அல்லாஹ் இன்னும் நபியின் அன்பிலே ஆனந்தம் அடைவோம்!! | Tamil Bayan - 914
அல்லாஹ் இன்னும் நபியின் அன்பிலே ஆனந்தம் அடைவோம்!!
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ் இன்னும் நபியின் அன்பிலே ஆனந்தம் அடைவோம்!!
வரிசை : 914
இடம் : மஸ்ஜிது அஷ்ரஃப், நாகர்கோயில்
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 27-09-2024 | 24-03-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கு முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை உபதேசம் செய்தவனாக; அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்று அதைப் பின்பற்றி வாழும் படி எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்திலே அவனுடைய மன்னிப்பையும் மறுமை வாழ்க்கையின் மகத்தான வெற்றியையும் சொர்க்கத்தையும் வேண்டியவனாக இந்த ஜுமுஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்மை பொருந்தி கொள்வானாக! அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் நேரான பாதையில் நேரான கொள்கையில் சரியான செயல்பாடுகளில் நிலைத்திருந்து முஃமின்களாக வாழ்ந்து முஃமின்களாக மரணிக்க கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் நமது சந்ததிகளுக்கும் தந்தருள்வானாக!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா நாம் அவனை நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நம்மை அழைக்கிறான்;. ஈமான் இருந்தால் தான் சொர்க்கம் என்று அல்லாஹு தஆலா வாக்களிக்கிறான். ஈமான் இல்லாதவர்களுக்கு சொர்க்கம் இல்லை.
இந்த ஈமான் என்பது வெறும் சொல்லால் கிடைத்து விடக்கூடிய ஒரு பாக்கியம் அல்ல. மாறாக, ஈமான் என்பது அது பல நற்குணங்களை கொண்டது. இறை நம்பிக்கை என்பது உள்ளத்தினுடைய பல உயர்ந்த பண்புகளை கொண்டது. ஈமான் என்பது நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் நாம் செய்ய வேண்டிய பல நற்செயல் (அமல்)களை உடையது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று, மக்களோ இந்த ஈமானுக்கு சில சடங்குகளை மட்டும் அடையாளமாக்கிக் கொண்டார்கள். அதுபோக, ஆதாரமற்ற செயல்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டாத செயல்களை எல்லாம் ஈமானுக்கும் இஸ்லாமுக்கும் அடையாளமாக ஆக்கிவிட்டார்கள். ஆகவே, வெகு தூரமான வழிகேட்டிலே அவர்கள் தட்டழிந்து கொண்டே செல்கிறார்கள்.
அல்லாஹு தஆலா ஒரு முஃமினிடத்திலே இருக்க வேண்டிய உயர்ந்த சிறந்த பண்புகள் குணங்கள் என்று பட்டியலிடும் பொழுது, இந்த ஈமானை உறுதிப்படுத்தக்கூடிய, உள்ளத்தில் இருக்கக்கூடிய ஈமான் உண்மை என்பதை சான்று பகரக்கூடிய குணங்களில் ஒன்றாக ஒவ்வொரு முஃமினும் அல்லாஹ்வையும் அவனுடைய ரசூலையும் நேசிப்பதை குறிப்பிடுகிறான். இதை ஈமானுடைய உயர்ந்த அடையாளமாக அல்லாஹு தஆலா ஆக்கியிருக்கிறான்.
யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அன்பு ஓங்கி இருக்க வில்லையோ, உலக வஸ்துக்களுடைய உலகப் பொருள்களுடைய அன்பை தங்களுடைய உள்ளத்திலே அதிகப்படுத்திக் கொண்டார்களோ அவர்களை அல்லாஹு தஆலா “இணைவைப்பாளர்கள்” என்று சொல்கிறான்.
சூரத்துல் பகராவுடைய வசனத்திலேதான் இதனை அல்லாஹு தஆலா குறிப்பிடுகின்றான்:
وَمِنَ النَّاسِ مَنْ يَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا يُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِ وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ
கருத்து : மக்களிலே பலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வை தவிர்த்து விட்டு அவனுக்கு இணையாக பல தெய்வங்களை பல கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பது போன்று அந்த தெய்வங்களை விரும்புகிறார்கள். நேசிக்கிறார்கள். அவற்றின் மீது அன்பு வைக்கிறார்கள் என்று கூறிவிட்டு அல்லாஹு தஆலா சொல்கின்றான்; யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டார்களோ அவர்கள் அல்லாஹ்வை மிக அதிகமாக மிக ஆழமாக மிக உறுதியாக நேசிப்பவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் : 2:165)
அன்பான சகோதரர்களே! அல்லாஹ்வுடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலே அரபியர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்த போது, அல்லாஹ்வை வணங்குவதற்கு மட்டும் அவர்களை அழைக்கவில்லை. நீங்கள் இந்த கற்சிலைகளை நேசிக்காதீர்கள். இந்த சிலைகளின் நேசத்தை உங்களுக்கு அது கூலியாக பகரமாக கொடுக்காது. கற்சிலைகள் உங்களை நேசிக்காது.
அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹுவை நேசியுங்கள். அல்லாஹ்வின் மீது உங்கள் அன்புகளை வையுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்களுக்கு சொர்க்கத்தை கொடுப்பான். அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களில் உயர்ந்த பெயர்களில் அவனுடைய உயர்ந்த பண்புகளில் அல்லாஹ் தனக்கு ரஹ்மான் என்று பெயர் வைத்திருக்கிறான். தனக்கு ரஹீம் என்று பெயர் வைத்திருக்கிறான். தனக்கு ரவூஃப் என்று பெயர் வைத்திருக்கிறான். அல்வதூத் என்று பெயர் வைத்திருக்கிறான்.
அல்லாஹு தஆலா தன்னுடைய அடியார்களின் மீது அளவற்ற அருளாளனாக, நிகரற்ற அன்புடையவனாக, பாசம் உடையவனாக, இரக்கம் கருணை கொண்டவனாக, அவர்களை நேசிப்பவனாக இருக்கிறான் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இஸ்லாமை ஏற்ற மக்களுக்கு அல்லாஹ்வுடைய அன்பை புரிய வைத்தார்கள். அல்லாஹ்வுடைய நேசத்தின் பக்கம் அழைத்தார்கள்.
அந்த கண்ணியத்திற்குரிய தோழர்களுக்கு அல்லாஹ்வின் மீது உண்டான நேசம், அன்பு, ஈமான் வந்தது போன்று இறை நம்பிக்கை மறுமையின் நம்பிக்கை வந்தது போன்று அல்லாஹ்வுடைய அன்பு நேசம் அவர்களது உள்ளத்திலே வந்தது.
இந்த உலக வாழ்க்கை இதனுடைய இன்பங்கள் இந்த உலக வாழ்க்கையின் சுகம் இவை அனைத்தையும் அல்லாஹ்வுடைய அந்த அன்புக்காக அர்ப்பணிப்பதை தியாகம் செய்வதை அவர்கள் ஒரு பெரும்பேறாக பாக்கியமாக கருதினார்கள்.
அல்லாஹு தஆலா அவர்கள் மீது கடமையாக்கியவற்றை இந்த மார்க்கத்திற்காக அவர்கள் செய்ய வேண்டிய தியாகங்களை எல்லாம் அவர்கள் அவ்வளவு ஆர்வத்தோடு அவ்வளவு ஈடுபாட்டோடு செய்தார்கள். அல்லாஹ்வுடைய தீனுக்காக தன்னுடைய உயிரைக் கொடுப்பதையே ஒரு பெரிய பாக்கியமாக கருதக்கூடிய அளவுக்கு அவர்களுடைய மனநிலை மாறியது.
அதற்கு காரணம், அல்லாஹ்வை அவர்கள் நேசித்தது. அல்லாஹ்வின் மீது உண்டான அன்பு. அந்த அன்புக்கு சமமாக இந்த உலகமும் இந்த உலகத்தினுடைய வஸ்துக்களும் எந்த விதமான மதிப்பும் அற்றது என்பதை புரிந்து கொண்டதால் அந்த அன்புக்காக ஏங்கினார்கள்.
அவர்களுடைய வணக்க வழிபாடுகள், உயிரோட்டமான வணக்க வழிபாடுகளாக இருந்தன. அவர்களுடைய இறை நம்பிக்கை, அவர்கள் கூறிய லாயிலாஹ இல்லல்லாஹ், அவர்கள் செய்த அந்த திக்ர், அவர்களுடைய தொழுகை, நோன்பு இவை ஒவ்வொன்றுமே அல்லாஹ்வுடைய அன்பால் நிரம்பி அப்படியே பசுமையாக இருந்தது.
உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அன்பை உணர்ந்தவர்களாக அதை ஏந்தியவர்களாக அந்த அன்போடு ஐக்கியமாகி அவர்களுடைய ஒவ்வொரு வணக்க வழிபாடுகளும் இருந்தன. ஆகவே, அந்த வணக்க வழிபாட்டை மிக அழகிய முறையிலேயே நிறைவேற்றினார்கள்.
அல்லாஹ்வுடைய அன்பு அவர்களது உள்ளத்தில் இருந்தது போன்றுதான் அல்லாஹ்வை நமக்கு அறிமுகப்படுத்திய, அல்லாஹ்வின் பக்கம் நம்மை அழைத்த, இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதி இறைத்தூதராக இருக்கின்ற முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உண்டான அன்பும் ஈமானுடைய அடையாளமாக ஈமானுடைய உயர்ந்த பண்பாக அவர்களுக்கும் நமக்கும் இருக்கிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த கண்ணியத்திற்குரிய தோழர்களுக்கு இந்த பண்பை உணர்த்தினார்கள்.
அல்லாஹ்வையும் அவனுடைய ரசூலையும் இந்த உலக வஸ்துக்கள் அனைத்தையும் விட உலகத்தில் உள்ள அனைத்து வகையான மனிதர்களையும் விட நீங்கள் நேசிக்கக் கூடியவர்களாக ஆகும்போது தான் நீங்கள் ஈமானை உணர்வீர்கள்; நீங்கள் முஃமின்களாக ஆகுவீர்கள் என்பதை அந்த கண்ணியத்திற்குரிய தோழர்களுக்கு உணர்த்தினார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
لَا يُؤْمِنُ أحَدُكُمْ، حتَّى أكُونَ أحَبَّ إلَيْهِ مِن والِدِهِ ووَلَدِهِ والنَّاسِ أجْمَعِينَ
உங்களிலே யாரும் முஃமின்களாக ஆக முடியாது; இறை நம்பிக்கையாளராக ஆக முடியாது; எதுவரை நான் அவருக்கு அவருடைய தந்தையை விட அவருடைய பிள்ளையை விட மக்கள் அனைவரையும் விட அன்பிற்குரியவனாக நேசத்திற்கு உரியவனாக நான் ஆகுவேனோ அதுவரை உங்களில் யாரும் முஃமினாக ஆக முடியாது.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி எண்: 15.
எவ்வளவு அழுத்தம் திருத்தமான நபிமொழி பாருங்கள்!
மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
ثَلَاثٌ مَن كُنَّ فيه وجَدَ حَلَاوَةَ الإيمَانِ
யாரிடத்திலே மூன்று குணங்கள் இருக்குமோ யாரிடத்திலே மூன்று பண்புகள் இருக்குமோ அவருக்குத்தான் ஈமானுடைய சுவை கிடைக்கும். ஹலாவத்துல் ஈமான் -ஈமானுடைய சுவை என்பது, ஈமானின் இன்பத்தை உணர்வது என்பது அது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல.
அந்த இன்பத்தை உணர்வதற்கு மூன்று அடிப்படைகளை மூன்று உயர்ந்த குணங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
أنْ يَكونَ اللَّهُ ورَسولُهُ أحَبَّ إلَيْهِ ممَّا سِوَاهُمَ
அதிலே முதலாவது, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாத மற்ற அனைவரையும் விட விருப்பமுள்ளவர்களாக உங்களுக்கு ஆக வேண்டும்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் எண்: 43, புகாரி எண் : 16.
அல்லாஹ்வின் மீது அவனுடைய ரசூலின் மீது உங்களுக்கு எந்த அளவு முஹப்பத் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்களது பிள்ளைகளை நேசிப்பதை விட, உங்களது பெற்றோரை நேசிப்பதை விட, மனைவிமார்களை நேசிப்பதை விட, குடும்பத்தார்களை நேசிப்பதை விட, இந்த உலக வஸ்துக்களை நேசிப்பதை விட அல்லாஹ்வுடைய அன்பும் அவனுடைய ரசூலுடைய அன்பும் உங்களுக்கு மிகைக்க வேண்டும். முதன்மையானதாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் ஈமானுடைய உணர்வு ஈமானுடைய சுவை ஈமானுடைய இன்பம் கிடைக்கும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
அது மட்டுமா, அல்லாஹ்வை விட அல்லாஹ்வுடைய ரசூலை விட யார் உலக வஸ்துகளை, உலக மனிதர்களை அதிகம் நேசிப்பார்களோ அவர்களை அல்லாஹு தஆலா எச்சரிக்கிறான்.
இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இன்று, நாம் முஃமின்களாக இருக்கின்றோம் சொல்லால்; சில செயல்களால். நம்முடைய உணர்வுகளால் குணங்களால் அன்றாட வாழ்க்கையில் நம்முடைய உள்ளத்தில் அந்த ஈமானை உணர்கின்றோமா? நம்முடைய தொழுகையிலே ஈமானை உணர்கின்றோமா? நம்முடைய திக்ரிலே, நம்முடைய குர்ஆன் திலாவத்திலே, நம்முடைய தான தர்மங்களிலே, நாம் குடும்பத்திலே இருக்கும் பொழுது அந்த ஈமானிய உணர்வுகளோடு நாம் வாழ்கின்றோமா? என்றால் அதற்குத்தான் இந்த சுயபரிசோதனை தேவை.
அல்லாஹ்வின் மீது உண்டான அன்பை பற்றி, அல்லாஹ்வுடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உண்டான அன்பை பற்றி அதிகமாக பேசுவதின் மூலமாக, அந்த அன்பு நம்மிடத்திலே வரவேண்டும் என்பதற்காக அந்த அமல்களை செய்வதின் மூலமாக, அதற்குரிய வழியிலே நாம் செல்வதின் மூலமாகத்தான் அந்த முஹப்பத் கிடைக்கும்.
அந்த முஹப்பத் கிடைக்கப்பெற்றால் தான் ஈமானுடைய உணர்வு அங்கே பசுமையாக இருக்கும். இந்த உணர்வு இல்லாதவர்களை அல்லாஹு தஆலா எப்படி எச்சரிக்கை செய்கிறான் பாருங்கள்!
சூரத்துல் தவ்பா உடைய 24 வது வசனம். நாம் பல நேரங்களிலேயே அப்படியே படித்து வேகமாக கடந்து சென்று விடுகிறோம்.
قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
கருத்து : நபியே உங்களுக்கு முன்னால் இருக்கக்கூடிய முஸ்லிம்களை பார்த்து நீங்கள் சொல்லுங்கள்! உங்களுக்கு உங்களுடைய பெற்றோர்கள், உங்களுடைய பிள்ளைகள், உங்களுடைய சகோதரர்கள், உங்களுடைய மனைவிமார்கள், நீங்கள் சேர்த்து வைத்திருக்கக் கூடிய உங்களுடைய செல்வம், உங்களுடைய குடும்பத்தார், நீங்கள் நஷ்டம் ஏற்படுமோ என்று பயந்து செய்யக்கூடிய உங்களுடைய வியாபாரம், நீங்கள் இன்பமாக தங்குவதற்காக நீங்கள் சந்தோஷமாக கட்டி வைத்திருக்கக் கூடிய உங்களுடைய வீடுகள் இவை எல்லாம் அல்லாஹ்வை விட அவனுடைய ரசூலை விட அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதை விட உங்களுக்கு பிரியமானதாக விருப்பமானதாக நேசமானதாக இருந்து விட்டால் அல்லாஹ்வுடைய தண்டனையை எதிர்பாருங்கள்! (அல்குர்ஆன் : 9:24)
அல்லாஹ்வுடைய தண்டனை எப்பொழுது வரும்? அல்லாஹ்வுடைய கோப பார்வை எப்போது வரும்? அல்லாஹ்வுடைய அதாப் வேதனை வானத்திலிருந்து எப்போது இறங்கும்? பெரும் பாவங்களினால் மட்டுமல்ல, பெரும் பாவங்களும் ஒரு காரணம். அந்த பெரு பாவங்களிலேயே மிகப்பெரிய பாவமாக இருப்பது என்ன? ஒரு முஃமின் ஒரு முஸ்லிம் என்று சொல்பவன் அல்லாஹ்வை விட படைப்புகளை நேசிப்பது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அகில உலக மக்களுக்கு ரஹ்மத்தாக அனுப்பப்பட்ட, காத்தமுல் அன்பியா, -இறுதி இறைத்தூதராக அனுப்பப்பட்ட,நபியைப் பற்றி அல்லாஹு தஆலா நமக்கு நீங்கள் அவர்களை நேசியுங்கள் நேசியுங்கள் அவர் ஒரு மகத்தான தூதர்; என்று வலியுறுத்துகிறான்.
لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ
வசனத்தின் கருத்து : முஃமின்களே உங்களுக்கு வந்த தூதர், சாதாரணமான தூதர் அல்ல; உங்களுக்கு ஒரு மகத்தான தூதர் வந்திருக்கிறார்; அவர் உங்களில் உள்ளவர்; உங்கள் மீது பாசம் உள்ளவர்; உங்கள் மீது நேசம் உள்ளவர்; அவர் மிக்க கண்ணியமானவர்; மிகவும் இரக்கமுள்ளவர்; உங்களுக்கு ஏதேனும் சிரமம் என்றால் அவர் துடிதுடித்து விடுவார். உங்களுக்கு எது சிரமமாக இருக்குமோ கஷ்டமாக இருக்குமோ அது அவருக்கு இன்னும் வருத்தத்தை கொடுக்கும். அப்படிப்பட்ட ஒரு தூதர் உங்களுக்கு வந்திருக்கிறார் என்று அந்த தூதருடைய புகழை அல்லாஹு தஆலா நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். (அல்குர்ஆன் 9:128)
அந்த தூதரை நேசிக்க வேண்டும் அவருக்கு பின்னால் தான் அவரை பின்தொடர்ந்து நீங்கள் செல்ல வேண்டும் என்று அல்லாஹ் சொல்கின்றான்.
அன்பான சகோதரர்களே! முஃமின்கள், அல்லாஹ்வை நேசிப்பதை விட அல்லாஹ்வுடைய ரசூலை நேசிப்பதை விட உலக வஸ்துகளை நேசிக்க ஆரம்பித்தால் அவர்கள் மீது அல்லாஹ்வுடைய தண்டனை வந்துவிடும்.
இங்கே ஒரு விஷயத்தை கவனத்தில் வையுங்கள்! நம்முடைய தாய், தந்தையை நேசிப்பது, குடும்பத்தை நேசிப்பது, நாம் கஷ்டப்பட்டு சிரமத்தோடு ஹலாலான வழிகளிலே ஹலாலாக சம்பாதித்த பொருளை நேசிப்பது, இவை எல்லாம் நமக்கு ஆகுமானவை. இவற்றில் சிலவற்றை நேசிப்பதை அல்லாஹ்வுடைய மார்க்கம் நமக்கு வலியுறுத்துகிறது.
நம்முடைய பெற்றோருடைய நேசத்தை போல, நம்முடைய பிள்ளைகளை நேசிப்பதை போல, கணவன் மனைவியை மனைவி கணவனை நேசிப்பதை போல.
இப்படி ஆகுமான ஹலாலான முஹப்பத்தையே அல்லாஹ்வை விட அல்லாஹ்வுடைய முஹப்பத்தை விட ரசூலுல்லாவுடைய முஹப்பத்தை விட அதிகப்படுத்தினால் அல்லாஹ்வுடைய தண்டனையை எதிர்பாருங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால், முஸ்லிம் சமுதாயம் ஹராமானதை நேசித்தால்? பாவங்களை நேசித்தால்? அல்லாஹ்வுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் யோசித்துப் பாருங்கள்!
இன்று தொழுகையை நேசிப்பதை விட ஆடல் பாடல் இசைகளை நேசிப்பவர்கள்; மஸ்ஜிதுடைய மஜ்லிஸ்களை நேசிப்பதை விட சினிமா அரங்குகளை ஆடல் பாடல் கச்சேரிகளை நேசிக்க கூடிய சமுதாயமாக இன்று நம்முடைய சமுதாயம் மாறி இருக்கிறதே! ஹராமான வைபவங்கள், ஹராமான நிகழ்ச்சிகள் அங்கே கூட்டங்களை பாருங்கள்! மஸ்ஜிதிலே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை பாருங்கள்!
ஹராமை நேசிப்பது, ஹராமான தொழிலை ஹராமான வியாபாரத்தை, பொழுதுபோக்கு என்று எதையெல்லாம் மேற்கத்தியர்கள் இந்த சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தி கொடுத்திருக்கின்றார்களோ அவை அனைத்தும் அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே தடுக்கப்பட்டவை.
இசைகளும், ஆபாசங்களும், பெண்களின் குரல்களும், பெண்களின் நடனங்களும், பெண்களின் பாட்டுகளும் இவற்றையெல்லாம் அல்லாஹ்வுடைய தூதரின் மார்க்கத்தை விட நேசிக்கக்கூடிய ஒரு கூட்டமாக நம்மிலே ஒரு பெரும் பகுதி மாறி இருக்கிறது என்றால் அல்லாஹ்வுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதை யோசியுங்கள்!
