமல் பல ஆசிரியர்கள் மீது பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட கற்பனை செய்யப்பட்ட கிதாப். 
 
இரண்டாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்கிறோம்; அவர்கள் மீது உள்ள அன்பால் அவர்களுடைய பிறந்தநாள் கொண்டாட அவர்களுடைய சிறப்புகளைப் பற்றி பேசுகிறோம் என்று முழுக்க முழுக்க பொய்யான செய்திகளால் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட கற்பனைகளால், குர்ஆனோடு ஹதீஸோடு மார்க்க அடிப்படைகளோடு எந்த விதத்திலும் கொஞ்சம் கூட தொடர்பு இல்லாத, குஃப்பார்களுடைய புராணங்களுக்கு ஒப்ப கற்பனையில் வரக்கூடிய கதைகள் உருவாக்கப்பட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை கவிதைகளை கொண்டது இந்த கிதாப்.
 
அதற்குப் பிறகு, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் வெளிப்பாடாக, எப்படி குஃப்பார்கள் உலகத்தில் பிறந்தவர்களை கடவுளின் அவதாரமாக நம்புகிறார்களோ அப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வுடைய வெளிப்பாடாக நம்பக்கூடிய அந்தக் கொள்கையை திணிக்க கூடிய கதைகளையும் கவிதைகளையும் உள்ளடக்கியது தான் இந்த புத்தகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்! 
 
இதை ஓதி அல்லாஹ்விடத்தில் புனிதத்தை தேடுகிறார்கள்; இதை ஓதுவது தான் மார்க்கம் நம்பி இருக்கிறார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய அறியாமை! 
 
அன்பிற்குரிய சகோதரர்களே! இந்த செய்தியை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது தீமைகள் தீமைகள் என்று பிரச்சாரம் செய்யப்படவில்லையோ; அனாச்சாரங்களும் பொய்களும் அவை அனாச்சாரம் பொய்கள் என்று பிரச்சாரம் செய்யப்படாமல் நின்று போகுமோ அன்று அவையெல்லாம் மக்களுக்கு மத்தியிலே உண்மையாக மார்க்கமாக சத்தியமாக மாறிவிடும். பிறகு, மக்களிடத்திலே நீங்கள் சொல்லப்போனால், யார் சொல்கிறார்களோ அவர்களை மடையன் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைமைக்கு நாம் வந்து விட்டோம். காரணம் என்னவென்றால் இதை தெரிந்தவர்கள் இதை சொல்லாமல் இருந்தது. 
 
அல்லாஹு தஆலா நம்மை மன்னிப்பானாக! நம்முடைய மக்களுக்கு விளக்கத்தை தருவானாக! உண்மையான மார்க்கத்தின் பக்கம் அல்லாஹ் நம்மை திருப்புவனாக! நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்று அல்லாஹ்வுடைய மார்க்கத்தை சரியாக நேரான பாதையிலே பின்பற்றும் நற்பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/