அன்பான சகோதரர்களே! அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா இந்த முஹப்பத்தின் மீதுதான் இந்த மார்க்கத்தை கட்டி அமைத்திருக்கிறான். கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தார்கள். இந்த தீனை பாதுகாத்தார்கள்.
அல்லாஹ்வுடைய தீனுக்காக தங்களுடைய உயிரை துச்சமாக மதிக்க கூடிய ஒரு சமுதாயம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கிடைத்ததன் காரணமாகத்தான் பத்ரு போரிலே வெற்றி பெற முடிந்தது. உஹதுப் போரிலே வெற்றி பெற முடிந்தது. ஹந்தக் போரிலே அவர்களால் வெற்றிக்கனியை பறிக்க முடிந்தது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினா முனவ்வராவிலே சந்தித்த 18 யுத்தங்களிலே முழு அரபு உலகத்தையும் புரட்டி போட்டார்கள், மாற்றி அமைத்தார்கள் என்றால் இந்த 18 யுத்தங்களிலே அந்த சஹாபாக்கள் தங்களுடைய உயிரை விட அல்லாஹ்வுடைய தூதரை நேசித்து அமைத்த அடித்தளம்தான். அவர்களுக்காக செய்த அந்த தியாகம் தான்.
அதற்குப் பிறகு கலிஃபாக்களுடைய 30 ஆண்டுகளிலே அந்த ஒட்டுமொத்த அரபுலகத்தையும் தாண்டி அந்த அரேபிய தீபகற்பத்தையும் தாண்டி அதை சுற்றியுள்ள ஆப்பிரிக்கா கண்டம் ஐரோப்பிய கண்டம் வரை இஸ்லாமை கொண்டு சேர்த்தார்கள்.
எதனால் இது சாத்தியமானது? அல்லாஹ்வுடைய அன்பு, அல்லாஹ்வுடைய ரசூல் மீதுள்ள அன்பு, இந்த மார்க்கத்துடைய அன்பு, உண்மையாக நேசித்து, இதற்காகத்தான் நான் வாழ வேண்டும். இதற்காக எனது உயிர் போக வேண்டும். இதற்காக எனது உயிர் அர்ப்பணம் ஆக வேண்டுமென்ற அந்த தேடல் அவர்களை மிகப்பெரிய வீரர்களாக வெற்றியாளர்களாக உலக சமுதாயத்தை மாற்றி அமைக்க உலகுக்கெல்லாம் இஸ்லாமை கொண்டு போய் சேர்க்க மிகப்பெரிய வீரர்களாக தாயிகளாக மாற்றியது.
கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் இந்த அன்புக்காக ஏங்கினார்கள். ஒரு சஹாபி ஓடி வருகிறார். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள். இமாம் இப்னு கசீர் பதிவு செய்கின்றார்கள்.
அல்லாஹ்வுடைய தூதரே நானும் உங்கள் மீது எனது உயிரை விட எனது குடும்பத்தை விட அதிகமாக பாசம் வைத்திருக்கிறேன். உங்களைப் பார்க்காமல் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. நான் வீட்டுக்கு சென்று விட்டால் உங்கள் ஞாபகம் வந்து உடனே ஓடோடி உங்களைப் பார்க்க வந்து விடுவேன்.
(எப்படி பேசுகிறார் பாருங்கள்! ஒரு குழந்தை தனது தந்தையிடத்திலே தாயிடத்திலே பேசுவது போன்று அவ்வளவு அன்பான வார்த்தைகளை சொல்கிறார்.)
அல்லாஹ்வின் தூதரே! நாளை மறுமையை நினைத்துப் பார்த்தேன். நீங்கள் இறந்து விட்டால் நபிமார்களோடு சென்று விடுவீர்களே! நானும் இறந்து சொர்க்கத்திற்கு வந்தால் கூட என்னால் உங்களை சொர்க்கத்தில் பார்க்க முடியுமா? என்று ஏங்குகிறார்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா சொல்லுகின்றார்கள் அந்தத் தோழருக்காக அல்லாஹு தஆலா வசனத்தை இறக்கினான்.
وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا
கருத்து : யார் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் கீழ்படிந்து இந்த மார்க்கத்தை பின்பற்றி நடந்தார்களோ அவர்கள் நபிமார்களோடு இருப்பார்கள். அவர்கள் சித்தீக்குகளோடு (மெய்படுத்தியோர்) இருப்பார்கள். அவர்கள் ( வீர மரணம் எய்தியோர்) ஷஹீதுகளோடு இருப்பார்கள். அவர்கள் ஸாலிஹி(நல்லோர்)களோடு இருப்பார்கள். இவர்கள்தான் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4:69)
என்று அல்லாஹ் இறக்கிய அந்த நற்செய்தியை அந்தத் தோழரை அழைத்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதி காட்டுகின்றார்கள்.
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வைக்க வேண்டிய நேசத்தை பார்க்க வேண்டுமா? உணர வேண்டுமா? அபூபக்கருடைய வாழ்க்கையை கலிஃபா உமருல் பாஃரூகுடைய வாழ்க்கையை கலிஃபா உஸ்மானின் வாழ்க்கையை கலிஃபா அலி இப்னு அபீத்தாலிபுடைய வாழ்க்கையைப் படித்து பாருங்கள்! சஹாபாக்களின் வாழ்க்கை வரலாறுகளை படியுங்கள்! அந்த நபியின் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள்? அந்த அன்பிற்காக ஏங்கினார்கள்? ஒவ்வொருவரும் அவருடைய அளவுக்கு துடித்தார்கள்.
ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமருல் பாரூக் உடைய கையைப் பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்கள்; (அப்பொழுது உமருள் பாரூக்குக்கு ரொம்ப பெருமை, ரொம்ப பாசம், ரொம்ப பிரியம்) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து சொல்கின்றார்கள்;
அல்லாஹ்வுடைய தூதரே! நீங்கள் எனக்கு ரொம்ப பிரியமானவர்கள். உங்கள் மீது எனக்கு ரொம்ப பாசம் இருக்கிறது. ஆனால், என்னுடைய உயிரைத் தவிர. நான் உங்களை அவ்வளவு நேசிக்கிறேன் என்று சொன்னார்கள்.
(உங்கள் உயிருக்கும் என் உயிருக்கும் ஆபத்து ஒன்றாக வரும்போது என்னையும் என் உயிரையும் காப்பாற்றிக் கொள்வேன். உங்கள் உயிரைப்பற்றி கவலை இல்லை என்ற பொருள் பட பேசியபோது)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமரை பார்த்து சொன்னார்கள்: இல்லை உமரே இல்லை.
உமருல் பாரூக் புரிந்து கொண்டார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! நான் உங்களை எனது உயிரை விட அதிகமாக நேசிக்கிறேன்.(அதாவது என்னையும் என் உயிரையும் உங்களுக்காக விட தயார்) என்று சொன்னார்கள்.
உமரே இப்போதுதான் நீங்கள் பரிபூரண முஃமினாக ஆனீர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள:.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6632.
அன்பான சகோதரர்களே! இந்த அன்பை அந்த சஹாபாக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். சஹாபாக்களுடைய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வயதானவரும் வாலிபரும் அல்லாஹ்வுடைய தூதரின் இந்த முஹப்பத்தோடு வாழ்ந்தார்கள். எனவே தான் மார்க்கத்திலே அவர்கள் சரியான பாதையிலே சென்று கொண்டிருந்தார்கள்.
தவ்ஹீத் என்பது இந்த அன்போடு சேர்ந்தது. தவ்ஹீத் என்பது இந்த அன்பு கலந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இன்று, நமது முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு கூட்டம் இருக்கிறார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு அவர்கள் மீது பாசம் என்ற பெயரிலே பித்அத்துகளை சடங்குகளை உருவாக்கிக் கொண்டார்கள்.
ஆண்டிலே ஒரு முறை மௌலிது ஓதிவிட்டால் போதும். மீலாது கொண்டாடிவிட்டால் போதும் என்று ஷிர்க்கான அல்லாஹ்வுடைய தூதர் காட்டாத சடங்குகளை செய்து கொண்டு முஹப்பத் தங்களுக்கு இருப்பதாக வாதிடுகின்றார்கள்.
அவர்களை நோக்கி அல்லாஹ் சொல்லக்கூடிய ஒரு வசனத்தை ஓதி காட்டுங்கள்!
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
கருத்து : அல்லாஹ் சொல்கிறான்: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் இந்த நபியை பின்பற்றுங்கள்.
(நபி என்ன செய்தாரோ அதுதான் மார்க்கம். நபியை மீறி அல்லாஹ்வை வழிபட நபியை மீறி சொர்க்கத்தை தேட ஒரு பாதையை ஒரு மார்க்கத்தை அல்லாஹ் நமக்கு கொடுக்கவில்லை.)
இந்த நபியை பின்பற்றினால் அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான். (அல்குர்ஆன் : 3:31)
ஆகவே, அன்பிற்குரிய சகோதரர்களே! நம்முடைய ஈமான் ஒரு உணர்வுள்ள ஒரு பரிசுத்தமான ஒரு உறுதியான சிறந்த உயர்ந்த ஈமானாக ஆக வேண்டும் என்றால், அல்லாஹ்வுடைய அன்பை பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு திக்ரு துஆ தொழுகை திலாவத்துல் குர்ஆன் செய்யும்பொழுது, அல்லாஹ் உன்னுடைய அன்புக்காக நான் செய்கிறேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; அல்லாஹ் உன்னுடைய முஹப்பத்தை எனக்கு கொடு! என்னுடைய உள்ளத்திலே உன்னுடைய முஹப்பத்தை உணரக்கூடிய பாக்கியத்தை கொடு! என்று ஒவ்வொரு இபாதத்தையும் செய்ய வேண்டும்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன வழிகாட்டி இருக்கின்றார்கள்? அவர்களுடைய சுன்னா என்ன? அவர்களுடைய ஹதீஸ்கள் என்ன? என்பதை தேடிப் படித்து அல்லாஹ்வுடைய தூதரின் முஹப்பத்தை நமக்குள் கொண்டு வர வேண்டும்.
உண்மையான முஹப்பத் என்பது குர்ஆனை பின்பற்றுவது. உண்மையான முஹப்பத் என்பது ஹதீஸை பின்பற்றுவது. அந்த முஹப்பத்தை அல்லாஹ்விடத்திலே வேண்டுவது. நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களோடு மறுமையிலே இருக்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்திலே துஆ செய்வது.
ஒரு சஹாபி வந்தார். அல்லாஹ்வுடைய தூதரே! மறுமையை பற்றி இப்படி எங்களுக்கு சொல்கிறீர்களே? மறுமை எப்பொழுது நிகழும்?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறிது நேரம் கழித்து அவர்களிடத்திலே கேட்டார்கள்; மறுமைக்காக நீ என்ன செய்து வைத்திருக்கிறாய்?
நான் பெரிய அமல்களை செய்து வைத்திருக்கவில்லை. என்றாலும் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய ரசூலையும் நேசிக்கிறேன் என்று அவர் சொன்னார்.
அப்படி என்றால் நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களோடு இருப்பாய் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6167.
இந்த ஹதீஸை அறிவிக்கக்கூடிய அனஸ் ரலியல்லாஹு அன்ஹு சொல்கின்றார்கள்;
(10 ஆண்டுகள் அல்லாஹ்வுடைய தூதரின் அன்பிலே அல்லாஹ்வுடைய தூதருக்கு பணிவிடை செய்தென். உம்மு ஸுலைம் ரசூலின் மீது வைத்திருந்த அன்பினால் பாசத்தினால் நேசத்தினால் தான் பெற்ற அந்த பாலகனை, அல்லாஹ்வுடைய தூதரே உங்களது அன்பிற்காக என்னுடைய குழந்தை உங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும்! இவரை உங்களுடைய பணியாளராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.)
அந்த அனஸ் சொல்லுகின்றார்; என்னிடத்திலும் பெரிய அமல்கள் இல்லை. என்றாலும் நான் அல்லாஹ்வை நேசிக்கிறேன். நபியை நேசிக்கிறேன். நான் அபூ பக்ரை நேசிக்கிறேன். நான் உமரை நேசிக்கிறேன். அவர்களோடு மறுமையில் நான் இருப்பேன் என்று அல்லாஹ்விடத்திலே ஆதரவு வைக்கிறேன் என்று சொன்னார்கள்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் நமது சந்ததிகளுக்கும் இந்த அன்பை தந்தருள்வானாக! நம்முடைய ஈமானிலே உணர்வுகளை உண்மைகளை இக்ளாசை தந்தருள்வானாக! அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக வாழ்ந்து அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காகவே மரணிக்க கூடிய நல்ல முஃமின்களாக என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் ஆக்கி அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/